அத்தியாயம் 22
என் மடியில் துயிலும்
உன் வீட்டு பூனைக்குட்டி
சொன்னதா?
உன் நினைப்பில் தான் மீசை
மீசை வருடுகிறேன் என்று!
அருணின் வீட்டில் புருஷோத்தமனும் ஜெயந்தியும் அமைதியாக அமர்ந்திருக்க எதிரில் அருணின் தாயார் பத்மாவதி சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு காலை சீரியல்களில் கண்ணை பதித்து இருந்தார்!
யாருக்கோ வந்த விருந்து… அதில் தமக்கென்ன தொடர்பு?
அருண் அறைக்குள் இருந்தான்… ஸ்ரீமதியின் பெற்றோர் வந்தது அவனுக்கு முன்னமே தெரிந்தது தான் ஆனால் வெளியே வந்து அவர்களை வாவென்று அழைப்பதற்கும் அவன் தயாராக இல்லை போல!
ஜெயந்தி சங்கடமாக நெளிந்து கொண்டிருந்தார்.
வந்தவர்களுக்கு தண்ணீர் கூட தராமல் அந்த பெண்மணி அமர்ந்திருந்த தோரணை அவரை மிரட்டியது… இந்த வீட்டில் ஸ்ரீமதியால் காலத்தை தள்ள முடியுமா?
வெளியில் கார் நிற்கும் ஓசை கேட்க… அவசரமாக வாசலில் பார்வை போனது..
விவேக் உள்ளே வர… அவனுக்கு பின்னால் வந்தவர்களை பார்த்து விக்கித்து போனார்கள் இருவருமே!
தான் பெயரையும் கூட அறிந்து கொள்ள விரும்பாத ஸ்ரீநிதியின் கணவர்!
அப்போதிருந்ததை விட இன்னும் கம்பீரமாக வந்து நின்றவனை பார்த்தவர்கள் தன்னை போல எழுந்தனர்!
உள்ளுக்குள் மனம் பிசைந்தது… அருணின் மூலம் அந்தளவு வேதனையடைந்து இருந்தனர்.
ஒன்றும் பேசாமல் அவனை பார்த்த புருஷோத்தமனுக்கு சங்கடமாக இருந்தது… ஐந்து வருடங்களுக்கு முன்னர் சற்றும் நாகரிகமாக தான் நடந்து கொள்ளவில்லையே என்ற சங்கடம்.
“வாங்க தம்பி…” ஜெயந்தியே அழைக்க… அர்ஜுனின் முகத்தில் மெல்லிய புன்னகை… கண்கள் பளிச்சிட்டது… அன்று அவனை வேண்டாமென்று மறுத்த தினத்தில் அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவன் முன் வந்து போனாலும்… ஜீரணித்து கொண்டான்!
அவள் ஒருத்தி பலமாக நின்றிருந்தால் இந்த பிரிவு நேர்ந்திருக்காதே!
“என்னங்கம்மா… கூட்டமா வந்து என்ன செய்ய போறீங்க?” சற்றும் அசைந்து கொடுக்காமல் அருணின் தாய் சட்டமாக கேட்க… அவருக்கு முன் இருந்த சேரில் அமர்ந்தான் அர்ஜுன்… உடன் வந்த இருவரும் வாசலருகில் நின்றிருந்தனர்.
“நாங்க எதுவும் செய்யலை அத்தை… கொஞ்சம் மாமாவை கூப்பிடுங்க…” விவேக் அமைதியாக கூற.
“எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசுங்க… அவன் வர மாட்டான்…”
“இல்லங்க… கண்டிப்பா வரணும்…” விவேக்கும் பொறுமையாகவே எடுத்து கூற.
“என்ன ஜெயந்தி… பையனுக்கு மரியாதை சொல்லி தர மாட்டியா?…” என்று அவர் ஆரம்பித்து வரிசையாக அவர்களது வீட்டில் யாருக்கெல்லாம் மரியாதை தெரியவில்லை என்று குற்றம் சாட்ட ஆரம்பிக்க.
அமைதியாக அமர்ந்து இருந்த அர்ஜுன்.
“விவேக்… அவனோட ரூம் எது?” அவனிடம் அமைதியாக கேட்க… அவனும் கண்களால் காட்டினான்… கதவருகில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு கண்ணால் சைகை காட்ட… மின்னலை போல வந்தவர்கள் அறைக்குள் சென்று அருணை அள்ளி கொண்டு வந்தனர்.
“ஏய்… யார் நீ… என்ன சண்டைக்குன்னே வந்து இருக்கியா?” பதட்டமடைந்த அவர் அவசரமாக எழுந்து சப்தமிட.
“ம்மா அமைதியா இருங்க… இவனுங்க என்ன பண்ண முடியும்?” அந்த சமயத்திலும் தன்னுடைய திமிர்த்தனத்தை காட்டினான் அருண்.
“வேண்டாம் தம்பி… என் பொண்ணோட லைப் மேட்டர்… இதில் நீங்க…” அர்ஜுனை பார்த்து ஜெயந்தி சங்கடமாக கூற.
“ம்ம்மா… கொஞ்சம் நிறுத்தறியா? நான் கடைசி வரை உங்க ரெண்டு பேருக்கும் மரியாதை கொடுக்க நினைக்கறேன்… அதை கெடுத்துக்காதீங்க…” விவேக் கோபமாக எழ… ஜெயந்தி பதறினார்.
“விவேக்… என்ன இது?”
அர்ஜுன் அமைதியாக ஜெயந்தியை பார்த்து.
“ஏன் உங்களுக்கு ஸ்ரீமதி மட்டும் தான் பொண்ணா?” என்று கேட்க… ஜெயந்தியால் பதில் கூற முடியவில்லை.
ஒரு நீள மூச்சை இழுத்து விட்டவன், தன் முன்னால் சோபாவில் அமர வைக்கப்பட்டு இருந்த அருணை பார்த்து.
“ஸ்ரீநிதி கிட்ட என்ன சொன்ன?” எந்த உணர்வையும் காட்டாத குரலில் கேட்க.
“ஏன் அவ கிட்ட என்ன சொன்னா உங்களுக்கு என்னங்க?” தன் முன் அமர்ந்திருந்தவனின் பின்புலம் புரியாமல் பதில் கூற… பளாரென்று அறைந்தான் அர்ஜுன்!
“என்ன அவ இவன்னு சொல்ற? என்ன ஸ்ரீநிதி என்ன உன் வீட்ல வேலை செய்யற வேலைக்காரின்னு நினைச்சியா?”
ரவுத்திரமாக அவன் கேட்ட கேள்வியில் அருணின் தாய் சர்வமும் அடங்கி அமர்ந்திருந்தார்… அவனது ரவுத்திரத்தை முன்னமே பார்த்து பழகியிருந்த ஜெயந்திக்கும் புருஷோத்தமனுக்கும் அது புதியதாக தெரியவில்லை.
“நான் அவளை என்ன சொன்னா உனக்கு என்னடா?” அடங்காமல் மீண்டும் அவன் வாயை விட.
மீண்டும் இன்னொரு அறை!
அருணுக்கு தலை சுற்றியது… காதில் ஏதோ ப்ளைட் ஓடும் சப்தம்.
சற்று தள்ளி நின்றிருந்த பவுன்சர்களை போல காட்சியளித்த இருவரும் அர்ஜுனின் அருகில் வந்தனர்.
“சர்… நாங்க பார்த்துக்கறோம்…” என்று கூற… அருண் பயந்து போய் பார்த்தான்.
“ஏய்… யாருடா நீ? டேய் விவேக்… என்னடா அவன் அடிக்கறான்… நீயும் பார்த்துட்டு இருக்க?” கோபமாக கத்த.
“இன்னொருத்தர் ஒய்ப்ப நீங்க கல்யாணம் செய்யணும்ன்னு நினைச்சதும் இல்லாம அவ இவன்னு சம்பந்தபட்டவங்க கிட்டயே சொல்றதுக்கு முன்ன யோசிச்சு இருக்கணும் மாமா…” அலட்டிகொள்ளாமல் விவேக் கூற… அருணின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது.
“இங்க பார்… என்னோட பவர் என்னன்னு தெரியாம என்கிட்டே வம்பு செய்யற… ஒரு போன் செய்தா போதும்… போலிஸ் வந்துடும்… ஜாக்கிரதை…” உள்ளுக்குள் நடுங்கி கொண்டே எச்சரிக்க.
அடுத்து இன்னொரு அறை வைத்தான் அர்ஜுன்… அதுவரை இருந்த அமைதி மாறியிருந்தது… கோபாவேசமாக அவனது சட்டையை பிடித்தவன்.
“கூப்பிடு பார்க்கலாம்… முடிஞ்சா செய்…” என்று நிறுத்தியவன்,
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா ஸ்ரீநிதிய கல்யாணம் செய்து தர சொல்லி பேரம் பேசுவ? அவ உனக்கு அவ்வளவு இளப்பமா போயிட்டாளா?” மாறி மாறி கன்னத்தில் அறைய… அருண் கன்னத்தை பிடித்து கொண்டான்.
“அதை கேட்க நீ யார்?”
“நான்… யாரா? அவ புருஷன்…” மீண்டும் முகத்திலேயே ஒரு குத்து விட.
அருண் அதிர்ந்தான்.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி செய்வ… யார் கொடுத்த தைரியம்?” என்று அவனைத் கையை முறுக்க… வலியில் கத்தினான் அவன்… மற்ற இருவரும் அவனோடு இணைந்து கொண்டு அருணை ஒரு வழியாக்கி இருந்தனர்!
அவன் அடி வாங்கி ஓய்ந்து போனான்!
“இனிமே ஸ்ரீ பக்கம் திரும்புவியா?” அவனது உச்சந்தலை முடியை பிடித்து கேட்க.
“இல்ல..மாட்டேன்… கண்டிப்பா மாட்டேன் சகலை…” என்று கெஞ்ச.
அவ்வளவு கோபத்துக்கு இடையிலும் அவனது சகலை என்ற வார்த்தையில் அவனது முகத்தில் மெல்லிய புன்னகை!
“இனிமே மதி கிட்ட ஏதாவது வம்பு பண்ணுவியா? அது வேண்டும் இது வேண்டும்ன்னு கேட்டுட்டே இருப்பியா?” என்று அதற்கும் அறைந்தவனின் காலில் விழுந்தான் அருண்… பயந்தவர்கள் முன் தான் அவனது வீரம்… இது போன்ற ஆட்களின் முன் மிக கேவலமாக தோற்று விடுபவன் அவன்!
“இனிமே ஏதாவது கம்ப்ளைன்ட் வந்துது… உன்னை குடும்பத்தோட தூக்கிடுவேன்… என்னை பற்றி உனக்கு தெரியாது…”
இனி மதியின் வாழ்க்கை சீராகிவிடும்… அல்லது சீராக்கி விடலாம்… எந்த தவறும் செய்யாமல் தண்டனை அனுபவிப்பவள் அவள்!
அவனை விடுத்து ஜெயந்தி மற்றும் புருஷோத்தமனின் பக்கம் திரும்பிய அர்ஜுன்.
“கொஞ்சம் வெளிய வாங்க…” முகத்தில் எந்த உணர்வையும் காட்டி கொள்ளாமல் அழைக்க… சங்கடமாக இருவரும் அவனை தொடர்ந்தனர்… பெண்ணை கொடுத்த சம்பந்தி முன் பேசாமல் தனியாகவாவது அழைத்தானே என்ற நிம்மதி வேறு!
“ஒரு கயிறை நீங்க அறுத்துட்டா எங்க ரெண்டு பேரோட பந்தமே இல்லைன்னு ஆகிடுமா?” நிதானமாக அவன் கேட்ட தொனி இருவரையுமே கன்னத்தில் அறைவது போல இருந்தது… வீட்டினுள் அவனது ரவுத்திரத்தை பார்த்து பேச்சற்று இருந்தவர்களால் அடுத்து ஒன்றும் பேச முடியவில்லை.
“எவனெவனோ பேசற அளவுக்கு தான் உங்களால் அவளை பாதுகாக்க முடியும்னா எதுக்கு உங்களுக்கு அம்மா அப்பாங்கற பதவி? இதுக்காகத்தான் என்கிட்ட இருந்து அவளை பிரிச்சு வெச்சீங்களா?”
அன்று அவர் வலுகட்டாயமாக தாலியை கழட்டி வீசிய போது பேச முடியாமல் நின்றிருந்த அந்த காதலன் இப்போது நிதானமாக சரமாரியாக கேள்விகளை வீச… தலைகுனிந்து நின்றிருந்தார் புருஷோத்தமன்.
“இயல்பா அம்மா அப்பாவுக்குள்ள வர்ற பயம் தான் மாப்பிள்ளை… பொண்ணு தவறான துணையை தேர்ந்தெடுத்து விடுவாளோன்னு… அதோட நம்ம சமுதாயத்துகுள்ள இருந்தாதான் பாதுகாப்புங்கற நினைப்புல இருந்துட்டோம் அப்ப… ஆனா எவ்வளவோ நாள் அதுக்காக வருந்தி இருக்கோம் மாப்பிள்ளை…”
ஜெயந்தி வெளிப்படையாக மாப்பிள்ளை என்று கூறி அவரது கருத்தை கூற.
“ஆனா அம்மா… விசாரிச்சு இருக்கணும் நீங்க… அதை செய்யாம பொண்ணு லவ் பண்றான்னு தெரிஞ்ச உடனே அதை உடைச்சே ஆகணும்ன்னு நினைக்கறது என்ன நியாயம்?”
விவேக்கும் அர்ஜுனோடு சேர்ந்து கொள்ள.
“தப்பு விவேக்… நான் பண்ணினது ரொம்ப தப்புதான்… ஸ்ரீமதிய கட்டி கொடுத்ததுக்கு அப்புறமா நிறைய தடவை நினைச்சு இருக்கோம்… நிதி அப்படியே இருக்காளே… இதை எப்படி சரி செய்யறதுன்னு… ஆனா இப்ப தான் அதற்கு நேரம் கூடி வந்து இருக்குப்பா…”
“நல்லா சமாளிங்க… இதே மதி அக்கா நல்லபடியா இருந்திருந்தா நீங்க பண்ணினது தப்புன்னே நினைச்சு இருக்க மாட்டீங்க…” விவேக் குறைபட்டு கொள்ள.
“டேய் மாப்பு… அவங்களா ஒத்து வந்தா கூட நீ நியாயம் பேசியே கவுத்து விட்டுடுவ போல இருக்கே..” அவனது தோளில் கைபோட்டு கொண்டு அர்ஜுன் சிரிக்க.
“பாஸ்… இன்னும் கொஞ்ச நாள் இப்படியே சீனை எக்ஸ்டன்ட் பண்ணலாம்ன்னு பார்த்தா விட மாட்டீங்க போல இருக்கே…” விவேக்கும் சிரிக்க.
“அடப்பாவி… எனக்கு இப்படி ஒரு மச்சானா? கடவுளே!”
அவர்களிடையே சிரிப்பு பரவியது!
“சரி மாப்பிள்ளை… எப்ப வீட்டுக்கு வர்றீங்க?” அதுவரை பேசாமல் இருந்த புருஷோத்தமன் கேட்க… விவேக்கும் அர்ஜுனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
இருவரது முகத்திலும் புன்னகை பரவி இருந்தது.
அந்த சம்பவத்திற்கு பிறகு வெகுவாக மாறியிருந்தான் அருண்… மற்றவர்களிடம் பேசுவதை குறைத்து கொண்டான்… மதியிடம் கூட ஒதுங்கியே இருந்தான்… மருத்துவமனைக்கு அழைத்த போது ஏன் என்று கூட கேட்க்காமல் வந்தான்.
இப்போது மருத்துவர் முன்பு பொட்டி பாம்பாக அமர்ந்திருந்தான்!
“ரெண்டு பேர் கிட்டயும் எந்த ப்ராப்ளமும் இல்லை… இப்போதைக்கு IVF வேண்டாம்… ரொம்ப வலி மிகுந்த சிகிச்சைம்மா அது… வேறெந்த வழியும் இல்லைன்னா அந்த சிகிச்சைக்கு நாம போகலாம்… முதல்ல மற்ற ட்ரீட்மென்ட் பார்க்கலாம்… அப்புறமா IUI பார்க்கலாம்… அதுவும் முடியாத பட்சம் தான் IVF போகணும் ஸ்ரீமதி…”
வெகு சிரத்தையாக எடுத்து கூறியதை கேட்டவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது!
“உங்களை தான் நம்பி இருக்கேன் மேடம்…” மதி தழுதழுத்த குரலில் கூற… நிர்மலா புன்னகையுடன் அவளை பார்த்தாள்… மதியின் அப்பாவி முகம் அவளை ஈர்த்தது.
இந்த வெள்ளந்தித்தனம் இப்போதெல்லாம் குறைவு… இந்த பெண்ணை போய் இவன் இப்படி படுத்தி இருக்கிறானே என்று அருணை பார்த்து வெறுப்பாக எண்ணி கொண்டாள்.
மதியின் வாழ்க்கை சிக்கலை மேலோட்டமாக கூறியிருந்தான் அர்ஜுன் நிர்மலாவிடம்.
“நான் இருக்கேன்மா… மருத்துவ ரீதியா எப்படி செய்யணும் என்றாலும் நான் இருக்கேன்… ஆனா…” என்று இடைவெளி விட்டு இருவரையும் பார்க்க… என்னவென்பதை போல பார்த்தாள் ஸ்ரீமதி.
“சொல்லுங்க மேடம்…”
“தைரியம் வேண்டும் மதி… வாழ்க்கையில் எதையும் பேஸ் பண்ண முதலில் தைரியம் வேண்டும்… பெண்களாக இருக்கும் பட்சத்தில் அந்த தைரியம் இரண்டு மடங்காக இருக்க வேண்டும்… புற அழகெல்லாம் அழகல்ல… அது வானவில்லை போல… விரைவில் மறைந்து விடும்… நம்முடனே வருவது நமது கல்வியும் வாழ்க்கையை எதிர்நோக்கும் தைரியமும் மட்டும் தான்…” அழுத்தமாக அவள் கூற… அருணை கூர்ந்து பார்த்தாள் ஸ்ரீமதி.
அவனுக்கு சற்று சங்கடமாக இருந்தது… உள்ளுக்குள் எரிச்சல் கூட படர்ந்திருந்தது… வலுகட்டாயமாக அர்ஜுன் அவனை கட்டுபடுத்தியிருந்தான்… ஆனால் மனதளவில் அவன் மாற நாட்களாகும் அல்லவா.
கட்டுபடுத்தப்பட்ட சூழலும் ஸ்ரீமதியின் பொறுமையும் அன்பும் கண்டிப்பாக அவனை மாற்றும் என்று விவேக்கிடம் அர்ஜுன் கூறியிருந்தான்.
ஆனால் முன்பு போல அவன் ஆட முடியாது… அர்ஜுன் இருக்கும் வரை அது அவனால் முடியவே முடியாது.
“கண்டிப்பா மேடம்… தைரியம் புருஷ லட்சணம் மட்டுமல்ல… பெண்களுக்கு தேவையான லட்சணமும் கூட அதுதான்…”
அவளது தெளிவான பதில் அருணை தலை குனிய வைத்தது.
மேலும் சற்று நேரம் அவர்களிடம் பேசியபின் அவர்களுக்கு விடை கொடுத்தவள்… அர்ஜுனை அழைத்தாள்!
“அண்ணா… நான் பார்த்துக்கறேன்… அந்த பொண்ணுக்கு பெஸ்ட்டா பண்றேன்ணா… இனிமே அந்த பொண்ணோட கவலை என்னுடையது… டோன்ட் ஒர்ரி…” என்று கூறி கொண்டிருந்தாள் நிர்மலா!






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!