arrow_back
காஞ்சித் தலைவன் அத்தியாயம் 6
காஞ்சித் தலைவன் chevron_right பகுதி 6 / 19

அத்தியாயம் 6

visibility 532
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

காலம் -965 A. D.

வேகவதி  ஆற்றின்  ஒரு கிளை ஆற்றில்,  நள்ளிரவில்  தன் மார்பில் பூமாலை   போல்     சாய்ந்து  நின்ற  பெண்  மாலையைக் கண்டு,
‘யார்   இந்தத் தேவகன்னிகை?… அப்ஸரஸ்சா?…மோகினியா.?…
தடம்   மாறி   வந்து    விட்ட தேவலோக     ரம்பையா?….  இல்லை ஊர்வசி!…  இல்லை மேனகை!…

இத்தனை  அழகு,  யவனம்,  ஆகர்சனம்  இது வரை   எந்தப்   பெண்ணிடமும்   நான்     கண்ட  தில்லையே!’ என்று கை வளைவில் நின்ற, ஜல  மோகினியை  கண்டு அந்த இளவரசன் சித்தம் தடுமாறிப்  போனான்.

மெல்லிய  பாலின்  மேலாடை போல் இருந்த அவள்  மேலாடை,  நீரில் நனைந்து நிலவொளியில் அவள் அழகின்    ரகசியங்களை, அந்தக்  கள்ளனின்  கண்களுக்கு  விருந்து படைத்தது கொண்டு இருந்தது.

கைகளிலிருந்த, ‘இடை  இருக்கிறதா  இல்லை  மேகக்   கூட்டத்தின்  கலவையா’  என்று  தடுமாறிப்  போனான்.

‘பூந்தோட்டத்தின் ஒட்டுமொத்த மேல் அழகினை தாங்க  முடியாத  கொடி  தள்ளாடுவது போல் இவள் இடை வளைந்து நெளிந்து துவண்டு விடாதா?’ என்ற ஆராய்ச்சியில் அவன் மூளை இறங்கியது.

‘என்னவளின்  தோள்களோ  சேர  அரசனின்     நாட்டில்  இருக்கும்  களிறுகளின் தந்தத்தின் மென்மைக்கே  சவால்  விட்டுக்  கொண்டு  கொண்டிருக்கின்றன.

குறிஞ்சி நிலத்தின் செழுமை, பூந்தோட்டத்தின்  வளமை, தஞ்சை தரணியின் நெற்கதிர் கர்வம், இவள்   யவனங்களில்  மிளிர்கிறது.’  என்று  அங்கு  ஒரு  கவி   சக்ரவர்த்தி   உருவாகி   கொண்டிருந்தான்.

அந்த பெண் மயிலாளின் பேரழகை கண்டு, ஆணழகனின் மனம், ‘சோமபானம், திராட்சை ரசம், சிவ மோகி எனப்படும் செந்தட்டி(கஞ்சா)’ ரசம்  பருகாமல் வானில் பறக்க ஆரம்பித்தது.

உடல்  முழுதும் அந்த நீரிலும் உஷ்ணம் ஏறத் தலை  கிறுகிறுக்க  நின்றான்  அந்த  மோகதாரி.

வாய் விட்டு, ‘க்ளுக்’ என்று சிரித்த அவள் சிரிப்பொலி,  ‘பாண்டிய முத்துப் பரல்கள் சிதறிய  ஓசையை  விட  மேலானது.
இணை கூட்டவே   முடியாது’   என்று தோன்றியது அந்த இளவரசனுக்கு.

சித்தம்  கலங்கினாலும், அவனுள் இருந்த ராஜ வம்ச  ரத்தம்,  வளர்ப்பு  முறை,   நாட்டின் சக்ரவர்த்தி   ஆகப்   போகும் கடமை, மனதில் வளம்  வரச்  சட்டென்று பேயாட்டம் ஆடிய இளமை உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், அவளை  விட்டு  விலகி  நின்று,
“மன்னிக்க  வேண்டும்  பெண்ணே!…  இது    பெண்கள்   நீராடும்   இடம்   என்று   தெரியாது.   தெரியாமல்  இங்கு  வந்து  விட்டேன்.  இது என்னை  மீறி   நடந்த  தவறு.  மன்னிக்கவும்.”     என்றவன்   இரண்டு   எட்டு   எடுத்து  வைக்க,   மீண்டும்   அவளின்  நகையொலி   அவன்   விலகலை    நிறுத்தியது.

“இளவரசருக்குச் சேவூர் (புதுக்கோட்டை) செருக்களத்தில் கைகளில் தானே   காயம் ஏற்பட்டதாய் தகவல் வந்தது. ஒரு வேளை சிரசில் (தலையில்) அடிபட்டதை யாரும் கவனிக்கவில்லையோ? சித்தம் கலங்கி,நள்ளிரவில்  இப்படி  வாய்  வார்த்தைகள்  வருவது தான்  விந்தையாக  இருக்கிறது.” என்றாள் அந்த ஜல மோகினி.

அவள்  பகடி (வேடிக்கை) உரையைக் கேட்ட காவலனின்  முகத்தில்  மெல்லிய புன்னகை அரும்பியது.

தஞ்சை  பெண்களுக்கே  உண்டான  பகடி   பேச்சு பற்றிச் சொல்லவா வேண்டும்!

கவி சக்ரவர்த்திகளையே  தலை சுத்த வைத்தவர்கள்   அல்லவா!

பாடி  பரிசில்  பெற,  ‘தங்கள்  வதனம்    அந்தத்     திங்கள்,  அம்புலி’  (நிலாவிற்கு  உள்ள வேறு பெயர்கள்) என்று    வர்ணித்தால்,
‘புலவரே!… நீங்கள் அந்த  அம்புலிக்குச்  சென்ற  புஷ்பக    விமானம் எங்கே?’ என்று  கேட்டாளாம்  ஒருத்தி.

இன்னொருத்தி,  ‘தஞ்சை   பதுமைகள்   நாங்கள்.  எங்கள்   அரசர்   ஆட்சியின்    கீழ் வளர்வோமே  தவிர, அந்தத் திங்கள் போல் குறைந்து மறைய மாட்டோம்’  என்று  பாடி  பரிசல்  வாங்க  வரும்    புலவர்களை  எல்லாம்     தலையால்   தண்ணீர்    குடிக்க   வைத்த   கன்னியர்கள்  ஆயிற்றே.

ஆனாலும் அந்த நாட்டிற்கே இளரவசன், இதற்கு எல்லாம் பதில் பகரவில்லை என்றால்,
“பெண்ணே!… அறியாமையில் வார்த்தைகளை விடுகிறாய். இந்த ஆதித்தியனின் சிரசில் கை வைப்பவன் இனி மேல் தான் பிறந்து வரக்  கூடத் தயங்குவான்.  அப்படி இருக்கும் போது அதில் காயம் ஏற்படும் என்ற  உந்தன்  கூற்று  எவ்வகை?” என்றான்     இளவரசன்  திரும்பி  நின்ற  நிலையிலிருந்து        விலகாமல்.

“ஓஹ்!…” அவள்    உதடு    குவித்துச் சொன்ன       அந்தச்  சொல்  அவன்  மனதில்  அம்பாய்  தைத்தது.

‘அரசவை  இசை  கலைஞ்சர்களின்  இசை  கூடத் தோற்று   விடும்  இவளின் குரல் வளம் முன்…
ஒற்றை  வார்த்தையில்,  உயிர்  வரை  இனிக்க வைக்கிறாளே  இந்த   மாய   மோகினி.’ என்று  மனதிற்குள்   சொல்லிக்   கொண்டான் ஆதித்யன்.

“தாங்கள்  உரைத்தது  உண்மை  எனில்,  இது  காட்டுப்பூக்கள்  வசிக்கும் கானகம்.  நாட்டுப்    பூக்கள்   நீராடும்    படித்துறை   இல்லை  என்பது    எப்படி   நினைவு  பெட்டகத்தில்    கவனத்திற்கு  வராமல்  போனது?” என்று அவள்  கேட்டபிறகு  தான்,  ‘தான்   இருக்கும்  இடம்  அடர்ந்த  காடு   என்பதும், அங்கே   பெண்கள்  நீராடும்  துறை, ஆண்கள்  நீராடும்  துறை என்று எப்படி  இருக்க  முடியும்?

அதை  உணர்த்தவே,  இந்தப்  பைங்கிளி   குறிப்பால் உணர்த்துகிறாள்’ என்று விளங்க, அவளை  நோக்கித்   திரும்பினான்.

அவளைக்  கண்ட  பிறகு  பேச்சிற்குத்  தான்  என்ன பயன்  அங்கே?
“யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
-செம்புலப் பெயனீரார்”
‘உன்  தாயும்  என்  தாயும்  யாரோ!..
என்  தந்தையும் உன்  தந்தையும் எந்த வழி உறவு?..
நானும்   நீயும்   ஒருவரை   ஒருவர்     பற்றி   எதுவும்  அறிந்தது  இல்லை. ஆயினும் சிவந்த பூமியில் சேரும் மழை நீர் போல் நம் இதயங்கள் காதலில்   கலந்தனவே.’  என்ற  பாடல்    இளவரசன் வாய்  மொழியாய்  கூற,  அவளின்  சிவந்த   செங்காந்தள்   வதனம்   மேலே   சிவந்து, கண்கள் நாணத்தால்  ஜலமகளை    தழுவிக்    கொண்டது.

எழுந்த புன்னகையை மறைக்க, அவள் பற்கள் அதரத்தை  (கீழ் இதழ்)  மெல்லக்  கடிக்க,  மலரின் மது  உண்ட  வண்டாய்  சித்தம்  கலங்க  நின்றான் அந்த  ஆண்மகன்.

போராடி அவன்  அணைத்த  காதல்  தீ,  அவனுள் சுழன்று  அடிக்க  ஆரம்பித்தது.

“நெற்களஞ்சிய காவலருக்கு, சோற்றுக் கவளம் அதிகமாகி, மதர்ப்பில் சித்தம் கலங்கி விட்டதா இல்லை  கண்ணில்  ஏதும்  பழுதா?” என்றாள்     பகடியாக.

‘சோழ வள நாடு    சோற்றுடைத்து’ என்று சொல்வார்கள். நெற்களஞ்சியமாய் இருந்த  தஞ்சை, களிறுகளை வைத்து நெற்கதிர்களைப்   போர்  அடித்ததாக  வரலாறு  சொல்லும்.

அதனால் தஞ்சை பூமி செல்வச் செழிப்பிலிருந்தது.

எந்த அளவிற்கு என்றால் காக்கை    கூட்டத்தை  விரட்ட,  மகளிர் தங்கள் வைர காதணி களைத் தூக்கி வீசும் அளவிற்கு!

அந்த  காதணிகள்  நகரத் தெருக்களில்       கேட்பார்  அற்று  கிடக்குமாம்.  கீழே விழுந்த  அந்தக்  கம்மலை  மீண்டும்  எடுத்துப்  போடக்  கூட  மாட்டார்களாம்.

பசும்  நெய்யும்,  சோறும்  வருவோர்   போவோருக்கு  எல்லாம்  மிகப்  பெரிய   அண்டாக்களில்  தான்  ஒவ்வொரு  வீட்டிலும்  சமைக்க அதன் வாசம் குமரி  முனைவரை  வீசுமாம்.

அதைச்    சொல்லிக் காட்டி, ‘அந்த நாட்டிற்குக் காவலன்   நீ.   உனக்கும்   நெய்     சோறு     உண்டதால் மயக்கமா?’ என்று பகடி பேசிக் கொண்டு    இருந்தாள்  அந்த  வேல்  விழியாள்.

இதைச்    சங்க  இலக்கியம்,  ‘வஞ்சப்  புகழ்ச்சி அணி’ என்று சொல்கிறது.

அதாவது, ‘இகழ்வது போல் சொல்லித், தஞ்சையின் பெருமைகளைக் கூறி  அதன்  காவலனே  என்று  புகழ்வது’.

தஞ்சைக்காரிக்கு  இத்தனை  சொல்வளம்    இருக்கும்  போது, அதை ஆளப் போகும் எதிர்கால  மன்னனுக்கு   இருக்காதா?

“என்ன   செய்வது    பெண்ணே!… எங்கள் தஞ்சை நிலம்    காவிரித்    தாயின்     வளமையால்  நெற்களஞ்சியமாய்    மட்டுமே  இருக்கிறது   என்று    நினைத்தேன். ஆனால் இப்பொழுது அல்லவா தெரிகிறது!… அது  அழகிற்கே  களஞ்சியமாய்  பெண்களை  மாற்றிக்  கொண்டு  இருக்கிறது  என்னும் விந்தை.” என்றான்  ஆதித்தியன்  சொல்வளத்திற்கு  அவனும்    சளைத்தவன்   இல்லை   என்பதைப்   பேச்சில்  காட்டி.

“உங்கள் செவிகளுக்கு இன்னும் தகவல் வந்து சேரவில்லையோ இளவரசே?…  இந்த நீர்மகளின் மேல் தங்கள் திருப்பாதம் பட்டவுடன், வெட்கம்    என்ற சிவந்த வதனம் கொண்டுவிட்டாள்.

அதில் இறங்கி நீராடும் மூதாட்டிகள் கூடக் குமரிகளாய் மாறும்  விந்தை  உங்களால் தான் நடக்கிறது.” என்றவள்  கலகலவெனச் சிரித்து, இளவரசனின் நெஞ்சத்தை  கொய்து  கொண்டிருந்தாள்.

“இந்தக் குமரியின் சிரிப்பின் முன் தென்னம்பாண்டி முத்துக்கள்  கூட இணையாக முடியாது தான்.”  என்றான்  ஆதித்தியன்.

அதுவரை    சிரித்த  அவள்  முகம்  சட்டென்று  சீற்றத்தைக்  காட்டியது.

“இளவரசே! இது வைரி (பகைவன்) முடிக்குச் சொந்தமான முத்துக்கள் இல்லை. தஞ்சை பெருவள நாட்டின் நெல்மணிகள். சோழ நாட்டின் சிறு பாத துகள்   என்ற    பெருமையே    எனக்குப்  பெருமை.” என்றவள் விழிகளை   வாட்களாகி   அவன்  மேல் வீசி விட்டு, ஆற்று   நீரின்    உள்  முழுகி, ‘வாலை மீனுக்குச்   சளைத்தவள் தான்  அல்ல’  என்று  வெகுதூரம்  நீந்திக்  கரை   ஏறி  இருட்டில்   மறைந்தாள்.

இளரவசன் அவளின் நாட்டுப் பற்று கண்டு, பெருமை மேலிட்டவனாக, இதழில் முழு புன்னகையுடன் அவளைப் பின் தொடர்ந்து சென்று படித்துறைகளில்  ஏறினான்.

அந்தக்  காரிருளில்  அவளை  நிலா  ஒளியில் தேடினான் ஆதித்தியன். சற்று தொலைவில் தீப்பந்தத்தின்  ஒளியில் அவளைக் கண்டவனின் இதயம்  ஒரு  கணம்  நின்றே  விட்டது.

அதற்குள்     வேறு ஆடைக்குள் மாறி இருந்த, அவள் கார்குழலை விரிய விட்டு அதன் அடியில் சிறு  முடிச்சிட்டு,  அங்கே   வளர்ந்து    இருந்த     காட்டுப்   பூக்களைக் காதின் அருகே அணிந்து,  அவளே ஒரு மலர்வனமாய், ஆற்று நீரில் தாழ்ந்து இருந்த மரக்கிளை ஒன்றின் மேல் ஒயிலாக   அமர்ந்து ஒரு இரு கால்களையும் நீரில் விட்டு, நீரினை அளைந்து  கொண்டு இருந்தாள்.

அவளின்   மேனியழகினை     மறைக்க    முடியாமல்    தோல்வியைத்    தழுவிக் கொண்டு இருந்தன  அவள்    மேல்  ஆடைகள்.
அவளின்  சங்கம் (கணைக்கால்),  நுசுப்பு (இடை), துத்தம் (வயிறு), கூற்பரம் (முழங்கை), அங்குலி (விரல்), வதனம் (முகம்), பாலிகை (உதடு), விலோசனம் (கண்கள்)  ஒவ்வொன்றிலும்    விவரிக்க  முடியாத  தேவ அழகு   ஒளிந்திருக்க, அதனை  விரித்துச்  சொல்ல  எத்தனை   ஆயுகம் (வாழ்நாள்) எடுத்தாலும்  போதாது  என்று    தோன்றியது   ஆதித்தியனுக்கு.

அவன்  மிக  அருகில்  வருவதைக்  கண்டும்  அவன்  புறம்  முகம்  திருப்பவில்லை  அந்த          மதிமுகத்தாள்.

“இந்தச்  சீற்றம் ஏற்படத் தேவையே இல்லையே! போரில் வென்று பாண்டிய நாட்டினையும் நம் நாடாக  மாற்றிய   பிறகு, அந்தத் தென்னம்பாடி முத்துக்கள், சோழருக்குத் தானே உரிமை?
சோழ   நாட்டிற்குச்   சொந்தமான முத்தினை    பற்றிப் பேசினால் சோழ நாட்டின் காரிககைக்கு ஏன்  இந்தச்   சீற்றம்?..  இந்த முத்துக்கள்                 சோழனுக்கு     உரிமையானது     தானே?” என்ற அவன் பேச்சில், பேச்சிழந்து  நின்றது    அந்தப்  பெண்மை.

‘நீ  எனக்கு  உடையவள்  தானே? ’ என்று கேட்டால்,  பெண்மையால்    என்ன     செய்ய   முடியும்?.

வேகமாய் சுழித்தோடும் வேகவதி ஆற்றின் மேல் திரும்பியது   அவள்    பார்வை.  அந்த ஆற்றினை  போல்  அவனைச்  சேர்ந்து விடத் துடிக்கும்   மனதை  ஆணையிட்டுத்  தடுக்க   முடியாதவளாய்,   அவன்  கேள்விக்குப்    பதில்  அளிக்க  முடியாதவளாய்  வதங்கி    நின்றாள்  அவனை  மட்டுமே  தன்னுடையவனாக  நினைத்து  வாழ்ந்து  வரும்    அவனுடையவள்.

‘வாய் விட்டுத் தான் இதை உரைக்க முடியுமா? அவன் யார்! நாளைத் தரணியை ஆளப் போகும் சக்கரவர்த்தி.  அவளோ  சாதாரண    குடி             மகள்களில்  ஒருத்தி.

இது, ‘அறநிலை இன்ப வியல்’  கிடையாதே!

அவன்   அரசகுலம். உயர்ந்த குடி.  உயர்ந்த  குடியால்   தானே, ‘அநுலோமர்’ நாளை நாட்டை ஆளும்  சக்கரவர்த்தி’  பிறக்க முடியும்?’

இவன் உரியோனாகக் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல உள்ளம் துடித்தாலும், அவள்  மூகையாக (ஊமையாக)  இருந்து  விட    முயன்றாள்.

அவன்   விடும்  மன்மத  பானங்களை  எப்படி  திசை   திருப்புவது  என்று   புரியாமல்    தவித்தவளின்  கண்களில்  தென்பட்டான்    இளரவசனின்   மெய்     காவலன்  முத்தழகன்.

முத்தழகனின்   கைகளில்  மின்னிக்      கொண்டிருந்தது    குறுவாள்   ஒன்று.
இதழில் புன்னகையுடன்,

“இளவரசே!… உங்கள்   சிலன் (தோழர்) என்னை நோக்கி வீசத் தயாராய் இருக்கும் குறுவாளை இறக்கினால் நன்றாய் இருக்கும். குத்துவதாய்   இருந்தால் நெஞ்சில் குத்தச்        சொல்லுங்கள்.

சோழவள  தேசத்துப்  பெண் நான்.  காயம்   நெஞ்சில்  பட்டு,   உயிர்  பிரிந்தால் தான்   நிம்மதியாய்   இருக்கும்.   அதே சமயம் உங்கள் தோழரின் சிரம், உடலை விட்டுப்   பிரிந்தால்   என்னைக்  குற்றம் சாட்டி    பயனில்லை.” என்றாள் அவள்.

அவள்   பேச்சைக்   கேட்டவுடன்  ஆதித்தியன் மீண்டும்  வியந்து, பின் புன்னகையுடன் அவளை விழுங்குவதைப் போல் பார்த்து வைக்க, அழகன் தன்   மறைவிடத்திலிருந்து  வெளியே  வந்தான்.

“யார்  நீ? ” என்றான்  சந்தேகத்துடன்.

“ஹ்ம்ம்!… பார்த்தால் தெரியவில்லையோ உமக்கு? நான்  காரிகை  என்பது?” என்றாள் அவள்.

“நீ  காரிகையா  இல்லை,  பகை  வீட்டுக்  காளகூடமா    (ஆலகால  விஷம்)   யாருக்குத்     தெரியும்?     கூர்வாட்களை  தாங்கிக்   குமரிகளும்      வருவதுண்டு.”  என்றான் அழகன்.

“காளகூடத்திற்கும் (ஆலகால விஷத்திற்கு),     அமரிக்கும் (அமுதம்) வேற்றுமை   தெரியவில்லை எனில்    அதற்கு   நான்  என்ன   பிணையா?”          என்றாள்  அவள்.

இரு   ஆடவரின்  முன் நிற்கும் அச்சம், மடம், நாணம்,  பயிர்ப்பு  என்று   எதுவும்  அவளிடம்  தென்படவில்லை.

பேச்சில்  ஒரு       எள்ளல்  இருப்பதைக்    கண்டான்    இளவரசன்.

ஏதோ  குடிமைகளைக் கேள்வி  கேட்கும் அரசியின்  தோரணை  அவளிடம்.

‘இவளா ஆலகாலம்?
இவள் ஒரு கன்மேய்வூ (மாடப்புறா), நடையில்  ஒரு  அளகு (மயில்), குரல் ஆஹா!…. காளகண்டம் (குயில்), உடலோ    திண்மையான   சாசம் (முயல்), கழுத்து   கொக்கரை (வலம்புரிச் சங்கு), நிறம் பிஷணம் (செஞ்சந்தனம்),  இதழ் கழையில் (கரும்பு ரசத்தில்) ஊற வைத்த  மாதுளங்கம் (மாதுளை).

இவளை,’ எப்படி இந்த அழகன் ஆலகாலம் என்று சொல்கின்றான்? இவனுக்குக் கண்ணில் தான் ஏதோ பழுது. அரண்மனைக்குத் திரும்பியவுடன் மாமாத்திரர் (ஆயுள்வேதியர் /மருத்துவர்) இடம் தான் காண்பிக்க வேண்டும்’. என்று அவள் பால் சாய்ந்து விட்ட மனம் தலைவனாய் பிதற்றி (உளறி) கொண்டு  இருந்தது.

“பகடி பேச்சு தேவையில்லை பெண்ணே.   என் வாள் வீச்சில் ஒரே கணம் பத்து சிரங்கள் உருளும்.  எங்களிடம் உன் சாகச பேச்சு வேண்டாம்.”என்றான் அழகன்.

“ஒஹ்ஹ!…. என் தலையைக் கொய்து விட்டு அயனம் (வழி.) தெரியாமல், இந்தக் கானகத்தில் அலைந்து கொண்டு  இருப்பது  உங்கள்  அவா   என்றால்  நான்  என்  பேடு (சிற்றூர்) செல்கிறேன்.

ஒன்று உறுதி அண்ணலே (அண்ணா) என் சிரம்     விழுவதற்கு முன் உங்கள் சிரம் வானில் பறந்து இருக்கும்.    அப்படி  என்னையும்  மீறி,  உங்கள் வாள் என் சிரம் கொய்தால், என் தாதை (தந்தை) உங்கள் குலத்தையே வேரறுக்காமல் இருக்க மாட்டார்.”என்றாள்  அவள்.

“உன் தாதை என்ன பௌரவரோ (குருகுலத்து ஆசிரியர்). எங்கள்  வாள் வீச்சுக்கு எதிர் நிற்க?” என்றான்  அழகன்.

“உண்மை   தான் அண்ணலே. என் தாதைப் பௌரவரே!…. அதுவும்  உங்களுக்கும், இளவரசருக்குமே…” என்றவள்  தன் ஆடை மறைவிலிருந்து, தேவநாராயணர்   இலச்சினை எடுத்து   விளக்கொளியில்  காண்பிக்க, ஆதித்தியனும்,     அழகனும்   அதிர்ந்து    நின்றனர்.

அப்பொழுது தான் அவர்களுக்குப் புரிந்தது,    தேவநாராயணர்  சொன்ன  வழிகாட்டி, அவள் தான் என்றும், அவள் தான் அவரின் குமாரத்தி என்பதும்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 7

அத்தியாயம் 5  ஆண்டு -2019 மாதம்- ஏப்ரல். -இரவு 2. 00 மணி. இடம் -காஞ்சிபுரம். ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான      சரித்திரத்திற்க்கு,   பல்வேறு மன்னர்களின்    வீர, தீரச் சாகசத்திற்கு  சான்றாய், பல சமயங்களை வளர்த்து,  ஆன்மீக    நகரமாய், கல்வி செல்வத்தின் உறைவிடமாய், …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்