காதல் கடன் – 7
காதல் கடன்
(7)
…ஆனால் பாத்ரூமில் குளித்துவிட்டு கதவைத் திறக்க முற்பட்டு, இவர்களின் பேச்சுக்குரலைக் கேட்டு உள்ளேயே நின்றுவிட்ட ராதிகா மட்டும் செய்வதறியாது விக்கித்து சிலையாய் சமைந்து நின்றுவிட்டாள்…
எவ்வளவு நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தாளோ தெரியாது…அதிர்ச்சியையும் அதனோடு சேர்ந்து வந்த அழுகையையும் மென்று விழுங்கிக்கொண்டு மெதுவாகக் கதவைத் திறந்தாள்…அறை நிசப்தமாக இருந்தது…உள்ளே நுழையும்போது அவள் போட்டிருந்த விளக்கு அணைக்கப்பட்டு மெலிதாக நைட்லேம்ப் ஒளி மட்டும் அறையில் பரவியிருந்தது…
“அப்பாடி, நல்ல காலம், யாரும் இல்லை…” என்று நினைத்தபடி கதவை முழுதாகத் திறந்து வெளியே வந்தவள், கட்டிலில் படுத்திருந்த பரத்தை கவனிக்கவில்லை. ஆனால் பாத்ரூம் கதவு திறக்கும் சப்தம் கேட்டு கண்விழித்த பரத், குளித்துவிட்டு வெளியே வந்திருந்த ராதிகாவைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்து நின்றான்…
“நீயா, நீ இங்க என்ன பண்றே?” என்று சற்று கடுமையாகவே கேட்டான்…
“அது…நான் வந்து…குளிக்க…” என்று அவள் திணறிக்கொண்டிருக்கும் போதே….”டீ ராதிகா, குளிச்சுட்டு வர இவ்ளோ நாழியா?” என்று கேட்டபடியே கதவைத் திறந்து உள்ளே வந்த மரகதம், மகளும் மாப்பிள்ளையும் எதிரும் புதிருமாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து ஒரு நொடி திகைத்தவர்…
“மாப்பிள்ளை, மன்னிச்சுக்கோங்கோ, ராதிகா குளிச்சுட்டாளான்னு பாக்க வந்தேன், நீங்க இங்க இருக்கேள்னு நேக்கு தெரியாது, ஏதோ பேசிண்டு இருக்கறாப்ல இருக்கு, நீங்க பேசினாவுட்டு அவளை அனுப்புங்கோ…” என்று வெளியேற முயல, “இல்லை, அப்படில்லாம் ஒண்ணும் இல்லை மாமி, உங்க பொண்ணு இங்க குளிச்சுண்டு இருக்கறது நேக்கு தெரியாது, மேல என்னோட ரூம்ல எல்லாரும் இருக்கா, அதனால இங்க இருக்கலாம்னு வந்தேன், வேற ஒன்னும் இல்ல, நீங்க அழைச்சுண்டு போங்கோ,” என்றான் பரத்.
மாடியில் அவனுடைய அறையில் முதலிரவிற்கான அலங்காரங்கள் நடந்து கொண்டிருப்பது நினைவுக்கு வர, “சரி மாப்பிள்ளை, நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ, நான் ராதிகாவ அழைச்சுண்டு போறேன்,” என்று கூறி ராதிகாவிற்கு தன்னுடன் வருமாறு கண் ஜாடை காட்டிவிட்டு, அறையை விட்டு வெளியேறினார் மரகதம். இதற்காகவே காத்திருந்தது போல, விட்டால் போதுமென்று ராதிகாவும் அன்னையைப் பின்தொடர்ந்தாள்.
மீண்டும் கட்டிலில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான் பரத், அசதியாக இருந்தது அவனுக்கு. தெளிந்த நீரோடையாய் ஓடிக்கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென்று யாரோ கல்லெறிந்தது போல எக்கச்சக்கமான குழப்பங்கள்…எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று கலக்கமாக இருந்தது. எண்ணங்களில் சிக்கி மனம் ஒரேயடியாக அலைக்கழிந்துகொண்டிருந்தது, படுக்கவும் முடியாமல் எழுந்து உட்கார்ந்தான். இருப்பு கொள்ளாமல் எழுந்தவன், அறையிலிருந்த ஃபிரெஞ்சு விண்டோவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான். இதமான தென்றல் காற்று அவனைத் தழுவிக்கொண்டது. தாழ்வாரத்தில் போடப்பட்டிருந்த மூங்கில் சோபாவில் எதிரில் இருந்த டீப்பாயில் கால்நீட்டி அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான்…மனம் லேசாக அமைதி அடைவதைப் போல இருந்தது.
அவனுடைய இந்த மோன நிலையை குலைக்கும் வண்ணம் “பரத், என்ன உக்காந்துண்டே தூங்கறியா?” என்ற அத்திம்பேர் ஸ்ரீராமின் குரல் அவனருகில் ஒலித்தது.
குரல் கேட்டு கண்விழித்தவன், அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த ஸ்ரீராமைப் பார்த்து புன்னகைத்தபடி, “என்ன அத்திம்பேர், உங்களை ஆளையே காணோம், மத்தியானம் வந்தப்போ பார்த்தது, எங்க போயிட்டேள் என்னை தனியா விட்டுட்டு?” என்று கேட்டான்.
“ஏண்டா, வெளியில கிளம்பி போனது நீ, என்னை காணோம்னு சொல்றியா? நான்தான் கேட்கணும் இந்தக் கேள்வியை,” என்றார். “ஐயோ அத்திம்பேர், நீங்களும் கேள்வி கேக்கப்போறேளா? இப்போதான் ஒரு கேங் ஜீரோ ஹவரை முடிச்சுட்டு போயிருக்கு, மறுபடியும் நீங்க ஸ்டார்ட் பண்ணாதீங்கோ, என்னால முடியல,” என்றான் ஹாஸ்யமாக.
ஸ்ரீராம், நந்தினியின் கணவன். பரத்தின் நண்பர், ஆலோசகர், வழிகாட்டி. அவனுடைய வயதிற்குத் தகுந்த நண்பன் அரவிந்த் என்றால் (இவன் நாளைக்கு வர்றான், பரத்தோட ரிசப்ஷன் ஏற்பாடுகளை நம்மளோட டிஸ்கஸ் பண்ண, அவனைப் பத்தி அப்போ பார்ப்போம்), பரத்தின் அறிவார்ந்த நண்பர் ஸ்ரீராம். அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவருடைய ஆலோசனையும், வழிகாட்டலும் எப்போதும் இருக்கும். கைதேர்ந்த பட்டயக் கணக்காளராக இருந்த ஸ்ரீராம், பரத் ரெஸ்டாரன்ட் செயின் என்னும் முயற்சியைக் கையில் எடுத்தபோது, அவனுடன் பங்குதாரராக இணைந்து பணிபுரியத் தொடங்கினார். பரத் “அன்னம் பிரம்மாவின்” மூளை என்றால், ஒவ்வொரு கிளையும் வெற்றிகரமாக இயங்கும்படி நிர்வகிக்கும் முதுகெலும்பு ஸ்ரீராம். ஐந்தாண்டுகளுக்கு முன்பு போட்ட ரெஸ்டாரன்ட் என்னும் விதை இன்று ஆலமரமாய் வளர்ந்து, விழுது பரப்பி தழைத்திருக்கிறது என்றால், அது இவர்கள் இருவரின் கூட்டு முயற்சியால்தான். அவர் மீது மிகுந்த மரியாதையும் உண்டு, அதற்கீடான உரிமையும் உண்டு பரத்திற்கு.
“சிரிச்சு மழுப்பாதே பரத், உன் மனசுல இருக்கற குழப்பத்தை உன் முகமே காட்டிக் குடுக்கறது, என்கிட்டே சொல்லலாம்னா சொல்லு, சிக்கலைத் தீர்க்கப் பாப்போம்” என்றார்.
“நேக்கு ஒரு குழப்பமும் இல்ல, அத்திம்பேர், நான் தெளிவாத்தான் இருக்கேன்” என்றான் பரத், அவருடைய கண்களைச் சந்திக்காமல்.
“ஆமாமா, ஆத்துக்கு வந்ததில இருந்து நீ நடந்துக்கற விதத்துலயே தெரியறதே, உன்னோட தெளிவு,” என்றார் ஸ்ரீராம்.
அவருக்கு விடையேதும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான் பரத். “சரிப்பா, நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், ஆனா நான் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ. அதுப்படி நடக்கறதும் நடக்காததும் உன்னோட இஷ்டம்,” என்றார்.
“என்ன அத்திம்பேர், என்னை சமாதானம் பண்ணச் சொல்லி உங்க ஆத்துக்காரி தூது விட்டிருக்காளா?” என்று கேட்டவனைப் பார்த்து “நீ என்ன வேணுமானாலும் நெனைச்சுக்கோ, என் மனசுல தோண்றதை உன்கிட்ட சொல்லணும்னு தோணித்து, இதுக்கு உங்க அக்காவோட பர்மிஷன் நேக்கு தேவையில்ல,” என்றார்.
ஸ்ரீராம் எப்போதுமே இப்படித்தான். பிசினசோ வாழ்க்கையோ, பரத்திற்கு ஆலோசனைகளைக் கூறுவார். ஆனால் அதைப் பின்பற்ற வேண்டுமா என்று முடிவெடுக்கும் சுதந்திரத்தை மனப்பூர்வமாக அவனுக்கே கொடுப்பார். அதனால்தானோ என்னவோ பெரும்பாலும் அவர் கூறுவதை முழுமனதோடு ஏற்று நடப்பான் பரத்.
“சொல்லுங்கோ அத்திம்பேர்,” என்று கூறியவனிடம், “நான் உன்னை ஜட்ஜ் பண்ணலை பரத், ஆனா நீ நடந்துக்கறது சிறுபிள்ளைத்தனமாத் தெரியறது, கொஞ்சம் மெச்சூர்டா யோசிச்சுப்பாரு, இந்த சூழ்நிலையை எப்படி கையாளணும்னு உனக்கே ஒரு தெளிவு வரும்,” என்றார்.
“தெரியறது அத்திம்பேர், ஆனா என்ன பண்ணப்போறேன்னு நிஜமாவே நேக்கு புரியல, மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு,” என்றான் தலையைப் பிடித்துக்கொண்டு.
“புரியலைன்னு சும்மா ஒக்கார முடியாது பரத், இந்த சூழ்நிலையில நீ மட்டும் இல்லை, நீ கல்யாணம் பண்ணி கூட்டிண்டு வந்திருக்கற பொண்ணும் இருக்கா, அதனால, மனசைத் தெளிவாக்கிண்டு, நிதானமா யோசி, உனக்கு விருப்பமே இல்லாம நடந்திருந்தாலும், கல்யாணம் ஆயிடுத்து, இனி அந்த பொண்ணு உன்னோட பொறுப்பு, அதைப் புரிஞ்சுக்கோ, ஆத்துல ஆயிரம் பேர் இருந்தாலும், நீதான் அவளுக்கு ஆதாரம், உன்னை வெச்சுதான் மத்த எல்லாரும். இது நான் சொல்லித்தான் நோக்கு புரியணும்னு இல்லை,” என்றார்.
ஆமோதிப்பாகத் தலையாட்டிய பரத், “ஹ்ம்ம், எல்லாம் சரிதான்…ஆனா இருக்கற கொழப்பம் போறாதுன்னு, இந்த கேங் செஞ்ச ரேகிங்கையும், அவாளோட நான் பேசின எல்லாத்தையும் அந்தப் பொண்ணு கேட்டுடான்னு நெனைக்கிறேன், அதுக்கு என்ன பண்றதுன்னுதான் இப்போ முழிச்சுண்டு இருக்கேன், ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு போக அந்தப் பொண்ணுக்கு பயமா இருக்கோ இல்லையோ, ஆனா நான் பேசினதையெல்லாம் கேட்டதுக்கப்பறம், நான் அவகிட்ட தனியா மாட்டினா அவ என்னை என்ன செய்யப் போறாளோன்னு நேக்கு பயமா இருக்கு, அத்திம்பேர்” என்றான் பரத் வேடிக்கையாக.
“என்ன பண்றது, அந்தப் பொண்ணு உன்னோட சட்டையப் பிடிச்சு உலுக்கினாலும் சரி, இல்லை அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஆத்தையே தலையில தூக்கிண்டாலும் சரி, அவகிட்டக்க எல்லாத்தையும் தெளிவாப் பேசி, உன்னோட மனசுல இருக்கறதை அவளுக்குப் புரிய வைக்கறது உன்னோட கடமை, நீ ஒரு முடிவெடுக்க முடியாம குழப்பத்துல இருந்தாலும், நீ சொல்றதைக் கேட்டுட்டு அந்தப் பொண்ணு எடுக்கற முடிவை நாம எல்லாரும் ஏத்துண்டுதான் ஆகணும். நாங்க யார் என்ன பேசினாலும், கடைசியில நீங்க ரெண்டு பேரும்தான் வாழ்க்கைய வாழப்போறேள், அதனால ஈகோ பாக்காம, பெரிய பேச்சு சின்ன பேச்சு பேசாம, நிதானமா ஒக்காந்து அவளுக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்லு, புத்திசாலிப் பொண்ணாத்தான் தெரியறா, புரிஞ்சுப்பா,” என்றார்.
“என்னவோ அத்திம்பேர், நேக்கு அந்தப் பொண்ணோட பேரைத் தவிர வேற எதுவும் தெரியாது, அவளோட நிலைமையும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கும், இன்னி வரைக்கும் நான் அவளுக்கு ஒரு ஹாய் கூட சொன்னதில்லை, அவகிட்டக்க போய் நான் என்னத்த பேசறது, எதை விளக்கறது? அம்மாவும் அக்காவுமே என்னைப் புரிஞ்சுக்கல, பரிச்சயமே இல்லாத இந்தப் பொண்ணு என்னத்தைப் புரிஞ்சுக்கப் போறா?” என்றான் விரக்தியாக.
“முயற்சிதான் பண்ணிப்பாறேன், கல்யாண பந்தம் ஒண்ணும் சாமானியமானதில்லை, நாம எதிரே பாக்காத பல விஷயங்கள் சர்வ சாதாரணமா நடக்கற வாய்ப்பு அதுல எப்பவுமே உண்டு. ஏன்னா பொம்மனாட்டிகளை இப்படித்தான்னு எப்பவுமே யாரலையுமே வரையறுக்கவே முடிஞ்சதில்லை. அதுவும் முக்கியமா ஆத்துக்காரியை. இடி இடிக்கும், மழை பெய்யும்னு எதிர்பார்த்தா, காத்துல கலைஞ்ச மேகமாட்டம், இருந்த இடம் தெரியாம காணாம போயிடுவா, இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா, கண்டுக்க மாட்டாள்ன்னு நெனைக்கறச்சே, ருத்ர தாண்டவம் ஆடி ஒரு வழி ஆக்கிடுவா. கடைசி வரைக்கும் அவாளைப் பத்தி ஒரு முடிவுக்கே வரமுடியாது, முயற்சிதான் பண்ண முடியும், வாழ்க்கை முழுக்க,” என்றார், ஸ்ரீராம்.
“என்ன அத்திம்பேர், ரொம்ப அனுபவமோ, உங்களைப் பாத்தா பாவமா இருக்கு நேக்கு,” என்றான் பரத் கிண்டலாக.
“என்னை கிண்டல் பண்ணினது போறும்டா, நீ என்ன கதியாகப் போறேன்னு பாரு மொதல்ல, உன்னோட டிரெஸ்ஸை ஷெல்ஃப்ல வெச்சிருக்கேன், போ, போ, போய் குளிச்சுட்டு ரெடியாகு, நாளைக்கு கார்த்தால வந்து சொல்லு, நார் நாரா கிழிஞ்சு நூடுல்ஸா ஆக்கினாளா இல்லை, ஐயோ பாவம், போனா போறதுன்னு மன்னிச்சு விட்டளான்னு,” என்று அவனைக் கிண்டலடித்தபடி வெளியேற முற்பட்டவர், “சாப்பிடறதுக்கு ஏதாவது குடுத்து விடறேன், குளிச்சுட்டு வந்து முதல்ல சாப்பிடு, பசியில இருக்கறச்சே புத்தி சரியா வேலை செய்யாது,” என்று கூறியபடி கதவை மூடிக்கொண்டு சென்றார்.
பரத் சாஸ்திர சம்பிரதாயங்களை மிகச்சரியாகக் கடைபிடிப்பவன், கங்கண தாரணம் செய்திருக்கும்போது அவன் கண்டிப்பாக வெளியில் சாப்பிட்டிருக்க மாட்டான் என்பதை ஸ்ரீராம் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். அவன் வாடிய முகத்தில் வாழ்க்கையைக் குறித்த குழப்பத்துடன் பசியின் சாயலும் அவருடைய பாசமிகு கண்களுக்குத் தெரிந்ததோ…
பரத்தின் அறையிலிருந்து வெளியேறிய ஸ்ரீராம், நேராக அவருக்கும் நந்தினிக்குமான அறைக்குள் நுழைந்தார். அங்கே நந்தினி பரத்துடன் சண்டையிட்ட பதட்டத்தில் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்றபடி இருந்தாள். கர்ப்பிணிப் பெண்களுக்கே உரிய சாயலில், இடையை ஒரு கையால் தாங்கிக்கொண்டு, தனக்குத் தானே ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
அறையினுள் நுழைந்த கணவனைக் கண்டதும், விரைவாக அவரிடம் சென்று நின்றவள், “இந்த பரத் ஏன்னா இப்பிடி ஆயிட்டான், நீங்களாவது கொஞ்சம் சொல்லக்கூடாதா?, எப்பிடி எடுத்தெறிஞ்சு பேசறான் தெரியுமா…” என்று இன்னும் வேறேதோ சொல்ல வந்தவளின் இதழ்களை தன் ஆள்காட்டி விரலைக் கொண்டு கட்டுப்படுத்தி, “பரத் எதுவும் சாப்பிடலை, அவனுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு போய் குடு,” என்றார்.
அதற்கு நந்தினி, “அவன் சாப்பிட்டுட்டேன்னு சொன்னானே?” என்க “என்ன நந்து நீ, நோக்கு தெரியாதா அவனைப் பத்தி? அவனுக்கு சாதாரண நாள்லையே வெளில சாப்பிடறது பிடிக்காது, இன்னிக்கி நாந்தி, ஹோமம்லாம் பண்ணிருக்கான், அவன் வெளியில சாப்பிட்டான்னு சொன்னாலும், எப்படி நம்பினேள் நீங்கள்லாம்? அவ்வளவு கூட தெரியாதா அவனை?” என்று ஸ்ரீராம் குத்தலாகக் கேட்க, “என்னவோ போங்கோன்னா, புத்திதான் பெசகிடுத்து நேக்கு, பாவம்னா, அவனுக்கு பசியே தாங்காது,” என்று கூறியபடி சமையலறையை நோக்கிச் சென்றாள் நந்தினி.
ரைஸ் குக்கரில் சாதம் இன்னும் சூடாகவே இருக்க, ரசத்தையும் சூடு செய்து, சாதத்துடன் நெய் விட்டுப் பிசைந்தவள், இன்னொரு கிண்ணத்தில் பாலும் தயிரும் விட்டு உப்பு போட்டு தயிர் சாதமும் பிசைந்து, இரவு உணவிற்காக சமைத்த உருளைக்கிழங்கு பொரியலையும் ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, தம்பி இருந்த அறைக்குச் சென்றாள்.
நந்தினி அறைக்குள் நுழையவும், பரத் குளித்துவிட்டு உடை மாற்றி வரவும் சரியாக இருக்க, கையிலிருந்த டவலை அருகிலிருந்த நாற்காலியில் போட்டுவிட்டு, நந்தினி மேஜை மீது வைத்திருந்த உணவை எடுத்து தட்டில் பரிமாறிக்கொண்டு சற்று வேகமாகவே சாப்பிட ஆரம்பித்தான் பரத். அவன் உண்ணும் வேகத்திலேயே அவனுடைய பசியின் தீவிரம் தெரிந்தது.
அதைக் கண்ட நந்தினி, பரத்தின் முன் நெற்றி முடியை கையால் அளைந்து, “இவ்ளோ பசிய வெச்சுண்டு ஏன்டா சாப்பிட்டுட்டேன்னு பொய் சொன்னே?” என்று கேட்க, பரத், தலையை நிமிர்த்தி நந்தினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மெளனமாக மீண்டும் உண்பதைத் தொடர்ந்தான்.
சாப்பிட்டு முடித்து, தட்டை எடுத்துக்கொண்டு போய் கழுவி, கையையும் அலம்பிக்கொண்டு வந்தவனிடமிருந்து, தட்டை வாங்கிக்கொண்ட நந்தினி, “பரத்…” என்று ஏதோ சொல்ல வர, “போறும் நந்துக்கா, கார்த்தாலருந்து நடந்து நடந்து உன் காலெல்லாம் வீங்கிடுத்து பாரு, நீ போய் படுத்துக்கோ,” என்று அவளைப் பேசவிடாமல், அவளுடைய தோளைப் பிடித்து மெதுவாக அழைத்துச் சென்று அறையில் விட்டுவிட்டு வந்து ஹாலில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்துகொண்டான். அத்திம்பேர் சொன்னது போல, வயிறு நிரம்பியதால், மனமும் ஒரு நிலைக்கு வந்திருந்தது போலவே தோன்றியது அவனுக்கு.
ஆனால் ராதிகாவின் நிலையோ மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சங்கடமாக இருந்தது. பரத் பேசிய அனைத்தையும் கேட்டிருந்தவளுக்கு, என்ன செய்வது என்று எதுவும் புரியவில்லை. அவளுடைய மனநிலையை உணராத மரகதமோ, அவளுடைய தலையை வாரியபடி அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்.
“நான் சொல்றதை நன்னா கேட்டுக்கோ ராதிகா, இனிமேதான் நீ கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கணும்.”
“ம்” என்றாள் ராதிகா, அவளுடைய நினைவுகள் வேறெங்கோ இருந்தன.
அதை உணராத மரகதம் பேச்சைத் தொடர்ந்தார். “எதுவா இருந்தாலும், மாமியார் கிட்டக்க கேட்டுண்டு செய்யணும், நாத்தனார்கள், ஓர்ப்படி கிட்ட அன்பா நடந்துக்கணும்.”
“ம்ம்”
“அவா முன்ன பின்ன பேசினாலும் நீ எதுத்து பேசாத, ஆனா அவாளைப் பாத்தாலும் அப்படி ஒண்ணும் எடக்கா பேசறவாளாட்டம் தெரியல, ஆனாலும் நீ மரியாதையா நடந்துக்கோ அவாகிட்ட.”
“ம்ம்”
“ஆத்துக்காரர் மனசறிஞ்சு நடந்துக்கோ, எதுவானாலும் அனுசரிச்சுண்டு போ” என்று மரகதம் கூற, “அவரோட மனசறிஞ்சு நடந்துக்கனும்னா, நீ கிளம்பறச்சே, நானும் உன்னோடவே கிளம்பி நம்பாத்துக்கே வந்துடணும்,” என்று நினைத்தவளுக்கு ஏனோ சிரிப்பு வந்துவிட, வாயை மூடி “களுக்” என்று சிரித்துவிட்டாள் ராதிகா.
அவள் அவ்வாறு சிரித்ததைப் பார்த்து, மரகதத்திற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ராதிகாவின் தலையில் “ணங்” என்று ஒரு கொட்டு வைத்தவர், “சீரியஸா ஒரு விஷயம் சொல்லிண்டிருக்கேன், என்னடி சிரிப்பு நோக்கு, எல்லாமே விளையாட்டா இருக்கா?” என்று திட்டியவரிடம், “இதுக்குத்தாம்மா, உன்கிட்ட பின்னறதுக்கு தலையைக் குடுக்கறதே இல்லை, ஒரு ஜடையை போட்டு முடிக்கறதுக்குள்ள ஒம்போது தரம் தலைல கொட்டி ரணமாக்கிடுவே நீ,” என்றவாறு கொட்டிய இடத்தைத் தடவி விட்டுக்கொண்டாள். தாயின் கையிலிருந்து ஜடையை உருவியபடி எழுந்தவள், திரும்பி நின்று தானே பின்னிக்கொள்ளவும் தொடங்கினாள்.
ஏனோ அதற்கு மேல் மகளைத் திட்ட மனமில்லை மரகதத்திற்கு. கொட்டிய இடத்தை மெதுவாகத் தடவி விட்டு, “சாரிடி ராது, வலிக்கறதா?” என்று கேட்டவரைப் பார்த்து, “சரி, அத விடு, நீ என்னவோ சீ…ரியஸா சொல்லிண்டு இருந்தியே, அத கண்டின்யூ பண்ணு,” என்றாள் கிண்டலாக.
“இத, இதத்தான், இந்த துடுக்குத்தனத்தைத்தான் மாத்திக்கோன்னு சொல்றேன். எல்லாரும் உன்னோட அம்மவாட்டம் போனா போறதுன்னு போமாட்டாடி பொண்ணே, என்ன இந்தப் பொண்ணு, இப்பிடி வளர்த்து வெச்சிருக்காளே இவளைன்னு, என்னைத்தாண்டி தூத்துவா. புத்தியா நடந்துக்கணும், புரியறதா?” என்றார் மகளின் கன்னம் வருடி.
அம்மாவைப் பார்த்தால் பாவமாக இருந்தது ராதிகாவிற்கு. “அவர் பேசினதையெல்லாம் இந்த அம்மாகிட்டக்க சொன்னா, இவ என்ன பண்ணுவா?” என்ற கேள்வி மனதில் எழுந்தது. மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்ற தாயின் நிம்மதியைக் குலைக்க அவளுக்கு மனம் வரவில்லை.
மேலும் பரத் பேசியவற்றைப் பற்றி நிதானமாக யோசிக்கவும் நேரமிருக்கவில்லை அவளுக்கு. எதையுமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கும் ரகமில்லை ராதிகா. அதனாலேயே அதைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதி காத்தாள்.
அதற்குள் கைநிறைய ஜாதிப்பூவுடன் அறைக்குள் நுழைந்தனர் கீதாஞ்சலியும், நந்தினியும். சூழ்நிலை கேலியும் கிண்டலுமாக, கலகலப்பாகியது. கொண்டுவந்திருந்த பூவை ராதிகாவின் தலையில் வைத்துவிட்டு, “போலாமா?” என்று கீதாஞ்சலி கேட்கவும், ராதிகாவின் மனதில் வரவிருக்கும் நிகழ்வைப் பற்றிய லேசான கிலி தோன்றியது.
வாழ்க்கையைப் பற்றிய எதிர்பார்ப்பு பெரிதாக இல்லை என்றாலும், “அலங்காரம் பண்ணி ஃபர்ஸ்ட் நைட்டுக்கு பார்சல் பண்ணுன்னு சொன்னாரே, ஒரு வேளை கிடைச்சுது சான்சுன்னு ஃபர்ஸ்ட் நைட்ட கொண்…டாடிடுவாரோ…” என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.
இவ்வாறாக, நந்தினியும் கீதுவும் ராதிகாவை பரத்தின் அறைக்கு அழைத்து வர, மனதில் மெலிதான கலக்கம் தோன்றி, அறை வாசலில் தயங்கி நின்றாள் ராதிகா. முன்பு அறையில் பார்த்த லக்ஷ்மியின் புகைப்படம் மனதை உறுத்தியது. உள்ளே செல்லவே பிடிக்கவில்லை ராதிகாவிற்கு. “உள்ளே வாம்மா, ஏன் அங்கேயே நின்னுட்டே?” என்று யாரோ குரல் கொடுக்க, பின்னாலிருந்து மரகதமும், “உள்ள போடி, என்ன வாசல்ல நின்னுண்டு கனவு கண்டுண்டு இருக்கே?” என்று நெட்ட, ஒருவாறாக அறைக்குள் நுழைந்தாள். உள்ளே சென்றவளின் கண்கள் தன்னிச்சையாக லக்ஷ்மியின் புகைப்படம் மாட்டியிருந்த சுவரை நோக்க, சிவாண்ணா மற்றும் பர்வதம் மாமியின் புண்ணியத்தில் அது அங்கு இல்லை. ராதிகாவின் மனதில் லேசான நிம்மதி தோன்றிய அதே நேரத்தில் புகைப்படத்தைக் காணாத பரத்தின் கோபம் டிகிரி டிகிரியாக தலைக்கேறிக் கொண்டிருந்தது.
இருவருடைய பெற்றோர் மற்றும் நந்தினி ஸ்ரீராமுடன் இன்னும் சில மூத்த தம்பதிகளும் அங்கே குழுமியிருந்தனர். படிக்கோலமிட்டு அதன் மேல் போடப்பட்ட மனையில் அமரவைத்து இருவருக்கும் பாலும் பழமும் கொடுக்கப்பட்டது. பின்னர் புரோஹிதர் மந்திரங்கள் ஓதி, புதிய வஸ்திரம் கொடுக்க, இருவரும் மாற்றிக்கொண்டு வந்தபின், அங்கிருந்த மூத்த தம்பதியர் அனைவருக்கும் ஐவகைப் பழங்களை தாம்பூலமாகக் கொடுத்து, அவர்களின் காலில் விழுந்து சேவித்து, பரத்தும் ராதிகாவும் ஆசீர்வாதம் பெற்றனர்.
“குலம் தழைக்க ஆண் மகவைப் பெற்று, நிலம் தழைக்க நிறைய பெண் பிள்ளைகளையும் பெறுக” என்று இருவரையும் அட்சதை தூவி வாழ்த்திவிட்டு, அனைவரும் அறையை விட்டு வெளியேற…கடைசியாக “கதவை சாத்திக்கோடா” என்று கிண்டலாகக் கூறிக்கொண்டே சென்ற நந்தினியை, “நந்து…” என்றழைத்த பரத், அவளிடம் சென்று, “ரூமுக்கு வெளியில நின்னுண்டு கும்மி அடிக்கிறேன், கோலாட்டம் ஆடறேன்னு, யாராவது ஏதாவது ஆரம்பிச்சேள், ஹாக்கி பேட்டால எல்லார் தலையையும் ஒடைச்சு பரலோகம் அனுப்பிடுவேன், ஜாக்கிரதை, எல்லா பெருசுங்களையும் மரியாதையா கலெக்ட் பண்ணிண்டு போய் அவாவா ரூம்ல டெலிவர் பண்ணிடு, இல்லன்னா நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லை,” என்றான் மிரட்டும் தொனியில்.
அவன் கூறியது போலவே, பெண்கள் அனைவரும் அறை வாசலில் கும்மியடித்து பாட்டுப்பாட வட்டமாய் நின்றிருக்க, அதைக்கண்ட நந்தினிக்கு, பரத் ஹாக்கி பேட்டை எடுத்து, பாகுபலி ரானா ஸ்டைலில் அனைவரின் மண்டையையும் உடைக்கும் விஷுவல் மனதில் தோன்ற, அங்கு நின்றிருந்த பர்வதத்திடம், “அம்மா, உன் பிள்ளை ஏற்கனவே கடுப்புல இருக்கான், இப்போ இவள்லாம் சேர்ந்து கும்மியடிச்சு கதவைத் தட்டினான்னு வெச்சுக்கோ, அவன் ருத்ர தாண்டவம் ஆடிடுவான், அப்பறம் ரசாபாசம் ஆயிடும்…மரியாதையா எல்லாரையும் இங்கிருந்து அழைச்சுண்டு போயிடு,” என்று எச்சரித்தாள்.
ஒருவாறாக அவர்கள் இருவரும் கும்மியடி கூட்டத்தைக் கலைத்து, பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
அறைக்குள் பரத்துடன் தனித்து விடப்பட்ட ராதிகாவோ, லக்ஷ்மியின் புகைப்படம் மாட்டியிருந்த சுவற்றையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள். அறையில் வீசிக் கொண்டிருந்த பூவாசமோ, ஊதுவத்தி வாசமோ, அல்லது செய்யப்பட்ட அலங்காரங்களோ அவளை சிறிதும் பாதித்ததாகத் தெரியவில்லை.
கதவைச் சாத்திக்கொண்டு திரும்பிய பரத்தும் அவளை அதே நிலையிலேயே கண்டான். “இவகிட்ட இப்போவே பேசிடறது நல்லது,” என்று தோன்ற, “ம்கும்” என்று தொண்டையைக் கனைத்தவன், “உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்…”என்று தொடங்க…
பரத்தின் குரல் கேட்டு திரும்பிய ராதிகா, அவன் மேற்கொண்டு எதுவும் பேசும் முன், “இதோ பாருங்கோ, நீங்க என்னண்ட பேச வேண்டியதை எல்லாம், உங்க அம்மாகிட்டயும் அக்கா கிட்டயும் பேசறச்சவே ஒரு வார்த்தை விடாம கேட்டுட்டேன், நீங்க சொல்ல வர்றதையும் தெளிவாவே புரிஞ்சுண்டேன், இப்போ மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்காதீங்கோ, அதைக் கேக்க நேக்கு சுவாரசியமும் இல்லை, விருப்பமும் இல்லை, நேக்கு ரொம்ப தூக்கம் வர்றது, நீங்க கட்டில்ல எந்தப்பக்கம் படுத்துப்பேள்னு சொன்னா, நான் இன்னொரு பக்கம் படுத்துப்பேன், நேக்கு ரொம்ப டையர்டா இருக்கு,” என்று படபடக்க, பேச வாய் திறந்த பரத், டக்கென்று வாயை மூடிக்கொண்டு, படுக்கையில் தான் உறங்கும் பக்கத்தைக் கைகாட்ட, ராதிகா மற்றொரு பக்கம் சென்று தொங்கிக்கொண்டிருந்த பூச்சரங்களை திரையை விலக்குவதுபோல் விலக்கிவிட்டு, படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.
ராதிகாவின் இந்த ரியாக்ஷனை எதிர்பார்க்காத பரத், என்ன செய்வது என்று தெரியாமல் பால்கனி கதவைத் திறந்து வெளியே சென்றான். “இது என்ன ரியாக்ஷன்டா பகவானே,” என்றது அவன் மனம். “வந்து அறை நாள் கூட ஆகல்ல, அதுக்குள்ள என்னோட ரூம்ல இருந்து என்னையே வெளில துரத்திட்டு, என்னோட பெட்லையே படுத்துண்டு தூங்கிட்டாளே…இவளை எந்த கணக்குல எடுத்துக்கறது?” என்று நினைத்துக்கொண்டான், “அத்திம்பேர் சொன்னது கரெக்ட்தான், பொம்மனாட்டிகள் எந்த நேரத்துல எப்படி நடந்துப்பான்னே நிஜம்மாவே புரியல,” என்று பதிலளித்த மனம்,
“ஆமா, நேக்கு ஒரு டவுட், நீ இப்போ நூடுல்ஸா இல்லை ஐயோ பாவமா?” என்று கேட்டது…






Nice