arrow_back
காஞ்சித் தலைவன் அத்தியாயம் 5
காஞ்சித் தலைவன் chevron_right பகுதி 5 / 19

அத்தியாயம் 5

visibility 533
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

சமுத்திராவும், தேவராஜனும் தங்கள் வீட்டிற்குள் நடக்கும் தெய்வ நாடகத்தை அறியாதவர்களாய் உறங்கிக்  கொண்டிருக்க,  அதன் தொடர்ச்சி    காஞ்சிபுரத்தின்   வேறொரு பகுதியில்   தொடர்ந்தது.

ஈராயிரம்   ஆண்டுகளுக்குப்  பழமை வாய்ந்த, ‘கச்சி, கச்சிப்பேடு, தேவபுரி’ அழைக்கப்படும் நகரம்  காஞ்சிபுரம்.

அதன்  நகர வீதிகள் பல நூற்றாண்டுகளுக்கும்  மேலான  ரகசியங்களை  தன்னுள்  புதைத்து கொண்டு  நிமிர்ந்து   நின்று   இருந்தது.

‘கா’  என்றால்  பிரம்மா,
‘அஞ்சி’  என்றால்  வழிபடுதல்.
சிவபெருமானைப்  பிரம்மா வணங்கிய தளம்    என்பதால், ‘காஞ்சிபுரம்’ என்று  பெயர் வந்ததாகவும், ‘காஞ்சனம்’ என்பது மருவி, ‘காஞ்சி’ என்று ஆனது.

‘காஞ்சனம்’  என்றால், ‘பொன்னாலான நகரம்’ என்றும் பெயர் வந்ததாகச் சொல்லப்படும் நகரம் ஆழ்ந்த   உறக்கத்தின்   பிடியிலிருந்தது.

பலத்த  மழை  வேறு  பேய்து  கொண்டிருக்க,  ஆள் நடமாட்டமின்றி தெருக்கள் வெறிச்சோடி  இருந்தது.
காஞ்சிபுரத்தில் ஓடிக்  கொண்டிருந்த,  கம்பம்  நதிக்கரையில் அமைந்திருந்தது  ஏகாம்பரேஸ்வரர்   திருக்கோயில்.

அந்த நகரின் பெருமைகளைச் சங்கத் தமிழில்  பாட்டாய்  பாடிக் கொண்டு, அந்தக் கோயிலின் பிராகாரத்தில்   நடந்து  கொண்டிருந்தார்  அவர்.

அவர்  கையில்,  ‘குங்கிலியம்’    எனப்படும்     .சாம்பிராணி   மணம்  பரப்பிக்  கொண்டிருந்தது.

இன்னொரு கையில் சமுத்திரா வரைந்திருந்த அதே  தாள்.

‘ஏகம்பத்தின்  கீழ் நான்கு வேதங்கள், நான்கு மாமர  கிளையாய்  அமைந்து   இருக்க,  மூவாயிரத்தி ஐநூறு ஆண்டுகள் பழமையான அந்த  மரத்தின்,  நான்கு  புற  கிளைகளும்,  நான்கு ருசியில்,     மாம்பழத்தைக்   கொடுக்கும்   விந்தை    நிறைந்த  மரம்  தல  விருட்சமாய்   அமைந்திருந்தது.

அதன்  அடியில்  மண் லிங்கமாய் , பார்வதி அணைப்பில்   கொலு  வீற்று  இருந்தார்  சிவ   பெருமான்.  பார்வதி  அணைப்பில், ‘தழுவக் குழைந்தவர்’  என்ற    திருப்பெயரோடு.

காசியில்    இறந்தால்  முக்தி.
திருவண்ணாமலையை வழிபட்டால் முக்தி.
ஆனால்,   காஞ்சிபுரத்திற்கு  வராமல்  ஒரு   கணம்   நினைத்தாலே   முக்தி.

தசரதனுக்கு,  ‘ஸ்ரீராமன்’  மகனாய்  பிறக்க  வரம் அளித்த,  ‘காமாக்ஷி’  அம்பிகை  திருத்தலம்.

‘நித்திய கன்னியாய்  இருந்து,   சுமங்கலிகளின் திருமாங்கல்யத்தை   காப்பவள்’  அரசாளும் ஊர்.

ஆண்களின் மிகவும் அழகன், ‘புருஷேஷு விஷுணு’ என்ற பதத்திற்கு ஏற்பத், ‘தேவராஜ சுவாமி’  அருளும்  திருத்தலம்.

  கந்தபுராணம்  அரங்கேறக்,  ‘கந்தனே’ நேரில் வந்த இடம்.
தலைவிதியை எழுதும் சித்திரகுப்தனுக்கு கோயில் உள்ள திருத்தலம்.

ஆயிரத்தியெட்டு  லிங்க  மூர்த்தங்கள்  ஒரே  கோயிலில்  உள்ள  ஊர்.
ஏதோ   ஒன்று   காஞ்சியின்   மற்ற  எல்லா   ஊர்களையும்  விட,  மிகச்  சிறப்புப்  பெற்றது        இந்தத்  திருத்தலம்.

நித்தம் ஏதாவது பண்டிகை, கோயில் திருவிழா என்று  சமயமே  வாழ்க்கை  முறையாக  இருக்கும் புண்ணிய  பூமி  காஞ்சிபுரம்  என்றால்  மிகையல்ல.

ஒரு பக்கம் சைவம், ஒரு பக்கம் வைணவம், ஒரு பக்கம் பௌத்தம், ஜைனம், சாக்தம் என்று எல்லா  வகையான  ஹிந்து  சமயக்  கொள்கைகளை  உள்  அடக்கி,  ‘எல்லா ஆறுகளும் கலப்பது   கடலில்’   என்ற   தத்துவத்தைச் சொல்லாமல்  சொல்லிக்  கொண்டு  இருக்கிறது.

சம்பந்தர்,  அப்பர்,  சுந்தரர்,  மாணிக்கவாசகர்   என்ற  சைவ குரவர்களால் தேவாரத்தில் பாடல் பெற்ற  திருத்தலம்.

இரண்டாம்  நூற்றாண்டில்,  ‘காமக்கோட்டம் /குமரகோட்டம்’  என்று  சங்க  பாடல்கள்  போற்றிய  திருத்தலம்.

‘திரு  கச்சி ஏகம்பம்’, ‘ஏகாம்பரநாதர் திருக்கோயில்’, மணிமேகலை, பெரும்பாணாற்று படை 300கி. மு  அளவில்   குறிக்கப்பட்ட  கோயில்.

இருபத்தி   மூன்று   ஏக்கர்  பரப்பளவு.
ஆயிரம்    கால்    மண்டபம்,    வாகன   மண்டபம், சரபேச   மண்டபம்  கடந்து  சென்றால், முதல்    பிரதிட்சண       மண்டபத்தில்     அறுபத்து    மூன்று நாயனமார்கள் திருவுற  சிலைகள்  அலங்கரித்தன.

அதைத்  தாண்டிச் சென்றால் கர்ப்ப கிரகத்தில் மண் லிங்கம்.

அதைச்  சுற்றி  ஆயிரத்து  எட்டு லிங்க    மூர்த்தங்கள்.

அவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்த  சஹஸ்ர    லிங்கம்.’

மேற்சொன்ன காஞ்சிபுரத்தின் பெருமைகளை பாடலாய்  பாடி  கொண்டு, நள்ளிரவில்   பூட்டியிருந்த  திருக்கோயிலினுள்   நடந்து கொண்டிருந்தார்  அவர்.

அவர் அணிந்து இருந்த காவி உடை அவர் சித்த புருஷர், யோகி என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

அந்த முகத்தில் அப்படியொரு தேஜஸ்.
காருண்ணியம். சாந்தம்  நிலவிக்  கொண்டிருந்தது.

‘தேவோ  மனுஷ  ரூபினே’  என்று வாக்கியத்திற்கு ஏற்ப  அந்தக்  கோயிலின் மூர்த்தமே, மனித ரூபத்தில்  அங்கே நடந்து கொண்டிருப்பதாய்  தோன்றும்  அளவிற்கு  அவரைச்  சுற்றி  ஒரு  ஆன்மீக அலை.

அந்தக்  கோயிலின்  பிரகாரத்தில்  ஆயிரத்து  எட்டு லிங்க  மூர்த்தங்கள்.

அந்தப்  பிரகாரங்களை மனிதர்கள்  தான் கட்டினார்களா,  இல்லை  தேவ  சிற்பி    என்றழைக்கப்படும்  மயன்  என்பவர்  நிர்மாணித்தாரா  என்று    வியக்கும் அளவிற்கு அத்தனை நீளம், அகலம், உயரம்.

தொழில்நுட்பம்  என்ற  ஒன்று  இல்லாத   காலத்தில்  அத்தனை  நுணுக்கமாய்,  கட்டிட, சிற்ப     சாஸ்திர அறிந்த முன்னோர்களின் திறமைக்கு அளவுகோல்  தான்  ஏது?

‘என்ன வளம் இல்லை
இந்தத் திருநாட்டில்? 
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ?…’ என்ற   பாடல்  வரிகளுக்கு,  ஒரு பானை  சோற்றுக்கு,   ஒரு  சோறு  பதம்  என்று  சமய,     பண்பாடு,  கலை,  நாகரீகம், கலாச்சாரத்தின்      சான்றாய்,    வீர பரம்பரைக்கு  எடுத்துக்காட்டாய் வான்  உயர்ந்து  நின்றது  அந்தத்  திருக்கோயில்.

உலகத்தில்   அதிசயம்   ஏழு   என்று   சொன்ன மூடன் யார்?….

இந்தியாவில்  உள்ள ஒவ்வொரு   கோயிலும்,  அதன்  சிற்ப,  கட்டிட,   இறையாண்மை   லட்சக்கணக்கான  அதிசயங்களை, மாய,    மந்திரங்களை,    அளப்பரிய  சக்தியைத்  தன்னகத்தே  கொண்டது. 

 அந்தப்   பிரகாரங்களை  நடந்து கடக்கும்போது, நம்மையும்  அறியாமல்   எத்தனை  சிறிய மனித பிறவி  இது  என்ற  எண்ணம்  தோன்றி விடும்.   வார்த்தைகளால் விவரிக்க முடியாத, உணர்ந்து பார்த்து,  அனுபவித்து   அறிய  கூடிய  ஒரு     ஆன்மீக  அலை  அங்கே  விரவி  கிடந்தது. 

முதல் லிங்கத்தின் அருகே அவர் வந்து நிற்கவும், கோயிலுக்குள்   இருந்து   ஒரு  நாயின் ஊளை கேட்கவும்   சரியாய்   இருந்தது.

புன்னகையுடன்   அவர்    குங்கிலியத்தைக் கீழே வைத்து  விட்டு   நிமிர, அவர் அருகே ஓடி வந்து நின்றது  ஆள்  உயரக்  கருநிற  நாய்  ஒன்று.

‘நாய்’  என்று   சொன்னால்  சரியல்ல.
ஒரு சிறிய கன்றுக்  குட்டியின்  அளவில்  இருந்த அந்த நாயின்  தோரணை,  அது  நாய்  தானா  என்ற   சந்தேகத்தை  நிச்சயம்  எழுப்பும்.

“வா காலா!…  எங்கே  பூஜை   நேரம்  ஆகி    விட்டதே!   இன்னும்  நீ  வரவில்லையே என்று தான்   சிந்தித்துக்  கொண்டிருந்தேன்.  இன்னும் சில காலத்திற்கு நீ தான் இந்த லிங்க மூர்த்தங்களுக்குப்   பூஜை   செய்ய  வேண்டி     இருக்கும். சில  காலம் வெளியே பணியாற்றக் கட்டளை வந்திருக்கிறது.” என்றவர் அந்த ஆயிரத்து எட்டு லிங்க  மூர்த்தங்களுக்கும்  அந்த நள்ளிரவில் பூஜை செய்ய  ஆரம்பித்தார்.

 

ஒவ்வொரு லிங்க மூர்த்தத்தின் முன் தங்கக் குடம் நீர் நிறைந்து இருக்க, அதிலிருந்து குவையில் நீர் எடுத்து அபிஷேகம் செய்த அவர், தூபம்,தீபம், மலர்,வில்வம் கொண்டு அர்ச்சனை செய்தார்.இவர் ஒரு லிங்க மூர்த்தத்திற்கு என்ன செய்கிறாரோ அது மீதம் உள்ள ஆயிரத்து ஏழு லிங்கங்களுக்குத் தானாய் நடந்தது.

கடைசியாகத் தீப ஆராதனை காட்டியவர், கடைசியாய் மலர் ஒன்றைச் சமர்ப்பிக்க அருகில் சென்று பார்த்தால் தான் தெரியும் அது ரோஜா மலர் அல்ல, ரோஜா மலரின் நிறத்தில், வடிவத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் வைரம் அது என்று.

ஆயிரத்து எட்டு லிங்க மூர்த்தங்களின் முன்பும் ஆயிரத்து எட்டு வைர மலர்!

தீப ஒளி பட்டு, அந்தப் பிரகாரமே செந்நிறத்தில் ஜெகஜோதியாய் ஜொலித்து கொண்டிருந்தது. சூரியனின் கதிர்கள் கூட அந்த வைரங்கள் ஜொலிப்பிற்கு முன் தோற்று விடும் என்று தான் தோன்றியது.

தீபாராதனையை அவர் திரும்பி ஏந்தி நிற்க, அந்தக் கருநிற நாய் இருந்த இடத்தில் இப்பொழுது நின்றிருந்த ஆஜானுபாகுவான ஒருவன், அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

இங்கே பூஜை முடிந்ததும் அந்தப் பிரகாரத்தில் இருந்த கதவொன்றை அவர் திறந்து உள் நுழைய, அவர் இருந்த இடம் காஞ்சி காமாக்ஷி தேவியின் கருவறைக்குள்.

இரு கோயில்களுக்கும் இடையே நிச்சயம் எழுநூறு மீட்டர் இடைவெளி உண்டு. ஒரே கணத்தில், பூட்டியிருந்த ஒரு கோயிலிலிருந்து, இன்னொரு கோயிலுக்குள் செல்வது கண்கட்டு வித்தை போல் தெரிந்தாலும், மறந்து போன ஆயகலைகள் அறுபது நான்கில், ‘அணிமா, மஹிமா’ போன்ற சித்த சக்திகளில் ஒன்றான,’லகிமா’ என்ற சக்திகளில், அதுவும் ஒன்று என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மிக நன்றாய் தெரியும்.

“அம்மா!… உன் கட்டளையை ஏற்று வந்து விட்டேன்.”என்று அவர் கரம் கூப்பித் தொழ, அந்தக் கர்ப்பக்கிருகத்தில் சர்வாலங்கார பூஷிதையாய், மஞ்சள் நிற பட்டு, பாவாடை சட்டையில் அமர்ந்திருந்த சிறு குழந்தை ஒன்று இவரைப் பார்த்துச் சிரித்தது.

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 6

காலம் -965 A. D. வேகவதி  ஆற்றின்  ஒரு கிளை ஆற்றில்,  நள்ளிரவில்  தன் மார்பில் பூமாலை   போல்     சாய்ந்து  நின்ற  பெண்  மாலையைக் கண்டு, 'யார்   இந்தத் தேவகன்னிகை?... அப்ஸரஸ்சா?...மோகினியா.?... தடம்   மாறி   வந்து    விட்ட தேவலோக     ரம்பையா?....  இல்லை ஊர்வசி!...  இல்லை…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்