அத்தியாயம் 10
காட்டிற்குச் சென்று வந்த அனைவரும் நீரை தெளித்துக் கொண்டு விளக்கைப் பார்க்க உள்ளே போகக் கிட்டத்தட்ட பத்து பேர் கையில் பத்திரங்களுடன் உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்து உணர்வே இல்லாமல் வெறித்துக் கொண்டிருந்த சத்யாவின் முன் பத்திரங்களைத் தூக்கி போட்டனர்! அவர்கள் அனைவரின் முகமும் ஈரம் என்பதையே அறியாதது போல இருக்க… சத்யா நிமிர்ந்து பார்த்தான்!
அவர்களுள் கொஞ்சம் பெரியவர்போலத் தோற்றமளித்தவர் பேச ஆரம்பித்தார்!
“தம்பி… இதே நேரத்துல இந்தப் பிரச்சனைய கொண்டு வர்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா எங்களுக்கு வேற வழி தெரியல…”
என்னவென்பதை போல அவன் பார்க்க… சுற்றி இருந்த அனைவரும் அமைதியாகி அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தனர்!
“இதெல்லாம் உங்க அப்பா வாங்கின கடனுக்கு அவர் எழுதிக் கொடுத்த பான்ட் பத்திரம்…”
சத்யனின் உறவுக்கார பெரியவர் ஒருவர், “ஏன்யா இதுதான் உங்களுக்கு நேரமா? தம்பியே ரெண்டு பேரையும் ஒரு சேர பறிகொடுத்துட்டு உட்கார்ந்து இருக்கு. இந்த நேரத்துல கடன் பத்திரம்ன்னு தூக்கிட்டு வர்றீங்களே. உங்க மனசுல கொஞ்சம் கூட ஈரமே இல்லையா?” நியாயத்தை அவர் கேட்க, அனைவர் மத்தியிலும் சலசலப்பு!
வந்தவர்கள் மத்தியில் கடுமை பரவ ஆரம்பித்தது!
“ஏங்க இப்போ விட்டுட்டா நாங்க எப்போ கடனைக் கேக்கறது? தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கச் சொல்றீங்களா? கொடுத்த கடனை நாங்க வசூல் பண்ணலைன்னா எங்க பிள்ளை குட்டியோட நாங்கதான் தெருவில நிற்கணும். இல்லைன்னா கயித்துல தான் தொங்கணும்…” அவர்களும் எகிற ஆரம்பிக்க,
“ஏன்யா? ஏன் இப்படி எல்லாம் பேசுற? துக்கம் நடந்த வீடு. இப்படி நடக்கும்ன்னு எதிர்பார்க்கல. தம்பி என்ன உங்களை ஏமாத்திடவா போறாரு? பொறுப்பான பிள்ளை தான்யா. நம்பி போங்க. உங்களுக்கு அவர் பைசல் பண்ணிடுவாரு.” இன்னொரு பெரியவர் சத்யாவுக்காகப் பேச,
“அப்படீன்னா ஜாமீன் நீங்கக் கொடுக்கறீங்களா? நாங்க போய்டறோம்…” அவர்கள் இப்படிக் கேட்கவும் நியாயம் கேட்க வந்தவர்கள்பின் வாங்கினர்!
“ஏங்க நியாயத்தைக் கேட்டா ஜாமீன் போடச் சொல்றீங்களே? இது உங்களுக்கே நியாயமா?” பரிதாபமாக இன்னொருவர் கேட்டார்!
“தெரியுதுல்ல. அப்போ மூடிட்டு உட்காரு. எங்க கடனை நாங்க வசூல் செஞ்சுக்கறோம்.” இன்னொருவர் மிகக் கடுப்பாக வார்த்தைகளைவிட அங்கே வெப்பம் சூழ்ந்தது!
“என்னய்யா வார்த்தை பேசுற? கடனைக் கேக்க வந்தா அதை மட்டும் கேளு. என்ன பேசுறவங்களை எல்லாம் மூடு கீடுன்னு. தொலைச்சு போடுவேன் தொலைச்சு.” சங்கரலிங்கம் எகிற பதிலுக்கு அவர்கள் பக்கத்தில் எகிற கைகலப்பு உருவாகும் போலத் தோன்ற அதுவரை மெளனமாக அமர்ந்து இருந்தவன் வாய்த் திறந்தான். கண்களை இறுக மூடித் திறந்து விட்டு, மூச்சை இழுத்துக் கொண்டு,
“நிறுந்துங்க எல்லாரும்…”
கூட்டம் அமைதியானது!
அமிர்தாவை பார்வையால் அழைத்தான் அருகில்!
“அம்மு… அப்பா கடன் வாங்கி இருந்தாங்களா? உனக்கு எதாச்சும் தெரியுமா?” யாரும் அறியாதபடி அவளிடம் கேட்க அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் அமிர்தா!
“ம்ம்ம்… ஆமா சத்தி. மாமா வாங்கி இருந்தாங்க… அதோட லீகல் ப்ரோசீஜர் எல்லாம் நான் தானே பார்ப்பேன்…” என்று கூறியவளை வித்தியாசமாகப் பார்த்தான். ஒரு வார்த்தையாவது அப்பா சொல்லி இருக்கலாமே என்று மனதில் தோன்ற அதை உடனே அழித்தான். இறந்து விட்டவரை இம்மியளவு கூடத் தவறாக நினைக்கவும் மனம் அவனுக்கு ஒப்பவில்லை! கடன் கொடுத்தவர்கள் அனைவரையும் நோக்கி,
“எவ்வளவு கடன்னாலும் நான் திருப்பித் தந்துடுவேன். என்னை நம்பினா நீங்க இப்போ போகலாம். நம்பலைன்னா பத்திரத்தைக் கொடுங்க. உங்க கடன் அமௌன்ட் சொல்லுங்க இப்போவே அதுக்குத் தகுந்த இடமோ சொத்தோ எழுதிக் கொடுத்துடறேன்…”
தெளிவாகச் சத்யா சொல்லி முடிக்கவும் சில நொடிகள் வெகு அமைதியாக இருந்தனர். அமைதியை கிழித்துக் கொண்டு சீதாராமன் பேச ஆரம்பித்தார். சுபர்ணாவின் தந்தை!
“நீங்க எல்லாரும் ஏன் இந்த அளவு பேசறீங்கன்னு புரியல… இப்படி எதிர்பாரா விதமா நடந்துடுச்சு. ஆனா சத்யப்ரகாஷ் என்னோட மருமகனாகப் போகிறவர். அதனால யாருக்கும் எந்தக் கடனும் நிற்காது. அதுக்கு நான் கேரன்ட்டி. இப்போ எல்லாரும் போகலாம்…”
அமிர்தா, விஷ்வா, நிகில் ஆகியோரின் முகங்களில் குழப்பம் தோன்ற கூட்டத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சீதாராமனின் பலம் அறியாதவர்கள் அல்லரே! அவரே பொறுப்பேற்றுக் கொள்ளும்போது நமக்கென்ன? என்ற நிம்மதி உணர்வு தோன்ற கலைய ஆரம்பித்து இருந்தனர்!
“இல்ல… வேணாம்…” நிர்தாட்சண்யமாகக் குரலை மிகவும் உயர்த்தி,
சொன்னது சத்யன்!
“ஏன் பிரகாஷ்? என்ன வேணாம்ன்னு சொல்றீங்க?” இயல்பாகக் கேட்டார் சீதாராமன்! குள்ளநரிகள் உணர்ச்சிவசப்படுவதில்லை!
“நீங்க என் கடனுக்குப் பொறுப்பெடுத்துக்க வேணாம்ன்னு சொல்றேன்…”
“பட் எதுக்காக? ஏன்? நான் பொறுப்பெடுக்காம யார் எடுக்கணும் பிரகாஷ்? என் பொண்ணுக்காக இதை நான் செய்றதா ராஜசேகருக்கு முன்னமே வாக்கு கொடுத்திருக்கேன்…” குரலை உயர்த்தாமல் அவனிடம் வாதாடினார்!
“அதனால தான் வேணாம்ன்னு சொல்றேன்…” கல்லை ஒத்திருந்தது அவனது முகம்! அமிர்தா அவசரமாக அவனைத் தடுக்க வர அவளை ஒரே பார்வையில் அடக்கினான்!
“வாட் டூ யூ மீன் பிரகாஷ்? எதை நீங்க வேணாம்ன்னு சொல்றீங்க?” சீதாராமனின் குரலில் இருந்த கூர்மை அவரது கண்களில் பிரதிபலித்தது! ஆனாலும் மனிதர் உணர்வுகளை நூறு சதவிதம் கட்டுப்பாட்டிலே வைத்திருந்தார்!
மூச்சை இழுத்தவன் கண்களை இறுக்கமாக மூடித் திறந்து ஒரு முடிவிற்கு வந்தவனாக, “எல்லாமே தான்…” என்றான்.
“எல்லாமேன்னா?”
“எல்லாம் தான்…”
“அதுதான் எதுன்னு கேக்கறேன் பிரகாஷ்?” அழுத்தமாகக் கூர்மையாக அவர் கேட்க,
“நீங்க எதை நினைக்கிறீங்க சீதாராமன் சார்?” அவரைக் காட்டிலும் அழுத்தமாக வெகுகூர்மையாகக் கேட்டான்,
“ஓகே… என்னோட பணமா? இல்ல பொண்ணா?”
“ரெண்டுமே தான்…” அங்கு இருந்த அனைவருமே அதிர்ந்தனர்!
“சத்திப்பா… வேணாம்டா கண்ணா. நிச்சயம் முடிச்ச பொண்ணு. உன் அம்மா அப்பா பார்த்து வெச்ச பொண்ணு. திடீர்ன்னு வேணாம்ன்னு சொல்றது தப்பு கண்ணா. பொறுமையா இரும்மா. அப்புறம் பேசிக்கலாம்…” சாவித்திரி கெஞ்சினார்.
“சத்தி யோசிச்சு முடிவு பண்ணலாம். ப்ளீஸ் இப்போ பேசாத…” அமிர்தா கெஞ்சினாள்! மாமா அவளிடம் விடுதலை உணர்வோடு கூறியது தன் காதில் ஒலித்தாலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிக்கிற விஷயம் இல்லையே இது. திருமணம் ஆயிரங்காலத்து பயிராயிற்றே! ஆனாலும் அவள் குடிபோதையில் பேசியது அவளது காதில் ஒலித்தது,
“சார்… நீங்களும் இப்போ இந்த விஷயத்தைப் பேசாதீங்க. ஒரு வாரம் போகட்டும் துக்கம் குறையட்டும். சத்தி மனசு மாறிடுவாங்க. இப்போ அதிர்ச்சில இருக்காங்க சார்…” சீதாராமனை சமாதானப்படுத்தினாள் அமிர்தா!
“எனக்குப் புரியுதும்மா. தாங்க முடியாத துக்கம். இந்த நேரத்துல இந்த விஷயமே பேசி இருக்கக் கூடாது. பிரகாஷ் எங்க போய்ட போறாரு? அப்புறமா பேசிக்கலாம்மா!”
“எப்போ பேசினாலும் என்கிட்டே இருந்து ஒரே வார்த்தை தான் வரும் சீதாராமன் சார். முடியாது… வேணாம்… நீங்கப் போகலாம்…” அவன் திட்டவட்டமாகக் கூறியவுடன் அமிர்தா பதட்டமாக,
“சத்தி…” என்று ஆரம்பிக்க, “ஏய்… நிறுத்துடி…” அவளை நோக்கிக் கையை நீட்டிக் கர்ஜித்தான்!
“சாக்கடைல போய் விழுன்னு சொன்னா நீ விழுவியா? நரவலை எடுத்துச் சாப்பிடுன்னு சொன்னா நீ சாப்பிடுவியா?” அதே தொனியில் அவன் குரலை உயர்த்தியே கேட்க அவள் உடல் அதிர்ந்தது! கைகளால் வாயை மூடியவளை இரக்கமாகப் பார்த்த நிகில்,
“வேணாம் வர்ஷ்… சத்யா புரியாம சொல்லலை. புரிஞ்சு தான் சொல்றான். அவன் இந்த அளவு டீசன்ட்டா சொன்னதே பெரிய விஷயம்டா. விட்டுடு…”
அங்கு நடந்த நிகழ்வுகளைக் கவனமாகப் பரிசீலித்த சீதாராமன் ஒரு முடிவிற்கு வந்தார்.
“சோ… மேரேஜ் அக்ரீமென்ட் கேன்சல் பண்றீங்க?”
“ம்ம்ம் எஸ்…” தெளிவாகவே கூறினான்!
“இதனோட பின்விளைவுகளை நீங்கத் தான் ஏற்றுக்கனும் பிரகாஷ்…” வெகு அமைதியான குரலில் கூறினார்!
“நோ ப்ராப்ளம்…”
“ம்ம்ம் ஓகே… ஐ ஆம் புல்லிங் அவுட் மை ஷேர்ஸ்…”
“ஜஸ்ட் கோ அஹெட்…”
“அண்ட் ஐ வில் சியு… டிபெஞ்சர் சூட்…”
ஒரு நிமிடம் அமைதியாக இருந்த சத்யன், “எவ்வளவு அமௌன்ட்…” அழுத்தமாகக் கேட்டான்.
“பிப்டி க்ரோர்ஸ்…” கொஞ்சமும் பதறாத குரலில் அவர் கூற, ஊசி விழுந்தால் கேட்குமளவு மயான அமைதி நிலவியது.
“ஓகே… குடுக்கறேன்…” அமைதியாகக் கூறினான் சத்யன்.
அதுவரையில் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கடன்காரர்கள், “சார் உங்க குடும்பப் பிரச்சனைய அப்புறம் வெச்சுக்கங்க எங்க பிரச்சனைய முடிச்சு விடுங்க”
கைகளால் முகத்தை அழுந்தத் துடைத்த சத்யன் அமிர்தாவை அழைத்து,
“அம்மு… மொத்தம் எவ்வளவு லோன்? எவ்வளவு சொத்து வால்யு இருக்குன்னு கணக்கு போடு…”
அமிர்தா, நிஷா, அக்ஷிதா, விஸ்வா, நிகில், தேவ் உடன் சங்கரலிங்கம் துக்கத்திற்கு வந்த அவனது ஆடிட்டர் பரமேஸ்வரன் எல்லாரும் அமர்ந்து மதிப்பிடத் துவங்கினர்!
“உங்க எல்லார் கிட்டயும் நான் சொல்றது ஒன்னே ஒன்னு தான். வட்டிய தர முடியாது. வட்டிய கழிச்சுட்டு அசல் எவ்வளவு வருதோ அவ்வளவு தான் தர முடியும். இதுக்கு ஒப்புதல் இல்லாதவங்க அவங்க பத்திரத்தை வாங்கிகிட்டு போயிட்டே இருக்கலாம். கோர்ட்ல பார்க்கலாம். என்ன சொல்றீங்க?”
மொத்தமாக நஷ்டபடாமல் அசலாவது திரும்ப வருகிறதே என்று அனைவரும் தலையாட்டினர். கோர்ட்டுக்குப் போனால் அதற்குச் செலவு செய்தே காலம் கழிந்து விடும் என்று தெரியாதா?
எந்த எதிர்ப்பும் வராததை உறுதிபடுத்திக் கொண்டு அவனது அறைக்குச் சென்றான். அவனுக்குத் தனிமை மிகவும் தேவையாக இருந்தது. ஓடி ஓடிக் கலைத்துப் போயிருந்தான்!
அவன் அறைக்குச் செல்வதைப் பார்த்த அமிர்தா உடன் அமர்ந்து இருந்தவர்களிடம்,
“ஒரு நிமிஷம்… பார்த்துட்டு இருங்க வந்துடறேன்…” என்று கூறி அவனது அறைக்குச் சென்றாள்! சோபாவில் அமர்ந்து கையால் தலையைத் தாங்கியபடி அமர்ந்து இருந்தான். அவள் கதவைத் திறந்ததையும் மூடியதையும் பக்கத்தில் வந்து அமர்வதையும் ஒரு ஓரத்தில் கவனித்தாலும் எதுவுமே மனதில் பதியவில்லை அவனுக்கு! அவன் பக்கத்தில் வந்தமர்ந்து மிகவும் மெலிதான குரலில்,
“சத்தி…”
“ம்ம்ம்…”
“இந்த மாசம் தான் பைனான்ஸ்ல இருக்கப் பண்ட்ஸ் எல்லாம் மெச்சூர் ஆகறதா மாமா சொல்லி இருந்தாங்க. யாராச்சும் க்ளைம் பண்ணினா அது இன்னும் பிரச்சனையாகும்…” சொல்லி விட்டு அவனை நிமிர்ந்து பார்க்க அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்தக் கண்களில் தெரிந்தது என்ன? அந்த வலியைத் தாங்க அவளால் முடியவில்லை!
“இன்னும் என்னவெல்லாம் இருக்கு அம்மு? மொத்தமா சொல்லிடு. கொஞ்சம் கொஞ்சமா என்னைக் கீழ தள்ளாத…” சொல்லிவிட்டு மீண்டும் தலையைக் கையால் பிடித்துக் கொண்டான். அந்த நிமிடத்தில் முடிவெடுத்தாள் அமிர்தா. அவனது கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு,
“பார்த்துக்கலாம் சத்தி. நாம பார்த்துக்கலாம்…” மிகுந்த நம்பிக்கையோடு சொன்னவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை! கைகள் நடுங்கி கொண்டிருந்ததை மட்டும் உணர்ந்தாள் அமிர்தா. கையையும் பற்றிக் கொண்டு தலையைக் கோதி,
“சத்திம்மா…” தன் தாய் அழைப்பது போலவே அவள் அழைக்க அந்த நொடியில் அவனது இறுக்கம் உடைந்தது!
“பப்பிம்மா வேணும் அம்மு…” தாயை தொலைத்த கன்றாக அவளிடம் முழுவதுமாக உடைந்தவன். அவளது கையைப் பற்றிக்கொண்டு கதறினான்!
“சத்திம்மா… இங்க பாரு… என்னம்மா? என்னடா கண்ணா?” அவள் கண்களில் இருந்தும் கண்ணீர் அருவி பொழிந்தது! அவன் கையை விடுத்து அவனை நெஞ்சோடு தாங்கித் தலையைக் கோதி விட்டபடியே அவளும் அழுதாள்! அவனது அழுகையைக் குறைக்கவோ தடுக்கவோ அவள் முயலவில்லை. முடிந்தவரை அழட்டும் துக்கம் தீரட்டும் என்று முதுகை நீவி கொடுத்தவாறே அணைத்திருந்தாள்!
“அவங்க முகத்தைக் கூடப் பார்க்க முடியலையே அம்மு. இந்த அளவு கோரமா எப்படிடா? அவங்க எப்படித் தாங்கி இருப்பாங்க? எப்படி வலிச்சுருக்கும்…” அவள் கழுத்தை குழந்தைபோல இறுக்கி அணைத்துக் கொண்டு அவன் அழுது புலம்ப அவளால் சமாதானம் எப்படிக் கூறுவது எங்கனம் கூறுவது என்றே புரியாமல் அவளும் கண்ணீர் உகுக்கத்தான் முடிந்தது!
“அப்பா என்னைப் பத்தி நினைக்கவே இல்லையா அம்மு. அவருக்கும் எப்படி மனசு வந்துச்சு? அம்மா கூடவே போய்ட? நான் அவங்க பையன் இல்லையா? எப்பிடி நான் மட்டும் தனியா இருப்பேன்னு நினைச்சு பார்த்தாங்களா?”
“இல்ல சத்திம்மா. அந்த நேரம் முழுக்க உன்னைப் பத்திதான் பேசிட்டு இருந்தாங்க…” நிமிர்ந்து அமர்ந்தவன் கண்களைத் துடைத்துக் கொண்டு,
“என்ன பேசினாங்க?”
“உன் கல்யாணத்தைப் பத்தின கவலைதான். சுபர்ணாவை எப்படிக் கல்யாணம் பண்ணி வைக்கறதுன்னு ரொம்பவே கவலைபட்டாங்க சத்தி. நானும் சமாதானம் சொன்னேன். அதெல்லாம் நீ பார்த்துக்குவன்னு. நல்லா பேசிட்டு இருந்தாங்க. போன்ல ஏதோ மெசேஜ் வந்துது அதைப் பார்த்தவர் ஷாக்கடிச்ச மாதிரி உட்க்கார்ந்து இருந்தார். அப்புறம் இந்தக் கல்யாணம் வேணாம். என் தலையே போனாலும் நடக்க விட மாட்டேன்னு சொன்னார்…” என்று கூறிவிட்டு அவனைப் பார்க்க அவன் அதிர்ந்தான்! மனதுக்குள் நிம்மதி தோன்றியது. தந்தை ஒப்பவில்லை என்பது புரிந்தபோது மனம் லேசாகியது!
“என்னடா சொல்ற?”
“ஆமா சத்தி. என்னன்னு கேட்டதுக்கு நீ சின்னப் பொண்ணுன்னு சொல்லிட்டார் சத்தி…”
அந்த நேரத்தில் தனது மாமனிடம் செல்லம் கொஞ்சியது எல்லாம் நினைவிற்கு வர மீண்டும் அழுகையில் கரைந்தவளுக்குத் திடீரென்று அந்த யோசனை தோன்றியது.
“சத்தி… அத்தம்மாவும் போனையே பார்த்துட்டு ரோடு க்ராஸ் பண்ணதாத்தான் போலீஸ்ல சொன்னாங்க. எங்கயோ இடரற மாதிரி தெரியல?”
“போனையேவா??” ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று தெளிவாக விளங்கியது. தெளிவுபடுத்திக்கொள்ள விஷ்வாவை அழைத்தான்! அறைக்குள்ளே வந்த விஷ்வா,
“சொல்லு சத்யா…” என்றான்,
“உன் போனை கொடு விஸ்வா…” எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளவில்லை! யோசனையோடே செல்பேசியைச் சத்யாவிடம் கொடுத்தான். காண்டாக்ட் லிஸ்ட் எடுத்துப் பார்த்தவனுக்கு அவனது சந்தேகம் உறுதியானது. ஒரே எண்ணில் அவனது தாய் மற்றும் தந்தையின் எண்ணையும் சேமித்து இருந்தான். ஊர்ஜிதபடுத்திகொள்ளக் கைகள் நடுங்க சென்ட் மெசேஜ் லிஸ்ட் போனான்.
மூன்று எண்களுக்கும் எம்எம்எஸ் சென்று இருந்தது!
விஷ்வாவை உணர்வுகளற்ற பார்வை பார்த்தவன் அந்தச் சென்ட் லிஸ்ட்டை அழித்தான்!






பப்பிம்மா வேணும் அம்மு…”தாயை தொலைத்த கன்றாக அவளிடம்” முழுவதுமாக உடைந்தவன்… ❤️ The Best
விஷ்வாவை உணர்வுகளற்ற பார்வை பார்த்தவன் அந்தச் “சென்ட் லிஸ்ட்டை அழித்தான்!”