arrow_back
சக்கரவியூகம் அத்தியாயம் 7
சக்கரவியூகம் chevron_right பகுதி 7 / 26

அத்தியாயம் 7

visibility 893
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (10 மதிப்பீடுகள்)
பகிர்

ஸ்வ-தர்மம் அபி சாவேக்ஷ்ய

ந விகம்பிதும் அர்ஹஸி

தர்ம்யாத் தி யுத்தாச் ச்ரேயோ (அ)ன்யத்

க்ஷத்ரியஸ்ய ந வித்யதே

சத்திரியன் என்ற முறையில் உனக்கென்று உரிய கடமையைப் பற்றிக் கருதும்போது, தர்மத்தின் கொள்கைகளுக்காகப் போர் புரிவதைக் காட்டிலும் வேறு சிறந்த கடமை உனக்கில்லை. எனவே, தயங்கத் தேவையில்லை.

-பகவத் கீதை

“இன்னும் ஒரு வார்த்தை அந்தப் பேய பத்தி சொன்னீங்க… அப்புறம் நான் உங்களைப் பேயாக்கிடுவேன்…” அவனது வாயை இறுக்கமாக மூடிக் கொண்டே அவள் பயந்து கொண்டே கூற, மெத்து மெத்தென்ற அந்தக் கைகளின் மென்மையும்… அவளது வாசனையும் அவனை ஏதேதோ செய்தது. அந்தத் தனிமையையும் இருளையும் கூட அப்போதுதான் உணர்ந்தான்.

சுற்றிலும் இருள் சூழ்ந்த தனிமை.

வெகு அழகாக, பேரழகாக ஒரு பெண்… அவள் பெண் என்பதும், அவள் பேரழகு என்பதும் கூட அப்போதுதான் அவனது கண்களுக்குப் பட்டது.

மனதின் ஓரம் ஏதோ ஒரு புது உணர்வைக் கொடுத்தாலும்… அறிவு இது தவறென்று கூறியது!

மெதுவாக அவளது கையில் தன் கையை வைத்து மென்மையாகப் பிரிக்க, சட்டென்று ஸ்மரணை வந்தவள் அதிர்ந்து கையை விலக்கினாள்.

“ச்சே…” தலையில் கைவைத்து கொண்டு தமிழ்நதி மறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொள்ள, மெல்லிய இளம் புன்னகை அவனது உதட்டில்!

சற்று நேரம் கனமான மௌனம் நிலவ… ஸ்ரீதரனும் எதுவும் பேசாமல் காரை மிதமான வேகத்தில் செலுத்தி கொண்டிருந்தான்.

அவ்வப்போது கைப்பேசியை எடுத்து டவர் கிடைக்கிறதா என்று பார்க்க, மருந்திற்குக் கூட டவர் என்பதே இல்லை.

“இப்படி யாராச்சும் வந்து மாட்டுவாங்களா? உங்களையும் ஒரு டிரைவர்ன்னு நம்பி வந்தேன் பாருங்க… என்னைச் சொல்லணும்…”

தன்னையும் மீறிப் புலம்பியவளை கிண்டலாகப் பார்த்தான்.

“ஏன்… இப்ப புலம்பினா வழி தெரிஞ்சுட போகுதுன்னு ஏதாவது பக்ஷி வந்து சொல்லுச்சா?”

“பட்சி வேற வந்து சொல்லனுமாக்கும்? நானே நொந்து போயிருக்கேன்… கடுப்பை கிளப்பாதீங்க… எனக்கு வர்ற கோபத்துக்கு…” என்று இரண்டு கைகளையும் இறுக்கி வைத்துக் கொண்டு அவனை நோக்கி வந்தவளைப் பார்த்துச் சிரித்தான்.

“தமிழ் வெய்ட்… காரை ஸ்டாப் பண்ணிடறேன். நீங்க நிதானமா என்ன வேணும்னாலும் செய்ங்க… சொல்லாம கொள்ளாம வாயை மூடி என்னை ஷாக்கடிக்க வெச்சு, ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்த மாதிரி இப்ப ஏதாவது செஞ்சீங்கன்னா கண்டிப்பா கார ஏதாவது மரத்து மேல தான் பார்க் பண்ணனும்…” சிரித்துக் கொண்டே கூறியவனை கோபமாகப் பார்த்து,

“உங்களுக்குக் கொஞ்சம் கூடப் பயமே இல்லையா?”

“பயந்து என்ன ஆகப் போகுது? நத்திங்… இப்பத்தான் நாம் நிதானமா இருக்கணும்… எந்த டைட் கார்னரா இருந்தாலும் சமாளிச்சுடலாம்… நாம நிதானமா அனுகினா…” என்று பொறுமையாகக் கூறியவன்,

“வாலாஜால தானே வழிய மாற்றி விட்டாங்க… நாம லெப்ட்ல போறதுக்கு பதிலா ரைட்ல திரும்பிட்டோம்… எனக்குத் தெரிந்த வரைக்கும் இந்தப் பக்கம் பெரும்பாலும் ரிசர்வ்ட் பாரஸ்ட்… டவர் பெரும்பாலும் கிடைக்காது. இன்னும் ஒரு ஒன்னரை மணி நேரம் போனா ஜவ்வாது மலை போகலாம்… அதுவும் இல்லாம இப்ப என்னோட கால்குலேஷன் சரின்னா மொட்டுபாளையம் பக்கம் இருக்கோம்ன்னு நினைக்கறேன்.”

நினைக்கிறேன் நினைக்கிறேன் என்றே அவன் கூற, “ஆமா எல்லாத்தையும் நினைக்கிறேன்னே சொல்லுங்க… கன்பார்ம்ட்டா தெரியுமா தெரியாதா?” கறாராக அவள் கேட்டாள்.

“நான் மட்டும் என்ன இந்தப் பக்கம் வந்திருக்கேனா? நான் தமிழ்நாட்டு பக்கம் வந்தே மூன்று வருஷம் தான் ஆகுது. அதுவும் இந்தப் பக்கம்லாம் வந்ததே இல்லை. உபயம் ஒன்லி கூகிள் மேப்ஸ் தான்…” என்று அவன் சிரிக்க, அவள் வாய்மேல் கை வைத்துக் கொண்டாள்.

“அடப்பாவி… இந்த அழகுல தான் இம்புட்டு சீன காட்டுனீங்களா? அடேய் பார்த்திபா… உனக்கு இருக்குடா மகனே… எத்தனை நாள் வெஞ்ஜென்ஸ்டா உனக்கு… இப்படியொரு காக்டெயில் கிட்ட மாட்டி விட்டுட்டையே…”

சப்தமாக அவள் புலம்ப, “உஷ்… தமிழ்… இதென்ன? மாற்றி மாற்றி இப்படியே புலம்பிகிட்டு இருக்கீங்க? கொஞ்சமாவது மேல்மாடியில் சரக்கு இருக்கா இல்லையா?”

“ம்ம்ம்… ஆமா எனக்குச் சரக்கு இருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணத்தான் போயிட்டு இருக்கோம் பாருங்க…”

“சரி… இப்ப என்னதான் செய்யச் சொல்றீங்க?”

“நான் ஒண்ணுமே செய்யச் சொல்லலை… சுத்தி முத்தி பாருங்க… ஈ காக்கா கூட இல்லை. எனக்குப் பயமா இருக்கு… இந்த ரோடு எங்க போகும்ன்னு கூடத் தெரியாம… எனக்குப் பயமா இருக்காதா?”

“ஆமா ஆமா… உங்களுக்குப் பயமா தான் இருக்கும்… அதான் பார்த்தேனே… பேய்க்குப் பயந்துகிட்டு நீங்க என்னைக் கொலை பண்ண வந்ததை…” அலட்டிக் கொள்ளாமல் அவன் கூறினான்.

“வாட்… நான் உங்களைக் கொலை பண்ண வந்தேனா? ஹவ் டேர்… வாயை மூடினது ஒரு குத்தமாய்யா?” வாய்மேல் கை வைத்து அதிர்ந்து அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“பின்ன… அது எவ்வளவு பெரிய ஷாக் தெரியுமா? சட்டுன்னு என் ஹார்ட்டே நின்று போயிருக்கும்… ஏதோ நான் கொஞ்சம் ஸ்ட்ராங் பாடிங்கறதால தப்பிச்சேன்…” சிரிக்காமல் அவளைக் கலாய்த்து கொண்டே இருந்தவனைப் பார்த்து முறைத்தாள் தமிழ்நதி.

“வேண்டாம்… ரொம்ப என்னைக் கலாட்டா பண்ணிட்டே இருக்கீங்க… கார்ல இருந்து குதிச்சுடுவேன் பார்த்துக்கோங்க…” ஒற்றை விரலை நீட்டி அவனைச் சிறுபிள்ளைத்தனமாக எச்சரிக்க,

“குதிங்க… இந்த ரோடுல ரெண்டு கொள்ளிவாய் பிசாசு வாக்கிங் போறதை இப்பத்தான் பார்த்தேன்… போய் ஜாயின் பண்ணிக்கங்க…” அவளிடம் கலாட்டா தான் செய்கிறான் என்பதைக் கூட அவள் உணரவில்லை. அவ்வளவு பயந்து தான் போயிருந்தாள் தமிழ்!

“வாட்… கொள்ளிவாய் பிசாசா? அது வேறயா? அது எப்படி இருக்கும்?” கிலியடித்த முகத்தோடு அவள் கேட்டாள். அவள் புறம் சுவாரசியமாகத் திரும்பிய ஸ்ரீதரன்.

“ஹய்யோ அது தெரியாதா தமிழ்?” என்று கேட்டான். அவள் தெரியாது என்பதையே தயங்கி தயங்கிப் பயந்த முகத்தோடு தான் தலையாட்டினாள்.

“கொள்ளிவாய் பிசாசுன்னா… அதுக்கு வாய் இவ்வளவு பெருசா இருக்கும்…” கையையும் வாயையும் வைத்து வாயைக் கன்னாபின்னாவெனப் பெரிதாக்கி அவன் பயமுறுத்த… அவள் இறுக்கக் கண்ணை மூடிக்கொண்டாள்.

“வாயில் இருந்து நெருப்பு வந்துட்டே இருக்கும்… அது முன்னாடி வர்ற மனுஷங்களை… அப்படியே தன்கிட்ட இழுத்துட்டு…” என்று சொல்லிக் கண்ணை விரித்து வாயை ஆவெனப் பெரிதாக்கி, “அப்படியே முழுங்கிடும்…” குழந்தையைப் பயமுறுத்துவது போல அவனும் செய்துகாட்ட, அதற்கும் அவள் பயந்து கொண்டு,

“ஆஆஆ ஐயோ… வேண்டாம்…” முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அவள் கத்த… ஸ்ரீதரன் வாய் விட்டுச் சிரித்தான்.

“கடவுளே… இப்படி சிரிக்காதீங்க… பேய் மாதிரியே இருக்கு… எனக்குப் பயமா இருக்கு…” முகத்திலிருந்து கைகளை விலக்காமல் மீண்டும் கத்தியவளின் தொனி அவனை மேலும் சிரிப்பில் ஆழ்த்தியது.

இப்படியொரு பயந்தாங்கொள்ளியா? என்று கேலியாக நினைத்துக் கொண்டான். ஆனால் இது போன்றவர்களை இப்படி கேலி செய்வதுதான் அவனுக்கு அல்வா சாப்பிடுவது போல… விரும்பிச் செய்வான்.

“ஹய்யோ… தமிழ்… ஒரு நிமிஷம் நிமிர்ந்து பாருங்க…” கைகளால் சொடுக்கி அவளை அழைக்க, அவளோ பயந்து கொண்டு முகத்தை மூடியவாறே இருந்தாள். பேய் பயத்தை விட அந்தச் சூழ்நிலையும் அந்தச் சூழ்நிலையில் அவன் சொல்லும் கதைகளும் அவளைப் பீதியில் ஆழ்த்தியிருந்தன.

“ஹேய்… பயந்தாங்கொள்ளி…” என்று கிண்டலாக அழைக்க, ரோஷமாக நிமிர்ந்து பார்த்தாள்.

“ஹலோ யார் பயந்தாங்கொள்ளி?” அதே ரோஷத்தோடு அவள் கேட்டாள்.

“அதை நான் வேற சொல்லனுமா?” குறும்பைக் கைவிடாமல் அவன் கூறினான்.

“நீங்களே என்னைக் கண்டபடி பயமுறுத்திட்டு… இப்ப என்னை வேற பயந்தாங்கொள்ளின்னு சொல்றீங்களா? உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?” முஷ்டியை மடக்கிக் கொண்டு சண்டைக்குப் போகத் தயாரானவளை பார்த்துச் சிரித்தவன்,

“ஆமா… இதற்குப் போய் ஸ்பெஷலா தைரியம் வேணுமாக்கும்? ஒரு பயந்தாங்கொள்ளிய வேற என்ன சொல்ல முடியும்?” மீண்டும் அவளை வம்பிழுத்தவனை… கொலைவெறியாகப் பார்த்தாள்.

அவளைப் பார்க்க அவனுக்கே பாவமாக இருந்தது. ஏகத்துக்கும் பயந்து போயிருந்தாள். போதும் அவளைக் கலாய்த்தது என்று பாவப்பட்டவன்,

“ஹே தமிழ்… இப்படியா பயப்படுவீங்க? ஜஸ்ட் சும்மா உங்களைக் கலாட்டா தான் செய்தேன்… பேயும் இல்ல பிசாசும் இல்ல… எல்லாம் ஹம்பக்… நம்ம மனசுதான் பேயும் பிசாசும்…” என்று புன்னகையோடு அவன் கூற, அவனை முறைத்துப் பார்த்தாள்.

“என்னைப் பார்த்தா எப்படி இருக்கு?” கடுப்பாக அவள் கேட்டாள். அந்த நேரத்தில் அந்தக் கேள்விக்கு அவளைச் சுவாரசியமாகப் பார்வையிடத் தோன்றியது. ஆனாலும் அவளது இந்த அரைவேக்காட்டுத்தனம் அவனை மேலும் அவளை வம்பிழுக்க சொன்னது.

“ச்சே ச்சே… லூசுன்னு எல்லாம் நினைக்கவே இல்லை தமிழ்… நீங்க யாரு… எப்படிப்பட்ட புத்திசாலி…” விஷமப்புன்னகையோடு அவன் கூறியதை கேட்டவளுக்குத் தான் ரத்த அழுத்தம் எகிறிக் கொண்டிருந்தது.

“ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க… வேண்டாம்…”

“சரி சரி… இந்த அளவு பயப்பட கூடாது தமிழ்… அதுவும் பேய் பிசாசுன்னு… அதெல்லாம் மனப்பிராந்தி…” சிறு பிள்ளைக்குச் சொல்வதுபோலப் பொறுப்பாக அவன் கூற, உதட்டைச் சுளித்து கொண்டு திருப்பினாள்.மூக்கெல்லாம் விடைத்து அவளைப் பார்க்கும் போதே வாய் விட்டுச் சிரிக்கத்தான் தோன்றியது.

“என்ன பிராந்தியோ? எனக்குப் பேய்ன்னா கொஞ்சம் பயம் தான்…”

“சரி… பேய்ன்னா பயம்ன்னு சொல்றீங்களே… நேரில் பார்த்து இருக்கீங்களா?” அவளது வழிக்கே வந்து அவன் கேட்டான்.

“இல்லை. ஆனா…” என்று அவள் தயங்கினாள்.

“பார்க்கவே பார்க்காத ஒன்றை பற்றி இவ்வளவு பயமா? பயப்பட வேண்டியது எவ்வளவோ இருக்கும்மா…” எதையோ பார்த்து யோசனையாக நெற்றியில் தேய்த்து விட்டுக் கொண்டு பீடிகையாகக் கூறியவனை குழப்பமாகப் பார்த்தாள்.

“இப்ப என்னதான் சொல்ல வரீங்க?” குரலில் சற்று எரிச்சல் தேங்கியிருந்தது. இந்தளவு கலாய்த்தவனிடம் என்ன நல்லதனம் வேண்டியிருக்கிறது என்று எண்ணிக்கொண்டாள். அவனோ அவளைக் குறும்பாகப் பார்த்துவிட்டு,

“கார்ல டீசல் குறைச்சலா இருக்குனு சொல்ல வரேன்…” வேண்டுமென்றே மீண்டும் அலட்டிகொள்ளாதக் குரலில் ஒரு குண்டைத் தூக்கி போட,

“என்ன?” அவள் அதிர்ந்து பார்த்தாள்.

“கொஞ்சம் நல்ல இடமா பார்த்து வண்டிய நிறுத்தியாகனும்…” என்று நிதானமாகக் கூறினான். வேண்டுமென்றே அவளைச் சற்று நேரம் கலாட்டா செய்யச் சொன்னது மனது. டீசல் குறைவாக இருந்ததுதான் ஆனால் உடனே நிறுத்தியாக வேண்டும் என்றெல்லாம் கட்டாயம் இல்லை. ஆனால் அவளைச் சற்று பயமுறுத்திப் பார்த்தால் என்னவென்று தோன்றியது.

“நிறுத்திட்டு அப்புறம் என்ன பண்றது?” அதிர்ச்சி விலகாமல் அவள் கேட்டாள்.

“தூங்கறதுதான்…” என்று அவன் சிரித்தான்.

“ரொம்ப புத்திசாலித்தனமாப் பேசறதா நினைப்பா?” கடுப்பாக அவள் கேட்டாள்.

“பாஸ்… எப்படியும் ஏதாவது வண்டி வரும் பாஸ்… லிப்ட் கேட்டு டீசல் வாங்கிட்டு வர வேண்டியதுதான்…” மிகவும் இயல்பாகச் சிரிக்காமல் அவன் கூற, அவளுக்கு அழுகையே வரும் போல இருந்தது.

அந்த இடமே இருளை விழுங்கியபடி சற்றும் எந்த நடமாட்டமும் இல்லாமல் இருக்க, கார் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. தலையில் கைவைத்து கொண்டாள். எரிச்சலை மீறிக் கோபம் கொப்பளித்தது.

இவனெல்லாம் என்னதான் டிரைவரோ? அவனைச் சைட்டடித்ததை எல்லாம் மறந்து விட்டாள். அப்போது இருந்த ஒரே உணர்வு அவனது தலையில் கல்லைத் தூக்கி போட்டால் என்ன என்ற உணர்வு மட்டுமே!

அவ்வளவு கோபம் கனன்றது அவளுக்குள்!

“இதைக் கூடப் பார்க்காம எப்படி நீங்க வண்டியை எடுப்பீங்க? உங்க கம்பெனில இதெல்லாம் கவனிக்க மாட்டார்களா? அட்ராஷியஸ்… வெரி மச் பாதடிக்…” விடாமல் பொரிந்தவளை இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு அவளை நிதானமாகப் பார்த்து,

“சாரி தமிழ்… இந்த ட்ராவல் கொஞ்சம் கூட ப்ளான் பண்ணினது இல்ல… ப்ளான் பண்ணியிருந்தா கண்டிப்பா எல்லாமே சரியா இருந்திருக்கும்… பார்த்தியும் கடைசி நிமிஷத்தில் தான் சொன்னான்… சரி போற வழில டீசல் போட்டுக்கலாம்ன்னு கிளம்பிட்டேன்…”

அதுவென்னவோ உண்மைதான். டீசலை செக் செய்யாமல் எடுத்துவந்து விட்டான் தான். அவனது தவறை எந்தக் காரணத்தையும் கூறிக்கொண்டிருக்காமல் ஒப்புக்கொள்ள, அவளுக்குத்தான் என்ன செய்வது என்பதே புரியவில்லை.

“செல்போன்ல சிக்னல் இல்லை. கார்ல டீசல் இல்லை. ஐயோ சொக்கநாதா… இன்னும் என்னதான் சோதனை வைக்கப் போற?”

அவளால் அப்போது புலம்பத்தான் முடிந்தது.

“தமிழ்… கொஞ்ச நேரம் இங்கேயே எங்கயாவது வெய்ட் பண்ணலாம்… கண்டிப்பா ஏதாவது வண்டி வரும்…” இன்னும் சற்று நேரம் அவளைக் கலாய்த்து அலற வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது மனது. சிரிக்காமல் அவன் கூறிக்கொண்டிருக்க அதை உண்மையென்று நம்பிக்கொண்டு,

“விளையாடுறீங்களா? இந்த இடத்தில… அதுவும் தனியா… இதெல்லாம் உங்களுக்கே சரின்னு படுதா? எங்க அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சா என்னை வெட்டி வென்னி அடுப்புல வெச்சுடுவாங்க…” குரலில் பதட்டத்தோடு அவள் கூறினாள். அவன் மௌனமாகச் சாலையைப் பார்த்தான்.

அந்தப் பெண்ணிடம் இந்த மாதிரி வம்பிழுத்துக் கொண்டிருப்பதை மனம் தவறென்று சாடினாலும் ஏதோ ஒரு வகையில் அவனுக்குப் பிடித்திருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தது.

அவன் கூறியதிலும் உண்மை இல்லாமலில்லை. டீசல் குறைவாகத்தான் இருந்தது. வண்டி எங்கு வேண்டுமானாலும் டீசல் இல்லாமல் நின்றுவிட்டால் அது வேறு தலைவலி அல்லவா!

ஒரே ஒரு தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்க அதன் அருகில் காரை நிறுத்தினான்.

“எதாவது பாம்போ யானையோ வந்தா என்ன பண்றது?” சிறிய குரலில் ஹீனமாக அவள் கேட்டாள்.

“உங்களுக்கு அதுங்க பரவால்லை.” அவனும் மிக மெல்லிய குரலில் முணுமுணுத்தாலும் அவளுக்கு ஸ்பஷ்டமாய் கேட்டு விட, முறைத்தாள் அவனை!

“ஆமா உங்களை நம்பி வந்ததுக்கு…” என்று மீண்டும் ஆரம்பிக்க,

“தமிழ்… ப்ளீஸ் ஸ்டாப் இட்… ஒரு டைட் கார்னர்னா அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்கணும்… அதை விட்டுட்டு இப்படி புலம்பிட்டே இருக்கக் கூடாது…” என்று கோபமாகக் கூறியவன். சற்று குரலைத் தழைத்துக் கொண்டு… இருளை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை நோக்கி,

“நான் ஏதாவது உங்ககிட்ட மிஸ்பிஹேவ் பண்ணிடுவேன்னு பயமா?” கீழ்குரலில் அவன் கேட்டான். தமிழ் மேலும் அதிர்ந்து அவனைப் பார்த்தாள். பயத்தில் அவளுடைய நாவண்ணம் ஒட்டிக்கொண்டது.

“அப்படி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை தமிழ்… உங்களைவிட அழகான பொண்ணுங்க எங்க கேரளாவுல இருக்காங்க… அவங்களையே நான் கண்டுகிட்டது இல்லை. இப்ப உங்களையும் கண்டுக்க போறதா இல்லை. அதனால பயப்படாதீங்க…”

உள்ளுக்குள் அவன் குறும்பாகச் சிரித்துக் கொண்டே கூறினாலும் அவன் கூறியது உண்மையே… அவன் யாரையும் கண்டுகொண்டது இல்லை. அவனுடைய பார்வைக்காக ஏங்கி நின்ற பெண்களை எல்லாம் போகிற போக்கில் கடந்து வந்திருக்கிறான். திரும்பிப் பார்க்கமாட்டானா என்று எத்தனையோ பெண்களை எண்ண வைத்திருக்கிறான். ஆனாலும் அவன் அழகை ரசிக்காதவன் கிடையாது. நல்ல ரசிகன் தான் ஆனால் அதற்கும் மேல் போனது கிடையாது.

அவன் கூறியது இனம் புரியா வகையில் அவளுடைய மனதில் பெரும் ஏமாற்றத்தை விதைத்துக் கொண்டிருந்தது. அதைச் சற்றும் உணராமல் அவன் போக்கில் அவன் பேசிக்கொண்டே போக, அவள் வேறு புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அந்த ஏமாற்றம் நிறைந்த முகத்தை எங்கனம் அவனுக்குக் காட்டுவது?

“என்னையும் உங்க ஃப்ரெண்டா நினைச்சுக்கங்க… இந்த நேரத்தை நாம கடந்து தான் ஆக வேண்டும். யாரைக் குற்றம் சொல்லலாம்ன்னு நினைக்காதீங்க… அந்த நேரத்தை உபயோகமா செலவழிக்கலாம்… எப்படி இருந்தாலும் ஏதாவது ஒரு வண்டி வந்தாலோ விடிஞ்சுதுன்னாலோ பிரச்சனை முடிந்தது. அதுக்குள்ளே இவ்வளவு புலம்பல் எதுக்கு…?”

உண்மையிலேயே டீசல் குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் எங்கு டீசல் கிடைக்கும் என்பதை அறியாமல் அவன் வண்டியை எடுக்கத் தயாராக இல்லை. அவளைக் கலாய்க்கத்தான் என்றாலும் உண்மையும் அதுதான்.

தன்னுடைய செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாறாக அவன் நிதானப்போக்கை கடைப்பிடித்துக் கொண்டிருப்பதை மனம் அவளையும் அறியாமல் குறித்து கொண்டிருந்தது தான். அந்த நேரத்தில் பதட்டப்படாமல் நிதானமாக அவன் செயல்படும் விதம் அவளை ஈர்த்தது. பயணம் ஆரம்பித்தது முதலே அதைக் கண்டுகொண்டு தான் இருந்தாள்.

ஆனாலும் அவன் எப்படி தன்னை கண்டுகொள்ளவே போவதில்லை என்று கூறலாம் என்று சிணுங்கியது.

‘நான் அழகா இல்லையா? இல்லை உன் கண்ணுக்கு நான் அழகா தெரியலையா? ’

படித்தபோது கல்லூரியிலும் வேலை பார்க்குமிடத்திலும் தன்னை நோக்கி நீளும் ஆர்வ பார்வைகளை நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு ஏனோ தான் அழகாக இருப்பதாகத்தான் தோன்றியிருந்தது. ஆனால் இவன் கூறுவதை வைத்துப் பார்த்தால் தான் அழகே இல்லையோ?

துக்கம் தொண்டையை அடைத்தது.

அவளைக் கண்டுகொள்ள மாட்டேன் என்று அவன் கூறியது ஒன்றே அவளது துக்கத்துக்கான காரணமாக இருந்தது.

“ஒரு நிமிஷம் லைட்டை போடுங்க…” ஸ்ரீதரனிடம் கிட்டத்தட்ட உத்தரவிடுவது போலக் கூறினாள். ஏனென்று புரியாமல் அவன் லைட்டை ஆன் செய்தான்.

அவசரமாகச் கைப்பேசியை எடுத்துச் சற்று தள்ளி வைத்து நாலைந்து செல்பிக்களை சுட்டாள். விதவிதமான கோணத்தில்!

“தமிழ்… என்ன செய்றீங்க?” அவன் புரியாமல் கேட்டான்.

“ப்ச்… ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க…” கடமையே கண்ணாக அவள் செல்பிக்களை சுட்டு கொண்டிருக்க,

“உங்களுக்கு எல்லாம் இந்த நேரத்தில் கூடச் செல்பி எடுக்க எப்படித்தான் மூடு வருதோ? எண்டே அம்மே…” அவன் ஒரு ஓரத்தில் சலித்து கொண்டிருக்க, தமிழ்நதியோ சுட்ட செல்பிக்களை படுதீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

முகத்தில் சிந்தனைக்கோடுகள்!

“ஓகே தான். இதில் நல்லாத்தான் இருக்கேன்…” ஒவ்வொரு போட்டோவாகப் பார்த்துத் தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தவளை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

“அம்மே பகவதி… எந்தா சம்ஷயம்? பறா…” சற்று பொறுமை பறக்க ஆரம்பித்து இருந்தது அவனுக்கு.

“ஹலோ… நான் அழகாவே இல்லைன்னு சொன்னீங்கல்ல… அதான் நான் செக் பண்ணிட்டு இருக்கேன்…” உதட்டைச் சுளித்து அவள் கூற, அதுவரை புரியாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தவனுக்குள் வெகுதீவிர சுவாரசியம்.

“எப்படி செக் பண்றீங்களாம்?” சுவாரசியமாகவே கேள்வி கேட்டவனை முறைத்தவள்.

“ம்ம்ம்… செல்பி எடுத்தா தெரிஞ்சுட்டு போகுது…” கழுத்தை வெட்டிக் கொண்டு அவள் கூற, வாய்விட்டுச் சிரித்தான் அவன்.

“கழுதைக் கூடத்தான் தானே செல்பி எடுத்துகிட்டா அழகா இருக்கும் தமிழ்…” மீண்டும் அவளைக் கலாய்க்கும் மோடை ஆன் செய்துவிட்டவன் நிமிர்ந்து அமர்ந்து கொண்டான். வாய் கொள்ளா சிரிப்போடு!

“வாட்… நான் கழுதையா?” அவனைக் கொலைவெறியாகப் பார்த்துக் கேட்டவளை,

“நிங்களுக்கு ஸ்வயம் கழுதை என்னு சொல்ல முடியுமா? அப்புறம் கழுதை எல்லாம் என்னைக் கெரோ பண்ண ஆரம்பிச்சுடுங்க…” சிரிப்பை அடக்கிக் கொள்ள முயன்று கொண்டே அவன் கூறினாலும்… அவனால் அடக்கவே முடியவில்லை. அவளது லீலைகளைப் பார்த்தவன் வெகுநாட்களுக்குப் பிறகு மனம் விட்டுச் சிரித்து கொண்டிருந்தான். அத்தனை கவலைகளையும் மறந்து!

அவளுக்கு வந்த கடுப்பில் மற்ற நேரமாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களின் தலை உடைந்து இருக்கும்… ஆனால் அவனைத் தற்போது அந்த அளவு பகைத்து கொள்ள முடியாதே.

அடக்கி வாசித்தாள்.

“வேண்டாம்… என்னை ரொம்ப ரேக்கிகிட்டே இருக்கீங்க… நான் அழகுதான்…” தனது செல்பியை பார்த்தபடியே கூறினாள்.

“அதை நாங்க சொல்லணும் தமிழ்… உங்க கண்ணுக்கு அழகா தெரியறது எல்லாம் அழகு இல்ல… எங்க கண்ணுக்குத் தெரியனும்…” விடாமல் அவளைக் கலாட்டா செய்ய,

அவன் முன்பு நிமிர்ந்து அமர்ந்தாள்.

“சரி… சொல்லுங்க… வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு…” என்றவள், சற்று நிறுத்தி, “நான் அழகா இருக்கேனா இல்லையா?”

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 8

அதிகாரம் தான் ஒருவரின் இருப்பை உறுதி செய்கிறது! அதிகாரம் தான் ஒருவரின் அடையாளத்தை தீர்மானிக்கிறது! அதிகாரம் தான் எதிர்ப்பவர்களை நசுக்கவும் செய்கிறது! அதிகாரம் தான் பிம்பங்களை கட்டமைக்கிறது! இயல்பாக அவள் கேட்டாள். அவனுக்கு ஒரு நிமிடம் மூச்சடைத்தது! கலாட்டா செய்து கொண்டிருந்த…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳😍😍😍😍😍😍😍😍😍😍😉😀😀😃😃😃😃😄😄😄😁😁😁😆😆😆😅😅😅😘

உங்கள் கருத்தைப் பகிருங்கள்