அத்தியாயம் 3
3
ஒரு மழை நாளில் சன்னலில் வழியும்
மழை நீர் தெளித்து விளையாடிக் கொண்டிருந்தாய்.
நான் கூறும் வேண்டாம் என்பதன்
பொருள் அறிந்தவனாய்
மீண்டும் மீண்டும் என் ஆடை நனைத்தாய்.
என் ஈரம் உலர்த்த உன் தேகம் அணைத்து
முதுகில் கன்னம் பதிக்க என் தேகம் நனைத்தாய்.
உன் மார்பில் தூங்கி மடியினில் தவழ்ந்து
பொழுதுகள் கழித்த எனக்கோ
இன்று நீயின்றி
தூக்கம் தொலைத்து
மழை சாரலில் நனைய
உனக்காய் காத்திருக்கிறேன் நான்!
வேலைகளை முடித்து விட்டு மேலாளரின் தனிப்பட்ட உதவியாளரான மதுவிடமிருந்து மேக்சிமஸ் தொடர்பான விவரங்களை பெற்று கொண்டு வீடு திரும்ப இரவு ஏழு மணியாகியிருந்தது… வேளச்சேரியில் இருக்கும் தனது வீட்டை நோக்கி ஆக்டிவாவில் பயணித்தவளுக்கு மனம் ஏனோ சஞ்சலமாகவே இருந்தது… தங்கையின் வரவை நினைத்தா அல்லது வேறெதுவுமா என்பதை அவளுக்கு பிரித்து பார்க்க தெரியவில்லை.
களைப்பாக உள்ளே நுழைந்தவளை முகம் கொள்ளா புன்னகையோடு வரவேற்றதே ஸ்ரீமதிதான்! விவேக்கை காணவில்லை… ஒருவேளை ப்ராஜக்ட் சம்பந்தமான வேலையாக இருக்கும் என்று நினைத்து கொண்டாள்.
ஒப்புக்காக ஒட்டவைத்த புன்னகையோடு… வந்தவர்களை பார்த்து புன்னகைத்தவள்,
“வாங்க…” என்று அருணை அழைத்தபோது அவனது கோணலான சிரிப்பை பார்த்து மனம் கொதித்தது.
இவனெல்லாம் ஒரு மனிதனா என்று!.
ஸ்ரீமதிக்காக என்று பொறுத்துக்கொண்டாள்… அவளது புன்னகை முகம் மட்டுமே அவளை சற்று ஆற்றுபடுத்தியிருந்தது.
தனது வாழ்க்கையே இப்படி மற்றவருக்காக என்று பார்த்தே வீணாகி விட்டதே என்ற எரிச்சல் அவளையும் மீறி மேலே எழ… மேற்கொண்டு எதையும் பேசாமல் அறையை நோக்கி போக… அவசரமாக அவள் முன்னே வந்து நின்றாள் ஸ்ரீமதி.
“அக்கா…”
அவள் அழைத்த விதத்திலேயே எதற்காகவோ அடி போடுகிறாள் என்பதை புரிந்து கொண்டாள் ஸ்ரீநிதி… நிமிர்ந்து அவளை என்னவென்பதை போல பார்த்தவள், தொடர்ந்து அன்னையையும் எதுவும் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருக்கும் தந்தையையும் பார்த்தாள்!
கசப்பான புன்னகை நெளிந்தது அவளது உதட்டில்!
அது அவளது முகத்தில் தெளிவாக பிரதிபலிக்க தந்தை தலை குனிந்து கொண்டார்… ரத்தம் சூடாக இருக்கையில் ஆடிவிட்டு இப்போது வந்த மருமகனால் அடங்கி விட்டவர்!
எதற்காக இந்த வேடம் என்று கேட்க தோன்றியது… விவேக் இன்னும் வீட்டிற்கு வரவில்லை போலும்… நிசப்தமாக இருந்த வீடு அதை காட்டிகொடுக்க.
“என்ன மதி?” ஸ்ரீநிதி எதையும் காட்டி கொள்ளாமல் அடக்கமான குரலில் கேட்க.
“கொஞ்சம் பேசணும்க்கா…” தயங்கி கொண்டே அவள் கூறியவிதத்தில் ஸ்ரீநிதிக்கு மனதில் நெருடல் எழுந்தது… என்னவென்பதை போல அவள் புறம் திரும்பி நிற்க.
“அக்கா… கொஞ்சம் பணம் வேணும்…” தயங்கி கொண்டே ஸ்ரீமதி கூற… என்னவென்பதை போல தந்தையை பார்த்தாள்… அவரோ குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை… உடன் ஜெயந்தியின் முகத்திலும் தர்மசங்கடம்!
அவளது பார்வையை கொண்டே அடுத்த வார்த்தையை அவசரமாக கூறினாள் ஸ்ரீமதி.
“இல்லக்கா… இந்த ஒரு தடவைதான்… அப்பாவுக்கு சேவிங்க்ஸ்ல பணம் இல்லையாம்… அதான் உன் கிட்ட கேட்கறேன்…” திக்கி திணறி அவள் கூறிக்கொண்டிருக்க… அருகில் சோபாவில் ஜம்பமாக காலாட்டி கொண்டு அமர்ந்திருந்தான் அருண்… மனைவியை பேசவிட்டு!
இவர்களெல்லாம் என்ன ஜென்மமோ என்ற எரிச்சல் மனதில் சுறுசுறுவென எழுந்தது… இருக்கிற ஒரு மனைவியை வைத்து காப்பாற்றவே அவ்வப்போது பிறந்த வீட்டில் பணத்தை பீராய்ந்து கொண்டு இருப்பவனுக்கு பெண் மோகம் வேறு!
மனம் கசந்தது!
திருமணமான இந்த நான்கு வருடத்தில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை என்ற கணக்கில் மாமனாரிடம் பணம் பறிப்பதை குலத்தொழிலாகவே வைத்திருப்பவனை கூறி ஒன்றுமாக போவதில்லை.
அவன் கேட்கும் போதெல்லாம் எப்படியாவது வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு செயல்படும் தங்கையையும்… அவளை வாழ வைக்கிறேன் என்று கூறிக்கொண்டு முடிந்த வரை பணத்திற்காக போராடும் தந்தையையும் என்ன வகையில் சேர்ப்பது?
இது போன்ற பொறுப்பற்ற தனத்தால் தானே இந்த அருண் மாதிரியான மனிதர்களும் உலவுகின்றனர்!
“என்கிட்டே பணம் இல்லை…” ஒரே வரியில் முடித்துவிட்டு அறையை நோக்கி போனவளை மேலும் தடுத்தாள் தங்கை.
ஸ்ரீநிதி வேலைக்கு செல்வாளே தவிர சம்பளமென்று அன்னையிடம் தந்ததில்லை… தர தோன்றியதும் இல்லை!செலவுக்கு பணம் தேவை என்று ஜெயந்தியாக கேட்டால் கேட்ட பணத்தை மட்டும் தான் கொடுத்து இருக்கிறாள்… அது போல விவேக் கேட்டாலும் கொடுக்க தயாராகத்தான் இருந்தாள்… ஆனால் அவன் தமக்கையிடம் அது போல நின்றதில்லை.
இந்த விஷயத்தில் அவனுக்கு சற்று சுயமரியாதை அதிகம்… படிப்பு செலவுகளுக்கே தந்தையிடம் அதற்கான அளவு மட்டுமே பெற்று கொள்வான்… மற்ற செலவுகளுக்கெல்லாம் தன்னால் முடிந்த வேலைகளை எல்லாம் செய்து பணம் சேர்த்து கொள்கிறான் என்று அவ்வப்போது ஜெயந்தி கூறுவது வழக்கம்!
இதனாலேயே அவளது உடன் பிறந்தவன் மீது மரியாதை அதிகம் அவளுக்கு!
ஸ்ரீமதியும் திருமணமாகும் வரை அந்த சுயமரியாதையோடு தான் இருந்தாள்… நமது சமூகத்தில் பெண்கள் சுயமரியாதையோடு இருப்பதை யார் விரும்புகிறார்கள்? சுயத்தை தொலைத்து விட்டு குடும்பத்தினர் ஒவ்வொருவரின் முகமூடியையும் தான் மாட்டி கொண்டு, கடைசி வரை அடிமையாக இருப்பவர்கள் நல்ல பெண்கள்!
அந்த விலங்கை உடைக்க நினைப்பவர்கள் கலகவாதிகள்!
இது போன்ற பேச்சுக்களுக்கு பயந்தே ஸ்ரீமதி போன்றவர்கள் சுயத்தை தொலைத்து வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள் என்று அவ்வப்போது தோன்றியிருக்கிறது.
இப்போதும் அதே நெருடல்! அந்த நெருடலுக்கு தானுமே காரணம் என்ற அந்த ஒற்றை காரணம் அவளை அங்கேயே இருத்தி வைத்தது.
“க்கா… ப்ளீஸ் க்கா… இந்த தடவை அவரோட வியாபாரத்துக்காகவெல்லாம் கேட்கலை…” என்று இடைவெளி விட்டு.
“எனக்காக கேட்கறேன்…” கூறும் போதே அவளது கண்களிலிருந்து கண்ணீர் உடைப்பெடுத்தது.
“உனக்காகவா? எதுக்கு?” ஸ்ரீநிதிக்குமே ஆச்சரியமாக இருந்தது.
“இல்லக்கா… கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆக போகுதே… இன்னும் குழந்தை இல்லையேன்னு ஹாஸ்பிட்டல்ல செக் பண்ணினோம்…” என்று கூறியவள் சங்கடமாக தொடர்ந்தாள்… தமக்கையிடம் இதையெல்லாம் கூற வேண்டியிருக்கிறதே என்ற தவிப்பு!
“அதில் எனக்கு இயற்கையா கருத்தரிக்க வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாங்க…” கூறிவிட்டு நிலத்தை பார்க்க… ஒரு வகையில் ஸ்ரீநிதிக்கு தங்கை கூற வருவதே புரியவில்லை.
“அதனால என்ன?”
“IVF தான்க்கா சஜஸ்ட் செய்யறாங்க… ஆனா அதுக்கு மூன்று லட்சம் செலவாகும்க்கா…”
“ சரி யார் மேல் குறை இருக்கு?” எதை பற்றியும் நினைக்காமல் ஸ்ரீநிதி கேட்டுவிட… ஜெயந்தி அவசரமாக.
“அது நமக்கு எதுக்கு நிதிம்மா…” என்று தவித்த போது புரிந்தது… அருண் இதில் விளையாடி இருப்பது! கண்டிப்பாக தங்கையின் பக்கத்தில் குறை இருக்காது என்றே தோன்றியது.
ஆனாலும் குழந்தை என்று வரும் போதும் தான் செலவு செய்யாமல் மனைவியின் பிறந்த வீட்டினரே செய்ய வேண்டும் என்று நினைப்பது தான் ஆண்மைக்கு அழகா? அருணை வெறுத்து போன பார்வை பார்த்தவளுக்கு கேள்வியை கேட்டுவிட நாக்கு துறுதுறுவென்றது.
“சரி யாருக்கு குழந்தை வேண்டுமோ அவங்க செலவு செய்துக்க வேண்டியதுதான்… என்கிட்டே பணம் இல்லை…” முடித்து விட்ட ஸ்ரீநிதியை பாவமாக பார்த்தாள் மதி.
உதவியற்றவளாக நின்றிருந்த தங்கையை பார்க்கும் போது மனம் கசிந்தது… சரியாக படிக்கவும் விடாமல் அவசர கதியில் அள்ளிதெளித்த கோலமாக அவளது வாழ்கையை ஆக்கியது யார் குற்றம்? தானுமே ஒரு குற்றவாளி தானே?
ஸ்ரீநிதியை போலல்ல ஸ்ரீமதி… இவளுக்கு சற்றேனும் போராட வரும்… ஆனால் போராட்டம் என்ற ஒன்றை அறியவே அறியாதவள் மதி… முன்பு தந்தைக்கு பயந்து படிப்பை விட்டு விட்டு அவர் காட்டியவனை மறுபேச்சு பேசாமல் திருமணம் செய்தாள்.
இப்போது அவன் ஆடும் ஆட்டத்துக்கு பலியாகி கொண்டிருக்கிறாள்.
குட்ட குட்ட குனிந்து கொண்டு வாங்கி கொள்ளும் எத்தனையோ பெண்களுள் ஒருத்தி… இந்த மதி!
ஜெயந்தியை முறைத்து பார்த்த ஸ்ரீநிதிக்கு ஒரு புறம் தாயை நினைத்து கோபம் வந்தாலும்… அவரும் ஒரு சாதாரண குடும்பத்தலைவி மட்டும் தானே.
நடுத்தர வர்க்கத்து குடும்பத்தலைவி!
கௌரவம் என்கிற போலிப் போர்வையை போர்த்தி கொண்ட சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பத்தலைவி!
“கொஞ்சம் தயவு பண்ணு நிதிம்மா… ப்ளீஸ்… நம்ம மதிக்காக…” ஸ்ரீநிதியிடம் கெஞ்சிய ஜெயந்தியை தீப்பார்வை பார்த்தாள்!
“சரி… இப்போ மூன்று லட்சம் ருபாய் கொடுத்து அந்த ட்ரீட்மென்ட் எடுத்தா கண்டிப்பா குழந்தை பிறக்குமா?” ஸ்ரீமதியை கேட்க… அவளோ தயங்கியவாறே.
“கண்டிப்பா பிறக்கும்ன்னு சொல்லியிருக்காங்கக்கா…” மிகவும் மெல்லிய குரலில் கூற… ஸ்ரீநிதிக்கு களைப்பாக இருந்தது… அலுவலகத்தின் களைப்போடு இதுவும் சேர்ந்து கொள்ள… தன்னை விட்டால் போதும் என்று நினைக்க துவங்கி இருந்தாள்.
“சரி பார்க்கறேன்…” என்று கூறிவிட்டு அவளது அறையை தஞ்சமடைய… ஹாலில் அமர்ந்திருந்த அருண் ஜெயந்தியிடம் கடுப்பை காட்டினான்.
ஆண் சிங்கம்! இல்லை… அசிங்கம்!
“என்ன பெரிய கொம்பா உங்க பெரிய பொண்ணு… வீட்டு மாப்பிள்ளைக்கு மரியாதை தர தெரியாதா?…”
“இல்ல மாப்பிள்ளை… களைப்பா இருந்து இருப்பா… எதையாவது சாப்பிட கொடுத்துட்டு கேட்டு இருந்தா கூட பரவால்லை… வந்தவளை நிற்க வெச்சு கேட்டது தப்பு…” அவனது வார்த்தைகளை பொறுக்க முடியாமல் ஜெயந்தி அவரது மருமகனிடம் சற்று அழுத்தமாகவே கூற… அருண் முகம் சிறுத்தது.
“ஆனாலும் வீட்டு மாப்பிள்ளைக்கு எப்படி மரியாதை கொடுக்கறதுன்னு உங்க பொண்ணுக்கு சொல்லி தாங்க…”அதே எரிச்சல் குரலில் கூறிக்கொண்டிருந்தவன்… முறைத்த பார்வையோடு தன் முன்னே வந்து நின்ற ஸ்ரீநிதியை கண்டு பேச்சை நிறுத்தினான்.
“என்ன சொல்லி தரனும்?” உயர்த்திய புருவங்களோடு உயர்த்தாத குரலில் கேட்டவளின் தொனி அருண் மனதில் பயத்தை விதைத்தது… அவளுடனான உறவும் தேவை அதே பொழுதில் தன்னுடைய ஆளுமையையும் நிலை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற கற்பனை நிலையில் இருந்தவனுக்கு அவளது இன்னொரு முகம் அதிர்வாக இருந்தது.
“இல்ல ஸ்ரீ… நான் என்ன சொல்றேன்னா?” திக்கி திணறி கூறியவனை எரிக்கும் பார்வை பார்த்தாள்… அவளை ஸ்ரீநிதி என்று முழு பெயரை சொல்லி அவன் அழைத்தாலே உடல் எரியும்! இதில் வெறும் ஸ்ரீ யா என்ற கோபம் கிளர்ந்தெழுந்தது.
இவனை எல்லாம் ஒற்றை சொல்லோடு விட்டு விடுவதா?
“கால் மீ அண்ணி…” உணர்வை காட்டாத குரலில் வெகு அழுத்தமான குரலில் கூற… அவனது முகம் கறுத்தது.
“பட் யூ ஆர் நாட் மேரீட்…” அவள் திருமணமாகாத பெண் என்ற நினைவில் அவன் கூற… அவனை வெட்டும் பார்வை பார்த்த ஸ்ரீநிதி.
“யார் சொன்னது எனக்கு மேரேஜ் ஆகலைன்னு… ஐ ஆம் மேரீட்… !” வெகுவான கோபத்தை குரலில் தேக்கி கொண்டு அவள் கூற… அருண் குழப்பமாக மற்றவர்களை பார்த்தான்.
“உங்களுக்கு தெரியலைன்னா நான் என்ன செய்வது அருண்… ஐ ஆம் மேரிட்… ஆனா என் ஹஸ்பன்ட் எங்கன்னு கேட்கறதா இருந்தா இதோ நிற்கறாங்களே உங்க மாமியார் மாமனார்… அவங்க கிட்ட கேட்டுக்கங்க…” என்று இருவரையும் கை காட்ட… ஜெயந்தியின் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது!
அருணுக்கு மேலும் குழப்பமாக இருந்தது.
“ஓகே… லீவ் இட்… இந்த முறை பணம் தர்றேன்… ஆனா இன்னொரு தடவை இது திரும்ப நடந்தா நான் எந்த லிமிட்க்கு போகவும் தயங்க மாட்டேன்… இவங்க மாதிரி சாப்ட் அப்ரோச் நீங்க என்கிட்டே எதிர்பார்க்க முடியாது… காட் இட்…”
ஒற்றை விரலை நீட்டி குரலை சற்றும் உயர்த்தாமல் கூறியவளின் தொனியில் அதிர்ந்து பார்த்தான் அருண்!
மெளனமாகவே பார்த்து பழகியிருந்த ஸ்ரீநிதியின் இந்த அவதாரம் அவனுக்கு புதியது!
சற்றே பயம் வந்தது அவனுக்கு!
தன்மானம் உள்ளவர்களாக இருந்தால் கன்னத்தில் அறைவது போன்ற அவளது வார்த்தைகளில் ஒரு வழியாகி இருப்பார்… இவன் தான் அனைத்தையும் கடந்தவன் ஆயிற்றே!
“நீங்களாச்சு உங்க தங்கையாச்சு… உங்க தங்கைக்கு வாரிசு வேண்டும் அப்படீன்னு நீங்க நினைச்சா செய்ங்க… இல்லைன்னா எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை…” என்று அலட்சியமாக தோளை குலுக்க
அவனை அற்ப புழுவை பார்ப்பது போல பார்த்தாள் ஸ்ரீநிதி… ஸ்ரீமதிக்கு உள்ளுக்குள் துக்கம் பொங்கியது… கொண்டவன் நல்லவனாக இல்லாத போது அந்த அப்பாவியால் வெளிப்படையாக தன் உணர்வுகளை கூட வெளிக்காட்ட முடியவில்லை… ஆனால் அருணோ.
“கல்யாணம் ஆனது… நிஜமா?” அந்த வார்த்தையில் குறியாக இருக்க.
“எஸ்…” அவளும் அவனை நேருக்கு நேராக பார்த்து கோபக்கனல் வீச பதில் கூற.
“எங்க கிட்ட உண்மைய மறைச்சு இருக்கீங்க…” பதிலுக்கு கோபமாக அவன் கூற ஆரம்பிக்க.
“எனக்கு கல்யாணம் ஆகிருந்தா என்ன? ஆகலைன்னா உங்களுக்கு என்ன? உங்க ஒய்ப் மதிதானே? இது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம்… வீட்டுக்கு வந்தா வந்த வேலைய மட்டும் பாருங்க… என்னோட விஷயத்துல தலையிடற வேலை வேண்டாம்… காட் இட்?”
அவனிடம் வெகு அழுத்தமாக கூறிவிட்டு பெற்றோர்களை கடுகடுவென பார்த்துவிட்டு சென்றாள்… உணவு மேஜைக்கு! ஜெயந்திக்கும் அருணின் பார்வை கூறும் செய்திகளை மொழிபெயர்க்க பிடிக்கவில்லை.
உள்ளுக்குள் மகள் இந்த அளவு அழுத்தமாக கூறியதுதான் சரி என்று தோன்றினாலும் அதை வெளிப்படையாக அவரால் அவன் முன் கூற முடியாது!
ஸ்ரீநிதியின் பெற்றோர் பக்கம் பார்வையை திருப்பியவன்… அனல் மேலிட்ட புழுவாக நின்று கொண்டிருந்தவர்களை உறுத்து விழித்தான்… அருகில் ஸ்ரீமதி பேசுவதற்கே பயந்து நடுங்கி கொண்டு நின்றிருந்தாள்… இதற்கு தன் கணவன் எவ்வாறெல்லாம் குதிப்பான் என்ற பயம் அவளுக்கு!
அவர்களும் என்ன சொல்வது என்று தெரியாமல் அணுகுண்டை தூக்கி எறிந்துவிட்டு செல்லும் மகளை பார்த்தவாறு நின்றிருந்தனர்.
“என்ன இப்படி சொல்லிட்டு போறாங்க? இன்னும் என்னென்ன பொய் சொல்லி உங்க பொண்ணை என் தலைல கட்டியிருக்கீங்க? அதெல்லாம் எப்போ வெளிய வரும்?” சிறிதும் ஈரமில்லாமல் கேட்ட மருமகனின் தோரணையில் மூவருமே நடுங்கித்தான் போனார்கள்.
“மாப்பிள்ளை… உங்க கிட்ட எதுக்கு நாங்க பொய் சொல்லணும்?”
புருஷோத்தமனுக்கு மனம் கலங்கியது… தன் பெண்ணின் வாழ்க்கை திரிசங்கு சொர்கத்தை போல அந்தரத்தில் நிற்கிறதே என்ற ஆற்றாமையில் ஊமையாக கலங்கினார்!
முதல் பெண்ணின் வாழ்க்கை தான் இப்படி ஆகிவிட்டது என்று மனதுக்குள் வெதும்பி கொண்டிருந்தால் இரண்டாவது பெண்ணின் வாழ்க்கை இப்படிப்பட்ட ஒருவனிடமா சிக்கி சீரழிய வேண்டும்?
ஆண்டவா கடந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்து விட்டேன் என்று இப்படி என் பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறாயே? வாய்விட்டு கூறவில்லையே தவிர அவரது முகம் அவரது மன அழுத்தத்தை காட்டி கொடுக்க, அது உணவு மேஜையில் அமர்ந்து டிபனை உண்டு கொண்டிருந்த ஸ்ரீநிதியின் பார்வையில் பட்டது.
பார்க்கும் போதே வேப்பங்காயை கடித்தது போல கசந்தது அவளுக்கு!
அவரும் முடிந்தவரையில் தன் பெண்ணுக்காக… அவள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக விசாரித்து இவன் நல்லவன் வல்லவன் நாலும் அறிந்தவன்… தனது இனத்தவன் என்று மற்றவர்கள் கூறுவதை கொண்டுதான் மதியை திருமணம் செய்து கொடுத்திருந்தார்.
அவசர கதியில் செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் தன் வரையில் மிக சிறப்பாக தான் விசாரித்து இருந்தார்… மருமகனின் பெற்றவள் மட்டும் காசாசை பிடித்தவர் என்பதை தவிர வேறு ஒன்றும் குறை இருப்பதாக அப்போது தெரியவில்லை அவருக்கு… ஆனால் அந்த ஒன்று தன் மகளை இந்த அளவு பாடுபடுத்தும் என்று அறிந்திருந்தால் பெண்ணை கொடுத்திருக்கவே மாட்டாரோ?
திருமணம் முடிந்து ஒவ்வொரு முறையும் மகள் பணத்திற்காக வந்து நிற்கும் போது இயன்ற வரையில் தன்னிடம் இருந்ததை எல்லாம் கொடுத்திருந்தார்… அப்படிப்பட்டவர்களை தான் இவன் நிற்க வைத்து கேள்வி கேட்டு கொண்டிருக்கிறான் என்ற உண்மை அவரை மிகவும் வன்மையாக சுட்டது… ஆனாலும் மதியின் முகம் வந்து அவரை ஆற்றுபடுத்தியது!
“அப்போ… அவங்க சொல்லிட்டு போறாங்களே… அது என்னவாம்?”
புருஷோத்தமனும் ஜெயந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள… அந்த பார்வை பரிமாற்றம் அவனுக்குள் மேலும் கோபத்தை கிளறி விட்டது… ஆனால் ஜெயந்தி தீர்மானத்திற்கு வந்தது போல முடிவு செய்து கொண்டு.
“ஆமா மாப்பிள்ளை… அவளுக்கு கல்யாணம் ஆனது உண்மைதான்…” என்றவர் மேலும் கூற முயல… அவர்களின் முன்னே மீண்டும் வந்து நின்றாள் ஸ்ரீநிதி… அவன் தன் குடும்பத்தினரிடம் ஆடி கொண்டிருந்ததை எல்லாம் மெளனமாக பார்த்து கொண்டே இரண்டு இட்லிகளை விழுங்கியிருந்தாள்… அந்த உணவு சுவைத்ததோ இல்லையோ அந்த நேரத்திற்கு உணவிட வேண்டும் என்கிற அவளது கடமையை ஆற்றி விட்டு வந்திருந்தாள்!
“ஒவ்வொருத்தரோட லிமிட் என்னன்னு அவங்களுக்கே புரிய மாட்டேங்குது… என்னோட பெர்சனல்ன்னு நான் சொன்னா அதோட விடனும்… அதற்கு மேல பேசினா மரியாதை நிலைக்காதுன்னு தெரியனும்…”
நிதானமாக ஸ்ரீநிதி கூற… அதற்கும் மேல் பேச அவன் என்ன வடிகட்டின முட்டாளா?
ஆனாலும் அருணுக்கு இது கடுப்பை கிளப்ப… ஜெயந்தியின் முகத்தில் மெலிதான புன்னகை கீற்று!
இத்தனை நாட்கள் எந்த உணர்வையும் காட்டாமல் கல்லாக இருந்தவள் இப்போது கோபம் என்கிற உணர்வையாவது காட்டுகிறாளே என்ற சிறு நிம்மதி!






அருமை மேடம்.
thanks ma