அத்தியாயம் 18
வீடு வந்து பேயோட்டும் மூன்று சுருட்டை
கொத்தாய் பற்றிப் புகைக்கும் முனியென
எனக்கென்று தயாரித்து வைத்திருக்கும்
உன் பிரத்யேகக் கண்களை இப்போது அழை.
பக்கத்து வீட்டுக்காரி கவனிக்கச் சொன்ன
டேனிலியாவின் கருவிழி உள் உருள்வது
அனிச்சையாய் நினைவிற்கு வருகிறது
வீட்டிற்கு வந்த இருவருக்குமே… அதன் அமானுஷ்ய அமைதி எதுவோ சரியில்லை என்பதை உணர்த்த… ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
ஜெயந்தி எப்போதும் போல சமையலறையில் இருந்தார்… இருவருக்கும் தேநீர் கொண்டு வந்து தந்தவர்… சட்டென உள்ளே போக முயல.
“என்னம்மா ஆச்சு?” விவேக் தான் முதலில் ஆரம்பித்தது.
விவேக்கின் கேள்வியில் ஒரு நொடி தாமதித்தவரின் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளமாக கொட்ட ஆரம்பித்து இருந்தது… பார்த்து கொண்டிருந்த ஸ்ரீநிதிக்கும் என்னவாயிற்றோ என்ற பதட்டம்!
“ம்மா… என்னாச்சு?” பதட்டமாக கேட்டான் விவேக்.
“ஸ்ரீமதிக்கு டெஸ்ட் ரிப்போர்ட் வந்துடுச்சாம்…” என்றவர் அதற்கும் அழ… இதில் அழ என்ன இருக்கிறது என்று பார்த்தாள்.
“ஸ்ரீமதிக்கு குழந்தை பெத்துக்கற தகுதி இல்லைன்னு மாப்பிள்ளை சொல்றாரு டா…” என்று உடைந்து போனவரை என்ன சொல்லி தேற்றுவது என்பது புரியவில்லை.
“அம்மா… சின்ன குழந்தை மாதிரி அழாத… எவ்வளவோ இருக்கு சைன்ஸ் ல… அதை விட்டுட்டு பெத்துக்க முடியாது கத்துக்க முடியாதுன்னு… பெனாத்தாத…” கடுப்பாகி இருந்தான் விவேக்.
“என்ன பிரச்சனையாம்?” அப்போதுதான் வாய் திறந்தாள் ஸ்ரீநிதி.
“கருமுட்டை வளர்ச்சி இல்லையாம்…” என்று அவர் கூற… அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அவளுக்கு புரிந்து கொள்ள வேண்டும்… அவளுடைய நண்பர்களில் யாருமே மருத்துவர்கள் இல்லை.
யாரிடம் கேட்பது என்று தீவிரமாக யோசித்தாள்… நண்பர்களென்று இப்போது பெரிதாக இல்லை… யாரிடமும் மனம் விட்டு பேசுவதே இல்லையே… அப்போதெல்லாம் உமா,ரசூல், மஜீத் என்று அத்தனை நண்பர்கள் இருந்தனர்.
அந்த சம்பவத்திற்கு பின் யாரிடமும் பழக கூட இல்லை அவள்! அந்தளவுக்கு பூட்டி வைக்கப்பட்ட கூட்டுக்குள் ஒடுங்கி போனாளே!
அர்ஜுன்… அர்ஜுன்… அர்ஜுன் மட்டுமே அவள் அறிந்தவன் அல்லவா!
அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதே… இப்போது நன்றாக வளர்ந்து விட்டான்… அவனது வளர்ச்சியை நினைக்கும் போது மனதில் ஒரு பூரிப்புணர்வு!
என்னுடைய அர்ஜுன் என்று!
அர்ஜுனுடைய எண்ணுக்கு அழைத்தாள்… அருகில் வந்த சகோதரனை கவனிக்காமல்.
இரண்டாவது ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட.
“சொல்லு ரசகுல்லா…” பழைய குறும்பு குரலில் மீண்டிருக்க… அவளது உதட்டிலும் புன்னகை மலர்ந்தது.
“டேய்… ஒழுங்கா பேசறியா? இல்ல போனை வைக்கட்டா?” அதை கேட்டு அவன் சிரிக்க… அந்த குரல் அவளது மனதை வருடியது!
“ஓகே ஓகே டெடி…” புன்னகையோடு பேசுவது புரிய.
“அர்ஜுன்… உனக்கு யாராவது லேடி டாக்டர் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களா?” நேரடியாக அவனிடம் கேட்டாள்.
“ஏய்… சும்மா டச்சிங் டச்சிங்க்கு எல்லாம் பேபி பார்ம் ஆகாதுடி…” குறும்பு கண்ணனாகவே பதில் தந்தவனை என்ன தான் செய்வது என்று தீவிரமாக யோசித்தாள்… இவனது வாய் அடங்கவே அடங்காதா என்று நினைத்து கொண்டு.
“லூசு… அறிவு கெட்ட பிசாசு… உன்னையெல்லாம்…” அர்ச்சிக்க ஆரம்பித்தவளை.
“ஹேய் நான் உண்மைய தானே சொன்னேன்…” என்று வேண்டுமென்றே வம்பு வளர்க்க.
“அர்ஜுன் பி சீரியஸ்… இப்போ உனக்கு தெரியுமா தெரியாதா? சொல்லி தொலையேன்… கடுப்பை கிளப்பாதே…” வீட்டுக்கு வெளி வராந்தாவில் நின்று பேசி கொண்டிருப்பதை இவனுக்கு எப்படித்தான் உணர்த்துவது?
“ஸ்டாப் ஸ்டாப்… அப்படியே நிறுத்து… இப்போ உனக்கு லேடி டாக்டர் கிட்ட தானே பேசணும்… உன்னை நேர்ல கூட்டிட்டு போகட்டா இல்லைன்னா நம்பர் கொடுக்கட்டா?” என்று கேட்டு மேலும் வாங்கி கட்டி கொண்டு கான்பரன்சில் அவனுடைய நண்பனின் மனைவிக்கு அழைத்தான்.
“நிம்மிம்மா… என் ப்ரென்ட்க்கு உங்க கிட்ட என்னமோ கேட்கனுமாம்… என்னன்னு பேசுங்க… அவங்க பேர் ஸ்ரீநிதி…” என்று அவளை பேச வைக்க.
“சொல்லுங்க ஸ்ரீநிதி…” அவளும் என்னவென்று கேட்க.
“டாக்டர்… என் தங்கைக்கு doctors IVF சஜஸ்ட் செய்து இருக்காங்க… இந்த சைக்கிள்ல செய்ய பணமும் கட்டியாச்சு… ஆனா கருமுட்டை வளர்ச்சி இல்லைன்னு சொல்லி குழந்தை பிறக்காதுன்னு டாக்டர் சொல்றதா தங்கை வீட்டுகாரர் பிரச்சனை செய்யறார்…” சுருக்கமாக கூறி அவரிடம் கருத்தை எதிர்பார்க்க.
“அப்போ அவர் ஏமாற்றிகிட்டு இருக்கார் இல்லைன்னா இதோட அடிப்படை தெரியாம இருக்கார்ன்னு அர்த்தம் ஸ்ரீநிதி…” பட்டென்று கூறியவரின் பதிலை மனதால் ஆமோதித்தாள்!
“நானும் அதை தான் நினைச்சேன் டாக்டர்…” என்று ஒப்பு கொண்டாள்.
“ஆமாம்மா… கருமுட்டை வளர்ச்சி இல்லைன்னா அதுக்கு தனியா மருந்து இருக்கு… அதுவும் இல்லாம கரு முட்டை வளர்ச்சியை சப்ரஸ் செய்து IVF செய்யற மெத்தட் இருக்கு… அதோட கருமுட்டை வளர்ச்சியை அப்படியே விட்டு செய்யற மெத்தடும் இருக்கு… எதுவா இருந்தாலும் அதற்கு தீர்வு இருக்கு… சரி கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு?” என்று கேட்க.
“நாலரை வருஷம் டாக்டர்…” கொஞ்சம் வருத்தமாக கூறினாள்… அவ்வளவு அவசர கதியில் அவளது திருமணம் நடக்க தான் தானே காரணம்… தன்னை போலவே அவளும் யாரையாவது காதலித்து விடுவாள் என பயந்தே இந்த படுகுழியில் தள்ளிவிட்டு விட்டார் அவளது தந்தை!
“அதுக்குள்ளே IVF ஆ… சம்திங் பிஷி ஸ்ரீநிதி… ரிப்போர்ட்ஸ் எடுத்ததுட்டு என்னை பார்க்க வர சொல்லுங்க… நான் புல்லா அனலைஸ் பண்ணி சொல்றேன்…” என்று கூற… அவளும் ஒப்புகொண்டாள்!
மனம் சற்று அமைதியடைந்தது… ஏதோ ஒரு தீர்வு கிடைத்தது போல தோற்றம்… இந்த விஷயம் கிளியர் ஆகி விட்டால் ஸ்ரீமதியின் பிரச்சனை பெரும்பாலும் முடிவுக்கு வந்து விடும் என்று தோன்றியது.
அதன் பின் அர்ஜுன் தனியாக லைனில் வந்தவனின் குரலும் சிறிது தீவிரத்தன்மையை அடைந்து இருந்தது.
“ஸ்ரீ…”
“ம்ம்ம்ம்…”
“நம்ம விஷயத்துனால தான் உன் சிஸ்டருக்கு அவ்வளவு சீக்கிரம் மேரேஜ் பண்ணிட்டாரா?” அவனுக்குமே குற்ற உணர்ச்சி.
அவர்களுடைய காதல் எத்தனை பேரை பாதித்து இருக்கிறது! நினைக்கையில் மனதில் சொல்ல முடியாத துயரம்! இருவரும் மட்டுமே என்றபோது கூட இந்தளவு மனம் சலனப்பட வில்லை.
“ம்ம்ம்… ஆமா…” உணர்வுகள் துடைக்கப்பட்ட குரலில் கூற.
“சமயத்தில் கோபமாக வருது ஸ்ரீ… ரொம்ப…” என்று இடைவெளி விட்டவன்,”முட்டாள்தனமா தன்னோட போலியான சமூக பிம்பத்தை நம்பும் அளவு நம்மை யாரும் நம்பலையே…”
அடக்கப்பட்ட அவனுடைய கோபத்தில் மிகுந்த நியாயம் இருந்தாலும் தந்தையை விட்டு தந்து விட முடியாது அவளால்!
“ம்ம்ம்… ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் அர்ஜுன்… உனக்கு உன்னுடையது சரியா தெரியற மாதிரி அவங்களுக்கு அது சரியா தெரியுது…” என்று சிறிய நைந்த குரலில் கூறியவள் கையெட்டும் தூரத்தில் நின்று கொண்டிருந்த விவேக்கை ஓரப்பார்வை பார்த்து கொண்டாள்.
“நீ மற்றவர்களுக்காக பார்ப்பதில் எனக்காக ஒரு நிமிடம் நினைத்து பார்த்து இருக்கலாம்…” அவளை குற்றம் சாற்ற.
“உடனே இப்படி ஆரம்பித்து விடாதே அர்ஜுன்… போய் உன்னோட மனைவியை பார்… அவளிடம் அடி வாங்காதே…”
“ஆக நீ உன்னுடைய ஹஸ்பன்ட்டை இப்போது கொஞ்ச போகிறாய் இல்லையா?” கிண்டலாக அவன் கேட்ட கேள்வி உள்ளுக்குள் சிறு சுணக்கத்தை ஏற்படுத்தினாலும் மனதுக்குள் மழைச்சாரல் வீசத்தான் செய்தது… அது மட்டும் உண்மையாக இருந்தால்.
“ஆமா… இப்ப அதுக்கு என்ன சொல்ற?” சற்று தெனாவட்டாகவே அவள் பதில் கூற… அந்த புறத்திலோ அவன் சப்தமாக சிரிக்கும் சப்தம் கேட்டது.
எப்போதும் அவனிடம் அவள் ரசிக்கும் ஒரு விஷயம் அவனது அந்த சிரிப்பு… அவுட்டு சிரிப்பாக இல்லாமல் அழுத்தமான குரலில் அதே சமயத்தில் குறும்பாக ஒலிக்கும் அந்த சிரிப்பு சப்தம் எப்போதும் அவளது மனதை சிலிர்க்க வைக்கும் ஒன்று.
இப்போதும் அதே சிலிர்ப்பு மனதுக்குள் ஓட, ரசித்து கேட்டு கொண்டிருந்தாள்… நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக தான் தொலைத்த ஒன்றை மீண்டும் கேட்டதில் அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது!
“ஓகே… ஓகே… இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தா என்னை அடிக்க வந்துடுவ போல இருக்கே…” என்று சிரித்து கொண்டே கூற.
“ம்ம்ம்… கண்டிப்பா…” பதிலுக்கு இவளும் புன்னகையோடு கூறினாள்… அவளை பொறுத்தவரை எந்த தளைக்கும் கட்டுப்பட போவதில்லை என்று முடிவெடுத்து கொண்ட பிறகு அவனிடம் பேசுவது சுலபமாகி இருந்தது.
அவனும் அதே முடிவில் தான் இருந்தான் போல!
“ஓகேடா… நாளைக்கு வரும்போதே ரிப்போர்ட்ஸ் எடுத்துட்டு வா… நாம் இருக்கோம் இல்லையா… என்ன ப்ராப்ளம் என்றாலும் பார்த்துக்கலாம்… டாக்டர் கிட்ட நானே அழைச்சுட்டு போறேன்…” என்றவனின் அந்த வார்த்தைகள் அவளுக்குள் எங்கெல்லாமோ தாக்கின.
உள்ளுக்குள் இவன் என்னவன் என்ற கர்வம் மேலோங்கியது!
இவனையா வேண்டாமென்று மறுத்தீர்கள் என்று பெற்றோரை கேட்க தோன்றியது!
இழப்பு இப்போது இன்னும் பெரிதாக தெரிய… அது அவளது மனதை பிசைந்தது!
யாரால் இந்த பிரிவு?
தன்னால் தானே!
அப்போது மட்டும் உணர்வின் பிடியில் தான் ஆட்படாமல் இருந்திருந்தால், சற்றேனும் புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்தி இருந்தால் அவனை பிரிந்திருக்க நேர்ந்திருக்காதோ?
இனி அதை நினைத்து என்ன உபயோகம்.
அவளுள் பெருமூச்சு!
அவசரமாக அவளது எண்ணபோக்கை மாற்றினாள்.
அவனுக்கு திருமணமாகிவிட்டது என்பதை அவசரமாக நினைவுக்கு கொண்டு வந்தவள்,
“அர்ஜுன்… உன் ஒய்ப் உன்னை நல்லா ட்ரைன் பண்ணி டியூன் பண்ணி வெச்சு இருக்கா…” என்று சிரிக்க.
“இல்லடி… ட்ரைன் பண்ணிட்டு இருக்கா…” குறும்பான குரலில் கூற.
“எப்படியோ… நல்ல குடும்பஸ்தன் ஆகிட்டல்லையா…” என்று அவள் சிரிக்க.
“பின்ன என்ன ரசகுல்லா பண்றது? கல்யாணம் ஆச்சு… அடுத்தது குட்டீஸ் வேண்டாமா? அதுக்கு தான் இந்த ட்ரைனிங் எல்லாம்…” அவனது குறும்பு சிரிப்பு காதில் வந்து மோதியது.
“அது சரி… அதுக்காக ஹேண்டியா ஒரு கைனக் வெச்சுட்டு அலையற பாரு… சும்மா சொல்ல கூடாது… பின்னர போ…” என்று வாய் பெருமை பேசினாலும் உள்ளுக்குள்ளே முள் தைத்த உணர்வு… அவனது ரசகுல்லா எப்போதும் போல அவளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
“ஹஹா லூசு பொண்ணே… அது என் ப்ரென்டோட ஒய்ப்…” என்று அவனும் சிரித்துவிட்டு அலைபேசியை வைக்க… ஸ்ரீநிதியும் சிரித்த முகத்தோடு திரும்பினாள்… கூர்மையாக பார்த்து கொண்டிருந்த விவேக்கை பார்த்து ஒரு கணம் அதிர்ந்தாலும் தான் தவறு எதுவும் செய்து விடவில்லையே!
“டாக்டர் என்னக்கா சொன்னாங்க?” என்று கேட்டவனிடம்.
“ரிப்போர்ட்ஸ் கேட்கறாங்கடா… அந்த மாதிரி இருக்க சான்ஸ் இல்லை போலிருக்கு…” என்றவுடன் அவனது முகமும் மாறியது.
எதையோ மனதில் வைத்து கொண்டு தான் அருண் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதை அவனுமே புரிந்து கொண்டிருந்தான்.
“பொறுக்கி…” அவனது உதடுகள் மௌனமாய் அக்கா வீட்டுக்காரனை திட்டியது!
“சரிக்கா… அர்ஜுன் யாரு?” வெகு இயல்பாக கேட்பதை போல கேட்டு வைத்தவனை பார்த்து புன்னகைத்த ஸ்ரீநிதி.
“உன்னோட எம்டி தான் விவேக்…” அவளுக்கும் மறைக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை… அவர்களுடைய உறவுமுறையை மட்டும் கூற விருப்பப்படவில்லை.
ஆச்சரியமாக பார்த்தவனை என்னவென்பதை போல பார்க்க.
“இல்ல… ரொம்ப நாள் ப்ரென்ட் மாதிரி பேசிட்டு இருந்தியே… அதான் கேட்டேன்… எனக்கு தெரியாம யாருடா அக்காவோட ப்ரென்ட்ன்னு… தப்பா நினைக்காதக்கா…” மெய்யான வருத்தத்துடன் அவன் கூற.
“இட்ஸ் ஓகே டா தம்பி…” என்று அவனது தலையை கலைத்து விட்டவளை ஆச்சரியமாக பார்த்தான்… அவளது புன்னகை பூத்த முகம் அவ்வளவு அழகாக இருந்தது… எப்போதும் இப்படியே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்… மனம் ஏக்கப்பட்டது!
“அவரை ரொம்ப நாளாவே உனக்கு தெரியுமா?”
“ம்ம்ம் ரொம்ப வருஷமா…” என்று கூற… அவனுக்கோ குழப்பமே மிஞ்சியது… ஆனால் ஆச்சரியமாக இருந்தது… தான் ஹீரோவாக எண்ணி கொண்டிருப்பவர் தன்னுடைய தமக்கைக்கு பலகால நண்பரா? வீட்டில் அர்ஜுனுடைய பெயர் அவ்வளவாக பரிட்சயமில்லை.
“ரொம்ப க்ளோஸ் ப்ரென்ட் மாதிரி பேசிட்டு இருந்தியேக்கா…” மௌனமாகவே இருந்த குளத்தில் கல்லெறிந்து ஆழம் பார்க்கிறான் என்பது புரிந்து சிரித்து கொண்டாள்… தனக்குள்!
“ம்ம்ம்… ஆமா விவேக்… ஒன்ஸ் அப்பான் அ டைம் எனக்கு அர்ஜுன் அளவு வேற யாருமே க்ளோஸ் ப்ரென்ட் இல்லை… நடுவில் டச் இல்லை… இப்போ தான் பார்க்கிறேன்…”
அவன் கேட்ட கேள்விக்கு உண்மைகளை மட்டுமே கூறிக்கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி! ஆச்சரியமாக பார்த்தான் விவேக்… அர்ஜுனின் பார்வையில் இருந்த பரிவுக்கு அர்த்தம் புரிகிறார் போல இருந்தது.
எப்படி இருந்தாலும் அர்ஜுன் அவனை பொறுத்தவரை ஒரு ஐகான் தான் என்று நினைத்து கொண்டான்.
“அக்கா அப்போ அவர் கிட்ட சொல்லி என்கிட்டே பேச சொல்றியா? அவரை எனக்கு அவ்வளவு பிடிக்கும் க்கா… அவரோட பேன் நான்…” என்று சிரித்து கொண்டே கூற… ஸ்ரீநிதி வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
“என்ன அக்காவும் தம்பியும் சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க…” என்றவாறே வந்தான் அருண்… இவன் முன் சிரித்துவிட கூடாதே… என்று ஆரம்பித்து பலவாறு திட்ட ஆரம்பித்தான் விவேக்… மனதில் தான்!
“எல்லாம் நீங்க கொடுத்த மெடிக்கல் ரிபோர்ட் வெச்சுதான்…” நேரடியாக தாக்கவும் செய்தான்.
“அதுக்கு என்ன? உங்க அக்காவால எனக்கு ஒரு குழந்தை பெற்று கொடுக்க முடியாதுன்னு தான் அதுல தெளிவா சொல்லி இருக்கே…”
“அப்படீன்னு நீங்க தானே சொல்றீங்க…” என்று அவனிடம் மல்லுக்கு நின்றவனை அவசரமாக வந்த அன்னையின் பார்வை அடக்கியது.
“சரி… இப்போ என்ன மாப்பிள்ளை சொல்றீங்க…” ஜெயந்தி நேரடியாக அவனிடம் கேட்டார்… இனி சிறு பிள்ளைகளை பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது அழகல்ல என்பதை உணர்ந்து கொண்டார்… அதுவாக இருந்தாலும் அவர்களது தேர்வு… அவர்களே தான் சரி வேண்டும்.
ஸ்ரீமதியின் வாழ்க்கை சரியாவதும் வேண்டாமேன்பதும் அவர்களது கையில் மட்டுமே உள்ளது என்பதை தெளிவாக உணர்ந்தவர் அவனுடன் நேரடி பேச்சு வார்த்தையில் இறங்கினார்.
“இதை எப்படி உங்க கிட்ட நேரடியா கேக்கறது அத்தை? எனக்கு உங்க யார் மேலயும் கோபம் இல்ல… நீங்க தான் எனக்கு மாமனார் மாமியார்… அதுல எந்த மாற்றமும் இல்லை…” என்று இடைவெளி விட்டவனை அடுத்து என்ன குண்டை தூக்கி போட போகிறானோ என்று கவலையாக பார்த்தார் அவர்!
விவேக்கும் குழப்பமாக பார்க்க… புருஷோத்தமன் வீடு திரும்பாததால் இந்த நாடகத்தை எல்லாம் அவர் பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை… அவர் ஆசையாக தேர்வு செய்த மாப்பிள்ளையின் லட்சணம் என்று யாரேனும் கூற கூடும் என்று தான் வீடு திரும்பாமல் இருந்தாரோ?
சற்று தள்ளியிருந்த ஸ்ரீமதி மட்டும் வெகு அமைதியாக அமர்ந்து இருந்தாள்… கணவனின் அட்டகாசங்களையும் லீலாவிநோதங்களையும் தினமும் பார்த்து கொண்டு தானே இருக்கிறாள்… அவன் ஸ்ரீநிதியை பார்க்கும் பார்வையையும் அவள் அறிவாள்… அவளிடம் பேசி வாங்கி கட்டி கொள்வதையும் பார்த்து கொள்வாள்.
ஸ்ரீநிதி… தங்கைக்காக என்று சமாளித்து கொள்வதையும் அறிந்து தான் வைத்திருந்தாள்… ஆனால் அந்த சமாளிப்பு எத்தனை நாட்களுக்கு தாங்க கூடும்… இவன் ருசி கண்ட பூனை! இது போல பல லீலைகளை செய்தவன்… அதே நினைவில் ஸ்ரீநிதியிடமும் வாலாட்டி கொண்டிருக்கிறான் என்பதை நினைத்து கசப்பாக சிரித்தாள்.
ஐந்து வருடங்களுக்கு முன் ஸ்ரீநிதியை மணக்க விருப்பம் கொண்டு வந்தவருக்கு மட்டும் இந்த விஷயங்கள் தெரிந்தால் அருண் ஒழிந்தான் என்று நினைத்து கொண்டவளுக்கு மேலும் சிரிப்பு வந்தது.
இவனெல்லாம் வீட்டில் புலி… வெளியில் எலி போன்ற ஆட்கள்! அவனது கோபத்திற்கு முன்பு இவனால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தாள்.
கோமாளி!
“எனக்கும் இதில் விருப்பமில்லை… ஆனால் உங்க பெண்ணுடைய வாழ்க்கை கெட்டு போய்விட கூடாது… நாளைக்கு வேறு யாராவது ஒரு பெண் வந்து உங்க பெண்ணை அதிகாரம் செய்தால் நன்றாகவா இருக்கும்? அதனால் மூத்த பெண் ஸ்ரீநிதியை எனக்கு திருமணம் செய்து கொடுத்து விடுங்க…”
அலட்டி கொள்ளாமல் கூறியவனை ஜெயந்தி அதிர்ந்து பார்த்தார்.
விவேக்குக்கு அவனை வெட்டி கொன்றால் என்ன என்று தோன்றியது! இவன் கெட்ட கேட்டுக்கு இன்னொரு திருமணம் வேறா? அதிலும் ஸ்ரீநிதி அக்காவா என்று அவனை சட்டையை பிடித்து கேட்க வேண்டும் போல.
ஸ்ரீமதியால் எதையும் கூற முடியவில்லை… அவள் விரக்தியின் விளிம்பில் இருந்தாள்… தன்னுடைய கணவனின் மற்றொரு பக்கத்தை அவள் அறியாதவள் அல்ல… ஆனால் எங்கெல்லாமோ வேலையை காட்டியவன் அவளது சொந்த அக்காவிடமே அவனது வக்கிரத்தை இந்தளவு காட்டுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
வெறுத்து போனது அவளுக்கு!
இனியும் இந்த வாழ்க்கை தேவையா என்று தீவிரமாக எண்ண தோன்றியது!
அவனுக்காக அவனுக்காக என்று அத்தனையும் பொறுத்து, பிள்ளை வேண்டி விரதங்கள் இருந்து, மருந்துகள் உண்டு, மருத்துவமனையின் சிகிச்சை துன்பங்களை கடந்து வந்ததெல்லாம் இவனது இந்த வக்கிர முகத்தை பார்ப்பதற்காக தானா?
இந்த உயிரை இன்னமும் சுமந்து என்னவாக போகிறது என்ற வெறுப்பு அந்த அப்பாவிபெண்ணுக்கு!
ஸ்ரீநிதி அந்த கிறுக்கனை பார்த்து சிரித்து கொண்டாள்… அவளது அந்த ஏளன புன்னகையை பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன சிரிப்பு வேண்டி இருக்கு?” கடுப்பாக கேட்டான் அருண்… சற்றும் பயப்படாமல் சிரிக்க வேறு செய்தது அவனது ஈகோவை தட்டி எழுப்பியது.
“பின்ன உன்னோட பைத்தியக்காரத்தனத்தை பார்த்தா சிரிப்புத்தான் வருது…” என்று மேலும் சிரிக்க.
“விளையாடதே ஸ்ரீநிதி…” கோபமாக அருண் கூற.
“இப்போ நீ பேசினது மட்டும் என் ஹஸ்பன்டுக்கு தெரிந்ததுன்னு வை… நீ உயிரோடவே இருக்க மாட்ட…”
நிதானமாக அழுத்தமாக அவள் கூறியது அவனுக்கு உள்ளுக்குள் பயத்தை விதைத்தது.
ஜெயந்திக்கு உள்ளுர மகிழ்ச்சி பொங்கியது… அவர் செய்த தவறுகளால் தனித்தே இருந்த ஸ்ரீநிதி வெகு வருடங்களுக்கு பிறகு அவளது கணவனை பற்றி பேசியிருக்கிறாள் அல்லவா!
ஆனால் அந்த வார்த்தை இன்னொருவனையும் குழப்பியது.
“அக்கா… என்ன சொல்ற? ஹஸ்பன்ட்டா?” ஸ்ரீநிதியை பார்த்து அதிர்ந்து கேட்டவனை வெற்று பார்வை பார்த்தாள் அவனது சகோதரி!
“இவங்க கிட்ட கேளு விவேக்… இவங்க வீட்டுகாரர் கிட்ட கேளு… என்னோட வாழ்க்கைய வீணாக்கிய கதைய நல்லாவே சொல்வாங்க…”
அருகில் நின்றிருந்த ஜெயந்தியை காட்டி அவள் கூற… தாயை அதிர்ந்து பார்த்தான் விவேக்.
தமக்கையின் வாழ்க்கை மலராதா என்று ஒரு பக்கம் ஏங்கி கொண்டிருக்க… அவளது வாழ்க்கையை இப்படி ஆக்கி வைத்தது தன் பெற்றோரேவா?
ஜெயந்தி குற்ற உணர்வோடு நின்று கொண்டிருக்க… அவரை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தான்!
“ம்மா… ஏன் ம்மா? என்ன ஆச்சு? எதையுமே என்கிட்டே நீங்க சொன்னதில்லையே…” என்று இடைவெளி விட்டவன்… ஸ்ரீமதி புறம் திரும்பி.
“இது உனக்கும் தெரியுமா?” என்று கேட்க.
“கொஞ்சம் தெரியும் விவேக்…” என்று மெல்லிய குரலில் கூற… அவளை முறைத்தான்.
“எல்லாருக்கும் தெரிஞ்சு தான் ஊமையாட்டம் இருக்கீங்களா? உனக்கெல்லாம் உன்னோட லைப் மட்டும் தான் தெரியும்! மொட்டை மரமாட்டம் அக்கா ஒருத்தி இருக்காளேன்னு நினைச்சு பார்த்தியா நீ?”
“அப்பாவோட கோபத்தை பார்த்து அந்த நேரத்தில் எனக்கு பேசவே பயமா இருந்ததுடா… அதே பயம் தான் என்னை கல்யாணம் செய்து கொடுத்த பிறகும் கூட… இவங்க போடற ஆட்டத்துக்கெல்லாம் என்னால எதையுமே பேச முடியாம ஒவ்வொன்றிற்கும் நான் பயந்தே செத்துட்டு இருக்கேன்டா… பொறந்தாலும் பொண்ணா பிறக்கவே கூடாது… அப்படி பிறந்துட்டா கொஞ்சமாவது தைரியத்தை சொல்லி கொடுக்கற பேரன்ட்ஸ் கிட்ட வளரனும்… அதுவும் இல்லாம இதுவும் இல்லாம… கொடுமைடா விவேக்…” மெலிதாக விசும்பியவளை பரிதாபமாக பார்த்தான்.
பெரும்பாலான பெண்களின் சாபக்கேடு!
எவ்வளவுதான் உலகம் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்றாலும் நிறைய பெண்களுக்கு அந்த முன்னேற்றமும் நன்மைகளும் எட்டாக்கனியே!
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் முதலில் இருப்பது இந்த குடும்ப வன்முறையே என்று எப்போதோ படித்த நினைவு அவனது மனதுக்குள்!
தன்னை திருமணம் செய்தவனால், தன்னை பெற்றவர்களால், தன்னுடன் பிறந்தவர்களால், தன்னுடைய குடும்பத்தினரால் என்று ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் இந்த குடும்ப வன்முறையை தடுக்க அரசின் சட்டங்களால் நிச்சயம் முடியாது.
மாற்றம் என்பது மனித மனங்களில் வர வேண்டியது!
பெண் என்பவள் சக மனுஷி… தன்னை போன்றே உயிரும் உணர்வும் கொண்ட ஜீவன் என்பதை எப்போது இந்த ஆண்கள் உணர்வார்களோ அப்போது மட்டுமே இந்த கொடுமையை தடுக்க முடியும் என்று எண்ணிக்கொண்டான்.
“இதை நீ சொல்லி என்ன யூஸ் மதி? ஒரு வார்த்தையாவது எதிர்த்து பேசனும்… இந்த மாதிரி பொறுக்கி தேவையில்லைன்னு நீ தான் முடிவு செய்யணும்…” அதீத கோபத்தில் அருணை காட்டி அவன் பேச… அப்போதும் அவளது மனம் துடித்தது… அவளது கணவனுக்காக!
“டேய்… மரியாதை…” அருண் கோபமாக பேச முயல… அவன் புறம் திரும்பியவன்.
“உனக்கெல்லாம் என்னடா மரியாதை… ஒருத்தியோட வாழ்க்கைய காலி பண்ணது போதாதுன்னு இன்னொருத்திய கேக்கற நீயெல்லாம் ஒரு ஆம்பிளையாடா?” முடிந்தளவு கோபத்தை அடக்கி கொள்பவன்… அப்போது அதை செய்யவில்லை.
அதை கேட்டு கொண்டிருந்த அருணுக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது… ஸ்ரீமதியோ இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது என்பதை போல பார்த்தாள்.
பார்த்து கொண்டிருந்த ஜெயந்தி அவசரமாக அவனை தடுத்தார்.
“விவேக்… மரியாதைய தயவு செய்து குறைக்காதே… என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்… எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு பேசினா எந்த பிரச்சனையும் முடிவுக்கு வராது…” அவனை சமாதானப்படுத்த முயல.
“ம்ம்ம் ஆமா… உங்க லட்சணம் தான் இப்போ தெரிஞ்சு போச்சே… நீங்க முடிவு செய்த மாப்பிள்ளையோட அழகை தான் பார்த்தாச்சே… இன்னும் என்ன யோசிக்க போறீங்க? அதுவும் பொறுக்கித்தனமா இவன் கேட்கறதுக்கு கூட பொறுத்து போக சொல்றீங்களே… நீங்கள்லாம்…” என்று பல்லை கடித்து கொண்டு அவரிடம் எகிறியவன்… அருணை பார்த்து.
“இன்னொரு முறை இந்த மாதிரி பேசிட்டு இருந்தீங்கன்னா அக்கா புருஷன்னு பார்க்க மாட்டேன்… நானே வெட்டிட்டு போய்டுவேன்… ஜாக்கிரதை…”
அதீத கோபத்தில் எச்சரித்தவனை அதே கடுப்போடு பார்த்த அருண், ஜெயந்தியை பார்த்து.
“என்ன சின்ன பையனை எல்லாம் பேச விட்டு வேடிக்கை பார்க்கறீங்களா? மரியாதை தெரியாத குடும்பம்ன்னு எங்கம்மா சொன்னது சரியா தான் இருக்கு…” என்றவன் இன்னும் சில வார்த்தைகளை சேர்த்து விட… அவனது சட்டையை பிடிக்க வந்தான் விவேக் அதீத கோபத்தோடு!… அவனால் தாள முடியவில்லை.
அப்போதுதான் உள்ளே நுழைந்த புருஷோத்தமனுக்கு அந்த காட்சி கண்ணில் பட்டு பயத்தையும் பீதியையும் கிளப்பி விட… அவசரமாக இருவரையும் பிரித்து விட்டார்.
எப்படி இருந்தாலும் அவன் மகளுடைய கணவன்… அவனிடம் மல்லுக்கு நின்றால் தன் மகள் வாழ்க்கை பாழாகி விடும் என்ற பதட்டத்தில் விவேக்கை கடிந்தவர்… நடந்ததை கொதிப்புடன் விவேக் கூறி அவரையும் கடிக்க… அவரால் விவேக்கை போல கொதிக்க முடியவில்லை.
முள் மேல் விழுந்த கதையாக ஸ்ரீமதியின் வாழ்க்கை இப்படி அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறதே!
அவருக்குமே அருணை நினைத்து கோபம் வந்ததுதான்… எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி ஒரு விஷயத்தை கேட்டிருப்பான் என்று ஆதங்கத்தில் கோபம் கொதித்து போனார் தான்… ஆனால் அவன், தான் பார்த்து முடிவு செய்த மாப்பிள்ளை… தன்னுடைய மகளை தானே கிணறில் தள்ளி விட்ட குற்ற உணர்வில் தவித்து கொண்டிருந்தார்.
உள்ளே செல்ல முயன்றவரை ஸ்ரீநிதியின் குரல் தடுத்து நிறுத்தியது.
“உங்க ரெண்டாவது பொண்ணோட புருஷன்னு இவ்வளவு பொறுத்துகிட்டு போறீங்க… ஆனா அன்னைக்கு அம்மா என் தாலியை கழட்டி எறிஞ்சாங்களே?… அவர் என்னோட புருஷன் இல்லையா?”
ஐந்து வருடங்களில் முதன்முறையாக வாய் திறந்து கேட்டாள் ஸ்ரீநிதி! அவரிடம் முதல் முறையாக பேசியதும் அப்போதுதான்!
“அவர் என்ன கேட்டார்?… என்னை பற்றி விசாரிங்க… அப்புறமா முடிவு பண்ணுங்கன்னு தானே கெஞ்சினார்… ஆனா உங்களுக்கு கொஞ்சம் கூட மனசு இரங்கவே இல்லையே…”
அவளது கேள்விகளுக்கு பதில் கூறவே பயந்து வாய் திறவாமல் இருந்தார்… அப்போதிருந்த புருஷோத்தமன் இல்லை அவர்… அருணிடம் பட்டு தெரிந்து தெளிந்து தன் தவறை உணர்ந்து இருப்பவர்.
“அப்பவும் என்னை நீங்க அடிக்கறதை தாங்க முடியாம தான் கூட்டிட்டு போனாரே தவிர எங்களுக்கு அப்போ கல்யாணம் செய்துக்கற எண்ணமே இல்லையே… நீங்க தானே அதற்கு தள்ளி விட்டீங்க… அப்புறமும் அம்மா என் தாலிய கழட்டி…” என்று அழுத்தமாக கூறிகொண்டிருந்தவள் அதற்கும் மேல் தாள முடியாமல் உடைய.
“நிதிம்மா…” ஜெயந்தியால் அவள் கூற வருவதை தாள முடியவில்லை.
“நீ நல்லா இரும்மா… பாழா போனது என் வாழ்க்கை தானே…” என்று கூறியவள்… அருண் புறம் திரும்பி.
“இப்ப பாரு… இந்த பொறுக்கி எல்லாம் வீட்டுக்குள்ள வந்து எப்படி எல்லாம் பேசறானுங்க… மதி ஒருத்திக்காக தான் நான் பொறுத்து போனேன்… இல்லைன்னா எப்போவோ என் கிட்ட செருப்படி வாங்கியிருப்பான்…”
ரவுத்திரமாக கூறியவள் ஸ்ரீமதியின் புறம் திரும்பி.
“சாரி மதி…” என்று கண்களில் நீரோடு அங்கிருந்து அகன்றாள்!






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!