அத்தியாயம் 17
பிரிவுக்கும் பரிவுக்கும்
பின்னான தனிமையின்
கண்ணீரின் ஆழத்தை
கண்கள் மட்டுமே அறிந்திருக்கும்!
எழும் போதே உற்சாகமாக இருந்தது ஸ்ரீநிதிக்கு!
இரவு வெகு நேரம் விழித்திருந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்!
அங்கு போவது இந்த ஒரு மாதத்திற்கு மட்டுமே… அவனுடைய குடும்பமும் பாதிக்க பட கூடாது… விலகியது விலகியதுதான் என்று திண்ணமாக கூறியது மனம்… ஆனால் அதுவரை அவளது ரகசிய அறையில் அவனை ரசிப்பதை யார் தடுக்க முடியும்?
அவளது கணவன் அர்ஜுன்!
குளித்து விட்டு கண்ணாடி முன்னர் அமர்ந்தவளுக்கு வெகு நாட்களுக்கு பின்னர் தன்னுடைய முகம் வெகு தெளிவாக அழகாக இருப்பதாக தோன்றியது!
அவனை பார்த்ததால் வந்த மாற்றமோ?
மெலிதாக புன்னகைத்து கொண்டாள்!
ஐந்து வருடமாக தனது தோற்றத்தை பற்றி கவலைப்படாதவளுக்கு இன்று ஏனோ சிரத்தை எடுத்து கொண்டு அலங்கரித்து கொள்ள தோன்றியது… எப்போதும் சுடிதார் உடுத்தி கொண்டு செல்பவளுக்கு இன்று சேலை அணிந்து கொள்ள விருப்பம் வந்தது.
இரவு அவன் அவ்வளவு வெடித்திருந்தாலும் அவன் மேல் கோபம் சற்றும் இல்லை… அது அவனது உணர்வுகள்… அதை வேறெங்கு கொட்டுவான் என்று மனம் கேள்வி கேட்டது!
அர்ஜுன் எப்படி பேசி இருந்தாலும் அவன் கூறுவதும் உண்மைதானே… அவனது இழப்பு என்பதும் அதிகம் தானே!
மனம் அவனுக்கு பரிந்து பேச… கணவனை வேறொருத்திக்கு விட்டு கொடுத்து விட்டு அதற்கு பின்னால் அவனுக்கு பரிந்து பேசி என்ன பயன்?.
அழகான வாழ்க்கையை இழந்தது அவள் தானே!
இடித்து கூறிய மனதை அடக்கியவள்.
“அவனுக்கு திருமணமாகி இருந்தால் என்ன? என்னுடைய மனதில் அவனிருப்பதை யாரும் தடை செய்ய முடியாதே… என்னுடைய வாழ்க்கை வேண்டுமானால் பறிபோய் இருக்கலாம்… ஆனால் மனதளவில் நான் அர்ஜுனின் மனைவி தானே…” என்று கூறிக்கொண்டாள்!
மூச்சை இழுத்து வெளியே விட்டவளுக்கு வாழ்க்கை இப்போது புதிய வண்ணத்தில் இருப்பதாக தோன்றியது!
சோகங்கள் அனைத்தையும் மூட்டை கட்டி விட்டு அங்கு இருக்கும் ஒரு மாதமும் ரசித்து வாழ போகிறேன் என்று கூறிக்கொண்டாள்.
முதல் வேலையாக செல்பேசியை ஆன் செய்தவளுக்கு அவனிடமிருந்து வந்திருந்த மிஸ்ட் கால்களின் எண்ணிக்கை சற்று சிரிப்பை வரவைத்தது.
“எதிலும் அவசரம்… அவசரமாக எதையாவது பேச வேண்டியது… அவசரமாக எதையாவது செய்து வைக்க வேண்டியது… பின் அதற்கு வருந்த வேண்டியது… மாறவே மாட்டியா அர்ஜுன்?” சிரித்து கொண்டு தனக்கு தானே கூறி கொண்டாள்.
அழகான அந்த பிங்க் நிறத்தில் ரோஜா பூவை பரவ செய்திருந்த புடவையை அணிந்து கண்ணாடியில் பார்க்க..தன்னுடைய தோற்றமே வெகுவாக மாறியிருந்ததை உணர முடிந்தது… நீண்ட பின்னலை தளர்வாக பின்னியவள் ப்ரிஜ்ஜிலிருந்து மல்லிகை சரத்தை எடுத்து சூடி கொண்டாள்.
“மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ…” பாடிகொண்டே வேறு கிளம்பியதில் தன்னை நினைத்தே சிரித்து கொண்டாள்!
அவனுக்கு தன்னை சேலையில் காண்பது எப்போதுமே பிடித்தமான ஒன்று… அதிலும் வேண்டுமென்றே ஒவ்வொன்றாக வர்ணித்து அவளது கன்னத்தை சிவக்க வைத்து… அந்த சிவந்த கன்னத்தை முத்தமிட்டு மயங்கிய நாட்களனைத்தும் அவளது நினைவில்… இப்போது!
கண்களுக்கு லேசான மையோடு ஐந்து வருடங்களுக்கு முன்னதான ஸ்ரீநிதியாக கிளம்பி வந்தவளை பார்த்து அதிர்ந்து நின்றார் ஜெயந்தி… இனிமையாக!
தான் செய்துவிட்ட தவறால் தன் மகள் வாழ்க்கையையே வெறுத்து வெறுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறாளே என்று அவர் மருகாத நாளில்லை.
பெற்றவளுக்கு இல்லாத உரிமையா என்கிற ஆங்காரம்!
பெற்றவர்கள் நல்லதையே செய்ய முடியும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை!
அது ஸ்ரீநிதியின் வாழ்க்கையையே துவைத்து சென்று விட்டதை காலம் கழிந்தே உணர்ந்தார்!
அதிலும் தாங்கள் அவசரமாக ஸ்ரீமதிக்கு செய்து வைத்த திருமணமும் மாப்பிள்ளையும் அவர்கள் இருவரையுமே நடுத்தெருவில் நிற்க வைத்து கன்னத்தில் அறைவது போல தோன்றியது.
இந்த அருண் மாதிரியானவர்கள் இருப்பதுதான் சமூகம் என்றாகிவிட்டதே.
ஸ்ரீநிதியின் காதலன் அவ்வளவு அருமையான பையனாக தோன்றியது… ஆனால் என்ன …காலம் கடந்து தோன்றி இருக்கிறது என்று பெருமூச்சு விட்டு கொண்டார்!
ஸ்ரீநிதி அவளது தந்தையிடம் அடிவாங்குவதை பொறுக்காமல் அவன் வெடித்த வெடிப்பென்ன? தன் கணவனை காப்பாற்ற அவன் துடித்த துடிப்பென்ன! மருத்துவமனையில் ஸ்ரீநிதியை அவரிடம் விட்டு விட்டு சென்ற போது தவித்த தவிப்பென்ன! அருமையானவனை விட்டு விட்டோமே என்று அவர் நினைக்காத நாளில்லை!
அவனுக்காக தன் பெண் மௌன விரதம் காப்பதும் தவறல்ல என்று நினைத்திருந்தவர்… ஆனாலும் அவளது எதிர்காலம் என்னவாகும் என்று நினைக்கும் போது மனதளவில் உடைந்து போனார்.
அவளுக்கு திருமணம் செய்துவைக்க முயலும் போதெல்லாம் ஜெயந்தியை உணர்வற்ற பார்வை பார்ப்பாள்.
முதல் தடவையோ,
“உன்னோட தாலியை காப்பாற்ற என்னோட தாலியை நீ பறிச்சுக்கிட்ட… இனி அதை பற்றி பேசாதே… இப்ப நான் வெறும் பிணம்…” என்று கூறிவிட்டு அவரை திரும்பியும் பாராமல் போனவளின் தொனியில் சகலமும் ஆடியிருந்தது அவருக்கு!
அவளை இனியும் சமாதானப்படுத்த முடியாது என்று எண்ணியிருக்கையில் அவளே அத்தனை உற்சாகமாக வர… அவரது மனதில் வெகுவான நம்பிக்கை… எப்படியும் இன்னும் சிறிது நாட்களில் மாறி விடுவாள் என்று எண்ணிக்கொண்டார்!
பூஜையறையிலிருந்து வெளிவந்த ஸ்ரீநிதியை… ஸ்ரீமதியின் அறையிலிருந்து வெளிவந்த அருண் பார்த்து நிலைகுத்தி போனான்!
என்ன அழகு!
காலையிலேயே போதை தலைக்கு ஏறியது.
ரோஜாப்பூவின் நிறத்தில் இருந்த சேலையும் அதே நிறத்தில் இருந்த அவளது இடையும் அவனை வாவென அழைக்க அவளை அங்குலம் அங்குலமாக ரசித்து கொண்டிருந்தவனுக்கு அவளது ஒவ்வொரு அசைவும் போதையூட்டியது!
பூஜையறையிலிருந்து வெளியே வந்தவள் பாட்டை முணுமுணுத்து கொண்டே தலையில் இருந்த பூவை சரி செய்ய… பளீரென தெரிந்தது அந்த வளைவான இடை.
வளைவுகள் அபாயகரமானவை!
உணர்ந்து அனுபவித்தான் அந்த பித்தன்!
இத்தனை அழகையும் அனுபவிக்க விட மாட்டேன் என்கிறாளே!
அவளது செழுமையான இளமை அவனை பித்து கொள்ள செய்திருந்தது… பார்வையால் உண்டு கொண்டிருந்தான் அவன்.
சட்டென திரும்பிய அவள்,அவனது பார்வையை உணர்ந்து கொண்டாலும் அப்போது அவனை முறைக்க கூட நேரமில்லை… அவளுடைய அர்ஜுனை பார்க்க வேண்டும் என்று அவளின் ஒவ்வொரு செல்லும் பரபரத்தது!
என்ன உன்னுடைய அர்ஜுனா? மனசாட்சி கேலி பேச.
“பின்… அவன் என்னுடையவன் தானே… அவனை வேண்டுமானால் இன்று வேறொருத்தி சொந்தம் கொண்டாடலாம்… ஆனால் மனதில் நான் சொந்தம் கொண்டாட யாரை கேட்க வேண்டும்?” என்று தனக்கு தானே சமாதானம் கூறி கொண்டவளுக்கு வாழ்க்கை அழகாக தோன்றியது!
அப்போதுதான் தயாராகி வந்த விவேக்கும் ஸ்ரீநிதியை பார்த்து ஒரு கணம் அசந்து நின்றான்.
“அக்கா…” சின்ன சிரிப்போடு அவளை அழைக்க… என்னவென்பதை போல அவள் பார்த்த பார்வையில் கண்டிப்பாக முன்னை போன்ற வெறுமை இல்லை.
“அவ்வளவு தூரம் ஆக்டிவால போக போறியா? பேசாம என் கூட வந்துடேன்…” பாசமாக அழைக்க.
“இல்லடா… ஏதோ சைட் இன்ஸ்பெக்ஷன் போகணுமாம்… உங்க எம்டி சொன்னார் விவேக்… அதனால ரிட்டர்ன் ஆகறது லேட் ஆகும் போல தெரியுது…” இயல்பாக அவனிடம் பதில் கூற.
“உன்னை வெய்ட் பண்ணி கூட்டிகிட்டு வர்றதை தவிர நான் ஒன்னும் வெட்டி முறிக்கல…” இவனுக்கு பாசத்தையும் இப்படித்தான் காட்ட தெரியும் போல என்று புன்னகைத்து கொண்டாள்… அவளது புன்னகை பரவிய முகத்தை பார்த்து கொண்டே இருந்த அருணை அது சூடேற்றியது!
“எங்க போய்டுவா… பார்த்துக்கறேன்…” என்று எண்ணிக்கொண்டான்!
******
சோர்வாக தனது அறையிலிருந்த நாற்காலியில் சரிந்தவனுக்கு தன்னை நினைத்தே வருத்தமாக இருந்தது… என்னதான் அவள் மேல் கோபமிருந்தாலும் அந்த வார்த்தைகளை சொல்லியிருக்க கூடாது என்று ஆயிரத்து ஒரு தடவையாக கூறிக்கொண்டான்… அவனுமே உணர்ந்தெல்லாம் கூறவில்லையே.
ஐந்து வருட கோபம்… தன்னை விட்டு சென்றவளை மீண்டும் பார்த்தபோது உண்டான தாபம்… அனைத்தும் சேர்த்து அவளை வார்த்தைகளால் குதற வைத்து விட்டது!
ஆனால் அத்தனை பேசிய பிறகும் அவள் மீண்டும் வருவாளா?
இடது கையை கன்னத்துக்கு முட்டு கொடுத்து முக்கியமான குறிப்புகளை எடுத்து கொண்டிருந்தவனுக்கு அவளது.
“எக்ஸ்கியுஸ் மீ…” தேனாக பாய… நிமிர்ந்தான்!
தொப்பென்று கை கீழே விழ… தடுமாறினான்!
வேறென்ன? தேவதையாக தன் முன் வந்து நின்ற ஸ்ரீநிதியை பார்த்தது தான்!
“குட் மார்னிங் அர்ஜுன்…” புன்னகையை விரிய விட்டவளை முறைக்கத்தான் முடிந்தது அவனால்!
மனுஷனுக்கு என்னன்னென சோதனைடா ஆண்டவா!
“குட் மார்னிங்… என்ன இன்னைக்கு விசேஷமா?… சேரில வந்திருக்க…” கண்டுகொள்ளாதவனை போல கேட்ட அர்ஜுனை பற்றி அவளுக்கு தெரியாதா?
“நான் என்ன உடுத்தினா உனக்கென்ன?” சற்று கோபமாக கேட்பது போல கேட்டு வைக்க.
“ஆமா… எனக்கு என்ன?” உணர்வை துடைத்த குரலில் அவன் பதில் கேள்வி கெட்டு கொண்டாலும் உள்ளுக்குள் கொதித்தது… தள்ளி நிற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தியதே அவள் தானே!
ஒருநாளாவது சேலையில் வாவென கூறி அவளை கட்டாயப்படுத்தி கட்ட வைத்து ரசித்த நாட்களெல்லாம் அவன் கண் முன் வந்து போனது.
“எதுக்குடா இப்படியே என்னை டார்ச்சர் பண்ற? அப்படி என்னதான் இருக்கு இந்த சேரில…” அவனுடைய தொல்லை தாங்காமல் சினுங்குபவளின் சிவந்த வெற்றிடையை பற்றி அதில் கோலமிட்டு கொண்டே.
“கட்டற உனக்கு தெரியாதுடி ரசகுல்லா… பார்க்கற எனக்கு தான் தெரியும்… என்னென்ன இருக்குன்னு…” என்று காதோரம் கிசுகிசுத்து கொண்டே மேலும் ஒவ்வொன்றாக வர்ணிக்க… அவளது காது மடல்களும் சிவக்க.
இடையின் கிளுகிளுப்பும் உதடுகளின் குறுகுறுப்பும் தாளாமல்.
“ச்சீ… போடா படவா…” என்று அவனை பார்த்து வெட்கமாக சிரித்த நாட்களெல்லாம் இருவரின் நினைவிலும்!
சொர்கத்தின் சாரலில் இருந்த நாட்களல்லவா!
ஸ்ரீநிதிக்கு சற்று ஏக்கமாக கூட இருந்தது… ஏக்கம் கண்ணீரை கொட்டி விடும் போல தோன்ற அவசரமாக தனது நினைவின் போக்கை மாற்றினாள்.
எதிரில் அவனை வைத்து கொண்டு அப்படி மாற முடியுமென்று அவளுக்கு தோன்றவில்லை.
அவன் பக்கத்தில் வரவில்லை என்றாலும் அப்போதெல்லாம் அவனது பார்வையே அவளுக்குள் கிச்சுகிச்சு மூட்டி விட்டுவிடும்… அந்த பார்வையும் கூட இப்போது அவளுக்கு மறுக்கப்பட்ட அந்த நிலை அவளுக்குள் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.
ஆனால் அவன் முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு அமர்ந்திருக்கிறான் என்பதை அவள் உணரவில்லை… அவனுக்குள் கொந்தளித்து கொண்டிருக்கும் உணர்வுகளின் வீச்சை தான் எதிர்கொள்ள நேரும் போது புயலில் சிக்கிய படகாக வேண்டியிருக்கும் என்பதும் அவள் அறியவில்லை.
எதையும் வெளிகாட்டி கொள்ளாமல் அவளுக்கு வேண்டிய தகவல்களை ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தான்… அவளும் மற்ற அனைத்தையும் மறந்து விட்டு வேலையில் ஆழ்ந்தாள்!
அர்ஜுனுக்கோ கவனம் வேலையில் இருந்தாலும் அவ்வப்போது அவளது இடையை தீண்டும் பார்வையை அடக்க முடியவில்லை… எவ்வளவு நேரம் தான் அவனும் நல்லவனாகவே நடிப்பது?
பழக்க தோஷம்!
அவனது பார்வை போகும் இடத்தை அவளுமே உணர்ந்து தான் இருந்தாள்… மனதில் இருந்த ஏக்கம் சற்று மாறி வெட்கம் குடிபுகுந்தது!
ஒரு கட்டத்துக்கு மேல் அந்த வெண்மையான இடையை விட்டு வேறு புறம் அவன் பார்க்க மறுக்க… புடவையை மேலே இழுத்து விட்டு இடையை மறைத்தாள்… அவனை முறைத்து பார்ப்பதாக பெயர் செய்து கொண்டே!
“இப்ப எதுக்கு இப்படி பிகு பண்ற?” அவளை முறைத்தவாறே அவன் கேட்க.
“நீ எதுக்கு அங்கேயே பார்க்கற?” அவளும் அதே போல திருப்பி கேட்டாள்.
“நான் எதை பார்க்கறேன்னு உனக்கு தெரியுமா?” கிண்டலாக அவன் கேட்ட கேள்வி அவளை கடுப்பேற்ற.
“எனக்கு தெரியும்ன்னு உனக்கும் தெரியும்…” கடுகடுவென அவள் கூறியதில் சுவாரசியம் பிறந்தது அவனுக்கு!
“தெரியுதில்லை… அப்புறம் என்ன?” அவனது குறும்பான பார்வையை மாற்றி கொள்ளாமல் அவளை மேலும் கடுப்பேற்றி கொண்டிருக்க.
“அர்ஜுன்…” எரிச்சலாக கூறிவிட்டு.
“அங்க பார்க்கறதுன்னா உன் ஒய்ப்ப போய் பாரு… என்கிட்டே இந்த வேலை வேண்டாம்…” அப்ப நீ யாராம் என்று நினைத்து கொண்டவன்.
“யாரை பார்க்கறதுன்னு நீ சொல்ல வேண்டாம்… பார்க்க கூடாதுன்னா காட்டாத…” வீம்புக்காகவே கூறிவிட்டு.
“நல்லா காட்ட வேண்டியது… அப்புறம் பார்த்துட்டான் பார்த்துட்டான்னு புலம்ப வேண்டியத… கிளாமரா இருந்தா பார்க்கத்தான் தோணும்…” என்று அவனுக்குள்ளாக முணுமுணுத்து கொண்டான்… அதை பார்த்து கொண்டிருந்தவளுக்கு.
“ஆமா… இவனுக்கு குஷி விஜய்ன்னு நினைப்பு… காட்டினா பார்க்கத்தான் செய்வானாம்…” என்று திட்டினாலும் மனதுக்குள் மெல்லிய மழை சாரல்.
அவளுடைய காதலன் மொத்தமாக தொலைந்து போய்விட வில்லை என்ற மகிழ்ச்சி அலை அவளுள்!
******
வேலை முடிந்து விவேக்கும் ஸ்ரீநிதியும் வீடு வந்து சேர இரவு எட்டு மணியை கடந்திருந்தது… அன்று அர்ஜுன் சைட் இன்ஸ்பெக்ஷன் பார்க்கிறேன் என்று போன இடத்துக்கு எல்லாம் அவளையும் அழைத்து கொண்டு அலைந்து கொண்டிருந்தான்… அவளை அருகிலேயே பார்த்து கொள்ளத்தான் அவனது இந்த யோசனை என்று அவளுக்கும் புரியாமல் இல்லை… அது புரிந்தாலும் புரியாதது போன்றே அவனை பார்த்து கொண்டிருப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒவ்வொரு வளர்ச்சியையும் அவளை அழைத்து சென்று தானே காட்டியதில் அவள் கொண்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் கூறவே முடியாது… ஆனால் உடனிருந்து பார்த்திருக்க வேண்டியவள் இப்படி விலகியிருக்க வேண்டியிருக்கிறதே என்ற வேதனை மட்டும் நெஞ்சில்!
“ரொம்ப கஷ்டப்பட்டியா அர்ஜுன்…” காரில் இருவர் மட்டுமே சென்று கொண்டிருக்க… அவனது உழைப்பை சிலாகித்து அவள் கேட்க.
“எவ்வளவோ கஷ்டபட்டாச்சுடி… உயிரே போற வேதனைய கூட தாங்கியாச்சு… அதோட கம்பேர் பண்ணும் போது இதெல்லாம் ஒரு கஷ்டமா? கிடையவே கிடையாது… என்னை துரத்தின நினைவுகள்ல இருந்து தப்பிக்க எனக்கு இந்த உழைப்பை விட்டா வேற வழி அப்போ தெரியல…” வார்த்தைகள் கனமாக தொடங்கியதை உணர்ந்தவளுக்கு அவனை எப்படி சமாதானம் செய்வது என்று புரியவில்லை.
“உன் ஒய்ப் ரொம்ப சப்போர்ட்ன்னு கோபாலகிருஷ்ணன் சர் சொன்னார்… ரொம்ப சந்தோஷமா இருக்கு அர்ஜுன்…” அந்த வார்த்தைகளை உணர்ந்தே தான் கூறினாலும் அர்ஜுனை வேறோருத்தியோடு இணைத்து பார்ப்பதென்பதே மிகுந்த வலியை தந்தது.
“என் ஒய்ப் தானே…” என்று சிரித்தவன்.
“ஆமா… ரொம்ப… ஆனா என்ன கொஞ்சம் பிடிவாதம் தான் அதிகம்… உன்னை மாதிரி…”
அவனது மனைவியை பற்றி பேசிய போது அவனது கண்களில் தென்பட்ட அந்த கனிவும் காதலும் அவளை உயிரோடு உருக்கியது… இவ்வளவு காதல் சாத்தியமாகும் போது முதல் காதல் எப்படி அவனது நினைவில் இருந்தது?
அவளுக்கு புரியவில்லை… அதோடு அவளை தன்னோடு ஒப்பீடு செய்வது பிடிக்கவே இல்லை.
“கம்பேர் செய்யாதே அர்ஜுன்… சகிக்கல…” சற்று கோபமாகவே கூற… ஒரு கணம் உற்று பார்த்தவன் வாய் விட்டு சிரிக்க துவங்கினான்.
“ஓகே ஓகே…” என்றவன் அவளை அழுத்தமாக பார்த்தான்.
இந்த சூழ்நிலையில் அவளாக கூட்டை விட்டு வெளியே வர வேண்டும்… வலுகட்டாயமாக இழுத்து வருவதின் தோல்வியை ஒரு முறை அனுபவித்தாயிற்று… இனி அவளாக தன்னை தேடி வந்தாக வேண்டிய அவசியத்தை அவள் உணர்ந்தே ஆக வேண்டும்.
மனையாளை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பதை திட்டமிட ஆரம்பித்தான் அந்த காதல் கணவன்!
அதை புரியாத அவனது மனைவி மனதில் குழப்பங்களை சுமந்து கொண்டு அவனோடு போர் புரிந்து கொண்டிருந்தாள்!
“கம்பேர் தானே செய்யக்கூடாது… ஆனா அவளை பற்றி சொல்லலாம் இல்லையா?” குறும்பாக அவன் கேட்க… சரியென்று தலையாட்டி வைத்தாள் அவள்!
சற்று யோசித்தவன்…”சரி ஒரு நாள் கூட்டிட்டு போறேன்… அப்ப நீயே பார்த்துக்குவ…” என்று கூறிவிட… ஏமாற்றமாக இருந்தது.
“ஏன்… உன் ஒய்ப் ரொம்ப அழகோ?” அதில் தெரிந்த பொறாமை வெளிப்படையாக தெரிய… வாய் விட்டு சிரித்தான்.
“இப்போ தான் கம்பேர் பண்ணாதன்னு சொன்னே…” கேலியாக கூற.
“கம்பேர் பண்ண வேண்டாம் தான்… ரொம்ப அழகான்னு தானே கேட்டேன்…” சிறுபிள்ளை போல கேட்டவளை பார்த்து மேலும் சிரித்தவன்.
“என்னால கம்பேர் பண்ணாம சொல்ல முடியாதே…” என்று கண்ணடிக்க.
“டேய்… வேண்டாம்…” ஒற்றை விரலை காட்டி மிரட்ட… தற்காலிகமாக ஓரத்தில் காரை நிறுத்தியவன்.
“கைநீட்டி பேசாதன்னு எத்தனை தடவை சொல்றது?” என்றபடி கையை பிடிக்க… அவள் சட்டென பின்னடைந்தாள்! அவனோ மேலும் அருகே வந்தவன்… அவளை பார்த்தவாறு சற்று நெருங்கி அமர்ந்து கொண்டான்.
“அதாவது… கண் அப்படியே உன்னை மாதிரி தான்… நான் விழுந்ததே அதில் தான் டெடி…” என்றபடி அவளது முகத்தை வருட… அவளோ பதட்டத்தில் பின்னே சாய… அவனுக்கு அது மேலும் வசதியாக போக.
“ மூக்கு… ரொம்ப ஷார்ப்… இதோ இதே மாதிரி தான்… கோபம் டன் கணக்குல நுனில நின்றுகொண்டே இருக்கும்…” என்றபடி அவளது மூக்கை திருக.
“அர்ஜுன்ன்ன்…” ஸ்ரீநிதி கோபமாக அழைக்க நினைத்தாலும் காற்று தான் வெளியே வந்தது!
“உஷ்..கொஞ்ச நேரம் கேளு… அப்புறம் அந்த லிப்ஸ்…” என்றவன் போதையாக அவளை பார்த்தவாறே… அப்படியே…” என்றபடி அவளுக்கு மிக நெருக்கமாக வந்தவன்… அவளது மிரண்ட பார்வையை ரசித்து… மேலும் நெருங்க.
“அர்ஜுன்ன்ன்ன்…” அவளுக்கே அவளது குரலா என்ற சந்தேகம் வருமளவு மெலிந்து போயிருந்தது!
அவளை பார்த்து குறும்பாக கண்ணடித்தவன்.
“கிஸ் பண்ணிட மாட்டேன் டெடி… இப்ப அது உன் புருஷனோட ப்ராபர்ட்டி இல்லையா…” என்று குறும்பு புன்னகையோடு கூற… அவள் வெளியில் போட்டு கொண்ட வேடத்திற்கு மாறாக மனம் ஏமாற்றத்தில் தவித்தது.






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!