அத்தியாயம் 7
உன் விரல் இடுக்குகளில் நெளியும்
என் உதிர்ந்த கூந்தலின் பின்னணி கதையை
பனிப்பொழுதொன்றில் யோசிக்கிறேன்….
ஈரக்கூந்தலை ஏந்திக்கட்டிய பூத்துவாலையின்
ஊடே நீர் சொட்டிக்கொண்டிருக்கும் கார்கூந்தலை
கண்டதும் இழுக்கத்தோன்றியதாய் பதிலுரைத்தாய்….
சீப்புகளின் பல்வரிசையில் தஞ்சம் புகுவது
உனக்கு பிடிக்கவில்லையெனவும்
சிக்குண்ட கூந்தலின் விரல் நுழைத்திருந்ததாய்…
வலி பொறுக்காது பின்னோக்கிப்போகையில்
உன் முதுகு சுவற்றில் படர்ந்தும்
என் முதுகு மார்பிலும் சாய்ந்திருந்தது
தலைதுவட்டுவதென விலகுகையில்
மூச்சுக்காற்றிலும் எஞ்சிய துளிகளை
பூத்துவாலையாலும் உலர்த்திக்கொண்டிருந்தாய்
இன்றோ
இறங்கும் பனியில் பொழியும் மழையில்
நீயின்றி எரிந்து கொண்டிருக்கிறேன் நான்!
அர்ஜுனுடனான வாக்குவாதங்களை முடித்து… மேக்சிமஸில் முதல் நாள் வேலையையும் முடித்து வீடு வந்து சேர்ந்தவளுக்கு களைப்பு உடலை அழுத்தியது… மணி எட்டை கடந்திருந்தது.
அதிலும் தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரை ஆக்டிவாவிலேயே பயணம் செய்து வருவதென்பது?
முதலிலெல்லாம் இது போன்ற பயணங்களை விரும்பி ஏற்பாள்… வீட்டிலிருந்து நினைவுகளிலிருந்து தப்பி செல்ல வேண்டுமென நினைக்கும் பொழுதுகளில் இது போன்ற பயணங்கள் உண்ணும் நேரத்தை அவள் பெரிதாக எண்ணுவதில்லை.
ஆனால் அவள் இப்போதிருந்த மனநிலையில் எப்போது அறையை தஞ்சமடைவோம்… தனிமை கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு இருந்தாள்.
முகம் கழுவி ப்ரெஷ்ஷாகி வந்தவளை பார்த்து ஆர்வமாக வந்தான் விவேக்.
“அக்கா… விவேக் இப்போ செம ஹேப்பி…” என்று அவளது கையை பற்றி கொண்ட சகோதரனை என்னவென்பதை போல பார்த்தாள்.
“சூப்பர் கம்பெனிக்கா மேக்சிமஸ்… செம இன்ப்ராஸ்ட்ரக்சர்… எனக்கு மட்டும் அங்கேயே பிளேஸ்மென்ட் கிடைச்சுட்டா… நான் ரொம்ப லக்கி…” விடாமல் பேசிக்கொண்டு போனவனின் வார்த்தைகள் அவளுக்குள் புன்னகையை பரவ செய்தது.
“ப்ராஜக்ட் எவ்வளவு நாள் விவேக்?” எத்தனையோ நாட்களுக்கு பிறகு கேள்வி கேட்பவளை ஆச்சரியமாக பார்த்தான்.
“மூன்று மாதம் க்கா…” ஆச்சரியம் அவனது குரலில் மிச்சமிருந்தது.
“இன்னும் ஒரு மாதம் எனக்கு அங்கதான் வேலை…” இயல்பான குரலில் கூறிவிட்டு அவனது முகத்தை பார்த்தவளுக்கு அவனது ஆச்சரியத்தில் விரிந்த கண்கள் புன்னகையை வரவைத்தன.
“வாவ்… நிஜமாக்கா?”
ஜெயந்தி கொண்டு வந்த தோசையை வாயில் திணித்து கொண்டவள் அவனை பார்த்து மெல்லிய புன்னகையோடு.
“நான் என்ன பொய்யா சொல்ல போறேன்?” என்று கேட்க.
“இன்னைக்கு உன்னை அங்க பார்க்கவே இல்லையே… தாம்பரம் ஹெட் ஆபீஸ் தானே?” ஆச்சரியத்தோடு கேள்வி கேட்க.
“தாம்பரம் தான்… ஏன் கேட்கற?”
“சரி… எம்டியை பார்த்தியா?” ஆர்வமாக அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு சிரிப்பு பொங்கியது!
“ஏன்டா அப்படி கேட்கற?” அவள் தனது கூட்டிலிருந்து வெளியே வந்து சகோதரனுடன் உரையாடி கொண்டிருப்பதை பார்த்த ஜெயந்திக்கு மகிழ்ச்சியாக இருந்தது! தோசையை அவளது தட்டில் போட்டவர் அவளையே சற்று ஊன்றி கவனிக்க எப்போதும் இல்லாத மகிழ்ச்சி அவளது முகத்தில்… !
“இல்லக்கா… ரெண்டு தடவை தான் அவரை பார்த்தேன்… அதுவும் ஜஸ்ட் கொஞ்ச நிமிஷம் தான்… ஆனா எப்படி இன்ஸ்பைர் ஆகிட்டேன் தெரியுமா?என்ன ஒரு பர்சனாலிட்டி… செம புத்திசாலிக்கா… அவர் கூட பேசிட்டு இருந்தா அவ்வளவு எனெர்ஜெட்டிக்கா இருக்கு…”
விவேக் அர்ஜுனை பற்றி இடைவெளி விடாமல் சிலாகிக்க… ஏதோ ஒரு விதத்தில் அவளுக்கு பெருமையாக இருந்தது.
இதே விவேக் அவர்கள் இருவரை பற்றிய உண்மைகளை அறிந்தால் என்ன சொல்வான் என்று ஒரு நொடி நினைத்து பார்த்தாள்.
“அப்படியா? இன்னைக்கு முழுக்க அவர் கூடத்தான் இருந்தேன் விவேக்…” ரகசியம் கூறுவது போல அவனை நோக்கி குனிந்து கொண்டு கூற… அவனது முகத்தில் வெளிப்படையான மகிழ்ச்சி தெரிந்தது.
“வாவ்… நிஜமாவா?” அவன் கண்களை விரித்த விதத்தில் அவளது முகம் புன்னகையில் மலர்ந்தது… சகோதரியின் புன்னகை முகத்தை பார்த்து வெகு நாட்களானதை உணர்ந்த விவேக்கின் மனதில் மகிழ்ச்சிப்பூ பூத்தது!
“நிஜமா இன்னைக்கு முழுக்க அர்ஜுன் கூட அவரோட ரூம்ல தான் ஒன்னா ஒர்க் பண்ணிட்டு இருந்தோம்… இன்னும் ஒரு மாதத்துக்கு அங்கதான் இருப்பேன்… அவங்களுக்கு எங்க கம்பெனி தான் சாப்ட்வேர் டெவெலப் செய்யறாங்க…” தம்பியின் காதருகில் ரகசியமாக கூற.
“சூப்பர் க்கா… சரி எங்க பாஸ் எப்படி?” அவன் காலரை தூக்கி விட்டு கொண்டு கேட்க… அவனது தலையை கலைத்து விட்டவள்.
“ப்ரொஜக்ட் தான் செய்யற… அதுக்குள்ளே பாஸா?” என்று சிரிக்க.
“ஒரு தடவை நான் முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்…” விஜய் போலவே கூற… அவளது புன்னகை விரிந்து வாய் விட்டு சிரிக்க துவங்கினாள்.
சமையலறையில் இருந்து இருவரையும் பார்த்து கொண்டிருந்த ஜெயந்திக்கும் அறையிலிருந்து வெளியே வந்து பார்த்த புருஷோத்தமனுக்கு அவளது சிரிப்பு வியப்பை அளித்தது.
ஐந்து வருடங்கள் பின்னான சிரிப்பு.
இத்தனை நாட்கள் அவள் மறந்து விட்ட சிரிப்பு.
இருவருக்குமே கண்கள் கலங்கியது… தொலைத்து விட்ட தங்கள் அன்பு மகளை மீட்டு கொடு கடவுளே என்று கடவுளை கெஞ்சாத நாளில்லை… காரணம் தாங்கள் தான் என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்ததால் மனம் குற்ற உணர்வில் தவித்து கொண்டிருந்தது… அந்த நேரத்தில் அவளது சிரிப்பு இருவரின் காதிலும் தேனை வார்க்க மனம் நெகிழ்ந்தனர்.
“அக்கா… எப்போவுமே இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கா… சிரிக்கும் போது தேவதையாட்டம் இருக்க…” அவளது சிரிப்பை பார்த்து ரசித்து கூறிய சகோதரனின் பாசமான வார்த்தைகளில் தன் சுய உணர்வுக்கு வந்தவள்… இந்த மகிழ்ச்சி எதனால் என்று புரிந்துதான் இருந்தது.
ஆனால் இது எத்தனை நாளைக்கு? ஒரு மாதம் மட்டுமே அவளது வேலையல்லவா… ! அதற்கு பின் டெவெலப்மென்ட் டீமிற்கு வேலை மாறுதாலாகி விடும்… அதன் பின் தனக்கு அங்கு என்ன வேலை?
அவன் அவனுடைய மனைவியோடு மகிழ்ச்சியாக இருக்கிறான்… அதை அவனது வாய் மூலமாகவே கேட்க பெற்றுமாயிற்று… இனி என்ன?
அவளது புன்னகை துணி கொண்டு துடைத்தது போலாகிவிட… நெஞ்சில் பாரம் ஏறியது! மீண்டும் அவள் தனது கூட்டுக்குள் ஒடுங்குவதை கண்டவனுக்கு மனம் பிசைந்தது.
“அக்கா… ஏன் இப்படி இருக்க?… உன்னோட கஷ்டம் தான் என்ன? வெளிப்படையா பேசுக்கா…” பாசமாக கேட்ட சகோதரனின் அக்கறையில் மனம் நெகிழ்ந்தது.
ஆனால் வாழ்கையை தொலைத்து விட்டதற்கு பின் அதை தேடி அலைந்தென்ன பயன்?
கசந்தது அவளுக்கு!
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்ரீமதி வீட்டினுள் நுழைய… அவளுக்கு பின்னே ஆர்ப்பாட்டமாக நுழைந்தான் அருண்… திருவொற்றியூரில் இருந்து வேளச்சேரிக்கு மாமியார் வீட்டுக்கு வரும் போதெல்லாம் ஒன்று அவனுக்கு ஊர் சுற்ற வேண்டும் இல்லையென்றால் வீட்டில் சட்டமாக அமர்ந்து கொண்டு மனைவியையும் மாமியாரையும் ஏவி வேலை வாங்கி கொண்டு ஸ்ரீநிதியை கேவலமாக பார்த்து கொண்டிருக்க வேண்டும்.
ஊர் சுற்ற விவேக்குடைய பைக்… இதில் கார் இல்லையென்ற நொட்டை வேறு.
“கல்யாணத்துக்கு நூறு பவுன் போட்டு காரும் கொடுக்கறதா தானே பேச்சு… நூறு பவுன் வந்தது… கார் எங்க போச்சு?” என்று அவனுடைய தாய் பத்மாவதி அவனுக்கு போட்டு கொடுக்க… அதை அப்படியே ஒவ்வொரு முறையும் பிரதிபலிப்பான்.
“கண்டிப்பா வாங்கி தந்துடறேன் மாப்பிள்ளை… ஆபீஸ்ல லோன் கேட்டு இருக்கேன்… சாங்க்ஷன் ஆனவுடனே கண்டிப்பா செய்துடறேன்…” புருஷோத்தமன் மரியாதையாக கூறுவதெல்லாம் அவனது காதில் ஏறவே ஏறாது!
விவேக்கோ பின்னாலிருந்து கொண்டு.
“ஆமா இந்த மொகறைகட்டைக்கு நூறும் காரும் கேக்குதாக்கும்… இவன் என்ன சம்பாதிக்கறான்னு அப்பா கேட்கவே மாட்டேங்கறாங்க… என்னை விட்டா நல்லா நாலு கேள்வி கேட்பேன்…” என்று ஜெயந்தியிடம் புகைந்து கொண்டிருப்பான்… அவரும் அவனை எப்படி அடக்குவது என்று தெரியாமல் விழிப்பார்!
அதே போல இன்றும் ஆரம்பித்தான் அருண்.
“ச்சே… பைக்ல போறது எவ்வளவு கஷ்டமா இருக்கு… கார் வாங்கி தரேன்னு சொல்லி சொல்லியே ஏமாத்திட்டு இருக்காங்க…” தனக்குள் கூறிக்கொள்வதாக சொல்லி சப்தமாக கூறியவனின் தொனியில் எப்போதும் போல எரிச்சலடைந்தான் விவேக்.
“மாமா… இந்த ட்ராபிக்குக்கு பைக் தான் பெஸ்ட்… கார்ல போனா ரொம்ப கஷ்டம்…” நேரடியாக அவனிடம் கேட்காமல் சுற்றி வளைத்து அருணிடம் கூறிய விவேக்கை கண்டன பார்வை பார்த்தான்.
“எது பெஸ்ட் எது பெஸ்ட் இல்லைன்னு எனக்கு தெரியும்… உன்னோட யோசனை இங்க தேவையில்லை…” காட்டமாக கூறியவனை முறைத்தான் விவேக்.
ஸ்ரீமதி தவிப்பாக பார்த்தாள்!வார்த்தை தடித்து விட்டால் என்னாவது என்ற கவலை.
பொதுவாக திருமணமாகி புகுந்த வீட்டிற்கு போகும் அனைத்து பெண்களுக்கும் உண்டான கவலை தான்… கணவனுக்கு பிறந்த வீட்டில் மதிப்பும் மரியாதையும் இருக்க வேண்டும்… கணவனும் தன் பிறந்த வீட்டு சொந்தங்களை மதிக்க வேண்டும் என்ற கவலை எப்போதும் இருக்கும்.
தப்புக்கு ஒரு பக்கம் தான் இடி… மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி என்று கிராமப்புறங்களில் ஒரு சொல்லாடல் இருக்கும்… அது போன்றதொரு நிலை தான் இது போன்ற கணவன் அமைந்த பெண்களுக்கும்.
“விவேக் பேசாம இரேன்…” அவனிடம் கெஞ்சிய ஸ்ரீமதியை முறைத்தவன் ஸ்ரீநிதியை பார்த்தான்… அவளுமே கோபத்தோடு அமர்ந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் மேலும் வார்தைகளை விட்டால் அதை கொண்டே அருண் பிரச்சனையை வளர்த்த கூடும் என்பதை உணர்ந்தான்.
“மதிக்கா… நீ இப்படியே இரு… ரொம்ப சிறப்பா இருப்ப…” என்று அவளுக்கு மட்டுமே கேட்குமாறு கடுகடுத்தவனை அருண் அவனது வார்த்தைகளால் பொறுமையிழக்க செய்து கொண்டிருந்தான்.






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!