அத்தியாயம் பத்து
“மேலும் மேலும் தப்பு செய்யாதுகிட்டே போறீங்க சசி…” கோபமாக கௌதம் கூறுவதை கேட்ட சசி சிரித்து
“கௌதம்… நீங்க அங்க தான் இருக்கீங்களா? பரவால்லையே!” நக்கலாக சிரித்து கொண்டு மேகாவை பார்த்தான்! அவள் முகத்தில் ஒரு சிறு ஒளி கீற்று!
“சசி எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்… இப்போ மேகாவ விட்ரு…” முடிந்த அளவு பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு பேசினான்!
“எங்க விட சொல்றீங்க கௌதம்… காமாத்திபுரால தானே… கண்டிப்பா அவர் பொண்ண அங்க தான் தேடனும்…”
“சசி… மேகாவுக்கு எதாச்சும் ஒண்ணுன்னா நான் உன்னை சும்மா விட மாட்டேன்…” கோபத்தில் கொதித்தான் கௌதம்!
“அதையும் தான் பார்க்கலாம் கௌதம்… இனிமே தானே பார்க்க போறான் அந்த கணபதி என் விளையாட்ட…” என்று சொல்லி விட்டு போனை வைத்தான் சசிதரன்!
முகம் சிவக்க அந்த தொலைபெசியையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தவன் முகத்தை மூடி கொண்டு அழுது கொண்டிருந்த கணபதியையும் அவரது மனைவியையும் பார்த்து
“நீங்க கவலை படாதீங்க சார்… மேகாவ பத்திரமா கூட்டிட்டு வரது என் பொறுப்பு…”
“எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல தம்பி…” என்று பேசிகொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்தனர் சிலர்! அதிரடியாக உள்ளே நுழைந்த அவர்கள் போன் தொடர்பை துண்டித்து விட்டு
“நாங்க சிஙிமி ல இருந்து வர்றோம்… நீங்க டியூட்டி கட்டாம கடத்தல் தங்கம் கடத்தறதா எங்களுக்கு இன்பர்மேஷன் வந்து இருக்கு… நாங்க உங்க வீட்ட செக் பண்ண வந்துருக்கோம்… இதோ எங்க ஐடன்டி கார்டு…” என்று கணபதியிடம் ஒருவர் குடுத்து விட்டு தேட ஆரம்பிக்க… இன்னொருவர்
“யார் நீங்க? வீட்டு ஆளுங்க தவிர வேற யாரும் இருக்க கூடாது… ம்ம்ம் கிளம்புங்க…” அவசரபடுத்தினார்!
“ஓகே சார்… நான் பார்த்துக்கறேன்… இன்போர்ம் பண்றேன் சார்…” என்று கணபதியிடம் உறுதி மொழிந்து விட்டு கிளம்பினான்!
வெளியே வந்து லைனிலேயே இருந்த அர்ஜுனை அழைத்தான்!
“அர்ஜுன்… மேகா நம்பரும் அந்த சசி நம்பரும் இருக்கு… அதை வெச்சு இடத்த ட்ரேஸ் அவுட் பண்ண முடியுமா?”
“இத தான் நானும் நினைச்சுட்டு இருந்தேன் கௌதம்… அந்த சிம்ம வெளிய எடுத்து இருந்தா கண்டுபிடிக்கறது கஷ்டம்… ஆனா நீ நம்பர அனுப்பி விடு… வேற மெதட்ஸ்ல ட்ரை பண்ணலாம்… அப்புறம் கௌதம் அந்த சசி கிட்ட ஸ்மார்ட் போன் பார்த்த மாதிரி ஞாபகம்… கரெக்டா?”
“ஆமா அர்ஜுன்? ஓகே டா… இன்னும் பத்து நிமிஷத்துல பிளைட் ஒன்னு இருக்காம் மும்பைக்கு… அங்க வந்துட்டு பேசறேன்…”
“ஓகே சீக்கிரம்… கௌதம் ஒரு நிமிஷம்…”
“என்னடா மச்சான்?”
“சப்போஸ் மேகாவுக்கு எதுனா… இன் கேஸ்… ஆச்சுன்னா… உன்னோட ரியாக்ஷன் என்ன?”
“நான் அத பத்தி நினைக்க கூட இல்லை அர்ஜுன்… எப்படி இருந்தாலும் அவ மேகா தானே… ரோடு ல போகும் போது நமக்கு விபத்து நடக்கறது இல்லையா? அது மாதிரிதானே… ஓகே லேட் ஆச்சு டா… வந்துடறேன்…”
***
சசி பேசியதை கேட்ட மேகா வார்த்தைகளை தேடி களைத்து போனாள்! ஒரு நாள் முன்பு வரை தன்னுடைய உயிராக இருந்தவன் இன்று தனது உயிரினும் மேலான கற்பை காவு கேட்பானா? கேட்கிறானே… அதையும் அவன் தன் வாய்மொழியாகவே கூறி விட்டானே!
வாழ்வின் கொடூரங்களில் ஒன்று… தன்னுடைய உயிரினும் மேலான உறவுகள் பொய்த்து போவதுதான்! அதற்கு தான் விவேகானந்தர் சொல்வார்… வாழ்க்கையில் நாம் தாமரை இலை தண்ணீர் போல இருக்க வேண்டும் என்று… அதாவது உறவுகளோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் நிலை! அப்படி இருக்கும் பட்சத்தில் நம்மால் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு சுலபமாக தீர்வு காண முடியும் என்பதோடு பின்னாளில் பிரிகின்ற நிலை வந்தால் மனம் கவலையுறாது என்பதற்காக சொல்லப்பட்டது இது.
இருண்ட பக்கத்தின் பால் இருந்த மேகா… அந்த நொடியில் முடிவு செய்தாள்! போராடித்தான் பார்ப்போமே! வென்றால் உயிர் தனக்கு மிச்சம்… தோற்றால் அவனுக்கு மிச்சம்.
“சசி விளையாடாதீங்க…” முயன்றவரை கடுமையாக முகத்தை வைத்து கொண்டு எச்சரித்தாள்! அதற்கு அவன் எதுவும் பேசாமல் பக்கத்தில் வரவும் அவளுக்கு கோபத்தோடு சேர்ந்து அழுகையும் வெடிக்க பார்த்தது.
“உன்னை என்னோட உயிரா நினைச்சேனேடா… இந்த மாதிரி நான் நாசமாகறதுக்காகவா?”
ஆனால் அவள் கேட்கும் எதற்கும் அவன் தான் பதில் கூறும் நிலையில் இல்லை! செய்வது மிக பெரிய தவறு என்பதை அவன் உணராமலும் இல்லை.
“சாரி மேகி… எனக்கு வேற வழி தெரியல…” என்றவனை வெறுமையாக பார்த்துவிட்டு ஆத்திரம் தாளாமல் கொத்தாக அவனது சட்டையை பிடித்தாள்!
“என்னடா சாரி… என்ன சாரி… நீ இப்படி செஞ்சு உன் பழிய தீர்க்க நினைக்கிறியே… நீயெல்லாம் மனுஷனா இல்ல மிருகமா… மிருகங்க கூட தன்னை நம்பி வந்த தன்னோட இணைக்கு இப்படி துரோகம் பண்ணாது, … நீ செய்றது மன்னிக்க முடியாத குற்றம்… வெட்கபடுறேன்… உன்னை காதலிச்சதுக்கு வெட்கபடுறேன்டா… உன் முகத்துல விழிக்கவே எனக்கு பிடிக்கல… வேணாம் நீ வேணாம்… எனக்கு நீ வேணாம்?” அதீத கோபத்தில் கத்தி விட்டு உடைந்து போய் கதற ஆரம்பித்தாள்! மெதுவாக அவளது கையை விடுவித்து கொண்டு விலக போனவன் ஒரு நிமிடம் கோபத்தில் கொதித்து கொண்டிருந்த அவளது முகத்தை கூர்ந்து பார்த்தான்!
“வேற எந்த வழிய வேணும்னாலும் யூஸ் பண்ணி இருக்கலாமே சசி… அதுக்கு என்னோட பாவப்பட்ட காதல் தான் கிடைச்சுதா… என்னால தாங்க முடியலையே… ஏன்டா என்கிட்டே பொய் சொன்ன? ஏன்டா என்கிட்டே பொய் சொன்ன?” என்று அவனை இழுத்து அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து சரிந்து உட்கார்ந்து கதற ஆரம்பித்தாள்!
வெளியே கல்லொன்று நிற்பது போல காட்டிகொன்டாலும் உள்ளே சுக்கல் சுக்கலாக உடைந்து கொண்டிருந்தான் சசி… அவனால் கணபதியிடம் எப்படி வேண்டுமாலும் பேச முடிந்தது… கௌதம்மிடமும் கூட பேச முடிந்த அவனால் அடிபட்டு தவிக்கும் புறாவாக கதறி கொண்டிருக்கும் மேகாவை பார்க்கும் போது மனம் தவித்தது! ஆனால் அவனது இந்த காதலுக்கு அர்த்தமே இல்லையே! தலையில் கை வைத்து முகத்தை மூடி கொண்டு சரிந்து அமர்ந்து யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து மேகாவை தொட்டான்.
அவன் தொட்டவுடன் துள்ளி எழுந்த மேகா…” நோ… வேணாம்… என்னை தொடாத…” கோபத்தில் அழுகையோடு கத்தினாள்.
அதை கேட்ட சசி மௌனத்தை மட்டுமே சுமந்து கொண்டு அவளது அருகினில் வந்தான்.
“வேணாம் சசி… இப்போ என்னைய எதாச்சும் நீ பண்ணிறலாம்… ஆனா அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்க மாட்டேன்… இது சத்தியம்…” என்று விசும்பி கொண்டே கூற… முழுவதுமாக உடைந்தான் சசி!
அவளை ஆற்ற முடியாத வலியோடு பார்த்தவன் அந்த அறையின் ஜன்னல் பக்கம் நின்று கொண்டு அவள் அறியாமல் கண்ணீர் விட்டான்! கண்களை துடைத்து கொண்டு அவள் புறம் திரும்பியவன்.
“என்னால முடியாது கண்ணம்மா… உன் கிட்ட பொய் சொல்ல இனிமேலும் என்னால முடியாது…” கண்கள் கலங்க கூறினான்.
“என்ன சொல்ற?” அழுகையோடு எரிச்சலாக அவள் கேட்க
“நானும் உன்னை என் உயிரா தான் நினைக்கிறேன்… ஆனா…” வியப்பாக பார்த்து விட்டு
“இப்போ புதுசா இந்த கதை சொல்றியா? இந்த மாதிரி நீ சொன்னா ஒரு நாள் முன்னாடி எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பேன்னு உனக்கே தெரியும்… ஆனா இப்போ மனசே மரத்து போச்சு… இந்த ஒரு நாள் அனுபவத்துல…” வெறுமையாக கூறினாள்!
“கண்டிப்பா உன்னை ஏமாற்ற உன்கிட்ட இதை சொல்லல மேகி… உன்னோட விலைமதிப்பில்லாத காதலுக்கு முன்னாடி நான் தோற்று போய் ரொம்ப நேரமாகுது மேகி…”
கண்களில் வலியோடு அவன் கூற அதை முகத்தில் ஒரு உணர்சியுமில்லாமல் பார்த்து கொண்டிருந்தாள் மேகா!
“என்னடா இப்படி ஒரு திடீர் ஞானோதயம்னு நினைக்கிறியா? நீ ட்ரெயின்ல உன்னோட உயிரை பற்றி கவலை படாம என்னை பற்றி கவலை பட்ட பாரு அப்போவே உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிட்டேன்ம்மா…”
அவள் பதில் கூறாமல் அவனை பார்த்து கொண்டே இருக்க… ஆனால் கண்களில் எதிர்பார்ப்புடன்.
“அப்படி பார்க்காதே மேகி… என்னோட மனசை அறுக்குது… இப்போவும் உன்னை லவ் பண்றேன்னு சொல்றது உன்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணனும்னுங்கற எண்ணத்துல கிடையாதும்மா…”
சரேலென நிமிர்ந்து அவனை பார்த்தாள்!
“பின்ன எதுக்கு?”
“உன்னோட இந்த காதலுக்கு எனக்கு அருகதையும் இல்ல… அதோட எனக்கு குடுத்தும் வைக்கில மேகி…”
“ஏன்?”
ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு கூறினான்.
“ஏன்னா எனக்கு எய்ட்ஸ்…”
***
அர்ஜுன் பரபரப்பாக எழுந்து கௌசிக்கை அழைத்தான்… உள்ளே வந்தவனிடம் இரு செல்பேசி இணைப்பு எண்களையும் குடுத்து
“கௌஷிக்… இது எந்த ஏரியான்னு உடனே கண்டுபிடி… கம் ஆன் குயிக்…” பரபரப்பாக அவன் சொல்வதை பார்த்த கௌசிக், அவனும் பரபரப்பானான்! அதுவரை அர்ஜுனை இடைமறிக்காமல் அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த அஞ்சலி.
“அர்ஜுன் என்னாச்சு?”
அவளை கண்கள் இடுங்க பார்த்த அர்ஜுன்,
“உங்க வேலையே இதுதானே… நம்ப வேண்டியவன நம்புறது இல்ல… நம்ப கூடாதவன நம்பி எது வரைக்கும் வேணும்னாலும் போவீங்க… எப்படி… அவன மாதிரி அலங்காரமா எங்களுக்கு பேச தெரியாது… மயக்கி கூட்டிட்டு போய் வேலை பாக்க தெரியாது… எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் நேர்மையான காதல் தான்… ஆனா அதான் உங்களுக்கு எல்லாம் பிடிக்காதே… ஏமாத்தறவன் யாரோ அவன் கால்ல தானே விழுவீங்க…”
“ஏன் அர்ஜுன் இப்படி பேசுறீங்க… நீங்க அண்ணா கூட பேசுனத வெச்சு பார்க்கும் போது மேகாவுக்கு ஏதோ ஆபத்துன்னு புரியுது… ஆனா நீங்க பேசுறது எனக்கு சுத்தமா புரியல… ஏன் எதுக்கும் எதுக்குமோ முடிச்சு போடுறீங்க?”
“உன் கிட்ட இப்ப பேச நேரமில்ல அஞ்சலி… சசி மேகாவ கடத்தி இருக்கான்… மிரட்டிட்டு இருக்கானாம்… நான் இப்போ வேஸ்ட் பண்ற ஒவ்வொரு செகண்ட்டும் ஆபத்து… கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாத…” கடித்து விட்டு மொபைல் டிராபிக் மேப்பிங் ஏரியாவுக்கு விரைந்தான்… அவனுடனே விரைந்தாள் அஞ்சலி!
மொபைல் டிராபிக்கை ட்ராக் செய்யும் இந்த இடத்தை தாண்டி தான் அத்தனை கால்களும் மீஸீபீ usமீக்ஷீ ஐ சென்றடையும்… அதே போல காற்றில் பரவும் ஒவ்வொரு செல்பேசி கால்களும் பதிவு செய்யபடுவதும் இங்குதான்! குப்பன் சுப்பனிலிருந்து யாருடைய செல்பேசி பேச்சுக்களை வேண்டுமானாலும் அரசாங்கம் பதிவு செய்யும் இடம்… ஒவ்வொரு செல்பேசி சேவை நிறுவங்களின் முதுகெலும்பு!
“ரெண்டுல ஒரு நம்பர் ஓசோன் சார்… சென்னைல வாங்கி இருக்காங்க… ஆறு மாசத்துக்கு முன்னாடி… இன்னொரு நம்பர் வேற சர்விஸ்…”
“ஓகே நம்ம நம்பர ட்ரேஸ் பண்ணுங்க…”
“சார்… ரெண்டு நம்பருமே ஆப் ல இருக்கு… டிபால்ட் ட்ராக்கிங்ல அப்பியர் ஆகல…” என்று இன்னொருவர் பதிலளிக்க
“ஓகே யூஸ் அதர் மெதட்ஸ்… ஸ்பை மோட் போங்க…”
“ஓகே சார்…”
கணினி முன்னர் அனைவரும் அமர்ந்து நகத்தை கடித்து கொண்டு கணினி திரையையே பார்த்து கொண்டிருக்க
“சார்… சிம் வெளிய எடுத்துட்டாங்க…”
அர்ஜுன் ஒரு நிமிடம் ஒரு பெரும் மூச்சை வெளியே விட்டு
“ஓகே மேக் எ நீறீஷீuபீ நீணீறீறீ… மும்பைல இருக்கற எல்லா ஏரியாவுக்கும்… இங்க்லூடிங் நவி மும்பை… இந்த நம்பர் மட்டும் எந்த ஏரியாக்கு போகுதுன்னு கண்டுபிடிங்க…”
“ஓகே சார்…”
அழைப்புகள் சென்று கொண்டிருக்க அந்த குறிப்பிட்ட எண் முன்னால் பச்சை விளக்கு எரிய ஆரம்பித்தது.
“வாவ்… மேப் பண்ணுங்க ஆதர்ஷ்…” அந்த பகுதியில் இருந்தவனை பார்த்து துள்ளி குதிக்காத குறையாக சொல்ல
கணினி திரையின் முன் அந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக லோட் ஆனது.
முழுதாக லோட் ஆன போது.
“மை காட்…” என்று ஒரு நிமிடம் உறைந்தான்! சசி கூறியதை போல அந்த இடம்
“காமாத்திபுரா” மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி!
***
“என்ன சொல்றீங்க சசி? என்ன? எய்ட்ஸ் வெச்சுகிட்டு என்னைய எப்படி சசி…” அதிர்ச்சியில் கண்களில் நீர் பெருக அவனது சட்டையை பிடித்து உலுக்கி கேட்டாள் மேகா!
“அவ்வளவு மோசமானவரா நீங்க… இவ்வளவு கீழ்தரமானவரா நீங்க… ச்சே…” என்று அதீத வெறுப்போடு கூற.
“ஷட் அப் மேகா… உன் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறாதே… என்னை பத்தி என்ன தெரியும் உனக்கு…” கோபத்தில் அவன் கத்தியதில் மேகாவுக்கு உடல் உதறியது! ஆமாம் என்னதான் தெரிந்து கொண்டாள்? காதல் எனும் வஸ்து கண்ணை மறைக்க தான் பெற்றவர்களை பிரிந்து வந்ததன் பலனை நினைத்து மருகினாள்!
“என்ன தெரியணும்… ஒரே ஒரு வார்த்தை போதாதா… நீங்க எப்படி ஆள்ன்னு தெரிஞ்சுக்க…” என்று தன்னால் இயன்றவரை கத்தினாள்!
“என்ன தெரிஞ்சு போச்சு… இதுக்கு காரணம் யார் தெரியுமா? உன் அப்பன்… ஸ்கௌண்ட்ரல்… அவனால என் குடும்பம் போச்சு… என் சொத்து போச்சு… என் அக்கா தன்னை மறந்து இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கா… கடைசியா என்னோட ஒவ்வொரு நாளும் என்னப்படுது… அது தெரியுமாடி உனக்கு… அதுவும் என்ன காரனத்துனால… இந்த சமுதாயமே ஒதுக்கி வைக்கிற எய்ட்ஸால… இதுக்கு என்ன பதில் சொல்ற?” அவளின் தோளை பிடித்து உலுக்கி கேட்டான் சசி!
அவனது கோபத்தை இது வரை பார்த்திராதவள், இந்த முகம் கண்டு அதிர்ந்தாள்! அவளது காதலை கேடயமாக்கி தாக்கிய போது மௌனமானவனின் இந்த கோப வெடிப்பை அவளால் தாங்க இயலவில்லை! அவள் வலியால் முகம் சுளித்து தன்னை விடுவிக்க முயல
“சாரி… கோபத்துல உன்னை… என்னோட குணஇயல்பு உனக்கு தெரிய வாயிப்பு இல்ல மேகா… சின்ன வயசுல இருந்து ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லாம வளர்த்தா எங்க அம்மா எங்களை… அதாவது என்னையும் என் அக்காவையும்… எங்க பூர்வீகம் கும்பகோணம்… பித்தளை பாத்திரம் செய்யறது எங்க குல தொழில்… அப்பா தொழில விஸ்தரிக்க சென்னை வந்தார்… தி நகர்ல உங்க கடைக்கு பக்கத்துல தான் எங்க கடையும்… அப்புறமா பித்தளை பாத்திரத்தோட எவர்சில்வர் மற்ற சாமான் எல்லாத்தையும் விற்க ஆரம்பிச்சார்… தொழில்ல நல்ல முன்னேற்றம்… உன் அப்பாவ என் அப்பா போட்டியாவே நினைக்கில… ஆனா உன் அப்பனோட எண்ணம் வேற மாதிரியா இருந்து இருக்கு…”
நிறுத்தி விட்டு விட்டத்தை பார்த்தான்… தன் கண்களில் தேங்கிய நீரை அவள் அறியாமல் சிமிட்டி மறைத்தான்!
“அது அழகான குடும்பம் மேகா… நான் என் அக்கா அப்பா அம்மா… இப்போ ஒண்ணுமே இல்லை… அதே மாதிரி தான் விஷால், சுரேஷ் ஒவ்வொரு வகைல உன் அப்பனால பாதிக்க பட்டவங்க…”
சிறு இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான் சசி!
“அப்போ நான் லண்டன்ல பிசினெஸ் ஸ்டடீஸ் பண்ணிட்டு இருந்தேன்… உன் அப்பா எங்க கடைய விலைக்கு கேட்டு இருக்கார்… எங்க கடை ரொம்ப லாபம் வர்ற கடையாச்சே… எங்க அப்பா குடுக்க முடியாதுன்னு சொல்லி இருக்காங்க… அதுக்கு உன் அப்பன்… ஸ்கௌண்ட்ரல் என்ன பண்ணி இருக்கான் தெரியுமா?” பல்லை கடித்து கொண்டு கோபத்தோடு கேட்க
மேகா பயத்துடன் தலையை ஆட்டினாள் தெரியாதென்று.
“என் அக்காவ கடத்தி அவன் கஸ்டடில வெச்சுட்டு… எங்க அப்பாவ மிரட்டி இருக்கான்… அப்பா போலீசுக்கு போகவும் அக்காவ… அக்காவ… கேங் ரேப் பண்ண வெச்சு வீட்ல கொண்டு போய் கடாசி இருக்கான்டி… இருக்கான்…” வெறி வந்தது போல அவளை உலுக்கி கொண்டு கத்தி பின் அந்த கத்தல் கதறலானது… ஐயோ இது உண்மையா என்று விக்கித்து போனாள் மேகா!
“சசி…” என்று ஹீனமாக அழைத்த மேகா… முகத்தை மூடி கொண்டு அழுத அவனிடம் பதில் இல்லாமல் போகவும் தோளை தொட்டு எழுப்பினாள்!
“புரியுது சசி…” என்று கூறவும் அவளை பார்த்த அவனது கண்களில் தெரிந்த வலி… அவளை குத்தியது! அந்த நொடியில் அனைத்தையும் மறந்து அவனை அணைத்து முதுகை தடவி கொடுத்தாள்! அவனது கதறல் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டது!
“எங்க அப்பாவால இந்த விஷயத்த ஜீரணிக்க முடியல… அப்போவே ஹார்ட் அட்டாக்ல எங்களை விட்டுட்டு போயிட்டார்… இந்தியா வர்றதுக்குள்ள இத்தனையும் நடந்து நான் வரும் போது அப்பா ஒரே நாள்ல உயிரற்ற சடலமாவும் அம்மாவும் அக்காவும் உயிரோட இருக்கற சடலமாவும் தான் இருந்தாங்க…” அவன் சொல்ல சொல்ல மேகாவின் முகம் கல்லாகி கொண்டிருந்தது! தனது தந்தையா? இப்படி… ச்சே… என்ன பாவம் செய்தேன்… இப்படி ஒரு தந்தைக்கு மகளாக பிறக்க… பெற்றவர்கள் செய்த வினை பிள்ளைகளின் தலையிலே அல்லவா… எதை கொண்டு என் பிறப்பை சுத்தம் செய்ய? இறுகி போன முகமும் விறைத்த உடலுமாக மேகா.
“அதோட விடல அந்த நாய்… சொத்த பிடுங்கனுமே… கேங் ரேப் பண்ணத வீடியோ ஷூட் பண்ணி அதை வீட்டுக்கே அனுப்பி வெச்சான்… பில்டிங்க அவனுக்கு விற்கலைன்னா அந்த வீடியோவ நெட்ல குடுத்துடுவேன்னு மிரட்டுனான்… அதை பார்த்த அம்மா ரொம்ப மனசு உடைஞ்சு போய் அக்காவுக்கும் பாய்சன் குடுத்துட்டு அவங்களும் சாப்பிட்டுட்டாங்க…” தலையை அடித்து கொண்டு அவன் அழ, அவனை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டவள் கண்ணிலும் நீர்.
“அதுல அக்கா பிழைச்சுட்டா… ஆனா புத்தி பேதலிச்சு போச்சு… அவன் எனக்கு குடுத்த வெகுமதிதான் இந்த எய்ட்ஸ்… வலுக்கட்டாயமா என் உடம்புல ஏத்தினது… பாஸ்டர்ட்…” பக்கத்தில் இருந்த டீபாயில் கையை குத்தினான்… கோப கனல் மேகாவை சுட்டெரித்தது… சரிந்து உட்கார்ந்து தலையில் கை வைத்து கொண்டான்!
“ஏன் மேகா எனக்கு இப்படி ஒரு விதி? எல்லாரையும் போலத்தானே நானும்… லண்டன் போனப்போ கூட ஒரு பொண்ணு கிட்ட கூட பழகினது இல்லடா… மனசும் சரி உடம்பும் சரி ஒருத்திக்கு தான்னு ரொம்ப தீவிரமான தீர்மானத்துல இருந்தவன்டா நான்… காதல்ல உருகி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணனும்ன்னு நினச்சவன்… உன் அப்பன் பண்ணதுக்கு உன்னை பார்த்தப்போ கூட பழகி பழி வாங்க தான் நினச்சேன்… எனக்கு தான் உன்னால எய்ட்ஸ் இன்ஜெக்ட் பண்ண முடியுமா? உன் பொண்ணும் அதே எய்ட்ஸால சாக போறா பாருன்னு சொல்லி அவனோட தொழில் சாம்ராஜ்யத்த அழிச்சுட்டு அவனை நாக் அவுட் பண்ணனும்ன்னு நினைச்சுத்தான் உன் கிட்ட பழகினேன்” இடைவெளி விட்டு விட்டு அவளை பார்த்தான் சசி… அவளது முகம் உணர்வில்லா பாலைவனமாக இருந்தது!
“… ஆனா இப்போ உண்மையா உன்னை காதலிக்கிறேன் மேகா… இப்போ நீ வேணும்னு நினைக்கிறேன்… நீ வேணும்னு நினைக்கக்கிறேன்… ஆனா… என்னால…” தன்னுடைய நிலையை நினைத்து உடைந்து போனான்… அவனது ஆற்றாமையை பார்த்த மேகாவுக்கு வேறெதுவும் தோன்றவில்லை சசியை தவிர.
“இப்போ என்னாச்சு சசி… நான் உங்களுக்கு இருக்கேன் சசி… எவ்வளவோ சைன்ஸ் முன்னேறி இருக்குப்பா… எதா இருந்தாலும் சேர்ந்து பேஸ் பண்ணலாம் சசி… நான் இருக்கேன் சசி… நீங்க எதுக்குப்பா கவலைபடுறீங்க…” முகத்தை கையில் ஏந்தி அவள் கூறவும்… அவளை தள்ளி நிறுத்தி
“இல்ல மேகா… நீ போய்டு…” தீர்மானமாக கூறினான் சசி!
“சசி…” அவளால் அதை ஏற்கமுடியவில்லை என்பதை அவளது குரல் கூறியது… உனக்கு நான் இருக்கிறேன் என்று ஆத்மார்த்தமாக அறிவித்தது அவளது குரல்!
“ஆமா மேகா நீ போய்டு… அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னு இருந்தா…” குரல் கமற.
“நான் உன்னை வந்து கண்டிப்பா பார்ப்பேன் மேகா…”
***
காமாத்திபுராவில் மேகா இருப்பதை அறிந்த அடுத்த நிமிடம் அர்ஜுன் அழைத்தது ஆஷிஷ் குல்கர்னி… மும்பையின் கமிஷனர்… என்கௌன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்… அர்ஜுனின் நண்பர்! முகவரியை குடுத்து நிலவரத்தை கூறி உடனே அங்கு சென்று காப்பாற்றுமாறு வேண்ட… அதே ஏரியா பக்கம் சுற்றி கொண்டிருந்தவர் பரபரப்பாகி தன் குழுவோடு அங்கே சென்றார்.
அதை மட்டும் நம்பாமல் காமாத்திபுராவில் செக்யூரிட்டி சர்விஸ் மற்றும் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தி வரும் வாசுதேவன் நாயரையும் அழைத்து அந்த முகவரிக்கு உடனே போக சொல்லி விட்டு… போக்குவரத்து நெரிசலில் காரில் போவது தாமதபடுத்தும் என்பதால் பைக் சாவி ஒன்றை வாங்கி கொண்டான்!
அர்ஜுன் அவசரமாக அந்த இடத்துக்கு கிளம்ப… அஞ்சலி வந்து முன்னால் நின்றாள்!
“அர்ஜுன் நானும் வரேன்…” முகம் எல்லாம் கலவரமாக
“ஏன் உருப்படியா நான் போக வேண்டாமா? ஒழுங்கா வேலைய பாரு…” அவசரத்தில் கடித்தான்!
“ப்ளீஸ் அர்ஜுன்… மேகாவ நினைச்சா எனக்கு வேலை ஓடாது… தயவு செஞ்சு என்னை கூட்டிட்டு போங்க…” எதுவோ விபரீதமாக நடக்க போகிறது என்பதை உணர்ந்தாள் அஞ்சலி!
“முடியாது அஞ்சலி… லேட் ஆகுது… ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம்… இப்போ போய் விளையாட்டா?” சுள்ளென்று கடிக்க
“அர்ஜுன்… ப்ளீஸ் அர்ஜுன்… நல்ல பிள்ளையா இருப்பேன் அர்ஜுன்… ப்ளீஸ்… அவ எப்பிடி இருப்பாளோ… நானும் வந்தா உபயோகமா இருக்கும்… ஆறுதலா இருக்கும்… ப்ளீஸ் என்னை கூட்டிட்டு போடா…”
கடைசியாக அவள் வைத்த பஞ்ச் அவனை இளக்க மொபைல் ட்ராபிக் மேப்பிங் ஏரியாவில் தமிழ் தெரிந்த மற்றவர்களின் புருவத்தை உயர்த்தியது!
***
“மேகா… பயப்படாதீங்க… நாங்க வந்துட்டோம்… கமிஷனர் ஆப் மும்பை அண்ட் டீம்…” எச்சரிக்கை ஹிந்தியில் வர சட்டென்று விறைத்து நிமிர்ந்தனர் மேகாவும் சசியும்!
மேகாவின் கண்களில் தெரிந்த தவிப்பை பார்த்து தவித்தான் சசி! இவள் தேவதை… தெய்வம் தந்த தேவதை! அந்த நிமிடத்தில் அந்த தெய்வத்தையும் வெறுத்தான்… தெய்வமென்று ஒன்றிருந்தால் ஒரு தவறும் செய்யாத தனக்கு இந்த தண்டனை கிடைத்து இருக்குமா? இந்த மென்மையான மலரோடு வாழ்க்கை அழகான கவிதையாக இருந்திருக்குமே! ஏன் அது எனக்கு வாய்க்கவில்லை? இந்த சாபம் எதற்காக?
கடவுளே! அத்தனையும் கனவு என்று கூறிவிட மாட்டாயா? இந்த உலகத்தில் நானும் இவளும் மட்டுமே என்று மாற்றிவிட மாட்டாயா? எனக்கு வாழ்க்கை வேண்டும்… நான் வாழ வேண்டும்… எனக்கு மேகா வேண்டும்… அவளோடு நூறாண்டு வாழ வேண்டுமே! எனக்கு அந்த பாக்கியம் இல்லையா? ஐயோ… இந்த ஆசையினால் என்னுடைய இதயத்திற்கு அல்லாவா நாசமுன்டாகும்? இந்த இழிவான நோய் அவளையும் அல்லவா பற்றி கொண்டு விடும்? வேண்டாம்… எனக்கு மேகா வேண்டாம்… அவளோடு வாழ்க்கை வேண்டாம்… அவள் நன்றாக இருந்தால் அதுவே போதும்…
“தப்பிக்க ஒரு வழியும் இல்லையா சசி…” … தவிப்பாக கேட்டவள்… ஒரே ஒரு கதவு மட்டுமே இருந்த வீட்டில் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள்!
மேகாவை ஆழ்ந்து பார்த்த சசி…
“மேகா… உனக்கு என் மேல கோபமே வரலியாடா?” குரல் வருந்தி தேய்ந்தது!
“இருந்துச்சு சசி… மூணு பேர் இறந்துட்டாங்கன்னு சொன்னப்போ இருந்துச்சு… அப்பா கிட்ட என்னை ஏதோ செய்ய போறதா சொன்னப்போ இருந்துச்சு… ஆனா இப்போ இல்ல…” குரலில் இருந்த உறுதி அவனை மலைக்க வைத்தது!
“என்னை எப்படி கண்ணம்மா இந்த அளவு நம்பற?” மனதில் எழுந்த கேள்விக்கு பதில் அறியாமல் சிந்தனை வயப்பட்டான்!
“மேகா நீ போ…” தீர்மானமாக அவன் கூற
“முடியாது சசி…” அவளும் தீர்மானமாக கூறினாள்!
“ஏய்… நான் தானே உன்னை கடத்திட்டு வந்தேன்… இப்போ போலிஸ்ல உன்னை ஒப்படைக்க போறேன்… எழுந்திரு மேகா…” அவன் குரலில் எஃக்கின் தன்மை இருந்தாலும் ஓரத்தில் நடுங்கியதை மேகாவால் உணர முடிந்தது!
“நோ சசி… முடியாது…”
“சொல்றத கேளு மேகா…” கோபத்தில் தவிப்போடு வந்து விழுந்தன வார்த்தைகள்!
“இல்ல சசி… போலிஸ் கிட்ட நானே போய் சொல்ல போறேன்… என்னோட இஷ்டத்தோட தான் வந்தேன்னு… நீங்க கடத்துலைன்னு சொல்ல போறேன்… நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்னு சொல்ல போறேன் சசி…” உறுதியோடு சொன்னவளை பார்த்து சசிக்கு உடல் அதிர்ந்தது! இந்த பெண்ணின் வாழ்க்கையில் நான் செய்த தவறுகள் போறதா? இன்னுமா… கணபதியுடன் போராடத்தான் வேண்டும்… ஆனால் மேகா இதில் வேண்டாம்… அவள் வாழ வேண்டியவள்… புரிந்து கொள் மேகா.
“பயப்படுறீங்களா சசி?” புருவத்தை நெரித்து கொண்டு கேட்க
“ச்சே… நான் இப்போ நினைக்கிறது உன்னை பத்தி மட்டும் தான் மேகா… நீ நல்லா இருக்கணும்…” என்று சொல்லி விட்டு செல்பேசியை எடுத்தவன்
“விஷால்… அங்க எப்படி இருக்கு?”
“நல்ல ரியாக்ஷன் சசி… புல் ப்ராபெர்டீஸ் இஸ் அண்டர் விஜிலென்ஸ்… கண்டிப்பா லாஸ் அதிகம்… அதோட நிறைய கேஸ தோண்ட ஆரம்பிச்சுட்டாங்க மீடியா… இனிமே அவங்க பார்த்துக்குவாங்க சசி…”
“ரொம்ப சந்தோஷம் விஷால்… இங்க ராகினி பத்திரமா இருக்காங்கடா… தேவைபட்டா அவங்கள யூஸ் பண்ணிக்கலாம்…”
“ஓகே சசி…”
“விஷால்…”
“சொல்லு சசி…”
“அக்காவ பார்த்துக்கடா… அக்காவ நினைச்சா தான்…” குரல் தழுதழுத்தது.
“கண்டிப்பா… நான் இருக்கேன் சசி…”
கனத்த மனதோடு செல்பேசியை வைத்த போதே வெளியில் இருந்து எச்சரிக்கை செய்வது காதில் விழுந்தது… மேகாவை ஒரு முறை அழுத்தமாக பார்த்த சசி, வெளியே போக எத்தனிக்க அவனை தன்னோடு இழுத்த மேகா, தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டாள்… உறுதியான பலம் வாய்ந்த சசியால் அவளை விட்டு விலக முடியவில்லை… அவளுடைய மென்மையில் தொலைந்தான்.
“மேகா… என்னம்மா இது… விடும்மா…”
“நாம கல்யாணம் பண்ணிக்கலாம் சசி…” சொன்னவளை அதிர்ச்சியோடு இழுத்து நிறுத்தியவன்.
“உளறாத மேகா… அது எப்பிடி நடக்கும்… உனக்கென்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு…” அதிர்ந்து கேட்டான்!
“ஒரு நாளாவது உங்களோட வாழ்ந்துட்டா போதும் சசி… அப்புறம் நான் செத்தாலும் கவலை இல்லை…”
அவள் கூறியதை கேட்ட சசிக்கு பதறியது! பிடித்து வைத்து இருந்த பொறுமை எல்லாம் பறந்தது… பளாரென்று அறைந்தவன்,
“அறிவோட பேசு மேகா… உன் கிட்ட நான் உண்மைய சொன்னது நீ இப்படி உளறுவதற்கு இல்ல… உன் அப்பாவ பத்தி தெரிஞ்சுக்க தான்…” கோபத்தோடு நடுக்கமும் சேர்ந்து கொண்டது… எதிர்த்தால் அடக்கலாம் ஆனால் அன்பால் வளைப்பவலை என்ன செய்து எதிர்ப்பது?
“அதுனால தான் சொல்றேன்… நான் சாகும் போது உங்க மனைவியா தான் சாக நினைக்கிறேன் சசி…”
“இது நடக்காத விஷயம் மேகா… வாழ்க்கைல மிகபெரிய தவற பண்ணிட்டேன்… உன்னை பார்த்தது… உன்னை வெச்சு பழி வாங்க நினைச்சது… சாரி மேகா… சாரி…” என்று சொல்லி விட்டு யோசனை படற சற்று தள்ளி தனியாக சென்றவன் செல்பேசியை தடவினான்!
“ஹலோ கௌதம்… நான் சசி…” கிசுகிசுப்பாக.
“சசியா… சசி… அவளை விட்டுடு சசி… நான் இப்போ அங்கதான் வந்துட்டு இருக்கேன்… எல்லாம் எங்களுக்கு தெரிஞ்சு போச்சு… உன்னால தப்பிக்க முடியாது…”
“நானே சரண்டர் ஆகத்தான் போறேன் கௌதம்… அதுக்கு முன்னால உங்க கிட்ட கடைசியா பேச நினச்சேன்…” இடைவெளி விட்டு” மேகாவ உங்க கிட்ட ஒப்படைக்கிறேன் கௌதம்… அவளை பார்த்துகோங்க…”
“சசி…”
“பார்த்து இருக்கேன்… உங்க கண்ல… எனக்கும் கொஞ்சம் தெரியும் கௌதம்… அவ பரிசுத்தமான தேவதை… வேற யாருக்காகவும் நான் இப்ப சரண்டர் ஆகல… அவளுக்காக தான்… என்னோட மேகாவுக்காக மட்டும் தான்… நீங்க பார்த்துகோங்க… அவளுக்கு எந்த கஷ்டமும் வர கூடாது… செய்வீங்களா கௌதம்?”
“சசி நீங்க உணர்ச்சிவசப்பட்டு பேசறீங்க… நான் வந்துடறேன்…”
“பை கௌதம்… உங்களை நம்பி போறேன்…”
கௌதமிடம் பேசிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க அதற்கு முன் வெளியே முன்னேறிய மேகா கதவை திறந்து கொண்டு போலீசிடம் பேச எத்தனிக்க… அந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்ள போவதாக இந்த பெண் ஏதாவது உளறி விடுவாளோ என்று பயந்த சசி பாய்ந்து வந்து அவளை தடுக்க… அவளை தான் கடத்தியதாக மட்டும் இருக்கட்டும் அது தான் அவளது எதிர்காலத்திற்கு நல்லது என்று நினைத்த சசி அவளை ஏதும் கூற விடாமல் தடுத்தான்! அவனது கையில் கத்தி.
“சசி… மேகாவ விட்டுடு…” போலீஸ் மத்தியில் இருந்த அர்ஜுன் அவனை பார்த்து மைக்கில் கத்தினான்!
மேகாவும் திமிறி கொண்டு பேச முயற்சிக்க
“மேகா சொல்றத கேளும்மா… நான் சரண்டர் ஆகறேன்…” அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்ல
“நோ சசி… நான் சொல்ற மாதிரி சொன்னா எந்த பிரச்சனையும் வராது… ப்ளீஸ் என்னை விடுங்க…” கண்ணீர் மல்க கெஞ்சினாள்!
“இல்லடா… நான் உனக்கு தகுதியானவன் இல்ல… சொல்றத கேளு…” அவனது கடினத்தன்மை காணாமல் போய் அவளிடம் கெஞ்ச துவங்கினான்!
“நீங்க எனக்கு வேணும் சசி… ப்ளீஸ்… எனக்கு வேணும்…” அவளது அழுகை கதறலானது.
அந்த நேரத்தில் சட்டென்று அவனது பேண்டில் இருந்த பிஸ்டலை எடுத்தான்!
“சாரி மேகா எனக்கு வேற வழி தெரியல… நீ நல்லா இருக்கணும்… அக்கா… அக்காவ பார்த்துக்க… அவ பாவம்… அவளுக்கு யாருமில்லை… உன்னை மாதிரி ஒரு பொண்ணு எனக்கு குடுத்து வைக்கில மேகா… அட்லீஸ்ட் அடுத்த ஜென்மத்துலையாவது உன்னை எனக்கு கொடுன்னு அந்த கடவுள் கிட்டவே போய் சண்டை போடுறேன்… என்னை மறந்துடு!” என்று கூறியவன் மற்றவர்கள் சுதாரிக்கும் முன் தன் நெற்றியில் வைத்து அழுத்தினான்!
“சசீஈஈஈ…”
மேகாவின் உலகம் நிசப்தமானது!





