arrow_back
பரமபதம் அத்தியாயம் 9
பரமபதம் chevron_right பகுதி 9 / 54

அத்தியாயம் 9

visibility 266
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (11 மதிப்பீடுகள்)
பகிர்

பத்ம விலாசம்.

காலை மணி பத்து!

இருவரது உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதால் வெள்ளை துணி முழுவதுமாகச் சுற்றப்பட்டுக் குளிர்சாதன பேழையில் வைக்கப்பட்டு இருந்தது. பேழை மேல் பூமாலைக்குவியலும் மலர் வளையங்களுமாக… தலைமாட்டில் விளக்கும் ஊதுபத்தியும்.

சாவித்ரியும் சொந்தபந்தங்களுமாகச் சுற்றி அமர்ந்து அழுதுகொண்டிருக்க, அமிர்தா, சங்கரலிங்கத்தோடு சேர்ந்து ஓரமாக அமர்ந்து, போன் லிஸ்ட்டில் இருக்கும் முக்கியமானவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்துக் கொண்டிருந்தாள். அவள் அழுததெல்லாம் இரவோடு முடிந்தது. இருவரையும் பார்க்கும் போதெல்லாம் துக்கம் பீறிட்டுக் கிளம்பினாலும் அந்த வீட்டின் தற்போதைய பொறுப்பு அன்னையைச் சேர்ந்தது. அவர்களும் உடைந்து போயிருந்த நேரத்தில் பொறுப்பைத் தன் தோளில் சுமக்க தயாராகி இருந்தாள்,

அவ்வப்போது எல்லாருக்கும் டீ காபி, டிபன் ஹோட்டலிலிருந்து வாங்கித் தேவைப்படுபவர்களை அமரச் செய்து பரிமாறிக் கொண்டு இருந்தாலும் அவளது மனம் முழுவதும் சத்தியின் நிலையை நினைத்தே உருகி கொண்டிருந்தது. அதிகாலையில் வந்தவனின் முகம் பாறாங்கல்லை ஒத்திருக்க அவன் அருகில் செல்லவே பயந்தாள்!

மும்பையிலிருந்து ஐந்து மணிக்கு வந்த விமானத்தில் சத்யா வந்திருக்க, விஷயம் தெரியாமல் வீட்டிற்கு வந்தால் அதிர்ந்து விடுவான் என்று சங்கரலிங்கத்தை முன்னமே அனுப்பி இருந்தாள் தாயின் ஆலோசனையோடு! அவர் எடுத்துக் கூறியே அழைத்து வந்திருந்தார்.

உள்ளே வந்தவுடன் கிடத்தபட்டிருந்தவர்களைத் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டே இருந்தான் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள். இனி பார்க்கவே முடியாத தன் பெற்றோரைக் கண்களால் நிரப்பிக் கொண்டவன் தலைமாட்டின் அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்தவன் தான். யாருடனும் பேசவில்லை, என்னவாயிற்று என்று கேட்கவில்லை, எப்படியானது என்றும் அறிய முற்படவில்லை!

அவன் அறிந்ததெல்லாம் மௌனம்… மௌனம்… மௌனம்… மட்டுமே!

தகவல் தெரிந்து சுபர்ணாவின் தந்தையும் வந்திருந்தார். மும்பை நண்பர்கள் சென்னை நண்பர்கள் என நண்பர்கள் பட்டாளமும் வந்து உடன் இருந்தது. துக்கம் கேட்க வந்தவர்களுக்குக் கையை மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தான் சத்யன். அவன் முகத்தைப் பார்த்துப் பேசத் தைர்யத்தை வரவழைத்துக் கொண்டு அருகில் சென்ற அமிர்தா,

“கொஞ்சம் காபி சாப்பிடு சத்தி…” வேலையாட்களுக்குக் காபியை எடுத்து வரக் கண்களால் சைகை செய்தாள்.

கொண்டு வந்ததை வாங்கிக் கொடுத்தாலும் அவனிடம் சிறிதும் மாற்றம் இல்லை. கண்கள் எங்கோ வெறிக்க அமர்ந்து இருந்தான். அவனது பார்வை அவளுள் வெகுவாக நடுக்கத்தை ஏற்படுத்த,

“சத்தி… ப்ளீஸ் மா… கொஞ்சம் மட்டுமாச்சும் குடி…”

“தங்கம்ல கொஞ்சம் தண்ணியாச்சும் குடிடா செல்லம்…” அவரது அத்தையும் மெனகெட்டார்.

எதற்கும் அசையாமல் பாறாங்கல் போல அமர்ந்து இருந்தான்.

“சத்யா… பேசு சத்யா… பேசு…” அக்ஷிதாவும் நிஷாவும் அவனை உலுக்கினார்கள்! பதில் இல்லை… கண்கள் மட்டும் வெறித்த நிலையில்!

“ஸ்பீக் அவுட் சத்யா… எங்களுக்குப் பயமா இருக்குடா…” நிகிலும் விஷ்வாவும்! அவர்களுக்கு மட்டுமே முந்தைய இரவின் நிகழ்வும் தெரிந்து இருந்ததால் மனம் ரணமாகியது. எப்படித்தான் தாங்கிக் கொண்டு இருக்கிறானோ என்று உருகினர். ஆனால் எதனால் நடந்தது எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியாயததால் மூலத்தை அவர்கள் யாரும் உணரவில்லை!

“சத்தி அழுகவாச்சும் செஞ்சுடு. இப்படி உட்கார்ந்து இருக்காத. அத்தை மாமாவ பார்த்து அழுதுடு.”

அவன் முன் மண்டியிட்டுக் கைகளைப் பிடித்துக் கொண்டு கதறினாள் அமிர்தா. அவளது கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். அந்த இறுக்கத்தில் இருந்தே அவன் எந்த அளவு இறுகி போய் இருக்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது. கைகள் நடுங்கி கொண்டிருந்தது. அதை உணர்ந்த அமிர்தா இரு கைகளாலும் அவன் கைகளை இறுக்கி கொண்டாள்!

“கடவுளே… எங்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை? முதல்ல அப்பா… அப்புறம் அம்மா… அப்புறம் அம்மு அப்பா… இப்போ அண்ணா அண்ணி அகாலமா போனது போதாதா? இன்னமும் ஏன் சோதிக்கற? கண்ணா… பேசுடா சத்தி… நீயாச்சும் என்ட்ட பேசுடா…” சாவித்திரி அவனது முகத்தைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்!

“அண்ணன் பேச வந்தப்ப எல்லாம் முகத்தைத் திருப்பிட்டு போனேன். இப்போ பேசுண்ணா. என் கிட்ட பேசுண்ணா. உன் தங்கச்சி வந்து இருக்கேண்ணா. அண்ணி பேசுங்கண்ணி…” இருவரையும் பார்த்து சாவித்திரி கதறி துடித்ததைப் பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் வெள்ளம். ஒரே ஒருவனைத் தவிர!

சத்யப்ரகாஷ்!

சாவித்திரியை அணைத்துக் கொண்டு கதறி தீர்த்தாள் மகளும்! அழுகை நிறைய நேரங்களில் வரம்! துக்கத்தை வாரிச் சுருட்டி வெளியே எறிந்து விடுகிறது. மனதை லேசாக்கி விடுகிறது. அழத் தெரிந்தவர்கள் பாக்கியவான்கள். இதில் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். அழ மறுக்கப்பட்ட ஆண்கள் சபிக்கப்பட்டவர்கள்!

அழுகை என்பது பலவீனம் அல்ல. பலம்! அழுகையை அடக்கி வெற்றிக் காண்பவர்கள் மிகுந்த பலவீனர்கள் என்பது உளவியல் பூர்வமான உண்மையும் கூட!

கடைசி வரை சத்யாவின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. ஒரு சொட்டு நீரும் அருந்தவில்லை!

யார் யாரோ வந்தார்கள். போனார்கள். சடங்குகளும் சாங்கியங்களும் முடிந்து மின்மயானத்தில் இருவரும் ஒரே ஒரு கற்பூரத்தில் முற்றிலுமாக ஒரு பிடி சாம்பலும் ஆனார்கள்!

அந்த ஒரு பிடி சாம்பலாவதற்குள்ளாக எத்தனை உறவுகள், எத்தனை கனவுகள், எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மனிதர்கள் அந்த மனிதர்களில் எத்தனை நிறங்கள்! ஒரு மரணம் அடி முட்டாளையும் தத்துவஞானியாக்கிவிடுகிறது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 10

காட்டிற்குச் சென்று வந்த அனைவரும் நீரை தெளித்துக் கொண்டு விளக்கைப் பார்க்க உள்ளே போகக் கிட்டத்தட்ட பத்து பேர் கையில் பத்திரங்களுடன் உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்து உணர்வே இல்லாமல் வெறித்துக் கொண்டிருந்த சத்யாவின் முன் பத்திரங்களைத் தூக்கி போட்டனர்! அவர்கள்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. Feeling bad for சத்யா, ஒரு மனுஷன் ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சிய தான் தாங்குவான்.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்