arrow_back
பரமபதம் அத்தியாயம் 13
பரமபதம் chevron_right பகுதி 13 / 54

அத்தியாயம் 13

visibility 267
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.4/5 (9 மதிப்பீடுகள்)
பகிர்

வாழ்கையே போர்க்களம்

வாழ்ந்துதான் பார்க்கணும்!

போர்க்களம் மாறலாம்

தோள்கள் தான் மாறுமா?

பி ஆர் குரூப்ஸ் தலைமை அலுவலகம்.

குழுமி இருந்த மக்களிடையே முன் சென்று படியில் ஏறி நின்றான் சத்யப்ரகாஷ்! கூட்டம் சலசலத்தது… ஊழியர்கள் என்னவாகுமோ என்ற பயம் உள்ளே பரவ அவஸ்த்தையாக நெளிந்து கொண்டிருந்தனர். பரமேஸ்வரன், சங்கரலிங்கம் முதலானோர் கதவருகில் நின்று உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். அமிர்தா கையில் பைலை வைத்துக் கொண்டு தீவிரமாகச் சரி பார்க்கும் பணியைச் சத்யனின் அருகில் நின்று கொண்டு செய்துகொண்டிருந்தாள்.

பணமே வாழ்க்கையாகாது என்று மகான்களும் பெரியவர்களும் உபதேசித்தாலும் அவர்களின் அடிப்படை தேவைக்கே பணம் எனும் வஸ்து தேவையாகிறது.

உலகையே வெற்றி கொண்டவன் போகும்போது, வெறுங்கையுடன் தான் செல்கிறேன் என்று பட்டவர்த்தனபடுத்திய அலக்சாண்டர் பிறந்ததும் இங்கேதான். ஒரு ரொட்டி துண்டிற்காக இன்னொருவனைக் கொலை செய்தவன் இருப்பதும் இங்கேதான். எட்டாயிரம் கோடி ரூபாய் மாளிகை வைத்திருப்பவன் இருப்பதும் இங்கேதான். தாம்பத்தியம் கூட நடுத்தெரு பிளாட்பார்மில் என்று விதிக்கப் பட்டிருக்கும் கடைநிலை மனிதன் வசிப்பதும் இங்கேதான்.

அனைத்திற்கும் அளவுகோல் பணம்! ஒவ்வொருவரின் தேவையும் பணம்! ஒவ்வொருவரும் துரத்துவதும் பணம்! எவ்வளவு இருந்தாலும் மனிதன் திருப்தியடையாதது பணம்!

பணம்! அதற்கு உயிர் உண்டா? என்றைக்காவது அது யார் கையில் இருக்கிறது என்று எண்ணி பார்க்குமா? பசியில் வாடும் தன் குழந்தையின் அடுத்த வேளை பாலிற்காக அந்தப் பணத்தைத் தேடி தன் உடலை விற்கும் விபச்சாரி தாயின் செயலுக்காகப் பரிதாபப்படுமா? இல்லை அசூசைப்படுமா? தன்னைத் தேடி தினமும் நிற்காமல் ஓடிகொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்து அது என்ன கேட்டுவிடப் போகிறது?

“அடேய் மனிதா… உன் கையில் நான் இருக்கும் வரைதான் என் பெயர் பணம். நான் கையை விட்டுப் போனா நீ பிணம்…” என்று எள்ளி நகையாடுமோ?

அந்தப் பணத்தைத் துரத்திக் கண்களில் கலக்கத்தோடு நின்று கொண்டிருந்த அனைவரையும் ஒரு முறை நிதானமாக நோட்டம் விட்டு, சிறிதாகக் கனைத்துக் கொண்டு சத்யன் பேச ஆரம்பிக்க, குழுமியிருந்தோர் அமைதியாகினர்!

“வெல்! உங்க எல்லாருக்கும் தெரியும் பதினைந்து நாள் முன்ன அப்பா இறந்துட்டாங்க…” சொல்லிவிட்டு இடைவெளிவிட அதைக் கேட்டு முன்னே வந்த ஒருவர்,

“சார்… எங்களுக்குத் தெரியும். ரொம்ப வருத்தம் தான். ஆனா நாங்க வந்திருக்கறது வேற விஷயத்துக்கு…” கண்களில் ஒருவித பிடிவாதம் குடிகொண்டு இருந்தது அந்த மனிதருக்கு.

எப்படியும் தனது பணத்தை வாங்கிக் கொண்டே செல்வேன் என்ற பிடிவாதம். எரியும் வீட்டில் முடிந்தவரையாவது பிடுங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லையே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை! ஒவ்வொருவரும் அந்தச் சூழ்நிலையின் கைதிகள்! சூழ்நிலை கைதிகளுக்கு அவர்கள் செல்லும் பாதையைத் தேர்ந்துடுக்கும் அதிகாரத்தை இயற்கை தரவில்லை. அவர்கள் முன்னால் என்ன பாதை இருக்கிறதோ அதில் பயணம் செய்தாக வேண்டும்!

“ம்ம்ம் தெரியும்… டெப்பாசிட்டை திருப்பிக் கேட்கறீங்க. இல்லையா?” உணர்ச்சிகளை வெளிக்காட்டாத குரலில் கேட்டான் சத்யன்!

“ஆமா சார்…” அதைத் தவிர வேறொரு வேலையும் எங்களுக்கு இல்லை என்று புரியவைத்துவிடும் நோக்கில் கூறினார். சட்டென்று குரலைத் தழைத்துக் கொண்ட சத்யன் அந்த மாற்றத்தைத் தன் குரலில் காட்டாமல்,

“அண்ணா… இங்க நிறையப் பேர் டெபாசிட் இன்னும் மெச்சூர் ஆகலையே. இப்போ எடுத்தா உங்களுக்குப் பெனிபிட்ஸ் கிடைக்காது அதோட எப்சி அப்ளை ஆகுமே. உங்களுக்குத் தெரியாதாண்ணா?” அன்னியோன்னியமாகச் சத்யன் கேட்க, பேச வந்தவர் தயங்க துவங்கினார்,

“தெரியுங்க தம்பி… ஆனா பைனான்ஸ் மூடப் போறதா எல்லாரும் பேசிக்கறாங்க. மொத்தமும் போறதுக்கு நம்ம அசல் மிஞ்சினா போதாதா?” அவர் கேட்பதும் நியாயமாவே தோன்றியது!

“அண்ணா… பைனான்ஸ் மூடப் போறதா யார் சொன்னது? கண்டிப்பா இல்ல. நான் இருக்கேன். உங்க டெபாசிட் பெனிபிட்ஸ் சேர்த்து உங்களுக்குத் திரும்பி வரும். ஒவ்வொருத்தரும் எத்தனையோ காரணத்துக்காக டெபாசிட் பண்ணி இருப்பீங்க. வீட்டு பசங்க கல்யாணம், படிப்புன்னு எவ்வளவோ இருக்கும். அதெல்லாம் பன்ட் மெச்சூர் ஆகாம நஷ்டத்தோட குடுக்க எனக்கு மனசு வரலைண்ணா. இன்னும் ஒரு மாதம் தானே இருக்கு. வெய்ட் பண்ணுங்களேன்…”

பேசுவதற்கும் தனித்திறமை வேண்டும். அது சத்யனிடம் கொட்டிக்கிடந்தது. எதிரிகளை எதிர்வாதம் புரிய விடாமல் சூழ்நிலைகளைத் தனக்குச் சாதகமாக்கி கொள்ளத் தனித்திறமை வேண்டுமே!

“வெய்ட் பண்ணலாம் தம்பி ஆனால் வெளிய டாக் வேற மாதிரி…” அவர் தயங்க அவரது தயக்கத்தை வெற்றிகரமாக உபயோகிக்கத் துவங்கினான் சத்யன். சிறிது இடம் கிடைத்தாலும் அதில் புகுந்து முன் சென்றுவிடுபவன் அவன்!

“அண்ணா இப்போ உங்களுக்கு நான் பணத்தைத் திருப்பிக் கொடுக்கறது தான் எனக்கு லாபம். ஓபனா சொல்றேன்ணா. மெச்சூர் பெனிபிட்ஸ் இல்லாம எப்சிக்கு ஒரு அமௌன்ட் போட்டு உங்களுக்குத் தள்ளிடறது எனக்கு எவ்வளவு லாபம் நினைச்சு பாருங்க. ஆனா நான் அப்படிச் செய்ய நினைக்கலை. வெளிய பேசிக்கறதை காது கொடுத்துக் கேட்காதீங்க. எப்படி வேணும்னாலும் விஷயத்தைப் பரப்பி விடுவாங்க. என்னை நம்புங்க. உங்க பணம் ஒரு மாதத்துல உங்க கிட்ட தேடி வரும். வேணும்னா எழுதிக் கொடுக்கட்டா?”

சட்டென்று அவன் இப்படிக் கேட்கவும் பேச வந்தவர்கள் தலைகீழானர்கள்! இதுதான் காலம் காலமாக மனிதர்களைக் கீழிறங்கி அடிக்கும் யுத்தி,

“அச்ச்சோ தம்பி… அந்த அளவு எல்லாம் உங்களை நம்பாம இல்ல. நீங்க எப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவங்க. நீங்கக் கண்டிப்பா வாக்கைக் காப்பாத்துவீங்க தம்பி. உங்களை நம்பறோம்…” ஒவ்வொருவரும் இதையே திரும்பக் கூறிவிட்டு கலைய துவங்கினர்!

நிம்மதி பெருமூச்சு விட்டனர் அங்கிருந்தவர்கள். கடன் சுமை என்னை அழுத்துகிறது என்றும் கூறாமல், கொடுக்கக் கால அவகாசம் வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக வேறு மாதிரி கொண்டு சென்றான் என்பதைப் பார்த்த அமிர்தா பெருமையாக உணர்ந்தாள்!

“இவன் பேசியே மயக்கிடுவான்…” தனக்குள் சிரித்துக் கொண்டவளை பார்த்தபோது சத்யனுக்கும் மெலிதாகப் புன்னகை மலர்ந்தது,

“என்ன அம்மு சிரிக்கற?” ஊழியர்களின் காலை வணக்கத்தை ஏற்றவாறு தன்னுடைய அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சத்யன் புருவத்தை உயர்த்திக் கேட்கவும், அவனை நோக்கிய அவளது முகம் இன்னும் மலர்ந்தது!

“நீ பேசியே மயக்கிடுவன்னு மாமா கிட்ட எத்தனையோ முறை சொல்லி இருக்கேன்…”

அறைக்கதவை திறந்தவாறே, “அடிப்பாவி… என்னைப் பார்த்தா மயக்கமருந்து வெச்சுட்டு அலையற மாதிரியா உனக்குத் தெரியுது?” அவளது தலையில் சிறிதாக ஒரு கொட்டு வைத்தான்.

“மயக்கமருந்தோ சொக்கு பொடியோ… எப்படியோ பணம்ன்னு கேட்டு வந்தவங்களை நீங்கப் பார்த்துக் கொடுங்கன்னு சொல்ல வெச்சுட்ட பார்த்தியா? நீ வில்லன்டா…” அவள் கிண்டல் செய்வதைப் புன்னகையோடு நோக்கியவன்.

“இது உனக்கே நல்லா இருக்கா அம்மு… நான் ஹீரோடி…” சட்டை காலரை தூக்கி விட்டவனின் முதுகில் ஒரு அடி வைத்து,

“ம்ம்ம்… மூஞ்சி… என்னை டி சொல்லாதன்னு எத்தனை தடவை சொல்றேன்டா எருமை? பன்னி…” கொலைவெறியானாள் அமிர்தா.

“அப்புறம் எதுக்குடி நீ மட்டும் என்னை டா சொல்ற? நீ டா சொன்னா நானும் தான் டி சொல்லுவேன். போடி பிசாசு…” பழைய சண்டையெல்லாம் தலைகாட்டி எட்டி பார்த்தது இருவருக்கும் இடையில்.

“போடாக் கொரங்கு…”

“நீதான்டி மனுஷ குரங்கு…” சொல்லும் போதே அவன் குரல் தேய்ந்தது!

பேசிகொண்டிருக்கும் போதே இருவரும் அமைதியாகினர். அந்த அமைதி எதனால் என்று இருவருக்குமே புரிந்துதானிருந்தது. இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும்போது பத்மினி தான் மத்யஸ்தத்திற்கு வருவார். இருவரையும் அமைதிபடுத்தி இருவரின் புகார் மனுக்களையும் பெற்று நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுப்பார். அந்த நினைவில் மெளனமாகச் சேரில் சென்று அமர்ந்தவனின் மனம் இன்னும் தவிப்பில் ஆழ்ந்தது!

“சத்தி கண்ணா… கொஞ்சம் ஆபீஸ் வரைக்கும் வாடா ராஜா…” அவனது அப்பா அழைத்தது இப்போது காதுக்குள் ஒலித்தது. அவனது கண்ணில் நீர் திரண்டது,

“சத்தி… ஆல் தி பெஸ்ட்…” கண்களில் நீர் கோர்க்க அவனது கையைப் பிடித்து வாழ்த்தினாள்!

“தேங்க்ஸ் டா குட்டிம்மா…” தனது கையைக் கொடுத்தவன் அவளது கையை இறுக்கி தனக்குள் வைத்துக் கொண்டான் தாயை தேடிய கன்றாக! தனது தந்தையும் தாயும் பேசிய வார்த்தைகள் எல்லாம் அவனது காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. அலைபுற்ற அவனது நிலையைக் கண்டு சகிக்காத அமிர்தா அவனைத் தனது வயிற்றோடு சேர்த்து அணைத்து கொண்டாள்!

தான் ஒவ்வொன்றுக்கும் அமிர்தாவை தான் தேடுகிறோம் என்று அவனுக்குப் புரிந்து தானிருந்தது. அவளிடம் மட்டுமே தனது உணர்ச்சிகளைக் கொட்டுகிறோம் என்பதும் அவள்மீது அவனுக்கு இருந்த மலையளவு நம்பிக்கையும் எதை நோக்கிக் கொண்டு செல்கின்றன என்பதை அந்தக் கணத்தில் உணர்ந்தான்.

காதல்!

அவளின்றி ஓர் அணுவும் அசையவில்லையே அவனுக்கு!

பாசத்தில் தாயாக, கண்டிப்பில் வழிகாட்டுவதில் தந்தையாக, மனதை அறிந்து கொள்வதில் தோழியாக, சொல்லித் தருவதில் ஆசானாக என்று அவளது பல முகங்களைப் பார்த்த அவனுக்கு அவள் தான் தனக்கு எல்லாம் என்று எப்போது தோன்ற ஆரம்பித்தது என்பது புரியவில்லை. தனக்குத் தோன்றிய இந்த உணர்வு அவளுக்கும் இருக்குமா? அவனுக்குத் தெரியவில்லை. இந்த உணர்வு ஏன் முன்னமே தோன்றவில்லை என்று தோன்றியது. தோன்றியிருந்தால் தன் தாய் தந்தை தன்னுடனே இருந்திருப்பார்களோ?

நான் உன்னிடம் காட்டிய பாசத்தைத் தவறாக எண்ணிவிட்டாயே என்று கூறிவிடுவாளா?

ஐயோ அவள் இல்லாமல் எப்படி? சரி சிறிது நாட்கள் போகட்டும். என்னை விட்டு எங்கே சென்று விடுவாள்? பேசிக்கொள்ளலாம்! மனதில் முடிவெடுத்தான்! ஆறுதலுக்காக அவளது வயிற்றில் புதைந்தவன் காதலோடு எழுந்தான்! அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. இத்தனை நாட்களாக இல்லாத கள்ளம் மனதில் புகுந்து விட்டதே!

“சத்தி…இங்க பாரு…” அவனது முகத்தைப் பற்றித் திருப்பியவள்,

“இது சங்கடப்பட வேண்டிய நேரமில்ல. சாதிக்க வேண்டிய நேரம். பழையதை நினைச்சு இனிமே ஒன்னும் ஆகபோறதில்லை. செய்ய வேண்டிய காரியம் நிறைய இருக்கு. இனிமே நீ டீல் பண்ண போறது பணம் இல்லை. பலரோட நம்பிக்கை. மாமாவோட தன்மானம், சுயமரியாதை, அவர் இதுவரைக்கும் சம்பாதித்த பெயர்! இதை எல்லாம் காப்பாத்துறதும் காப்பாத்தாம விடுறதும் உன் கைல தான் இருக்கு. இப்போ மனசு கலங்கிட்டு இருந்தா யார் இதையெல்லாம் பார்க்கறது?” அவள் கேள்வி கேட்டு நிறுத்த அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு உள்ளுக்குள் புதிய ரத்தம் பாய்வது போல இருந்தது!

“நீ கூட இருப்ப இல்லையா?” திரும்ப அவளையே கேட்டான்.

“பின்ன நான் எங்கடா போய்டுவேன்? எனக்குக் கல்யாணம் பண்ணி பேக் அப் பண்ணி அனுப்பிடலாம்ன்னு கனவு கண்டுட்டு இருக்காத. நான் இங்க தான் இருப்பேன். இருப்பேன்… இருப்பேன்…” என்று அவள் கூறவும் அவனது முகம் புன்னகையில் விரிந்தது!

“என்னது கல்யாணமா? ஓடிடு… இப்போ நான் கல்யாணத்தைப் பத்தி பேசினேனா? எவ்வளவு வேலைய வெச்சுகிட்டுக் கல்யாணமாம் கல்யாணம். ஓடு… போய் வேலைய பாருடி பிசாசு…” அவன் சிரித்துக் கொண்டே விரட்டவும்,

“அடப்பாவி… பையன் பாவம் பீல் பண்றானேன்னு பார்த்தா… போடா எருமைமாடு…” அவளது தனிக் கணினியை நோக்கிச் சென்று கொண்டே கூறி பழித்துக் காட்டினாள்.

“போடி வெள்ளை பன்னி…” அலட்சியமாகக் கூறி விட்டு அவனது கணினியில் புதைந்து கொள்ள அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்த அமிர்தா.

“டேய்… சொல்லச் சொல்லக் கேக்காம டி சொல்ற… இருடா உன்னை அப்புறம் வெச்சுக்கறேன்…” கையை இடுப்பில் வைத்துக் கொண்டு சபதமிட நிமிர்ந்து பார்த்தவனுக்குச் சிரிப்பு தாளவில்லை!

“எப்போ அம்முகுட்டி?” குறும்பாக அவன் கேட்க,

“என்ன எப்போ?” புரியாமல் திரும்பக் கேட்டாள்!

“இல்ல வெச்சுக்கறேன்னு சொன்னியே… அதான் எப்போன்னு கேட்டேன்…” சிரிக்காமல் குறும்பாக அவன் கேட்க அமிர்தவர்ஷினியம்மன் சம்ஹாரத்திற்குத் தயாரானாள்!

“யூ… யூ… இடியட்… கூஸ்… ஸ்டுபிட்…” வலக்கைவிரலை நீட்டி முறைத்தபடி அவனைத் திட்டச் சட்டென்று அவளது விரலைப் பற்றி முறுக்கினான்… மெதுவாகத்தான்!

“அய்யோ எருமை… பன்னி… விடுடா… அத்தை… இங்க பா…” எப்போதும் போல வீட்டில் அவளது அத்தையை அழைப்பது போல உச்சஸ்தாயில் ஆரம்பித்துப் பின் தேய்ந்து மறைந்தது. அமைதி சூழ்ந்தது. மெளனமாக அவளது இருக்கையில் சென்று அமர்ந்தாள். அவனும் இறுக்கத்தைக் குத்தகைக்கு எடுத்தான்,

சிறிது நேரம் மௌனத்தில் கரைய குரலை லேசாகச் செறுமிக்கொண்டவன் அமிர்தாவை அழைத்தான்.

“அம்மு… சதாசிவம் சார் லோன் விஷயமா என்ன சொன்னார்?” சதாசிவம் சொத்துக்களை அடமானம் பிடித்துக் கொண்டு வட்டிக்குப் பணம் தருபவர். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சுலபத்தில் புரட்டி விடும் வித்தையாளர்.

“இன்னும் சரியா பதிலைச் சொல்லலை சத்தி. எழுபது முதல்ல கேட்டோம் இல்லையா? இப்போ அட்லீஸ்ட் இருபதாச்சும் கேட்டு இருக்கேன். பதில் வரலை!”

“என்ன காரணமாம்டா?”

“தெரியலை சத்தி. பழனிவேல்ராஜன் சார் கிட்டவும் கேட்டு இருக்கேன். அவரோட கேஸ் நான் தானே டீல் பண்றேன். பார்க்கறேன்னு சொன்னார் சத்தி. கேச டீல் பண்றதுனால கொஞ்சம் பாசிடிவா எதிர்பார்க்கலாம். இன்னும் மூணு பேர் கிட்டவும் பேசிட்டு இருக்கேன். எல்லாருமே எங்க சீனியரோட கிளையண்ட்ஸ். நான் பெர்சனலா டீல் பண்ணவங்க. பார்க்கலாம். நீ யார் கிட்ட பேசிட்டு இருக்கச் சத்தி?”

“நானும் பேசிட்டு தான் இருக்கேன்டா. ஆனா எங்க போனாலும் சுபர்ணாவோட அப்பாவ சொல்லி, அவருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனைன்னு கேக்கறாங்க. இன்னும் ஒருத்தர் அவர சொல்லச் சொல்லுங்க அடுத்த நிமிஷம் உங்களுக்குப் பணம் தரேன்னு சொல்லறார்டா. போய்யா நீயும் உன் பணமும்ன்னு வந்துட்டேன்…” அவன் கூறி முடிக்க அங்கே அவஸ்த்தையான மௌனம் நெளிந்தது!

“ஏன் சத்தி? சுபர்ணா அப்பா எல்லா இடத்திலும் கேம் ஆடறாரோ?” யோசனையாகக் கேட்டாள்.

“மே பி இருக்கலாம். ஆனால் அவருக்குப் பணியாத மனுஷங்க கண்டிப்பா இருப்பாங்கடா.” என்று அவன் முடிக்க அவள் பெரியதாக ஒரு மூச்சை வாங்கி,

“ம்ம்ம் கண்டிப்பா சத்தி. அப்புறம் சொல்ல மறந்துட்டேன். பேங்கர்ஸ் மீட்டிங் ஆர்கனைஸ் பண்ணி இருக்கார் ஆடிட்டர். உன்ட்ட சொல்லச் சொன்னார். நாளைக்கு ஈவினிங்…” நினைவு வந்தவளாகக் கூறினாள்.

“ஏன்… எதுக்கு?”

“பின்ன இரண்டரை வட்டிக்கு வாங்கி, அதுக்கு வட்டியே கட்டிட்டு இருப்பாங்களா? பேங்க் லோன்க்கு மாறிடனும் சத்தி. அவசரத்துக்கு வெளிய வாங்குற பணத்தைப் பேங் கடனை வெச்சு உடனே அடைச்சுடலாம். அதோட பேங்க்னா அசலோட வட்டியும் அடையும். வட்டி குறைவு… நமக்குத் தோது படும்போது அசலை முழுசா திருப்பிட்டு எல்லாத்தையும் மீட்டுடலாம். கழுத்துல துண்டைப் போட்டு யாரும் கேட்கமாட்டாங்க…” அவள் கூறுவதை வெகுசிரத்தையாகக் கேட்ட சத்யன்,

“நல்ல யோசனை தான்டா… எத்தனை பேங்க்?”

“எஸ்பிஐ, இந்தியன் பேங்க், கனரா பேங்க், கேவிபி, எல்விபி… மட்டும் தான்…”

“அப்போ ஷேர்ஹோல்டர்ஸ் மீட்டிங் இன்னைக்கு முடிஞ்சா, கொஞ்சம் ப்ராப்ளம் சால்வ் ஆகும்ன்னு நினைக்கறேன்…”

“ப்ராப்ளம் முடியுதோ இல்ல ஆரம்பிக்குதோ… எதுவானாலும் மனசை திடமா வெச்சுக்க வேண்டியதுதான். எப்படியும் டிபஞ்சர் சூட் இஸ்யு ரைஸ் ஆகும்…” அவர்களுக்குள்ளாகப் பேசிகொண்டிருக்கும் போதே இன்டர்காம் அழைத்தது!

“எஸ்…”

“சார்… ஷேர்ஹோல்டர்ஸ் கான்பரன்ஸ் ஹால்ல வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க. மீட்டிங் ஆரம்பிச்சுடலாமான்னு கம்பெனி செக்ரட்டரி கேக்கறார்…”

“ம்ம்ம் யாஹ்… வி வில் பி தேர் இன் பைவ் மினிட்ஸ்…”

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 14

ஷேர் ஹோல்டர்ஸ் அனைவரும் அந்த ஹாலில் குழுமியிருக்கக் கம்பெனி செக்ரட்டரி வாசுதேவ நாயர் அனைவரையும் வரவேற்றார். எதிர்பாரா விதமாக இறந்த ராஜசேகருக்கு அஞ்சலி செலுத்தியவுடன் அதிகாரபூர்வமாகச் சத்யப்ரகாஷ் பிஆர் குரூப்பின் சேர்மன் பொறுப்பை ஏற்றான், மைக் முன் நின்று தன்னைச் சமன்படுத்திக்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. என்னை விட்டு எங்கே சென்று விடுவாள்!

    அப்போ எங்களுக்கு twist கொடுக்க வாய்ப்பிருக்கு..

    Author The cruel 😠

    இருந்தாலும் ராஜசேகர் தன் மருமகளை பார்ப்பதாகத்தான் எங்களுக்கு வாக்கிலம்மாவை அறிமுக படுத்தியுள்ளீர்கள், ஞாபகம் இருக்கட்டும் 😀

உங்கள் கருத்தைப் பகிருங்கள்