arrow_back
கலாப காதலா அத்தியாயம் 19
கலாப காதலா chevron_right பகுதி 19 / 24

அத்தியாயம் 19

visibility 561
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

நீ

ரகசிய உளவாளியாக

நியமிக்கப்பட்டிருக்கிறாய்

உனக்குள் உனக்கு

அனுமதித்தல்

ஒருவகை(யில்) சிறை

கேள்விகள் தீர்ந்தபாடில்லை

முத்தங்களின் கடவுச்சொல்

கண்டறியப்படாமல் இருக்கிறது

இப்போதும் விவேக்கின் மனம் குமுறி கொண்டிருந்தது… தான் ஹாஸ்டலில் இருந்ததால் நடந்தவற்றை தன்னிடம் அன்னை ஒரு போதும் கூறியதில்லை… ஆனால் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் எதையோ பறிகொடுத்தது போல இருந்த தமக்கைக்கு என்னவாயிற்று என்று கேட்காமல் இருந்ததே இல்லை.

அவசர புத்தியும் செல்லரித்து போன சமூக கோட்பாடுகளையும் சுமந்து கொண்டு திரிந்தவர்களுக்கு பிறந்ததால் இரு சகோதரிகளும் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் நிலை அவனுக்கு மிகுந்த கோபத்தை வரவைத்தது.

“ஏன் க்கா… என்கிட்டே ஒன்றையும் சொல்லவே இல்ல… என்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னே முடிவு பண்ணிட்டியா?” கோபமாகவே கேட்டவனை முதுகில் தட்டி கொடுத்த ஸ்ரீநிதி.

“இதெல்லாம் வீட்டுல பேசிக்கலாம் விவேக்… இங்க வேண்டாம்…” என்று மென்மையாக கூற… இவ்வளவு மென்மையான தமக்கையின் வாழ்க்கை இப்படியாகவா வேண்டும் என்ற கேள்வி மனதை பிசைந்தது.

இருவருமாக மேக்சிமஸ் கேண்டீனில் அமர்ந்து இருந்தனர்… அருண் இரவே கோபப்பட்டு ஸ்ரீமதியை விட்டு விட்டு அவனது வீட்டிற்கு திருவொற்றியூர் சென்று விட்டிருந்தான்.

அதை குறித்து விவேக் சிறிதும் வருத்தப்படவில்லை என்றாலும் ஸ்ரீமதிக்கு உள்ளுக்குள் பயம் இருந்தது உண்மை!

ஜெயந்தியும் புருஷோத்தமனும் எவ்வளவோ கெஞ்சி பார்த்து இருந்தனர் அவனிடம்.

ஆனால் அவனோ விவேக் பேசியதை சாக்காக கொண்டு தனக்கு மரியாதை இல்லாத இடத்தில் எப்படி இருக்க முடியுமென்று கேட்டு விட்டு அதற்கு அவனே ஒரு தீர்வும் கூறியிருந்தான்.

ஸ்ரீநிதியை திருமணம் செய்து கொடுத்தால் தவிர தன்னுடைய மரியாதை திரும்ப கிடைக்காது என்பதில் உறுதியாக இருந்தான்.

அதை விட அவனது அன்னையோ போன் செய்து அவரது பங்குக்கு வளைத்து கட்டி பேசி, அவர்களுடைய குடும்பமெல்லாம் என்ன குடும்பம் என்று குற்றம் சாட்டி, கார் வாங்கி தராத கயமை தன்மையை சாடி, அவர்களது பெண்ணை அவர்களையே வைத்து கொள்ள சொல்லி விட்டு வைத்தார்.

அதை நினைக்கும் போதெல்லாம் விவேக்குக்கு கொதித்தது!

இவர்களுக்கெல்லாம் பெண்கள் என்ன கிள்ளுகீரையா என்று உள்ளுக்குள் கோபம் கனன்றது.

அவனை பெற்ற தாயும் ஒரு பெண் தானே? பெண்ணுக்கு பெண்ணே இப்படி செய்யலாமா என்று ஒரு பக்கம் யோசித்தாலும்,இவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் என்று மனம் வெதும்பியது!

ஸ்ரீநிதியும் விவேக்கும் காலை ஒன்றாகவே கிளம்பி வந்திருந்தனர்… ப்ராஜக்ட்டில் மனதை செலுத்த முயன்றாலும் அவனால் அது முடியவில்லை… நடந்த சம்பவங்கள் அனைத்தும் மனதை அழுத்தியது.

“அக்கா… ப்ரீயா இருக்கியா? கேண்டீன் வாயேன்…” பதினோரு மணி வாக்கில் மன அழுத்தத்தோடு விவேக் ஸ்ரீநிதியை அழைக்க… அர்ஜுனின் கேபினில் வெறுமையான முகத்தோடு அமர்ந்து எதையும் பேசாமல் வேலை பார்த்து கொண்டிருந்தவள் அர்ஜுனை பார்த்தாள்.

“அர்ஜுன்..ஒரு ஹால்ப் அன் அவர் ப்ரேக் தாயேன்…” என்று அவள் கேட்க.

“ஏன்… காபி வேண்டுமா?” என்றவாறு இண்டர்காமை அழுத்த போக.

“உன் கிட்ட இருந்தது கொஞ்சம் ப்ரேக் தா அர்ஜுன்..” எதையும் முகத்தில் காட்டி கொள்ளாமல் சிரிக்க முயன்று கேட்டவளை கூர்மையாக பார்த்தான் அர்ஜுன்.

“அதான் மொத்தமா ப்ரேக் பண்ணிட்டு போயிட்டியே…” என்று அவன் கூற… அந்த குரலில் தெரிந்த வலியை என்ன சொல்லி ஆற்ற?

“ஆஹான்… மறுபடியும் கிளம்பிட்டியா? ஷப்பா… இன்னொரு அரைமணி நேரத்துக்கு என் காதை தீய்ச்சு வெப்ப… தனியாவே உட்கார்ந்து என்னை திட்டிட்டு இரு…” கிண்டலாக கூற.

“என்னை விடு டெடி… உனக்கு ஏதாவது ப்ராப்ளமா? என்னவா இருந்தாலும் சொல்லுடா… நான் இருக்கேன்…” நகர போனவளின் கைகளை பிடித்து அவன் கேட்க… அவளது முகத்தில் புன்னகை விரிந்தது.

“ஏன் அப்படி கேட்கற அர்ஜுன்?” கடந்த காலங்களிலும் அவளது முக சுணக்கத்தை வைத்தே அவளது மனநிலையை கணித்து விடுபவனுக்கு அவளுடைய அப்போதைய குழப்பம் தெரியாமல் போய்விடாது.

“அதான் எழுதி ஒட்டி வெச்சுருக்கே… என்னவோ சரியில்லைன்னு…”

“முன்னாள் காதலனின் முகத்தை பார்த்து கொண்டே வேலை செய்வது என்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை நீ உணரவில்லையா?” ஆங்கிலத்தில் வேண்டுமென்றே கேட்டு விட்டு அவனது முகத்தை பார்க்க… அவனது முகத்தில் புன்னகையின் சாயல்!

“ம்ம்ஹூம்… அப்படியா? நேற்றெல்லாம் அப்படி கொடுமையாக இருந்த மாதிரி தெரியவில்லையே…” அவனது அக்மார்க் குறும்புத்தனத்தோடு கூற.

“நீ இப்படியே பேசி கொண்டே இரு…” அதே புன்னகை முகத்தோடு அவள் வெளியேற… புள்ளியாக அவள் மறையும் வரை அவளை பார்த்தவாறு இருந்தான் அர்ஜுன்!

அவனுக்கான நேரம் இன்னும் மீதமிருப்பதாக பட்டது அந்த காதலனுக்கு!

அங்கே விவேக்கோ அதிகபட்சமான மன அழுத்தத்தில் தமக்கையை எதிர்நோக்கி காத்திருந்தான்.

இரண்டு காபிகளை வாங்கி கொண்டு தனது சகோதரனின் முன்னே அமர்ந்தாள் ஸ்ரீநிதி!

எத்தகைய டென்ஷனாக இருந்தாலும் அந்த ஒரு காபி அவளிடம் மாயம் செய்து விடும்… அதை சொல்லியே கடந்த காலங்களில் அவளை கிண்டலடித்து இருக்கிறான் அர்ஜுன்.

அதே நினைவில் புன்னகையோடு விவேக் முன் அமர.

“எப்படி க்கா… நான் இவ்வளவு டென்ஷனா இருக்கேன்… நீ இப்படி கூலா சிரிச்சுட்டு இருக்க?”

“இப்போ நான் டென்ஷனாகி என்னவாக போகுது விவேக்… இனிமே புதுசா நான் என்ன இழந்துட போறேன்… ஒண்ணுமே இல்லை…” என்று இடைவெளி விட்டவள்.

“இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் கவலைகளும் இல்லை…” தூய தமிழில் கூறுவதாக பெயர் செய்து மொக்கை போட.

“அக்கா ப்ளீஸ்… கடிக்காதே…” அவனிருந்த அழுத்தத்தில் அவளை கடித்து வைத்தவன்… கோபங்களை கொட்டி விட்டு ஆற்றாமைகளை அவளிடம் பொங்க விட்டு… ஒருவாறாக தெளிந்த பின்னும் கூட.

“நீயாவது முதல்லையே என்கிட்டே சொல்லி இருக்கலாமே க்கா… அந்த ராஸ்கலை பற்றி… ஒன்றுமே சொல்லாம இருந்துட்டியே…” மீண்டும் அருணை திட்ட ஆரம்பிக்க.

அவள் ஒன்றும் கூறாமல் மெளனமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்… விவேக்குடைய மனநிலை புரிந்தாலும் அவளுடைய சூழ்நிலையில் இருந்தது அனைத்தையும் பார்க்க வேண்டி இருக்கிறது அல்லவா!

மூத்த மகளாக பிறப்பது சாபம்!

வாழ்க்கையை குடும்பத்திற்காக விட்டுகொடுத்து விட்டு, தங்கைக்காக அவளது கணவனின் செயல்களை எதிர்கொண்டு, ஓடி களைத்த நிலையிலிருந்தாள்… ஆனால் அர்ஜுனிடம் ஒரு வார்த்தை கூறியிருந்தால் அனைத்தையும் அவன் எதிர்கொண்டு இருப்பான் என்பதும் அவளுக்கு தெரிந்தது தான்… ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது.

காதலனாக மட்டுமல்ல… நண்பனாகவும் உதவுபவன் தான்… ஆனால் ஏன்? அவளுக்குள் இந்த கேள்வி விஸ்வரூபமெடுத்து ஆட்டி படைத்து கொண்டிருந்தது.

“உன்னோட விஷயம் எனக்கு தெரிந்து இருந்தா இத்தனை நாள் உன்னை இப்படி விட்டிருக்க மாட்டேன்…” மீண்டும் அவளை நினைத்து புலம்ப ஆரம்பிக்க… சுற்றிலும் பார்வையை ஓட்டியவள்,

“விவேக்… இது வேலை செய்யற இடம்… இங்க உன்னோட கவனம் எல்லாம் உன் வேலைல தான் இருக்கணும்… இங்க உன்னோட திறமைய ப்ரூவ் பண்ண வேண்டாமா… அதை விட்டுட்டு வீட்டு பிரச்சனைய இங்க கொண்டு வந்து புலம்பிகிட்டு… என்ன விவேக் இது?” கோபப்படாமல் அதே சமயத்தில் வெகு அழுத்தமாக கூற.

“சூப்பர்… நல்ல அட்வைஸ்…” என்று பின்னே கைதட்டும் சப்தம் கேட்க… திரும்பி பார்க்காமலே அவன் யார் என்பது புரிய… தலையில் கை வைத்து கொண்டு குனிந்து கொண்டாள் ஸ்ரீநிதி!

“இப்படித்தான் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு பேசி தானும் கெட்டு போகணும்… கூட இருக்கவங்களையும் கிணற்றில் தள்ளி விடனும்…” என்று கூறிக்கொண்டே ஸ்ரீநிதியின் அருகே அமர்ந்தவனை பார்த்து அதிர்ச்சியில் எழுந்து கொண்டான் விவேக் …

“பாஸ்…”

அங்கு அர்ஜுனை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை… தமக்கைக்கு நண்பர் என்று அறிந்திருந்தாலும், அந்த நிறுவனத்தின் முதலாளி மற்றும் அவனது ஹீரோவல்லவா!

“உட்கார் விவேக்…” என்று அவனது கை பிடித்து அமர வைத்தவனை ஆச்சரியமாக பார்த்தான் விவேக்.

அருகில் இருந்த ஸ்ரீநிதி முறைத்து பார்த்தாள்.

“ஒரு ஹாப் அன் அவர் ப்ரேக் கொடுன்னு தானே கேட்டேன்… அப்போ கூட என்னை ப்ரீயா விட மாட்டியா?”

கடுப்பாக கேட்டவளை பார்த்து சிரித்த அர்ஜுன்.

“சான்சே இல்ல…” கிண்டலாக அவன் கூறி விட்டு.

“இத்தனை வருஷம் ப்ரேக் கொடுத்தது பத்தலையா?…” என்று அவள் புறம் திரும்பி ரகசியமாக சிரித்து கொண்டே கூற… அவனை முறைத்தாள் ஸ்ரீநிதி.

“உனக்கு இந்த கொழுப்பும் திமிரும் எப்போத்தான் குறையும்டா?” ரகசியமாக கடுப்பாக கேட்டவளை மேலும் கடுப்பாக்கவென.

“ஏன்… நீயா வந்து சமைச்சு போட்ட?” என்று அவன் கிண்டலாக அதே குரலில் கேட்க… அவனை மேலும் முறைத்தாள்! விவேக்குக்கு அவர்களது சண்டையை பார்க்க சிரிப்பாக இருந்தது… சிறு பிள்ளைகளை போல!

“அதுக்கு தான் உன் ஒய்ப் இருக்காளே…”

மனதிற்குள் அவனை இன்னொருத்திக்கு தாரை வார்த்து கொடுத்து விட்ட எரிச்சல்… அவ்வப்போது அது வெளிப்பட்டு விடுகிறது என்று மனதின் ஓரத்தில் ஒரு குரல் எழுந்தது!

“அவளுக்கு அந்த பொறுப்பு இல்லையே டெடி… அவங்க அம்மா வீட்ல உட்கார்ந்துட்டு வர மாட்டேங்கறா…” என்று சோகமாக கூறிவிட்டு விவேக்கை பார்த்து.

“நீயே பதில் சொல்லு விவேக்… ஒரு பொறுப்பான ஒய்ப் அவளோட ஹஸ்பன்ட்டை பார்க்கனுமா? இல்லை இன்னமும் அம்மா அம்மான்னு இருக்கனுமா?”

விவேக்கை பார்த்து கேட்டவனின் தொனியில் அதிர்ந்து அவனை பார்த்தாள் ஸ்ரீநிதி… இவன் என்ன கூறுகிறான்? விவேக்குக்கோ என்ன சொல்வது என்று புரியவில்லை.

“பாஸ்… அது வந்து…” என்று தயங்க.

“அர்ஜுன்…” எதையாவது கூற ஆரம்பித்து எதையாவது உளறி வைத்து விட போகிறானோ என்ற பயம் அவளுக்கு… அவன் உண்மைகளை கூறுவது எந்த பாதிப்பையும் அவளுக்கு கொடுத்து விட போவதில்லை… ஆனால் அர்ஜுனுக்கு திருமணமான நிலையில் பழைய உண்மைகள் வெளியில் வருவது சரியாகுமா?… அதை காட்டிலும் விவேக்கிடம் கூறி அவனையும் வேறு குழப்ப வேண்டுமா?

“சரி சரி…” என்று சிரித்து கொண்டே நிறுத்தியவன் அவளை நேராக பார்த்து…”ஏன் ஸ்ரீ? இது உன் தம்பிதானே? ஒரு குட்டி இன்ட்ரோ கூடவா கொடுக்க மாட்ட?” என்று கேட்க..

“என்னன்னு இன்ட்ரோ கொடுக்க? அதையும் நீயே சொல்லிடு…”

“நல்லவன்… வல்லவன்… நாலும் தெரிஞ்சவன்…” என்று கூறிக்கொண்டே போனவனை.

“ஸ்டாப்… ஸ்டாப்… அந்த நல்லவன்… வல்லவன் எல்லாம் யார் அர்ஜுன்?” கிண்டலாக அவள் கேட்க.

“வேற யாரு டெடி? நானே தான்…” பரவச நிலையில் அமர்ந்திருக்கும் நித்யானந்தா கணக்காக அர்ஜுன் அருள் பாலிக்க… மற்ற இருவராலும் சிரிப்பை கட்டுபடுத்தவே முடியவில்லை.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கேண்டீன் ஊழியர் மூவருக்குமாக காபியை செர்வ் செய்து விட்டு போக.

“நாங்க முன்னாடியே குடிச்சுட்டோம் அர்ஜுன்…” மீண்டும் ஒரு மெஷின் காபியா என்று ஸ்ரீநிதி மறுக்க.

“டெடி… இது மெஷின் காபி இல்ல… உன்னோட பேவரிட் கும்பகோணம் டிகிரி காபி… எனக்காக தனியா ப்ரிபேர் பண்ணுவாங்க…” என்று கூறிவிட்டு அவள் புறம் காபியை நகர்த்தி வைத்த அர்ஜுனின் செய்கை விவேக்குக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

ஸ்ரீநிதி பில்டர் காபி பிரியை தான்… அதிலும் கும்பகோணம் டிகிரி காபி என்றால் முன்பெல்லாம் உயிரை விடுபவள் தான்… வெளியில் வந்தால் மெஷின் காபியை கடனே என்று குடித்து வைப்பவள் தான்.

விவேக்குக்கு எங்கேயோ எதுவோ புரிகிறார் போல தோன்றியது… ஆனாலும் குழப்பியது… இதற்கு பதில் தெரியவில்லை என்றால் மண்டை குழம்பி விடும் போல தோன்றியது.

விவேக் இந்த குழப்பத்தில் இருந்தான் என்றால் ஸ்ரீநிதிக்கு அந்த செய்கை அவளது நினைவுகளை தட்டி எழுப்பியது… துக்கம் பந்தாக தொண்டையை அடைத்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 20

நினைத்துக் கொள்வதற்கும்நினைத்துக் கொள்வதைநினைவு படுத்துவதற்கும்நித்தமும் ஒன்றுநிகழ்ந்து கொண்டுதானிருக்கிறதுஉனக்கான கூடுஇடம் மாறியிருக்கிறதுஅல்லது தடம் மாறிவிட்டதுஎதன் பொருட்டும்விரல் நீட்டுவதாய் இல்லைஅததது அதனதன் போக்கில்நதிக்குள் உருளும்கூழாங்கல் போலஇன்னமும் என்னிடம்சொல்வதற்கு சொற்கள்இருந்து கொண்டுதானிருக்கிறது...“இந்த மாதிரி யாருமே லவ் பண்ணிருக்க மாட்டங்கடி... கோவில் கோவிலா மட்டும் அலைய வைக்கற...”மைலாப்பூர்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்