அத்தியாயம் 4
இரவின் கடைசி விளக்கும் அணைந்த பின்
வானின் உச்சியில் நிலவேற்றி
மீசை முடியின் உரசலில் ரோமங்கள் சிலிர்க்க
இதழ் குவித்து முத்தமிட்டாய்
நெடு நேரமாய் கதை பேசினாய்
இன்றோ
தென்னை கீற்றுகளின் சலசலப்பு
ஒலித்துக் கொண்டிருக்க
காதுகளில் குரல் நிறைத்தபடி
நிலவின் தூரமாக நீயும்
உன் நினைவின் தவிப்பில் நானும்!
ஆக்டிவாவை நிறுத்தியவள் ஹெல்மெட்டை கழற்றினாள்… டிசம்பரின் இதமான காலை வெயிலோடு லேசான குளிரும் முகத்தை வருட காற்றை இழுத்து சுவாசித்தாள்… மனம் மெல்ல வசப்பட்டது.
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்தாய் அது வீணாவதற்கு!
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகும்
இந்த மாற்றம் உலக நியதியாகும்!
எப்போதும் போல மனம் கீதாச்சாரத்தை உரு போட்டு கொண்டிருந்தது.
சுற்றிலும் பார்த்தாள்!.
தாம்பரத்தில் அமைந்திருந்த அந்த அலுவலகத்தை சுற்றிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்க… இந்த பரபரப்பான சென்னையில் இப்படி ஒரு இடமா என்று ஆச்சரியமாக இருந்தது ஸ்ரீநிதிக்கு!
இருபுறமும் அவளுக்கு பிடித்த சரக்கொன்றையும் பவளமல்லியும் பூக்களை மட்டுமல்ல… வாசத்தையும் பரவ செய்து நின்று கொண்டிருந்தது… பவளமல்லியின் இதமான வாசம் அவளை தீண்ட… தன்னிலை மறந்து ரசித்தாள்.
வெகு நாட்களுக்கு பிறகான ரசிப்பு!
மனதின் மென்மையான பாகங்கள் தட்டி எழுப்பப்பட்டது போன்ற உணர்வு… சிறுவயதில் தான் கொண்ட கற்பனைகளுக்கு வடிவம் கொடுத்தார் போன்ற பிரம்மை.
தான் உயிர்ப்போடு இருந்த காலத்தில் ஒவ்வொன்றுமே அவளுக்கு ரசனைக்கு உரியவை… சிறு சிறு விஷயங்களிலும் அவளது ரசனையை பார்த்து ரசிக்கவென ஒருவன் இருந்தான்.
தன்னுடைய தோற்றத்தை பற்றி இப்போதெல்லாம் கவலைப்பட்டதில்லை அவள்… ஆனால் ஒரு காலத்தில் ஒருவன் பார்த்து ரசிக்கவென விதம்விதமாக உடுத்தவும் பிடிக்கும்… அதே போல அதற்கு மேட்சாக அணியவும் பிடிக்கும்… ஆனால் இப்போதெல்லாம் எதை பற்றிய கவலையும் இல்லாமல் அல்லவா அவள் வருவதும் போவதும்.
ஆனால் எளிமையான சுடிதாரில் செதுக்கி வைத்த சிற்பமாக இருப்பவளை பார்ப்பவர்கள் திரும்பவும் பார்க்காமல் சென்றதே இல்லை… அதுவும் ஒரு சிலர்.
“நீங்க மலையாளியா?” என்று ஒருசிலர் ஆர்வமாக கேட்கும் போதெல்லாம் ஒன்றும் அறியாமல் விழித்து விட்டு அதன் பின் புரிந்து.
“இல்லைங்க தமிழ் தான்…” என்று பதில் கொடுப்பாள்… காலப்போக்கில் அதுவும் பழகி விட்டது… ஏன் தமிழ் பெண்களுக்கு அந்த நிறமும் கூந்தலும் சொந்தமில்லையா? என்ற கூட கோபம் எட்டிபார்க்கும்.
அது போன்ற சந்தர்ப்பங்களில் பெண்களின் மிக இயல்பான கர்வம் சற்றே தலைதூக்க பார்க்கும்… ஆனால் அதே சமயத்தில் மனம் கூப்பாடு போடும்.
“பார்த்து ரசிக்க வேண்டியவனே பார்க்க இப்போது இல்லை… இதில் நிறமும் அழகும் இருந்து என்ன புண்ணியம்?யாருக்காக இந்த அழகு? யார் ரசிக்க இந்த அழகு?” என்று சாட்டையடியாக கேட்க… அதோடு மனதில் இறுகி விடுவாள்.
ஆக்டிவாவை நிறுத்தி விட்டு உள்ளே நுழைய… ரிஷப்ஷனில் இருந்த பெண் பாந்தமாக வரவேற்றாள்!.
“எஸ் மேம்… வாட் கேன் ஐ டூ பார் யூ?”
“ஐ ம் ப்ரம் ஸீயஸ் டெக்னாலஜிஸ்…” என்று அவளது கார்டை எடுத்து நீட்ட… அதை வாங்கி பார்த்தவள்.
“ஜிஎம்’ஸ் கேபின் இஸ் ஆன் ரைட் சைட் மேம்… ப்ளீஸ் கோ திஸ் வே…” என்று வழிகாட்டினாள்.
அலுவலகத்தின் இன்டீரியாயர் மனதை உறுத்தாமல் இயல்பாக இயற்கையாக இருக்க… மெல்லிய அமைதி வந்து குடிகொண்டது மனதில்… இதமான நறுமணம் காற்றில் பரவியிருந்ததை உணர்ந்தாள் ஸ்ரீநிதி!அவளுக்கு பிடித்த வெகு இதமான மெல்லிய லேவண்டர் நறுமணம்.
தனக்கு முன்னே இருந்த அந்த ஓவியத்தை பார்த்தாள்… உரிமையாளர் ரசனை மிகுந்தவர் போலும்!
கெய்ன்ஸ்பாரோவின் பிரபலமான ஆற்றுப்படுகை ஓவியம் அழகாக வீற்றிருந்தது… பின் வந்தவர்களுக்கு அழகான முன்னுதாரணமாக அமைந்த ஓவியத்தின் அழகை மெய்மறந்து பார்த்து நின்றிருந்தவளுக்கு அவளை பார்த்த இனிய அதிர்வோடு கடந்து சென்றவனை பார்க்க வாய்ப்பில்லைதான்!
“ஏன் இந்த பெய்ண்டிங்க இப்படி கண்ணெடுக்காம பார்த்துட்டு இருக்க? அதில் என்னதான்டி இருக்கு?”
அன்றொருநாள் தன்னுடைய பிடிவாதத்துக்காக ஓவிய கண்காட்சிக்கு அழைத்து சென்றவன் காதருகில் ரகசியமாக கேட்டது அவளுக்கு நினைவுக்கு வந்தது.
“டூ மினிட்ஸ் முன்னாடி அந்த ரெட் மினிஸ்கர்ட் பொண்ணை கண்ணெடுக்காம நீ பார்த்துட்டு இருந்தியே… அவ கிட்ட என்ன மச்சி இருக்கு?”
ஓவியத்தில் இருந்தது கண்களை விலக்காமல் குறும்பு புன்னகையோடு அவள் கேட்க.
“வில்லிடி நீ… பார்க்காம இருக்கற மாதிரிதான் இருக்க… ஆனா அத்தனையும் நோட் பண்ணிடற…” என்று அவன் சிரிக்க.
“உன்னை நோட் பண்றதை விட எனக்கு வேறென்ன வேலை?” என்று அவள் கண்ணை சிமிட்ட.
“அப்படீங்கற…” என்று சிரிக்க.
“பதில் சொல்லாம நழுவ பார்க்காதே மச்சி… ஒழுங்கா ஆன்சர் பண்ணு… அந்த ரெட் மினிஸ்கர்ட் கிட்ட என்ன இருக்குன்னு அவளை அப்படி பார்த்துட்டு இருந்த?” விடாகண்டியாக அவள் கேட்க.
“அதது இருக்க வேண்டிய இடத்துல பக்காவா இருக்கு ரசகுல்லா…” குறும்பாக அவன் கூறியதை கேட்டவள்,
“அடப்பாவி… ஒரு பேச்சுக்காவது உன்னை தவிர வேற யாரையும் இந்த கண்ணு பார்க்காதுன்னு சொல்றியா? படவா…” செல்லமாக சினுங்கியவளை பார்த்து மெலிதாக சிரித்தவன்.
“அப்படி சொல்லிட்டா நான் எப்படிடி சைட் அடிக்கறது? இதெல்லாம் ஆண்களோட பிறப்புரிமை ரசகுல்லா… அழகான பொண்ணு போனா பார்க்கணும்… அவளை ரசிக்கணும்… அப்படி இல்லைன்னா அவனுக்கு டெஸ்டோஸ்டிரோன் வொர்க் பண்ணலைன்னு அர்த்தம்டி… அப்படி ஒர்க் பண்ணலைன்னா உனக்கு தான் கஷ்டம்…”
கிண்டலாக கூறிவிட்டு அவளது முகத்தை பார்க்க… அவள் ஓவியத்திலிருந்து பார்வையை விலக்கி அவனை முறைத்து கொண்டிருந்தாள்… விளையாட்டாகத்தான்!
“அப்படீன்னா எங்களுக்கும் ஹார்மோன் ஒர்க் பண்ணும்… நாங்களும் சூப்பரா ஒரு பையன் போனா பார்ப்போம்… அதுக்கு என்ன மச்சி சொல்ற?” அவனுடைய அதே குறும்போடு அவள் கூறி விட்டு புருவத்தை உயர்த்தி எப்படி என்று கேட்டவளை பார்த்து சிரித்தான்.
“இந்த பெமினிஸ்ட் இப்படி சொல்லலைன்னா தான் ஆச்சரியம்…”
“நான் பெமினிஸ்ட் இல்லடா… ஜஸ்ட் ரியலிஸ்ட்… ஏன் நீ சைட் அடிக்கறதுக்கு டெஸ்டோஸ்டிரோன் ரீசனா இருக்கும் போது என்னோட ஈஸ்ட்ரோஜென் வேலை செய்யாதா?” கண்ணை சிமிட்டி அவள் கேட்க… அவளை குறும்பு கண்ணனாக பார்த்து கொண்டே இருந்தான்… உதட்டின் ஓரத்தில் வழிந்து கொண்டிருந்த சிரிப்போடு!
“அது வேலை செய்யுமா செய்யாதான்னு தெரியாம எப்படிடி இதுக்கு நான் பதில் சொல்றது? வேணும்னா ஒரு டெமோ பார்த்துட்டா நான் கன்பர்ம் பண்ணிடுவேன்…” குறுகுறுத்த புன்னகையோடு அவன் கூறியது முதலில் புரியாமல் விழித்தாலும் சட்டென்று ஸ்ரீநிதிக்கு பல்ப் எரிய… அவனை வெட்கத்தோடு முறைத்து பார்த்தாள்.
“டேய்… உனக்கு இருக்க கொழுப்புக்கு அளவே கிடையாதா?”
“நீ தான் ரியலிஸ்ட் ஆச்சே மச்சி… பதில் சொல்லாம நழுவ பார்க்கற?”
“நான் நழுவ பார்க்கலை… சரி இதுக்கு எனக்கு பதில் சொல்லு… லவ் பண்றதுக்கும் வெறும் ஹார்மோன்ஸ் மட்டும் தான் ரீசனா? காதல் தெய்வீகமானது புனிதமானதுன்னு சொல்றதெல்லாம்?” கேள்வியாய் அவனை பார்த்தவாறே அவள் கேட்க.
“சியூர்… யூ ஆர் கரெக்ட்… லவ் இஸ் நத்திங் பட் அ காம்படீஷன் பிட்வீன் டெஸ்டோஸ்டிரோன் அண்ட் ஈஸ்ட்ரோஜென்… தென் அட்ரனலினோட மேஜிக்… அசிட்டைல்கொலினோட சித்து விளையாட்டு…” வெகு சாதரணமாக கள்ள சிரிப்போடு அவன் கூறியதை அவளால் அங்கீகரிக்க முடியவில்லை.
“அப்ப எதுக்கு மச்சி உனக்கு லவ்… உனக்கு நானும் அந்த ரெட் மினிஸ்கர்ட் பொண்ணும் ஒண்ணுதானே… எப்படி இருந்தாலும் உனக்கு முக்கியம் ஹார்மோன்ஸ்… அது எங்கயா இருந்தா என்ன?”
இயல்பாக அவள் கேட்பதை போல தோன்றினாலும் அதில் இருந்த கோபம் அவனை வசீகரித்தது… அவளை இவ்விதமாக கலாய்ப்பதற்காகவே வேண்டுமன்றே இப்படி கூறி வாங்கி கட்டி கொள்வதுதான் அவனுக்கு மிகவும் ப்ரியமானதாயிற்றே!
ஓவிய கண்காட்சி என்பதால் ஆட்களும் மிக குறைவாகவே இருந்தனர்… அவர்களுமே அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்ததை கவனித்து விட்டுதான் இவன் தன்னிடம் வம்பை வளர்க்கிறான் என்பதை புரிந்து கொண்டவள் அவனை மேலும் முறைத்தாள்!
“ஆஹா காளி மாதா தரிசனம் கொடுக்கறாங்களே…” என்று அதற்கும் கிண்டலடித்தவன்.
“வேண்டாம்… வம்பு பண்ணாதே…”
“ஓகே டி செல்லகுட்டி… நூடுல்ஸ் ஸ்ட்ரிப் டாப்சோட அந்த மினிஸ்கர்ட்டை நீ போட்டு காட்டுவியாம்… அப்புறம் வேற எவளையாவது இந்த மாமா பார்த்தா ஏன்டான்னு கேளு…” என்று கண்ணடித்து சிரித்தவனை பார்க்கையில் அவளால் மேலும் முறைக்க முடியவில்லை… அது விளையாட்டுக்கு தான் எனும் போதும்… சட்டென்று சிரித்து விட்டவள்,
“நூடுல்ஸ் ஸ்ட்ரிப் டாப்ஸ் வித் குட்டியூண்டு ஸ்கர்ட்… ஏன் என்னை நாய் துரத்தனுமா? வெளிய வர கூட முடியாது…” என்று கேலியாக கூற.
“உன்னை யாரு வெளிய வர சொன்னது? அதெல்லாம் ஒன்லி பார் மீ… நான் மட்டுமே பார்க்கத்தான்… எனக்காக… எனக்காக… ஒன்லி எனக்காக…” போதையான குரலில் கூறி கன்னம் சிவக்க வைத்தவனை இப்போது நினைக்கும் போதும் மனம் ஏமாற்றத்தில் தவித்தது.
அவனது குரலுக்காக ஏங்கியது!
பெருகி வந்த துக்கத்தை சுற்றுப்புறத்தை கருத்தில் கொண்டு விழுங்கினாள்!
நினைவுகளின் தாக்கத்தோடு ஓவியத்தின் தாக்கமும் குறையாமலே ஜி எம்மின் அறையை அடைந்தாள்.
அந்த பொது மேலாளருக்கு வயது குறைந்தபட்சம் ஐம்பதாவது இருக்க கூடும்… காதோரங்கள் நரைத்திருக்க… இயல்பாக அமர்ந்திருந்தவரை பார்த்தவுடனே பிடித்து போனது ஸ்ரீநிதிக்கு! உடன் வேறொருவரும் அமர்ந்திருக்க… யாருக்கு முகமன் செய்வது என்று குழம்பி பின்.
“குட் டே ஜென்டில்மென்…” என்று மெலிதாக புன்னகைத்தாள்!
அவரிடமிருந்த பைலில் கையெழுத்திட்டு அருகில் இருந்தவரிடம் ஒப்படைத்தவர்… அதே புன்னகையோடு.
“யாஹ்… குட் டே ம்மா…” பேனாவை மூடி வைத்தவர்.
“யூ ஆர் ப்ரம் ஸீயஸ் டெக்னாலஜிஸ்… ரைட்?”
“எஸ் சர்… ஐ ம் ஸ்ரீநிதி…”
“எஸ்… உங்க ப்ரோபைல் பார்த்தேன் மிசஸ் ஸ்ரீநிதி… உங்களை இங்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி…” சரளமான ஆங்கிலத்தில் கூறியவரை பார்த்து புன்னகைத்தாள்.
“எனக்கும் மிகவும் மகிழ்ச்சி சர்…” என்று அருகிலிருந்தவரையும் பார்க்க.
“இது ஆடிட்டர் ராமநாதன் ஸ்ரீநிதி… அண்ட் என்னுடைய பெயர் கோபாலகிருஷ்ணன்…”
“பைன்… சர்… எனக்கு கம்பெனி ப்ரோபைல் அன்ட் டீட்டைல்ஸ் வேணும்… எனக்கு யார் இங்க அசிஸ்ட் செய்வாங்க? கம்பைலேஷன் பார் டெவலப்மென்ட் ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும்…”
நேரடியாக பேசிய ஸ்ரீநிதியை அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது… அவளது மகளை போன்ற தோற்றத்தில் எளிமையாய் கண்ணியமாய் உடுத்தி இருந்த அந்த அழகு பெண்ணை எங்கோ பார்த்தது போல உணர்ந்தார்… அதை கூறவும் செய்தார்!
“ஸ்ரீநிதி… நீங்க முன்னாடி இங்க வந்து இருக்கீங்களா?” யோசனையாக கேட்டவரை.
“நோ சார்… ஏன்?”
“இல்லை… உங்களை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு!” என்று முடிக்க.
“தெரியவில்லையே சர்…” என்று குழம்ப..
“எங்கயாவது பார்த்து இருப்பேன்…” என்று அவராகவே தனக்குள் கூறிக்கொண்டார்… ஆனால் நெற்றி சுருக்கம் அவளை எங்கே பார்த்தோம் என்று அவர் ஆராய்ந்து கொண்டிருப்பதை கூற,
“சர்… எனக்கு யார் அசிஸ்ட் செய்வாங்கன்னு தெரிந்தால்…” என்று அவள் முடிக்கும் முன்னே.
“ஸ்ரீநிதி… வெய்ட் வெய்ட்… இப்பவே சதாப்தியை பிடிக்க போறீங்களா? இவ்ளோ பாஸ்ட்டா வேலைய ஆரம்பிக்கிறீங்க… முதல்ல இதை குடிங்க…” என்று அவருக்கு முன்னே இருந்த தண்ணீரை அவளிடம் கொடுக்க… புன்னகைத்தவாறே அதை மறுக்காமல் வாங்கி குடித்தாள்!
“ஆபீஸ் ரொம்ப அழகா இருக்கு சர்… நல்ல இன்டீரியர்ஸ்…” சுற்றிலும் பார்த்தவற்றை சிலாகித்தவாறே கூற.
“தேங்க்ஸ்… பட் காம்ப்ளிமென்ட் எங்க எம்டி க்கு தான் போகணும்… அவரும் மேடமும் சேர்ந்து தான் டிசைன் செய்தாங்க…” இயல்பாக கூற.
“மேடம்?” என்று தயங்கி கொண்டே கேட்க.
“எம்டியோட ஒய்ப்… அவங்க நல்ல டிசைனர்ன்னு சொல்லியிருக்கார்…” என்று கோபாலகிருஷ்ணன் புன்னகைக்க.
“தட்ஸ் கிரேட்…” என்று கூறிவிட்டு அவரது முகத்தை பார்க்க.
“எஸ் ஹி இஸ் கிரேட்… ஜஸ்ட் இன் தி ஸ்பான் ஆப் எய்ட் இயர்ஸ் கம்பெனியை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கார்…” கோபாலகிருஷ்ணன் மிகவும் பெருமையாக கூற… ஸ்ரீநிதி ஆச்சரியமாக அவரை பார்த்தாள்.
“வாட்… வெறும் எட்டு வருடத்திலா?… ப்ச்… பெரிய விஷயம்…” ஆச்சரியம் அவளது குரலில் மீதமிருந்தது… ஏழு வருடங்களில் எப்படி இந்தளவு முன்னேற்றம் சாத்தியமானது?
“அவரை பொறுத்தவரை மனைவி சரியா அமைஞ்சுட்டா வாழ்க்கைல அத்தனையும் சரியா அமைஞ்சுடும்ன்னு சொல்லுவார்… அவரோட மனைவி மேல எவ்வளவு பாசம் இருக்கோ தொழிலாளிங்க மேலும் அதே பாசத்தை வைக்க கூடியவர்… அந்த ஒரு பேக்டர் போதும் இல்லையா? தொழில் தடையில்லாம முன்னேற…” கூறியவரின் குரலில் தான் சாதித்ததை போன்றதேயான பெருமிதம் உண்மையை கூற… அவளது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது!
அந்த உணர்வை வேலை செய்பவர்களிடம் கொண்டு வருவதென்பது ஒரு கலை… அந்த கலையில் அவர் தேர்ந்து இருக்க வேண்டும்.
“ரொம்ப ஆச்சரியப்படுத்தறீங்க சர்…” என்று கூறியவள் அவளையும் அறியாமல் கைக்கடிகாரத்தை பார்க்க… கோபாலகிருஷ்ணன் சிரித்து கொண்டார்.
“ஆரியக்கூத்தாடினாலும் காரியத்திலே கண்ணா இருக்கீங்கம்மா… தட்ஸ் குட்…” என்று அவளை பாராட்டியவர்… டெஸ்க் போனை எடுத்து அழுத்தினார்.
“சர்… ஸீயஸ்ல இருந்து பிசினெஸ் எக்சிகியூட்டிவ் வந்திருக்காங்க…” சுருக்கமாக கூறி முடிக்க… அந்த பக்கம் இருந்து என்ன பதில் வந்ததோ.
“ஓகே சியூர் சர்…” என்று வைத்தார் கோபாலகிருஷ்ணன்.
கையில் பைலோடு தயாராக இருந்த ஸ்ரீநிதியை பார்த்தவர்.
“வாங்கம்மா… உங்களை அழைச்சுட்டு வர சொன்னார்…” உடன் ராமநாதனையும் அழைத்து கொண்டவர்… அறையிலிருந்து வெளியேறி… மாடியில் அமைந்திருந்த அந்த அறையின் கதவை தட்டினார்.
அவருடனே உள்ளே நுழைந்த ஸ்ரீநிதியின் கவனமெல்லாம் இந்த வியாபார ஒப்பந்தத்தின் முன் மாதிரிகளை சேகரிப்பதிலேயே மையம் கொண்டிருந்தது… கண்டிப்பாக ஒரு மாத வேலை இழுத்து விடும் என்று நினைத்திருந்தவளுக்கு சற்று நிம்மதியாக கூட இருந்தது.
வீட்டில் அமர்ந்து கொண்டு தங்கையின் கணவன் செய்யும் அட்டகாசத்தில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள கிடைத்த சந்தர்ப்பமாகவே அவள் நினைத்தாள்.
காலையிலேயே தங்கை அன்னையோடு மருத்துவ பரிசோதனை என்று கிளம்பிவிட… அதற்குள்ளாகவே அவனுடைய கேவலமான சீண்டல்களை ஆரம்பித்து இருந்தான்… அவனது சீண்டல்களை யாரிடமும் வெளிப்படையாக கூறவும் முடியவில்லை என்ற அவளது நிலை அவனை மேலும் முன்னேற வைத்து கொண்டிருக்கிறது போலும் என்று எண்ணிக்கொண்டு அந்த அறையின் உள்ளே நுழைந்தாள்.
மெலிதான லாவெண்டர் மனம் காற்றில் பரவி இருக்க… நடுநாயகமாக அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து பார்க்க.
ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியது அவளை!
“சர்… திஸ் இஸ் மிசஸ் ஸ்ரீநிதி… ப்ரம் ஸீயஸ்…” கோபாலகிருஷ்ணன் இயல்பாக அறிமுகப்படுத்தி வைக்க… அவளது உதடுகள் அவளையும் அறியாமல் சப்தமில்லாமல் முனுமுனுத்தது!
“அர்ஜுன்…”
கோபாலகிருஷ்ணன் கூறிய வார்த்தைகளினால் அதிர்ந்த நிலையில் அந்த அர்ஜுனும்!






Super
thanks