காதல் கடன் – 6
காதல் கடன்
(6)
வெனிலா ஐஸ்க்ரீமில் சில துளி ரோஸ்மில்க் எசென்சைக் கலந்தது போன்ற நிறத்தில், ஹவர் க்ளாஸ் பிகருடன் அரேபியக் குதிரையின் ஒயிலுடன் நடந்து வந்தாள் மேகா…பரத்தின் பிசினஸ் அசிஸ்டன்ட், பென்சில் ஸ்கர்ட்டுடன் கூடிய நீல நிற பிசினஸ் சூட்டில் சிக்கென்று இருந்தாள்.
“வாம்மா மணிமேகலை, இப்போதான் வர வழி தெரிஞ்சுதா?,” ஆமாம், அவள் பெயர் மணிமேகலையேதான், வேற்று மொழி மற்றும் வெளிநாட்டு கிளையன்ட்கள் அவள் பெயரைச் சொல்ல கஷ்டப்படக்கூடாது என்று அவளுடைய பெயரை மேகாவாகச் சுருக்கியிருந்தான் பரத்.பர்வதத்தின் பால்ய ஸ்னேகிதியின் மகள், அவளை வாய்நிறைய மணிமேகலை என்று அழைப்பது பர்வதமும், மேகாவின் அம்மாவும் மட்டுமே…“எப்படியோ கல்யாணத்துக்கு வராம டிமிக்கி குடுத்துட்டே, உன் மேல நான் ரொம்ப கோபமா இருக்கேன்,” என்று அகமும் முகமும் மலர, கொஞ்சம் கோபமாகவும் வரவேற்றார், பர்வதம் மாமி. தன்னிச்சையாக அவளை அணைத்துக்கொள்ள நீண்ட கைகளுக்குள் அடக்கமாக வந்து சேர்ந்து கொண்டவளை உச்சி மோந்து மகிழ்ந்தார்.
“என்ன ஆன்டி பண்றது, நாங்கல்லாம் சேர்ந்து இங்க பிசினசைப் பாத்துக்கறோம்னு ப்ராமிஸ் பண்ணிதான் பாசையே கல்யாணத்துக்கு மூட்டை கட்டினோம், இல்லைன்னா அவரை கிளப்பிருக்கறதே கஷ்டம், அதுதான் இப்போ வந்துட்டேனே, கல்யாணத்துல கொண்டாடாததை இப்போ சேர்த்து வெச்சு கொண்டாடிடலாம், என்ன சொல்றீங்க?,” என்றாள் அவரை அணைத்துக்கொண்டு.
“உனக்கு பேசவா கத்துக்குடுக்கணும், எல்லாம் உன் பாஸோட ட்ரெயினிங்காச்சே, நீயும் அவனை மாதிரியேத்தான் பேசுவே, சரி, சரி, மொதல்ல அந்த ரெண்டாவது மாடியில இருந்து கீழே இறங்கு, நீ நடக்கறச்சே கால் பிசகி கீழே விழுந்துடுவியோன்னு பயமாவே இருக்கு,” என்று அவளுடைய ஹீல்சைக் காட்டிக் கூறினார். அவளும் சிரித்தபடி ஹீல்சைக் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, அவரருகில் ஊஞ்சலில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.
“ஆச்சரியம்தான் போ, எப்போவுமே உன் பாஸோட தோகையைப் பிடிச்சுண்டுதான் வருவே, இன்னிக்கி என்ன தனியா வந்துட்டே, மழைதான் வரப்போறது,” என்று அங்கலாய்த்துக்கொண்டார் பர்வதம் மாமி. அவருடைய அன்பான பார்வையிலும் பேச்சிலுமே அவருக்கு மேகாவின் மீது எவ்வளவு பிரியம் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
“இன்னிக்கும் பாஸ்தான் அனுப்பி வெச்சுருக்கார், ரிசப்ஷனுக்காக மேடமுக்கு டிரஸ் முடிவு பண்ண டிசைனரும், அப்பறம் பியூடிஷியனும் வரப்போறா, அதைப் பாத்துக்கச் சொல்லி அனுப்பி வெச்சார், மத்த ஏற்பாடுகளைப் பத்தி உங்ககிட்டையும் அங்கிள் கிட்டயும் டிஸ்கஸ் பண்ண அரவிந்த் சார் நாளைக்கு கார்த்தால வருவார். அவரும் இப்போ பாஸோட மினிஸ்டரைப் பாக்கப் போயிருக்கார்,” என்றாள் மேகா.
“இதெல்லாம் நியாபகம் இருக்கு, ஆனா சாயங்காலம் ஆத்துல பங்க்ஷன் இருக்குன்னு மட்டும் நியாபகம் இல்லையா அவனுக்கு? அரவிந்த் தான் இருக்கானே, அவனை மீட்டிங்குக்கு அனுப்பிட்டு, பரத் வீட்டிலேயே இருந்திருக்கலாம், என்னவோ போ, பெரியவா சொல்றதை யார் கேக்கறேள்?” மாமியின் பேச்சில் கோபம் தெரிந்தது.
“எவ்வளவு சீக்கிரம் முடியறதோ அவ்வளவு சீக்கிரமா வந்திடுறேன்னு பாஸ் சொல்லிருக்கார், ஆன்டி, அவர் வரதுக்கு முன்னாடி நாம இந்த வேலை எல்லாம் முடிச்சுடலாம், வாங்கோ,” என்று மேகா கூறிக்கொண்டிருக்கும்போதே டிசைனரின் வேனிலிருந்து, அவருடைய ஊழியர்கள் ஆடைகளை இறக்கத் தொடங்கியிருந்தனர்.
“ஆன்டி, இதெல்லாம் எங்க வெக்கலாம்னு சொன்னா, இவா செட் பண்ணிப்பா, அப்பறம் மேடம் வந்து பாத்து செலக்ட் பண்ண சரியா இருக்கும்,” என்று மேகா கூற, அவர்கள் உருட்டிக்கொண்டு வந்திருந்த ஆடைகள் வரிசையாகத் தொங்க விடப்பட்டிருந்த ராக்கை கீழ்த்தளத்தில் உள்ள ஒரு காலி அறையில் வைக்கும்படி பணித்தார், பர்வதம் மாமி, அத்துடன் கூட துளசியை அழைத்து “டிசைனர், ரிசப்ஷன் டிரஸ் கொண்டு வந்திருக்கிறார், போய் ராதிகாவை அழைச்சுண்டு வா,” என்றும் அனுப்பினார்.
அன்னையின் அறையில் தூங்கி எழுந்து காபி குடித்துக்கொண்டிருந்த ராதிகாவை, “சின்ன மன்னி, சீக்கிரம் வாங்கோ, அம்மா கூப்பிடறா, ரிசப்ஷனுக்கு ட்ரெஸ் செலக்ட் பண்ணலாம்,” என்று ராதிகாவையும், உடனிருந்த அவளது அம்மா மற்றும் அத்தையையும், அழைத்துச் சென்றாள் துளசி.
ராதிகாவிற்கு ரிசப்ஷன் உடை தேர்ந்தெடுக்கும் வைபவம் இனிதே தொடங்கியது.
அங்கே ராக்கில் தொங்கிக்கொண்டிருந்த ஆடைகளைப் பார்த்த சுந்தரி மாமி, “இதென்னடியம்மா பத்தே பத்து டிரெஸ்ஸைக் கொண்டுவந்து அதுலருந்து ஒண்ணு எடுக்கச் சொல்றே, இதுக்கு பதிலா கடைக்கே போயிருந்தா நன்னா பாத்து வாங்கியிருக்கலாமே?” என்று குற்றமாய்க் கூற “பணம் எவ்வளவு இருந்தாலும், மனசு வேணும்டியம்மா, அது இங்கே கொஞ்சம் கம்மிதான் போலிருக்கு,” என்று நாக்கில் நரம்பின்றிப் பேசினார்.
மற்றவர்கள் பதிலளிக்க முடியாமல், பதிலளித்தால் வம்பு வளரும் என்பதால் மௌனம் காக்க, மேகாவிற்கு கோபம் தாளவில்லை, “மாமி, உலகத்திலேயே ரொம்ப ஃபேமசான டிசைனரோட ட்ரெஸ்கள் இதெல்லாம். சப்யசாசின்னு நீங்க கேள்விப் பட்டிருக்க கூட மாட்டேள். எங்க சார், மேடம்காகவே ஸ்பெஷலா அவரோட கல்கத்தாவில இருக்கற ஸ்டூடியோவுக்குப் போயி அங்க அவரே செலக்ட் பண்ணி அனுப்பியிருக்கார். இதெல்லாம் அவருக்குப் பிடிச்ச டிரஸ். மேடம் இதுல இருந்து ஒண்ணை செலக்ட் பண்ணிக்கணும்னு அவர் விரும்பறார். அப்படி எதுவும் பிடிக்கலைன்னா, நீங்க சொல்றா மாதிரி வேற கடைக்கு வேணுமானா நான் அழைச்சுண்டு போறேன். உங்க விருப்பம்” என்று பொரிந்தாள்.
“மன்னி, சித்த சும்மா இருக்கேளா, எங்க வந்து என்ன பேசறதுன்னு தெரியாம பேசறேளே, மாப்பிள்ளை எவ்வளவு ஒசத்தியா பார்த்து செலக்ட் பண்ணி அனுப்பிருக்கார், அதை மெச்சிக்கரதை விட்டுட்டு, எல்லாத்துக்கும் விதண்டாவாதம் பேசிண்டு இருக்கேளே, சும்மா இருங்கோ…” என்று நாத்தனாரை அதட்டினார் மரகதம். “என்னைக் கேட்டா, மாப்பிள்ளை இத்தனை ட்ரெஸ் அனுப்பி செலக்ட் பண்ணச் சொல்லியிருக்கவே வேண்டாம், மாப்பிள்ளையே ஒரு டிரெஸ்ஸை எடுத்து இது நன்னாருக்கு, இதை ரிசப்ஷனுக்கு போட்டுக்கோன்னு சொல்லியிருந்தா இன்னும் நன்னா இருந்திருக்கும்,” என்றார்.
“அதெப்படி மாமி, தன்னோட ரிசப்ஷன் டிரெஸ்ஸை செலக்ட் பண்ணனும்னு ராதுவுக்கும் ஆசை இருக்காதா என்ன, அதனாலதான் பரத் இந்த ஏற்பாட்டைப் பண்ணியிருப்பான், அவனுக்கு நேரம் ஒழிஞ்சிருந்தா அவனே ராதிகாவை அழைச்சுண்டு கல்கத்தாவுக்குப் போயிருப்பான், அவனால முடியலை பாவம், அதான் எல்லாத்தையும் ஆத்துக்கே வரவழைச்சுட்டான்,” என்றார் பர்வதம்.
அதற்குள் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் அங்கு கூடிவிட, ரிசப்ஷன் உடைக்கான பேஷன் ஷோ ஆரம்பமானது. சப்யசாசியின் அசிஸ்டெண்டுகள் ஆளுயரக் கண்ணாடி, உடை மாற்றும் தடுப்பு உட்பட அனைத்தையும் கொண்டுவந்திருக்க, ஏற்பாடே பிரமாதமாக இருந்தது. ஒவ்வொரு உடையும் ஒன்றை மிஞ்சி ஒன்று ஆடம்பரமானதாக இருக்க, ராதிகாவிற்கு உள்ளூர தயக்கம் எழுந்தது. தனது வீட்டினருக்குத் தெரியாது என்றாலும், அவளுக்கு சப்யசாசி என்பவர் யார் என்றும், அவருடைய உடைகள் எவ்வளவு விலை உயர்ந்தவை என்றும் நன்றாகத் தெரியும், மேலும் வந்திருந்த உடைகளில் பெரும்பாலும் காக்ரா சோலி, லெஹங்காக்களே இருக்க, இதுவரை அணிந்திராத வகை உடை என்பதால் அவளது தயக்கம் மேலும் அதிகரித்தது.
“இதெல்லாம் எதுக்கும்மா, ரிசப்ஷனுக்குன்னு புடைவை வாங்கியிருக்கேன், அதுவே போறுமே,” என்று தயங்கி தயங்கி பர்வதத்திடம் கூற, “நீயும் நானும் இதுவரைக்கும் பார்த்திருக்கற மாதிரியான ரிசப்ஷன் இல்லைம்மா இது, இங்க நம்மளோட பட்டுப்புடவை எல்லாம் பொருந்தாது, இதோ வந்திருக்காளே, மேகா, பரத்தோட கைத்தடி, அவதான் உன்னோட வெட்டிங் பிளானர், உங்க ரிசப்ஷனோட தீமுக்கு ஏத்தா மாதிரி எல்லாத்தையும் ரெடி பண்றதுதான் அவளோட வேலை, அதுவும் பரத்தே பார்த்து உனக்காக செலக்ட் பண்ணி அனுப்பிருக்கான், இதுல இருந்து ஒண்ணை எடுத்துக்கோ, விலையைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே, அதெல்லாம் பரத் பாத்துப்பான், நீ இந்த மாதிரி எல்லாம் யோசிக்கறதை விட்டுட்டு, இந்தக் க்ஷணத்தை என்ஜாய் பண்ணுடி கொழந்தை,” என்று ஆதுரமாய் அவள் தலையை வருடி, அவள் கூறியதற்கும், மனதில் நினைத்ததற்கும் சேர்த்து பதில் சொன்னார் அந்தத் தங்கமான மாமியார்.
பரத்தே தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறான் என்ற எண்ணமே மனத்தைக் குளிர்விக்க, பெண்களுக்கே உரிய ஆர்வத்துடன் ராதிகாவும் காரியத்தில் இறங்கினாள். அவர்கள் கொண்டு வந்திருந்த உடை ஒவ்வொன்றையும் அனைவருக்கும் போட்டுக் காட்ட, ஏகமனதாய் ஒரு பிங்க் நிற லெஹங்கா அவளுக்கு மிகப் பொருத்தமாய் இருக்கிறது என்று முடிவெடுக்கப்பட்டது. உடைகளின் பளுவிலும், ஒவ்வொன்றாய் போட்டுக்கொண்டு இங்கும் அங்கும் நடந்து காட்டியதிலும் ஓய்ந்துபோயிருந்தாள் ராதிகா, ஆனாலும் மனதில் உள்ள உற்சாகம் அவளை செலுத்திக்கொண்டிருந்தது. மனதில் உள்ள குழப்பங்களும் தற்காலிகமாக விடை பெற்றிருந்தன.
அடுத்து உடைக்குத் தகுந்தபடி நகைகளின் அணிவகுப்பு தொடங்கியது. தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பிங்க் நிற லெஹங்காவிற்கு ஏற்றபடி வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வைர நகை செட்களைப் பார்த்து சுந்தரி மாமிக்கு கண்ணில் ஈயாடவில்லை. மரகதமும் திகைத்துத்தான் போனார். “என்ன மாமி, இதெல்லாம் ரொம்ப விலை ஒசந்தது போல இருக்கே, இதெல்லாம் தேவைதானா? இருக்கற நகையிலேயே எதையாவது ஒண்ணை ராது போட்டுக்கட்டுமே, கல்யாணத்துலயே நெறைய்ய நகை போட்டுட்டேளே, இன்னும் என்னத்துக்கு இவ்வளவு செலவு?” என்றார்.
அதை ஆமோதிப்பதைப் போல தலையசைத்த ராதிகாவைப் பார்த்து, “நேக்கொண்ணும் தெரியாதும்மா, இதெல்லாம் உன் ஆம்படையானோட ஏற்பாடுன்னு சொன்னேனே, எதுவா இருந்தாலும் அவனண்ட பேசிக்கோ, இப்போ அவன் இங்கே இல்லை, அதனால உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ, அப்பறமா அவனண்ட சொல்லி உனக்கு தோண்றதை செஞ்சுக்கோ, என்று கூறி அவளை நகைகளையும் தேர்ந்தெடுக்க வைத்தார் பர்வதம் மாமி. நெக்லஸ், தோடு, வளையல், மோதிரம், ஒட்டியாணம், கொலுசு இத்யாதி என்று அனைத்தும் தேர்வானது.
பின்னர் அவற்றிக்கு மேட்சாக செருப்பு, ஹேண்ட்பேக், ஆகிய அனைத்தையும் தேர்வு செய்து முடிக்க, மணி கிட்டத்தட்ட ஒன்பது ஆகியிருந்தது. போகும்போது, சப்யசாசியின் அசிஸ்டென்ட்களில் ஒருத்தி, ஒரு பெரிய மெரூன் நிற வெல்வெட் பெட்டியை ராதிகாவிடம் கொடுத்து, “இது சப்யா சாரிடம் இருந்து உங்களுக்கான திருமணப் பரிசு,” என்று கொடுத்தாள். அதற்குள் ஒரு அழகான டிசைனர் புடைவையும் அதற்குத் தகுந்த அணிகலன்களும் மேக்கப் கிட்டும் இருந்தது. “இதெல்லாம் எதுக்கு”, என்று கேட்ட ராதிகாவைப் பார்த்து, “பரத் சாரும், சப்யா சாரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், பரத் சாரோட எல்லா ப்ரைட்ஸுக்கும் சப்யா சார்தான் ட்ரெஸ் டிசைன் பண்ணுவார். அவர் இப்போ இண்டியால இல்லை, இல்லைன்னா அவரே நேர்ல வந்து இதையெல்லாம் செய்திருப்பார், இந்த கிப்டையும் அவரே குடுத்திருப்பார்.” என்று ராதிகாவை அந்தப் பரிசை ஏற்றுக்கொள்ள வைத்தாள் அந்தப் பெண்.
அதற்குத் தகுந்தாற்போல, அந்தப் பெட்டியில் ஒரு அழகான கார்டில், To The Most Beautiful Bride Of a most precious friend” (“ஒரு விலைமதிப்பில்லா நண்பனுடைய மிக அழகான மணப்பெண்ணிற்கு”) என்று எழுதி அவரே கையெழுத்திட்டிருந்தார்.
மேகாவும் தனது பணியை செவ்வனே முடித்த திருப்தியில் நாளை காலை பியூடிஷியனுடன் வருவதாகக் கூறி விடை பெற்றாள். சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படி கூறிய மரகதத்திடம், இதற்கடுத்து தான் செய்யவேண்டிய வேலைகள் அதிகமிருப்பதால், இன்னொரு நாள் வருகிறேன் என்று கூறி புறப்பட்டாள்.
இதனூடே பானுவுக்கும், அவர்கள் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் டிசைனர் உடைகள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. ஆண்களுக்கான உடைகள் மறுநாள் கொண்டுவரப்படும் என்றும் தகவல் அளிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட உடைகள் அனைத்தும் ஆல்டர் செய்யப்பட்டு மறுநாள் டெலிவர் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விதவிதமாய் ஆடைகள், நகைகள் என்று பார்த்த அமர்களத்தில், பரத் இன்னும் வீடு வந்து சேராததும், நலங்கு நடக்காமலே போனதும் மறந்தே போனது. இத்தனை களேபரங்களுக்கும் இடையே பரத்தின் நினைவு இருந்தது, இரு உள்ளங்களில் மட்டுமே…
பெண்களின் பல்ஸ் அறிந்து அவர்களின் கவனத்தைத் திருப்பும் விதமாக மகன் சமயோசிதமாக திட்டமிட்டு இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறான் என்று அறிந்து பர்வதம் மாமி கோபமாக இருந்தாலும், மருமகளுக்காக அதை மறைத்து அவளை உற்சாகமூட்டியபடி இருந்தார். இத்தனையும் தனக்காக பார்த்துத் தேர்ந்தெடுத்தவன், தான் தேர்ந்தெடுக்கும்பொழுது தன்னுடன் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்ற ஏக்கம் ராதிகாவின் மனதில் தோன்றியயபடியே இருந்தது. கண்களும் மனதும் அவனைத்தான் தேடின. ராதிகாவின் மனதின் தேடலும் ஏக்கமும் புரிந்த பர்வதத்திற்கு மகனின் மீது கோபம் இன்னும் அதிகரித்தது.
“வரட்டும் அவன், இன்னிக்கி நாக்கைப் பிடிங்கிக்கறா மாதிரி அவனைக் கேட்கலைன்னா, இருக்கு இன்னைக்கி,” என்று மனதில் கருவியபடி….”வாங்கோம்மா, நாழியாகிடுத்து சாப்பிட்டுட்டு வேற வேலைகளைப் பார்ப்போம்,” என்று அனைவரையும் அழைத்துச் சென்றார். இரவு உணவு தயாராகியிருக்க, பரத் இன்னும் வரவில்லையே என்னும் சலசலப்பு எழத்துவங்கியது. ராதிகாவுமே எதிர்பார்ப்போடு வாசலையே பார்த்தபடி இருந்தாள்.
ஒன்பதரை மணியளவில் சோர்வாக வீட்டினுள் நுழைந்த பரத்தை வரவேற்றது அவனைக் குற்றம் சாட்டும்படியான நிசப்தம் மட்டுமே. அந்நேரம் வரை சளசளத்துக் கொண்டிருந்த அனைவரும் அவனைப் பார்த்ததும் அமைதியாகவே, பரத்திற்கு ஒரு மாதிரியாகி விட்டது. அதிலும் முக்கியமாக, மரகதத்தின் முகத்தில் தெரிந்த ஏமாற்றமும், பர்வதத்தின் முகத்தில் தெரிந்த கோபமும் அவனுடைய குற்ற உணர்ச்சியை அதிகரிக்க, இருவரையும் அழைத்து வந்து சோபாவில் அமரவைத்து, அவர்களை இருவரின் முன்னும் முட்டி போட்டு கீழே உட்கார்ந்தான்.
கை நீட்டி தனது இரு கைகளாலும் இருவரின் வலது கையையும் பிடித்துக்கொண்டவன், “நீங்க ரெண்டு பேரும் என் மேல ரொம்ப கோபமா இருக்கேள்னு நேக்கு நன்னா தெரியும். ஆனா என்னோட நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்கோ, ப்ளீஸ், இந்த மினிஸ்டரோட பொண்ணு கல்யாணத்துக்காக ஏற்பாடுகள் ஒரு மாசமாவே நடந்துண்டு இருக்கு. நம்பாத்து கல்யாண வேலைகள் இருந்ததனால எந்த மீட்டிங்குக்கும் என்னால போகமுடியல, மேகாவும் அரவிந்தும்தான் இத்தனை நாளா பார்த்ததுண்டா, ஆனா இன்னிக்கி டிசைன் எல்லாம் ஃபைனலைஸ் பண்ண வேண்டியிருந்தது, ஃபைனல் டீல் சைன் பண்ண வேண்டியிருந்தது. அதுக்கு நானேதான் போயாகணும், தவிர்க்கமுடியாது. போன வாரமே பண்ண வேண்டிய வேலை இது, ஆனால் எனக்கு கல்யாணம் அப்படிங்கறதனால அவர் இத்தனை நாள் வெயிட் பண்ணினார். ஆனால், மினிஸ்டரும் இதுக்கு மேல காத்திருக்க முடியாது, நீங்க வரலைன்னா வேற இவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியப் பாத்துக்கறேன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டார். இதுக்கு மேலயும் தள்ளிப் போட்டா நன்னா இருக்காது, பெரிய பெரிய ஏற்பாடுகள் வேற, நேரமே இல்லை. தள்ளி போடற ஒவ்வொரு நாளும் கம்பெனிக்குதான் இக்கட்டு. அதனாலதான் தவிர்க்கமுடியாம போக வேண்டியதா போயிடுத்து. அதோட, இது ரொம்ப பெரிய ப்ராஜெக்ட்,. என்னோட பிசினஸ்ல அடுத்த லெவல். இது வரைக்கும் நூறு நூத்தம்பது கோடி பட்ஜெட்லதான் கல்யாணம் பண்ணி வெச்சுருக்கேன், முதல் தடவையா எழுநூத்தம்பது கோடி பட்ஜெட்ல கல்யாணம், அட்வான்சே 300 கோடி குடுத்துருக்கார் அந்த மந்திரி. இதோ ஒரு மணிநேரம் முன்னாடிதான் டீல் சைன் ஆச்சு, கையோட அட்வான்ஸ் செக்கையும் குடுத்துட்டார்,” என்று தனது நிறுவனத்தின் பேரில் மினிஸ்டர் கொடுத்திருந்த 300 கோடி ரூபாய்க்கான செக்கையும் காட்டினான்.
தனக்கு மரியாதை கொடுத்து மாப்பிள்ளை வந்து தன்னிடம் பேசியதில் மரகதம் பூரித்துப் போனார். “அதனால என்ன மாப்பிள்ளை, போனா போறது விடுங்கோ, நலங்கு பண்ண முடியலையேன்னு தான் வருத்தப்பட்டேன். ஆனால், உங்க வேலையில நீங்க முன்னுக்கு வர்றாப்ல ஒரு நல்ல காரியம் கல்யாணம் ஆன அன்னிக்கே நடக்கறதுன்னா அதுவே என் பொண்ணுக்கு பண்ணின நலங்கு மாதிரிதான். கை நெறைய செல்வம் கொண்டு வந்திருக்கேள். அப்பா அம்மாவை சேவிச்சுண்டு அவா கையாலேயே சுவாமி கிட்ட வைக்கச் சொல்லுங்கோ, கோபமெல்லாம் ஒண்ணும் இல்லை. நீங்க ரெண்டு பெரும் க்ஷேமமா இருந்தா அதுவே நேக்கு போறும்,” என்றார்.
ஆனால், பர்வதம் மாமியை இந்த பாஷனை சிறிதும் உருக்கவில்லை. மௌனமாகவே அமர்ந்திருந்தார். அதை கவனித்த பரத், “இனிமே நீங்களே வெளிய போடான்னு துரத்தினாலும், திங்கள்கிழமை சுமங்கலி பிரார்த்தனை முடியற வரை நான் எங்கேயும் போகப்போறதில்லை, அட் யுவர் சர்வீஸ் மேடம்,” என்றான் அம்மாவிடம் குறும்பாகச் சிரித்தபடி.
“மொதல்ல நீயும் அப்பாவும் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோம்மா, இந்த செக்கை வாங்கிக்கோ,” என்று செக்கை அம்மா, அப்பா கையில் கொடுத்து அபிவாதயே சொல்லி அவர்களுடைய காலில் விழுந்து சேவித்தான். மாமியார், மாமனார் காலிலும் விழுத்து ஆசீர்வாதம் வாங்கி எல்லார் தலையிலும் டன் டன்னாய் ஐஸ் வைத்து அனைவரையும் சமாதானம் செய்துவிட்டான் அந்தக் கள்ளன்.
இவையனைத்தையும் துளசி, பானுவுடன் அமர்ந்துகொண்டிருந்த ராதிகாவும் கவனித்தாள். “விடாக்கண்டி மாமியாருக்கு கொடாக்கண்டன் மாப்பிள்ளை, முறுக்கிக் கொண்டிருந்த அம்மாவை இப்படி தேனொழுகப் பேசியே மயக்கி விட்டானே, சாமர்த்தியம்தான்,” என்று மனதுக்குள் சிலாகித்துக்கொண்டாள். இவ்வளவு நேரத்திலும் அவன் தன்னை ஒருமுறையும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை என்று அவளுக்கு அப்போது உறைக்கவில்லை. தன் கணவனே தனக்காக ஆடைகளையும் நகைகளையும் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியிலே அவள் மனம் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது.
“நேரமாயிண்டே போறது பாருங்கோ, இன்னும் ஆகவேண்டிய காரியம் நெறைய்ய இருக்கு, இப்போ மாப்பிள்ளையும் வந்தாச்சு, எல்லாரும் சாப்பிடப் போகலாம்,” என்று உறவினர் யாரோ அவசரப்படுத்த, அதுவே சரியென்று அனைவரும் சாப்பிடப் புறப்பட்டனர்.
“நான் சாப்பிட்டாச்சு, நீங்க எல்லாரும் சாப்பிடுங்கோ,” என்று கூறி பரத் அங்கிருந்து அகல முயன்றான். “இல்லை, மாப்பிள்ளை இன்னிக்கி நீங்க ராதிகாவோட சேர்ந்து பால் சாதம் சாப்பிடணும், அதனால…”என்று இழுத்த மரகதத்தைப் பார்த்து, “என்னால இப்போ நிச்சயமா முடியாது மாமி, டீல் முடிஞ்சதும் மினிஸ்டர் டின்னர் குடுத்தார். வேண்டாம்னு சொல்ல முடியலை, எனக்கு இப்போ வயிறு ஃபுல், என்னை வற்புறுத்தாதீங்கோ, ப்ளீஸ்,” என்று கூறிவிட்டு மாடியேறிவிட்டான்.
“என்னடி இது…,” என்று ஏதோ சொல்ல வந்த மரகதத்தை, “விடும்மா, அவர்தான் சொல்றாரே, வயிறு நெறைஞ்சுருக்குன்னு, மேல மேல அவரை தொந்தரவு பண்ணாதே,” என்று அவர் பக்கத்தில் இருந்த ராதிகா தாயைக் கட்டுப்படுத்த, “சரிடியம்மா, உன் ஆத்துக்காரரை நான் தொந்தரவு செய்யல்லை, நீயாவது வந்து சாப்பிடு, இல்லைன்னா, உன் ஆத்துக்காரருக்கு வயிறு ஃபுல்னா நோக்கும் ஃபுல்லா?” என்று கிண்டலாகப் பேசியபடி அவளை சாப்பிட அழைத்துச் சென்றார் மரகதம்.
அம்மாவிடம் கணவனுக்காகப் பரிந்து பேசினாலும், “என்னதான் மினிஸ்டரா இருந்தாலும், ஆத்துல ஒரு பங்க்ஷன்னா அவர் புரிஞ்சுக்க மாட்டாரா என்ன? கங்கண தாரணம் பண்ணிண்டு யாராவது போய் வெளியில் ஹோட்டல்ல வெங்காயமும் பூண்டும் சேர்த்துருக்கிற சாப்பாட்டை சாப்பிடுவாளா? இவ்ளோ பெரிய பிசினஸ் பண்றவருக்கு இதையெல்லாம் எடுத்து சொல்லி அவாளுக்குப் புரியவைக்கத் தெரியாதா, என்ன? என்று ராதிகாவின் மனதில் கேள்வி எழாமலும் இல்லைதான். ஏதோ நானும் சாப்பிட்டேன் என்று பேருக்கு கொறித்துவிட்டு எழுந்தாள்.
மாடியில் தன்னறைக்குச் சென்ற பரத்தை வரவேற்றது, சிவாண்ணாவின் மேற்பார்வையில் நடந்துகொண்டிருந்த முதலிரவிற்கான ஏற்பாடுகள்தான். படுக்கையை மலர்களால் அலங்கரித்து கொண்டிருந்தவர்களை எரிச்சலோடு பார்த்தவன், கையிலிருந்த கோட்டை அங்கிருந்த சோபாவில் எறிந்துவிட்டு, வெயிஸ்ட் கோட்டையும் டையையும் அதனுடன் தூக்கி வீசினான், சட்டையின் முதல் இரண்டு பொத்தான்களை அவிழ்த்தவன், ஃபுல் ஹேன்ட் ஷர்ட்டின் கைகளை மடித்துவிட்டபடி, மாடியிலிருந்து வேகமாக இறங்கி தோட்டத்திற்குள் சென்று இருட்டில் மறைந்தான்.
இதற்குள், மரகதத்துடன் அறைக்குத் திரும்பி வந்த ராதிகாவிடம், அவர் மெதுவாக, “ராத்திரி முஹூர்த்தத்துக்கு ரெடியாகணும் ராதும்மா, இந்தா, இந்த டிரெஸ்ஸை எடுத்துண்டு போயி நீ குளிச்சுட்டு ரெடியாகு, அப்பறம் உன்னையும் மாப்பிள்ளையையும் மனையில ஒக்காரவெச்சு புதுசு கட்டிக்கக் குடுப்பா, அதை மாத்திக்கணும். இங்க எல்லாரும் போக வர இருப்பா, சாயங்காலம் ட்ரெஸ் எல்லாம் பார்த்தோமே, அந்த ரூம்ல போயி குளிச்சுக்கோ, நான் சம்பந்தி மாமி கிட்டக்க ஏற்பாடுகளைப் பத்தி பேசிட்டு வந்துடறேன், நீ குளிச்சுட்டு நம்ம ரூமுக்கு வந்துடு,” என்று மகளை அந்த அறையில் குளிக்க அனுப்பிவிட்டு, கதவை சாத்திக்கொண்டு பர்வதத்தைச் சந்திக்கச் சென்றார் மரகதம்.
கல்யாணக் காரியக்கிரம வரிசையில் இதுவும் ஒரு சம்பிரதாயம் என்று ராதிகாவிற்குத் தெரிந்திருந்தாலும், தனக்கென்று வரும்போது ஏற்படும் பயமும் தயக்கமும் ராதிகாவைச் சூழ்ந்துகொண்டது. என்ன செய்வதென்று தெரியாமல் சிறிதுநேரம் அப்படியே அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டவள், பிறகு ஒருவாறாக மனதை சமன்படுத்திக்கொண்டு குளிக்கச் சென்றாள்.
மரகதத்திடம் முதலிரவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விவரித்து அனுப்பிய பர்வதம் மாமியின் மனநிலை வேறு விதமாக இருந்தது. பரத்துடைய இனிப்பான பேச்சு மற்றவர்களை சமாதானம் செய்திருந்தாலும், கல்யாணத்திற்குப் பிறகான ஒவ்வொரு சம்பிரதாயத்தையும் அவன் சமயோசிதமாகத் தவிர்ப்பது அவருக்கு நன்றாகப் புரிந்தது. அவனிடம் பேசி இன்று ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தவர், பரத்தை அழைத்து வருமாறு ராகவனிடம் சொல்லி அனுப்பினார். ராகவன் தம்பியை எல்லா இடத்திலும் தேடிவிட்டு, தோட்டத்தில் இருந்தவனை பர்வதவர்த்தினியிடம் அழைத்துக்கொண்டு போனான்.
“வாடா, உன்னண்ட நான் கொஞ்சம் பேசணும்,” என்று மகனின் கையைப் பிடித்து, அவனை தரதரவென்று இழுத்துக்கொண்டு போகாதகுறையாக ஒரு அறைக்குள் அழைத்துக்கொண்டு போனார். அங்கே அவர்களுக்கு முன்பே நந்தினி, கீதாஞ்சலி இருவரும் இருக்க, ராகவனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டான். இழுத்து வந்தவனை அங்கிருந்த கட்டிலில் உட்கார்த்திவிட்டு அறைக்கதவை மூடிவிட்டு வந்தார் பர்வதம். தன்னைச் சுற்றி முறைத்தபடி நின்றிருந்த நால்வரையும் பார்த்து எள்ளலாகச் சிரித்தான் பரத்.
“ஆச்சரியமா இருக்கே, ரொம்ப நாள் கழிச்சு உங்களுக்கெல்லாம் அடியேனோட நியாபகம் வந்திருக்கு, என் மேல அவ்வளவு பாசமா, இப்படி வெச்ச கண் வாங்காம பாக்கறேளே, புல்லரிக்கறது போங்கோ, ஆனா இன்னும் நாலு டிக்கட் கொறையறதே, இரு நான் போயி அவாளையும் அழைச்சுண்டு வரேன்,” என்றான் கிண்டலாக.
“வெளையாடதே பரத், ஏண்டா இப்படி பண்றே நீ, என்னதான் நெனைச்சுண்டு இருக்கே, ஏண்டா நலங்குக்கு வரலே?” என்று கோபமாகக் கேட்டாள் நந்தினி.
“இதோ பாரு நந்து, நீ ப்ரெக்னண்டா இருக்கே, கோபமா பேசினா குழந்தைக்கு ஆகாது,” என்று அவளுடைய வயிற்றைச் சுட்டிக்காட்டினான். நீட்டிய விரலைத் தட்டி விட்டவள், “மழுப்பாதே, கேட்டதுக்கு பதில் சொல்லு,” என்க, “நான்தான் சொன்னேனே, முக்கியமான டீல், இன்னிக்கே சைன் பண்ண வேண்டியிருந்தது, தவிர்க்கமுடியலைன்னு, திருப்பி திருப்பி அதையே கேட்டா நானும் அதே பதிலைத்தான் சொல்லுவேன்,” என்று அங்கிருந்து எழ முயன்றான்.
“நீ பொய் சொல்றேன்னு நேக்கு நன்னா தெரியும் பரத், நீ நெனைச்சிருந்தா போன வாரமே இந்த வேலையை முடிச்சிருக்கலாம், ஆனா நீ வேணும்னே ப்ளான் பண்ணி இன்னிக்கி இதை இழுத்து விட்டுண்டு இருக்கே. மத்தவா எல்லாரும் உன்னோட வார்த்தைகளை நம்பலாம், ஆனா நான் நம்ப மாட்டேன்.” என்றார் பர்வதம்.
வெளியே செல்லவதற்காக எழுந்திருந்தவன், திரும்பி தன் தாயைப் புதிதாகப் பார்ப்பதுபோலப் பார்த்தான். “அம்மா, நீயா…நீயா என்கிட்டே நேரடியா பேசறது, நீ என்னோட சரியா பேசி…ம்ம்ம்…கிட்டத்தட்ட ஒரு ஆறு மாசம் இருக்குமா, அச்சச்சோ மறந்து போய் பேசிட்டியா, பரவால்லை, நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன், சரியா, நீயும் சொல்லாதே!” என்று தாயைப் பார்த்து நக்கலடிக்க, அவர் முகம் வேதனையில் சுருங்கியது.
“கிண்டல் பண்ணினது போறும்டா, நந்தினி கேட்டதுக்கு பதில் சொல்லு,” என்று இறுக்கமாகக் கூறினார் பர்வதம். இதுவரையில் கிண்டலாகவேனும் புன்னகைத்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் இருந்த புன்னகை காணாமல் போனது. பெருமூச்சோடு கட்டிலில் மீண்டும் உட்கார்ந்தான். இம்முறை கொஞ்சம் வசதியாகவே, அவர்களை எல்லாம் எந்தவிதமான தயக்கமும் இன்றி எதிர்கொள்ளும் தோரணையில்…
“ஆமாம், நான் பொய்தான் சொன்னேன், ஒரு வாரம் முன்னாடியே சைன் ஆகவேண்டிய டீலை இன்னிக்கி ஆகறாப்ல ப்ளான் பண்ணி நான்தான் மாத்தினேன், ஏன்னா, நீ ஆசைப்பட்டு பார்த்து கட்டிவெச்சு கூட்டிண்டு வந்திருக்கியே உன்னோட நாட்டுப்பொண், அவளோட தேங்காய் உருட்டி, அப்பளாம் உடைச்சு நலங்கு வெளையாட நேக்கு விருப்பமில்லை, அதோட, அவளோட ஒரே தட்டுல பால் சாதம் சாப்பிடற ஐடியாவும் நேக்கு இருக்கல்லை, அதனாலதான், டீல் சைன் பண்ணினதைக் கொண்டாட நானே மினிஸ்டருக்கு டின்னர் பார்டியும் குடுத்து, நானும் சாப்பிட்டுட்டு வந்தேன், இன்னும் ஏதாவது கேள்விகள் இருக்கா உங்களுக்கு?” என்று விட்டேத்தியாகக் கேட்டான் தன்னை முற்றுகையிட்டிருந்த நால்வரிடமும்.
“ஏண்டா பரத், நீ பண்றது நோக்கே நன்னா இருக்கா, உன்னோட சம்மதத்தைக் கேட்டுட்டுதானே கல்யாண முடிவையே எடுத்தோம், நீ சரின்னு சொன்னாவுட்டு தானே அம்மா பொண்ணையே பார்த்தா, நீ ஒத்துண்டுதானே கல்யாணமே நடந்தது, நீ பண்றது கொஞ்சமும் சரியில்லைடா,” என்றாள் நந்தினி.
“தப்பு தப்பா பேசக்கூடாது நந்தினி, என்னோட சம்மதத்தை நீங்கள்லாம் கேட்டேளா…எப்போ…நேக்கு அந்தமாதிரி எந்த நியாபகமும் இல்லையே, நேக்கு நியாபகம் இருந்ததெல்லாம் நீங்க எல்லாரும் சேர்ந்து பண்ணின இமோஷனல் ப்ளாக்மேயில்தான். கல்யாணம் வேண்டாம்னு நான் சொன்னதனால, நீங்க எல்லாரும் சேர்ந்து என்ன பண்ணினேள்? என்னோட யாரும் முகம் குடுத்து பேசலை, நான் எப்போ ஆத்துக்கு வரேன், போறேன், சாப்பிட்டேனா இல்லையா, ஊர்லதான் இருக்கேனான்னு யாரும் கண்டுக்கலை, ஏன் நான் சாப்பிட ஒக்கார்ந்தா எனக்கு யாரும் பரிமாறக்கூட மாட்டேள். அதனால நான் ஆத்துல சாப்பிடறதையே நிறுத்திட்டேன். இதோ இந்த நந்தினி, கல்யாணம் ஆகி ஏழு வருஷம் கழிச்சு பிரெக்னன்ட் ஆகியிருக்கா, எவ்வளவு சந்தோஷமான விஷயம், நாமல்லாம் எவ்வளவு எதிர்பார்த்த விஷயம், இந்த சந்தோஷமான நியூசைக்கூட யாருமே என்கிட்டே சொல்லக்கூட இல்லை, அத்திம்பேர்தான் சொன்னார். சரி அவளை வாழ்த்தலாம்னு போன் பண்ணினா அவ என்னோட போனை எடுக்கவே இல்லை. நான் எப்போ போன் பண்ணினாலும் எடுக்கமாட்டா, காலை கட் பண்ணிடுவா. ஏன்? நீங்க நெனைக்கறச்சே நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் சொன்னதனால கோபம் இல்லையா, இது அத்தனைக்கும் ஹைலைட் என்ன தெரியுமா, அம்மா செஞ்சதுதான்…மூணு நாள் சாப்பிடாம அழிச்சாட்டியம் பண்ணி குத்துயிரும் குலையுயிருமா ஹாஸ்பிடல்ல கிடந்தா, நீங்க எல்லாரும் சேர்ந்து ஐசியு முன்னாடி என்னை குற்றவாளியாக்கி நிறுத்தினேள். என்னோட வீக்னெஸ்சே என்னோட ஃபாமிலிதான்னு தெரிஞ்ச என் பாமிலியே என்னை தனியாக்கி ஒதுக்கி வெச்சேள், உங்க அகராதிப்படி இதுதான் சம்மதம் வாங்கறதா? என் பார்வையில இது வெறும் இமோஷனல் ப்ளாக்மெயில். அதனாலதான் வேற வழி தெரியாம விதியேன்னு சம்மதிச்சேன்.” என்றான் அடிபட்ட குரலில்.
பர்வதத்தின் கண்ணில் அவரையும் மீறி கண்ணீர் வழியத் தொடங்கியது, “சரிடா, விதியேன்னுதான் சம்மதிச்சே, ஒத்துக்கறேன், ஆனால் இப்போ ஆம்படையாள்ன்னு ஒருத்தி வந்திருக்கா, அவளுக்குன்னு நீ செய்யவேண்டிய கடமைகள் இருக்குல்லியா, இதெல்லாம் தெரியாத பிள்ளையா நீ?”என்றார் கண்ணீருடன்.
பெருமூச்சுடன் கட்டிலை விட்டு எழுந்த பரத், அம்மாவை ஆழமாகப் பார்த்து, “இப்போ வந்திருக்கறது உங்களோட நாட்டுப்பொண் மட்டுமே, அவளுக்கு தாலி கட்டினது மட்டும்தான் நான் செஞ்ச, செய்யப்போற கடமை, அதுக்கு மேல, நீங்களாச்சு அவளாச்சு, என்னை இதுல சேக்காதீங்கோ,” என்றான்.
“நீ பேசறது ரொம்ப தப்பு பரத், பாவம்டா அந்தப் பொண்ணு, இப்படியெல்லாம் பேசாதே,” என்றார் மகனிடம் கெஞ்சலாக.
“வேற எப்படி பேசுவேன்னு நீங்க எதிர்பாக்கறேள், உங்களோட லட்சியம் என்னோட கல்யாணம். அதுவும் நீங்க பண்ணி வைக்கணும்னு நெனைக்கும்போது…அவ்வளவுதான், அதை செஞ்சு முடிச்சுட்டேள். இனி என்ன கவலை, நிம்மதியா இருங்கோளேன், அந்த பொண்ணு எப்படி போனா என்ன, வேலை முடிஞ்சுதோல்லியோ?” என்றான் இளப்பமாக.
“நீ செய்யறது ரொம்ப தப்புன்னு நோக்கு தோணலியா பரத், இது வெறும் பிடிவாதம், உன்னை மாத்திக்கோடா,” என்றான் ராகவன்.
“என்னத்தைடா மாத்திக்கணும், நான் படிச்சு படிச்சு சொன்னேன், நேக்கு இப்போ கல்யாணம் வேண்டாம், கொஞ்சம் டைம் குடுங்கோன்னு, யாராவது உங்க பிடிவாதத்தை மாத்திண்டேளா, நான் மட்டும் ஏன் மாத்திக்கணும்? இதுதான் உண்மை, இதுதான் நிதர்சனம், நான் பேச்சு மாறலை, அன்னிக்கி சொன்னதுதான் இன்னிக்கும், நேக்கு… இப்போ… கல்யாணத்துல… இன்ட்ரஸ்ட்…. இல்லை, இது என்னோட பாமிலிக்காக அம்மாவுக்காக நடந்த கல்யாணம், எனக்காக நடந்தது, இல்ல…” என்றான் கோபமாக.
“இது அந்த பொண்ணுக்கு நீ பண்ற துரோகம் இல்லையா? அவ என்னடா பாவம் பண்ணினா? எங்க மேல இருக்கற கோபத்துக்கு அவளை தண்டிக்கப் போறியா?” என்று சீறினாள் நந்தினி.
“வேற வழி, உங்களால இனி துரோகி பட்டமும் வாங்கத்தான் வேணும். ஒரு உண்மையைச் சொல்லட்டுமா, அந்தப் பொண்ணோட….ம்ம்ம்…அவ பேரென்ன…ரா…ராதிகாதானே…அவளோட முகம் கூட என் மனசுல பதியலை, கல்யாணத்துனால ஏற்படற ஒரு குறுகுறுப்பு, தவிப்பு எதுவுமே எனக்கு உண்டாகலை, ஒரு ஈர்ப்பு வருமே…அதுவும் வரலை, என்னை என்ன பண்ண சொல்றே?” என்றான், நந்தினியைப் பார்த்து.
“அப்பறம் ஏண்டா ஒத்துண்டே, பொண்ணு பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது தானே?” என்றாள் கடுப்பாக.
“பொண்ணு பிடிக்கலைன்னு சொன்னா அப்படியே விட்டுடுவேளா? அடுத்து இன்னொரு பொண்ணு பாப்பேள், போட்டோ, ஜாதகம் பொண்ணு பாக்கறதுன்னு இந்த சைக்கிள் ஆஃப் இவன்ட்ஸ் திருப்பி திருப்பி நடக்கும், ஒவ்வொரு தடவையும் நான் என்னோட வேலை ஜோலியெல்லாம் விட்டுட்டு நீங்க கூப்பிடற இடத்துக்கெல்லாம் பொண் பார்க்க வரணும், கல்யாணம்னு ஒண்ணு ஆகர வரைக்கும் நீங்க யாரும் விடப்போறதில்லை, எனக்குதான் டைமும் எனர்ஜியும் வேஸ்ட்….அதனாலதான் நீங்க காமிச்ச முதல் பொண்ணுக்கே ஓகே சொல்லிட்டேன்,” என்றான் தோள்களைக் குலுக்கியபடி.
“நீ செஞ்சுருக்கறது எவ்ளோ பெரிய விஷயம்னு நோக்கு புரியலையா பரத்?” என்றார் பர்வதம்.
“புரியறது, நன்னா புரியறது, ஆனா நான் ஒரு சூழ்நிலைக் கைதி, என்னை இந்த நிலைமைக்கு தள்ளினது நீங்கதான், உங்களோட பிடிவாதம்தான், ஆனா இப்போ உங்க பிடிவாதத்துக்கும் என்னோட ஈகோவுக்கும் நடுவுல மாட்டிண்டு அலைக்கழியப் போறது அந்த பொண்ணுதான், நீங்க சொன்னா மாதிரி, ரொம்ப பாவம்தான் அவ…”என்றான்.
“நான் என்னடா பண்ணுவேன், லக்ஷ்மி போயி மூணு வருஷத்துக்கு மேல ஆச்சுடா…என்னோட குழந்தை, தனியா தவிக்கறச்சே, பார்த்துண்டு சும்மா இருக்கமுடியுமா, நீயும் எதுலையுமே பிடிப்பில்லாம வேலை வேலைன்னு ஓச்சல் ஒழிசல் இல்லாம அலைஞ்சுண்டு இருந்தே, கல்யாணம்னு ஒண்ணு நடந்தா வாழ்க்கையில ஒரு பிடிப்பு வரும், ரசனை வரும்னு, உன்னோட நல்லதுக்குதானே நான் முடிவெடுத்தேன், ஏண்டா புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறே?” என்று குற்றம் சாட்டினார் பர்வதம்.
“ஏம்மா, என்னைப் பார்த்தா வாழ்க்கையில பிடிப்பில்லாதவன் மாதிரியா இருக்கு? நாளுக்கு ஒரு டிசைனர் சூட் போடறேம்மா, ரசிச்சு ரசிச்சு விரும்பி வாங்கி போட்டுக்கறேன், ஜிம்முக்கு போறேன், என்னோட ஆரோக்கியத்தை கண்ணும் கருத்துமா பாத்துக்கறேன்…எனக்கு பிடிச்சா மாதிரி என்னை க்ரூம் பண்ணிக்கறேன்…இதெல்லாம் பார்த்தா விரக்தியா இருக்கறவன் மாதிரியா இருக்கு? இந்த வீட்டை நான்தானேம்மா முன்னால நின்னு கட்டினேன், இந்த வீட்டைப் பார்த்தா வாழ்க்கையில பிடிப்பில்லாதவன் கட்டின வீடு மாதிரியா இருக்கு? இதோட ஒவ்வொரு மூலையையும் ரசிச்சு கட்டினேன்மா…இந்த ஆத்துல இருக்கற ஒவ்வொரு தோட்டத்தையும் நானே லேண்ட்ஸ்கேப் டிசைன் பண்ணினேன்…இதெல்லாம் பிடிப்பில்லாதவன் செய்யிற காரியமா…கிட்டத்தட்ட தினமும் ஒரு கல்யாணம் நடக்கறதும்மா என் கம்பெனி மூலமா, அதுல ஒவ்வொண்ணுக்கும் நான்தான் ஸ்டோரிபோர்ட் போட்டு டிசைன் பண்ணி நடத்தி வைக்கிறேன்…வெற்றிகரமா…எல்லாரும் சந்தோஷப்படறா மாதிரி…வாழ்க்கையில வெறுப்பு வந்தவனால இதை செய்யமுடியுமா…நீயே யோசிம்மா? முப்பத்திரண்டு வயசுலதான் நேரம் காலம் பார்க்காம உழைக்கணும், அதுவும் வாய்ப்பும், வயசும் இருக்கறப்போ உழைக்காம, வாழ்க்கையில முன்னுக்கு வராம கையைப் பிசைஞ்சுண்டு, கும்பகோணத்துலையே உக்காந்துண்டு இருந்திருக்கணும்னு சொல்றியா? நம்மளோட நிலைமை மாறணும், சமையல்காரன்கிற பேர் மாறி, நமக்கும் ஒரு அந்தஸ்து வரணும்னுதானேம்மா உழைக்கிறேன்…உங்க எல்லாருக்காகவும் தானே உழைக்கிறேன்?” என்று ஆதங்கமாகக் கேட்டான் தாயிடம்…
“இதுல பெரிய காமெடி என்னன்னா, நான் கல்யாணம் வேண்டாம்னோ, கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னோ சொல்லவே இல்லை, இப்போ வேண்டாம்னுதான் சொன்னேன்…என்னிக்கி எந்த பொண்ணு, என்னோட இழப்புகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி, அவளோட நினைவுகளை மட்டுமே என்னோட மனசுல விதைக்கிறாளோ…அன்னிக்கி அவளை கையோட அழைச்சுண்டு வந்து உன் முன்னாடி நிறுத்தி…இவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைம்மான்னு சொல்லிருப்பேன்…ஆனா நீ எனக்கு அந்த வாய்ப்பையே குடுக்கலையே…நீயா நான் விரக்தியில இருக்கேன்னு முடிவு பண்ணி, உன்னோட முடிவை என் மேல திணிச்சுட்டே….உன் மனசுல என்ன நெனைப்புன்னு நேக்கு நன்னாவே தெரியும்…கல்யாணத்தை பண்ணி வெச்சுட்டா…எப்படியா இருந்தாலும் வாழ்ந்துதானே ஆகணும்…எங்கே போயிடப் போறான்ற எண்ணம்தானே உனக்கு?” என்று வெடித்தான்.
“ஆனா உன்னோட எண்ணமும் ஒரு வகையில கரக்ட்தான்…என்ன கொஞ்ச நாளைக்கு மூஞ்சியைத் தூக்கி வெச்சுண்டு இருப்பேனா…மெதுவா அந்த பொண்ணோட சகவாசம் நேக்கு பழகிப் போயிடும்…ஆறு மாசமோ இல்லைன்னா ஒரு வருஷமோ…சரி போ வாழ்ந்துடலாமேன்னு தோணினாலும் தோணலாம்…அதுக்குள்ள நீங்க எல்லாரும்…என்னம்மா விசேஷம் ஒன்னும் இல்லையான்னு மெதுவா கேக்க ஆரம்பிச்சுருப்பேள்…இந்த கோவிலுக்கு வேண்டிக்கோ…அந்த டாக்டரப் போயி பாருன்னு ஆலோசனையும் சொல்ல ஆரம்பிச்சுருப்பேள்…அதுக்கும் நானே குற்றவாளியா நிப்பேன்…அப்போவும் உங்களோட இமோஷனல் ப்ளாக்மெயில் தாங்கமுடியாம ஒண்ணு ரெண்டு பிள்ளைகளையும் பெத்து போடுவோம்….ஜெயிச்சுடுவேம்மா…நீ நெனைச்சதெல்லாம் நடக்கும்…கண்டிப்பா…உன்னோட ரெண்டாவது பையனும் பிள்ளை குட்டிகளோட….நீ எதிர்பாக்கற பிடிப்போட வாழ்க்கையில செட்டில் ஆகியிருப்பான்…ஆனா அது நான் விரும்பினா வாழ்க்கையா இருக்குமான்னா அது கேள்விக்குறிதான்…நான் வாழப்போற வாழ்க்கை வெறும் காம்ப்ரமைஸ் வாழ்க்கையா மட்டும்தான் இருக்கும்…உங்களோட புண்ணியத்துல…” என்றான்.
“அப்பறம் என்னத்துக்குடா, பாத்து பாத்து டிசைனர் ட்ரெஸ்ஸும், நகையும், லொட்டும் லோசுக்கும் அனுப்பி வைச்சே…காம்ப்ரமைஸ் வாழ்க்கைக்கு இதெல்லாம் எதுக்கு?” என்று கோபம் மேலிடக் கேட்ட நந்தினியைப் பார்த்து கேலியாகச் சிரித்தான் பரத்…
“எதுக்குன்னு நெனைச்சே? இன்னிக்கி கார்த்தால நடந்த கல்யாணம் பரத் அப்படின்ற ஒரு தனி மனுஷனோட பெர்சனல் நிகழ்ச்சி…அதுல என்னோட இன்ட்ரஸ்ட் எவ்வளவு இருந்துதுன்னு உங்களுக்கே தெரியும்…ஆனா நாளான்னைக்கு நடக்கப்போகிற ரிசப்ஷன் என்னோட ப்ரெஸ்டிஜ் சம்பந்தப்பட்ட விஷயம்…பரத், த சிஇஓ வோட ரிசப்ஷன்…நான் காசுவாங்கிண்டு நடத்தி வெக்கிற கல்யாணங்களே தேவலோக வைபோகங்கள் மாதிரி கோலாகலமா இருக்கறச்சே…என்னோட ரிசப்ஷன் எப்படி இருக்கணும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு…ரிசப்ஷனுக்கு வர்ற ரெண்டாயிரத்தி ஐநூறு பேர்ல, பாதி பேர் என்னோட பிசினஸ் பண்ற கிளையன்ட், மீதி பேர் என்னோட பிசினஸ் பண்ணப்போறவா…மத்தவாளோட கல்யாணக் கனவையே இம்மி பெசகாம நனவாக்கி வைக்கிற இவனோட ரிசப்ஷன்ல அப்படி என்னதான் இருந்துடப் போறதுன்னு பாக்கறதுக்கே வர்றவா இதுல நெறைய்ய பேர்…அப்படி இருக்கறச்சே, என்னை நானே நிரூபிச்சுக்க வேண்டிய கட்டத்துல நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் என்னோட மேற்பார்வையில நானே தேர்ந்தெடுத்த விஷயங்களா இருந்தாதான் சரிப்பட்டு வரும்…இது ‘க்ளவுட் நைன் இவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெடோட’ ஒரு கார்பரேட் இவன்ட்….அதோட சீப் எக்சிகியூடிவ் ஆபீசரோட கல்யாண ரிசப்ஷன்…என்னோட பெர்சனல் ரெப்ரெசெண்டேஷன்…அப்படின்னா ஒவ்வொண்ணும் எப்படி நடக்கணும்னு பரத் போட்ட கணக்குப்படிதான் நடக்கணும்…பரத்தோட ஸ்டைல்ல…புரிஞ்சுதா…இன்னும் ஏதாவது கேக்கணுமா? இல்லை முடிஞ்சுடுத்தா? உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா…போங்கோ போங்கோ…போயி உங்களோட ஆசை நாட்டுப்பொண்ணுக்கு அலங்காரம் பண்ணி, மூட்டை கட்டி பர்ஸ்ட்நைட்டுக்கு என்னோட ரூமுக்கு பார்சல் பண்ணுங்கோ…போங்கோ…என்னை சித்தநாழி தனியா இருக்க விடுங்கோ…” என்று அமர்ந்திருந்த கட்டிலிலேயே காலை நீட்டி இரு கைகளையும் தலைக்கு அடியில் அட்டம் கொடுத்து கண்மூடிப் படுத்துவிட்டான்.
அவனிடம் எவ்வளவு பேசியும் அவனுடைய பிடிவாதத்தை மாற்றமுடியாமல் தோற்று, அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.
ஆனால் பாத்ரூமில் குளித்துவிட்டு கதவைத் திறக்க முற்பட்டு, இவர்களின் பேச்சுக்குரலைக் கேட்டு உள்ளேயே நின்றுவிட்ட ராதிகா மட்டும் செய்வதறியாது விக்கித்து சிலையாய் சமைந்து நின்றுவிட்டாள்…






Nice. Nan guess pannen antha bathroom la than iruppaannu. Correct.