அத்தியாயம் 6
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்
த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாத் அபரிஹார்யே (அ)ர்தே
நத்வம் ஷோசிதும் அர்ஹஸி
பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது.
-பகவத் கீதை
“தமிழ்… ஒரு ஹெல்ப் பண்றீங்களா?”
“சொல்லுங்க… என்ன ஹெல்ப் பண்ணனும்?” அவனது இயல்பான கேள்விக்குத் தமிழ்நதியும் பதில் கூற, அவனது கைப்பேசியை அவளிடம் தூக்கி போட்டான்.
“கொஞ்சம் விழுப்புரம் வரைக்கும் ரூட்டில் குறிச்சு பறயா… ம்ம்ம் சாரி… பார்த்துச் சொல்லுங்க… ப்ளீஸ்…” என்று அவன் கூற, அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
“வாட்… என்ன… ரூட்டே தெரியாதா? என்ன சொல்றீங்க? என்ன டிரைவர் நீங்க?” அதிர்ந்து போய்த் தமிழ்நதி கேட்டாள். அந்த நேரத்திலும் அவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது.
“ஏம்மா… அதுக்காக இருக்கற சந்து பொந்தெல்லாம் கூட நான் மனப்பாடமாக்கி வைக்காம் கழியுமோ?” அவன் கேட்டதும் அர்த்தமானது தான். ஆனாலும் ஒரு டிரைவர் தான் போகும் வழித்தடத்தினை தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?
அதையே அவளும் கேட்டும் வைத்தாள்.
“சந்து பொந்தெல்லாம் வேண்டாம்… அட்லீஸ்ட் போற ரூட்டாவது தெரிந்து இருக்கனும்ல… உங்க கம்பெனில எப்படி இப்படி அலவ் பண்றாங்க?” சற்றே கோபமும் எட்டிப்பார்த்தது அவளது கேள்வியில்.
“கம்பெனியா?” என்று அவன் விழித்தான்.
“ம்ம் ஆமா… டிஎப்யூல தானே நீங்க ஒர்க் பண்றீங்க? பார்த்தி சொன்னாரே… டிஎப்யூல இருந்து தான் வர்றதா?” சந்தேகமாக அவள் கேட்டாள். அவன் காரைச் செலுத்தி கொண்டே புன்னகையோடு வேகமாகத் தலையாட்டினான்.
“ஆமாங்க… எஸ் டிஎப்யூ தான். அதுக்காக நான் என்ன ஹியுமன் ரோபோவா? ஒரு நேவிகேஷன் பார்க்கச் சொன்னதுக்கு இத்தனை டீட்டைல்ஸ் கொடுக்கனுமா? எண்டே குருவாயூரப்பா…” அலுத்துக் கொண்டவனை முறைத்தாள் தமிழ்நதி.
“ஒருசிலர் கிட்ட ஒரு சில குவாலிபிகேஷன் ரொம்ப முக்கியம்… அதைத் தெரிஞ்சுக்கங்க…” என்று மிகவும் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் கூறிவிட்டு, “அதுவும் ஒரு டிரைவர்ன்னா அத்தனை ரூட்டும் தெரிந்துதான் இருக்கணும்…” என்று ஒரேடியாக முடித்தாள்.
ஸ்ரீதரன் சிரித்து கொண்டே, “சரி… இனிமே நான் பாலோ பண்ணிக்கறேன். இந்த ஒரு டைம் கொஞ்சம் ரூட்டில் குறிச்சு பறயா தமிழ்… பார் யுவர் இன்பர்மேஷன் சென்னையிலிருந்து கிளம்பினதிலிருந்து ரெண்டு முறை ரூட் மாத்தியாச்சு… அதைப் மனசிலாக்கி மேடம்…” என்று பொறுமையாக எடுத்துக் கூறினான்.
“அப்பா சொக்கநாதா… நான் ஊர் வந்து சேர்றது உன் கைல தான்ப்பா இருக்கு… என்னை மட்டும் கொஞ்சம் காப்பாற்றி விட்டுடுப்பா…” சப்தமாகச் சொக்கநாதரிடம் அவள் வேண்டுதலை வைக்க, அவன் சிரித்தான்.
“அதோட இந்த காக்டெய்ல் கிட்ட இருந்து என்னை கொஞ்சம் காப்பாற்று சொக்கநாதா…” அவனது அந்த மலையாள தமிழ் மிக்சிங்கை கிண்டல் செய்து அவள் கலாய்க்க, அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“தமிழ்… ஞான் இத்தரை தமிழாச்சும் ட்ரை செய்யுன்னு… பக்ஷே நிங்கள் அதை ட்ரை கூட செய்யலையே…” அதே புன்னகையோடு அவன் கூறினான்.
“உங்களுக்கு தேவை இருக்கு… இங்க வந்து தொழில் செய்யறீங்க… அதனால் உங்களுக்கு தமிழ் அவசியம்… எனக்கு அந்த பிரச்சனை இல்லையே…” மனதை மறைக்காமல் அவள் கூறினாள். அவனது முகம் சட்டென்று எரிச்சலில் சுணங்கி மீண்டது.
“தமிழ்… நம்ம தேவைகளை விட விருப்பங்கள் தான் முக்கியம்… விருப்பம் இருக்கற பட்சத்தில் தான் நாம் கற்றுக்கொள்ளவே முடியும்…” சற்று தெளிவான தமிழில் அவன் கூறினான். அது அவளுக்கு ஆச்சரியம் தான். இவ்வளவு அழகாக தமிழ் பேச தெரிந்துக் கொண்டு, அது மலையாள கலப்பாக இருந்தாலும், ஏன் காக்டெய்ல் அடிக்கிறான் என்று கேட்கத் தோன்றியது.
அதற்கும் அவனிடம் பதிலிருந்தது.
“ம்ம்ம்…ரைட்… ஓகே விடுங்க இந்த டாப்பிக்கை… ஊர் போய் சேரனும்… அதுதான் இப்போதைய என்னோட ஆம்பிஷன்…” என்று கிண்டலாகக் கூறினாள்.
“கண்டிப்பா உங்களைப் பத்திரமா கொண்டு போய்ச் சோழவந்தான்ல சேர்க்க வேண்டியது என்னோட வேலை தமிழ்… உங்களை, அதுவும் ஒரு கல்யாணப்பொண்ணை ரிஸ்க் எடுத்து நான் கூட்டிட்டு போறேன்னா கண்டிப்பா சேப்டிய பார்க்காமல் இருக்க மாட்டேன். பார்த்திக்கு யார் பதில் சொல்றது?”
அவளுடைய விளையாட்டுத்தனமான வேண்டுதல் அவனுக்குள் புன்னகையை வர வைத்தாலும் பொறுப்பாக அவன் பதில் கூற, அவள் தான் திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
சற்று நேரம் அந்தத் திருமணத்தையே அல்லவா அவள் மறக்க நினைத்திருந்தாள்.
முகத்தில் வெந்நீரை அள்ளிக் கொட்டினார் போல இருந்தது. விளையாட்டுத்தனத்தை கைவிட்டு பதில் பேசாமல் அவனுடைய மொபைலை எடுத்தாள். நேவிகேஷனை பார்ப்பதற்காக!
புத்தம் புது ஐபோன் செவன் எஸ் ப்ளஸ் போன் அது!
அப்போதுதான் அந்த ரகம் வெளிவந்தும் இருந்தது.
டிரைவரிடம் ஐபோன் செவன் எஸ் ப்ளஸ்ஸா? உள்ளுக்குள் சற்று ஆச்சரியப்பட்டாலும்… சரியான கேட்ஜட் பைத்தியங்கள் செய்யும் வேலைதான் என்று நினைத்துக் கொண்டாள். ஆனாலும் டிரைவருக்கு எண்பதனாயிரம் ரூபாய் போன் என்பது அதிகம் தான் என்று நினைத்தவளுக்கு மனசாட்சி கொட்டு வைத்தது.
“அவன் என்ன போன் வைத்திருந்தால் உனக்கு என்ன ஆத்தா? வேலைய பார்ப்பியா… இந்த வம்பு பேசற புத்தி உனக்கு எதற்கு?” என்று கேள்விமேல் கேள்வி கேட்ட மனசாட்சியை ஒதுக்கி வைக்க முடியாமல் தன்னுடைய ஐபோன் குறித்த கேள்விகளை ஒதுக்கி வைத்துக் கொண்டாள்.
ஆனாலும் அந்தப் போனை ஆசையாகப் பார்ப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
அவளும் நினைத்தால் வாங்க முடியும் தான் ஆனால் லோகாவை நினைக்கும் போதே உதறல் எடுத்துக் கொண்டது. அளவுக்கு மீறி ஒரு பைசாவையும் செலவு செய்ய விடமாட்டார் அவர்… கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதற்கு முழு உதாரணமும் அவளது தாய் தான்.
அவளுடைய சேம்சங் ஜே செவனுக்கே ஒரு மாதம் முழுவதுமாகத் திட்டித் தீர்த்து விட்டவர் அவர்.
“ஏன்டி… வேலை பார்த்துச் சம்பாதிக்கற திமிரா? அந்தத் திமிர் தான் பதினஞ்சாயிரம் ரூபாய் போட்டு ஒரு போனை வாங்க சொல்லுதா? உனக்கு அவ்வளவு கொழுப்பா?” விடாமல் திட்டிக் கொண்டிருந்தவரை மறித்து,
“ம்மா உன் காலம் மாதிரி போன்னா பேசறதுக்கு மட்டும்ன்னு நினைச்சியா? அதுல எவ்வளவோ பெசிலிட்டி இருக்கும்மா… பேங்க்கே போகாம வீட்டில் உட்கார்ந்துகிட்டே அத்தனை வேலையும் பார்த்துடலாம்… தெரியுமா?”
“அதுக்காக இவ்வளவு காசு போடச் சொல்லுதா? ஒவ்வொரு பைசாவும் உழைச்சு வர்றதுன்னு நினைப்பு வேண்டாம்… இந்த ஆடம்பரம் எதுக்குடி?”
“ம்மா… இதுதான் ம்மா விலை ரொம்ப குறைவான போன்… எங்க ஆபீஸ்ல அம்பதனாயிரம் ரூபாய் போனெல்லாம் சர்வ சாதாரணம் ம்மா…” லோகாவிடம் போராட முடியாமல் அவள் நொந்து போய்க் கூறினாள்.
“ஏய்… அடுத்தவங்களை பார்த்து ஆசைப்படாதே… புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்க கூடாதுடி… நம்ம ஒழுக்கத்தை நாம விட்டுத் தரக் கூடாது…” என்று திட்டிக் கொண்டே போனார்.
“ஏம்மா… கொஞ்சமாவது அர்த்தமா பேசறியா? இந்தப் போன் வாங்கினதில் தான் என் ஒழுக்கமே கெட்டு போச்சா? எனக்குத் தெரியாதா? நான் எப்படி இருக்கணும்னு… அதான் தினம் பாட்டா படிக்கறையே… இதற்கு மேலயுமா நான் பாடம் கேக்கணும்…” குரலை உயர்த்தி தன்னால் முடிந்த அளவு கத்தியவளை பார்த்து முறைத்தார் லோகா… சுந்தரம் தான் அப்போதும் உதவிக்கு வந்தது.
“ஏன்டி மடைச்சி… என் பொண்ணுக்கு எப்படி இருக்கணும்… யார் கிட்ட எப்படி பேசனும்… எப்படி எளிமையா இருக்கனும்ன்னு தெரியாதா? விட்டா பாடம் எடுத்துட்டே இருக்க? ஓரளவு தான் சொல்லணும்… ஒரு போன் வாங்கினதுக்கு இப்படியுமா தங்கத்தை திட்டுவ?” காக்கும் தெய்வமாகத் தந்தை பிரத்தியட்சமாகி லோகாவிடமிருந்து அப்போது காத்து விட்டாலும் அடுத்த ஒரு மாதத்துக்கு அவர் நேரிலும் போனிலும் திட்டித் தீர்த்துத் தான் விட்டார்.
சுந்தரத்துக்கும் தனியாக மண்டகப்படி நடந்து முடிந்தது.
“ஊரில் இல்லாத பொண்ணை கண்டுட்டாறு இந்தச் சீமைத்துரை… ஒத்தை பொண்ணை ஒழுங்கா அடக்கமா வளர்க்கலைன்னா நாளைக்கு மாமியாத்தா என்னைத்தான் வைவா… பொண்ணை வளர்க்க துப்பில்லைன்னு என்னைத்தான் காறி மொய்வா… உங்களை யார் சாமி கேட்க இருக்கா? பொண்ணை கண்டிக்கும்போது பொறுப்பான தகப்பனா இருமைய்யா… இப்படித் தறி கெட்டு பொண்ணுக்கு செல்லம் கொடுக்காதீரும்… அப்புறம் நம்ம பொழப்புத்தான் சந்தி சிரிக்கும்…” என்று மனைவி கன்னத்தில் இடித்தாலும்… சுந்தரமோ தமிழ்நதியை பார்த்து,
“ஏய்… என் பொண்ணு ராஜாத்திடி… ஒரு பய நாக்குல பல்லைப் போட்டுப் பேசிடுவானுவளா? வகுந்துற மாட்டேன் வகுந்து. என் பொண்ணை மகாராணியாட்டம் தான்டி நான் வாழவைப்பேன்… ஏப்பை சாப்பைக்கெல்லாம் நான் என் பொண்ணை கொடுத்துட மாட்டேன். அவ ராணிடி… மகாராணி…”
தமிழ்நதியை பெருமையாகப் பார்த்து, ஆதரவாகத் தோள் சேர்த்து, தனது மீசையைத் தடவிக்கொண்டே கூறும் கணவனைக் காணும்போது உள்ளுக்குள் பெருமை பீறிடும் தான் லோகாவுக்கும்! ஆனால் அதைக் காட்டிக்கொண்டதே இல்லை. காட்டிகொண்டுவிட்டால் தந்தையும் மகளுமாகச் சேர்த்து போடும் ஆட்டம் எல்லையைத் தாண்டிவிடும் என்று அவருக்குத் தெரியாதா என்ன?
“ரொம்ப ஆடாதீருமய்யா… அவளைக் கைல புடிக்க முடியாது. உம்ம பொண்ணோட வாலை நீரே வளர்த்து வைக்காதீரும்…” என்று இடித்து விட்டுப் போனதெல்லாம் அவளது கண் முன் வந்து போனது.
“தமிழ்… என்னாச்சு?” காரின் முன் பக்கத்திலிருந்து ஸ்ரீதரன் குரல் கொடுத்தான்.
“ஹாங்… என்ன?” என்று அவள் கேட்டாள்.
“சரியா போச்சு… நேவிகேஷன் பார்க்கச் சொன்னேனே… என்ன தூங்கிட்டீங்களா?” என்று கேட்டவனை பார்த்து,
“லைட்டா…” என்று சிரித்து கொண்டே போனை ஆன் செய்தாள். லாக்காகி இருந்தது!
“போன் லாக்ல இருக்கே…” என்று அவனிடமே கொடுக்க முயல,
“ஜஸ்ட் ஒன் டூ எய்ட் செவன் போடுங்க…” காரை ஓட்டுவதில் கவனமாக இருந்தவன் பாஸ்வோர்டை கூறினான்.
“என்னை நம்பி பாஸ்வோர்டை எல்லாம் சொல்றீங்க… இது நல்லதுக்கில்ல…” என்று அவள் கிண்டலடிக்க,
“அய்யடா… அதை வெச்சு என்ன பண்ண முடியும்? அப்படியே நீங்க என்ன பண்ணிட போறீங்க தமிழ்… அதுக்கெல்லாம் வேற பேஸ்கட் வேண்டும். நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க…” என்று அவன் சிரித்தான்.
அவன் சொன்ன பாஸ்வோர்டை போட்டுப் போனை ஓபன் செய்தவள், நிமிர்ந்து அவனைப் பார்த்து,
“அப்படீன்னா என்னைப் பார்த்தாலே இனாவானான்னு எழுதி ஒட்டி வெச்சுருக்காக்கும்?” சிலிர்த்துக் கொண்டு எதிர்க்கேள்வி கேட்டவளை… கண்ணாடியின் வழியே பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் ஸ்ரீதர்.
“இப்படியெல்லாம் ஓபனா ஒத்துக்க கூடாது தமிழ்…” என்று கிண்டலடிக்க,
“ஹலோ… இப்படியெல்லாம் கிண்டல் பண்ணா நம்ம கிட்ட எந்த ஹெல்பும் வாங்க முடியாது தெரிஞ்சுக்கோங்க…”
“ஓ… அப்படியா? அப்படீன்னா இதோ சைட்ல காரைப் பார்க் பண்ணிட்டு நான் படுத்துத் தூங்க போறேன். எப்படி வசதி?” அவளைச் சற்று திரும்பிப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டி அவன் கேட்டான். அவளது இதயம் தனது வேலையை ஒரு சில நொடிகள் நிறுத்தியது. உடனே சுதாரித்து கொண்டவள்…
“ஹலோ… திஸ் இஸ் அட்ராஷியஸ்…” கோபமாக அவள் கூறினாலும் கோபம் கிஞ்சிற்றும் இல்லை அவளது குரலில்.
“பின்ன… எனக்கு வழி தெரியாம எப்படிப் போவேன்… அதைப் பார்த்துச் சொல்ல இவ்வளவு பேசறீங்களே… அம்மே பகவதி… நிங்களோட பியான்சி… ரொம்ப பாவம்…” என்று சிரிக்காமல் கூற, அவளது முகம் சிவந்தது.
அது அவன் கூறியதாலா? அல்லது அவன் கூறிய பொருளாலா?
பதில் பேசாமல் தலை குனிந்து கொண்டு போனை பார்க்க, ஸ்ரீதரனுக்கு தான் சிரிப்பாக இருந்தது.
இந்தப் பெண்களுக்கு எங்கிருந்து தான் வெட்கம் வருமோ என்று புன்னகையோடு எண்ணிக்கொண்டான்.
அவசரமாக நேவிகேஷனை திறந்தவள். வழியைப் பார்த்தாள்.
அதிர்ந்து போனாள்!
அதில் சுத்தமாக டவர் என்பதற்கான அறிகுறியே இல்லாமலிருந்தது.
“ஹய்யோ ஸ்ரீதரன். டவர் சுத்தமா இல்லை.” அதிர்ந்து போய் அவள் கூறினாள்.
“வாட்… என்ன சொல்றீங்க… இந்த வழில வேற ஈ காக்காவை கூடக் காணோம்… வழி மாறிட்டோம்ன்னு வேற நினைக்கறேன்.” என்று பதட்டமானவன் வேகத்தைக் குறைத்து கொண்டு அவளிடமிருந்து போனை வாங்கிப் பார்த்தான்.
அவனுக்கும் அதே நிலையைத் தான் காட்டியது அவனது கைப்பேசி!
“தமிழ்… உங்க போனில் பாருங்க…” என்று அவன் கூறும் போதே கைப்பையிலிருந்து அவளது கைப்பேசியை எடுத்திருந்தாள்.
அவசரமாக ஓபன் செய்து பார்க்க, அதிலும் அதே நிலை!
டவர் சிறிதளவும் இல்லாமல் பல்லிளித்தது அவளது கைப்பேசியும்!
“இப்ப என்ன பண்றது?” பயந்து போய் அவள் கேட்டாள். மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவன்,
“டோன்ட் கெட் பானிக்… எதுவா இருந்தாலும் சமாளிக்கலாம்…” என்று கூற, அவளது முகம் தெளியவில்லை.
“இப்படி சொன்னா எப்படி? வழியே தெரியாம எப்படி இந்தப் பக்கம் வந்தீங்க… உங்களுக்கே தெரிய வேண்டாமா? இதுதான் உங்க பொறுப்பா?” கோபமாக அவள் பொரிய ஆரம்பிக்க, ஸ்ரீதரன் சற்று பொறுமையாகவே கெட்டு கொண்டான். இந்தச் சூழ்நிலையில் இப்படியொரு பெண் சிக்கிக்கொள்ளும்போது இப்படி கூடப் பேசாமல் இருக்க முடியுமா?
அவள் வெடித்து முடிக்க, சற்று ஓரமாகக் காரை நிறுத்தினான் ஸ்ரீதரன்!
அந்தப் பகுதி முழுவதுமே அந்தகார இருளைத் தழுவிக்கொண்டிருந்தது!
அவர்களது காரில் இருந்த வெளிச்சம் மட்டுமே!
அவளைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டவன். சற்று மௌனித்து விட்டு,
“தமிழ்… இந்தச் சிச்சுவேஷன்ல டென்ஷனாகிட்டா சரியாகிடுமா?” பொறுமையாகக் கேட்டான். அவளால் பதில் கூற முடியவில்லை.
சுற்றிலும் திரும்பிப் பார்த்தாள். இருள்… இருள்… ஆளை விழுங்கும் இருள் மட்டுமே… பயம் நெஞ்சைக் கவ்வியது. அவள் பேசிய வீரமெல்லாம் எங்கோ போய் ஒளிந்து கொள்ள, இவன் பாடமெடுக்க முயலாமல் காரை நகர்த்தினால் தேவலாம் என்றிருந்தது!
“நான் டென்ஷன் ஆகலை… நீங்கக் காரை எடுங்க… தயவுசெய்து…” பயத்தோடு அவள் கூறினாள்.
“என்னை நம்பி வந்து இருக்கீங்க தமிழ்… கண்டிப்பா உங்க சேப்டி என்னுடைய பொறுப்பு… பேடிக்கண்டா… நீங்கப் பயந்தா என்னால் சரியா திங்க் பண்ண முடியாது. புரியுதா?”
வெகுதெளிவாக அவன் ஒவ்வொரு வரியாக எடுத்துக் கூற, சற்று தைரியம் வந்தது அவளுக்கு… ஆனாலும் சுற்றிலும் இருந்த இருளை அவளால் பயமின்றி பார்க்க முடியவில்லை.
“நீங்கச் சொல்றதெல்லாம் சரி தான் ஸ்ரீதர். எனக்கு இருட்டுன்னா ரொம்ப பயம். காய்ச்சலே வந்துடும். தயவுசெய்து கொஞ்சம் போயிட்டே பேசுங்க…” என்று கூறினாள்.
அவன் வாய்விட்டுச் சிரித்துவிட்டு காரை ஸ்ட்ராட் செய்தான்.
“நீங்க இவ்வளவு பயந்தாங்கொள்ளின்னு எனக்குத் தெரியாம போச்சே…” என்று மீண்டும் சிரித்தான்.
“ஏன் தெரிஞ்சு இருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?” கடுப்பாக அவள் கேட்டாள்.
“ஒன்னும் இல்ல… சுத்தி இருக்க இருட்டுக்கு கார்ல இருக்க லைட்டையும் ஆப் பண்ணிட்டா எப்படி இருக்கும்ன்னு நினைச்சு பார்த்தேன்…” குறும்பாகச் சிரிக்க, அவளுக்குத்தான் பகீரென்றது.
“வாட்…” என்று அதிர,
“அதுவுமில்லாம தமிழ் இன்னொன்று தெரியுமா? இந்த மாதிரி இருட்டான இடத்தில் தான் இந்தப் பேயெல்லாம் சுத்திட்டு இருக்குமாம்…” ரகசியம்போலக் கூறியவனை முகம் முழுக்க அப்பிய பயத்தோடு பார்த்து,
“வேண்டாம்… என்னைப் பயமுறுத்தாதீங்க…”
“ச்சே ச்சே… உங்களைப் போய் நான் பயப்படுத்த நினைப்பேனா? உண்மைங்க… அப்படித்தான் பழனி ரூட்ல சூரி ஒரு பேயைப் பார்த்தாராம்… வைரலாச்சே… தெரியாதா?” இன்னமும் ரகசிய குரலிலேயே அவன் கேட்டான். அவளோ சுற்றும் முற்றும் பார்த்தாலும் பயம் மேலும் அதிகமாக,
“ஹய்யோ… தயவுசெய்து. வேண்டாம்…” அழாத குறையாக அவள் கூறினாள்.
“கார்ல போகும்போது அப்படி பேயெல்லாம் பின்னாடி சீட்டில் வந்து உட்கார்ந்துக்குமாம்… எங்க முத்தச்சி சொல்லுவாங்க…”
அப்படியே உண்மையைச் சொல்வது போல அவளைச் சிரிக்காமல் கலாய்த்துக் கொண்டே காரை அவன் செலுத்தி கொண்டிருக்க, தனது இரண்டு பக்கத்தையும் அவள் பயத்தோடு பார்த்தாள். எவ்வளவுதான் அவள் தைரியசாலி போலக் காட்டிக்கொண்டாலும் அவளது மிக மோசமான வீக்னெஸ் அவளது இந்தப் பேய் பயம்!
பகலென்றால் ஆயிரம் பேய்க்கதைகளை ஆர்வமாகக் கேட்டாலும் இரவில் பாத்ரூம் செல்வதற்கும் லோகாவை அழைக்கும் ரகம் அவள்! சென்னை சென்றபின் அவையெல்லாம் சிறிதளவு குறைந்திருந்தது. அதைத் தான் ஸ்ரீதரன் இப்போது சீண்டி விட்டுக்கொண்டிருந்தான்.
“ஏன் தமிழ்… நீங்கப் பேயைப் பார்த்து இருக்கீங்களா?” என்னவோ பக்கத்து வீட்டிலிருப்பவரைப் பார்த்தீர்களா என்பது போல அவன் கேட்டான். அவளுக்குக் குரல் மேல் எழும்பவே இல்லை.
“இல்ல…” காத்துத் தான் வருது என்னும் ரேஞ்சுக்கு அவள் பதில் கூறினாள்.
“நான் பார்த்து இருக்கேன்… எங்க முத்தச்சி வீட்டுக்குப் பின்னாடி ஒரு பாலை மரம் இருக்கு… அந்த மரத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?” வெகு இயல்பாக அவன் கேட்டான். அவள் இல்லையென்று தலையாட்டினாள், பயத்தோடு!
“அதில் தான் பேயைக் கட்டி வைப்பாங்க… அதுவும் மோகினி பேய் வருதுன்னா பாலைப்பூவோட வாசத்தோடு தான் வருமாம்…” அவளது முகத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அவன் ரகசிய குரலில் கூறிக்கொண்டே போக, அவள் அழாத குறையாக,
“வேண்டாம்… நான் அழுதுடுவேன்…” அழும் நிலைக்குச் சென்றவள். முகத்தை மூடிக்கொண்டு கூற, அவனது முகத்தில் குறும்பு புன்னகை!
“இருங்க… இன்னும் இருக்கு…” என்று அவன் தொடர… அவள் பயந்த முகத்தோடு நிமிர்ந்து,
“காரை நிறுத்துங்க… தயவுசெய்து…”
“ஏன் தமிழ்… இங்க நடந்து போகப் போறீங்களா?…” என்று கேட்டுக் கொண்டே ஓரமாக அவன் நிறுத்த… பின்பக்கத்திலிருந்து முன் பக்கத்திற்கு அவசரமாக வந்தவள். அவனுக்கு அருகே அமர்ந்து கொண்டாள்.
அவளது அந்தப் பதட்டமும் பயமும் அவனுக்குள் சுவாரசியத்தை விதைத்திருந்தது. சிறு வயதில் ஒன்று விட்ட தங்கைகளையும் மாமன் மகள்களையும் இப்படியெல்லாம் பயமுறுத்தி அலற வைத்ததெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து புன்னகையை விரிய வைத்தது. அவனுக்குள் இப்போதும் சிறு கல்மிஷமும் இல்லை. அவளது அந்தப் பயத்தை சீண்டி விட்டு ரசிக்கும் மனோபாவம் மட்டுமே.
“நான் எதற்கு நடந்து போகப் போறேன். ஒழுங்கா ரோட்டை பார்த்து ஓட்டுங்க… ஏதாவது பேசுனீங்க… கொன்றுவேன்…”
ஒற்றை விரலைக் காட்டி அவள் மிரட்ட… அதைப் பார்த்தவனால் பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. முயன்று கட்டுப்படுத்திக் கொண்டு,
“அப்புறம்… வீட்டுக்குப் பின்னாடி இருந்த மோகினிப்பேய் என்னாச்சுன்னு சொல்ல வேண்டாமா தமிழ்?” சிரிக்காமல் மீண்டும் அவனது கலாட்டாவை ஆரம்பிக்க.
“வேண்டாம்… நிஜமா கொலை விழும்… சொல்லிட்டேன்…”
“இதைக் கேட்டுட்டு கொலை பண்ணலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணுங்க… ஒரு நாள் அந்த மோகினி பேய் பாலைப்பூவை வெச்சுட்டு முண்டு உடுத்திட்டு நான் இருந்த ரூமை தட்டுச்சா… நான்…” என்று மீண்டும் ஆரம்பிக்க,
“ஹய்யோ… வேண்டாம்…” பயத்தோடு கண்ணை மூடியவள். அவளையும் அறியாமல் அவனது வாயைக் கை வைத்து மூட,
அதுவரை அவளைக் கன்னாபின்னாவெனப் பேய்க்கதைகளை வைத்துச் சீண்டியவன். இப்போது பேயரைந்தார் போல வாய் பேச முடியாமல் அதிர்ந்து பார்த்தான்!






😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳