அத்தியாயம் 21
நீ கைப்பிடித்து
பள்ளிக் குழந்தையை
சாலை கடத்திவிடும்
நிமிடங்களில் பெறும்
அந்தக்கதகதப்பில்
கன்னம் பதிக்க வேண்டும்
ஓரிரவு
தாய் கைப்பற்றி
வீதி நடக்கும் குழந்தையின்
தலையலசி உதிர்க்கும்
உந்தன் புன்னகையை
கோர்க்கவேண்டும்
பட்டாம்பூச்சி இறகில்.
ஸ்ரீமதியோடு அருண் அந்த மருத்துவர் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான்.
அவர் நிர்மலா… அர்ஜுனின் நண்பனின் மனைவி!
அவர் முன் இருந்த பைலை கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தார்… அது இருவருக்குமான முழு உடல் பரிசோதனை முடிவுகள்!
அவனை இங்கு வரவைக்க முடிந்ததும் மிகப்பெரிய சவாலாக இருந்தது.
அன்றொருநாள் பிரச்சனை ஆன தினத்தில் இருந்து அவன் எந்த மருத்துவரிடமும் வர முடியாது என்று கூறிக்கொண்டு அழுச்சாட்டியம் செய்து கொண்டிருக்க என்ன செய்வது என்று புரியாமல் நெற்றியை அழுத்தி பிடித்து அமர்ந்து கொண்டிருந்தாள்.
இப்போதெல்லாம் அர்ஜுன் விவேக்கை உடன் வைத்து கொள்வது அதிகரித்து இருந்தது… எந்த குடோனுக்கு செல்வதாக இருந்தாலும் விவேக் உடனிருந்தான்.
ஒவ்வொரு நிலையிலும் அவனுக்கான பயிற்சியை தீவிரமாக கொடுக்கிறான் என்பது புரிந்தாலும் அதை எதிர்க்க முடியாமல் அடக்கி வாசித்து கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி.
அவளை தான் முதலிலேயே அடக்கியிருந்தானே!
“என் தம்பின்னு தெரிஞ்சு தான் அவனை அக்சப்ட் செய்தாயா அர்ஜுன்?” சற்று கோபமாகவே கேட்டவளை.
“எப்படியா இருந்தா உனக்கென்ன?” என்று அவனும் கோபமாகவே கூறிவிட்டு மீண்டும் அவள் புறம் திரும்பியவன்.
“ஹி டிசர்வ் இட் டெடி…” என்று முடித்து விட அப்போதிருந்து இருவரின் கூட்டணியை அவள் கண்டுகொள்வதில்லை.
அப்போதும் இருவருமாகவே அலுவலக அறைக்குள் நுழைய… தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்த அர்ஜுன் என்னவென்று விவேக்கை பார்வையால் கேட்க… அவன் தலை குனிந்து கொண்டான்.
வீட்டில் நடக்கும் கலவரங்களை எப்படி இவரிடம் சொல்வது? அதை தான் கூறுவது சரியாக இருக்குமா என்ற கேள்வி அவன் முன்னே!
அவளை பார்த்தும் பாராதவன் போல அவனுடைய சுழல் நாற்காலியில் அமர்ந்தவன் அணிந்திருந்த சட்டையின் மேல் பட்டனை கழட்டி விட்டு கொண்டான்… வெயிலும் குடோன் தூசியும் சேர்த்து அவனை கசகசக்க செய்து இருந்தது.
மெலிதாக சப்தமில்லாமல் ஓடி கொண்டிருந்த ஏசியின் அளவை கூட்டியவன்… நாற்காலியின் பின்னே சாய்ந்து கொண்டான்.
“அக்கா…” அருகில் அமர்ந்த விவேக் அவளது முதுகில் கை வைக்க… நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் குனிந்து கொண்டாள்.
கயிற்றின் மேல் நடப்பது போன்ற சூழ்நிலை அல்லவா அவளுக்கு சொந்த வீட்டிலேயே!
சற்று பிசகினாலும் தங்கையின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் நிலை.
“வேலைக்குன்னு வந்தா வேலைய பார்க்கணும்… அதை விட்டுட்டு இப்படி விட்டத்தை பார்க்க தான் உங்க ஆபீஸ்ல உனக்கு சம்பளம் கொடுக்கறாங்களா மேடம்?” வேண்டுமென்றே அவளை வம்பிழுத்த அர்ஜுனை அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
முறைத்து பார்த்தவளால் அதை தொடர முடியவில்லை.
அவன் சீண்டுகிறான் என்பதும் தெரியும்… இனியும் அவளால் எதையும் அவனிடமிருந்து மறைக்க முடியாது என்பதிலும் தெளிவாகி இருந்தாள்.
அவளை பொறுத்தவரை அவன் ஒரு நண்பனாகவே இருந்தது விட்டு போகட்டுமே.
அதில் என்ன தவறு இருக்க போகிறது? அவனது மனைவி வேண்டாமென்று சொல்லி விடுவாளா என்று ஒரு ஓரத்தில் கேள்வி எழுந்து நெஞ்சில் சிறு வலியை விதைக்க… அதை அவளது கண்களும் பிரதிபலித்தது.
அந்த வலியை கண்டவனால் அதற்கும் மேல் அவளை சீண்ட பிடிக்கவில்லை… சட்டென்று எழுந்து அவள் அருகில் வந்தவன்,
“ஹே… என்னடா? என்னாச்சு? ஐ அம் நாட் சீரியஸ் அட் ஆல்… அதுக்கா இப்படியா அப்செட் ஆவ?” அவனது இயல்பான கேள்வி ஸ்ரீநிதியை மேலும் தாக்க… கண்கள் உடைப்பெடுத்தது!
முகத்தை மூடி கொண்டு அவள் அழ… அந்த நிலை அவனை பதற செய்தது.
அவள் மேல் கோபங்கள் இருக்கின்றன தான்… அதற்காக அவள் அழுவதை அவனால் எப்படி பொறுக்க முடியும்?
“ஸ்ரீநிதி… என்னன்னு சொல்லிட்டு அழு… இப்பவாவது என்னை நம்பி என்ன பிரச்சனைன்னு சொல்லு… என்கிட்ட பேசு… ஒன்னும் சொல்லாம நீயா முடிவு பண்ணாதே…”
கண்டிப்புடன் அவன் கூற… அவள் மடமடவென அருணின் திருவிளையாடல்களை ஒப்புவிக்க ஆரம்பித்தாள்… உடன் விவேக்கும் சேர்ந்து கொள்ள முழுவதுமாக கூறி முடித்தனர்.
ஒவ்வொன்றாக அவள் கூறுகையில் அவனது கோபம் பல மடங்கானது… அவளது துன்பம் யாரால்? அருகிலேயே இருந்தாலும் தன் கைகள் கட்டபட்டிருப்பதும் யாரால்? மனதில் இந்த கேள்விகள் அவனை மேலும் கொதிப்படைய செய்ய.
“இத்தனையும் உன் வீட்ல வேடிக்கை பார்த்துட்டு இருந்தாங்களா?” கண்கள் சிவக்க அவன் கேட்ட தொனியில் ஸ்ரீநிதியோடு விவேக்கும் உடன் அதிர்ந்தான்!
“எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு எதையும் செய்ய முடியாது அர்ஜுன்… ஸ்ரீமதி எந்த விதத்திலும் பாதிக்க பட கூடாது…”
கண்களை துடைத்து கொண்டு அவனுக்கு பதில் கூறியவளுக்கு மனம் ஒருவாறாக சமன்பட துவங்கியிருந்தது… இனி அர்ஜுன் விட்டுவிட மாட்டான் என்ற தைரியம்.
“அப்ப நீ யார்?” கோபமாக அவளை கேட்க.
“அவள் என்னோட தங்கை அர்ஜுன்…” அவனை உறுத்து விழித்தபடி அவள் கூற.
“அப்ப நான் யார்?” கொதிப்புடன் கேட்டவனை மெளனமாக பார்க்க… மேலும் அருகில் வந்தவன்… அவளை பிடித்து உலுக்கினான்.
“சொல்லுடி… நான் யார்?” என்று கோபமாக கேட்க.
“அதை நீதான் சொல்ல வேண்டும்…” அமைதியாக கூறிவிட்டு அவனை பார்க்க.
“ஏன் உன் கணவன் ஏதாவது சொல்வான் என்று இன்னமும் என்னிடம் காது குத்த போகிறாயா?” ஏளன குரலில் அவன் கேட்க… விவேக் அவனை கண்களால் கெஞ்சினான்.
“பாஸ்… ப்ளீஸ்… இருக்கிற பிரச்சனையில் மேலும்…” என்று கூற ஆரம்பித்தவனை கைகளை காட்டி நிறுத்தினான்.
“விவேக்… ப்ளீஸ்… கொஞ்ச நேரம் அமைதியா இரு… எனக்கு இவ கிட்ட கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் நிறைய இருக்கு…”
“கேளுங்க பாஸ்… ஆனா இப்ப வேண்டாம்… நிதியும் ரொம்பவே அப்செட்டா இருக்கா…” தமக்கைக்காக அவன் கேட்க… அர்ஜுனை கண்ணெடுக்காமல் பார்த்தவள்.
“நான் இன்னமும் மிசஸ் ஸ்ரீநிதி அர்ஜுனா தான் இருக்கேன்… ஆனால் நீ அப்படித்தான் இருக்கிறாயா?”
அதுவரை மனதில் தேக்கி வைத்த கோபத்தை எல்லாம் குரலில் தேக்கி அவனை பார்த்து அவள் கேட்ட கேள்வியில் அவனது முகத்தில் இளக்கம் வந்தது.
அவனை மீண்டும் பார்த்த அன்றே அவனை கட்டி கொண்டு கதறி இருப்பாள் தான்… ஆனால் அவள் அறிய வந்த அவனது மனைவி எனும் கதாபாத்திரம் அவளை அப்படியே பின்னடைய வைத்து இருந்தது.
அவளது கோபம் அவனை புன்னகைக்க வைத்தது… இனி கூட்டிலிருந்து அவளை வெளியே கொண்டு வருவது சுலபம்… விவேக்கை நோக்கி அர்த்தமான பார்வையை படர விட்டவன்… எதுவும் பேசாமல் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தான், விவேக்கையும் அழைத்து கொண்டு!
“உன்னால பதில் சொல்ல முடியாது அர்ஜுன்… ஆனா என்னை மட்டும் நீ குற்றம் சாட்டுவ…” கண்களில் நீரோடு அவள் கூற அவனோ அவளை நோக்கி திரும்பாமலே.
“இதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஸ்ரீநிதி…”
அவனது அந்த தொனியிலும் வார்த்தைகளிலும் விக்கித்து அவள் அமர்ந்து விட… அலட்டி கொள்ளாமல் வெளியேறினான் அர்ஜுன்!
நின்று திரும்பி பார்த்த விவேக்கின் முகத்தில் சொல்ல முடியாத துயரம்… தமக்கையின் இருள் சூழ்ந்த முகம் அவனது மனதை வலிக்க செய்தது!
திருவிழாக் கூட்டத்தில்
விடுபட்ட குழந்தையின்
பரிதவிப்பு போலத்தான்
எடுப்பார் கைகளில்
விழாது தனக்கானதை
தேடும் காதல்….
******
மெளனமாக காரில் அர்ஜுனோடு பயணித்து கொண்டிருந்தான் விவேக்.
டிரைவர் வண்டியை ஓட்ட… உடன் இன்னொருவர்… திடகாத்திரமான உடலோடு பயமுறுத்தும் உடல் மொழியோடு இருந்த அவர்களை ஓரப்பார்வை பார்த்தான்… வெளியே வரும் போதே சேர்ந்து கொண்டவர்கள் தான்.
அர்ஜுனின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது… பற்களை கடித்து கொண்டு தன்னை தானே கட்டு படுத்தி கொள்ள முயன்று இருந்தான்… தனது மனைவியை இன்னொருவன் இந்தளவு கொடுமை செய்திருக்கிறான் என்றால் அவனை என்ன செய்தால் தகும் என்று கடுகடுத்து கொண்டிருந்தான் விவேக்கிடம்.
அன்று கேண்டீனில் வைத்து இருவரும் பேசியதையும் அவனது கோபங்களையும் ஏமாற்றங்களையும் நினைத்து பார்த்தான்.
ஸ்ரீநிதி அழுது கொண்டே சென்று விட… குழப்பத்தோடு பார்த்தவனை பார்த்து சிரித்த அர்ஜுன் அப்போது கூறினான்.
“ஏன்னா அந்த பரிதாபத்துக்குரிய ஹஸ்பன்ட் நான் தானே…” என்று புன்னகைக்க… உள்ளுக்குள் இருந்த சந்தேகம் விவேக்குக்கு உறுதியானது… அர்ஜுன் சுருக்கமாக நடந்தவைகளை கூற.
விவேக்குக்கு அது பெரும் அதிர்ச்சி!
இவ்வளவு அருமையானவனையா இவ்வளவு நாட்களாக பிரிந்து இருக்கிறாள்? அதற்கு தனது பெற்றோரே காரணமா?
“அஞ்சு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டீங்க பாஸ்… நீங்களாச்சும் ஸ்டேப் எடுத்து இருந்தா பரவால்லை…” மனதை உறுத்தி கொண்டிருந்ததை அவன் கேட்க… அவனை பார்த்து மென்மையாக சிரித்தான்.
“ஏன் விவேக்? உன் வீடு எனக்கு தெரியாதா? இல்ல அவ படிச்ச காலேஜ் தான் எனக்கு தெரியாதா? அப்புறமும் நான் ஏன் விட்டு கொடுத்துட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கணும்?” தெளிவாக அர்ஜுன் கேட்க… விவேக் தான் புரியாத பார்வை பார்த்தான்.
“ஏன் பாஸ்? அது தான் எனக்கும் புரியல…”
“முதல்ல நீ பாஸ்ன்னு கூப்பிடறதை விடு விவேக்…” என்று அவன் புன்னகைக்க.
“எனக்கு எப்பவுமே நீங்க பாஸ் தான்…” என்று அவனும் புன்னகைதான்…”ஆனா அக்கா இவ்வளவு அழுத்தகாரியா? பக்கத்தில் உங்களை வெச்சுகிட்டே என்கிட்ட மூச்சு விடலை…” அந்த கோபம் அவனுள் இன்னமும் மீதமிருந்தது.
“அவளுக்கு அப்ப உன் பேரன்ட்ஸ் முக்கியமா போய்ட்டாங்க… உயிரை காரணம் காட்டி உணர்ச்சிய தூண்டி விட்டுட்டாங்க… இவ கொஞ்சமாவது சிந்திச்சு இருந்தா அந்த சிச்சுவேஷனை ஹேண்டில் செய்து இருக்கலாம்… நான் எப்படியும் சமாளிச்சுடுவேன்னு நம்பியிருக்கணும்…” என்று இடைவெளி விட்டவனின் உதட்டில் கசப்பான புன்னகை.
“நாம் நம்பி இருக்கவங்க அந்த நம்பிக்கையை உடைக்கும் போது மனசு எவ்வளவு வலிக்கும் தெரியுமா விவேக்… பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தேன்…” வலியோடு அவன் கூற… ஆதரவாக அவனது கைகளை பிடித்து கொண்டான்.
“புரியுது பாஸ்…”
“ஒரு வருஷம்… என்னால அந்த தோல்விய ஏற்று கொள்ளவே முடியல… எவ்வளவு ஈசியா சொல்லிட்டா… அதுக்கப்புறம் அவளை பார்க்க கூட கூடாதுன்னு முடிவு செய்தேன்… காரணம்…” என்று அவன் இடைவெளி விட… விவேக் அவனது முகத்தை பார்த்தான்… சொல்ல முடியாத துயரம் அவனது கண்களில்…
காதல் ஓர் அற்புத அனுபவம் என்று கூறியவனை எல்லாம் ஒரு சேர சபித்தான் அவன்!
விரும்பிய ஒரே காரணத்தினால் இத்தனை வலிகளை அனுபவித்து இருக்க வேண்டுமா? தனது தமக்கையை போல தளைகளை சுமந்து கொண்டு கால்களுக்கு விலங்கிட்டு கொண்டவர்களுக்கு எல்லாம் எதற்கு இந்த காதல் வர வேண்டும்? அதிலும் அர்ஜுனை போன்ற உண்மையான ஜீவன்கள் மீது? தைரியம் இல்லாமல் கைவிட்ட ஸ்ரீநிதியை தான் அப்போது திட்டிக்கொண்டிருந்தான் விவேக்.
அந்த வேதனை சூழ்ந்த கண்களை கூர்ந்து பார்த்தான்.
“அந்த நேரத்தில் தான் தாத்தா இறந்துட்டாங்க விவேக்… நான் இப்படி இருக்கேன்ங்கற வேதனைய அவங்களால தாங்க முடியல…” கூறும் போதே உதடு துடித்தது.
“ஒன்று தெரியுமா? நான் அவங்க கிட்ட ஒரே தடவை தான் ஸ்ரீநிதியோட போட்டோவ காட்டி இந்த பொண்ணை விரும்பறேன் தாத்தான்னு சொன்னேன்… அதற்கு அவங்க சொன்னது ஒன்று தான்… நீ தேர்ந்தெடுத்து இருக்கிறாய் என்றால் அவள் கண்டிப்பாக நல்ல பெண்ணாகத்தான் இருப்பான்னு அவ்வளவு நம்பிக்கையா சொன்னாங்க… ஆனா கடைசி வரை அவளை பார்க்க முடியலையே… பேரன் இப்படி இருக்கானேன்னு புலம்பிட்டே…” முடிக்க முடியாமல் தடுமாறியவனின் கைகளை இறுக்கமாக பிணைத்து கொண்டான்.
“ப்ளீஸ் பாஸ்…”
“கோபம் விவேக்… ஸ்ரீநிதி மேல் எனக்கு இருக்க கோபத்தை நீ முழுவதுமாக அறிய மாட்டாய்… அதை வெளியில் சொல்லவும் முடியாது… எப்படி இருந்தாலும் அது எங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் தனிப்பட்ட கோபம் தான்… அப்போது முதலே எனக்கு ஏதோ அவர்ஷன்… என் தாத்தா பார்த்து ரசிக்காத வாழ்க்கை எனக்கு தேவை இல்லை என்று…” அதீத கோபத்தோடு அவன் பொங்க… அதை பார்த்தவனுக்கு பயமாக இருந்தது.
“ஆனாலும் அதுவும் சில நாட்களுக்கு தான்… அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் காரில் தூரமாக இருந்து பார்த்துவிட்டு வந்துவிடுவேன்… அவளாகத்தானே போனாள்… அவளே வரட்டும் என்ற கோபம் வேறு… ஒவ்வொரு நாளும் விதம் விதமான மனநிலை இருக்கும்… அவையெல்லாம் நரகம் விவேக்…”
தலையை பற்றி கொண்டு அவன் குனிந்து அமர்ந்து கூறிக்கொண்டிருக்க விவேக்கின் மனதில் வெறுப்பு மூண்டது… வாழவேண்டியவளின் வாழ்க்கையை இப்படியாக்கி வைத்த பெற்றோரை எப்படி அணுகுவது என்று யோசிக்க துவங்கினான்.
“என்னை கேட்டா அக்காவை ரெண்டு அறை விட்டு கூட நீங்க அழைச்சுட்டு போயிருக்கலாம்…” விவேக் ஆதங்கத்தோடு கூற… அவனை ஆழ்ந்து பார்த்தான்.
அந்த பார்வை கூறிய அர்த்தங்கள் கண்டிப்பாக வேறு!
“காதல் அதிகபட்சமாக இருக்கும் போது வலிகளோடு மௌனித்து இருப்பதும் ஒருவித சுகம் தான் விவேக்… அவளது மௌனத்தின் அர்த்தத்தை நான் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்… அதே போல என்னுடைய மௌனத்தின் அர்த்தமும் அவளின் உள்மனதுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும்… இல்லையென்றால் உன் தகப்பனார் மீண்டும் விஷத்தை கையில் எடுத்த போது அவளுக்கு திருமணத்தை முடித்து இருக்கலாமே… அவள் இன்னமும் ஸ்ரீநிதி அர்ஜுனாக இருக்கிறாள் என்றால் இதுதான் காரணம்… என்னுடைய கோபமெல்லாம் நீர்குமிழிகள்… அவளை பார்த்தவுடன் காணாமல் போய்விடும்…”
சற்று நீளமாக ஆங்கிலத்தில் அவன் கூறி முடிக்க… விவேக் பெருமையாக பார்த்தான்.
எத்தகைய காதல் இது?
இவ்வளவு காதல் எப்படி சாத்தியம்?
பிறப்பும் அறியாது, முடிவும் தெரியாத இந்த காதல் ஒரு மாயநதி! ஆனால் அதன் பிரவாகம் மட்டும் இந்த அண்டவெளியெங்கும் பரவி படர்ந்திருக்கும்! கிளை மரித்தாலும் வேரில் பூ பூக்கும் அதிசயத்தை காதல் மட்டுமே செய்ய முடியும்!
அந்த மாயநதியில் நனைவதும் ஒரு சுகம்… விதையாக விழுவதும் ஒரு சுகம்!
“நானும் திகட்ட திகட்ட லவ் பண்ணனும் பாஸ்… உங்களை மாதிரியே…” கண்களில் பளபளப்போடு விவேக் கூற.
“யோவ்… நீயாவது நிம்மதியா இரு… காதலிச்சு என்னை மாதிரி நாசமா போகாதே…” சிரித்து கொண்டே அர்ஜுன் கூற… விவேக்கும் அந்த சிரிப்பில் இணைந்து கொண்டான்.
அன்றைய நினைவில் இருந்தது வெளியே வந்தவனுக்கு அர்ஜுனின் கோப முகம் சற்று சிரிப்பை கூட வரவழைத்தது.
அவள் மேல் எனக்கு அவ்வளவு கோபம்,வெறுப்பு என்றெல்லாம் கூறிவிட்டு ஸ்ரீநிதியின் கண்களில் கண்ணீரை கண்டவுடன் இவன் துடிக்கும் துடிப்பென்ன? கோபத்தில் சிவப்பதென்ன?
எப்படி இருந்தாலும் இந்த காதலையும் அன்பையும் பெற தனது தமக்கை தவம் செய்து இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.
மெளனமாக யோசித்து கொண்டிருந்த விவேக், செல்பேசியை எடுத்து தந்தையை அழைத்தான்.
“அப்பா… நீங்களும் அம்மாவும் மட்டும் அருண் மாமா வீட்டுக்கு புறப்பட்டு வாங்க…” இயல்பான குரலில் கூற.
“என்ன விஷயம் விவேக்… நீ எதுவும் பிரச்சனை பண்ணாதே டா… அவங்க கிட்ட பஞ்சாயத்து பேச நம்ம பெரியப்பாவை அனுப்பறேன்… அவர் பார்த்துக்குவார்…” மகன் எதையாவது பேசி பிரச்னையை பெரிது செய்து விடுவானோ என்ற பயத்தில் அவர் கூற.
“பெரியப்பா ஒரு பத்து தடவை இப்படி பஞ்சாயத்து பேசியிருப்பாரா? அவன் பொண்டாட்டிய வெச்சு அவன் வாழறதுக்கு நாம அவன் கால்ல விழ வேண்டுமா?” நறுக்கென்று அவன் கேட்ட கேள்வி அவரை தைத்தது.
“தம்பி… சேலை மேல முள்ளு பட்டாலும்…” என்று அவர் ஆரம்பிக்க.
“ப்பா… ஸ்டாப்… நிறுத்துங்க… உங்க அரிச்சு போன கொள்கை பழமொழி எல்லாத்தையும் நிறுத்திகோங்க… ஒருத்திய வாழ விடாம செய்து இருக்கறது பத்தாதா? இவளை இப்படி பலி கொடுக்கனுமா?அந்த அருணுக்கு நீங்க சரிபட்டு வர மாட்டீங்க… முடிஞ்சா வாங்க… இல்லைன்னா நான் பார்த்துக்கறேன்…”
வெப்பமாக கூறிவிட்டு செல்பேசியை ஆப் செய்தவனை பார்த்து சிரித்தான் அர்ஜுன்.
“டேய் மாப்பிள்ளை… கலக்கிட்ட போ…” என்று அவனது தோளில் கை போட்டு கொண்ட அர்ஜுனை பார்க்கையில் மனம் கசிந்தது.






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!