arrow_back
பரமபதம் அத்தியாயம் 15
பரமபதம் chevron_right பகுதி 15 / 54

அத்தியாயம் 15

visibility 260
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (8 மதிப்பீடுகள்)
பகிர்

வெகு நிசப்தமாக இருந்தது அந்த டிஸ்கஷன் ஹால். சத்யன், அமிர்தா, பரமேஸ்வரன் முதலான முக்கியத் தலைகளோடு மற்ற மேலதிகாரிகளும் கூடி இருந்த அறையில் யார் முதலில் பேச்சைத் துவக்குவது என்று தயங்கி கொண்டிருந்தனர். சத்யனின் முகத்தில் அதீத யோசனை. அதற்குக் குறையாத குழப்பத்தோடு அமிர்தா. தொண்டையைச் செருமிய பரமேஸ்வரன் முதலில் ஆரம்பித்தார்.

“நண்பர்களே! இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நாள். நமது பங்குகள் இந்த அளவு விற்பனையில் இருப்பது மிகவும் கவலைக்கிடமானது. இது எப்படி நடந்ததென்று தெரியவில்லை. யாரையும் கைநீட்டி குறை சொல்லவும் நான் விரும்பவில்லை…” கூறிவிட்டு இடைவெளி விட்டார்.

அவர் ஒருவாறு அறிந்துதான் இருந்தார். பங்கு விற்பனை எந்தப் புள்ளியில் ஆரம்பித்து இருந்தது என்பது அவர் அறியாயதது அல்லவே!

“அதுவும் சந்தை மதிப்பை வேண்டுமென்றே குறைத்து விற்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இது மிகவும் அசாதரணமான சூழ்நிலை.” கம்பெனி செக்ரட்டரி வாசுதேவன் நாயர் கவலையை வெளிப்படுத்தினார்.

“எப்படி இந்த விற்பனையைத் தடுத்து நிறுத்துவது என்பதை முதலில் யோசிக்க வேண்டும். பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை…” ஜெனரல் மேனேஜர் புருஷோத்தம் கருத்து தெரிவித்தார். அதுவரை மெளனமாக இருந்த சத்யன் அந்தக் கூட்டை உடைத்தான்.

“வேண்டாம் புருஷோத்தம் சார். விற்பனை தொடர்ந்து நடக்கட்டும்.” உறுதியுடன் கூறினான். கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்!

“சார்… கம்பெனி ரெபுடேஷன் போய்டும். இது மிகப் பெரிய ரிஸ்க். அவங்க அப்படி விற்பதை பார்த்து மற்ற இன்வெஸ்டர்ஸ் பயந்து விற்க ஆரம்பித்தா நாம் முழுதாக மூழ்கி விடுவோம்.” பரமேஸ்வரன் பதட்டமாகக் கூற,

அதற்குப் பதில் கூறாமல், “ஓகே டீம்… நாளைச் சந்திக்கலாம். இப்போது விடைபெறுகிறேன்.” என்று கூறிவிட்டு இயல்பாக இருப்பது போலவே அமிர்தாவையும் பரமேஸ்வரனையும் கண்களால் அழைத்து விட்டுக் கிளம்பினான். அனைவரது முகத்திலும் டன் டன்னாகப் பயம் பரவி இருந்ததை அவனால் உணர முடிந்தது.

இந்த நேரத்தில் இப்படிக் கூறுவது இந்த முட்டாள் ஒருவனாகத்தான் இருக்கக்கூடும் என்று அவர்கள் நினைக்கலாம். ஆனாலும் இது அவனைப் பொறுத்தவரை மிக அரிய வாய்ப்பு! அவன் என்ன நினைக்கிறான் என்பது புரியாமல் அனைவரும் கலைந்து செல்ல இந்த மூவர் மட்டும் அவனது அறையில் அமர்ந்து இருந்தனர்!

“என்ன சத்யா? இப்படிச் செய்கிறாயே? நிகழ்வின் அவசரத்தன்மை புரியாமல் பேசுகிறாய்…” அவர் அவசரமாகக் கண்டனம் தெரிவித்தார். அவரது ஆதங்கம் புரிந்தது சத்யனுக்கு. பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்த அவரது கையை இயல்பாகப் பற்றி,

“இல்லை அங்கிள். அவர்கள் விற்கட்டும். நாம் வாங்கி விடலாம்.” என்றான் அலட்டிகொள்ளாமல்!

பதட்டமும் கோபமும் சூழ்நிலையை நமக்கு எதிராகத் திருப்பிவிட்டுவிடும் அஸ்திரங்கள். பொதுவாக எதிராளியை கோபப்படுத்தும்போது அவனது பலம் பாதியாகக் குறைகிறது. அவனது பதட்டம் அவனைச் செயல்பட விடாமல் தடுத்து விடுகிறது. இந்த உண்மையை உணர்ந்தால் உலகமே அழிகிறது என்றாலும் நாம் பதட்டமடைவது கடினமே!

“வாட்…” அதிர்ந்த குரலில் இருவரும் கூறியதை பார்த்த சத்யனுக்குச் சிரிக்க வேண்டும் போல இருந்தது.

“ஏய் முட்டகண்ணி… வாய மூடு… கொசு உள்ள போய்க் குடித்தனம் நடத்த ஆரம்பிச்சுடும்…” அந்த நிலையிலும் கேலி பேசுபவனை என்ன செய்வது என்று தெரியாமல் முறைத்தாள் அமிர்தா.

“சத்தி… ஜோக் பண்ணாத… அதுக்கு இது நேரம் இல்ல…” அவளது குரல் பிசிறு தட்டியது. அவளது கவலை எல்லாம் கம்பெனியில் முதலீடு செய்திருக்கும் சிறு முதலீட்டாளர்களை எப்படி இந்தச் சுனாமியிலிருந்து காப்பது என்பதுதான்.

தான் தினமும் பார்த்துப் பழகிய அந்தக் கம்பெனி அவளது தாய்மாமனை போன்றது. மாமனைதான் காப்பாற்ற முடியவில்லை. இந்த நிறுவனம் அவர் வளர்த்த இன்னொரு குழந்தை. இதை மட்டுமாவது எப்பாடு பட்டாலும் காப்பாற்றியே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். ஆனால் அடித்தளமே ஆடும்போது?

“அம்மு… டோன்ட் கெட் பேனிக்… இது நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு…” அதே அலட்டாத குரலில் அவன் கூற,

“எப்படிச் சொல்ற சத்தி?” அவளுக்குப் புரியாமல் கேட்டாள். பரமேஸ்வரனுக்கு ஓரளவு புரிந்தது போலிருந்தது,

“ம்ம்ம்… இப்போ சீதாராமன் கிட்ட இருக்க ஷேர்ஸ் எத்தனை பர்சன்ட்?”

“முப்பது சதவிதம்…” பரமேஸ்வரன் பதில் கூறினார்.

“இப்போ மார்கெட்ல அவர் இறக்கி இருக்கறது?”

“கிட்டத்தட்ட இருபது பர்சன்ட்…”

“சோ நாம அவருக்குக் கொடுக்க வேண்டிய ஐம்பது கோடி… அதாவது முப்பது பெர்சன்ட் ஷேர் வால்யு தான் ஐம்பதில்லையா?”

“ஆமா…”

“அதாவது மூணு பாகத்துல ரெண்டு பாகம் கிட்டத்தட்ட முப்பது கோடி ருபாய் ஷேர்ஸ வெறும் மூணு கோடிக்கு விற்க ட்ரை பண்றார். ரைட்டா?”

“ஆமா… அதுனால அவருக்கு என்ன லாபம் இருக்க முடியும் சத்தி? நமக்கு எப்படி அது லாபமாக முடியும்?” அமிர்தாவிற்குப் புரிவது போலத் தோன்றினாலும் குழம்பினாள்,

“அவரோட லாபம் என்னன்னா நம்ம கம்பெனி இமேஜ காலி பண்ணலாம். ஆனா நம்ம லாபம் என்னன்னா மீதி இருக்க அவரோட பத்துப் பர்சென்ட் டிபெஞ்சர் ஷேர்ஸுக்கு நாம பணம் கொடுத்தா போதும். அதாவது பதினெட்டுல இருந்து இருபது. அதுவும் ஷேர் வால்யுவ இப்படி அவர் இறக்கி விட்டதுனால நாம அவருக்குக் கொடுக்க வேண்டியது கம்மியாகச் சான்ஸ் அதிகம்…”

“வாவ்… பட் நம்ம கம்பெனி வால்யு அதலபாதாளத்துக்குப் போய்டுமே சத்தி?” என்று அமிர்தா கவலைப்படப் பரமேஸ்வரன் மற்றும் சத்யனின் முகத்தில் புன்னகை. இருவரும் அர்த்தமாகப் பார்த்துப் புன்னகைத்தனர்,

“இல்லடா… அவர் bid பண்ணியிருக்கற ஷேர்ஸ நாமளே வாங்கிட்டா?”

“அதை எப்படி நாம வாங்க முடியும் சத்தி?”

“நாம மீன்ஸ் நாம உருவாக்கற குழு. ரிலைன்ஸ் ஷேர்ஸ் ஒரு தடவை இப்படித்தான் அவங்களோட எதிரிகளால அதலபாதாளத்துக்குக் கொண்டு போகப் பட்டது அம்மு. அவங்க பிரெண்ட்ஸ் ஆப் ரிலைன்ஸ்ன்னு ஒரு க்ரூப் பார்ம் பண்ணி ஷேர்ஸ முழுசா அவங்களே பர்சேஸ் பண்ணிட்டாங்க. சோ ஷேர்ஸ் வெளிய போகலை. அதற்கப்புறம் மார்கெட் வால்யுவ ரைஸ் பண்ண அதே ஷேர்ஸ விலைய உயர்த்தி வித்தாங்க. பையிங் ட்ரென்ட் ஸ்டார்ட் ஆனவுடனே ஷேர் வால்யு ரைஸ் ஆகிடுச்சு…”

“ஆமா… அது ஹிஸ்டாரிகல் ஈவன்ட். பெரிய விஷயம்… யார் என்ன விமர்சனம் பண்ணினாலும் ஐ லவ் திருபாய் அன்ட் ஹிஸ் மேஜிகல் அப்ரோ சத்தி…” அமிர்தா சிலாகித்தாள்!

“ம்ம்ம் அதே மேஜிக்கத் தான் இங்க நாம நடத்தியாகணும் அம்மு. அது பெரிய லெவல். இது சின்ன லெவல்…”

“பட் அவ்வளவு ஷேர்ஸ யார் மூலமா வாங்க போறோம்?” அவள் அவ்வாறு கேட்கவும் சத்யன் யோசிக்காமல் கூறினான்.

“நாம தான்…” என்று கூறிவிட்டுப் பரமேஸ்வரனிடம் திரும்பி,

“பி நோட்ஸ்ல அந்த ப்ரோசீஜர்ஸ அட்ஜஸ்ட் பண்ணிரலாம்ல அங்கிள்?”

“ம்ம்ம் கண்டிப்பா… பட் ஹவாலால தான் ட்ரான்சாக்ஷன் பண்ணியாகணும். ஏன்னா ரொம்ப ஷார்ட் பீரியட் ஆப் டைம் இல்லையா!”

“வாட்? ஹவாலா? யூ மீன் ப்ளாக் மணி?” அதிர்ந்தாள் அமிர்தா!

“அம்முகுட்டி… நம்ம கிட்ட இப்போ ஒயிட்டே தத்தை தித்தைன்னு டான்ஸ் ஆடுது. இதுல ப்ளாக் வேறயா?” என்று நக்கலடித்தவனைப் பார்த்து முறைத்தாள் அமிர்தா.

வேறு வழி இல்லாமல் பரமேஸ்வரனிடம் திரும்பி, “அப்படீன்னா ஒன்னு செய்யலாம். முதல்ல நாம இங்கயே பர்சேஸ் பண்ணிரலாம் அங்கிள். பினாமி அக்கௌண்ட்ஸ்ல. தென் பாரின் இன்வெஸ்டர்ஸ் மூலமா பி நோட்ஸ்ல நம்ம கிட்ட இருந்து அவங்க பர்சேஸ்பண்ண மாதிரி நாம ஷேர் வால்யு ஏத்திடலாம். ஓகே வா?” பரமேஸ்வரனிடம் கூறி கொண்டிருந்தவன் அமிர்தாவை பார்த்துக் கேட்டான்,

“ம்ம்ம் இது ஓகே…” அமிர்தா ஒப்புதலாகத் தலையசைத்தாள்!

“ஷப்பா… இந்த ஹோம் மினிஸ்ட்ரி படுத்தற பாடு இருக்கே…” அவனுக்குள்ளாக அவன் முனக,

“ஹல்லோ… இங்க எனக்கு ஒன்னும் கேக்க மாட்டேங்குது. ஒழுங்கா சத்தமா சொல்லு…” மிரட்டினாள்.

“ஆமா… சத்தமா சொல்லி நீ அதைக் கேட்டுட்டாலும்…” மீண்டும் முனக,

“எருமை… என்னடா முனகிட்டே இருக்க?” கோபாவதாரம் எடுக்க ஆரம்பித்தாள்.

“ஒண்ணுமில்ல அம்முகுட்டி… சும்மா சொல்லிப் பார்த்துட்டு இருந்தேன்!”

“ஹா… அது… அந்தப் பயம் இருக்கட்டும்…” ஒற்றைவிரலை காட்டி மிரட்டியவளின் அழகில் எப்போதும் இல்லாதவாறு லயிக்கத் தோன்றியது.

“இருடி… உன்னை அப்புறம் வெச்சுக்கறேன்…” மனதிற்குள்ளாக நினைத்துக் கொண்டான் அந்த வீரதீரசூர பராக்ரமன். அதற்குத் தான் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டி வரும் என்பதை அறியாமல்!

“சரி பர்சேஸ் பண்ணலாம் பண்ணலாம்ன்னு சொல்றியே? டப்பு பாவா டப்பு எக்கடா?” அவனைப் போலவே நக்கல் குரலில் அமிர்தா கேட்டாள்.

அவளைப் புன்னகையோடு நோக்கியவனின் முகத்தில் அந்த நேரத்தின் அழுத்தம் சிறிதும் இல்லை. அதற்குக் காரணம் அவனுக்குப் புதிதாக முளைத்த காதல் என்ற காரணம் தெரியாத ஒன்றல்லவே. காதல் வயப்படுவது மிகச் சுகமான அனுபவம். ஆனால் ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல இந்தச் சூழ்நிலையில், அவன் அந்தக் காதலை, அவனது காதலியை ரசிப்பதை யாரேனும் உணர்ந்தால் கேட்கக்கூடிய ஒரே கேள்வி,

“லூசாடா நீயி?”

ஆனால் தலைவர் அதற்கெல்லாம் வருத்தபடுவாரா?

“அதுக்குத் தான் யோசிச்சிங் யோசிச்சிங் யோசிச்சிட்டே இருக்கிங் அம்மு…” சிரித்தவாறே கூற, பரமேஸ்வரன் சிந்தனையாக அமர்ந்தார். அமிர்தாவின் முகத்திலும் சிந்தனைக்கோடுகள். பரமேஸ்வரன் அருகில் சென்று காதில் ஏதோ ரகசியமாகக் கேட்டுகொண்டாள்.

“ஹலோ என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க?” என்று இருவரையும் பார்த்துச் சத்தி கேட்கப் பரமேஸ்வரன் சிரித்தார். அமிர்தா முறைத்துக் கொண்டே,

“அது உனக்குத் தேவை இல்லாத விஷயம்!”

“ம்ம்ம்… நடத்து… நடத்து…” சலித்துக் கொண்டு, “அம்மு… அம்மா நகையெல்லாம் லாக்கர்ல தான் இருக்கா? உனக்கு எதாச்சும் தெரியுமா?”

“ம்ம்ம் ஆமா சத்தி… மஹதி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தப்புறம் நானும் அத்தையும் தான் லாக்கருக்கு போய் நகைய வெச்சோம். எனக்குத் தெரியாம அவங்க மறுபடி ஓபன் பண்ணியிருக்க மாட்டாங்க…”

“சுமாரா எவ்வளவு வால்யு இருக்கும் அந்த நகை எல்லாம்?” இருவரிடமும் பொதுவாகக் கேட்டான்,

“இன்னைய தேதிக்கு மூணு கிலோ முன்னூத்தி ஐம்பது கிராம் தங்கம் அம்மா வகைக்கு இருக்கு சத்யா. அதோட மார்கெட் வால்யு தொன்னூத்தி ஒரு லட்சம் வரலாம். அதோட டைமண்ட்ஸ் எல்லாமா சேர்த்தி ஒன்னரை கோடிக்கு வரும் சத்தி…” பரமேஸ்வரன் கணக்குத் தணிக்கை செய்தபோது எடுத்த விவரத்தைக் கூறினார். அவனது முகம் சிந்தனையின்பால் பட்டது.

அமிர்தா அவனை நோக்கி,

“எவ்வளவு பணம் தேவைப்படும் சத்தி?”

“எப்படியும் ஐந்திலிருந்து பத்துத் தேவைப்படலாம். அவங்க ஸ்மெல் பண்றதுக்கு முன்ன பர்சேஸ் முழுசா முடியனும்டா. என்ன பண்றது? உடனே பணம் கிடைக்க வழின்னா வேற என்ன?” பணத்திற்கான வழியை யோசித்து யோசித்து அவனது மண்டை காய்ந்தது! இதற்கு மேலும் யோசிக்க முடியுமா என்பதில் அவனுக்குச் சந்தேகமே வந்தது. பெருமூச்சை இழுத்து விட்டபடி,

“ஓகே அங்கிள்… யோசிச்சிட்டு ஈவினிங் உங்களுக்குக் கால் பண்றேன். எப்படியும் விட்டுட மாட்டேன். உங்களுக்கும் ஏதாவது வழி தெரிஞ்சா சொல்லுங்க…”

“ஓகே சத்யா… ஐ ல் லீவ்…” அவரது மனமும் அமிர்தாவின் யோசனையை அசைபோட்டபடி இருந்தது. அதற்க்குன்டான வேலையைப் பார்க்க வேண்டுமே. இந்தப் பெண் பேசாமல் சத்யனிடம் சொல்லிவிட்டே செய்யலாமே என்று எண்ணியவாறே வெளியேறினார்.

“சத்திம்மா… சரி வா… கிளம்பு…” அமிர்தா அழைக்க,

“இல்ல அம்மு… நீ கிளம்பு… எனக்குக் கொஞ்சம் யோசிக்கணும்…” தனிமையைத் தேடியது மனத.

“இல்லடா இப்போ நீ தனியா இருக்க வேண்டாம்… என் கூடக் கிளம்புன்னு சொல்றேன்ல…” சோபாவில் அவன் அருகில் அமர்ந்த அமிர்தாவின் குரலில் அதிகாரம் கூடியிருந்தது. விட்டால் தனிமையில் மனதை குழப்பிக் கொண்டிருப்பான் என்று எண்ணியவளுக்குக் கடுமையை விட்டால் வேறு வழியில்லை என்று தோன்றியது.

சோபாவில் சாய்ந்து கண்ணை மூடி இருந்தவனைப் பார்க்கும் போதே அவளது மனம் பிசைந்தது. எந்தக் கவலையும் இல்லாமல் துன்பத்தையும் நுகராமல் நிழலிலேயே வளர்வதும் ஒரு சாபம் தானோ? அந்தச் சாபம் தான் சித்தார்த்தனை புத்தனாக்கியது ஆனால் சத்யனை?

“ஐயோ வேண்டாம்…” மனதில் பதறியபடி அவனது கையைப் பற்றிகொண்டாள். நிமிர்ந்து அவளைப் பார்த்தவனின் கண்களில் என்ன உணர்வைக் கண்டாள் அமிர்தா?

“சத்திம்மா…” மெலிதாக அழைத்து அவனது கரங்களை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள, அந்த இறுக்கம் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் சக்தியை அபரிமிதமாக வழங்கியது. அந்த ஈடு இணையில்லாத உணர்வைக் கண்களை மூடி மெதுவாக அனுபவித்தான். பின் மெதுவாக அவளது கைகளிலிருந்து தன் கைகளை விலக்குவதே தெரியாமல் விலக்கினான்.

ஏனென்றால் அவனது மனதில் காதல் புகும் வரையில் அவளது தொடுகை அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை ஆனால் காதல் என்னும் கள்ளத்தனம் புகுந்து விட்டபோதோ அவளது சிறு அசைவும் அவனை மிகவும் அசைத்துப் பார்த்தது எனும்போது இந்தத் தொடுகை? வேண்டாம் இது சரியான நேரமல்ல… தன் காதலை வெளிப்படுத்த! தன்னுடைய வாழ்கையே திரிசங்கு சொர்க்கம் போல அந்தரத்தில் ஊஞ்சலாடிகொண்டிருக்க இவளையும் இந்தச் சுழலில் இழுத்து விட வேண்டுமா என்று அவனது மனம் கேள்வி எழுப்பியது.

மெளனமாக எழுந்து நடந்தவனைத் தொடர்ந்தாள் அமிர்தா யோசனையோடு.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 16

கணிப்பொறி முன்னால் அமர்ந்து விற்பனை ஆகியிருந்த பங்குகளைப் பரமேஸ்வரனும் சத்யனுமாக ஏற்பாடு செய்திருந்த ஆட்களின் பெயரில் மாற்றிக் கொண்டிருந்தனர் அந்த ஷேர் ட்ரேடிங் நிறுவனத்தினர். அங்குக் குழுமியிருந்தவர்களின் முகத்தில் உச்சகட்ட பதட்டம். செல்லிங் ட்ரெண்டை பையிங் ட்ரெண்டாகத் திருத்தி எழுதிக் கொண்டிருந்த…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்