அத்தியாயம் 6
நிலவோடு பனி பொழிந்தமொட்டைமாடி இரவில்
காதுவழிகுளிர் இறங்குகிறதென்றேன்!
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சமென
நெருங்கிமூச்சுக்காற்றில் அனல்மூட்டினாய்
இல்லையில்லை இல்லையில்லை
அறைக்குச்செல்லலாமென வினவ
உன் காலகற்றி நடுவிலிருத்தினாய்
அலைபேசியில் பேசிப் பேசி
காதுமடல் சூடேறுகிறதென்பதன்
அர்த்தம் புரிகிறதா உனக்கு?
மிகவும் இயல்பாக அவளை அவன் செல்லமாக அழைத்த பெயரை கொண்டு அழைக்க… ரத்த ஓட்டம் தலைகீழானது போன்ற உணர்வு அவளுள்! ஜிவ்வென்ற உணர்வு அவளது உச்சந்தலையை தாக்கினாலும் சிறிது சிறிதாக தன்னிலைக்கு வந்தாள்.
“நோ… என்னை அப்படி கூப்பிடாதீங்க…” பிடிவாதமாக மறுத்து கூறியவளை வித்தியாசமாக பார்த்தான்.
“ஏன்… ஏன் கூப்பிட கூடாது? நீ எப்போவுமே எனக்கு டெடி தான்… ரசகுல்லா தான்… கல்யாணமாகி விட்டாலும் நாம எப்போவுமே ப்ரெண்ட்ஸ் தானே டெடி…” பேசிக்கொண்டே அவள் முன்னே வந்து மேஜையில் அமர்ந்தவனை அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தாள்.
அவ்வளவு அருகில் அவன்!
முன்பை விட கம்பீரமாய்… விரிந்து பரந்திருந்த மார்பும் நிமிர்ந்த நடையும் நேரான பார்வையுமாய்!
வெற்றி தரும் தேஜஸ் என்பது மிகவும் ஸ்பெஷல் தான் இல்லையா!
மற்றவர்களுக்கு அவனது பார்வை நேர்மையை உணர்த்தலாம்… உண்மையை உணர்த்தலாம்… கண்டிப்பையும் அன்பையும் கூட உணர்த்தலாம்… ஆனால் என்றுமே அவனது பார்வையில் அவள் உணர்ந்தது ஒன்று மட்டுமே!
அது கரை காணாத காதல்!
இப்போதும் அதே காதலை தான் உணர்ந்தாளோ?
காலம் வரைந்த கோலத்தில் சிக்கிய வாழ்க்கை அவளுக்கு வைத்தது இந்த வலிகளை மட்டுமே அல்லவா!
மனம் ரயில் வண்டியை போல தடதடத்தது! சட்டென்று எழுந்து கொள்ள முயல… பதட்டத்தில் கால்கள் தடுக்கின.
சட்டென்று அவளை தாங்கி கொண்டவன்.
“ரிலாக்ஸ் டெடி… ஏன் இவ்வளவு டென்ஷன்… ரிலாக்ஸ்…”
“ப்ளீஸ்… அர்ஜுன்… லீவ் மீ… நான் போகணும்…” அவனது முகத்தை பார்க்காமல் பிடிவாதம் பிடித்தவளை பார்க்கும் போது உள்ளுக்குள் சந்தோஷ குமிழி!
“வெல்… நீ போகணும்… அவ்வளவு தானே?” என்று நிதானமாக கேட்டவனை நிமிர்ந்து பார்க்க… சட்டென விட்டான்!
அதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்ரீநிதி தடுமாறி அவளது இருக்கையில் விழ… அவனது முகத்தில் குறும்பு புன்னகை! அவளுக்கோ எரிச்சல்… கடந்தகாலத்தை நினைவுப்படுத்தியது அவனது ஒவ்வொரு செயலும்.
அவளுடன் இருக்கும் நேரம் மட்டுமல்ல… ஒவ்வொரு நிமிடமும் அர்ஜுனை பொறுத்தவரையில் விளையாட்டுத்தனம் மட்டுமே… வாழ்கையை சற்றும் கடினமாக நினைக்காமல் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்ந்தவன்.
“அர்ஜுன்… வாட் ஈஸ் திஸ்?” அதே எரிச்சலோடு அவள் கேட்க.
“நீதானே போகணும்ன்னு சொன்ன… இப்போ வாட் ஈஸ் திஸ்ன்னு சொல்ற? ஒரு நிலையா இருக்கவே மாட்டியா டெடி?” கண்களில் சிரிப்பும் உதட்டில் குறும்பும் இருந்தாலும் வார்த்தைகளில் சற்று வலியும் தெரிந்ததோ?
“அதற்கு? இப்படியா தள்ளி விடுவீங்க?” கோபமாகவே கேட்டவளை பார்த்து சிரித்தவன்.
“மேடம் இவ்வளவு ஸ்ட்ராங்ன்னு எனக்கு தெரியாம போச்சே… உன் வீட்டுக்காரன் உன்னை சரியா கவனிக்கறது இல்லையா? அத்தனை சாப்பாட்டையும் அவனே முழுங்கிடறானா?”
நக்கலாக கேட்ட விதத்தில் அவளது தன்மானம் சிலிர்த்து எழுந்தது… திருமணம் செய்து கொண்டு இவனே மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது… தான் மட்டுமென்ன குறைவு என்று எண்ணிக்கொண்டவள்.
“என்னோட ஹஸ்பண்டை பற்றி நீங்க ஒன்றும் பேச தேவையில்லை… அவர் ரொம்ப ரொம்ப நல்லவர்…” அவனை முறைத்து கொண்டு பதில் பேசியவளை பார்த்து மேலும் சிரித்து வைத்தான் அவன்.
“ஓ… அந்த அளவு நல்லவனா அவன்?”
“ஹலோ… மரியாதை கொடுத்தா மரியாதை கிடைக்கும்… அவன் இவன்னு கூப்பிடற வேலை வேண்டாம்…”
கையை நீட்டி அவனது முகத்துக்கு முன்னே ஆட்டி பேசியவளை கிண்டலாக பார்த்தவன்… நீட்டிய அவளது கையை பற்றி முறுக்கி அவளது முதுகோடு பின்னே சேர்த்து இறுக்கி தன்னருகே இழுத்து நெருக்கமாக வர.
“ஆஆ… விடு அர்ஜுன்… வலிக்குது…” அவனிடமிருந்து தன்னை விடுவித்து கொள்ள அவள் போராட… பன்மை ஒருமையானதை இருவருமே உணரவில்லை.
“கை நீட்டி பேசாதன்னு எத்தனை தடவை சொல்லியிருப்பேன்… கேட்கறியா நீ…” இயல்பாக அவன் கேட்ட தோரணை அவளுக்குள் உறங்கி கொண்டிருந்த அர்ஜுனனின் காதலியை விழிக்க செய்தது… அப்போதும் இப்படித்தான்.
எதையாவது செய்துவிட்டு அர்ஜுனிடமிருந்து இப்படிப்பட்ட தண்டனைகளை பெற்று கொண்டிருப்பாள்… அது தண்டனையாக அவளும் அப்போது நினைத்ததில்லை… அவனும் நினைத்ததில்லை.
இப்போது அந்த நினைவு இருவருக்கும் முள்!
ஆனால் அது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்து நடந்தவற்றும் நினைவுக்கு வந்ததில் அவளது கன்னங்கள் சிவக்க… அவனுமே அதே நிலையில்!
அவளை மேலும் நெருங்கியவன்… உதடுகள் அவளது காதோடு உரச.
“ஏன்டி என்னை விட்டுட்டு போன?” பல கால ஏக்கத்தை தேக்கி வைத்து அவன் கேட்ட கேள்வியில் அவளது உடல் சிலிர்த்தது… சிலிர்ப்பு நடுக்கத்தை கொடுக்க… நடுக்கம் மயக்கத்தை கொடுத்தது!
“சொல்லு டெடி…” என்றவாறே அவளது இடையோடு நெருக்கமாக அணைத்து மயக்கமாக கேட்க… அவளுடைய புலன்களை மயக்கத்தில் ஆழ்த்தி கொண்டிருந்தான் அவன்.
எத்தனை கால தவிப்பு… அவனது அருகாமைக்கு… அவனது இந்த அணைப்புக்கு!
கண்கள் சொருகியது அவளுக்கு!
ஆனால்.
சட்டென மயக்கத்தில் இருந்து மீண்டவள்… இருவரும் இருந்த நிலையில் உள்ளம் அதிர்ந்தாள்.
எவ்வளவு பெரிய தவறை செய்ய துணிந்திருக்கிறாள்… அவனுக்கு தான் அறிவில்லை என்றால் அவளுக்கு எங்கே போனது அறிவு?
ஆண்பிள்ளை எப்படி நடந்தாலும் பழி சொல்லை தாங்குவது பெண் தானே? எப்படி மறந்தாள் இதை?
அதிலும் அவனுக்கு இருக்கும் குடும்பத்தை பற்றி நினைக்காமல் தன்னுடைய நிலையை பற்றியும் நினைக்காமல்… தாய் தந்தைக்கு கொடுத்த வாக்கினை பற்றியும் நினைக்காமல் வெட்கம் கெட்டு அவனது அருகாமையில் மயங்கி.
ச்சே! ஸ்ரீநிதிக்கு வெறுப்பாக இருந்தது.
வலுகட்டாயமாக அவனது கைகளை பற்றி விலக்கி தள்ளியவள்… சற்று தள்ளியே நின்று கொண்டாள்… பதட்டத்தில் மூச்சு வாங்கியது அவளுக்கு.
இனிய கனவு கலைந்த எரிச்சல் அவனுக்கு!
அவளை மீண்டும் நெருங்க முயற்சி செய்ய.
“அர்ஜுன்… வேண்டாம்… நம்ம ரிலேஷன்ஷிப் அபிசியலா மட்டும் இருக்கறதுதான் நல்லது… டோன்ட் மிஸ்பிஹேவ்…” கோபமாக அவனை குற்றம் சாட்டியவளை… குற்றம் சாட்டும் பார்வை பார்த்தவன்.
“ஓ மிஸ்பிஹேவிங்… இப்போ நீங்க பத்தினி தெய்வமில்ல… பதிவிரதை… அப்படித்தானே…” நக்கலாக அவன் கேட்ட தொனியில் அவளுக்கு கோபம் பற்றி கொண்டு வந்தது.
“ஆமா… அதுக்கு இப்போ என்ன சொல்ற?”
“சரி பத்தினி தெய்வத்தோட தாலி எங்கேம்மா?” அவளது கழுத்தை காட்டி அர்ஜுன் கேட்க… அதை பறிகொடுத்த அந்த கொடூர தினம் அவளது கண் முன் வந்து போனது… அந்த நினைவில் அவளையும் அறியாமல் கண்ணீர் குளம் அவளது கண்களில்!
ஆனாலும் அதை இவனிடம் காட்டி கொள்ள கூடாதே… அதை விட தலையிறக்கம் வேறு என்ன இருந்துவிட போகிறது? முயன்று அவளது குரலில் திமிர்த்தனத்தை வரவழைத்தவள்.
“தாலியை போட்டுக்கறதும் கழட்டி வைக்கறதும் என்னோட பர்சனல்… இதில் தலையிட மூன்றாம் மனிதர்களுக்கு உரிமையில்லை…” இறுக்கமான முகத்துடன் அவள் கூறுவதை கேட்டவனுக்கு எள்ளலான சிரிப்பு மலர்ந்தது.
“ஆமா… மேடம் எப்பவுமே அதுக்கு மதிப்பு கொடுத்ததில்லைன்னு தான் தெரியுமே…” என்று கேலியாக கூறியவனை கண்களால் எரித்தாள் ஸ்ரீநிதி.
கல்லூரி காலத்தில் அவளது மிகத்தீவிரமான பெண்ணியவாத கருத்துக்களை போகிற போக்கில் போட்டு தள்ளிவிட்டு போகும் இயல்பு கொண்டவன் அர்ஜுன்… அது குறித்தான விவாதங்கள் தீவிரமானது இருவருக்குமே! அதன் தாக்கம் இப்போதும்.
“அர்ஜுன்… நான் கிளம்பறேன்… ஆபீஸ்ல வேற யாரையாவது வர சொல்றேன்…” என்று அவளது கைப்பையை எடுத்து கொண்டு கிளம்ப… அவளது கையை இழுத்து பிடித்து அமர வைத்தான்.
சடாரென்று அவன் இழுத்ததில் அவளது உடல் அதிர்ந்தது.
“பதில் பேசிட்டு போ ஸ்ரீநிதி…” அவனது அழுத்தமான வார்த்தைகளை கேட்டு ஸ்ரீநிதியின் புருவம் சுருங்கியது… அவன் ஸ்ரீநிதி என்று முழு பெயரையும் இட்டு அழைத்த சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு… கோபமாக இருக்கும் போது மட்டுமே அவ்வாறு அழைத்திருக்கிறான்.
“எதற்கு பேசணும் அர்ஜுன்? நீ பேச நினைப்பதெல்லாம் முடிந்து போன விஷயம்… கடந்து போன காலம்… இனிமே நினைத்தாலும் அதற்குள்ளே போக முடியாது… உனக்கும் தனிப்பட்ட வாழ்கை இருக்கு… எனக்கும் இருக்கு… அதை டிஸ்டர்ப் செய்யாதே அர்ஜுன்…”
மிக நீளமாக பேசிவிட்டு அவனது முகத்தை பார்க்க… அவனது முகம் முதலில் குழம்பி பின் தெளிவானது!… ஏதோ ஒரு முடிவுக்கு வந்து விட்டான் என்று தோன்றியது!
“ஓகே… நீ சொல்றதை அக்செப்ட் செய்துக்கறேன்… ஆனா இந்த வேலைய முடிச்சு கொடுத்துட்டு போய்டு… ஓகே…” சமாதான உடன்படிக்கை பேசியவனை குறுகுறுவென பார்த்தாள்.
இவன் இப்படி சட்டென உடன்படுபவன் கிடையாதே… எவ்வளவுதான் குறும்புத்தனம் இருந்தாலும் விளையாட்டுத்தனம் இருந்தாலும் அவனது பிடிவாதம் அவளறிந்த ஒன்றாயிற்றே.
“ஓகே… ஆன்லைன் வெப்சைட் அதோட ஆப்ஸ் இதுதானே உங்க தேவை…” ஒரு நொடியில் தன்னை மாற்றி கொண்டு வேலையை ஆரம்பித்து விட்டவளின் தோரணையில் சற்று அசந்து தான் போனான்.
மாற்றி கொள்வது இவளுக்கு ஒன்று புதிது இல்லையே என்று மனது குற்றசாட்டு படிக்க… உள்ளே கசப்பாக உணர்ந்தான்.
“எஸ்… ஆன்ட்ராய்ட், ios… அன்ட் ஆல்சோ மைக்ரோசாப்ட்…”
“ஓகே… ஆப்ஸ் எல்லா பிளாட்பாரம்லையும் பங்க்ஷன் ஆகணும்…” என்று கூறிக்கொண்டு எழுதினாள்.
அதற்கு பின் சற்று நேரம் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இருவரும் அவர்களது வேலையை பற்றி விவாதித்து கொண்டு இருக்க… சுமுகமாக சென்றது… முடிக்கும் நேரத்தில்.
“ஏன் டெடி… உன் வீட்டுக்காரனை நீ அவ்வளவு லவ் பண்றியா?”
பேச்சுவார்த்தைக்கு சம்பந்தமே இல்லாமல் அவன் கேட்ட கேள்வியில் பகீரென்றது! அது அவனது மனதை வெகு நேரமாக உறுத்தி கொண்டிருந்த கேள்வி என்பதை அவளும் உணர்ந்து கொண்டாள்.
கசப்பான முறுவலோடு.
“நீ உன்னோட ஒய்ப் மேல எவ்வளவு லவ் வெச்சு இருக்க அர்ஜுன்?” திரும்ப அவள் கேட்டதில் அவனது கண்கள் பளிச்சிட்டது… சரியான புள்ளியை தான் பிடிக்கின்றாள் என்று எண்ணியவன்.
“அவள் தான் எனக்கு உயிர் டெடி… என்னோட உலகமே அவள் மட்டும் தான்…”
உண்மையை மறைக்காமல் ரசித்து கூறியவனின் வார்த்தைகள் அவளை ஆற்றுப்படுத்துவதற்கு பதிலாக காயப்படுத்தியது.
“அதே மாதிரிதான் எனக்கும்… உடல்,பொருள், ஆவி எல்லாமே அவர் தான்…” அந்த நிமிடம் வலித்தாலும் ரசித்தாள்… உண்மைதானே!
“சரி என்ன பண்றார் உன்னோட ஹப்பி?” அவளது வாயை கிளற துவங்கியவனுக்கு அவளது பதில் கோபத்தை கிளறியது.
“சாரி அர்ஜுன்… அது என்னோட பர்சனல்…”
எரிச்சலாக அவளை பார்த்தான்!
******
அந்த மிகப்பெரிய குடோனை பார்வையிட்டு கொண்டிருந்தான் அர்ஜுன்… அது அவனுடைய முக்கிய சேமிப்பு கிடங்கு… இது போல சென்னையை சுற்றி ஐந்து இடங்களில் பெரிய சேமிப்பு கிடங்குகள் இருந்தன.
அவர்களுடையது பல எப்எம்சிஜி எனப்படும் தினசரி உபயோக கன்சியுமர் பொருட்களுக்கான மொத்த கொள்முதலுக்கான மையம்.
மிக பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது… எங்கு எந்த பார்சல் போக வேண்டுமென்று உத்தரவுகள் பிறப்பிக்க பட்டு கொண்டிருக்க… பார்சல் கட்டியவர்கள் அதை கொண்டு போய் வாகனத்தில் சேர்க்க… அந்த வாகனம் ஒவ்வொரு ஏரியாவுக்கும் பறக்க என்று பரபரத்து கொண்டிருந்தது.
இதை வெறுமனே மொத்த மளிகை வியாபாரமாக செய்யாமல் புதிய உத்திகளுடன் களமிறங்கிய அர்ஜுனுக்கு ஏறுமுகத்தை தவிர வேறு ஒன்றுமே இல்லை… பக்காவாக திட்டமிட்டு சரியாக அதை செயல்படுத்துவதில் அவனுக்கு நிகர் அவன் தான் என்பது அவனது வட்டாரத்தில் உள்ள பெயர்!
இவை எல்லாவற்றையும் அறிந்த விவேக்குக்கு தூரத்தில் இருந்தது அர்ஜுனை பார்ப்பது ஒன்றே போதுமானதாக இருந்தது.
கல்லூரியில் அவன் காட்டிய முகமும் சரி,இப்போது அந்த இடத்தில் அவன் காட்டுகின்ற முகமும் சரி விவேக்கை ஈர்த்தது.
அவனது வேகமான செயல்பாடுகள், சற்றும் கூர்மை தவறாத பார்வை, மற்றவர்கள் மூலமாக கேள்விப்பட்ட அவனது விஷய ஞானம் அவனை சற்று பயமுறுத்தியது என்றும் கூறலாம்.
ஆனால் ப்ரோஜக்ட் செய்ய வந்துவிட்டு அதற்க்கெல்லாம் பயந்தால் என்னாவது என்று முடிவெடுத்து கொண்டான்.
அது ஒருமாதிரி ஹீரோ ஒர்ஷிப் அவனை பொறுத்தவரை… நாம் ஈடுபட்டிருக்கும் துறையில் பெரிய அளவில் சாதித்து கொண்டிருப்பவரை ஐகானாக வைத்து கொள்வது, அவர்களை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பது எல்லாம் நடப்பதுதானே!
ஏகலைவன் துரோணாச்சாரியாரை குருவாக வரித்தது போல என்று நினைத்து இருந்தவனுக்கு அர்ஜுனிடம் ப்ராஜக்ட் செய்வதே அவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.
“சர் எப்போவுமே ரவுண்ட்ஸ் வருவாரா?”
அவனுக்கு அந்த பகுதியின் வேலைகளை சொல்லி தந்து கொண்டிருந்தவரிடம் விவேக் கேட்க.
“அவர் ஒரு இடத்தில் நிலையாக இருக்க மாட்டார் தம்பி… ஒவ்வொரு இடத்துக்கும் அலைந்து கொண்டே இருப்பார்… அதே சமயத்தில் ஒவ்வொரு குடோனையும் ரிமோட் இன்விஜிலேஷன் மூலமாக கண்காணித்து கொண்டே இருப்பார்…”
“அட… பரவால்லையே…” புருவத்தை அவன் உயர்த்த.
“பின்னே… இது இல்லாம இன்னும் அஞ்சு குடோன் இருக்குப்பா… ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்க முடியாதில்லையா? ஆனா சாருக்கு தெரியாம ஒரு குண்டூசி கூட வெளிய போகாது…” பெருமையாக கூறிய அவரை ஆர்வமாக பார்த்தான் விவேக்… எதை காட்டிலும் இந்த முகத்தில் தெரியும் பெருமிதம் பெரிய விஷயம் அல்லவா!
இதை தான் தானும் எதிர்காலத்தில் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்… கற்று கொள்ள வேண்டியதும் இதுதான்.
அந்த மனிதர் கூறியவற்றை எல்லாம் குறிப்பெடுத்து கொண்டு நிமிர… அர்ஜுன் அருகே வர… விவேக்குடைய நாவண்ணம் ஒட்டி கொண்டது.
அது பயத்தினால் வந்த நடுக்கமல்ல… மரியாதையினால் வந்த நடுக்கம்.
அருகே வந்தவனோ… விவேக்கை புன்னகையோடு அழைக்க.
உள்ளுக்குள் நடுங்கினாலும் அதை சற்றும் வெளிகாட்டிக்கொள்ளாமல் கம்பீரமாக அவனை நோக்கி போக… அவனது பார்வையில் மெச்சுதல் தெரிந்தது… கூர்ந்து பார்த்தால் அதை தாண்டிய சொந்தமும் தெரிய… அவனது அந்த பார்வை தந்த தைரியத்தில் அவனுக்கு வணக்கம் தெரிவித்தான்.
“ஹலோ பாஸ்…”
“பர்ஸ்ட் டே இல்லையா?” நேரடியான அவனது கேள்வியில் ஒரு நிமிடம் அசந்தே தான் போனான்… இவ்வளவு பேர் இருக்கையில் கல்லூரியில் இருந்து ப்ராஜக்ட் செய்ய வந்த தன்னை கூட கூர்ந்து கவனித்து… எப்படி சாத்தியம் இது என்பது புரியவில்லை.
“எஸ் பாஸ்…” என்றவனுக்கு கை கொடுத்த அர்ஜுன்.
“ஆல் தி பெஸ்ட் விவேக்… உன்னுடைய ப்ராஜக்ட்டுக்கு!… நல்லா கத்துக்கோ…” என்று கூற… மயக்கம் வராதது ஒன்றே பாக்கி.
மேக்சிமஸ்ஸின் ரீச் என்னவென்று அவன் அறியாததல்ல… அவனுடன் எம்பிஏ படித்தவர்களில் பெரும்பாலானோர்கள் இந்த நிறுவனத்தை கனவு நிறுவனமாக கூட குறிப்பிட்டு இருந்தனர்… அப்படி இருக்கும் போது இவரே வந்து… தன்னிடம் எப்படி?
“சியூர் பாஸ்… கண்டிப்பா…” என்று கூறியவனின் கால்கள் தரையில் நிற்கவில்லை.
மிதந்து கொண்டு தான் இருந்தான்.
அர்ஜுன் சென்று விட்டாலும் அவன் கொடுத்த கையை அடிக்கடி பார்த்து கொண்டே இருந்தவனுக்கு பசிக்கவும் இல்லை என்பதை கூறவும் வேண்டுமோ?






Nice
thanks