அத்தியாயம் 11
கடன் கொடுத்தவர்களும் சீதாராமனும் நண்பர்களோடு சத்யனும் அமிர்தாவும் தனியறையில் அமர்ந்து கணக்கு வழக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர். உடன் ஆடிட்டர் பரமேஸ்வரனோடு அவருடைய உதவியாளர்கள்,
“மொத்தமா பதினெட்டு கோடி வருது சத்யா. தனி நபர்கள் கிட்ட வாங்கின கடன்கள் மட்டும். அது இல்லாம சீதாராம் சாருக்கு ஐம்பது, பைனான்ஸ் பண்ட்ஸ் இருபது கோடி. ஆக மொத்தம் எண்பத்தி எட்டு கோடி…” கையில் நோட் பேட் வைத்துக் கொண்டு கணக்கு பார்த்தவைகளைச் சத்யாவிடம் கூறினார் பரமேஸ்வரன்.
“அங்கிள்… தி நகர் பில்டிங் எவ்வளவுக்குப் போகும்?” சோபாவில் அமர்ந்து கண்களை மூடியபடியே கேட்டான்!
“சுமார் எட்டு கோடிக்குப் போகும்ப்பா…” அவர் கூற,
“அதை ஐம்பது லட்சத்துக்குக் குடோன் லீஸுக்கு விட்டுருகோம் சத்தி…” அமிர்தா நினைவுப்படுத்தினாள்!
“ம்ம்ம்… கோபாலபுரம் வீடு?”
“இப்போ அது இருபது கோடி போகும் சத்தி ஆனா…” என்று அவர் தயங்க அமிர்தா உதவிக்கு வந்தாள்!
“சத்தி… மாமா அதை ஏற்கனவே சேல் பண்ணிட்டாங்க…” தயங்கியபடியே அவள் கூறினாள்… அதிர்ச்சியில் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்த சத்யன்.
“வாட்… எப்போ?”
“டூ இயர்ஸ் பேக் சத்தி. மணல் செகன்ட் சேல்ஸ்ல இறங்கலாம்னு ரீச்சுக்கு அப்ளை பண்ணியிருந்தாங்க. மாமாவுக்கு மூணு ரீச் அலாட் ஆச்சு. அதுக்காக இருபது பொக்லைன் போட்டாங்க. ஆனா கவர்மென்ட் மாறினவுடனே ரீச் கேன்சல் ஆகிடுச்சு. அதுல நஷ்டம் பத்து கோடி. எல்லாருக்கும் பண்ணின செலவு இருபது கோடி சத்தி. அதுக்காக வித்துட்டாங்க…”
தயங்கியபடியே மிக மெல்லிய வார்த்தைகளில் அவள் மற்றவர் அறியாதபடி கூறி முடிக்க நெற்றியை சுருக்கி கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன சத்தி? ஒன்னும் பதில் சொல்ல மாட்டேங்கற?”
“என்ன சொல்றது அம்மு? அவங்க பையன் நான்… ஆனா ஒரு வார்த்தை கூட என் கிட்ட டிஸ்கஸ் பண்ணாம இப்படி? எவ்வளவு பெரிய நெருக்கடில இருந்திருக்காங்க. சொல்லி இருக்கலாமே? யாராச்சும் ஒருத்தராவது? உனக்கு இவ்வளவு தெரிஞ்சு இருக்கே? நீ கூட என்கிட்டே சொல்லவே இல்லையே?” அவனது குற்றசாட்டு அவளது மனதை தைத்தது. அவனை நேராக நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்.
“மாமா உன்னை ஆபீசுக்கு வந்து பார்க்கச் சொல்லிக் கூப்பிட்டதே இல்லையா? இப்போ இதைச் சொல்லக் கூடாது சத்யா ஆனா மனசு கேக்கலை. உனக்கு விளையாட்டு புத்தி அதிகமா இருக்குன்னு நானே பீல் பண்ணியிருக்கேன். அடுத்தது நீ உன்னோட வேலைல மட்டும் தான் இன்ட்ரஸ்ட் காட்டின. எனக்கே இவ்வளவு தெரியுதுன்னு நீயே சொல்றியே, கொஞ்சம் ஆபீஸ் பக்கம் வந்திருந்தா என்ன நடக்குதுன்னு தெரிஞ்சு இருக்காதா? அதோட மாமா அதைச் சேல் பண்ணும்போது நீ மும்பை ப்ரொஜெக்ட்ல ரொம்பப் பிசியா இருந்த. மாமாவ என்ன பண்ண சொல்ற? அவரும் எவ்வளவுதான் சமாளிப்பார் சத்யா?”
மற்றவர் கவனத்தைக் கவராமல் மெலிதான ஆனால் உறுதியான குரலில் அவள் சொல்லி முடிக்கும் வரை அவளை இமைக்காமல் பார்த்தான். அவனிடம் பதில் இல்லாமல் போகவே,
“சாரி சத்திம்மா… ஹர்ட் பண்ணிட்டேனா? வேணும்னே நான் சொல்லலை. மாமாவும் பாவம் தான் அதான் என்னையும் மீறிச் சொல்லிட்டேன். சாரிம்மா…” அவனது கையைப் பிடித்து அவனைச் சமாதானம் செய்ய அவளுடைய கையையும் இறுக்கமாகப் பற்றி,
“அப்படீன்னா இதுக்கும் நான் தான் காரணம் இல்லையா?” பரிதாபமாக அவன் கேட்க,
“இல்ல சத்தி… நான் அப்படிச் சொல்லவே இல்லடா. டர்ன் ஆப் ஈவன்ட்ஸ். இதுக்கு யாரையுமே தனிப்பட்டுக் குற்றம் சொல்லவே முடியாது. அதோட யூ ஆர் இன்னொசென்ட். போனது போகட்டும் அதை நினைக்காத அடுத்து நீ செய்ய வேண்டிய விஷயத்தை மட்டும் பார் சத்திம்மா” அவளது கைகளின் உறுதி அவனுக்கும் உறுதியை கொடுக்க, பெருமூச்சுடன் கண்களை இறுக மூடித் திறந்து,
“ஓகே… தென்… அப்படீன்னா மிச்சமிருக்கறது வடபழனி இடமும் இந்த வீடும் தான் ரைட்…” ஆடிட்டரை பார்த்து அவன் கேட்க,
“எஸ் சத்யா… வடபழனி இடம் கண்டிப்பா பதினாலு கோடி போகும். இந்த வீடு மொத்தம் பத்துக் கிரவுண்ட் இல்லையா. போட் கிளப்ல ஒரு கிரவுண்ட் மினிமம் பத்து கோடின்னு வெச்சாலும் சாலிடா நூறு கோடிக்கு மேல தான் போகும்…” இதை அவர் சொல்லும் போதே சீதாராமனின் கண்கள் ஆசையில் மின்னின! ராஜசேகரின் தந்தை வழி தாத்தா அவர் பெயரில் பிரத்யோகமாக எழுதி வைத்த சொத்து. ஜமீன் சொத்துக்களை மறுத்து வெளிவந்துவிட்டபோது அவருக்காக அவரது தாத்தா பிரத்யோகமாகக் கொடுத்தது அந்தப் போட் கிளப் வீடு.
“ஓகே அங்கிள்… ஒரு அசோசியஷன் மாதிரி உருவாக்குங்க. அதுல சீதாராம் சாரை தவிர மற்ற எல்லாரும் இருக்கட்டும். நான் திநகர் பில்டிங் அதோட வடபழனி இடம் இதை ரெண்டையும் அசோசியஷன் பேர்ல எழுதித் தரேன். அதை அவங்க விற்றுப் பணத்தை எடுத்துக்கட்டும். கண்டிப்பா அசல் மட்டும் தான்…” கடனை முடித்து விட்டுப் பின் உன் வேலையைப் பார் என்று கழுத்தை இறுக்க வந்தவர்களின் முகத்தில் மெச்சுதல் தெரிந்தது. அவர்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டு கிளம்பினர்.
“அப்புறம் சீதாராம் சாருக்கு… ம்ம்ம்ம்… வீட்டை எழுதி…” சொல்லும்போதே அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்தது.
தான் பிறந்து வளர்ந்த நினைவுகளும் தன் தாயுடனும் தந்தையுடனும் ஆடிப்பாடி மகிழ்ந்த நினைவுகளும் அவனுள் வந்து அவனை வலுவிழக்க செய்தன. அடுத்த வார்த்தை தொண்டையிலிருந்து மேலெழுவதற்கு முடியாமல் தவித்தது,
“வீட்டையா?” அமிர்தாவின் கண்களில் கண்ணீர். அவனுக்கும் அவளது கண்ணீருக்கான காரணம் தெரியும். அவர்கள் இருவருக்குமே அதன் மதிப்பு வெறும் காகிதங்களில் இல்லை. உணர்வுகளால் பிணைக்கப்பட்ட உறவு பத்மவிலாசத்தோடு!
“கண்ணா… சீக்கிரம் வந்து பாரேன்… செண்பகப்பூ மொட்டு விட்டிருக்கு…”
சத்யாவுடைய சிறு வயதில் சென்னையில் செண்பகப்பூ வளரவே வளராது என்று ராஜசேகர் அடித்துக் கூற, அதற்காகவே பத்மினி செண்பக கன்றை வாங்கி, பாதுகாத்து, கிட்டத்தட்ட குடை பிடித்து வெயில் அதிகம் பட விடாமல் வளர்த்து, அது மொட்டு விட்டபோது சத்யனிடமும் ராஜசேகரிடமும் காட்டி பெருமைபட்டது எல்லாம் சத்யனின் நினைவுக்கு வந்தது.
சாவித்திரியின் வீட்டிற்குச் சென்று அமிர்தாவை அழைத்து வந்து சென்பகப்பூவை அவர் காட்டி பின் மலர்ந்தபோது அவளுக்கே சூட்டி விட்டு மகிழ்ந்தது அமிர்தாவின் நினைவில் கசந்தது.
“ஹை என்னோட போட் தான் வேகமா போகுது… உன்னோட போட் வேஸ்ட்டுடா…”
“போடி என்னோடதுதான் சூப்பர்…”
“இல்ல என்னோடதுதான்…”
“இல்ல…” என்று சொல்லி விட்டுக் குட்டி அம்முவின் தலையில் நங்கென்று கொட்டிவிட்டு அவளது போட்டையும் மிதித்து விட்டு ஓடினான் குட்டி சத்யன்.
“அத்தை…” வீலென்று கத்தி காலை உதைத்து அழ ஆரம்பித்தவளை பெரியவர்கள் இருவருமாகச் சமாதானம் செய்ய அதைக் கோபமாகப் பார்த்தான்.
தொட்டி கட்டு வீடாகையால் முற்றத்து பகுதிகளின் தண்ணீர் செல்லும் பாதைகளை அடைத்து விட்டால், மழை வரும்போது முற்றத்தில் நீர் குளம்போலத் தேங்கி விடும். மழையோடு சேர்ந்து முற்றத்தில் போட் விட்டுச் சண்டை போட்டுச் சமாதானமாகியது எல்லாம் இருவரின் நினைவு அடுக்குகளில் அந்த வீட்டின் சுகந்தங்கள் சுமைகளாக அழுத்த, இவனை எப்படி அடித்து வீழ்த்துவது என்று குள்ளநரித்தனமாக யோசித்துக் கொண்டிருந்தார் சீதாராம்,
அவளது கையை அழுத்திக் கொடுத்துவிட்டு,
“வீட்டை விற்றுச் சீதாராம் சாருக்கும், பைனான்ஸ் பண்ட்ஸ் இருபது கோடிக்கும் டேலி பண்ணிடறேன்…” அவன் உணர்வுகளைத் துடைத்த குரலில் கூற அருகில் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள் அமிர்தா.
மனதில் வலி… கண்களில் கண்ணீர்… அதே உணர்வே சத்யனுக்கும் இருந்தாலும் அவன் இந்த நிலையில் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை. தன் தாய் தந்தையரின் மூச்சு காற்று கலந்த அந்த இடத்தை விட்டு அவர்களின் பாதங்கள் பட்டுக் கூடி களித்த அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டுமா என்ற உணர்வே அவனைக் கொன்றது.
“வீட்டை எனக்கே எழுதித் தந்துடுங்க பிரகாஷ்… நானே வாங்கிக்கறேன்…” சீதாராம் அமைதியாகக் கூறினார். அதற்கு முன்னர்த் தான் யாரிடமோ செல்பேசியில் பேசிக் கொண்டிருந்ததையும் கவனித்து இருந்தான்.
“ஓகே நோ ப்ராப்ளம்… எப்போ மிச்ச பணத்தைத் தரீங்க?”
“மிச்ச பணமா? உங்க ஆடிட்டர் சொல்றதையெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது பிரகாஷ். நான் பிஸினெஸ் பண்றேன். உங்களுக்குச் சர்விஸ் பண்ணலை. எனக்குக் குடுக்க வேண்டிய பணத்துக்கு வீட்டைக் கேட்கறேன்.” என்று அவர் கூறியவுடன் அதிர்ச்சியில் அனைவரும் நிமிர்ந்தனர்.
“சார் என்ன சொல்றீங்க? இந்த வீடு மினிமம் நூறு கோடி சார். வெளிய சேல்க்கு வந்தா கண்டிப்பா நூற்றியிருபது கோடி போகும். உங்களுக்குத் தர வேண்டிய ஷேர் வால்யு வெறும் ஐம்பது. இதுக்கும் அதுக்கும் எப்படிச் சார் இணை வைக்கறீங்க?” ஆடிட்டர் அதிர்ச்சியோடு கேள்வி எழுப்ப,
“அதெல்லாம் எனக்குத் தெரியாது பரமேஸ்வரன். எனக்கு இப்போ கேஷா பிப்டி கொடுங்க இல்லைன்னா இந்த வீட்டைக் கொடுங்க. அவ்வளவுதான். இதுதான் என்னோட டீல்!” அவர் எங்குக் கிடுக்கி பிடி போடுகிறார் என்பது அவனுக்குப் புரிந்தது.
பேசிகொண்டிருக்கும் போதே பரமேஸ்வரனின் செல்பேசி அழைத்தது.
“ஹா சொல்லுங்க மிஸ்டர் நிவின்…”
“சார்… நான் கேள்விபட்டது உண்மையா?”
“என்ன கேள்விபட்டீங்க?”
“பி ஆர் பைனான்ஸ் மூடியாச்சாமே… அப்படியா?”
“இல்லையே நிவின். ராங் இன்பர்மேஷன். இப்படி யார் சொன்னது உங்களுக்கு?”
“ப்ரெண்ட்ஸ் பேசிகிட்டாங்க சார். அவர் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாராமே? பைனான்ஸ் மூடப் போறதா கேள்விபட்டேன். எங்க டெபாசிட் இந்த மாசம் மெச்சூர் ஆகப் போகுது. அதை நான் இப்போவே எடுக்கலாம்ன்னு இருக்கேன் சார். அதுக்காகத்தான் உங்களுக்குக் கூப்பிட்டேன். அதுக்கு என்ன ப்ரோசீஜர்ன்னு சொன்னா பரவால்ல.”
“நிவின்… நான் இப்போ ஒரு மீட்டிங்ல இருக்கேன். ஐ ல் கால் யு பேக்… ரைட்…”
“ஓகே சார்…”
பேசி விட்டு வைத்த பரமேஸ்வரனின் முகத்தில் அரும்பாய் வியர்வைகள்.
“சத்யா வெளிய டாக் பரவிட்டு இருக்கு. பைனான்ஸ் லாக் அவுட்ன்னு. இந்தப் பையன் அவனோட டெப்பாசிட்ட எடுக்கக் கேக்கறான். உடனே இதைச் செட்டில் செய்யலைன்னா ரொம்ப ப்ராப்ளம் ஆகிடும்பா…”
பதினெட்டு கோடிக்கு முதலிலேயே செட்டில்மென்ட் கொடுத்துவிட்டதால் அவர்கள் அனைவரும் கிளம்பி விட்டிருந்தனர். எஞ்சியது சீதாராமன், ஆடிட்டர் அவர்களோடு நண்பர் குழு மட்டுமே. சத்யனுக்குத் தனிமை மிகவும் தேவைப்பட்டது ஆனால் இந்த நிலையில் அது சாத்தியமில்லை என்பதும் அவனுக்குப் புரிந்தது. அனைவர் முன்னிலையிலும் தனது ஆயாசத்தைக் காட்ட அவன் விரும்பவில்லை.
“யோசிக்கலாம் அங்கிள். நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கேன்…” அனைத்தையும் கடந்துவிட்ட உணர்வோடு அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு,
“சத்தி… என்னது இது?” அமிர்தாவோடு நண்பர்களும் அதிர்ந்தனர்!
“ப்ச்…” எரிச்சலாக வெளிவந்தது அவன் குரல்.
“சத்தி… எதாச்சும் சாப்பிடு… ப்ளீஸ்… இன்னும் நீ தண்ணீர் கூடக் குடிக்கல…” அமிர்தா வேண்டினாள்!
“கொஞ்சம் விஷம் இருந்தா குடு அம்மு…” அவளுக்கு மட்டும் கேட்குமாறு மெலிதாக அவளிடம் குனிந்து கூறினான். ஒரு நிமிடம் விக்கித்துப் போய்ப் பார்த்தவள்,
“டேய் பிசாசு… நீ எப்படி இருக்கியோ நாங்களும் அப்படித்தான் இருக்கோம். உனக்கு ஒன்னு எங்களுக்கு ஒண்ணுன்னு இல்ல. லூசு… பேயி… இப்படிக் கேனத்தனமா உளறிட்டு இருந்தா எனக்கு வர்ற கோபத்துக்கு உன்னைப் பளார்ன்னு அறைஞ்சுருவேன். பிசாசு… பிசாசு” கண்களில் கண்ணீர் கோர்த்ததால் நிமிர்ந்து பேசாமல் தலையைக் குனிந்து கொண்டே அவனைத் திட்டித் தீர்த்தாள் மெலிதாகவே!
கவனித்துக் கொண்டிருந்த சீதாராமன், “பிரகாஷ்… உங்க கவலை எல்லாம் எனக்கு எதுக்கு? பணத்தைக் குடுக்கறீங்களா? இல்லை வீட்டைத் தர்றீங்களா? அதுக்குப் பதிலைச் சொல்லுங்க…”
“சார்… கொஞ்சமாச்சும் டைம் தாங்க. இப்படி இந்த நேரத்துல கிடுக்கி பிடி போட்டா எப்படிச் சார்?” விஸ்வா பொறுக்க முடியாமல் கேட்க,
“ஆமா சார்… இப்படி நின்ன நிலைல பணத்தைக் கொடுன்னு சொன்னா யாராலையும் புரட்ட முடியாது…” நிகில் சத்யனுக்காகப் பேச,
அவர்கள் இருவரையும் முறைத்த சீதாராமன், “அப்படீன்னா அந்தப் பணத்தை நீங்கத் தர்றீங்களா?”
“வாட்… என்ன சார் இப்படிப் பேசறீங்க?” இருவரும் அதிர்ந்தனர்!
“ஏன் நிகில்… நேமிசந்த் உன்னோட அப்பா தானே? நீ நினைச்சா உடனே ஐம்பது கோடி புரட்ட முடியாதா? என் காதுல பூ சுத்தாதப்பா…” நிகிலை நோக்கி அவர் திரும்பவும் அவன் அரண்டு போனான். இந்தப் பேச்சு எங்கு நோக்கிச் செல்கிறது என்பதை உணர்ந்து! மௌனமானான்!
“சாரி சத்யா… இந்த நிலைல என்னால உதவ முடியாது. அவ்வளவு பணம் எங்க அப்பா கிட்ட கேட்டா என்னை முதல்ல வெளிய துரத்தி விட்டுருவார் சத்யா. ப்ளீஸ் அன்டர்ஸ்டேன்ட்…” நிகில் சத்யனை நோக்கிக் கெஞ்சும் குரலில் கேட்டான். கசப்பான புன்னகையோடு,
“நிகில் உன்னை மட்டுமில்ல… எந்த ப்ரென்ட்கிட்டயும் பணம்ன்னு கேக்க மாட்டேன். ப்ரெண்ட்ஷிப் நடுவுல பணம் வந்தா ரெண்டுல ஒண்ணுதான் மிஞ்சும் ஒன்னு ப்ரெண்ட்ஷிப் இல்லைன்னா பணம். அந்தக் கேம் விளையாட நான் தயாரா இல்ல நிகில்…” சத்யன் சொல்லி முடிக்க ஒரு சிலரின் மனம் நிம்மதி அடைந்ததென்னவோ உண்மை.
கடல் நீரில் குடி நீரை தேட, சத்யன் அவ்வளவு ஏமாளி அல்ல என்பதை உணர்த்தி விட்டான் என்பதை அமிர்தா புரிந்துகொண்டாள்!
இவர்கள் பேசிகொண்டிருக்கும் போதே பரமேஸ்வரனின் செல்பேசி நிற்காமல் அழைக்க ஆரம்பித்து இருந்தது. அவரும் அவரது உதவியாளர்களும் பொறுமையாக விளக்கம் கூறிக் கொண்டே இருந்தனர்,
“இல்ல சார். பைனான்ஸ் லாக் அவுட் ஆகல. கண்டிப்பா உங்க டெபாசிட் கைக்கு வந்துடும்…”
செல்பேசியை வைக்கும் போதே அடுத்த அழைப்பு.
“மேடம்… கண்டிப்பா லாக் அவுட் பண்ணலை. நம்பிக்கை வைங்க. யாரோ சொல்றாங்கன்னு இப்படிப் பேசாதீங்க. உங்க டெபாசிட் பாதுகாப்பாத்தான் இருக்கு.”
பரமேஸ்வரனின் உதவியாளர், “சார் மேனேஜரும் பேசறார். அவரையும் எல்லாரும் கேட்டுட்டே இருக்காங்களாம். நிலைமை சீரியஸ் ஆகுதுன்னு சொல்றார்.”
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சத்யன் என்ன செய்வது என்று புரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு அமர சீதாராமன் வாய்த் திறந்தார்!
“பிரகாஷ்… இந்தக் கடன் எல்லாத்தையும் நானே பார்த்துக்கறேன். டெபாசிட் பணம் நாளைக்கே எல்லாருக்கும் தந்துட சொல்லிடலாம். பட் என்னோட டீல் ஒன்னே ஒண்ணுதான். சுபர்ணா… வாட் டூ யு சே?”
அவனது முகத்தில் ஆயாசம் போய், அருவருப்பு குடி கொண்டது!
சத்யன் பேச வாயெடுக்க அமிர்தா அவனைத் தடுத்து தானே பேசினாள்.
“நீங்கச் சொல்ற எந்த டெர்ம்ஸ்க்கும் நாங்க ஒப்புக்க முடியாது. உங்களால என்ன செய்ய முடியுமோ செய்துக்கலாம் சார்.”
“அமிர்தா நீ என் ஸ்டாப். அதை மறந்துட்டு பேசற.”
“உங்க கிட்ட வேலை பார்த்தேன். பாஸ்ட் டென்ஸ். ப்ளீஸ் நோட் இட் டவுன். இனிமே இல்லை… முடியாது…”
“தேவை இல்லாம இந்த விஷயத்துல தலையிடற அமிர்தா. இது எனக்கும் என் மாப்பிள்ளைக்கும் இருக்க மேட்டர். உனக்கு என்ன வந்துது?” அவளிடம் அவர் எகிற துவங்க அவளைக் கையமர்த்தி விட்டு சத்யன்.
“யாருங்க உங்க மாப்பிள்ளை? அந்தச் சாக்கடை தான் வேண்டவே வேண்டாம்ன்னு சொல்றேன். இன்னும் வெளிப்படையா உங்க பொண்ணைப் பத்தி சொல்லனுமா? என்னை அந்த அளவு கொண்டு வந்து நிறுத்தாதீங்க…”
கூர்மையாக அவன் கூற அமிர்தா தொடர்ந்தாள்.
“சீதாராம் சார்… உங்க ஷேர் அமௌன்ட் வேணும்னா லீகலா கம்பெனிக்கு நோட்டிஸ் அனுப்புங்க, அப்புறம் நாங்க அதுக்கு ரெஸ்பான்ட் பண்றோம். நீங்க ஈட்டிகாரர் மாதிரி கேட்டா நாங்க உடனே பயந்துடனுமா? நெவர். எல்லாமே லீகலா போயிருக்கு. இதையும் லீகலா கொண்டு வாங்க. அப்புறம் பேசிக்கலாம். இப்போ நீங்கப் போகலாம்.”
அதற்கு மேல் அங்கு நிற்க அவர் என்ன பைத்தியமா? அவர் அங்கிருந்து அகன்றவுடன் தான் அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது! அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்,
“சத்தி… எதுக்கும் ஒரு முன்ஜாமீன் எடுத்துடலாம்.”
“ஏன் அம்மு?” புரியாமல் அவன் கேட்க,
“ஆடிட்டர் சார் சொல்றதை வெச்சு பார்த்தா டெபாசிட் மேட்டர் சீரியஸா போயிட்டு இருக்குன்னு தெரியுது. சீதாராம் சாரே தூண்டி விட்டுக் கேஸ் கொடுக்க வைக்கலாம். அரெஸ்ட் ஆகவும் சான்ஸ் இருக்கு. யாராச்சும் ரிட்டர்ன் கம்ப்ளைன்ட் தர்றதுக்கு முன்ன நாம முன் ஜாமீன் வாங்கிட்டா கொஞ்சம் மூச்சு விட்டுக்கலாம் சத்தி…” அமைதியாகக் குண்டைப் போட்டாள்!
“ம்ம்ம்… அடிபட்ட பாம்பு சும்மா இருக்காது. யு ஆர் ரைட். வெளிய இருந்தாத்தான் வீட்டை விற்று டெபாசிட்ஸ திருப்பிக் கொடுக்க முடியும். சீதாராம சமாளிக்க முடியும்!” யோசனையோடே அவன் கூற,
“வேணாம் சத்தி. வீட்டை விற்க வேணாம்.” அமிர்தாவின் குரலில் வலி. அவளது கையை இறுக்கமாகப் பிடித்தவன்,
“புரியுதுடா… எனக்கும் எப்பிடி இருக்கும்ன்னு உனக்குத் தெரியும் தானே…”
“ம்ம்ம்… புரியுது சத்திம்மா… நல்லா புரியுது…”
“வேற வழி இல்லடா. இல்லைன்னா முடிஞ்சுடுவேன்.” அமைதியாக அவன் கூற அதுவரை அமைதியாக இருந்த அமிர்தா கடுப்பானாள்,
“எருமை… அறிவே இல்லையாடா உனக்கு? நாங்க இல்லையா உனக்கு? நானும் பொறுமையா பார்த்துட்டு இருக்கேன். இப்படியே பேசிட்டு இருக்க.” பக்கத்தில் இருந்த சேர் பேடை எடுத்துச் சரமாரியாக அவள் அடித்தவள் அவளே குரல் தழுதழுக்க,
“வேணாம் சத்தி அப்படிச் சொல்லாத. ரொம்பக் கஷ்டமா இருக்குடா. அத்தையும் மாமாவையும் ஒரு சேர அப்படிப் பார்த்துட்டு நீயும் இப்படிப் பேசினா தாங்க முடியல. தயவு செஞ்சு அம்மா முன்னாடி இப்படிப் பேசிடாத.” அமர்ந்து அழ அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.
முகத்தை அழுந்தத் துடைத்து விட்டு, “வேற வழியே இல்லைன்னு எப்படிச் சொல்ற?”
“சரி என்ன வழி இருக்கு… நீங்களே சொல்லுங்க வக்கீலம்மா…” ஏளன குரலில் அவன் கேட்க,
“ஏன் உன் பாட்டி உனக்குக் குடுத்துட்டு போகலையா?” அந்த ‘உன்’இல் அழுத்தம் கொடுத்து அவனைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்க,
“நோ…” ஒரே வார்த்தையில் முடித்தான்.
“உன் பிடிவாதத்தை விட்டுடு சத்தி. ப்ளீஸ்!”
“வேணாம்ன்னு முடிவு பண்ணினது எனக்கு வேணாம் தான் அம்மு. போர்ஸ் பண்ணாத தயவு செஞ்சு. ப்ளீஸ்!”
இயலாமையோடு அவனைப் பார்த்து, “அப்படீன்னா அத்தை மாமா வாழ்ந்த வீடு போனாலும் பரவால்லை. உன்னோட பிடிவாதம் தான் உனக்கு முக்கியம் இல்லையா?”
“இது பிடிவாதம் இல்ல அம்மு. புரிஞ்சுக்கோ… அப்பா வேணாம்னு சொன்னது. எனக்கும் வேணாம்.”
“இதைச் சொல்றதுக்கு அவங்களே இல்லையே சத்தி? இன்னமும் ஏன் மாமாவையே ரெபர் பண்ற? அதுவும் இல்லாம சொத்தை வேணாம்ன்னு சொன்னவங்க ஏன் பத்மவிலாசத்தை மட்டும் வாங்கிக்கணும்?” சரியான இடத்தில் அடிக்க அவனுக்குச் சுர்ரென்று கோபம் ஏறியது!
“அது கொள்ளு தாத்தா அப்பாவுக்குக் கொடுத்தது. அதில் என்ன தப்பு?”
“அப்படீன்னா இதுவும் கொள்ளு தாத்தா வழியா வந்ததுதானே. இதில் மட்டும் உனக்கு என்னடா பகை? சொல்லு…”
“இங்க பார் அம்மு… வாதம் பண்ற வேலைய கோர்ட்டோட விட்டுடு. ஐ ஆம் டையர்ட்…” மிகுந்த ஆயாசத்தோடு கூறினான்!
“சரி உன்னோட வழிக்கே வர்றேன். ஆனா வீட்டை விற்க வேணாம்.” அவளை இரக்கமாகப் பார்த்தான். தனக்காகத் தன்னிடமே இவ்வளவு வாதம் புரியும் அமிர்தாவை பார்க்கும்போது இன்னொரு தாயாகத்தான் அவனுக்குத் தோன்றியது,
“சரி வேற என்ன பண்ணலாம்னு சொல்ற.”
“ப்லஜ் பண்ணிரலாம்…”
“சும்மா இல்ல… எழுபது கோடி… அது கஷ்டம் அம்மு…”
“சீதாராம் சாரோட ஐம்பதை அப்புறம் பார்த்துக்கலாம்டா. இப்போதைக்கு இதை முதல்ல சமாளிக்கலாம்…”
“எப்படிப் பார்த்துக்கலாம்னு சொல்ற? குடுக்காம இருந்தா விட்டுடுவாரா?”
“அதைக் கோர்ட்ல நான் பார்த்துக்கறேன் சத்தி…”
“சரி சும்மா குடுத்துடுவாங்களா? வீட்டை வெச்சாலும் ஜாமீன் அது இதுன்னு எவ்வளவோ இருக்கு. இப்போ இருக்க நிலைமைல ஒரு ஈ காக்கா கூட என்னை நம்பி ஜாமீன் போட்டுத் தர்றது கஷ்டம் அம்மு…”
“ஏன் நான் போட மாட்டேனா?” அமைதியாக அவள் கேட்க,
“ஹா நீயா? ஹஹஹா…” தன்னை மறந்து சிரித்தான் சத்யன். அவனைக் கடுப்பாகப் பார்த்தாள்! அவன் தலையில் நங்கென்று ஒரு முறை கொட்டியவள்,
“ஏன்டா எருமை சிரிக்கற? நாங்கல்லாம் போட மாட்டோமா?”
“லூசு சின்னப் பொண்ணுங்க கையெழுத்தை எல்லாம் ஜாமீன்க்கு ஒப்புக்க மாட்டாங்க. புரிஞ்சு பேசு…” சொன்னவனைக் கழுத்தை நெரிக்கப் போனாள் அமிர்தா!
“எனக்கு இருபத்தியஞ்சு வயசாகுதடா பிசாசு…”
“அந்த இருபத்தி நாலுக்கு அப்புறம் வர்ற இருபத்தி அஞ்சா?” அந்த நிலையிலும் அவளைக் கேலி செய்துவிட்டு அவன் சோபாவிலிருந்து எழ அவனது கையைப் பிடித்து அமர வைத்தாள்.
“சத்தி… பாட்டி வகைச் சொத்து எல்லாமே நம்ம ரெண்டு பேர் மேலத்தான் இருக்கு. இந்த நிலைல உதவாதது நமக்கு எதற்கு? நான் முழுமனசோட எழுதிக் கொடுக்கறேன். பத்மவிலாசம், ஸ்ரீராமவிலாசம் அதோட மத்த சொத்து எல்லாத்தையுமே ப்லஜ் பண்ணிறலாம்…” என்று கூறியவளிடம் கோபமாகக் கடித்து மென்று துப்பினான்.
“உன்னையும் இதில் இழுத்துவிட்டுட்டு… மொத்தமும் போகவா? வாய மூடிட்டு போய்டு…”
“ஏன்? நான் ஏன் இதில் வரக் கூடாது சத்யா?” அவளது சத்யா என்ற அழைப்பே அவளது கோபத்தைக் காட்டியது.
“நீ கல்யாணமாக வேண்டிய பொண்ணு. இந்தப் பிரச்சனை எல்லாம் உனக்கு வேணாம். நான் பார்த்துக்கறேன். விடு…” சமரசமாக அவன் முடிக்க முயல,
“ஏன்? ஹோம் மேனேஜ்மென்ட்ஸ் பார்க்கும்போது மட்டும் நான் கல்யாணமாக வேண்டிய பொண்ணுன்னு தெரியாதா? அதை மட்டும் என் தலைல கட்டிட்டு இருந்த…” கோபமாகவே கேட்டாள்.
“ஏன்? மேனேஜ்மென்ட் பார்த்தா கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு இருக்கா? என்ன பேசுற நீ?” அவன் இப்படிக் கூறவும் கையை நீட்டி அவனைத் தடுத்து,
“இப்போ என்னோட கல்யாணம் தான் பிரச்சனையா? உன்னோட கடமைய பற்றிப் பேசுறேன் சத்தி. உரிமைய பற்றிப் பேசுறேன். பாட்டியோட எல்லாச் சொத்தும் உனக்கும் சேர்ந்தது தான்டா…”
“ம்ம்ம்… சரி… நீ சொல்ற மாதிரி எல்லாத்தையுமே ப்லஜ் பண்றோம்ன்னு வெச்சிக்க… அதை எப்படி அடைக்கறது? எப்படி மீட்கறது? திருப்ப வழி இருந்தாத்தான் வாங்கணும் அம்மு…”
ஒரு வழியாக அவன் ஒருவாறு வழிக்கு வர அவளுக்கு ஹப்பாடி என்று கூற தோன்றியது. அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி அமர்ந்து அவனது வலது கையைத் தனது இரு கைகளால் இறுக பற்றி,
“உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு சத்தி. கடலளவு இருக்கு… நீ செய்வ. உன்னால சாதிக்க முடியும்! ஜெய்க்க முடியும்! சந்தேகமே படாத சத்திம்மா…”
அவளது ஒவ்வொரு வார்த்தைகளும் அவன் மனதில் கல்வெட்டாகியது! அவளைப் பார்க்கும்போது தனது தாயை பார்ப்பது போலவே தெரிய மெளனமாக அவளது தோளில் சாய்ந்தான்!
வாழ்கையைத் தடம் மாறச் செய்த மிகப் பெரிய இழப்புகளையும், பிரச்சனைகளையும் ஒரு சேர சந்தித்து, எப்படி இவற்றை முடிக்கப் போகிறோம், வாழ்கையில் ஜெய்க்கபோகிறோம் என்ற கேள்வி அவனைச் சுழட்டியடித்துக் கொண்டிருந்தது! அவளது கைகள் தலையை வருடிக் கொடுக்கக் கண்கள் அவனை அறியாமல் கண்களை மூடி உறக்கத்தைத் தழுவினான்!
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே!
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்-
உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும்
துணையிருப்பேன்!






சத்யன் situation ah பார்க்கும் போது, Lion, snake, crocodile puzzle tha நியாபகத்திற்கு வருகிறது. ராஜசேகர் க்கு தெரியும் தான இந்த பிரச்சனை எல்லாம், இந்த மாதிரி சூழ்நிலையில சத்யன தனியா விட்டுட்டு போக எப்படி மனசு வந்துச்சு.
ஒரு விநாடி கவனக்குறைவுதான் ஒரு விபத்தை ஏற்படுத்தும்… ஒரு நிமிட தவறான முடிவுதான் ஆயுள் முழுவதும் தண்டனையை ஏற்படுத்திவிடும்.
He was completely consumed by his emotions.. After seeing the MMS, his emotions were entirely different, it gave him a sense of relief.. But unfortunately, it’s quite opposite, when he heard about his wife.. The shock and emotions didn’t even give him a chance to think clearly..
Anyway, all is well.. Perhaps this very situation will bring Sathya face-to-face with what he is truly capable of.. Interesting to see where this takes him!