arrow_back
கலாப காதலா அத்தியாயம் 8
கலாப காதலா chevron_right பகுதி 8 / 24

அத்தியாயம் 8

visibility 562
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

உனக்குத்தெரியுமா?

வாசல் நடையில்

செருப்பினை கழற்றிவிடுகையில்

உன் தோள்பற்ற நினைத்தோ

உன் பெயரை சொல்லியோ

ஏதேனும் பேசிவிடுகிறேன்…

தாழிட்ட கதவை

நான் தான் திறக்கவேண்டும்

என்பதையும் மறந்து…

உனக்கு ஞாபகமிருக்கிறதா?

மணமுடித்த மூன்றாம்நாள்

முத்தமிட நெருங்கி

வாசல் நிலைக்கு முத்தமிட்டாய்…

இராத்திரி கவனித்துக்கொள்வதாய்

பொய் கோபம் கொண்டு

கன்னம்கிள்ளி வெளியேறினாய்….

நீ முத்தமிட்ட வாசல் நிலையில்

கன்னம் வைத்துப்பார்க்கிறேன்

பசையேயில்லை இன்று!

“மாப்பிள்ளை… இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு… சரி போன காரியம் என்ன ஆச்சு? டாக்டர் என்ன சொன்னாங்க?” ஜெயந்தி சமாதானமாக பேச முயல… ஸ்ரீமதியை முறைத்தவன்.

“என்ன சொல்றது? டெஸ்ட் எல்லாம் எடுத்து இருக்காங்க… பணத்தை கட்டிட்டு வந்துட்டோம்… என்ன ரிசல்ட் வருதுங்கிறதை பொறுத்துதான் உங்க பொண்ணோட நான் வாழறதும் வாழாம போறதும்… அதை புரிஞ்சுக்கோங்க… ரிசல்ட் நெகடிவா வந்தா எங்க அம்மா சும்மா இருக்க மாட்டாங்க…” வார்த்தைகளில் விஷம் தடவி கொண்டு பேசியவனின் தோரணையில் கொதித்தது விவேக்குக்கு!

“அப்படி ஒன்னும் எங்கக்கா வாழனும்ன்னு அவசியம் இல்ல… அவ இங்கயே இருக்கட்டும்… நாங்க கொடுத்த பணம் நகை எல்லாத்தையும் கொண்டு வந்து கொடுத்துட்டு நீங்க கிளம்புங்க…” மனம் தாளாமல் விவேக் கூறிவிட… ஸ்ரீமதி அதிர்ந்து அவனை பார்த்தாள்… கண்களிலிருந்து கண்ணீர் அவளையும் அறியாமல்!

அவளது கண்ணீரை பார்த்த ஜெயந்திக்கு விவேக் மேல் கோபம் வந்தது… இவனுக்கு என்ன தெரியுமென்று பேசுகிறான் என்ற கோபம்… அதே கோபம் தான் புருஷோத்தமனுக்கும்.

“விவேக்க்க்க்க்…” சப்தமிட்ட அன்னையை பரிதாப பார்வை பார்த்தான் விவேக்… அருணை போன்ற நரிகள் கொட்டமடிப்பதே இவர்களை போன்ற ஏமாளிகளால் தானே என்ற உண்மை அவனுக்கும் தெரியும்.

விவேக்கின் வார்த்தைகளை கேட்டவனுக்கு இனி என்ன சொல்லி மிரட்டுவது என்று புரியாமல் குழப்பமாக நின்றான்… ஆபத்பாந்தவியாக தனக்காவே தன்னுடைய மாமியார் பேச ஆரம்பிக்க… ஷப்பா என்று பெருமூச்சு விட்டான்.

“சாரி மாப்பிள்ளை… பையன் தெரியாம பேசிட்டான்… நீங்க கோவுச்சுக்காதீங்க…” என்று நிறுத்திய புருஷோத்தமன்… அருகில் அழ தயாராக நின்றிருந்த இரண்டாவது மகளை அழைத்து.

“மதி… மாப்பிள்ளையை உள்ள கூட்டிட்டு போம்மா…” என்று சமாதானப்படுத்த.

“இந்த பேச்செல்லாம் வேண்டாம்… எனக்கு எப்ப கார் வரும்… அதை முதல்ல சொல்லுங்க… அப்புறம் உள்ள போறதா வெளிய போறதான்னு பார்க்கலாம்…” சிறிதும் ஈரமில்லாமல் கேட்டு கொண்டிருந்தவனை வெறுப்பாக பார்த்தாள் ஸ்ரீநிதி… அதே உணர்வோடு நின்றிருந்தான் விவேக்!

“கார் தானே… வாங்கி தந்துடறோம்…” அதுவரை பேசாமல் அமர்ந்திருந்த ஸ்ரீநிதி கூறவும் சந்தோஷமாக அவளை பார்த்தான்.

அவள் ஒரு பொன் முட்டையிடும் வாத்து!

படிப்பை முடிக்காமல் அழகுக்காக தான் திருமணம் செய்த ஸ்ரீமதியை விட இவள் நல்ல சாய்ஸ் என்று நினைத்து கொண்டான்… ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லையே… !

ஸ்ரீமதியின் முகத்தில் கலக்கம்.

“நீ நினைச்சா கண்டிப்பா வாங்கி கொடுக்கலாம் ஸ்ரீநிதி…” வாயெல்லாம் பல்லாக அவளிடம் வழிந்தவனை பார்த்து எரிச்சலாக இருந்தது விவேக்குக்கு.

“இவனுக்கு எதற்காக வாங்கி தர வேண்டும்?” என்று கோபமாக அவளை பார்க்க… அவளோ நிதானமாக.

“முதல்ல சர் என்ன சம்பாதிக்கறீங்கன்னு சொல்லுங்க… உங்க மாத வருமானம் எவ்வளவு… நீங்க சம்பாரிச்ச சொத்து எவ்வளவுன்னு ஒரு ரிப்போர்ட் கொடுங்க… அப்புறம் நம்ம ரேஞ்சுக்கு சாதாரண கார் எதுக்கு?… ஆடி பிஎம்டபிள்யூன்னு சூப்பர் காரே வாங்கி தந்துடலாம்…”

ஒவ்வொரு வார்த்தையாக அவள் கூற… விவேக்குக்கு விசிலடிக்கலாம் போல இருந்தது… பெற்றோரின் இருண்டு கிடந்த முகத்தை பார்த்து தன்னை அடக்கி கொண்டான்… ஆனாலும் அருணை அப்படியே விட மனமில்லை.

“என்ன மாமா… எங்க அக்கா கேட்ட ரிப்போட்ட இந்த கைல கொடுங்க… ஆடி கார் சாவிய அந்த கைல வாங்கிட்டு போங்க…” கிண்டலாக கூறியவனையும்… அவமானப்படுத்திய ஸ்ரீநிதியையும் முறைத்து பார்த்து விட்டு வெளியேறினான்.

“என்னைக்காவது ஒரு நாள் என் கைல மாட்ட தான்டி போற… அன்னைக்கு உன்னோட கதி என்னாகபோகுதுன்னு பாரு…” மனதுக்குள் கறுவி கொண்டவனை இருவரும் அலட்சியமாக பார்த்தனர்… மற்றவர்களின் முகத்தில் கலக்கம்!

******

அழுது கொண்டிருந்த ஸ்ரீமதியை பெற்றோர் இருவரும் சமாதானப்படுத்தி கொண்டிருக்க ஸ்ரீநிதி படுக்கையை தஞ்சமடைந்திருந்தாள்.

இது போன்ற புல்லுருவிகளை வளர்த்து விடுவதே ஸ்ரீமதியை போன்ற பேசாமடந்தைகள் தான் என்று கொதித்தது மனம்!

கணவன் தவறு செய்தால் சொல்லி திருத்த வேண்டும்… இல்லையென்றால் என்ன செய்தால் திருந்துவானோ அதை கையாள வேண்டும்… அது தான் நல்ல மனைவிக்கு அழகு… அதை விடுத்து அவன் ஆட்டுவிக்கிறபடி ஆடுவது என்பது அவளது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் ஒன்றல்லவா.

ஸ்ரீநிதிக்கு ஒரு புறம் தங்கையை நினைத்து வருத்தமாக இருந்தாலும் மறுபுறத்தில் காலை முதல் பார்த்து கொண்டிருந்த அர்ஜுனின் முகமே வந்து போனது.

அவனை நினைக்க தனக்கு உரிமையில்லை என்றாலும் அந்த வலி கூட சுகமானது தான் என்று உணர்ந்து கொண்டிருந்தாள்… நெருங்கிய அந்த கைகள் தனக்கானது அல்ல… அந்த முகமும் மனமும் தன்னை கடந்து சென்று சென்று நாட்களாகி விட்டதே… மனதிற்கு இதமான உணர்வில் திளைக்கும் போதே உரிமையில்லாததை நினைத்து மனம் கசிந்தது.

நிலையில்லாத உணர்வலைகளில் தவித்து கொண்டிருக்கும் போதே செல்பேசி அழைத்தது… யார் இந்த நேரத்தில் அழைப்பது என்று நினைத்து கொண்டே செல்பேசியை எடுக்க.

“ஹாய் டெடி…” கிசுகிசுப்பாக அழைக்கும் குரல் வேறு யாருடையதாக இருக்க முடியும்?

“என்ன இந்த நேரத்தில் அர்ஜுன்?” அவனது அழைப்பை அவள் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது குரல் உணர்த்தினாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் அவன் இல்லையே.

“ஏன் இந்த நேரத்தில் கூப்பிட்டா உன் வீட்டுக்காரனுக்கு கோபம் வருமா?” நக்கலான குரலில் அவன் கேட்க.

“யாரா இருந்தாலும் வரும்…” கடுகடுவெனவே அவளும் பதில் கொடுக்க.

“பரவால்லை… வரட்டும்…” அடக்கப்பட்ட சிரிப்போடு அவன் கூற.

“அர்ஜுன்ன்ன்ன்…” கோபமாக அழைத்தவள்…”ஏன் இந்த நேரத்தில் உன் ஒய்ப் என்ன பண்றா? உன்னை என்னோட பேச விட்டுட்டு?”

“ம்ம்ம்… நீ என்ன பண்ற?” அவளது கேள்விக்கு பதில் கூறாமல் திரும்ப அவனொரு கேள்வி கேட்டு வைக்க… அவளுக்கு சற்று எரிச்சலாக இருந்தது… அந்த எரிச்சல் அவனது மனைவியை நினைத்து என்பதை அவளே உணரவில்லை.

“ம்ம்ம்ம்… படுத்துட்டு இருக்கேன்… தூங்க போறேன்…” கோபம் குரலில் எட்டி பார்த்தது.

“அவளும் அதையே தான் பண்ணிட்டு இருக்கா…” அவனது குரலில் வழிந்தோடிய குறும்பை அந்த நிலையிலும் அவளுக்கு ரசிக்க தோன்றியது.

“சரி இப்போ என்னதான் சொல்ல வர்ற?”

“அந்த ப்ராஜக்ட் பற்றி உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணனும் டெடி…” அவன் கூறிய காரணம் அவனுக்கே சிரிப்பை வரவழைத்தது.

“வாட் ப்ராஜக்ட்டா? லூசா நீ? அதை நாளைக்கு உன் ஆபீஸ்க்கு நான் வரும் போது டிஸ்கஸ் பண்ணிக்கலாம்… இப்போ என்னால் பேச முடியாது… நீ வை போனை…”

“இப்போ எதுக்கு இப்படி பறக்கற? போய் உன் புருஷனை கொஞ்சனுமா?”

“ஆமா… அதுக்கென்ன இப்போ? ரொம்ப அதிகமா பேசற அர்ஜுன்…” அவளது குரலில் கோபம் சற்று அதிகமாக தெறித்ததை உணர்ந்தவனுக்கு அதற்கும் மேல் அவளை சீண்ட முடியவில்லை.

“ஆமா டெடி அதிகமா பேசறேன்… ஏன்னா நான் அதிகமா இழந்திருக்கேன்… ரொம்ப அதிகமா நான் இழந்திருக்கேன்… என்னோட வாழ்க்கையையே இழந்திருக்கேன்…” குரலில் அடக்கப்பட்ட வலி மிக வலிந்து தெரிய,

“அர்ஜுன்…” ஸ்ரீநிதிக்கு குரல் வெளியே வருவேனா என்றது! அவளுக்குமே அதே நிலை தானே!

“எஸ் டெடி… ஐ மீன் இட்…”

“ப்ளீஸ் அர்ஜுன்… வேண்டாம்… உனக்கு நல்ல பேமிலி இருக்கு… அதை ஸ்பாயில் பண்ணிக்காதே…”

அது அவனிடம் அவள் வைத்த வேண்டுகோளா அல்லது தனக்கு தானே வேலியிட முயன்றவளின் வார்த்தைகளா என்பது அவளுக்கே புரியவில்லை… ஆனால் இந்த உறவுநிலை தொடர்வது என்பது தவறு என்று மட்டும் அவளது அறிவு பிடிவாதமாக உரைத்தது!

“ஏன் உனக்கு இல்லையா?” அர்ஜுன் கேட்ட கேள்வியில் அவளது கண்களில் கண்ணீர் சூழ பார்க்க… நெஞ்சை அடைத்தது.

அவளது தடைகளையெல்லாம் உடைத்து விட்டு அவனது மடியில் படுத்து கதற வேண்டும் போல இருந்தது… ஆனால் அதை செய்ய முடியுமா? அதற்கு அவளது மனைவி ஒப்புகொள்வாளா?

முன்னாள் காதலியாக கூட வேண்டாம்… நண்பியாக? அவளது உள்ளத்தில் கொதித்து கொண்டிருந்த உணர்வுகளை எப்படி அடக்குவது என்று அவளுக்கு புரியவில்லை… ஆனால் அப்படி தனது உணர்வுகளை வெளிப்படுத்திவிட்டால் ஒரு குடும்பம் குலைய தானே காரணமாகி விடுவோமே.

அவளுக்கு துக்கம் பீறிட்டு எழ… உள்ளுக்குள் இருந்து பந்து ஒன்று உருண்டு வந்து தொண்டையை அடைத்தது… குரல் தழுதழுக்க… வார்த்தைகளை தேடினாள்.

கிடைப்பேனா என்று கண்ணாமூச்சி காட்டியது!

“எனக்கும் இருக்காங்க… உனக்கும் இருக்காங்க அர்ஜுன்… ப்ளீஸ்… வேண்டாம் மறந்துடு…” அவளையும் மீறி குரல் உடைய பார்க்க.

“எதைடி மறக்க சொல்ற? எனக்காக நீ உனக்காக நான்னு வசனம் பேசி என்னை ஏமாற்றிட்டு போனாயே அதை மறக்க சொல்றியா? எனக்காக உயிரை கூட குடுப்பேன்னு சொன்னாயே அதை மறக்க சொல்றியா? உனக்காக நான் என்னையே மறந்துட்டு வெறி பிடிச்ச மாதிரி திரிஞ்சேனே அதை மறக்க சொல்றியா? எதையுமே மறக்க முடியலடி… முடியல…”

கோபமாக கத்த ஆரம்பித்து குரலில் கனம் கூடி முடித்தவனை என்ன சொல்வது?

அவனது வார்த்தைகளில் அனல் கொட்டியது!அவளால் பதில் பேச முடியவில்லை… அனைத்தும் உண்மையல்லவா.

“ஓகே… சரி பேசு… என்ன வேண்டுமானாலும் பேசு… ஆனா இப்போ வேண்டாம்… ப்ளீஸ்…”

“ஏன்?திருட்டுத்தனம் பண்ண சொல்றியா?” ஒரு மாதிரியான குரலில் அவன் கேட்டுவிட.

“அர்ஜுன்…” அவளது நெஞ்சம் அதிர்ந்தது! அவனது மனைவி அவனை தவறாக எண்ணிவிட்டால் என்னாவது என்ற ஆற்றாமையில் மட்டுமே அவள் கூறியது.

“பின்ன… வேறென்ன சொல்றதுடி? அப்போ நமக்கு காதலா தெரிஞ்சது,இப்போ அதுக்கு பெயர் என்ன தெரியுமா?” வெகு காட்டமான குரலில் அவன் கேட்க.

“அர்ஜுன் வேண்டாம்… இந்த மாதிரியான வார்த்தைகளை உன்கிட்ட இருந்தது நான் கேட்க வேண்டாம்…”

“நான் இந்தளவு மாறினதுக்கு காரணமே நீ தான்டி… அதை சொல்லி முடிச்சுடறேன்… கேளு…” என்றவன் அதே வெப்பத்தோடு…”கள்ளகாதல்…” சற்று இறங்கிய தொனியில் முடிக்க… அவளால் அதை சற்றும் ஏற்க முடியவில்லை.

“அர்ஜுன்ன்ன்ன்… நிறுத்து…” கோபத்தோடு அவள் கத்தினாலும் அதற்கும் மேல் கோபமாக இருந்தான் அர்ஜுன்.

“காரணம் யாருடி? நானா? பதில் சொல்லு ஸ்ரீநிதி… நானா காரணம்? உயிருக்கு உயிரா நீயே தான் எல்லாம்ன்னு நினைச்ச என்னை விட்டுட்டு போனது நீதான்டி… பைத்தியம் மாதிரி என்னை அலைய வைத்தது நீதானே…” என்று கோபமாக செல்பேசியிலேயே கத்தியவன்,இடைவெளி விட்டு குரலை சற்று இறக்கி,

“ஏன்டி என்னை விட்டுட்டு போன? எதுக்காக போன? போராட முடியலைன்னு சொல்லாதே… உனக்கும் சேர்த்து நான் போராட தயாரா இருந்தேன்… ஆனா எவ்வளவு ஈசியா என்னை விட்டுட்டு போய்ட்ட?”

“அர்ஜுன்ன்ன்… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்… என்னை கொல்லாதே…” கண்களில் கண்ணீரோடு கதற துவங்கி இருந்தாள்!

“கொல்றதா? அதற்கு நான் உயிரோட இருக்கணுமே… என்னோட உயிர் என்னை விட்டு போய் அஞ்சு வருஷம் ஆகிடுச்சு… இப்போ இருப்பது வெறும் கூடு மட்டும் தான்…” அவனது கண்களிலும் கண்ணீர் அவனையும் அறியாமல்!

“போனதை மாற்ற முடியாது அர்ஜுன்… இனிமே வாழற வாழ்க்கைய நல்லபடியா அமைச்சுக்கறது நம்ம கைல இருக்குப்பா…” அவனை எப்படியாவது சமாதானப்படுத்திவிட்டால் போதுமென்று நினைத்தாள் ஸ்ரீநிதி.

“இப்படி சொல்லி என்னை மறுபடியும் கைகழுவ பார்க்கறியா டெடி?” ஒரு மாதிரியான குரலில் கேட்க.

“சரி… என்னை என்னதான் செய்ய சொல்ற? அதை சொல்லு…” அவனிடம் எப்படித்தான் பேசி சமாதானப்படுத்துவது என்று அவளுக்கு தெரியவில்லை.

“உன்னால எல்லாத்தையும் விட்டுட்டு என்கிட்டே வந்துட முடியுமா?” வெகு இயல்பாக அவன் வெடிகுண்டை அவளது இதயத்தில் போட, ஆதி முதல் அந்தம் வரை ஆடிப்போனது ஸ்ரீநிதிக்கு!

“அர்ஜுன்ன்ன்ன்…” வார்த்தை வெளிவராமல் சதி செய்ய,

“நீயும் உன் குடும்பத்தை விட்டுட்டு வா… நானும் என் குடும்பத்தை விட்டுட்டு வந்துடறேன்… என்ன சொல்ற?” சற்றும் இரக்கமில்லாமல் அவன் கேட்க.

“அர்ஜுன்… நீ சொல்றது ரொம்ப தப்பு…” அவனது வார்த்தைகளை நம்ப முடியாமல் திணறினாள்!

“ஆனா அதுல ஒரு விஷயம் என்னனா… அடுத்த நாள் தினத்தந்தி தினமலர்ல எல்லாம் எப்படி நியுஸ் வரும் தெரியுமா?” என்று இடைவெளி விட்டவன், குரலில் அதீத வலியை தேக்கி வைத்து கொண்டு,

“கள்ளக்காதலர்கள் ஓட்டம்…” ஒரு மாதிரியான குரலில் அவன் கூற… அவளால் தாள முடியாமல் வெடித்து அழுதாள்.

என்ன வார்த்தை கூறிவிட்டான்! கள்ளகாதலா?அதன் அர்த்தம் புரிந்துதான் கூறினானா? மனதில் பொத்தி வைத்து பாதுகாத்த காதல் இப்போது கள்ள காதலா?

அப்போது நல்ல காதலாக இருந்தது இப்போது எப்படி கள்ள காதலாக மாறியது?

மேற்கொண்டு எதையும் பேசாமல் தொடர்பை துண்டித்தவளுக்கு அழுகை பொங்கியது… கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் கொட்ட… தனது எதிர்காலமே இருண்டு கிடக்கும் கோலத்தை நினைத்து… கடந்தகாலத்தின் எச்சங்கள் தன்னை துரத்துவதை நினைத்து அழுது கொண்டே இருக்க… அர்ஜுன் திரும்பவும் அழைத்து கொண்டே இருந்தான்.

அவளால் அந்த அழைப்புகளை ஏற்று பேச முடியவில்லை… ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு செல்பேசியையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு மனமெங்கும் வலி!

ரத்தம் சொட்ட சொட்ட அடிபட்ட வேதனை அவளது மனமெங்கும் பரவியது!

*****

செல்பேசியை வெறித்து பார்த்து கொண்டிருந்த அர்ஜுனுக்குள் கோபமும் எரிச்சலும் ஆற்றாமையும் போட்டி போட்டு கொண்டு அவனை தின்று தீர்த்து கொண்டிருந்தன… அழைப்பை எடுக்காத ஸ்ரீநிதியின் மேல் கரை காணாத கோபம்!… ஆனாலும் அவனது வார்த்தைகள் தவறானதல்லவா..!

அந்த ஒரு காரணத்தால் மட்டுமே அவன் தவித்து அவளை மீண்டும் அழைத்தான்.

காலம் கடந்து விட்டாலும் அவளுடனான அந்த காதலையும் மறக்க முடியவில்லை… அது தோல்வியில் முடிந்ததையும் மறக்க முடியவில்லை… அதன் வலிகள் இப்போதும் ஆறாத பச்சை ரணமாய்.

அந்த ரணத்தின் எதிர்வினையாகத்தான் இது போன்ற வார்த்தையினை அவன் விட்டு விட்டது என்று அவனாக கூறிக்கொண்டாலும்… அவள் மீதான ஏக்கங்கள் இப்போதும் மாறாமல் அவனை வாட்டி கொண்டிருக்கிறதே!

எங்கிருந்தாலும் வாழ்க என பாடி விட்டு செல்ல அவன் என்ன கையாலாகதவனா?

அவளை எப்படியெல்லாம் மகாராணியாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்… அவளுக்காக ஏங்கி… அவளை நினைத்தே தூங்கி… அவளுடைய நினைவிலேயே வாழ்ந்த அந்த நாட்கள்… எத்தனை பசுமையானது… சந்தோஷமானது!

காதல் ஒரு தெய்வீக அனுபவம்.

உண்மைதான்.

இப்போது வலித்தாலும் நினைக்கும் போதெல்லாம் சுகமாக வருடி கொடுப்பது அவளது காதல் அன்றி வேறேது?

வாழ்கையில் எத்தனை பேரை கடந்து வந்திருந்தாலும் அவளது பெயர் இனித்தது போல எந்த பெயரும் இனித்ததில்லையே… !

அது நிறைவேறாத காதலாகி இருந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு மூலையில் போய் பதுங்கி கொள்ளாமல் தன்னை அரூபமாய் இயக்கியதே அவளது காதல் தானே!

வெளியுலகத்தில் தான் என்னவாக வேண்டுமானாலும் இருக்கக்கூடும்… யாருக்கு வேண்டுமானாலும் என்ன உறவில் வேண்டுமானாலும் இருக்க கூடும் ஆனால் மனதின் ரகசிய அறையில் இத்தனை காலமாக கொலு வீற்றிருந்தவள் அவள் மட்டுமே!

தான் முதன் முதலாக அவளை சந்தித்த அந்த நாளை நினைத்து பார்த்தான் அந்த காதலன்… அவனையும் அறியாமல் உடல் சிலிர்த்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 9

இன்று உனதுஉள்ளங்கை கதகதப்பில் கூடகுளிர் காயபக்கத்தில் நீயின்றிநாட்குறிப்பெழுதும்டைரியின் பக்கங்களாகிபோனாய் நீ!ஆறாவது முறையாக ஈஸ்வரன் அவனை அழைத்திருந்தார்.அவன் அர்ஜுன்... அவரது செல்ல பேரன்.ஈஸ்வரனின் மகள் வயிற்று பேரன் அர்ஜுன்... திருச்சியை அடுத்த குளித்தலை அவர்களது சொந்த ஊர்... அர்ஜுனின் சிறுவயதில் குடும்பமாக சென்ற…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்