arrow_back
கலாப காதலா அத்தியாயம் 16
கலாப காதலா chevron_right பகுதி 16 / 24

அத்தியாயம் 16

visibility 559
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

நிலவின் ஒளியில் உன்

கைபிடித்து நடக்க ஆசை

நேரம் இருந்தால் சொல்

காற்றாட கதைகள் பேசி

நாட்களாகிவிட்டது மௌனமே!

“அம்மா…” கதறிக்கொண்டு ஜெயந்தியை நோக்கி ஓடியவளை தீப்பார்வை பார்த்தார் ஜெயந்தி.

“இனிமே என்னை அப்படி கூப்பிடாதே…” வார்தைகளை கல்லை போல கூறியவரை பரிதாபமாக பார்த்தாள் ஸ்ரீநிதி… ஜெயந்தியை பொறுத்தவரை தன் குடும்பத்தின் அச்சாணியே அவரது கணவர்தான்… அவரே இப்படி ஒரு நிலையில் இருந்தபோது அவரால் வேறெதை பற்றியும் நினைக்க முடியவில்லை.

காரணம் என்ன?

தன் மகள்! அவளது பொறுப்பற்ற காதல்!

அப்படித்தான் நினைத்து கொண்டார் அவர்!

அர்ஜுனுடைய தகுதியோ திறமையோ பண்பையோ ஆராய வேண்டும் என்று இருவருக்குமே தோன்றவில்லை.

காதல் என்பது தவறு… அது மட்டுமே அவர்கள் அறிந்தது!

அவளுடைய காதலால் தான் குடும்பத்தின் ஆணிவேர் இப்போது படுக்கையில் கிடக்கிறது என்ற அவரது குற்றசாட்டை ஸ்ரீநிதியால் தாள முடியவில்லை.

ஸ்ரீநிதி அழுது கரைந்தபோதும் கூட அவர் சற்றும் இளகவில்லை… தங்களை வேண்டாமென்று கூறிவிட்டாளே என்ற ஆதங்கத்தில் அமர்ந்திருந்தார்.

ஐசி வார்டில் இருந்த செவிலிப்பெண்.

“கண் விழித்து விட்டார்… யாராவது ஒருவர் மட்டும் உள்ளே போங்க…” என்று கூறிவிட்டு போக… அவசரமாக எழுந்து நின்றாள் ஸ்ரீநிதி!

“ஸ்ரீநிதி… தயவு செய்து அப்பாவை பார்த்துடாதே… அவர் உன்னை இப்படி பார்த்தால் அந்த டென்ஷனில் அவருடைய உயிரே போனாலும் போய்விடும்… போய்டு..இங்க இருந்து போய்டு…” ஆத்திரத்தில் ஜெயந்தி திட்டி தீர்த்து கொண்டிருந்தார்.

“அம்மா… ப்ளீஸ் ம்மா…” முகத்தை மூடி கொண்டு அழுதவளை அந்த இடத்தில் அணைத்து ஆறுதல் கூற முடியவில்லையே… ஆனாலும் அவளது அழுகை அவனையும் தாக்கி சென்றது.

“உனக்கு பின்னே உன்னோட தங்கச்சி தம்பி எல்லாம் இருக்கறதை கொஞ்சமாவது நினைத்து பார்த்திருந்தா இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பியா?” அவளது தாலியை சுட்டி காட்டி அவர் கேட்க… ஸ்ரீநிதி பொங்கி அழுதாள்!

“அம்மா… நீயும் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறியே… அர்ஜுன் ரொம்ப நல்லவர்ம்மா… எப்பதான் இரண்டு பேரும் அதை புரிஞ்சுக்க போறீங்க?”

அவளது மனம் வலித்தது… விடாமல் தன்னை குற்றம் சாட்டி கொண்டிருந்த தாய்க்கு எப்படி தான் விளக்கம் கூறுவது?

“எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம்… நீ நல்லா இரும்மா… உன்னை பெத்த பாவத்துக்கு அப்பா தான் இன்னைக்கு விஷத்தை குடிச்சு இருக்கார்… நாளைக்கு நாங்க எல்லாருமே சேர்ந்து விஷத்தை குடித்து உயிரை விட்டுடறோம்… நீ உன்னோட புருஷனோட நல்லா இரு…”

கதறி அழுது கொண்டு அன்னை கூறியதை கேட்டவளுக்கு தலை சுற்றியது.

“ஏம்மா… ஏன்… நீங்கள்லாம் செத்தாலும் பரவால்லை நான் வாழணும்ன்னு நினைக்கற ஈனப்பிறவியா நான்? என்னம்மா அப்படி தப்பு பண்ணிட்டேன்? ஊர்ல யாருமே செய்யாத தப்பையா நான் பண்ணிட்டேன்… அதுக்காக இப்படி எல்லாருமே உயிரை விட்டு என்னை நிரந்தரமா குற்றவாளி ஆக்கிட்டு போறதுல உங்களுக்கு என்னம்மா கிடைக்க போகுது?”

அழுகைக்கு இடையில் கேட்டவளை உறுத்து விழித்தவர்… அடுத்து செய்த காரியத்தில் அர்ஜுனே அதிர்ந்தான்!

நெடுஞ்சான்கிடையாக அவளுடைய காலில் விழுந்திருந்தார் ஜெயந்தி.

அவர் விழுந்த கோலம் அவனையும் பதற செய்தது.

“அத்தை…” பதறி அவர்களிடையே வந்தவனை.

“இது எனக்கும் நான் பெத்த ஒரு நன்றியில்லாத பொண்ணுக்கும் உள்ள விஷயம்… இதில் வேற யாரும் தலையிட வேண்டாம்…” வெறுப்பாக கூறியவரை கூர்ந்து பார்த்தான்.

ஆக எதையோ முடிவு செய்துதான் இவர்கள் இந்த செயலில் இறங்கியிருப்பது! புரிந்த போது மனம் சொல்ல முடியாத வேதனையில் ஆழ்ந்தது… அதை தன் மனைவி புரிந்து கொள்வாளா? எதிர்பார்ப்பில் அவளது முகத்தை பார்க்க… அவளோ அழுது கரைந்து கொண்டிருந்தாள்.

காலில் விழுந்தவர் எழுந்து கொள்ளவே இல்லை… அவளது காலை இறுக்கமாக பற்றி கொண்டார்.

“கெஞ்சி கேட்கறேன் ஸ்ரீநிதி… இன்னமும் வெளிய யாருக்கும் தெரியாது… தெரிஞ்சா எங்க மானம் மரியாதை எல்லாம் போய்டும்டி… வந்துருடி…”

கெஞ்சிய அன்னையை பார்த்தவளுக்கு மனம் பதறியது.

“உனக்கப்புறம் உன் தங்கை இருக்கா… தம்பி இருக்கான்… எல்லாருமே விஷத்தை தான் சாப்பிடனும்… அவங்களுக்காக வந்துடும்மா…”

பதில் பேசாமல் அர்ஜுனை பார்த்து கையாலாகாமல் அழுதவளை பார்க்கும் போது அவள் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை விட்டு சென்று கொண்டிருப்பது புரிந்தது… மனம் வலித்தது… ஆனாலும் இந்த நேரத்தில் அவனாக எதையாவது கூறி… அனைவருமாக எதையாவது செய்து கொண்டால் அதன் பின் அவளோடு தான் வாழக்கை நடத்த முடியுமா?

“எனக்கு மடிப்பிச்சை கொடு ஸ்ரீநிதி… என்னோட தாலிய காப்பாற்று… அவனை விட்டுட்டு வந்துடும்மா…” காலை பிடித்து கொண்டு கெஞ்சிய அன்னையை என்ன சொல்லி எழுப்புவது என்று தவித்து கொண்டிருக்கும் போதே… அவராக எழுந்தவர்.

“உன் அப்பாவுக்கு ஒண்ணுன்னா நானும் உயிரோட இருக்க மாட்டேன் ஸ்ரீநிதி… நாங்க எல்லாரும் போறோம்… நீ மட்டும் நல்லா இரு…” வேதனையில் அவர் வார்த்தைகளை யோசிக்காமல் விட்டு கொண்டே இருக்க..அந்த வார்த்தைகள் அந்த சின்ன பெண்ணின் மனதை கொன்று கிழித்து கொண்டிருந்தது.

“அம்மா…” அவளது தாலியை இறுக பற்றி கொண்டு கதறியவளை பார்த்த ஜெயந்தி.

“உன்னை அப்பா பார்க்கணும் ஸ்ரீநிதி… நீ திரும்பி வந்துட்டன்னு தெரியனும்… எனக்கு அவரோட உயிரை பிச்சையா போடுடி…”

“அம்மா… ஏன் ம்மா… இப்படி எல்லாம் பேசற? நீ பெத்த பொண்ணு ம்மா நான்…” அர்ஜுனையும் ஜெயந்தியையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டே கதறியவளுக்கு என்ன செய்வது என்பது சத்தியமாக புரியவில்லை… ஆனால் அவனுக்கு புரிந்திருந்தது.

இதை சாதிக்கவா இந்த தற்கொலை நாடகம்? மனம் கசந்தது… அவனிடம் சண்டையிட்டாலோ ஓங்கி பேசினாலோ அவனால் எதிர்த்து நிற்க முடியும்… ஆனால் அழுது கரைந்து கெஞ்சுபவரை அவனால் எதிர்க்கவா முடியும்?

தன்னுடைய மனைவி என்ன செய்ய போகிறாள் என்பதை தவிப்புடன் பார்த்து கொண்டிருந்தான்… இந்த இக்கட்டிலிருந்து அவளால் மீண்டு தன்னுடன் வர முடியுமா?

“ஆனா இந்த தாலி இருந்தா கண்டிப்பா அவர் பிழைக்க மாட்டார்டி… உனக்கு இது வேண்டாம்… உனக்கு இது வேண்டாம் ஸ்ரீநிதி…” என்று அவளது தாலிக்கொடியில் கை வைக்க.

“ம்மா… என்ன செய்யற?” அதிர்ந்து தாலியை இறுக பற்றி கொண்டு பின்வாங்கினாள் அவள்! கண்களில் கண்ணீர் வெள்ளமாக வழிந்தது.

அர்ஜுனிடமும் எல்லை காணா அதிர்ச்சி.

ஆனால் அவனால் அந்த இடத்தில் எதையும் சொல்ல கூட முடியவில்லை… அவனது உதவி வேண்டுமென்றால் அவனை அழைத்திருப்பாளே… அவனை இப்போது கவனிக்க கூட இல்லையே!

“ஸ்ரீநிதி… இது நாள் நட்சத்திரம் பார்த்து நாங்கள்லாம் ஆசி சொல்லி கட்டின தாலி இல்லடி… இதுக்கு அர்த்தமே இல்லை… சின்ன பிள்ளைங்க சொப்பு விளையாட்டு விளையாடின மாதிரி கட்டின தாலி…”

“ம்மா… எப்படி கட்டினாலும் அது அர்ஜுன் என் கழுத்தில கட்டினது ம்மா… அது வெறும் மஞ்சள் கட்டையா இருந்தாலும் அதை தாலின்னு தானே ம்மா சொல்வாங்க… உன் பொண்ணோட கழுத்துல இருந்தது நீயே அதை கழட்ட நினைக்கிறியே… உனக்கே இது நல்லா இருக்கா?” ஸ்ரீநிதியின் கதறலும் நின்ற பாடில்லை… அதே போல ஜெயந்தியின் ஆவேசமும் குறைந்த பாடில்லை.

“அப்பா செத்தாலும் பரவால்ல..உனக்கு அவன் தான் முக்கியம்… இல்லையா ஸ்ரீநிதி?” அவளை வெகு கூர்மையாக பார்த்து கொண்டு அவர் கேட்க… அவளது மனம் அதிர்ந்தது.

அப்படிபட்டவளா நான்?

தந்தை இறந்தாலும் பரவால்லை என்று திருமணம் செய்ய துடிக்கிறேனா?

அதிர்ந்த நிலையில் கைகள் தானாக மாங்கல்யத்தில் இருந்தது இறங்க… எப்படியும் சமாளித்து விடுவாள் என்று எண்ணிக்கொண்டு நின்றிருந்தவனுக்கு பகீரென்றது!

வேண்டாம் ஸ்ரீநிதி என்று கத்த தோன்றியது.

தாலியிலிருந்து அவளது கையை விலக்கி விட்டு அதை கழற்றி அவனிருந்த இடத்தை நோக்கி எறிந்தார்.

அழுது கொண்டிருந்தவள் விக்கித்து போய் நின்றாள்.

அழுகை கதறலாக மாறி கொஞ்சம் கொஞ்சமாக நின்றது.

மெளனமாக அர்ஜுனை பார்த்தவளின் பார்வையில் என்ன இருக்கிறது என்பதை அவனால் உணர முடியவில்லை… ஏனென்றால் அவனும் அதே நிலையில் தான் இருந்தான்.

அதிர்ச்சி மாறாமல்!

எல்லாம் முடிந்து விட்டது என்ற தோற்றத்தில்!

இனி என்ன இருக்கிறது என்று கேட்க தோன்றியது இருவருக்குமே!

தளர்ந்த நடையோடு அவனுக்கு முன்னே வந்து அவள் நிற்க… அவனது உயிர் தான் இறந்து கொண்டிருந்தது… மீண்டும் என்னை உயிர்ப்பித்து விடு என்று அவனது காதலியை கண்களால் கெஞ்சினான்.

“சாரி அர்ஜுன்…”

“எதற்கு சாரி ஸ்ரீநிதி?”

“நாம பிரிஞ்சுடலாம்…” உயிரோடு சமாதி ஆவது போல இருந்தது இருவருக்குமே! முயன்று கூறி விட்டாளே தவிர பிரிவை அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.

அழுகையை அடக்கி கொள்ள அவள் போராடினாலும் அவளால் அது முடியவில்லை… தொய்ந்து போய் தளர்ந்து மடிந்து அமர்ந்தவள் முகத்தை மூடி கொண்டு கதறினாள்!

அவளது கதறல் அவன் காதில் விழுந்தது தான்… ஆனால் மூளைக்குள் செல்லவே இல்லை… பிரிந்து விடலாம் என்று அவள் கூறிய வார்த்தைகளிலேயே அவனது இயக்கம் நின்றிருந்தது.

ஒருவாறாக அவளது அழுகை நின்றது.

“நான் வேண்டாமா ஸ்ரீநிதி?” உணர்வே இல்லாமல் அர்ஜுன் கேட்க.

“எங்க அப்பாவும் எனக்கு வேண்டும் அர்ஜுன்…” ஹீனமான குரலில் அவள் கூற… அதற்கு மேல் ஒரு வார்த்தையும் அவனிடமிருந்து வரவில்லை.

அழுகையும் ஒருவிதத்தில் வரம் தான் போல… கண்ணீர் துக்கத்தை வெளியேற்றி விடுகிறது.

இதில் ஆண்கள் சபிக்கப்பட்டவர்கள்!

அழ முடியாமல் நின்றுகொண்டிருந்தவனுக்கு தான் உலகம் வெறுத்து போனது.

ஜெயந்தியோ எதை பற்றியும் நினைக்காமல் அவளது கையை பிடித்து அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.

அவள் அதற்கு பின் எதற்காகவும் யாரிடமும் எதுவும் பேசவில்லை… தனக்குள்ளே இறுகினாள்… !

கல்லாகி போனாள்!

அர்ஜுனும் அப்படியே!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 17

பிரிவுக்கும் பரிவுக்கும்பின்னான தனிமையின்கண்ணீரின் ஆழத்தைகண்கள் மட்டுமே அறிந்திருக்கும்!எழும் போதே உற்சாகமாக இருந்தது ஸ்ரீநிதிக்கு!இரவு வெகு நேரம் விழித்திருந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்!அங்கு போவது இந்த ஒரு மாதத்திற்கு மட்டுமே... அவனுடைய குடும்பமும் பாதிக்க பட கூடாது... விலகியது விலகியதுதான் என்று திண்ணமாக…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்