arrow_back
நி(ச)ப்தமே காதலாய்… நி(ச)ப்தமே காதலாய் – 1
நி(ச)ப்தமே காதலாய்… chevron_right பகுதி 2 / 2

நி(ச)ப்தமே காதலாய் – 1

star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

நி(ச)ப்தமே காதலாய்…

 

அத்தியாயம் – 1

 

அதிகாலை நேரம் வானில் வைகறை வெளிச்சம் பரவியது. நிலவு அழகாக சுடரொளி வீசிட, மேகங்கள் அங்குமிங்கும் தவழ்ந்து சென்றது. நட்சத்திர தாரகைகள் அழகாக கண்சிமிட்டி மறைய துவங்கிய நேரத்தில், படுக்கை அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் காதில், “கிர்ர்ர்ர்” என்று சத்தம் எழுப்பிட, அதில் பதறியடித்து எழுந்து அமர்ந்தாள் அனுராதா. 

தன்னை எழுப்பிய அலாரத்தின் தலையில் தட்டி அதன் சத்தத்தை நிறுத்துவதற்குள், “என்னைக்குதான் இந்த அலாரம் இல்லாமல் எழுந்திரிக்க பழக போறீயோ” என்ற கணவனின்  வாக்கியம் கேட்டதும், ‘காலை சுப்பிரபாதம் தொடங்கிவிட்டது’ மனதினுள் நினைத்தபடி படுக்கையில் இருந்து எழுந்து சென்றாள்.

இரவில் கலைந்த கூந்தலை கொண்டைப்  போட்டுகொண்டு, குளியலறைக்குள் சென்றவள் காலைக் கடனை முடித்துக்கொண்டு வெளியே வரும்போது பொழுது மெல்ல புலர தொடங்கியது. தன்னுடைய சமையலறையில் இருந்த வானொலியை ஒலிக்கவிட,

“சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணி யாட” என்ற பாடல் ஒலிக்க, வாசல் கூட்டித் தெளித்து கோலம் போட்டு நிமிர்ந்தாள். 

அடுத்ததாக பால்காரர் கொண்டு வந்து பாலை  ஊத்திவிட்டு செல்ல, அதை எடுத்துக்கொண்டு  சமையலறைக்கு சென்றாள். முதல் வேலையாக தேநீர் போட்டு குடித்துவிட்டு, காலை சமையலுக்கு இட்லியும் சாம்பாரும் விரைந்து  செய்து முடித்தாள். 

அப்போதுதான் மெல்ல உறக்கம் களைந்து எழுந்து வந்த கிருஷ்ணா சமையலறைக்குள் ஒலித்த வானொலி சத்தம் எரிச்சலைக் கிளப்பிவிட, “காலையில் எழுந்ததும், இதை எதுக்குப் போடுற… இதைக் கேட்காமல் உன்னால் இருக்கவே முடியாதா?!” என்ற கேள்விக்கு அவளிடம் எந்தவொரு பதிலும் வராமல் போகவே, அவன் நிமிர்ந்து மனைவியின் முகம் பார்த்தான். 

எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் தன் வேலையில் கவனமாக இருந்தவளைக் கண்டு, ‘ ஜடம்!’ மனதினுள் திட்டிவிட்டு, அங்கிருந்து செல்ல நினைத்து திரும்பினான்.

அதற்குள் காஃபியைப் போட்டு அவளின் கையில் கொடுத்தவளிடம் வேறு எதுவும் பேசாமல் ஹாலில் சென்று அமர்ந்து செல்லை நொண்டியபடி காஃபி அருந்தும் கணவனைக் கண்டு, ‘இந்த மனுஷனுக்கு கழுத்தை நீட்டிட்டு…  அம்மாடியோ நான் படும் பாடு இருக்கிறதே’ என்று மனதினுள் நினைத்தபடி மீண்டும் சமையலைச் செய்ய துவங்கினாள்.

அவளிடம் பேசுவதை மறந்த கிருஷ்ணா காலையில் செல்போனைக் கையில் வைத்துகொண்டு சிரிப்பதைக் கண்டவுடன், ‘இவரெல்லாம் இந்த ஜென்மத்தில் திருத்த முடியாது. இந்த ஒற்றை செல்போனை கண்டு பிடிச்சவனால் வந்த பிரச்சனைதான். காலைநேர அலாரத்தில்  தொடங்கி, கடிகாரம், காலேண்டர், கால்குலேட்டர் இப்படி அனைத்தின் வேலையையும் இதே செய்தால், மனுஷனுக்கு வாழ்க்கையின் மீது எப்படி பிடிப்பு வரும்’ என்று மனதில் எண்ணம் ஓடியது.

அதே சமயம் வீட்டில் நிலவிய அமைதி அவளின் எரிச்சலுக்கு தூபம் போட, ‘ஆரம்பத்தில் பாடல் கேட்கும் பழக்கமாவது பரவலாக இருந்தது, இப்போ அது முப்பதே செக்கென்ட் ரீல்ஸ் பார்ப்பதில், நம்ம நேரம் முழுவதையும் செல்லுக்கே செலவிடும் நிலையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. மனுஷன் பொருட்களை இயக்கிய காலம் போய், மனிதனை இயந்திரங்கள் இயக்கிட்டு இருக்கு’ என்று வருத்தத்துடன் நினைக்கும் போதே, ‘டங்’ என்ற சத்தத்தில் அவளின் கவனம் கலைந்தது.

“இப்படி மரம் மாதிரி நின்று என்ன கனவு கண்டுட்டு இருக்கிற… சீக்கிரம் சமையலை முடிக்கும் வழியைப் பாரு” என்றவன் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று மறைய, அவளுக்கு  சுர்ரென்று கோபம் தலைக்கேறியது. ஆனால் அதை வெளிப்படையாக காட்ட முடியாமல் அவளை ஏதோ ஒன்று தடுத்தது. 

தன் தலைக்கு ஏறிய சூட்டைக் குறைப்பதற்காக மீண்டும் வானொலியின் காதைப் பிடித்து திருக, 

சல சல சல நதிகள் தொடங்கி…
நெடு நெடு நெடு மலைகள் வரையில்…
நான் போட்ட கோட்டை தாண்ட கூடாதே…

சிறு சிறு சிறு சிறுவன் தொடங்கி…
கிடு கிடு கிடு கிழவன் வரையில்…
நான் வைத்த சட்டம் மீரக் கூடாதே…” சாதனா சர்கத்தின் குரலின் இனிமையில் தன்னைத் தொலைத்தவள், சமைத்த உணவை எடுத்து டைனிங் டேபிளில் வைத்தாள்.

அவளின் நெற்றியில் பூத்த வியர்வையை சேலை முந்தானையில் துடைத்துவிட்டு படுக்கையறைக்கு சென்றவள், அலங்கோலமாய் கிடந்த  படுக்கையை சரிசெய்துவிட்டு ஓய்வாக அமரும்போது, குளித்துவிட்டு வியர்வை சொட்ட  வெளியே வந்த கிருஷ்ணா, “நான் ஆபீஸ் கிளம்பறேன்னு தெரியுது இல்ல, என்னோட உடையை எடுத்து வைத்தால் என்ன குறைஞ்சா போயிடுவே” என்று அவளிடம் எரிந்து விழுந்தான்.

அதுவரை பொறுமையை இழுத்துப் பிடித்தவள், “ஏன் உங்க முதல் மனைவியிடம் போய் சொல்லுங்க, அவ எடுத்து வைப்பா…” பட்டென்று பதில் சொல்லிவிட்டு, அவள் அங்கிருந்து வெளியே சென்றாள்.

அவள் சொன்ன வாக்கியம் அவனின் கோபத்தைக் கிளறிவிட, “என்னோட செல்போன் உனக்கு முதல் மனைவியா?! இவளுக்கு இருக்கும் கொழுப்பு இந்த உலகத்தில் வேற யாருக்கும் இருக்காது, காலையில் பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்து என்ன செய்யறது, வார்த்தை ஒவ்வொன்றும் எரிச்சலைத்தான் தருது” என்று புலம்பியவன், உடையை மாற்றிக்கொண்டு வேகமாக டைனிங் டேபிளை நோக்கி நடந்தான் கிருஷ்ணா.

அவள் ஆவிபறக்கும் இட்லியும், தேங்காய் சட்னியும், சாம்பாரும் வைத்து உணவைப் பரிமாற்ற, அதன் சுவையை ரசிக்க மனமின்றி செல்போனை கையில் எடுத்த கணவனைக் கண்டு அவள் உள்ளமெங்கும் வலி பரவியது. ஆனால் தன்னுடைய எதிர்ப்பு எதுவும் அவனை பாதிக்கப்  போவதில்லை என்பதை அவனோடு இணைந்து வாழ்ந்த இந்த பத்து ஆண்டுகளில் நன்கு அறிந்திருந்தாள் அனுராதா.

எனவே அவனுக்கு உணவைப் பரிமாறி முடித்ததும், தனக்கும் ஒரு தட்டை எடுத்து வைத்து சாப்பிட அமர்ந்தாள். அவளை ஏறயிறங்க ஒரு பார்வை பார்த்த கிருஷ்ணா, “எனக்கு லஞ்ச் எடுத்து வைக்கவில்லையா?!” என்று அவளிடம் கேட்க, அவளோ அருகே இருந்த டிப்பனை அவனை நோக்கி நகர்த்தி வைத்தாள்.

“அதை வாயைத் திறந்து சொன்னால் என்ன முத்தா உதிர்ந்து போயிடும்” என்று அவளிடம் காரணமின்றி எரிந்து விழுந்தான். 

சட்டென்று நிமிர்ந்து கணவனை நோக்கியவள், ‘ஆமா வாய்நிறைய கொற்கை முத்துதான் இருக்கிறது, உங்களுக்கு  ஏதாவது கடன் தேவை இருந்தால் சொல்லுங்க, உடனே எடுத்து தர்றேன்’ என்றவள் வாய்வரை வந்த வாக்கியத்தை இட்லியை விழுங்கும் சாக்கில் விழுங்கி முடித்தாள்.

அவளின் பார்வையை வைத்தே மனதைப் படித்தவன், “நீயெல்லாம் மனுஷ பிறவியே இல்ல” என்றவன் கைகழுவிவிட்டு எழுந்து செல்ல, ‘அதை இந்த தெய்வ பிறவி சொல்லுது! கலிகாலம்’ என்று மனதினுள் நினைத்தாள்.

அதே கடுப்புடன் லஞ்ச் பாக்சை எடுத்துகொண்டு, ஆணியில் மாட்டியிருந்த பைக் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேற, அதுவரை மனதை அழுத்திய பாரம் மெல்ல குறைய, அது அவளிடமிருந்து பெருமூச்சாக வெளிப்பட்டது. அப்போது அறையில் நிலவிய அமைதிக்கு நடுவே தென்றலில் மிதந்து வந்த கானம் மனதிற்கு நிறைவைக் கொடுக்க, அவளின் இதழ்களில் புன்னகை மெல்ல அரும்பியது.

அப்போது அவளுக்கு புத்துயிர் தரும் விதமாக, “அம்மா” என்ற அழைப்புடன் ஓடிவந்த மகனைக் கண்டவுடன், அவளின் காலைப்பொழுதே இனிமையாக மாறியது. 

கிட்டத்தட்ட ஒன்பது வயதுடைய சிறுவன் கையில் பேக்குடன் வீட்டினுள் நுழைவதைக் கண்டவளின் முகம் பூவாய் மலர்ந்திட, “அதிதேவ்… என்னடா நீ மட்டும் தனியாகவா வந்தே!” என்று கேட்ட தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்ட மகனிடம் விசாரித்தாள்.

அவளின் கன்னத்தில் முத்தமிட்டு விலகிய அதிதேவ், “இல்லம்மா பாட்டியுடன் தான் வந்தேன்” என்று சொல்லும் போதே வைதேகி வீட்டினுள் நுழைந்த தாயைக் கண்டவுடன், “வாம்மா” என்றாள் அனுராதா.

அவர் வீட்டிற்கு வரும் வழியில் முகம் முழுவதும் கோபத்தில் சென்ற மருமகனின் முகம் மனக்கண்ணில் தோன்றி மறைய, “உன்னோட வரவேற்பு ஒருபக்கம் இருக்கட்டும், காலையிலேயே மாப்பிள்ளை கோபமாக போறமாதிரி இருக்கே…” என்று மகளிடம் விசாரித்தார்.

தாயின் கேள்வியில் தன்னையும் அறியாமல்  சிரித்த மகளோ, “அவரோட முதல் மனைவியை திட்டிய கோபத்தில் இருக்கிறாரு, வேற ஒன்னும் இல்லமா…” என்றவள் கொடுத்த விளக்கத்தில், அவள் யாரை சொல்கிறாள் என்ற விஷயம் புரிந்து வாய்விட்டு சிரித்தார்.

“ஆனாலும் உனக்கு நெஞ்சழுத்தம் ஜாஸ்திதான். நீயே அமைதியாக இருக்கும் மாப்பிள்ளையின் மனநிலையைக் கெடுத்துவிடுவாய் போல…” என்றார் கிண்டலாகவே.

“உன் மாப்பிள்ளையும், அந்த விஷ்வாமித்திரரும் ஒரே ரகம். அவங்க கவனத்தை நம்ம பக்கம் திருப்புவதெல்லாம் நடக்காத காரியம்” என்றாள் சலிப்புடன்.

அதற்குள் தாயின் அருகே அமர்ந்த மகனோ, “அம்மா எனக்கு ஒரு தோசை” என்று சொல்ல, மற்றதை மறந்துவிட்டு தோசை ஊற்றி எடுத்து வருவதற்காக சென்ற மகளைப் பின்தொடர்ந்தது வைதேகியின் பார்வை.  

மெல்ல எழுந்து மகளின் அருகே சென்ற வைதேகி, “என்னடா  வாழ்க்கை ரொம்ப வெறுப்பாக இருக்கிறதா?!” என்று அக்கறையுடன்  விசாரிக்க, கல்லில் தோசை ஊற்றிவிட்டு தாயின் பக்கம் திரும்பினாள் அனுராதா.

“இதுக்குப் பெயர் வெறுப்பு இல்லம்மா… இந்த வீட்டில் எனக்கு எந்த குறையும் இல்லம்மா. உன் மாப்பிள்ளை தேவைக்கு அதிகமாகவே சம்பாரிக்கிறார், அதனால் வசதிக்கு ஒரு குறையும் இல்ல, ஆனால் நான் தேடுவது சந்தோசம்! அது இன்னும் எனக்கு கிடைக்கவில்லையே… அன்பாய் ஒரு அணைப்பு, ஆறுதலாய் சில வார்த்தைகள், அவருடன் செலவிடும் சில மணிநேரம் எனக்கென்று வேணும்னு நினைக்கிறேன், கிருஷ்ணா அவனோட தேவையைப் பற்றிகூட அவரு யோசிக்கிறது இல்லம்மா, நாளைக்கு இவரைப்  பார்த்து வளரும் மகனும், அப்படி ஆகிடுவானோங்கிற பயத்தில் தான், நான் அவனை உன்னோட வீட்டில் விட்டு இருக்கிறேன்” என்ற வார்த்தைகளில் இருந்த வலியை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.

அந்த வீட்டைச்சுற்றி அவளின் பார்வை வலம் வர, “இப்போதைக்கு இது ஒரு கட்டிடம் தான், இதுக்கு உயிர் இல்லம்மா! அவருக்கு எப்போது என் ஆழ்மனத்தின் காதலும், தேடலும் புரியுதோ, நம்ம குடும்பத்திற்காக நேரம் செலவிடணும்னு தோணுதோ அன்றுதான் இந்த நிலை மாறும்” என்று அவள் சொல்ல, வைதேகி அவளை அனைத்து ஆறுதல்படுத்தினார்.

தன்னுடைய விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளிடம், “இன்னைக்கு பாட்டு கிளாஸ் எடுக்க போகல…” என்றவர் அக்கறையுடன் விசாரிக்க, அவளின் கண்முன்னே அந்த சில்லி வண்டுகளின் முகங்கள் தோன்றி மறைந்தது.

“இன்னைக்கு சனிக்கிழமை பாவம் பிள்ளைகளுக்கு  டியூசன் இருக்கும், அதனால் சாயங்காலம் வரச் சொன்னேன்” என்றவளின் முகம் மலர்வதைக் கண்டு, வைதேகியின் மனமும் நிம்மதியடைந்தது. 

அவள் தோசை ஊற்றி எடுத்து வந்து மகனுக்கு பாசத்துடன் ஊட்டிவிட, “நான் அப்பாவிடம் மார்க் சீட்டில் கையெழுத்து வாங்க வந்தேன்மா, ஆனால் அதுக்குள் அப்பா வேலைக்கு போயிட்டாரு” என்று கவலையுடன் சொன்ன மகனின் கையில் இருந்த மார்க் சீட்டை வாங்கிப் பார்த்தாள்.

கிட்டத்தட்ட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு பத்து மதிப்பெண்கள் மட்டுமே குறைவாக வாங்கியிருந்த மகனை வியப்புடன்  நோக்கிய அனுராதா, “சூப்பர் அதி! ரொம்ப நல்ல மார்க்  எடுத்திருக்கிற” என்று  மகனை மனம் திறந்து பாராட்டியவள் அதில் கையெழுத்து போட்டு நீட்டினாள். அதை வாங்கி பேக்கிற்குள் வைத்தவன் அன்னை ஊட்டிய  உணவை உண்டு முடித்துவிட்டு, தன்னுடைய பாடப்புத்தகங்களை எடுத்து எழுத தொடங்கினான்.

அவனருகே அமர்ந்த அனுராதா சிரித்துப் பேசியபடி மகனுக்கு பாடங்களை முடிக்க உதவி செய்ய, வைதேகி இருவருக்கும் பிடித்த உருளைக் கிழங்கு சிப்ஸ் போட்டு எடுத்து வந்து கொடுத்தாள். இப்படியே இனிமையாக பொழுது கழிந்திட, மாலை குளித்து உடைமாற்றி தயாரானாள் அனுராதா.

மாலை சூரியன் மேற்கு நோக்கி பயணிக்க, அவளின் இல்லம் தேடி வந்தனர் ஐந்து வயதில் தொடங்கி, பன்னிரண்டு வயதுடைய மலைளைச் செல்வங்கள். அவர்களுக்கு இசையைக் கற்பிக்க, தன்னுடைய ஆர்மோனியம் பெட்டியை எடுத்து வந்து நாற்காலியில் வைத்தவள், அவர்களுக்கு இசையை சொல்லித் தர துவங்கினாள்.

அதை நின்று வேடிக்கை பார்த்த அதிதேவ் விழிகள் சந்தோசம் அதிகரிக்க, “அதிதேவ் வா! வீட்டுக்குப் போகலாம்” என்றபாட்டியின் அழைப்பில் தன்னிலைக்கு மீண்டான். அதன்பிறகு தாயிடம் விடைப்பெற்று அவன் அங்கிருந்து கிளம்பிவிட, பாட்டு கிளாசை முடித்துக்கொண்டு மழலைகளும் வீடு திரும்பினர்.

கிருஷ்ணா – அனுராதா திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் சென்ற நிலையிலும், அவர்களின் வாழ்க்கை என்ற ஓடம் ஒருவிதமான எதிர்பார்ப்பு மற்றும் எரிச்சலுக்கு நடுவே சுழலும் சக்கரம்போலவே சுழன்றது. அவர்களின் வாழ்க்கையில் வலம் சேர்க்க  பிறந்தவன் அதிதேவ்.

திருச்சியில் இருக்கும் சில முக்கியமான நிறுவனங்களின் ஆடிட்டர் கிருஷ்ணா தான். அவனுக்கு வேலை என்பது பிடித்தமான விஷயம், அதில் எந்தவிதமான தவறு நடந்தாலும், அதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. பணிபுரிபவர்களை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள காட்டிய கடுமை மெல்ல அவனது இயல்பான குணத்தையே மாற்றிவிட்டது.

அனுராதா ஒரு பள்ளிகூடத்தில் பாட்டு டீச்சராக பணிபுரிகிறாள், இவளின் உலகம் இசையால் நிறைந்தது. அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவளின் பாடலும், மழலையின் பாசம் மிகுந்த  முகங்கள் தான், அவளின் சந்தோசமாகவே இருந்தது.

இப்படி  இருவேறுப்பட்ட குணங்கள் கொண்ட இவர்கள் திருமணம் என்ற சங்கலியால் பிணைக்கப்பட்டிருந்த போதும், அவர்களின் மனம்  வட மற்றும் தென் துருவமாக  பிரிந்து இருந்தது. வாழ்வின் மாற்றத்தை எதிர்பார்த்து அனுராதாவும், அவளின் எதிர்பார்ப்பை உணராமல் கிருஷ்ணாவும் வலம் வருகின்றனர். இவர்களின் வாழ்க்கையில் மாற்றம் நிகழுமா?!  

உங்கள் கருத்தைப் பகிருங்கள்