arrow_back
காதல் கடன் காதல் கடன் – 9
காதல் கடன் chevron_right பகுதி 9 / 16

காதல் கடன் – 9

visibility 513
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

காதல் கடன்

(9)

சோபாவில் கண்மூடிச் சாய்ந்திருந்த ராதிகாவின் தலையை ஒரு கரம் மென்மையாகத் தடவியது. தொடுகை மென்மையானதாக இருந்தாலும், தூக்கிவாரிப்போட எழுந்த ராதிகாவை “என்ன ஆச்சு? ஏன்டா இப்படி பதறுரே, நான்தான்,” என்று அவளருகில் வந்து உட்கார்ந்தார் பர்வதவர்த்தினி. 

“ஒண்ணும் இல்லைம்மா, சும்மாதான்…” என்று இழுத்தவளைப் பார்த்து, “என்ன சொல்லிட்டு போறான் நம்பாத்து துர்வாச முனி?” என்ற கேள்விக்கு சிரிப்புதான் வந்தது ராதிகாவிற்கு. 

“ஏன்மா, எல்லாருமே அவரை துர்வாசர்னே கூப்பிடறேள்? அவ்வளவு கோபக்காரரா உங்க பிள்ளை?” என்று சிரித்தபடி கேட்டவளிடம், “அதெல்லாம் இல்லைம்மா, அவன் ஒரு இடத்துல இருந்தா அந்த இடமே அவ்வளவு கலகலப்பா இருக்கும், சிரிக்க சிரிக்க பேசுவான், அவனும் சிரிச்ச முகமாத்தான் இருப்பான், ஆனா இப்போதான் பாரு கொஞ்ச நாளா இப்படி முசுடாட்டமா மொகத்தை வெச்சுண்டு திரியறான்,” என்று வருத்தமாய்க் கூறினார்.

“விடுங்கோம்மா, கொஞ்ச நாள்ல தானா சரியாயிடுவார், எத்தனை நாளைக்கு இயல்பை மாத்திண்டு இருக்க முடியும், நீங்க கவலைப் படாதீங்கோ,” என்று மாமியாருக்கு ஆறுதலளித்தாள் மருமகள். அவர் முகம் சுணங்கினால் ஏனோ ராதிகாவிற்கு மனம் கேட்கவில்லை.

“நீதான் வந்துட்டியே, இனி நேக்கு அவனைப் பத்தி கவலை இல்லை கண்ணம்மா,” என்று அவர் கூற, “அப்பறம் என்னம்மா சந்தோஷமா இருங்கோ, எதுவானாலும் பாத்துக்கலாம்,” என்று அவருக்கு தைரியம் கூறினாள், கூடவே தனக்கும் கூறிக்கொண்டாளோ???

“அது சரி, பரத் என்ன சொல்லிட்டு போறான்?” என்று அவர் கேட்க, அப்போதுதான் அவன் கூறியதைக் கேட்க அந்த அறையில் தன்னைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை என்று உணர்ந்தாள் ராதிகா, “ஏன், நேரடியா என்கிட்டே சொன்னா என்ன ஆயிடுமாம் இவருக்கு, என்னமோ யாருக்கோ சொல்றாப்ல சொல்லிட்டு போயிருக்கார்?” என்று கோபம் வந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பர்வதத்திடம் மேகாவும் அழகுக்கலை நிபுணரும் வரும் விஷயத்தைக் கூறினாள் ராதிகா. 

“இப்போவே சோர்ந்து போயிட்டியே ராதும்மா, இன்னும் அவா வந்தா ஓய்ச்சல் ஒழிச்சலே இல்லாம உருட்டி எடுத்துடுவாளே, நீ ஒரு காரியம் பண்ணு, மொதல்ல போயி ட்ரெஸ் மாத்திண்டு வா, நான் சொல்றேன்,” என்று அவளை உடை மாற்ற அனுப்பியவர் மேகாவிற்கு அழைத்து சற்று நிதானமாகவே வரச்சொன்னார். 

உடை மாற்றிக்கொண்டு வந்த ராதிகாவை, “நீ வா என்னோட,” என்று தன்னறைக்கு அழைத்துச் சென்றவர், “சித்தநாழி பேசாம இங்க படுத்துண்டு தூங்கு, அவா வரச்சே நான் வந்து உன்னை அழைச்சுண்டு போறேன்”  என்று கூற, “அம்மா, மணி பத்தரைதான் ஆறது, இப்போ போயி யாராவது தூங்குவாளா, வேணாம்மா, ஓய்வா சித்த ஒக்காந்துக்கறேன் போறும்,” என்று பதிலளித்தால் ராதிகா. 

“அதெல்லாம் டயர்டா இருக்கறவா தூங்குவா, அதனால ஒண்ணும் தப்பில்லை, ரிசப்ஷன்ல பாக்க ப்ரெஷ்ஷா இருக்க வேண்டாமோ? அதுக்கு பியூட்டி ஸ்லீப் ரொம்ப அவசியம் கண்ணம்மா…நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, உன்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாம நான் பாத்துக்கறேன்…” என்று கூறிவிட்டு அறைக்கதவை மூடிக்கொண்டு சென்றுவிட்டார் பர்வதம். வெறுமனே கண்ணை மூடிக்கொண்டு சிறிதுநேரம் படுக்கலாம் என்று கட்டிலில் சாய்ந்தவள் அசதி மேலிட அவளையும் அறியாமல் உறங்கிப்போனாள். 

**********

ராதிகா உறக்கத்திலிருந்து விழித்தபோது, எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு தன்னையே பார்த்தபடி இருந்த அவளுடைய அம்மா மரகதம்தான் அவள் கண்ணில் பட்டார். “என்னம்மா, இங்க உக்காந்துண்டு இருக்கே, ரொம்ப நாழி தூங்கிட்டேனோ?” என்று வினவியபடி எழுந்து அவரருகில் சென்று அமர்ந்துகொண்டாள். 

“சாப்ட்டாவிட்டு உன்னைத்தான் தேடிண்டு இருந்தேன், அப்போதான் நீ இங்கே இருக்கேன்னு சம்பந்தியம்மா சொன்ன, வந்து பார்த்தா நன்னா தூங்கிண்டு இருந்தே, அதான் அப்படியே உக்காந்துட்டேன்…என்னடி ஆச்சு, ஒடம்புக்கு ஒண்ணும் இல்லையே, இந்த நேரத்துல தூங்கறதைப் பாத்து நேக்கு கவலையா போயிடுத்து,” என்று மகளின் கன்னம் வருடினார் மரகதம். 

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா, ஏதோ கொஞ்சம் அலுப்பா இருந்துது, அம்மாதான் சித்தநாழி ரெஸ்ட் எடுன்னு சொன்னா, சும்மாதான் படுத்தேன், அப்படியே கண்ணு அசந்துடுத்து போல இருக்கு…வேற ஒண்ணுமே இல்லை,” என்று கூறி தாயின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

“அப்பா எங்கேம்மா?” என்று கேட்ட மகளுக்கு, “அவர் உன் மாமனாரோடையும், நந்தினி ஆத்துக்கரரோடையும் எங்கேயோ வெளியில போயிருக்கார்,” என்று கூற, “அப்பா கிட்ட நேத்து கார்த்தால பேசினதும்மா, அதுக்கப்பறம் அப்பாவை பாக்கவே இல்லை,” என்று வருத்தமாகக் கூறினாள். 

“இப்போ என்ன, அப்பா வந்தாவிட்டு உக்காந்து எவ்வளவு வேணும்னாலும் பேசு, யாரு வேண்டாம்னா…” என்று கூற ஆரம்பித்தவர் குரல் கம்ம, “நீ இல்லாம எப்படி இருக்கப்போறோம்னே  தெரியலடி  ராது, ஆமே வெறிச்சுன்னு போயிடும், அதுலயும் உங்க அப்பாதான் ரொம்ப  தவிச்சுப் போயிடுவார். மங்களிப் பொண்டுகள் முடிஞ்சு  கிளம்பணும்னு சொல்லிண்டு இருந்தார் அப்பா,” என்ற தாயின் கூற்று, இன்னும் இரு நாட்களில் தன்னுடையவர்கள் அனைவரும் அவளை இங்கு தனியாக விட்டுவிட்டுப் போய்விடுவார்கள் என்ற எண்ணத்தைக் கொடுக்க, என்ன சொல்வதென்று தெரியாமல், மனக்கலக்கத்துடன் அம்மாவைக் கட்டிக்கொண்டாள். 

எதிரே விரிந்திருக்கும் புதிய வாழ்க்கையைப் பற்றிய லேசான பயம் மனதில் எழுந்தது. கணவனின் அன்பும் அனுசரணையும் இல்லாமல் இதை எப்படிக் கையாளப் போகிறோம் என்று சிந்திக்கும்போதே மூச்சு முட்டுவது போல் இருந்தது ராதிகாவிற்கு. ஆனாலும் யாரிடமும் எதையும் கூறவும் அவள் மனம் அஞ்சியது. நேற்றிரவு பரத் அவனுடைய குடும்பத்தினருடன் பேசிய விஷயத்தைக் கேட்டபின், அதைப் பற்றி யோசிக்கக் கூட நேரமின்றி சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் கடமைகளும் அவளைச் சூழ்ந்துவிட்டிருந்தன. இதோ, இன்னும் சிறிது நேரத்தில் ரிசப்ஷனுக்கு ஏற்பாடு என்று யோசிக்கவே முடியாமல் ஒன்று மாற்றி ஒன்று அவளுடைய நேரத்தை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கின்றன. 

தன் நிலை என்ன, இனி தான் என்ன செய்யவேண்டும், இந்த நிலையை எப்படிக் கையாளவேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக யோசிக்கத் தேவையான தனிமை அவளுக்கு இன்னும் கிடைக்கவில்லை…தனக்கே தெளிவில்லாத பொழுது, இந்த விஷயத்தைப் பற்றி அம்மா அப்பாவிடமோ  புக்ககத்தினரிடமோ பேசுவது சரியாகப் படவில்லை ராதிகாவிற்கு…திருமணத்திற்குப் பிறகான சம்பிரதாயங்கள் முடியும்வரை அதற்குச் சந்தர்ப்பமும் கிடைக்காது என்பது ராதிகாவிற்கு நன்றாகவே தெரியும்…சரி அதுவரை பொறுப்போம் என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டாள்.

இதனுள், கையில் ஒரு கண்ணாடி டம்பளரில் ஆரஞ்சு ஜூஸுடன் வந்த பர்வதம், “எழுந்துட்டியா ராதும்மா, நானே உன்னை எழுப்பலாம்னுதான் வந்தேன். இந்தா இதைக் குடிச்சுடு, இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவோம்னு மேகா ஃபோன் பண்ணினா, நீயும் ஃபிரெஷ் ஆகிண்டு முன்கட்டு ஹாலுக்கு வந்துடு. மாமி, நீங்க என்னோட வரேளா, சுமங்கலிப் பிரார்த்தனைக்கு வாங்கின  சாமானையெல்லாம் ஒருதரம் சரிபார்த்துட்டு ஏதானும் விட்டுப்போயிருக்கானு சொல்லுங்கோ,” என்று மரகதத்தைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார் பர்வதம் மாமி. 

முகம் அலம்பி, ஃப்ரெஷ் ஆகி ராதிகா முற்றத்திற்கு வருவதற்கும், அரவிந்தும் மேகாவும் வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.  முன்கட்டு முற்றத்தில் பரத் உட்பட அனைவரும் கூடியிருந்தனர். அரவிந்த், கிளவுட் நைன் இவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சரிபாதி பார்ட்னர். பரம்பரைப் பணக்காரன்.  பரத் படித்த கல்லூரியில் அவனுக்கு ஜூனியராக படித்தவன். அங்கு பரத்துடன் ஒரே வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிப் படித்தான், பரத்தின் ஒழுக்கமும் நல்ல குணமும் அரவிந்தின் தந்தைக்கு மிகவும் பிடித்துவிட, பின்னாளில் அவனுடன் பிசினஸ் தொடங்கவேண்டும் என்று அரவிந்த் தந்தையிடம் அனுமதி கேட்டபோது தயங்காமல் அனுமதித்திருந்தார். அவருடைய நம்பிக்கையை வீணாக்காமல் மூன்றே ஆண்டுகளில் இமாலய வெற்றியை அடைந்து மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருந்தனர். அரவிந்த், தீராத விளையாட்டுப் பிள்ளை.

பரத்தின் ரிசப்ஷனை தன்னுடைய மேற்பார்வையில் மேகாவின் உதவியுடன் ஏற்பாடு செய்யும் பெரும் பணிக்குப் பொறுப்பேற்றிருந்தான் அரவிந்த். நாளை ரிசப்ஷன் என்னும் நிலையில் வேலைகள் படு மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. சில கடைசி நிமிட ஆயத்தங்களைப் பற்றி பரத்திடம் பேசுவதற்காக வந்திருந்த அரவிந்த் தானே சென்று நந்தினி மற்றும் கீதாவுடன் அமர்ந்திருந்த ராதிகாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டான்.  

“நமஸ்தே சிஸ்டர், நான்தான் அரவிந்த், உங்க ஆத்துக்காரரோட பிசினஸ் பார்ட்னர். என்னைப் பத்தியெல்லாம் பேச உங்களுக்கு டைமே இருந்திருக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும், அதனால பரவாயில்லை, மெதுவா தெரிஞ்சுக்கலாம், அவசரம் ஒண்ணுமில்லை, சாரி, ரிசப்ஷன் ஏற்பாட்டுல பிசியா இருந்துட்டதனால எங்களால உங்க கல்யாணத்துக்கு வர முடியல, வாழ்த்துக்கள்…” என்று இடைவிடாமல் பேசிக்கொண்டே போனவன் ராதிகாவின் கையில் கண்ணாடி ட்ரேயைக் கொடுத்து “இதுதான் உங்க ரிசப்ஷன் இன்விடேஷன், நல்லா இருக்கான்னு பாருங்க,” என்று கூற, கண்கள் விரிய அந்த ட்ரேயையே பார்த்தபடி இருந்தாள் ராதிகா. 

அதில் ஒரு சிறிய மிகவும் அழகான பசுநீல நிற நீள்சதுர நகைப்பெட்டியைப் போன்ற ஒரு பெட்டி, ஒரு கலர் ரிப்பன் சுற்றப்பட்ட ஓலைப்பெட்டி மற்றும் ஒரு நீளமான ஆரஞ்சுப் பெட்டியும் இருந்தன. பசுநீல நிறப் பெட்டியின் மேற்புறத்தில் தங்கநிறத்தில் சில இலைகளுடன் இரு தாமரைக் கொடிகள் பின்னியது போல பொறிக்கப்பட்டிருந்தது. கீழே ராதிகா & பரத்வாஜ் என்று தங்க நிறத்தில் எழுதியிருந்தது. அதே போல உள்ளே இருந்த ஆறு கார்டுகளிலும் பெற்றோர் அழைப்பு, ரிசப்ஷன் எங்கே நடக்கிறது, விருந்தினர் எந்த டேபிளில் அமரவேண்டும், அழைக்கப்பட்டவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பதைத் தெரிவிக்கும் RSVP கார்டு போன்றவை இருந்தன. ஒலைப்பெட்டிக்குள் இரண்டு வெள்ளி ஜோதி விளக்குகள் இருந்தன. நீளமான ஆரஞ்சுப் பெட்டியில் நான்கு அறைகளில் முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் திராக்ஷை வைக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பிதழ்களில் தெரிந்த ஆடம்பரத்தில் வாயடைத்துப் போயிருந்தனர் ராதிகாவும் அவள் குடும்பத்தவரும். “பரத் த சிஇஓ வோட ரிசப்ஷன், பரத் ஸ்டைல்ல, பரத் ரேஞ்சுக்கு” என்று நேற்று அவன் இறுமாப்போடு கூறியது நெற்றியில் அடித்தாற்போல் நினைவுக்கு வந்தது ராதிகாவிற்கு. சிறிது மலைப்பாக இருந்தது. இன்விடேஷனே இப்படியென்றால், ரிசப்ஷன் எவ்வளவு ஆடம்பரமாக இருக்கும் என்று கற்பனையும் பண்ணிப் பார்க்க முடியவில்லை அவளால். 

கூடவே “இதுதான் ரிசப்ஷன் மெனு,” என்று ஒரு மெனு கார்டையும் கொடுத்தான்…அது இருந்தது ஒரு 40 பக்க நோட்டு சைசுக்கு. அதைத் திருப்பி பார்ப்பதற்குள் ராதிகாவிற்கு வயிறே நிரம்பியதுபோல இருந்தது. அப்போதே, பரத்தும் அரவிந்த் அவன் கையில் கொடுத்த ஏதோ ஒரு பைலைத் திருப்பிப் பார்த்தபடி, “கடைசியா எவ்ளோ RSVP வந்திருக்கு அரவிந்த்?” என்று கேட்க, அதற்கு அரவிந்த் “2000 வந்திருக்கு பரத், கிட்டத்தட்ட 3,000 பேர் வருவாங்கன்னு எதிர்பாக்கறோம்.” என்க, ராதிகாவிற்கு மயக்கமே வரும் போலிருந்தது. “இது என்ன ரிசப்ஷனா இல்லை திருவிழாவா, ஆயிரக்கணக்குல பேசிக்கறா” என்று நினைத்துக்கொண்டவள், அம்மா அத்தை எல்லாரும் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க, அத்தை வாயில் ஈ நுழைவது கூட தெரியாதபடிக்கு வாயை பிளந்தபடி நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். ராதிகாவின் அம்மாவோ, ரிசப்ஷன் இன்விடேஷனை அன்போடு தடவிப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆகமொத்தம், நேத்து ரிசப்ஷன் ட்ரெஸ் எடுத்தப்போ விழாத டிக்கட்டும் கூட இதுல விழுந்துடுத்து என்று நினைத்துக்கொண்டாள் ராதிகா. 

இப்படியாக ஒருவர் மாற்றி ஒருவர் விழா ஏற்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, அழகுக்கலை நிபுணர் தனது உதவியாளருடன் வந்து சேர்ந்தார். மதிய உணவை முடித்துக்கொண்டு இளையவர்கள் அனைவரும் அழகு ஆலோசனைக்காக பரத்தின் அறையில் கூட, பரத்தும் அரவிந்தும் ரிசப்ஷனுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளைப் பற்றி கலந்தாலோசிக்க பரத்தின் அலுவலக அறைக்குச் செல்ல, பெரியவர்கள் அனைவரும் ஒரு குட்டித்தூக்கம் போடலாம் என்று முடிவெடுத்தனர். 

மூன்று நேப்பாளி பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் முன் புடைவை கட்டிக்கொண்டு எந்தவிதமான ஒப்பனையும் இல்லாமல் நின்றிருந்த ராதிகாவை அளவேடுப்பதுபோலப் பார்த்தவர்கள், ராதிகா ரிசப்ஷனுக்கு அணியவிருக்கும் உடையையும் நகைகளையும் பார்க்கவேண்டும் என்று கூற, பானுவும் துளசியும் அவற்றை பர்வதத்திடமிருந்து வாங்கிவரச் சென்றனர். 

பகல் நேரத்தில் பரத்தின் அறை நல்ல வெளிச்சமாகக் காற்றோட்டமாக இருந்தது. அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடிமுன் ராதிகாவை அமர வைத்த அம்மூவரில் தலைவி போன்றிருந்த ஒரு பெண், ராதிகாவின் புருவத்தை வடிவாக்கும் பொருட்டு நூலுடன் நெருங்க, சட்டென்று அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்த ராதிகா, “மேகா, இவா என்னல்லாம் பண்ணப்போறான்னு முதல்ல சொல்லச் சொல்லு, அதுல எது வேண்டும் எது வேணாம்னு நான் சொல்றேன்,” என்று மேகாவைப் பார்த்து கூற, மேகாவும் அவர்களிடம் அதையே கேட்க, அந்தப் பெண், “ஐப்ரோஸ் ட்வீஸ், பேஸ் கிளீன் அப், ஹேர் ஸ்ட்ரெயிட்னிங், மேக்கப், ஹேர்டூ, அண்ட் ட்ரெஸ் ரிஹர்சல்,”  என்று கொஞ்சும் ஆங்கிலத்தில் கூறினாள். 

இதைக் கேட்ட ராதிகா, “ஏன் இவாளுக்கு தமிழ் பேசத் தெரியாதா?” என்றபடி மேகாவைப் பார்க்க, “அவங்களுக்கு நேபாளி, ஹிந்தி அப்பறம் இங்கிலீஷ் மட்டும்தான் தெரியும் மேடம்,” என்றாள். “ஓ, அப்படியா, என்றுவிட்டு “அவர்களிடம் ஆங்கிலத்தில், “ஐப்ரோஸ் ட்வீஸ், பேஸ் கிளீன் அப், ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் இது மூணும் பண்ணவேண்டாம், மேக்கப், ஹேர்டூ, ட்ரெஸ் ரிஹர்சல் மட்டும் பண்ணிக்கலாம், என்று கூற, மூவரும் ஒரே நேரத்தில் மேகாவிடம் பேசத்தொடங்கினர். அவர்களை ஒருவாறாக அடக்கிய மேகா, “மேடம் அதெல்லாம் பண்ணலைன்னா, மேக்கப் சரியா முகத்துல செட் ஆகாதுன்னு சொல்றாங்க மேடம்,” என்று கூற, “கல்யாணத்துக்கு ரெண்டுநாள் முன்னாலதான் பேஷியல் பண்ணிருக்கேன் மேகா, அதனால மேக்கப்புக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது, ஹேர் ஸ்ட்ரெயிட்னிங்கெல்லாம் பண்ணினா முடி பாழாயிடும், ஒருநாள் கூத்துக்காக என்னால அதெல்லாம் பண்ண முடியாது, அதனால, நான் சொல்றதை மட்டும் செஞ்சா போறும், வேற எதுவும் வேண்டாம்,” என்று ராதிகா, சற்று காட்டமாகவே கூற, வேறு வழியின்றி தயக்கத்துடனே ஒப்புக்கொண்டனர் அம்மூவரும். 

அதற்குள் அவளுடைய உடையும் நகைகளும் வந்துவிட, ரிசப்ஷனுக்கான உடையை அணிந்துவந்தாள் ராதிகா, அவளை நிலைக்கண்ணாடியின் முன்னிருந்த நாற்காலியில் அமரவைத்து, மயில்தோகையென விரிந்திருந்த அவள் கூந்தலில் கூந்தல் அலங்காரம் செய்யத் தொடங்கினர். முன்னிருந்த கூந்தலை வகிடெடுத்து பின்னால் பின் செய்து, உச்சி முடியில் ஹம்ப் வைத்து, பின்னால் தொங்கிய குழல் கற்றைகளை கர்லிங் அயர்ன் கொண்டு சுருளச் செய்து ஸ்டீம் காட்டி, சுருள் சுருளாய்த் தொங்க விட்டு, மேக்கப்பையும் போட்டு முடித்தவர்கள்,ஒரு சுருள் கூந்தல் கற்றையை முன்னால் எடுத்துப் போட்டுவிட்டு ஆடையில் இருந்த தாவணியை தலையில் முக்காடு போல் போட்டு, ராதிகாவை கண்ணாடி முன் நிறுத்தினர். 

கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்த ராதிகாவிற்கு ஏனோ இந்த ஒப்பனை ரசிக்கவில்லை, கூந்தல் அலங்காரமும் பிடிக்கவில்லை, மேக்கப் சிறிது அதிகமாகிவிட்டது போன்றதொரு எண்ணம் வந்தது, அதிலும் லிப்ஸ்டிக்கின் வண்ணம் அடிக்க வருவது போல் இருந்தது, மேலும் தமிழ்நாட்டு மணப்பெண்கள் தலையில் முக்காடு போடும் பழக்கமும் இல்லை. இதையெல்லாம் ராதிகா மேகாவிடமும் ஒப்பனை செய்த பெண்களிடமும் கூறவும் தவறவில்லை. இப்படியே ஒருவர் சொல்வதை ஒருவர் கேட்காமல் வாக்குவாதம் வளர…அதுவரை எதிலும் தலையிடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கீதாவும் நந்தினியும், பரத்தை அழைத்துவந்து அவனிடமும் அபிப்பிராயம் கேட்கலாம் என்று ஆலோசனை அளித்தனர்.  

அதன்படி மேகா சென்று பரத்தை அழைத்து வந்தாள்.  வந்தவன், பிங்க் நிற லெஹங்காவில் தேவதைப்பெண்ணாய் நின்றிருந்த மனைவியைப் பார்த்து ஒரு கணம் ஸ்தம்பித்தான்,  முதல்முறையாக மனைவியை இப்போதுதான் முழுதாகப் பார்க்கிறான். முழு அலங்காரத்துடன் தன் முன் ஒருவிதமான தயக்கத்துடன் நின்றிருந்தவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை வருடுவது போன்றதொரு பார்வையை பரத் பார்த்துவைக்க, இரண்டடி தள்ளியே நின்றிருந்தாலும், அவன் விரலால் உடல் தீண்டியது போன்ற சிலிர்ப்பு ஏற்பட்டது ராதிகாவினுள். அவனுடைய பார்வை வீச்சைத் தாளமாட்டாமல் கண்கள் தன்னிச்சையாக நிலம் நோக்கின, “திரும்பு” என்னும் பரத்தின் குரல் அவளுடைய மயக்கம் கலைக்க, அவன் கூறியது போலவே திரும்பி முதுகைக் காட்டி நின்றாள், சிறிது நேர அமைதிக்குப் பின், “ஹ்ம், ஓகே, நோட் பண்ணிக்கோ மேகா” என்று பரத் கூற, ராதிகா அவனை நோக்கித் திரும்பினாள்.

பரத்தும் அவளையே ஆராய்ச்சிப் பார்வை பார்த்தபடி, “இந்த ஹேர்ஸ்டைல் நன்னா இல்லை, செட் ஆகலை, அதை மாத்து, அப்பறம்…மேக்கப் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு, கொஞ்சம் குறைக்கச் சொல்லு, லிப்ஸ்டிக்கையும் டோன் டவுன் பண்ணு, கலர்  அடிக்கறா மாதிரி இருக்கு…முக்கியமா, நம்பாத்துல தலையில முக்காடு போடற பழக்கம் இல்லை, அதையும் மாத்து,”  என்று ராதிகா கூறியதையே வார்த்தைப் பிசகாமல் கூற, அடக்கி வைத்திருந்த கோபம் தலைக்கேறியது ராதிகாவிற்கு. இவையனைத்தையும் கூறிவிட்டு அறையை விட்டு வெளியே செல்லத் தொடங்கியவன், கதவருகில் சென்று திரும்பி ராதிகாவைப் பார்த்து , “அப்பறம் மேகா, என்ன பெர்ஃபியூம் அது? நன்னாவே இல்லை இட் ஸ்டின்க்ஸ் (It Stinks), அதையும் மாத்தச் சொல்லு,”  என்று கூறிவிட்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டான்.

அவன் கூறியதையெல்லாம் கடமையாக  தனது நோட்பேடில் குறித்துக்கொண்ட மேகா, “ஓகே மேடம்,  பாஸ் குடுத்த டிப்ஸ் யூஸ் பண்ணி, நாம எல்லாத்தையும் சரி செஞ்சுடலாம்,” என்றபடி நோட்பேடைக் காட்டி ஒப்பனையாளர்களுக்கு ஐடியா அளிக்கத் தொடங்க, வந்த கோபத்தில் அவள் எழுதியிருந்த பக்கத்தை வாங்கி சுக்குநூறாகக் கிழித்தெறிந்த ராதிகா, அங்கிருந்த சோபாவில் கீதாவிற்கு அருகில் இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, “அங்க போய் ஒக்காரு, நான் கூப்பிடற வரைக்கும் நீ எழுந்திரிக்கவும் கூடாது, ஒரு வார்த்தையும் பேசவும்கூடாது” என்று மிரட்டியவள், ஒப்பனையாளர்களின் தலைவியை ஆள்காட்டிவிரலால் வா எனுமாறு அழைத்து, “இப்போ நான் சொல்றா மாதிரி ஹேர் ஸ்டைலும் மேக்கப்பும் பண்ணு” என்று கூறினாள். 

ஒப்பனையாளர்களிடம் இருந்த டிசைன் புத்தகத்திலிருந்து அழகான அணிகலன் பொருத்திய ஒரு லோ பன் கொண்டை அலங்காரத்தைத் தேர்ந்தெடுத்து அதை செய்யச் சொன்னாள். அதற்குத் தகுந்தபடி மிதமாக கண்களை உறுத்தாத விதத்தில் மேக்கப்பும் செய்யவைத்தாள். முடிந்ததும், “இப்போ எப்படி இருக்கு?” என்று மேகாவையும், மற்றவர்களையும் பார்த்துக் கேட்க, உடையும், நகைகளும், ஒப்பனையும்  ராதிகாவின் அழகுக்கு அழகு சேர்த்து அப்சரஸ் போலக் காட்டியது. “ரொம்ப அழகா இருக்கு ராதிகா, நாளைக்கும் இதையே பண்ணிக்கோ,” என்று கீதா கூறினாள். “இருங்கோ மேடம், பாசை கூட்டிண்டு வரேன்,” என்று கிளம்பிய மேகாவை, “அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், ஒரு ஃபோட்டோ எடுத்து உங்க பாஸுக்கு வாட்சப் பண்ணு போறும், யாரு என்ன சொன்னாலும், இதுதான் ஃபைனல் லுக், நான் டிசைட் பண்ணிட்டேன்,” என்றாள் ராதிகா. “சரி மேடம்,” என்று அவளைப் பல கோணங்களில் படம் பிடித்து பரத்துக்கு “ஃபைனல் லுக் டிசைடட்”  வாட்சப் செய்ய, அவனிடமிருந்து “குட், கேரி ஆன்,” என்று பதில் வந்தது. 

மற்ற நால்வரின் ஒப்பனைகளும் மேக்கப்பும் அதேபோலவே முடிவு செய்யப்பட, ராதிகாவிற்கு ஒப்பனையைக் கலைக்க உதவி செய்துவிட்டு, நாளை காலை பத்து மணிக்கு வருவதாகக் கூறிவிட்டு ஒப்பனையாளர்கள் கிளம்பினார்கள்.  

சரியென்று ஒருவழியாக உடைமாற்றிக்கொண்டு, ரிசப்ஷனுக்கான உடையையும் நகைகளையும்  பத்திரமாக வைத்து மீண்டும் பர்வதத்திடமே ஒப்படைக்கும்படி துளசியையும் பானுவையும் அனுப்பியவள், “ஆமாம் மேகா, ரிசப்ஷனுக்கு என்ன ஏற்பாடெல்லாம் பண்ணியிருக்கேள்னு என்கிட்டே எதுவுமே சொல்லவே இல்லையே,” என்று கேட்க, “எல்லாம் பக்கவா ரெடியாயிண்டு இருக்கு மேடம்,” என்று கூறியவளை எரிக்கும் பார்வை பார்த்து, “எப்படி, இப்போ பியூட்டிஷியன் வந்தாளே அவாளை மாதிரியா?” என்று கேட்டாள். 

“இல்லை, மேடம்…அப்படியில்லை…” என்று மேகா திணற…”சரி போகட்டும் விடு, இதுவரைக்கும் எதுவும் சொல்லலை, இப்போவாவது சொல்லலாம் இல்லையா?” என்று கேட்டாள். 

“பண்ணலாம் மேடம், பாஸோட ஆபீஸ்ல இவென்ட் பத்தின ப்ரேசெண்டேஷன் இருக்கு, இப்போவே வேணும்னாலும் பாக்கலாம்,”  என்று உற்சாகமாய்க் கூறினாள் மேகா. 

இருவரும் பரத்தின் அலுவலக அறையைச் சென்றடைந்த பொழுது, அறையின் ஜன்னலருகே நின்று அரவிந்தும் பரத்தும் மும்முரமாக எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்து “என்ன” என்பது போல் பரத் புருவம் உயர்த்த, “வாயத் திறந்து பேசற பழக்கமே இல்லையோ இவருக்கு, எப்போ பாத்தாலும் கண்ணைக் காட்டிண்டே இருக்கறது, பகவான் இவருக்கு வாயைக் குடுத்ததை விட இன்னும் ரெண்டு புருவம் எக்ஸ்ட்ராவா குடுத்துருக்கலாம், புருவத்தை ஒசத்தி ஒசத்தி ஜாடை காட்ட வசதியா இருந்திருக்கும்” என்று நினைத்துக்கொண்டாள் ராதிகா.  

“பாஸ், மேடம்க்கு இவன்ட் அரேஞ்ச்மென்ட் பத்தின அப்டேட் குடுக்கணும்,” என்று கூற, சரி என்பது போல் தலையாட்டிவிட்டு இருவரும் பேச்சைத் தொடர்ந்தனர். “உக்காருங்க மேடம், இப்போ ஸ்டார்ட் பண்றேன்” என்று தனது லேப்டாப்பை எதிர் சுவற்றில் இருக்கும் தொலைக்காட்சியில் இணைக்க முற்பட்டாள் மேகா. 

உட்காரலாம் என்று அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவள் கண்ணில் அந்த விஸ்தாரமான அறையின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த லெதர் சோபா கண்ணில் பட்டது. அதில் உட்கார்ந்தால் தோதுப்படாது, வேறெங்கு உட்காரலாம் என்று திரும்பியவள் பார்வையில் ஒரு பெரிய மஹாகனி டேபிளும், அதன் பின் இருந்த சுழலும் நாற்காலியும் மேஜைக்கு முன் போடப்பட்ட இரு நாற்காலிகளும் பட்டன.

அங்கிருந்து பார்த்தால் சரியாக இருக்கும் என்று தோன்றவே, போடப்பட்டிருந்த நாற்காலிகளைக் கடந்து  சென்று, டேபிளின் மேலிருந்த காகிதங்களை ஒரு பக்கமாக நகர்த்திவிட்டு, லேசாகத் துள்ளி அதன் மீது ஏறி, இரு கைகளையும் தனக்கு இருபுறமும் மேஜையின் விளிம்பில் ஊன்றி, கால் மேல் கால் போட்டு வசதியாக உட்கார்ந்துகொண்டாள் ராதிகா. 

அதுவரை அரவிந்திடம் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்த பரத்தின் கவனத்தை ராதிகா உட்கார்ந்த தோரணை ஈர்க்கவே, பேசுவதை நிறுத்திவிட்டு, அவள்புறம் திரும்பி, முதல்முறையாக, அவளை கவனிக்க ஆரம்பித்தான். 

தொலைக்காட்சியில் விளக்கக் காட்சியும் தொடங்க, இருபது நிமிடங்கள் ஓடிய வீடியோவை மௌனமாகப் பார்த்தவள், அது முடிந்ததும், “ஆமா, இந்த டிசைன், பூ அலங்காரம் இதையெல்லாம் யாரு முடிவு பண்ணினா?” என்று மேகாவைப் பார்த்து கேட்டாள். “பாஸ்தான் பண்ணினார் மேடம்,” என்று மேகா பதிலளிக்க, “அப்படியா? இது யாரோட ரிசப்ஷன்?” என்று எதிர்கேள்வி கேட்டாள் ராதிகா. 

இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி என்பதுபோல, “பாஸோட  ரிசப்ஷன் மேடம்” என்று மேகா கூற, “அப்போ ரிசப்ஷனுக்கு உங்க பாஸ் மட்டும் வந்தா போதுமா?” என்று நோகாமல் குண்டு போட்டாள், ராதிகா. “அதெப்படி மேடம், ப்ரைட் (bride) இல்லாம ரிசப்ஷன் எப்படி நடக்கும்? என்று அப்பாவியாக மேகா கேட்க, “இங்க எனக்கு பிடிச்சாமாதிரி ஒண்ணுமே இல்லையே, நான் எதுக்கு வரணும்,” என்று சீரியசாகக் கேட்டாள் ராதிகா.  இவர்கள் பேசுவதை இப்போது வெகு சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்தான் பரத். 

மேகாவிற்கு கிலி பற்றிக்கொண்டது. “இதுல…இதுல என்ன பிடிக்கல மேடம்” என்று திக்கியபடி கேட்க, “எனக்கு பிங்க் ரோஸ் பிடிக்கல, யெல்லோ ரோஸ் மாத்துங்கோ” என்றாள். “ஆனா மேடம், பேக்கிரவுண்ட் யெல்லோ கலர், யெல்லோ ரோஸ் மாத்தினா செட் ஆகாது,” என்று கூற, “அப்போ பேக்கிரவுன்டையும் மாத்துங்கோ,” என்றாள் கூலாக. “ம்ம்…யெல்லோ ரோஸ்க்கு மேட்சா என்ன பேக்கிரவுண்ட் நன்னா இருக்கும்?” என்று கன்னத்தில் விரலால் தட்டி யோசித்தவள் “ஹான், மயில் கலர், அதாவது லைட் கிரீன், லைட் ப்ளூ, பீகாக் ப்ளூ, டார்க் ப்ளூ இந்த கலரெல்லாம் கலந்து பேக்கிரவுண்ட் ரெடி பண்ணுங்கோ,” என்றாள். 

இவ்வளவு நேரம் ராதிகாவிற்கு பதிலளித்துக் கொண்டிருந்த மேகா, இப்போது பரத்தைப் பார்த்து, “பாஸ், எல்லா டெகரேஷன்சும் கிட்டத்தட்ட முடிஞ்சு போச்சு, இருபதாயிரம் பிங்க் ரோஸ் ஆர்டர் பண்ணி, டெலிவரியும் ஆயிடுத்து, அதை அரேஞ் பண்ணவேண்டியதுதான் பாக்கி, இப்போ மாத்த சொன்னா எப்படி பாஸ்?” என்று சப்போர்டுக்குப் போக, “இப்படித்தான் நீங்க இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தறேளா? கல்யாணப் பொண்ணுக்கு என்ன பிடிக்கும்னே தெரியாம, என்கிட்டே கலந்து பேசாம ரிசப்ஷனுக்கு நீங்க எப்படி ஏற்பாடு பண்ணினேள்? தமிழ்நாட்டு கல்யாணப் பொண்ணுக்கு மேக்கப் பண்ண தமிழே பேசாத பியூடிஷியன்சை கூட்டிண்டு வந்திருக்கேள், அவாளுக்கு நாம பேசறதும் புரியல, நம்ம சம்பிரதாயங்களும் தெரியல, இதுதான் நீங்க இவென்ட் நடத்தற லட்சணமா?” என்று பொரிந்து தள்ளியவளை எப்படி சமாதானம் செய்வது என்று அறியாமல் கையைப் பிசைந்தபடி மேகா பரத்தைப் பார்க்க, அவன் ராதிகா சொல்வதைச் செய் என்பது போல் சைகை செய்தபடி அவர்களின் சம்பாஷணையை அதிதீவிரமாகக் கவனிக்க ஆரம்பித்தான். 

“ஓகே மேடம், கோவிச்சுக்காதீங்கோ, நான் பிங்க் ரோசை யெல்லோவாகவும் பேக்கிரவுண்டை நீங்க சொன்னா மாதிரியும் மாத்தச் சொல்றேன், ஆனா ஏற்கனவே டெலிவரி வாங்கியிருக்கற பிங்க் ரோசை என்ன பண்றது மேடம்? அதெல்லாம் வேஸ்டா போயிடும், திருப்பியும் குடுக்க முடியாதே?” என்று கேட்டாள். 

“ஏன் திருப்பிக் குடுக்கணும், அந்த பூவையெல்லாம் கற்பகாம்பாள் கோவிலுக்கு அனுப்பி நாளைக்கு அம்மனுக்கு நம்பாத்து உபயத்துல சப்பரம் கட்டச் சொல்லுங்கோ, அதுக்கு மேலையும் பூ மீந்துதுன்னா, கோவிலுக்கு வர்ற சுமங்கலிகளுக்கு குடுக்கச் சொல்லுங்கோ, புண்ணியத்துக்கு புண்ணியமும் கிடைக்கும், பூவும் வெஸ்ட் ஆகாது” என்றாள்.

அடுத்ததாக, “அப்பறம், உங்க பாஸ் ரிசப்ஷனுக்கு என்ன ட்ரெஸ் போட்டுக்கப் போறார்? பட்டு வேஷ்டி பட்டு சட்டைதானா? என்று அமைதியாய் நின்று அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை வம்புக்கு இழுத்தாள். இப்படியான நேரடி வம்பை எதிர்பார்க்காதவன், வந்த புன்னகையை அடக்கிக்கொண்டு பிடிவாதமாய் மௌனம் சாதிக்க, “பாஸுக்கு டிசைனர் ஷெர்வானி ரெடி ஆகி இன்னிக்குதான் டெலிவரி ஆச்சு மேடம், ஒரு நிமிஷம் காட்டறேன் பாருங்கோ,” என்று மேகா அவள் கொண்டுவந்திருந்த ஷெர்வானியைக் காட்டினாள். அடர் நீல நிறத்தில் தங்கப் பூக்கள் நெய்யப்பட்ட ஷெர்வானி பார்க்க அழகாய் இருந்தது, ஆனாலும் ரிசப்ஷன் என்றாலே ஷெர்வானிதான் என்ற எண்ணமே அவளுக்குப் பிடிக்கவில்லை, “நெனைச்சேன், இப்படி க்ளிஷேவா ஷெர்வானிதான் வாங்கியிருப்பேள்னு நெனைச்சேன்,” என்று கூறியவள், மேகாவை நோக்கி கையை நீட்டி, “பென் குடு,” என்றாள். “இப்போ எதுக்கு சம்பந்தமில்லாம இவங்க பென் கேக்கறாங்க?” என்று யோசித்தவாறே தன் கையில் இருந்த பேனாவை ராதிகாவிடம் கொடுக்க, அதை வாங்கியவள் மெதுவாக பரத்தின் முன் சென்று நின்றாள். 

அதுவரை கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த பரத்திற்கு மிக நெருக்கமாக ஆனால் அவனைத் தொடாமல் நின்றவள், தலை நிமிர்ந்து அவன் கண்களைச் சந்தித்தாள். அவளுடைய பார்வையை தனது ஊடுருவும் பார்வையால் சந்தித்தவன், “இப்போது என்ன செய்யப்போகிறாய்?” என்பதுபோல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். அவனுடைய விழி தொடுத்த கேள்விக்கு பதிலளிக்கும் விதத்தில் கையிலிருந்த பேனாவால் அவனுடைய முகத்தை ஒரு பக்கமாகத் திருப்பினாள், ஆச்சரியத்தில் விழிவிரிய அடக்கமாட்டாத புன்னகையுடன் அவள் திருப்பிய திசையில் முகம் திருப்பி நின்றான் பரத். அவன் மீதிருந்த பார்வையை விலக்காமல் “மேகா, உன்னோட பாஸுக்கு ஷேவ் பண்ற பழக்கமே இல்லையா, இப்படி காடட்டமா தாடியை வளர்த்து வெச்சுருக்கார், இந்த முடி காட்டுக்குள்ள அங்கங்க கொஞ்சமாத்தான் முகமே தெரியறது…” என்றபடி மீண்டும் பேனாவால் அவன் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பியவள், அவனுடைய நெற்றியில் சரிந்து விழுந்த, ஜெல் போட்டு அடக்காத முன் நெற்றி முடியையும் பேனாவாலேயே நகர்த்தியவள், “ஒரு வேளை டி ராஜேந்தர் ஃபேனா இருப்பாரோ? என்னவோ போ, அவாவா மொகம், அவாவா இஷ்டம்,” என்று கூறியபடி அவன் கண்களை மீண்டும் சந்தித்தவள், பேனாவால் தனது கன்னத்தில் தட்டியபடி, “ஃபுல் ப்ளாக் சூட்” என்று கூறிவிட்டு, அவனருகில் இருந்து நகர்ந்து, பேனாவை மேகாவிடம் கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியேறியவள், கதவருகில் சென்று திரும்பி, 

     “அப்பறம் ஒரு முக்கியமான விஷயம், உங்க சென்னைக்காராளுக்கு வேணும்னா நாத்தமடிக்கிற சென்ட் போட்டுக்கற பழக்கம் இருக்கலாம், எங்க ஸ்ரீரங்கத்துக்காராளுக்கு சென்ட் போட்டுண்டு நாத்தமடிக்கிற பழக்கம் இல்லை” என்று கூறிவிட்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டாள்…    

அடுத்த அத்தியாயம்

காதல் கடன் – 10

காதல் கடன்(10)“அப்பறம் ஒரு முக்கியமான விஷயம், உங்க சென்னைக்காராளுக்கு வேணும்னா நாத்தமடிக்கிற சென்ட் போட்டுக்கற பழக்கம் இருக்கலாம், எங்க ஸ்ரீரங்கத்துக்காராளுக்கு சென்ட் போட்டுண்டு நாத்தமடிக்கிற பழக்கம் இல்லை” என்று கூறிவிட்டு திரும்பியும் பாராமல் சென்றுவிட்டாள்...  அதுவரையில் ராதிகாவின் அருகாமையால் நெஞ்சுக்குள் நிறைந்திருந்த லேசான…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 3

  1. Chitra Srinivasanபொதுக் கருத்துChitra Srinivasan

    Niceஆட்டம் சூடு பிடிக்கிறது.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்