அத்தியாயம் 4
அத்தியாயம் 3
ஆண்டு -2019 மாதம்- ஏப்ரல்.
இரவு -1. 00 மணி.
இடம் -காஞ்சிபுரம்.
கண்டு கொண்டு இருந்த கனவு நின்று விட, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள் சமுத்ரா.
அந்தக் கனவு வந்தபிறகு மனதில் எழும் இனம் புரியாத மகிழ்ச்சி, வழக்கம் போல் அவள் இதழில் புன்னகையை உருவாக்கியது.
நினைவு தெரிந்த நாளாய் அவள் காணும் கனவு. அதில் வரும் பழகிய முகம். எங்கோ, ஏதோ ஒரு ஜென்மத்தில் விட்ட குறை தொட்ட குறையாய் அவள் அருகே கண்டு மகிழ்ந்த, அவளுக்கு மட்டுமே சொந்தமான ஒரு ஆணின் முகம் அது.
இன்றும் வழக்கம் போல் புன்னகை என்னும் அம்பால், அவள் மனதைக் கொய்து கொண்டு இருந்தது.
‘உங்களுக்கு இதே வேலை… தினம் தினம், ‘கனவில் மட்டுமே வருவேன்’ என்று அப்படி என்ன அடம்?… நேரில் வந்தால் ஆகாதோ?…
என்றாவது ஒரு நாள் என் கண்ணில் படாமலா போய்விடுவாய்? அன்றைக்கு இருக்கிறது. அன்றைக்கு இழுத்து வைத்து, ‘இந்த உதடா சிரித்துச் சிரித்து என்னை இம்சிக்கிறது?’ என்று அதிலே அழுந்த முத்தம் இடுகிறேன்’ என்று தன் மனதிலிருந்த உருவத்திடம் மல்லுக்கு நின்றவளின், உறக்கம் களைந்து விட, தன் அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்து, மேஜை மேல் இருந்த வெள்ளைத் தாள்களில் தன் கை திறமையைக் காட்ட ஆரம்பித்தாள்.
சமுத்திரா உயிரோட்டமாய் வரைவதில் நிபுணர். நுண்கலை மாணவி.
இருபத்தி ஐந்து வயது பூம்பாவை. ஐந்தடி பத்து அங்குலம் உயரம்.
ரோஜா நிறம்.
மொத்தத்தில் ரவி வர்மன் ஓவியம்.
கம்பன் வடித்த காவியம்.
பார்க்க, நடிகை அனுஷ்காவின் நகல்.
எவ்வளவு நேரம் வரைந்து கொண்டு இருந்தாளோ, இருமல் சத்தம் ஹாலிலிருந்து கேட்க, வரைந்த தாள்களுடன் ஹாலுக்கு கதவைத் திறந்து சென்றாள்.
அங்கே அவள் தந்தை ‘தேவராஜன்’ புத்தக கடலில், ஓலைச் சுவடியென்னும் வெள்ளத்தில் தலை மூழ்கி, ஏதோ குறிப்புகளை எழுதிக் கொண்டு இருந்தார்.
வீட்டிற்குள் புத்தகம் இருந்து பார்த்து இருக்கிறோம். ஆனால், புத்தக கடல், தேவராஜன் வீட்டில் பார்க்கலாம்.
இந்திய முன்னாள் ஜனாதிபதி ஒருவர், ராஷ்டிரபதி பவன் விட்டுச் செல்லும் போது, ஒரு முழு ரயில் முழுக்க சென்றதாம் அவர் வாங்கி படித்த புத்தகங்கள்.
அதுவே மிகக் குறைவு என்று சொல்லும் விதமாக மூன்று மாடி கட்டி, வீட்டையே நூலகமாக மாற்றி இருந்தனர் அவரும், அவர் மகளும்.
இதை எல்லாம் படித்தார்களா என்று வியந்தால், அங்கு உள்ள எந்தப் புத்தகத்திலிருந்து எந்தப் பக்கம் எடுத்துக் கேள்வி கேட்டாலும். பதில் ஒரே நொடியில் வரும் அளவுக்கு இருவருக்கும் போட்டோ கிராபிக் மெமரி.
‘எந்திரன் சிட்டி ரோபோ’ முடிதிருத்தகம் கடையில் செய்யும் வேலை மனிதர்களாய் இவர்கள் செய்து கொண்டு இருந்தனர்.
தேவராஜன் இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். சிற்பக்கலை, வானியல் சாஸ்திரம், மனையடி சாஸ்திரம், மொழி மாற்றம் என்று பல்வேறு துறைகளில் முனைவர் பட்டங்களாக வாங்கி குவித்தவர்.
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் அமைதியாய் இராமல் எதையாவது சொந்த செலவில் ஆராய்ந்து கொண்டு இருப்பவர்.
“அப்பா!… இப்போ டைம் என்ன தெரியுமா? ஒரு மணி அப்பா. தூங்காம இன்னும் என்ன செய்துட்டு இருக்கீங்க?… கம் ஆன். கோ டு பெட். டேக் ரெஸ்ட்.” என்றாள் சமுத்திரா.
“ஓஹ் டியர்… நீயா?… சாரி டா டிஸ்டர்ப் செய்துட்டேனா?… அது ஒன்றும் இல்லை,நேற்று என் மாணவன் ஒருவனைச் சந்தித்தேன். அவன் நெடுஞ்சாலை துறையில் பொறியாளராக இருக்கிறான்.
சாலை விரிவாக்கப் பணியின் போது, ‘வேகவதி’ ஆற்றங்கரையில் மண் பரிசோதனை செய்து இருக்கிறார்கள்.
அப்போது இது அவன் கையில் கிடைத்திருக்கிறது. என்ன ஏது என்று யாருக்கும் புரியலை. எல்லாம் அந்தக் கால எழுத்துக்கள். என்னைப் பார்க்கச் சொன்னான். சீ… திஸ்.” என்றவர் அவள் கையில் தங்கத் தகடு ஒன்றைக் கொடுக்க, அதில் நிசும்பசூதனி படம் செதுக்கப்பட்டு, கீழ் சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகள் தென்பட்டன.
சமுத்திராவின் கையிலிருந்த காகிதத்தில் அவள் வரைந்த அதே ஓவியம் போல்.
“என்ன கடவுள் இது டாட்?” என்றாள் அம்பிகையின் உருவ அமைப்பில் கவரப்பட்டவளாய், தான் அதுவரை வரைந்து கொண்டு இருந்த ஓவியமும், அதே தேவியின் திருவுருவ சிலை என்பதை உணராதவளாய்.
“இது தஞ்சை காவல் தெய்வம் நிசும்பசூதனி. பார் எட்டு கை. ஒவ்வொரு கையில் விதவிதமான ஆயுதம். காலின் கீழ் அரக்கன். வலது காலைப் பாதியாக மடித்து, இடது காலை நீட்டி, இதே வடிவத்தை, ‘பிலடெல்பியா அருங்காட்சியகத்தில்’ உள்ள ‘தெற்கு இந்தியன் டிஸ்பிலே’ காட்சியகத்தில் பார்த்து இருக்கிறேன்.
க்ரானைட் சுதைச் சிற்பம் அது.
‘மதுரை மதன கோபால ஸ்வாமி கோயில் சிதிலங்களிலிருந்து, ‘அடினலைன் கிப்சன்’ என்ற பணக்காரர் கண்காட்சிக்கு வைத்து இருந்தார். அங்கு விசிட்டிங் ப்ரோபஸ்ஸோர் ஆகப் போனபோது பார்த்து இருக்கிறேன்…” என்றார் தேவராஜன்.
“இப்படியொரு கடவுளா! கேள்விப்பட்டது இல்லையே டாட்.” என்றாள் சமுத்திரா யோசனையுடன்.
“இது தஞ்சை காவல் தெய்வம். சோழ அரசர்களின் உயிர். விஜயாலய சோழன் ஸ்தாபித்த கோயில்.
வைரத்தால் செய்த ஏழு அடி சிலை என்று வாய் மொழி கேள்வி.
வைர சிலை என்பது உண்மையா, பொய்யா என்பது தெரியவில்லை. ஆனால் விஜயாலய சோழன் கோயில் கட்டியது உண்மை. வழிபட்டது உண்மை என்று, ‘திரு ஆலங்காடு செப்பு தகடுகள்’ சொல்லுகிறது.
ராஜராஜன் சோழன் அரசனாய் பட்டம் சூட்டப் படுவதற்கு முன்பே அந்தச் சிற்பம் காணாமல் போய் இருக்கிறது. கோயிலும் இருந்த இடம் தெரியவில்லை. பலர் இன்று வரை தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.” என்றார் தேவராஜன்.
“ஆனால் தஞ்சை காவல் தெய்வம் காஞ்சிபுரத்தில் ஒரு ஆற்றங்கரையில் என்ன டாட் செய்யுது ? இங்கே இது எப்படி கிடைத்தது?” என்றாள் சமுத்ரா.
“நோ ஐடியா… இந்தக் கீர்த்தனை 1800களில் சங்கீத மும்மூர்த்தியில் ஒருவர் ஆன முத்து ஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனை. அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள், ‘அவர் நான்கு மாணவர்கள் வேண்டுகோளை ஏற்று, அங்கே கோயிலைத் தேடியதாகச் சொல்கிறார்கள்’. அதன் பிறகு அவர் பாடிய கீர்த்தனை தான் இது.
சங்கீத சக்கரவர்த்தியான இவர் நிசும்பசூதனி கோயிலை உண்மையில் கண்டு பிடித்தாரா, அந்த அம்பிகையின் திரு உருவச்சிலையைக் கண் குளிர கண்டாரா என்பது பற்றிய விளக்கம், குறிப்பேடு எங்குமே இல்லை.
அவரின் இந்த ஒரு கீர்த்தனைபற்றி, அதாவது நிசும்பசூதனி என்ற தெய்வத்தைப் பற்றி மட்டும் உலகளவில் பல பல்கலைக் கழகங்களில் இன்றளவும் ஆராய்ச்சிகள் நடை பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
எப்படி ஆதித்திய கரிகாலனின் மரணம், அவன் யாரால் கொல்லப்பட்டான், எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது தமிழகத்தின், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் விடுவிக்க முடியாத புதிராய் இருக்கிறதோ, அப்படியே முத்துஸ்வாமி தீக்ஷிதரின் இந்தப் பாடலும், வரலாற்றுப் பக்கங்களிலிருந்து காணாமல் போன தஞ்சையின் காவல் தெய்வத்தின் கோயிலும், பிரதிஷ்டை செய்யப் பட்ட சிலையின் இருப்பிடமும் இன்றளவும் விடுவிக்க முடியாத புதிரே!
இப்போது அந்தக் கீர்த்தனை தங்கத்தகட்டில் பொறிக்கப் பட்டு இருக்கிறது. அம்பிகையின் திரு உருவப் படத்தோடு.” என்றார் தேவராஜன்.
“ரொம்ப வேதனையா இருக்கிறது இல்லை டாடி?… இது எல்லாம் கேட்க?” என்றாள் சமுத்திரா.
“எதைச் சொல்றே சமி?” என்றார் தேவராஜன்.
“ஒரு சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்த மன்னன் அமைத்த கோயில். அந்த வம்சாவளி வழி பட்ட விக்கிரகம். இன்று மண்ணோடு மண்ணாய். ‘மதுரை மதன கோபால சுவாமி கோயில் சிதிலம்’ ஏதோ ஒரு கோடீஸ்வரனின் பொழுதுபோக்கு டிஸ்பிலே!
மதுரைக்கும் பிலடெலிபியாவிற்கும் என்ன டாட் சம்பந்தம்? இங்குக் கோயில்களில் வைத்து வழிபட வேண்டிய விக்ரகங்கள் எல்லாம் எவனோ ஒருவன் காசுக்குக் கடத்தப்படுவதும், இன்றைய தலைமுறை, ‘எது கடவுள்?…. நிரூபித்துக் காட்டு’ என்று சொல்வதை புதுப்பாங்கு என்று நினைப்பதும், எத்தனையோ வழிபாட்டுத் தளங்கள் கேட்பார் அற்று சிதிலமாகிக் கொண்டு இருப்பதையும் தான் சொல்கிறேன்.
ஏன் தஞ்சை பெரிய கோயில் கட்டின ராஜராஜனின் உடல் தெருவில் தானே இருக்கிறது!….
ஊழல் செய்தவனுக்கு மணிமண்டபம், நாட்டைத் துண்டாக்க முயல்பவனுக்கு அரச மரியாதை, கொள்ளை, கொலை ஈடுபடுபவன் தலைவன் என்று தூக்கி வைத்துக் கொண்டாடும் பைத்தியங்கள் இருக்கும் வரை, இந்த அவலங்கள், கலாச்சார சீர்கேடுகள் நடக்க தான் செய்யும் டாட்.
கையில் இருப்பது அறிய வைரம் என்று புரியாத மூடர் கூடம்…” என்றாள் சமுத்திரா கண்கள் கலங்க.
“உண்மை தான். ‘உள் கடந்து நமக்குள் சென்று அறிய வேண்டியது கடவுள்!…’.
அறிவியல் மூலம் நிரூபித்தால் தான் ஏற்றுக் கொள்வேன் என்று சொல்வது, ‘விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர்’ என்பது தான்.
சிந்து சமவெளி நாகரிகத்தில் பசுபதி வழிபாடு உள்ளது. தாய் வழிபாடு முறை இருந்து இருக்கிறது. ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான மதுரைக்குக் கிடைக்காத அங்கீகாரம், அகமதாபாத்துக்கு தானே உலக அரங்கில் கிடைத்து இருக்கிறது.
நான் இயக்குநர் ஆக இருந்த வரை வெளிநாடுகளில் காட்சிப் பொருளாய் இருந்த, பல பஞ்சலோக சிலைகளை மீண்டும் அந்த அந்தக் கோயில்களுக்கே திருப்பிக் கொண்டு வந்து பூஜைகள் செய்ய வைத்து இருக்கிறேன்.
எத்தனையோ தெருவோர கோயில்கள் கேட்பார் ஒருவேளை தீபம் கூடக் காட்டப்படாமல் தான் இருக்கிறது.” என்றார் தேவராஜன் வேதனையுடன்.
“டாட்!… ஒரு குடும்பம் நன்றாய் இருக்க வேண்டும் என்றால் அங்கே கடவுள் வழி பாடு அவசியம். முன்னோரை வணங்குதல், முன்னோர் வழிபாடு அவசியம். முன்னோர் வழிபாட்டின் படி, நாம் ஏழு தலைமுறையின் வாழ்த்தைப் பெறுகிறோம். அதே போல் ஒரு ஊர் நன்றாய் இருக்க வேண்டும் என்றால் அந்த ஊரில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஒரு வேளை விளக்காவது எரிய வேண்டும்.
கோயிலுக்குக் குடும்பத்தோடு செல்வது வழக்கமாய் இருந்தால் தான், நம்மைச் சுற்றி நல்லது நடக்கும். நாம இதைச் சொன்னால், ‘லூசுங்க’ என்று சொல்வார்கள்.
இதையே பூசி முழுகிச், ‘சங்கர் இயந்திரன் 2. 0 வில் auraன்னு’ ஆங்கிலத்தில் சொன்னா, ‘ஒஹ் இஸ் இட்?’ என்று வாய் பிளப்பார்கள். இதையே தானே அப்போவே, ‘ஆலயம் தொழுதல் சாலவும் நன்று’ என்று சொல்லி வைத்தார்கள்.” என்றாள் சமுத்திரா.
“யெஸ் டியர்… கரெக்ட்… நமக்குத் திரைப்படம், ஷாப்பிங், வாட்ஸாப்ப், முகநூல் இருந்தால் போதும். நேர ஒருவரிடம் முகம் கொடுத்துப் பேச மாட்டோம். ஆனால் முகநூலில் உலகத்திற்கே கலங்கரை விளக்கம் போலே வழி காட்டிட்டு இருப்போம்.
மணிக் கணக்கில் மால்களில் அலைய முடியும். ஆனால், நம் முன்னோர்களின் சிறப்பை விளக்கும் கோயில்களுக்கு ஏதாவது பெஸ்டிவல் நேரம் மட்டும் தான் போவோம்.
இது மாதிரி போனால் அடுத்த தலைமுறை, “who needs god?” என்று கேட்கத் தான் செய்வார்கள். எவனாவது கோயில் இடித்தா, பாலிடிக்ஸ்காகத் திருவிழாக்களை ‘இடையூறு’ என்று சொல்லி ஸ்டே வாங்கினால், எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடச் செய்ய மாட்டார்கள். பண்பாடு காக்க இதே நாட்டில் அரசர்கள், ரத்த ஆறே ஓட விட்டனர். இப்போது சாமியும் ஒரு hobby. ” என்றார் தேவராஜன்.
“ஒகே டாட். நேரம் ரொம்ப ஆச்சு. வாங்க வந்து படுங்க. உங்களுக்கு யாரும் சிலை எல்லாம் வைக்கப் போவதில்லை. இப்படி மனசு குமுறி பேசிட்டே இருந்தால், வருஷம் முழுக்க கூடப் பேசிட்டே தான் இருக்கலாம்.
அந்த அளவிற்கு, அதிக முரண்பாடு கொண்ட மக்கள் நாம். கடாரம் /மலேஷியா, இலங்கை, தாய்லாந்து, தும்சக் (சிங்கப்பூர்) எல்லாம் வென்று சீனத்திற்கு முதல் வர்த்தகத்திற்காக தூதர்களை அனுப்பிய அரசனையே யாரும் கண்டுகொள்வதில்லை.
நீங்க, நான் எல்லாம் ஜூஜிபி. கத்தி பேசி, நம்ம தொண்டை தண்ணீர் தான் வத்தி போகும். மீதி வேலைக் காலைப் பார்த்துகோங்கோ.
சொல்ல மறந்துட்டேன்… நாளைக் காலை நான் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வரை போகும் வேலை இருக்குப்பா. வரச் சொல்லி இருக்கிறார்கள்.” என்றாள் சமுத்திரா.
“ஓஹ் உன் கல்லூரி தோழி. கவி! அவ தானே மிஸ்ஸிங்..?” என்றார் தேவராஜன்.
“ஆமா அப்பா… கல்லுரிக்கு சொந்தமான அனாதைகள் இல்லத்தில் வளர்ந்தவ. ஒரு வாரமாய் காலெஜ்க்கே வரலை. அதான் காவல்துறை கம்பளைண்ட் கொடுத்தேன்.
இப்போது என்னவோ ஏசிபி பார்க்க வேண்டும் என்று கூப்பிட்டு இருக்கிறார். போய்விட்டு வரேன்.” என்றவளின் பேச்சைத் தலை அசைத்து அங்கீகரித்தவர்,
“ஒண்ணு நோட் செய்தாயா சமி?… மழைக் காலத்திலேயே இந்த அளவுக்கு மழை கொட்டி தீர்க்காது. இப்போது ஏப்ரல் மாதத்தில் இப்படி மழை கொட்டிட்டு இருக்கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள ஆறு, குளம் எல்லாம் நிரம்பிட்டு இருக்கு. இன்னும் அதி தீவீர மழைக்கு வாய்ப்புண்டு என்று வேற சொல்லறாங்க.
உனக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரிலை… பத்து வருடம் முன்பே இங்கே ஆற்றின் மதகு உடைந்து ஆட்சியர் அலுவலகம் பக்கம் எல்லாம் வீடுகள் முழுகிப் போனது. இப்போது என்ன நிலைமையோ?” என்றார் தேவராஜன்.
“ஆமா டாட்… பருவ நிலை மாற்றம் இந்த வருடம் தன் வேலையைக் காட்டுது. அதான் அமெரிக்கா அதிபர் டிரம்ப் ட்வீட் செய்தார் இல்லையா, ‘புவி வெப்பமாவதற்கும், பருவ நிலை மாற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை, அது புருடா, சாட்சி காட்டுங்கள்’ என்று.. அதான் இயற்கையே அவர் கேட்ட சாட்சி கொடுத்துட்டு இருக்கு.
என்ன அமெரிக்காவில் காட்ட வேண்டிய சாட்சியை இயற்கை தமிழ்நாட்டில் காட்டிட்டு இருக்கு. மழை அதிகமா இருக்கும் என்று வார்னிங் கொடுத்து இருக்கிறார்கள். நீங்கப் பாட்டுக்கு இதை நோண்டறேன் , அதைக் கண்டுபிடிக்கிறேன் என்று எந்தக் குழியிலாவது விழுந்து வைக்கப் போகிறீர்கள்.
அப்புறம் கவுண்டமணி கதை ஆகிட போகுது. எந்த ட்ரைனேஜ்ஜிலிருந்து உங்களைக் கண்டுபிடிக்க முடியும்?” என்றவள் தலையில் நோகாமல் குட்டினார் தேவராஜன்.
அந்தக் குடும்பத்தில் அவர்கள் இருவர் மட்டுமே. தேவராஜன் மனைவி முன்பே இறைவனடி சேர்ந்து இருந்தார். தந்தைக்கும், மகளுக்கும் பாசப் பிணைப்பு மிக அதிகம்.
“வாய்… வாய்… இந்த வாய் இருக்கிறதே!.. உன்னை எவன் கட்ட போறானோ அவன் பாடு திண்டாட்டம் தான்.
‘யம்மா!… சாமி ஆளை விடுன்னு’ கஷாயம் கட்டிட்டு காசிக்கு ஓடப் போறான்.” என்றார் தேவராஜன்.
‘கட்டிக்க போகிறவன்’ என்று அவர் சொன்னதும், மனதில் மீண்டும் வந்து சென்றது அந்த முகம்.
தானாய் புன்னகை இதழில் மலர, “ஐயம் வைட்டிங் டாட். காத்திட்டு தான் இருக்கேன் என் மன்னவன் வருகைக்காக. வந்ததும்,
‘மன்னவன் வந்தானடி தோழி!…
மஞ்சத்திலே இருந்து,
நெஞ்சத்திலே அமர்ந்த என் மன்னவன் வந்தானடி…’ என்று பாடறேன்.” என்றாள் சமுத்திரா.
“இப்போது இதைக் கேட்டு, நான் ஓட போறேன்” என்று தன் அறைக்குச் சென்று விட்டார் தேவராஜன்.
மீண்டும் தன் அறைக்கு வந்த சமுத்திரா, தன் கையில் இருந்த தாள்களை அங்கிருந்த டேபிள் மேல் வைத்து விட்டு, புன்னகையுடன் உறக்கத்தை தழுவ ஆரம்பித்தாள்.
சமுத்திராவும், தேவ ராஜனும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவர்கள் இருவர் மட்டுமே இருந்த அந்த வீட்டில் இன்னொருவரும் நுழைந்தார்.
வெளி கதவுகள் பூட்டியது பூட்டிய படி இருக்க, எப்படி அந்த வீட்டிற்குள் அவர் வந்தார் என்பது புரியாத புதிரே.
யாராவது பார்த்திருந்தால் நிழலிருந்து உயிர் பெற்று வந்தார் என்று தான் சொல்வார்கள்.
சத்தம் ஏற்படுத்தாமல் தேவராஜன் அலுவலக அறைக்குள் வந்தவர், பூட்டப்பட்டிருந்த டேபிள் ட்ராயர் மேல் கை வைக்க, அது சாவி இல்லாமல் தானாய் திறந்து கொண்டது.
அந்த ட்ராயருக்குள் துணியில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த தங்க தகடினை கையெடுத்து வணங்கியவர், தன் கையைத் திறக்க அதில் எங்கிருந்தோ வந்த மலர்கள் இருக்க, அதனை அந்தத் தகட்டின் மேல் வைத்து வழிபட்டார்.
வாய் எதையோ முணுமுணுக்க, கண்கள் மூடியிருக்க, கைகளில் மலர்களும், குங்குமமும் மந்திரத்தால் வருவது போல் தொடர்ச்சியாய் வந்து கொண்டிருக்க பல மணி நேரம் அங்கேயே நின்று தன் பூஜையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
தன் பூஜையை முடித்து அவர் கண்களைத் திறக்க, அவர் கண் முன் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது சமுத்திரா வரைந்திருந்த நிசும்பசூதனி உருவம் இருந்த தாள்.
புன்னகையுடன் அவர் கையெடுத்து வணங்க, வரையப்பட்ட அம்பிகையின் உருவப்படத்தின் கண்கள் திறந்து மூட, இதழ்களோ புன்னகைத்து கொண்டிருந்தது.
அங்கே வரையப்பட்ட தாள் மறைந்து, நிஜ வைர சொரூபமாய், அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தது சோழ மன்னன் விஜயாலயன் உருவாக்கி, பல ஆயிரம் வருடங்களுக்கு முன் காணாமல் போய் இருந்த தஞ்சை காவல் தெய்வம் நிசும்பசூதனியின் வைர திரு உருவ சிலை.
7 அடி உயரமுள்ள நிசும்பசூதனியின் திருமேனி எட்டுக் கரங்களோடு இருக்க அன்னை, பீடத்தின் மீது ஒரு காலை மடித்து, மறு காலைத் தரையில் கிடக்கும் அசுரனின் தலைமீது பதித்தவாறு அமர்ந்திருந்தாள்.
திருக்கரங்களில் சூலம் மற்றும் வில், மணி, கத்தி, பாசம், கேடயம், கபாலம், வலது காதில் பிரேத குண்டலம், இடது காதில் பெரிய குழை, இடம் பெற்றிருந்தது.
தலையிலோ கேசம் தீச்சுடரென மேலெழுந்து காற்றில் நான்கு புறமும் பறக்க, முகத்தில் ஓர் உறுதி. அசுரப்பூச்சிகளை அழிக்க வேண்டும் என்ற சீற்றம்.
இருக்கையின் கீழ் நான்கு அசுரர்கள் சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் சிக்கித் தவிக்கிறார்கள். மூச்சுத் திணறுகிறார்கள். தப்பி ஓட யத்தனிக்கிறார்கள்.
பெருமிதம் மிகுந்த வடிவம்.
தீமையை ஒடுக்கி, அருட்கருணை வழங்கும் துர்க்கா பரமேஸ்வரி, 1,150 ஆண்டுகளுக்கும் மேலாக நிசும்பசூதனியாகக் அங்கே காட்சி கொடுத்து கொண்டிருந்தாள்.
தேகத்தை சிலிர்க்க வைத்து, பிறவி என்னும் பெருங்கடலை கடக்க உதவும் தெய்வீக காட்சி அது.
தொண்ணூற்றாறு விழுப்புண்கள் சுமந்த விஜயாலயன், காவிரிக்கரையில் எண்ணிலா கற்கோயில்களை எடுத்த ஆதித்தன் அவன் மகன் பராந்தகன், சிவஞான கண்டராதித்தன், செம்பியன் மாதேவியார், அரிஞ்சயன், சுந்தரன், ஆதித்த கரிகாலன், மதுராந்தக உத்தமன் என்ற சோழ மாமன்னர்களும், ஈடு இணையற்ற ராஜராஜசோழனும், கங்கையும் கடாரமும் கொண்ட ராஜேந்திர சோழனும், ராஜாதிராஜனும், குலோத்துங்கனும், பின்வந்த சோழப் பேரரசர்களும், தேவியர்களும், சேக்கிழார் பெருமானும், கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தரும், சோழ சாம்ராஜ்யத்து தளபதிகளும், போர்வீரர்களும் இந்தத் தேவியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிப் பெற்ற பேரரருளை சொல்லவே பல நூல்கள் தேவைப்படும் என்று சொன்னால் மிகையல்ல.
திருவாலங்காட்டுச் செப்பேட்டின் வடமொழிப்பகுதி
‘ ஸத்ருஞ்சி(ங்வசி)த்ராம் அளகாபிராமம் வ்யாப்தாம் பராமாத்மவதூமிவாசௌ
தஞ்ஜாபுரீம் சௌத ஸுதாங்கராகாம்
ஜக்ராஹ ரந்தும் ரவிவம்ச தீப:
(திருவாலங்காட்டுச் செப்பேடு வடமொழி ஸ்லோகம் 46/202)
அத பிரதிஷ்டாப்ய நிஸு(சு)ம்ப சூதநிம்
ஸுராஸுரைர் அர்ச்சிதபாத பங்கஜாம்
சதுஸ் ஸமுத்ராம் பர ஸோபி புவம்
பபாரமாலா மித தத் ப்ர தத் பிரஸாதத!…’
(திருவாலங்காட்டுச் செப்பேடு வடமொழி ஸ்லோகம் 47/202)
“அசுரர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்பட்ட பாத தாமரைகளை உடையவளும், நிசும்பன வதைத்தவளுமான துர்க்கையை விஜயாலயன் பிரதிஷ்டை செய்தான்.
அவளுடைய கருணையினால் நான்கு கடல்களையும் ஆடையாகக் கொண்டு திகழும் பூமி தேவியை ஒரு மாலையைப் போலத் தாங்கினான்.” என்று போற்றப்பட்ட தெய்வம் அங்குக் காட்சியளித்து கொண்டிருந்தது.
அந்த நள்ளிரவில் அப்படியொரு பூஜை, தங்கள் வீட்டில் நடப்பதை அறியாமல் ஆழந்த உறக்கத்தில் இருந்தனர் சமுத்திராவும், தேவராஜனும்.
அப்படியொரு, ‘தெய்வ நாடகம்’ நடப்பதை அறியாமல் உறங்கியது அவர்கள் இருவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த காஞ்சிபுரம் நகரமும் தான்.
◆◆◆


forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!