அத்தியாயம் 3
அத்தியாயம் -2 ஆண்டு -1800. இடம் -தஞ்சை -இரண்டாம் சரபோஜி -ராஜா போன்ஸ்லே மன்னர் ஆட்சிக் காலம்.
சோழ வம்சா வழியினர் ஆட்சி முடிவடைந்து, ஆங்கிலேயர்கள் உதவியால், ‘சரபோஜி’ மன்னர் தஞ்சை ஆண்டு கொண்டு இருந்தார். மெல்ல மெல்லப் பரத கண்டத்தின் மாண்பு மறைந்து, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒட்டுமொத்த இந்தியா, ஒவ்வொரு பகுதியாக அடிமையாகிக் கொண்டு இருந்தது. ‘ஒற்றுமை இல்லாத ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொன்றாகத் தந்திரக்கார நரி அடித்துக் கொன்றதாக’ நம் முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்ற கதையைப் பிரிட்டிஷ் நிறைவேற்றிக் காட்டிக் கொண்டு இருந்த நேரம். அந்தோ பரிதாபம் ! அங்கு இருந்தது ஆடுகள் இல்லை. புலியின் வீரம் கொண்ட, ஒரு வரலாற்று உன்னதத்தைப் படைத்த வழித்தோன்றல்கள் தான். கலை, கலாச்சாரம், பண்பாடு என்று உலகத்திற்கே வழிகாட்டியாய் இருந்த நாகரிகத்தை உருவாக்கிய, ஒப்புமையே கூற முடியாத உன்னத வம்சாவளி அது. உலகத்தையே ஆண்ட சோழ மன்னர்களையும், வீரம் மிகப் பல அரசர்களையும், நான்கு வேதம், பதினெட்டு உபநிஷதம், ரெண்டு மிகப் பெரிய இதிகாசங்கள், ஐந்து பெரும் காப்பியங்கள் என்று கணக்கில் அடங்காப் பல துறை நூல்களை, மருத்துவ, வானியல், வேதியல், கட்டிட கலை, ஆன்மிகம், போர், தற்காப்பு கலை என்று கோடிக்கணக்கான அறிவு புதையல்களை உருவாக்கிய பரத கண்டதை, ‘முன்னேற்றப் போகிறோம்’ என்று காதில் முழம் முழமாய் சுற்றப்பட்ட பூ இங்கே ஏராளம்.
தன் சமூகத்தின், கலை, பண்பாட்டின் வேர்களின் மேன்மையை அறியாமல், சமய பெருமையை உணராமல், பிழைக்க வந்த வந்தேறிகளின் பேச்சைக் கேட்டுத் தலையாட்டும் மூடர் கூடம் உருவாகி இருந்த நேரம். வீரத்திற்கு பெயர் பெற்ற சிங்கம் போன்ற இனத்தின் மக்களை, சிறு நரிகள் அடிமையாக்கி இருந்த காலகட்டம். தங்கள் வலிமையை, பெருமையை, உணராத அந்த சிங்க கூட்டமும் அடிமையாகி இருந்த நேரம். ஆனால், ஜெயித்தது என்னவோ நரி தான். ‘பரத கண்டத்தவருக்கு பண்பாடு, கலாச்சாரம் இல்லை. அவர்களை முன்னேற்றுவதே கொள்கை’ என்ற கோட்பாட்டினை கொண்டு வணிக நோக்கத்துடன், பிரிட்டிஷ் இந்தியாவை அடிமையாக்கி கொண்டிருந்த காலகட்டம். பிரிட்டிஷ் உதவியால் அரியணை ஏறினாலும், நிர்வாகப் பொறுப்பு முழுவதும் எடுத்துக் கொண்டு, ‘பொம்மை அரசராய்’ சரபோஜி இருந்தாலும், தன்னால் முடிந்த நலத் திட்டங்களை அவர் நிறைவேற்றத் தவறவேயில்லை. சரஸ்வதி மஹால் நூலகம், அதில் நாலாயிரம் புத்தங்கங்கள், அரிய ஓலைச்சுவடிகள், நாணயங்கள், கலை பொக்கிஷங்கள் கொண்டு நிரப்பி இருந்தார். அங்கு இல்லாத தலைப்புகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மருத்துவம், கணிதம், இயல், இசை, நாடகம், வானியல் சாஸ்திரம் போன்ற எண்ணற்ற கலை பொக்கிஷங்கள்.
பரத கண்டத்தின் ஈடு இணை இல்லா .திறமைக்குச் சான்று. யாத்திரிகர்கள் தங்கச் சத்திரம், கல்வி வளம் பெருக, ‘நவ வித்யா கலாவதி சாலை’ அமைத்து முதல் முறையாய் பெண்களை ஆசிரியராக நியமித்தவரும் இவரே. தவிர நூல்கள் உருவாகக் கை அச்சு முறை கொண்டு வந்து, எண்ணில் அடங்காக் காவியங்கள் இன்றும் நிலைக்கச் செய்தவர். நீர் நிலைகள், நிலத்தடி வடிகால் அமைத்து, மருத்துவத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அழிந்து போகாமல் பாதுகாத்துக் காத்தார். அங்கு இருந்த இருநூறு வருட ஓலைச் சுவடி ஒன்றை, 2003ஆம் ஆராய்ந்ததில், ‘சரபோஜி மன்னர் இளவரசராய் இருந்த போது கண் அறுவை சிகிச்சை நவீன வசதி எதுவும் இல்லாத அந்தக் காலத்திலேயே செய்த’ குறிப்பு கிடைத்து உள்ளது.
தஞ்சாவூர் வரைகலை, மட்டும் இல்லாது, இசைக்கும் இவர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது என்பதால், ராஜராஜ சோழனுக்குப்’ பிறகு ‘தஞ்சையின் பொற்காலம்’ இவர் ஆட்சிக் காலமே என்று பெயர் பெற்றது. இந்த அரசரின் அரசவை இசை மேதைகள், ஜாம்பவான்கள் தான் ‘தஞ்சாவூர் நால்வர்’ பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு.
இந்தப் புனிதர்கள் வாழும் தஞ்சையின் இரவு வேளை, பல சரித்திரங்களுக்கு, பல சதிகளுக்கு, பல உன்னதங்களுக்கு மௌன சாட்சியாய் இருந்ததை போல் அப்பொழுது நடக்கப் போகும், தெய்வ திருவிளையாடலுக்கும் சாட்சியாய் இருக்க ஆரம்பித்தது. மின்சாரம் என்பது எல்லாம் இல்லாத காலம். தெரு முழுக்க தூண்கள் நிறுவப் பட்டு அதில் தூங்கா விளக்குகள் ஏற்றப்படும். அந்த வெளிச்சத்தில் இந்த இரவு வேளையில் தஞ்சை வீதிகள் இந்திரனின் அரசவை போல் மின்னிக் கொண்டு இருந்தன.
தஞ்சை பெரிய கோயிலுக்குப் பின் புறம் அமைந்து இருந்தது அந்த வேத பாடசாலை.
காலை வேலையில் அந்தணர்களின் வேத கோசம், பாராயணத்தை கேட்கும் போது , உடலோடு உள்ளமும் ‘அனைத்தும் இறைவனே’ என்று சரண் அடைந்து விடும். நீண்ட மரக்கதவினை தாண்டிச் சென்றால் முதலில் நம்மை வரவேற்பது கண்ணை நிறைக்கும் பூந்தோட்டமே! இசைக்கு அடுத்தபடியாக இறைவனுக்குப் பிடித்தது மலர்கள் தானே! அதுவும் தஞ்சை பெருஉடையாருக்கு என்னும்போது கேட்கவும் வேண்டுமோ பூந்தோட்டத்தின் நீளம், அகலம்! வாயிலில் மிகப் பெரிய துளசிச் செடி, ஒரு புறம் கோச்சாலை (பசு தொழுவம்), மறுபுறம் வாணி வீணையுடன் அல்லிக் குளத்தின் நடுவே. அதைக் கடந்து உள்ளே சென்றால் பிரார்த்தனைக் கூடம். அதன் பின் புறம் அங்கேயே தங்கி வேதங்களைக் கற்கும் மாணவர்கள் சயனிக்கும் மிகப் பெரிய வராந்தா போன்ற அமைப்பு.
உறங்கிக் கொண்டு இருக்கும் நூறு மாணவர்களைக் கடந்து சென்றால் மிகப் பெரிய அறை. அந்த அறையின் முன்பு, தஞ்சையின், ‘இசை சக்கரவர்த்திகள், ஆடல் கலையின் நாயகர்களான’ அந்தச் சகோதரர்கள் நால்வரும் காவல் போல் வாசலிலேயே படுத்து இருந்தனர். அவர்கள் காவல் இருப்பது, சேவகம் செய்யக் காத்து இருப்பது அவர்களின் தெய்வத்திற்கு . ஆம்! அவர்களின் குரு தான் அவர்களின் தெய்வம். ‘குருசேவையே கடைந்தேற வழி’ என்று எவ்வளவு பதவி, உயர்வு வந்தாலும் இன்றும் மனதளவில் சிறு மணாகளாய் மாறிக் குருவின் சொல்லுக்காகக் காத்து நின்றனர். அறைக்குளே சென்றால் தெய்வ சன்னிதானத்திற்குள் நுழைந்த ஒரு அமைதி, நிறைவான உணர்வு. அந்த அறையின் தரையில் நன்றாக ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார் அந்த மனிதர். ஒரு மனையைத் தலைக்குக் கொடுத்து, துண்டை விரித்து ஆழ்ந்த நித்திரையிலிருந்த அவர் முகத்தில் அப்படியொரு தேஜஸ். அவர் தலை முழுவதும் சவரம் செய்யப்பட்டு இருந்தது. உடல் முழுக்க ஆகம முறைப்படி, பதினாறு இடங்களில் அவர் திருநீறு (விபூதி) அணிந்து இருந்தார். அவர் உடைகளை வைத்துப் பார்த்தால் அந்தணர் தோற்றம். கழுத்தில் பெரிய பெரிய ருத்ராக்ஷ மாலைகள். மேல் வஸ்திரம் சாய நிறத்திலும், நூல் வேட்டியும் மட்டுமே அவர் உடை. அருகே மிகப் பெரிய வீணை ஒன்று. நல்ல உறக்கத்திலிருந்த அவர் செவிகளில், குழந்தையின் அழுகை சத்தம் ஒன்று கேட்க, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார். அந்த நள்ளிரவில், திருமணம் ஆகா அந்தணர்கள் மட்டுமே தங்கி இருக்கும் வேத பாட சாலையில் சிறு குழந்தையின் அழுகை சத்தம் எங்கிருந்து வர முடியும்? குழந்தையின் அழுகை சத்தம் அவரைத் திகைப்பில் ஆழ்த்தியது. ‘ஒரு வேளை மனப்பிரமையா?…’ என்று மீண்டும் அவர் உறங்க முற்பட, இந்த முறை அழுகை ஒலி அதிகமானது. அந்த வேத பாடசாலையின் வாயிலிலிருந்து தான் அழுகை வருகிறது என்று உணர்ந்தவர் தான் இருந்த அறையை விட்டு வெளியே வந்தார். ‘ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் இவர்கள் யாருக்கும் அந்தக் குழந்தையின் அழுகை ஒலி கேட்கவே இல்லையா, இல்லை அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்களா?’ என்று அவருக்குப் புரியவில்லை. வெளிக் கதவைத் திறந்து வர, அங்கு கோச்சாலையின்(பசு மாடுகள் வளர்க்கும் இடம்) அருகே துளசிச் செடியின் அருகே அமர்ந்து அழுது கொண்டு இருந்தது ஒரு குழந்தை. அதன் அருகே குழந்தையின் தாய் யாருமே தென்படவில்லை. “குழந்தாய்!.. யார் நீ…? இந்த இரவு வேளையில் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? வழி தவறி வந்து விட்டாயா? பயம் தேவையில்லை. வழி காட்டு அழைத்துச் செல்கிறேன்” என்றார் குழந்தை அருகில் அமர்ந்து. குழந்தை அருகில் அமர்ந்ததும் இனம் புரிய அமைதி, தெளிவு மனம் எங்கும் நிரம்பி வழிவதை உணர்ந்தார். தெய்வ சன்னிதானங்களில் மட்டுமே அவர் உணர்ந்த நிறைவு. இன்று அந்தப் பக்தி பெருக்கு, ஆத்ம நிறைவு இந்தக் குழந்தையின் அருகே. நிலா வெளிச்சத்தின் ஒளியில் அந்தக் குழந்தையை ஊன்றிப் பார்க்க, அதன் முக தேஜஸ், அழகு அவர் மனதைக் கொள்ளை இட்டது. பட்டுப் பாவாடை உடுத்தி, உடல் முழுக்க தங்க, வைர ஆபரணங்கள் பூட்டப்பட்டு ஒரு தேவலோக குழந்தையாய்த் தோன்றினாள் அந்தச் சிறுமி. அவள் தலையிலிருந்து தண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அப்பொழுது தான் ஆற்றிலிருந்து எழுந்து வந்தவள் போல். அவர் கைத்தானாகக் கூப்பியது அந்தத் தெய்வ வடிவின் மகோனத்தை கண்டு. “என்ன முத்துஸ்வாமி தீக்ஷதா! என்னைப் பல நாளாய் தேடி, இந்தத் தஞ்சை தரணி எங்கும் அலைந்து கொண்டு இருந்தாயே!… சரி, ‘நம் பிள்ளை வருந்துகிறானே’ என்று உனக்காக இருக்கும் இடத்தை விட்டு, உனக்கு வழிகாட்ட வந்தால், நீ எனக்கு வழி காட்டுகிறேன் என்கிறாயே மகனே!.
‘வா… வா’ என்று கண்கள் கலங்கி அழைத்து விட்டு, உன்னைத் தேடி நான் வந்தால், ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறாயே?” என்ற அந்தச் சிறுமியின் குரல் கேட்டுத் திகைத்து விழித்தார் முத்துஸ்வாமி.
ஆம், அந்த மனிதர், ‘சங்கீத மும்மூர்த்திகளில்’ ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர். திருத்தணி முருகனால் நாவில் இனிப்பு ஊட்டப்பட்ட, அதே தெய்வ கீர்த்தனையாளர் தான். ராமஸ்வாமி தீக்ஷிதருக்கும், சுப்புலக்ஷ்மி அம்மாளுக்கும் மகனாய் பிறந்தவர். இவர் தந்தை தான் ‘ஹம்சத்துவனி’ ராகத்தைக் கண்டு பிடித்தவர். இவர் சீடர்கள் தான் தஞ்சை நால்வர், ‘பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு’. சரபோஜி மன்னர் அரசவை இசை மேதைகள். இவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கித் தான் முத்துஸ்வாமி தஞ்சை வந்து தங்கி இருந்தார். தஞ்சையின் காவல் தெய்வம், மன்னன் விஜயாலய சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட, ‘நிசும்பசூதினி’ மேல் கீர்த்தனை பாடும் படி கேட்டுக் கொண்டு இருந்தனர். பல வாரமாய் தேடியும் முத்துஸ்வாமிக்கு அந்தக் கோயில் எங்கு உள்ளது என்று தெரியவில்லை. தேவி தரிசனம் கிடைத்தால் தானே அவளைப் புகழ்ந்து பாமாலை இசைக்க முடியும்? தேடித் தேடி பார்த்தும், பல இடங்களில் விசாரித்தும் யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. தஞ்சை காளி கோயிலில் மனம் வருந்தி, “தாயே நின் திருவுருவத்தைக் காணும் பேறு எனக்குக் கிடைக்கவேயில்லை. உன்னைப் பாமாலைகளால் துதிக்க நினைத்தேன். அதற்கும் வழியில்லை. இந்த அற்பன் உன்னை என்ன பாடுவது என்று நினைத்து விட்டாய் போல் இருக்கிறது. எனக்கு வழிகாட்டுத் தாயே. உன்னை என் இசையால் அலங்கரிக்க வேண்டும்.” என்று, அன்று மாலை தான் வழிபட்டுத் திரும்பி இருந்தார். “என்ன முத்துஸ்வாமி!… பிறவி என்னும் மாயையில் சிக்கி, இன்னும் உனக்குக் கலக்கம் தெளியவில்லையா? வருந்தி, வருந்தி மகன் அழைத்தாயே என்று இருக்கும் இடத்தை விட்டு உனக்காக ஓடோடி வந்து இருக்கிறேன். நீ தானே சொன்னது உன் கீர்த்தனைகளால் என்னை அர்ச்சிக்கப் போவதை! இப்பொழுது எதற்கு இந்தத் திகைப்பு?
அஞ்ஞானம் விலகி மெய்ஞ்ஞானம் பிரகாசிக்கட்டும். சங்கீத உலகிற்கு முடிசூடா மன்னனாய் ஜொலிப்பாயாக.” என்ற பிஞ்சின் வார்த்தைகள் கேட்டு, அதிர்ந்து, வந்து இருப்பது, தான் தேடிக் கொண்டு இருக்கும், ‘தஞ்சையின் காவல் தெய்வம்’ என்பதை உணர்ந்து சாஷ்டாங்கமாய் பாதம் பணிந்தார்.
கண்கள் கண்ணீரைச் சொரிய, கைகள் பக்தியில் தொழ, “மகிஷாசுர மர்தினிம் நமாமி மகா நிலைய கபர்தினிலிம். மகிஷாசுர மர்தினிம் நமாமி மகா நிலைய கபர்தினிலிம். மஹிஷ மஸ்தக நா தான பேத விநோதினிம்.” என்ற பாடலை, ‘நாராயணி ராகத்தில்’ பாடி முடிக்க, அவர் முன் தங்கத் தகடு ஒன்று, நிசும்பசூதனி படம் செதுக்கப்பட்டு, இவர் இப்பொழுது பாடிய கீர்த்தனை செதுக்கப் பட்டு இருந்தது. குழந்தை இருந்த இடத்தில் அப்பொழுது ஒரு தீப ஒளி மட்டுமே தெரிந்து, பின்னர் மறைந்து போனது.
(சங்கீத சக்கரவர்த்தியான இவர் நிசும்பசூதனி கோயிலை உண்மையில் கண்டு பிடித்தாரா ,அந்த அம்பிகையின் திரு உருவச்சிலையை கண் குளிர கண்டாரா என்பது பற்றிய விளக்கம் ,குறிப்பேடு எங்குமே இல்லை.
அவரின் இந்த ஒரு கீர்த்தனை பற்றி -அதாவது நிசும்பசூதனி என்ற தெய்வத்தை பற்றி மட்டும் உலகளவில் பல பல்கழை கழகங்களில் இன்றளவும் ஆராய்ச்சிகள் நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது .
எப்படி, ‘ஆதித்ய கரிகாலனின் மரணம் ,அவன் யாரால் கொள்ள பட்டான், எதற்காக கொள்ள பட்டான்’ என்பது எப்படி தமிழகத்தின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் விடுவிக்க முடியாத புதிராய் இருக்கிறதோ, அப்படியே முத்துஸ்வாமி தீக்ஷதரின் இந்த பாடலும், வரலாற்று பக்கங்களில் இருந்து காணாமல் போன தஞ்சையின் காவல் தெய்வத்தின் கோயிலும் ,பிரதிஷ்டை செய்ய பட்ட சிலையின் இருப்பிடமும் இன்றளவும் விடுவிக்க முடியாத புதிரே ..)


forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!