காதல் கடன் – 10
காதல் கடன்
(10)
“அப்பறம் ஒரு முக்கியமான விஷயம், உங்க சென்னைக்காராளுக்கு வேணும்னா நாத்தமடிக்கிற சென்ட் போட்டுக்கற பழக்கம் இருக்கலாம், எங்க ஸ்ரீரங்கத்துக்காராளுக்கு சென்ட் போட்டுண்டு நாத்தமடிக்கிற பழக்கம் இல்லை” என்று கூறிவிட்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டாள்…
அதுவரையில் ராதிகாவின் அருகாமையால் நெஞ்சுக்குள் நிறைந்திருந்த லேசான மஞ்சள் வாசம் கலந்த சுவாசத்தை மெதுவாக வெளியே விட்டான் பரத்… “வாயாடி…என்ன பேச்சு பேசறா…பஞ்சுமிட்டாய்…” என்று அவனுடைய வாய் தானாக முணுமுணுத்தது…இதழ்கள் இதுவரை அடக்கி வைத்திருந்த புன்னகையை வட்டியும் முதலுமாக மலரச் செய்தன…
தனக்குத்தானே சிரித்துக்கொண்டவன், அரவிந்த் மற்றும் மேகாவைப் பார்த்து, “டேய், என்னடா செஞ்சு வெச்சிருக்கீங்க, இதுதான் நீங்க அவளுக்கு சர்ப்ரைஸ் குடுக்குற லட்சணமா? அவளைப் பார்த்தா சர்ப்ரைஸ் ஆனா மாதிரி தெரியல, ஷாக் ஆனா மாதிரி இருக்கு, இதுல என்னை வேற தலையிடக்கூடாதுன்னுட்டு, இப்போ பாருங்க, கம்பெனி மானத்தை நார்நாரா கிழிச்சி தொங்க விட்டுட்டு போயிட்டா…” என்றான் சீரியசாக இருக்க முயன்றுகொண்டு…ஆனால் ஏனோ புன்னகைப்பதை மட்டும் அவனால் நிறுத்தவே முடியவில்லை…
“அது வந்து பாஸ்…ஆக்சுவலா அஹல்யா மேடம்தான் மேக்கப் கன்சல்டேஷனுக்கு வரவேண்டியதா இருந்துது…ஆனா கடைசி நிமிஷத்துல இந்த மூணு பொண்ணுங்களை அனுப்பி எனக்கு ஆப்பு வெச்சுட்டாங்க…கேர்ள்ஸ்ன்னா பிங்க் ரோஸ் பிடிக்கும்னுதான் அதை டிசைட் பண்ணினோம்…ஆனா உங்க ஆளுக்கு மஞ்சள் ரோஸ்தான் பிடிக்கும்னு எனக்கு எப்படி தெரியும்?” என்று மேகா விளக்க முயல…
“எப்படி தெரியும்? கேட்டு தெரிஞ்சுண்டாதான் தெரியும், அதைத்தான் நீங்க ரெண்டுபேரும் பண்ணவே இல்லையே…எல்லாத்தையும் நீங்களாவே யூகம் செஞ்சு முடிவு பண்ணினேள்…அதோட விளைவுதான் இது…அவ கேட்டதுல ஒரு விஷயமாவது தப்புன்னு உன்னால சொல்ல முடியுமா?” என்று கேள்வியாக இருவரையும் பார்க்கா, அவர்கள் “இல்லை” என்பது போல் தலையசைக்க… “முடியாதுல்ல, அப்போ எல்லாத்தையும் சரி பண்ணுங்கோ, நோ காம்ப்ரமைஸ், அந்த பொண்ணு சொன்ன ஒவ்வொரு விஷயமும் நாளைக்கு செஞ்சு முடிச்சுருக்கணும், இல்லைன்னா எந்த ஸ்டேஜ்லையும் நானே இவென்டை கேன்சல் பண்ணிடுவேன்,” என்று சற்று காட்டமாகவே கூறியவன் ‘நீங்கள் போகலாம்’ என்பது போல் திரும்பி தனது வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
பரத்தின் ஆஃபீஸை விட்டு வெளியேறிய ராதிகா, ஒரே ஓட்டமாக ஓடிச்சென்று நின்றது பரத்தின் அறையில்தான்…நல்லவேளையாக அப்போது அங்கு யாரும் இல்லை…சுவற்றில் சாய்ந்து நின்றவள் மூச்சை இருமுறை இழுத்து சுவாசித்துத் தன்னை சமன் செய்து கொண்டவள், “டி ராதிகா, ஆனாலும் நோக்கு வாய் கொஞ்சம் நீளம்தான், என்ன தைரியம் இருந்தா இப்பிடி திமிரா பேசிட்டு வந்திருப்பே…இது மட்டும் அம்மாவுக்குத் தெரியணும்…அப்படியே தோலை உரிச்சு காக்காய்க்கு போட்டுடுவா…” என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.
அப்போதும் பரத்தின் அருகாமை தந்த படபடப்பு குறையவே இல்லை அவளுக்கு. தனது கண்களை ஊடுருவிய அவனது கண்களே நினைவுக்கு வர, “அப்பாடி, என்ன கண்ணு அது…அப்படியே உள்ள குதிச்சு நீச்சலடிக்கலாம் போலருக்கு…” என்று நினைத்துக்கொண்டாள்.
“கன்னத்துல லேசா குழி விழறதோ…சரியா தெரியலையே…ஆமா, அந்த புதர் மாதிரி தாடிக்குள்ள குழி என்ன கிணறே இருந்தாலும் தெரியாது,” என்று இடக்கு பேசிய மனதை “போறும் போறும், கொஞ்சம் அடங்கு…இது எங்கேயோ போறது, மரியாதையா, சமத்து பொண்ணா போயி அம்மாகிட்ட ஒக்காந்துக்கோ” என்று அடக்கினாள் ராதிகா.
பின்னர் மெதுவாக கீழிறங்கிச் செல்ல… “இதோ, ராதிகாவே வந்துட்டா பாருங்கோ, வாம்மா உன்னைத்தான் காணோம்னு தேடிண்டு இருந்தோம், இந்தா ராதும்மா, இந்த காபியை கொண்டுபோய் பரத் கிட்ட குடுத்துட்டு வா,” என்று ஒரு கப்பை அவள் கையில் கொடுத்தார் பர்வதம் மாமி.
முடியாது என்றும் சொல்ல முடியாமல், கப்பை வாங்கிக்கொண்டு மீண்டும் மாடியேறினாள் ராதிகா. “ஐயோ சிங்கத்தை இப்போதான் சீண்டிட்டு வந்திருக்கோம், இப்போ திரும்பவும் அதுகிட்டேயே மாட்டி விடறாளே…பிராண்டி பிடுங்கிடப் போறது…ரங்கா, காப்பாத்து,” என்று வேண்டியபடி இரண்டாவது மாடியில் இருக்கும் பரத்தின் அலுவலக அறைக்குள் நுழைந்தாள்.
மேகாவும் அரவிந்தும் சென்றுவிட்டிருக்க, பரத் மும்முரமாக லேப்டாப்பில் ஏதோ வேலையில் மூழ்கியிருந்தான். “பகவானே, தனியா வேற வந்து மாட்டிண்டுட்டோமா…” என்று நினைத்தபடி, “ம்கும்” என்று தொண்டையைக் கனைத்தாள், அவனிடமிருந்து அதற்கான எந்தவொரு சலனமும் இல்லாமல் போகவே, “காபி கொண்டு வந்திருக்கேன்” என்று “நான் மாது வந்திருக்கேன்” தொனியில் வார்த்தைகளைப் பாதி விழுங்கியபடி கூற, நிமிர்ந்து பார்த்தவன், “என்ன?” என்றான்.
“அது…காபி…” என்று கையிலிருந்த கப்பை நீட்ட….
காலையில் செய்தது போல் வைத்துவிட்டுப் போகச் சொல்வான் என்ற அவளுடைய எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, மேஜையை விட்டு எழுந்து, அவளையே பார்த்தபடி மெதுவாக அவளை நோக்கி நடந்து வந்தான். பரத் அவளை நோக்கி முன்னேற, அவள் ஒவ்வொரு அடியாகப் பின்னால் நகர்ந்தாள்.
அவனுடைய பார்வையின் தீவிரம் தாளமுடியாமல் தனது பார்வையை விலக்க முயன்றும் முடியாமல் போக, ஒரு நிலையில் பின்னாலிருந்த புத்தக அலமாரியில் இடித்து நகரமுடியாமல் நின்றுபோனாள் ராதிகா. ஆனாலும் பரத் முன்னேறியபடியே இருக்க செய்வதறியாது தன்னையே குறுக்கிக் கொண்டு கையில் காபி கப்பை கெட்டியாகப் பிடித்தபடி நின்றிருந்தவளின் மிக அருகில் வந்து, அவள் முகத்திலிருந்து தனது பார்வையை விலக்காமலேயே காபி கப்பை வாங்கியவன், கப்பைக் கொடுத்ததும் நகரப் போனவளைத் தடுக்கும் விதமாக அவளுக்கு அருகில் சுவற்றில் கையை வைத்தபடி, காப்பியை ஒரு சிப் எடுத்தான். பின்னர் காபியின் சுவையை அனுபவித்து கண்மூடித் திறந்தவன், தனக்கு மிக அருகில் தனது கைச்சிறையில் நடுக்கத்துடன் அவனையே பார்த்தபடி நின்றிருந்த ராதிகாவைப் பார்த்து “ஹ்ம்ம்…குட் காபி, தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பி தான் வேலை செய்துகொண்டிருந்த டேபிளை நோக்கி புன்னகைத்தபடி நடக்கத் தொடங்கினான்.
பரத் விலகியதும்தான் மூச்சுவிடவே தான் மறந்துவிட்டதை உணர்ந்த ராதிகா, நீண்ட பெருமூச்சு விட்டுத் தன்னைச் சமன்படுத்திக்கொள்ள முயன்றாள். ஜெட் வேகத்தில் துடித்துக்கொண்டிருந்த இதயம் ஒருநிலைக்கு வர மறுக்க, பரத் மீண்டும் ஏதாவது வம்பு செய்வதற்குள் ஓடிவிடவேண்டும் என்று ஓட்டம் பிடித்தவளை, “ம்ம், அப்பறம்…ஒரு நிமிஷம்” என்ற பரத்தின் குரல் நிறுத்த, ஓடுவதற்கு ஏதுவாக, அறையின் வாசலில் நின்றுகொண்டு “என்ன?” என்பது போல் அவனை ஏறிட்டாள்.
“இன்னிக்கி டின்னர் எதுவும் ரெடி பண்ண வேண்டாம்னு அம்மாகிட்ட சொல்லிடு, எல்லாரும் நம்ம ரெஸ்டாரண்டுக்கு டின்னருக்கு போகலாம்,” என்க, வீட்டில் கிட்டத்தட்ட முப்பது பேருக்கும் அதிகமாக இருப்பது நினைவுக்கு வர, “எல்லாருமா?” என்று கேட்டாள் ராதிகா.
“ம்ம், எல்லாரும்தான், எட்டரை மணிக்கு ரெடியா இருக்கச் சொல்லு,” என்று கூறிவிட்டு கையிலிருந்த காலி கப்பை நீட்ட, எவ்வளவு முடியுமோ அவ்வளவு எட்ட இருந்து கப்பை வாங்கியவள், ஒரே ஓட்டம் பிடித்தாள். அவளுடைய ஓட்டத்தைத் தொடர்ந்த அவனது சிரிப்பும் அவளுக்கு நன்றாகவே கேட்டது.
கீழே சென்று பர்வதத்திடம் இதைக் கூற, “நானே சொல்லணும்னு நெனைச்சேன், நல்லதாப் போச்சு,” என்று அனைவரிடமும் இவ்விஷயத்தை அவர் தெரிவிக்க, மாப்பிள்ளை நடத்தும் ரெஸ்டாரண்டைப் பார்க்கப்போகும் உற்சாகம் பற்றிக்கொண்டது ராதிகாவின் வீட்டினருக்கு.
இப்படியே முற்றத்தில் அனைவரும் சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், திடீரென்று ஜகன்னாதன், “ஏம்மா, ராதிகா, நீ ரொம்ப நன்னா பாட்டு பாடுவியாமே, எங்கே ஒரு பாட்டு பாடு பாப்போம்,” என்று கூற, “ஆமாம் மாமா, ராதுதான் எங்க அப்பாவோட ஆல் இண்டியா ரேடியோ, எங்காத்துல ராதிகா வழங்கும் நேயர் விருப்பம் தினமும் நடக்கும் தெரியுமா…” என்று பானு கூற, “ஆமாம் ராதுமா, நலங்குலையே உள்ளை பாடச்சொல்லி கேக்கணும்னு நெனைச்சேன், அதுக்கு சந்தர்ப்பமே அமையலை, இப்போவானும் ஒரு பாட்டு பாடேன்,” என்று பர்வதமும் கேட்க, ராதிகா தர்மசங்கடமாக அவளுடைய அம்மாவைப் பார்த்தாள்.
மரகதமும் “பாடு” என்பதுபோல் தலையை அசைக்க…கண்களை மூடி, தேன்போன்ற இனிமையான மெல்லிய குரலில் ராதிகா பாடத் துவங்கினாள். அவளுடைய பாகாய்க் குழையும் சாரீரத்தில் கேட்பவர் அனைவரும் கட்டுண்டு இருக்க…
“சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்
சின்னஞ்சிறு பெண்போலே…
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக் கீடாக வேறொன்றும் கிடையாது
பேரழகுக் கீடாக வேறொன்றும் கிடையாது ||
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்
சின்னஞ்சிறு பெண்போலே…
மின்னலைப்போல் மேனி… அன்னை சிவகாமி
மின்னலைப்போல் மேனி… அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் ஜடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பின்னல் ஜடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் ||
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்
சின்னஞ்சிறு பெண்போலே…”
என்று பாடி முடித்தாள் ராதிகா. அவள் குரலின் இனிமையிலும் பாடலின் அழகினிலும் மயங்கி அனைவரும் அவள் பாடி முடித்தபின்னும் அமைதியாக இருக்க…மெதுவாய்த் தலை நிமிர்த்திப் பார்த்த ராதிகாவின் எதிரே கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி பரத் நின்று அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென்று மீண்டும் தலையைக் குனிந்துகொண்டவள், “அடக்கடவுளே, இவர் எப்போ வந்தார், நான் கவனிக்கவே இல்லையே…” என்று மெதுவாகத் தலையை மீண்டும் உயர்த்த, கல்லுளிமங்கன் அதே போஸில் அப்படியே நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அந்தக் கள்வன்…”எல்லார் முன்னாடியும் எப்படி வெச்ச கண்ணு வாங்காம பாக்கறார் பாரு, என்ன நெனைச்சுப்பா எல்லாரும்” என்று மனதுக்குள் அவனைத் திட்டியபடி ராதிகாவும் அவனைப் பார்த்து “என்ன?” என்பதுபோல் தலையை உயர்த்த, அவனும் எதுவும் இல்லை என்பதுபோல் தலையை ஆட்டி, “ப்யூடிஃபுல்” என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.
கணவன் தன்னை நோக்கிக் கூறிய முதல் வார்த்தை…மனம் வானில் பறந்தது ராதிகாவிற்கு…வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைக்க முயன்று தோற்றுப் போனாள்.
பரத்துடைய இந்தச் செயல் ராதிகாவிற்கு ஆச்சரியம் தந்ததோ இல்லையோ, பர்வதம் மாமி ஆச்சரியத்தில் மூழ்கித் திளைத்து மகிழ்ந்துபோனார். ராதிகாவின் அருகில் வந்து, அவளுடைய நெற்றியில் முத்தமிட்டவர், “ரொம்ப அழகா பாடினே கண்ணம்மா, உன்னோட குரல் தேனாட்டமா இருக்கு, மனசைத் தொட்டுடுத்து, இந்த இனிமையான குரலக் கேட்டு கரையாத கல்லெல்லாம் கரைஞ்சுடும் போலருக்கே,” என்று கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
மாமியார் கூறுவது ஏதோ புரிவது போலிருக்க, அவரைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்த ராதிகாவிடம், “போம்மா, போயி ரெடியாகு, மணி இப்போவே ஏழாயிடுத்து எல்லாரும் கிளம்பறதுக்கு சரியா இருக்கும்.” என்று அனுப்பி வைத்தார்.
மரகதம் இருக்கும் அறையிலேயே ராதிகாவின் உடைமைகளும் இருக்க, ஒரு சிறு குளியல் போட்டுவிட்டு, ஒரு பேபி பிங்க் நிறத்தில் வெள்ளி புட்டா போட்ட பனாரஸ் புடைவையும் அதற்கு மேட்சிங்கான ப்ளவுசையும் அணிந்தவள், புடைவைக்குப் பொருந்தும் வகையில் வெள்ளியில் காசுமாலை நெக்லசும், ஜிமிக்கியும் அணிந்துகொண்டாள். தலையை வாரி நீண்டடர்ந்த கூந்தலை பிரெஞ்சு பின்னல் போட்டுக்கொண்டு வகிட்டில் குங்குமம் வைத்தவள், கண்களுக்கு மை தீட்டி, உதட்டிற்கு லிப் பாம் மட்டும் போட்டுக்கொண்டு தயாராகி அறையை விட்டு வெளியே வந்தாள்.
முற்றத்தில் அமர்ந்துகொண்டு முல்லைப் பூச்சரத்தை அனைவருக்கும் கொடுக்க கத்திரியால் வெட்டிக்கொண்டிருந்த நந்தினி, “ராதிகா, வாவ், வா,வா, இந்த புடவையில நீ இன்னும் அழகா தெரியற, இந்தா இந்தப் பூவை வெச்சுக்கோ,” என்று அவளுக்கும் கொடுக்க, “ஹேர்பின் எடுத்து வெச்சுக்கறேன் மன்னி, அம்மா எங்கே?” என்று நந்தினியிடம் கேட்டாள்.
“அம்மா இப்போதான் இங்கே இருந்தா, சமையலறையில இருக்காளான்னு பாரு,” என்று நந்தினி கூற, பர்வதமும் சமையலறையிலேயே இருந்தார். அவரருகில் சென்ற ராதிகா, “அம்மா…” என்று தயங்கித் தயங்கி அழைக்க, “என்ன ராதும்மா…ரெடியாயிட்டியா?, பூ வெச்சுண்டியா,” என்று கேட்டவர், அவளுடைய தயக்கத்தைக் கண்டு, “என்ன ஆச்சும்மா, என்ன விஷயம்?” என்க “அம்மா…கார்த்தாலதான் நானும் அவரும் ஹோமத்துக்கு சங்கல்பம் பண்ணிண்டு இருக்கோம், வெளியில எதுவும் சாப்பிட முடியாதே, முதல் முதலா நம்பாத்து ரெஸ்டாரண்டுக்குப் போறோம், எதுவும் சாப்பிடலைன்னா தப்பா நெனைச்சுக்க மாட்டாரே? நான் அங்கே எதுவும் சாப்பிடலைம்மா, அப்பறமா ஆத்துக்கு வந்து பால் குடிச்சுக்கறேன், பரவால்லையா?” என்று கவலையாய்க் கேட்க…
“உன் ஆத்துக்காரனுக்கு இதெல்லாம் தெரியாதுன்னா நெனைக்கிறே, இதைப் பத்தியெல்லாம் யோசிக்காம அவன் வெளியில போலாம்னு சொல்லியே இருக்க மாட்டான்…எல்லாம் அவன் பாத்துப்பான், நீ எதைப் பத்தியும் கவலைப்படாம என்ஜாய் பண்ணு போறும், வா இப்போ கிளம்பலாம்” என்றார் பர்வதம் ஆறுதலாக.
அதற்குள் பரத்தும் தயாராகி வந்திருந்தான். அடர் நீலநிற முழுக்கை டி ஷர்டும், காக்கி நிற காட்டன் பேண்டும் அணிந்து, கூந்தலை ஜெல் போடாமல் வாரி விட்டிருக்க, அது எப்போதும்போல அவனுடைய நெற்றியில் சரிந்து விழ, அதைக் கையால் ஒதுக்கியபடியே சமையலறைக்கு வந்தவன், “அம்மா, ரெடியா கிளம்பலாமா?” என்று கேட்க, “இதோ ரெடிப்பா, ராதும்மா , வா போகலாம்” என்று ராதிகாவை அவர் அழைக்க, சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தான். அதுவரை அவன் நெற்றிமுடியை ஒதுக்குவதையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தவள், அவன் பார்வை தன்மீது விழுந்ததும், தனது பார்வையைத் தழைத்துக்கொள்ள, அவனும் புன்னகைத்தபடியே வெளியே சென்றான்.
அனைவரும் கிளம்பி வெளியே வர, வீட்டு வாசலில் வரிசை கட்டி கார்கள் நின்றிருக்க, பரத்தின் ஆடி ஆர்8 இல் ராதிகாவை அவனுடன் முன்னால் அமர்ந்து வரும்படி பரவதம் கூற, “இல்லைம்மா, அவரோட அப்பா, அத்திம்பேர் யாராவது உக்காரட்டும், நான் உங்களோட வரேன்,” என்று அவருடன் வேறு வண்டியில் ஏறிக்கொண்டாள்.
ராதிகா தன்னுடைய வண்டியில் ஏறிக்கொள்வாள் என்று பரத் எதிர்பார்த்தானோ என்னவோ…அவன் முகத்தில் லேசான ஏமாற்றம் தெரிந்தது போல் இருந்தது….
********
அன்னம் பிரம்மாவின் சென்னைக் கிளை. பரத்தின் தனிப்பட்ட விருந்தினரின் வருகைக்காக இன்று வாடிக்கையாளர்களுக்கு மூடப்பட்டிருந்தது. வெளியிலிருந்து பார்ப்பதற்கு பழையகாலத்து அக்ராஹாரத்து வீட்டைப் புதிப்புத்துக் கட்டியதைப் போல் இருந்தது.
கட்டிடத்தைச் சுற்றி இருந்த தாழ்வாரத்திலும் மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சுற்றிலும் அழகான தோட்டம் அமைத்து அதில் சரியான இடங்களில் விளக்குகளைப் போட்டு அந்த இடமே ஸ்வர்க்கலோகம் போல ஜொலித்தது. பகலில் பார்த்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று தோன்றியது ராதிகாவிற்கு.
இப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றவளின் அருகில் பரத் வந்து நின்றதை அவள் கவனிக்கவில்லை. மறுபக்கம் வேடிக்கை பார்க்கத் திரும்பும்போது அருகில் நின்றிருந்தவனைப் பார்த்து லேசாகத் திடுக்கிட்டுத்தான் போனாள் ராதிகா, எதுவும் பேசாமல், “நீ ஏன் இங்கே நிற்கிறாய்?” என்பது போல் அவனைப் பார்த்துக்கொண்டு நின்றாள் ராதிகா.
அவள் தன்னைப் பார்த்ததை உணர்ந்தானோ என்னவோ, அவளை நோக்கித் திரும்பி, “உள்ளே போகலாமா” என்பது போல் தனது இடது கையை கையை முன்புறமாக நீட்டிச் சைகை செய்தவனைப் பார்த்து லேசாகத் தலையை அசைத்துவிட்டு அவனோடு இணைந்து நடந்தாள்.
ஜோடியாக ரெஸ்டாரண்டுக்குள்ளே நுழைந்தவர்களைப் பார்த்து மனம் பூரித்துப் போனது மரகதத்திற்கும் பர்வதத்திற்கும். “அம்மா, ரெண்டு பேரையும் ஜோடியா பாக்க எவ்வளவு நன்னா இருக்குல்ல?” என்று கீதா பர்வதத்தின் காதில் கிசுகிசுக்க… “சத்தமா பேசாதே கீது, அவன் காதுல விழுந்தா அப்பறம் தள்ளி நின்னுக்கப் போறான்,” என்று அவளை அடக்கினார் பர்வதவர்த்தினி.
அவர்களின் பேச்சு பரத்தின் காதில் விழுந்துவிட்டதோ என்னவோ, அதுவரை அருகில் நின்றவன் ராதிகாவை விட்டு விலகி முன்னால் நின்றுகொண்டிருந்த ஸ்ரீராமுடன் பேசச் சென்றுவிட்டான். பரத் எதுவுமே சொல்லாமல் அவளை விட்டுவிட்டுச் சென்றதும், அவன் பின்னால் போவதா அல்லது அனைவரையும் போல தானும் ஏதாவது ஒரு டேபிளில் சென்று உட்காருவதா என்ற யோசனையில் செய்வதறியாது விழித்தவளை, “இங்கே வந்து உக்காந்துக்கோ ராதுமா…பரத்துக்கு வேலை இருக்கும், அவன் அப்பறமா வருவான்,” என்று தனக்கு இன்னொரு பக்கம் இருந்த காலி நாற்காலியைக் காட்டினார் பர்வதம்.
அமைதியாகச் சென்று அவரருகில் அமர்ந்தவளின் மனம் ஏகமாய்க் குழம்பியிருந்தது. “நேற்று அவர் பேசியது என்ன? இப்போது நடந்துகொள்ளும் விதமென்ன? இரண்டுக்கும் பொருந்தவே இல்லையே,” என்று நினைத்துக்கொண்டாள். “தான் இருப்பதையே உணராதவர் போல நடந்துகொண்டவர் இப்போது அப்படியே நேரெதிராக நடந்துகொள்கிறாரே…இதில் எது உண்மை எது பொய்?” என்று கேள்வியெழுப்பிய மனதை கட்டுப்படுத்தும் விதமறியாமல் மௌனமாகவே இருந்தாள்.
முன்கட்டு முற்றம் போல அமைக்கப்பட்டு அதைச் சுற்றி மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. முற்றத்தின் நடுவில் ஒரு சிறு குளம் போல அமைத்து அதில் பூக்களையும் விளக்குகளையும் மிதக்க விட்டிருந்தார்கள். என்னவென்றே பிரித்தறிய முடியாத ஒரு மெல்லிய நறுமணம் அந்த இடம் முழுவதும் பரவியிருந்தது. சூழ்நிலை மிகவும் ரம்மியமாக இருந்தது.
ஸ்ரீராம் அனைவரையும் அவரவர் விருப்பப்படி இடங்களில் உட்கார வைத்து, அனைவரிடமும் மெனுகார்டைக் கொடுத்தார். ராதிகவிடமும் ஒன்று கொடுக்கப்பட்டது. மிகவும் கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தது அந்த மெனு.
ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரன்ட் என்பதற்கான எந்தவொரு சாயலும் இல்லாமல், முழுக்க முழுக்க பாரம்பரிய உணவுகளையே மெனுகார்டில் பார்க்க முடிந்தது. ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள சாத்வீக உணவு வகைகளை எல்லாம் அதில் இடம்பெற்றிருந்தது. “அதுதான் இந்த ரெஸ்டாரண்டின் ஸ்பெஷாலிட்டி போலருக்கு” என்று நினைத்துக்கொண்டாள் ராதிகா. ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பிப் பார்க்கப் பார்க்க, அதிலிருந்த உணவு வகைகளைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் மிகவும் அக்கறையோடும் மிகுந்த ஆசையோடும் ஆராய்ச்சி செய்து சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் ராதிகவிற்குத் தோன்றியது. ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளராக இல்லாமல் ஒரு சுவாரசியமான புத்தகத்தைப் படிக்கும் வாசகியாக அதை வாசிக்கத் தொடங்க, அதன் ஒவ்வொரு எழுத்திலும் பரத்தின் கடின உழைப்பும், தான் செய்யும் வேலை மீதான அவனது தீராத காதலும் ராதிகாவிற்குத் தெளிவாகப் புரிய, மெதுவாகத் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள் ராதிகா.
ராதிகாவின் கண்களின் ஸ்பரிசம் பரத்தை வருடியதோ…அவனும் சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான். அவன் அப்படிப் பார்ப்பான் என்று எதிர்பார்க்காதவள், தலையை மீண்டும் மெனு கார்டுக்குள்ளேயே புதைத்துக்கொண்டாள். “இது என்ன கண்ணாமூச்சி ஆட்டம்” என்று இடித்தது மனம். பரத் இன்னும் தன்னைப் பார்க்கிறானா என்று நிமிர்ந்து பார்க்கச் சொன்ன மனதின் தலையில் ஒரு கொட்டு வைத்து அடக்கியவள் அதற்குப் பிறகு மெனுவை விட்டு தலையை உயர்த்தவே இல்லையே…
வந்திருந்த மற்ற அனைவரும் அவர்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்துகொண்டிருக்க, மெனுவில் அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருந்த ராதிகாவின் முன்னால் ஒரு பவுலில் ப்ரூட் சாலட்டைக் கொண்டுவந்து வைத்தான் ஒரு வெயிட்டர். “இதை நான் ஆர்டர் செய்யவே இல்லையே,” என்று ராதிகா கொண்டுவந்தவனைப் பார்க்க அவனோ “சார் குடுக்கச் சொன்னாரு” என்று பரத்தைச் சுட்டிக் காட்டினான். மெதுவாகத் தயங்கியபடி தலையைத் திருப்பி ராதிகா பரத்தைப் பார்க்க, அதுவரை அவனும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் போலும்…சாப்பிடு எனும்படி லேசாகத் தலையசைத்துவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டான்.
அவன் விலகிச் சென்ற வெற்றிடத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை பர்வதம் மாமியின் குரல் கலைத்தது, “என்ன, என் பிள்ளை உன்னை அப்படியே பசியோடவே இருக்க விட்டுடுவான்னு நெனைச்சியா? அவன்தான் எல்லாத்தையும் பார்த்துப்பான்னு சொன்னேனே, இப்போ சாப்பிடு,” என்றார்.
மாமியாரைப் பார்த்து சரி என்பதுபோல் தலையை அசைத்தவள் தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த மர பவுலைப் பார்த்தாள். தர்பூசணியையும், கிர்ணிப் பழத்தையும், அன்னாசியையும் சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் தேன், எலுமிச்சை சாறு, உப்பு மிளகு சேர்த்து டிரெஸ்ஸிங் செய்து புதினா இலைகள் தூவி அலங்கரிக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கே மிகவும் சுவையாக இருக்கும் போலிருக்க…அருகில் வைக்கப்பட்டிருந்த ஸ்பூனால் சில துண்டுகளை எடுத்து வாயில் போட்டாள் ராதிகா…பழங்களின் குளிர்ச்சியுடன் தேனின் இனிப்பும், எலுமிச்சையின் லேசான புளிப்பும் இணைந்து நாவில் ஒரு சுவைப்போராட்டமே வெடிக்க…அந்தப் புத்துணர்வு தரும் சுவையை அனுபவித்த ராதிகாவின் கண்கள் சுகம் மேலிட தன்னிச்சையாக மூடித் திறந்தன…
தன்னைச் சுற்றியிருந்த அனைவரும் தமது விருப்பத்திற்கேற்ற உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டும் அவற்றின் சுவையை சிலாகித்தபடியும் இருக்க…ராதிகாவின் மனமோ பரத் காட்டிய இந்த சிறு அக்கறையில் பூரித்துப் போயிருந்தது. பசி மேலிட ப்ரூட் சாலட் முழுவதையும் சாப்பிட்டு முடித்தவளின் மனதில், “அவர் சாப்பிட்டாரோ தெரியலையே?” என்ற எண்ணம் தோன்ற…அருகில் இருந்த பர்வதத்திடம் “அம்மா ஒரு நிமிஷம் வரேன்,” என்று கூறிவிட்டு எழுந்து பரத்தைத் தேடிக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் ராதிகா.
பரத்தின் தலைமையில் மிலிட்டரி துல்லியத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது அந்த அதிநவீனச் சமையலறை. கிட்டத்தட்ட நாற்பது பேருக்கு பலவிதமான உணவுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தாலும், அங்கே எந்தவொரு சலசலப்போ குழப்பமோ காணப்படவில்லை. தேவையில்லாத பேச்சு இல்லை, எங்கும் சுட்டிக்காட்டுவது போன்ற அசுத்தமோ குப்பையோ இல்லை. ஒரு ஒழுங்குமுறையுடன் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது அந்தச் சமையலறை. ஒவ்வொரு சர்வரும் எடுக்கும் ஆர்டர் அவர்கள் கையிலிருக்கும் டேப்லெட்டில் பதிவு செய்யப்பட்டால் அது தானாகவே சமையலறையில் இருக்கும் திரையில் ஒளிர்ந்தது. அதிலிருந்து ஒவ்வொரு உணவுவகை தயாரிக்கும் நபருக்கு முன்னாலிருக்கும் டிஜிட்டல் ஸ்கிரீனில் அவரவருக்கு உரிய உணவின் ஆர்டர் காட்டப்பட சீராக இயங்கும் இயந்திரம்போல வேலை நடந்துகொண்டிருந்தது. பரத்தும் தனது டிஷர்ட்டின் ஸ்லீவை மேலிழுத்து விட்டுக்கொண்டு ஒரு வெள்ளை நிற ஏப்ரன் அணிந்துகொண்டு அவர்களில் ஒருவனாக சுறுசுறுப்பாகச் சமைத்துக்கொண்டிருந்தான். அந்த மும்முரத்தில் அங்கு வந்துநின்ற ராதிகாவை அவன் கவனிக்கவில்லை. அவனருகில் இருந்த ஒரு சமையல்காரர் “சார், உங்க மேடம் வந்திருக்காங்க,” என்று கூற, கேரட் நறுக்கிகொண்டிருந்தவன், அந்த வேலையை நிறுத்திவிட்டு அவள்முன் வந்து நின்று, “என்ன வேணும்?,” என்று கேட்டான்.
“அது…நீங்க இன்னும் எதுவுமே சாப்பிடலையே, அதுதான் கேட்க வந்தேன்,” என்று அவள் தயங்கியபடி கூற, “வெளியில இவ்வளவு கெஸ்ட்டை உக்கார வெச்சுட்டு, நானும் சாப்பிட உக்காந்தா வேலையாகுமா, நான் அப்பறமா சாப்பிட்டுக்கறேன், இப்போதான் ஒரு காபி குடிச்சேன்,” என்று பரத் பதிலளிக்க, அவன் காபியாவது குடித்தானே என்பதில் சற்று நிம்மதி அடைந்தவள், “வேலை ரொம்ப ஜாஸ்தியா, நானும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்டாள் ராதிகா.
அதைக்கேட்டு சிரித்தவன், “இது நம்பாத்து கிச்சன் மாதிரி இல்லை, கொஞ்சம் வித்தியாசமானது, இங்க அவாவாளுக்குன்னு ஒரு வேலை இருக்கு, திடீர்னு யாராவது புதுசா நுழைஞ்சா அது உதவியை விட உபத்திரவமாத்தான் இருக்கும். ஆக்சுவலா என்னையே எதுவும் செய்ய விடமாட்டா இவால்லாம். இன்னிக்கி ஏதோ பரவாயில்லைன்னு விட்டிருக்கா, அதனால நாங்க பாத்துக்கறோம், நீ போயி வெளியில உக்காந்துக்கோ, இங்க நின்னா போற வரவாளுக்கு இடைஞ்சலா இருக்கும்,” என்று கூறி சமையலறைக் கதவைத் திறந்து அவளை வெளியே அனுப்பினான் பரத்.
சமையலறையை விட்டு வெளியே வந்தவள் மீண்டும் அமைதியாக பர்வதத்தின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள். ராதிகா எழுந்து சமையலறைக்குள் சென்றதையோ, அங்கிருந்து முகத்தில் மெல்லிய புன்னகையுடன் திரும்பி வந்து அமர்ந்துகொண்டதையோ அனைவரும் கவனித்திருந்தாலும், யாரும் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. சுவையான உணவு அவர்களைக் கட்டிப் போட்டிருந்தது.
மனதிற்குள் இனம்புரியாத ஒரு இதம் பரவ, தனது நாற்காலியில் சாய்ந்தமர்ந்து தன்னைச் சுற்றி நடப்பதை கவனிக்கலானாள் ராதிகா. அனைவருமே உணவை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ருசியான தரமான உணவு உண்ணும் திருப்தி அனைவரின் முகத்திலும் இருந்தது. அவளையும் அறியாமல் பெருமை தலை தூக்கியது மனதில்.
இப்படியே எண்ணங்களில் உழன்றுகொண்டிருந்தவளின் முன்னால் சர்வர் மீண்டும் ஒரு கண்ணாடி கப்பை கொண்டு வைக்க, “இது என்ன?” என்பது போல் நிமிர்ந்து பார்த்தவளிடம், “கேரட் கீர் மேடம், எங்க சார் செஞ்சது,” என்று கூறிவிட்டு அகன்றான் அந்த சர்வர்.
லைட் ஆரஞ்சு நிறத்தில் இருந்த அந்தக் கீரின் மீது பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி அலங்கரிக்கப்பட்டிருக்க, அதிலிருந்து மெலிதாக ஏலக்காய் வாசம் வந்தது. “என்ன பாத்துண்டே இருக்க ராதிகா, உன் ஆத்துக்காரரே உனக்காக ஸ்பெஷலா செஞ்சு அனுப்பியிருக்கார், ம்ம், ம்ம், சாப்பிடு சாப்பிடு,” என்று கீதா கிண்டலடிக்க…வெட்கத்தில் முகம் சிவக்க சாசரில் வைக்கப்பட்டிருந்த ஸ்பூனால் கீரை எடுத்து வாயில் வைத்தாள். ப்ரூட் சாலடின் சுவை கண்மூடி சுகம் காண வைத்தது என்றால், கேரட் கீரோ அவளை ஸ்வர்க்கத்தின் வாசற்படிக்கே அழைத்துச் சென்றது. லேசான ஏலக்காய் மணத்துடன், மெலிதான சுக்கின் காரத்துடன், மிதமாக இனிப்பு சேர்த்து செய்யப்பட்டிருந்த அந்தப் பாயாசம் பட்டுப்போல அவளுடைய தொண்டையில் இறங்கியது. அதன் தீஞ்சுவையில் அவளையும் மீறி அவளிடமிருந்து வெளிப்பட்ட லேசான முனகலை நிறுத்தவே முடியவில்லை ராதிகாவால்.
“இதுக்காகத்தான் கேரட் கட் பண்ணிண்டு இருந்தாரா?” என்று தோன்ற, தனக்காகவே மெனக்கெட்டு பரத் இதைச் சமைத்திருக்கிறான் என்ற எண்ணம் உணவிற்கு மேலும் சுவை சேர்த்தது. அவள் மனம் அவள் வசம் இல்லாமல் பட்டாம்பூச்சியாய் பறந்துகொண்டிருந்தது.
ஒருவாறாக எல்லோரும் சாப்பிட்டு முடிக்க, பரத்தையும் ஸ்ரீராமையும் உணவின் சுவை பற்றியும் உணவகத்தின் நேர்த்தி மற்றும் அழகைப் பற்றியும் அனைவரும் வெகுவாகப் பாராட்டினர். அனைவரின் பாராட்டையும் சிறிய புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட இருவரும் வந்தவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
அனைவரும் அவரவர் வந்தபடியே வண்டிகளில் ஏறி அமர்ந்துகொள்ள, காரில் பர்வதத்தின் அருகில் ஏறி உட்கார்ந்து கொள்வதற்காக கார் கதவைத் திறந்த ராதிகா, ஒரு கணம் தயங்கி பின்னர் திறந்த கதவை மூடிவிட்டு மெதுவாக வந்து பரத்தின் காரில் ஏறி முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
ராதிகா தன்னருகில் வந்து அமர்ந்துகொண்டதை அறிந்தாலும், அவள் பக்கம் திரும்பிப் பார்க்காமல், இதழ்களில் லேசான புன்னகையுடன் காரைக் கிளப்பினான் பரத்…






Very nice.