அத்தியாயம் 16
கணிப்பொறி முன்னால் அமர்ந்து விற்பனை ஆகியிருந்த பங்குகளைப் பரமேஸ்வரனும் சத்யனுமாக ஏற்பாடு செய்திருந்த ஆட்களின் பெயரில் மாற்றிக் கொண்டிருந்தனர் அந்த ஷேர் ட்ரேடிங் நிறுவனத்தினர். அங்குக் குழுமியிருந்தவர்களின் முகத்தில் உச்சகட்ட பதட்டம். செல்லிங் ட்ரெண்டை பையிங் ட்ரெண்டாகத் திருத்தி எழுதிக் கொண்டிருந்த பதட்டம்!
சிறு இடத்தில் சறுக்கினாலும், வாங்குவது பினாமி ஆட்கள் என்பது வெளியில் கசிந்தாலும், செபியின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிட்டு விடும் என்பதை முழுவதுமாக அறிந்தும் இந்த நடவடிக்கையின் அவசியத்தை அவசரத்தை அனைவரும் உணர்ந்தே இருந்தனர். இதே போலப் பல்வேறு நிறுவனங்களில் பி ஆர் நிறுவன அதிகாரிகளின் மேற்பார்வையில் இதே பரிவர்த்தனை நிகழ்ந்து கொண்டிருந்தது.
சிறிது சிறிதாக ட்ரென்ட் மாறிக் கொண்டிருக்கப் பங்கு மதிப்பு ஏறிக் கொண்டிருந்தது. சீதாராமன் மார்கெட்டில் இறக்கியிருந்த இருபது பர்செண்டில் பதினெட்டுப் பர்சென்ட்டை வாங்கி முடித்திருக்க, நெகடிவ் ட்ரென்ட் பாசிடிவ் ட்ரென்ட் என ட்ரேட் ஏஜென்டின் கணிப்பொறி கூற,
“யாஹூ…” கைதட்டல் காதைக் கிழித்தது அந்தச் சிறிய ஹாலில்.
“யூ ஹேவ் டன் இட்…” பரமேஸ்வரன் சத்யனை இறுக்க அணைத்துக்கொண்டார்.
“நோ அங்கிள் வி ஹேவ் டன் திஸ்… அவர் டீம்…” அனைவரது பங்கையும் உணர்ந்த அவனது வார்த்தைகளில் நெகிழ்ந்தார் பரமேஸ்வரன்,
இதழ்கள் புன்னகை பூச, கண்கள் பனிக்க அவனது தோளைச் சேர்த்து அணைத்து கொண்டவரின் கண்களில் அவன் ராஜசேகரை பல படிகள் விஞ்சும் திறன் தெரிந்தது! தானே சாதித்தாலும் அதைக் குழுவிற்குமாகச் சேர்த்து வெற்றியைக் கொண்டாடி டீம் ஸ்பிரிட்டை உருவாக்குவது என்பது மிகப்பெரிய கலை. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் அந்தக் கலை தெரிந்தவர்கள் சாதித்துக் கொண்டே சென்றுவிடுகின்றனர்! அந்த மாயத்தை அவர் கண் முன் கண்டார்!
ஒவ்வொருவராகக் கை கொடுத்து மகிழ்ச்சியைத் தெரியபடுத்தினார். மற்ற நிறுவனங்களிலும் இதே கொண்டாட்டம் தொடர்ந்தது என்பதை வரிசையாகத் தொடர்ந்த போன் கால்களில் தெரிந்தது,
அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பகிர்ந்தாலும் அவனது பார்வை முழுக்க முழுக்க ஓரமாகக் கண்களில் ஆனந்த கண்ணீரோடு நின்றுகொண்டிருந்த அமிர்தாவை சுற்றிய படியே இருந்தது,
பாசிடிவ் ட்ரென்ட் என்று கண்டவுடன் உடன் சட்டெனத் திரும்பி அமிர்தாவின் மகிழ்ச்சியை முழுவதுமாக உள்வாங்கியவன், பின் தன் கட்டைவிரலை புன்னகையுடன் உயர்த்திக் காட்டினான். பதிலுக்குக் கட்டைவிரலை உயர்த்திவளுக்குக் கண்களால் பதில் கூறிவிட்டுத் தன்னிடம் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு இதமாகப் பதில் கூறினான்,
“சாதிச்சுட்டீங்க சார்…” வாசுதேவன் நாயர் பெருமிதப்பட,
“இல்ல சார்… இனிமே தான் நமக்குச் சோதனையே இருக்கு. கம்பெனிய தூக்கி நிறுத்தியே ஆகணும் இல்லையா…” உண்மை நிலையை அவன் மறக்கவில்லை… எந்த நேரத்திலும் மறுப்பதாகவும் இல்லை.
இந்த வேலைகளோடு உதவிய அனைவருக்குமாகச் சிறு விருந்து அளித்துவிட்டுக் காரில் அமர்ந்த இருவரின் மனமும் வெவ்வேறு உணர்வுகளால் இறுக்கி கட்டப்பட்டு இருந்தனர். பணத்திற்காக அமிர்தா செய்த செயல் அவனை ஒரு வகையில் செயலிழக்க செய்திருந்தது. காதல் என்பதைத் தாண்டி அவனது உள்ளம் நன்றியுணர்ச்சியால் நிரம்பி வழிந்தது. அப்போது நடந்ததை எண்ணி பார்த்தான்!
“என்ன அம்மு… உனக்கு லூசு பிடிச்சு போச்சா?”
அவன் முன்னர் வைக்கப்பட்டு இருந்த நகைகளைப் பார்த்து அதிர்ந்து கேட்டான்.
“ஏன் சத்தி? இதுல என்ன தப்பு?”
“இதெல்லாம் பரம்பரை நகை. இதைப் போய்… ச்சே முதல்ல எடு…” கோபம் அவனுக்குக் கட்டுகடங்காமல் கிளம்பியது!
“சத்தி… எனக்கும் நம்ம குடும்பப் பாரம்பரியம் தெரியும். நம்ம பரம்பரை நகைகளோட மதிப்பு தெரியும். இதை விற்கலாம்ன்னு சொல்லலை. எல்லா நகையுமா சேர்த்து ப்ளஜ் பண்ணிறலாம்…” அவள் விடாப்பிடியாக வாதாட அவனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. மெளனமாக அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அத்தையைக் கண்டனமாக நோக்கினான்,
“அத்தை… இப்படி வாயை மூடியே வெச்சுட்டு இருந்தா என்ன அர்த்தம்? இவ பண்றது எல்லாம் நல்லாவே இல்ல. கொஞ்சமாச்சும் எடுத்துச் சொல்லுங்கத்தை…” அவன் கொதிக்க,
“நான் என்ன கண்ணு சொல்றதுக்கு இருக்கு?”
“ம்ம்ம் நீங்கச் சொல்லாம வேற யார் இவளைச் சொல்றது? இந்த லூச கொஞ்சமாச்சும் அடங்கச் சொல்லுங்க…” கண்மண் தெரியாத கோபத்தில் சீறுகிறான் என்பதைப் புரிந்த அமிர்தா வாய்த் திறவாமல் இருந்தாள்.
“சத்தி கண்ணு… இதுவரைக்கும் நான் காப்பாத்தி கொடுத்துட்டேன். இனிமே உங்க பாடு இந்தச் சொத்தெல்லாம். ஒன்னொன்னா நான் எல்லாத்தையும் இழந்துட்டேன் கண்ணா. இப்போ எனக்குத் தங்கமும் வைரமும் பெருசில்லை. என் குழந்தைங்க இப்படித் தவிச்சுட்டு இருக்கீங்களே. இதைவிட எனக்கு என்ன கண்ணா கொடுமை இருக்க முடியும்? இப்போ செய்றது அவசியமான தேவைதானே? இப்போ உதவாதது வேற எப்போ உதவப் போகுது? இதுக்கெல்லாம் கவலைப்படாத ராஜா…” ஆதூரமாக அவனது தலையைத் தடவி சாவித்ரி கூறியபோது அவனது கண்கள் கலங்கியது. இப்படிப்பட்ட தாயின் மகள்பின் எப்படி இருப்பாள் என்று நினைக்கத் தோன்றியது!
“அதுக்காகப் பரம்பரை கௌரவத்தை அடகு வைக்கச் சொல்றீங்களா?”
“இருபத்தியஞ்சு வயசாகியும் இன்னும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்காளே… இதுல போகாத கௌரவமா அதுல போய்டுது சத்தி…” விரக்தியின் உச்சத்தில் இருந்தது சாவித்ரியின் குரல்.
“அம்மா… நான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்றதுல உனக்கு என்ன கௌரவம் குறைஞ்சு போச்சு? ஏன் இப்படிப் பிற்போக்காவே சிந்திக்கற? எனக்கு முக்கியம் இந்த ஹோம். தனி மனுஷனுக்கு என்னால சேவை பண்ண முடியாது. நான் ஒருத்தி கல்யாணம் ஆகாம செத்து போனா உலகமே அழிஞ்சு போய்டுமா என்ன?” இதுவரை அமைதியாக இருந்தவளை உசுப்பேற்றியது சாவித்ரியின் புலம்பல்!
“ஆமான்டி… உனக்கொரு பொண்ணு பொறந்து அவ இப்படி நின்னாதான்டி உனக்கு என்னோட நிலைமை புரியும். அதுவரைக்கும் உன் வாய் காதுவரைக்கும் நீண்டுட்டுதான் போகும். ஆண்டவா இவளை ஏன்டா பொண்ணா படைச்ச?” சாவித்ரி தனது புலம்பலைத் தொடர,
“ஆக நான் பொண்ணுங்றது தான் உனக்குப் பிரச்னை? பையனா இருந்தா கவலைப்பட மாட்ட?” கடுப்பாக வெளிவந்தது அவளது வார்த்தைகள்.
“அம்மு… புரிஞ்சுக்கோ… நாளைக்கே எனக்கு எதாச்சும் ஒண்ணுன்னா? உனக்கு ஒரு வழி செய்யாம போறமேன்னு என் நெஞ்சு வேகாதுடி…” எப்போதும் கெஞ்சும் கெஞ்சலை அப்போதும் செய்தார்.
“அம்மா… கொஞ்சம் நிறுத்தறியா உன்னோட புலம்பலை! இங்க இருக்கப் பிரச்சனையே தலைக்கு மேல இருக்கு. இதுல நீ வேற…” ஒரேடியாக அவள் தன் அன்னையை அடக்கிவிட அவருக்கோ அவரது உள்ளக்குமுறல் கண்ணீராக வழிந்தது. அதைக் கண்டு பொறுக்காத சத்யன்,
“அறிவுகெட்ட பிசாசு… அத்தை உனக்கு நல்லதுக்குதானே சொல்றாங்க. கேட்டுட்டா குறைஞ்சா போய்டுவ? சரி கேட்டுத் தொலைக்காட்டாலும் இப்படியா பேசுவ? வாய அடக்கு முதல்ல…” அவளுக்குச் சரிக்குச் சரியாக நின்றான். அவள் தன்னுடைய மனதை கவர்ந்து விட்டவள் என்பதெல்லாம் இப்போது பின்னால் சென்றுவிட்டது. தன் அத்தையின் கண்ணீரும் அந்த விவாதமும் மட்டுமே அவனது கண்ணில் பட்டது!
“ஆமாம் பொண்ணுன்னா பேசக் கூடாது, அறிவ வளர்த்துக்கக் கூடாது, அது கூடாது இது கூடாதுன்னு ஆயிரம் பேசுவீங்க. ஏன்னா ஆம்பிளை புத்தி ஆம்பிளை புத்திதானே…”
“இப்போ என்ன பேசுற நீ? பெரியவங்களை ஏன் இப்படி அழ வைக்கிறன்னு கேட்டா அதுக்குப் பதிலைச் சொல்லாம கண்டதை எல்லாம் பேசுற? ரொம்பத் திமிர்த்தனம் பண்ணாதடி…”
“டேய்… டி சொன்ன உனக்கு மரியாதை இல்ல சொல்லிட்டேன்…”
“அப்படித்தான்டி சொல்லுவேன். உன்னால ஆனதை பாருடி…”
“வேணாம்டா…”
“போடி… போடி… போடி…”
“போடா எருமை… போடாப் பிசாசு… பேயி…” வாக்குவாதம் எங்கெங்கோ போய் இங்கு வந்து நிற்க சாவித்ரி ஒன்றும் புரியாமல் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தார்!
“பசங்களா… தயவு செஞ்சு நிறுத்துங்க. என்னால முடில…” தலைக்கு மேல் கையைத் தூக்கி சாவித்ரி கெஞ்சினார்.
“அத்தை… நீங்கக் கவலைப்படாதீங்க. இவளை வழிக்குக் கொண்டு வரவேண்டியது என் பொறுப்பு. இனிமே இந்த எருமைக்காகவெல்லாம் இப்படி அழுதீங்க? அவ்வளவுதான் சொல்லிட்டேன்…” மிரட்டலாக அவனது அத்தையிடம் சொல்லி முடிக்க அவனைப் பார்த்துப் புன்னகைத்தார் சாவித்ரி! அவனுக்கு ஹார்லிக்ஸ் கலக்க சமையலறை சென்றார்.
“சத்தி… இப்போ பிரச்சனைக்கு வர்றியா இல்ல உன் அத்தையவே கொஞ்சிட்டு இருக்கப் போறியா? நேரம் காலம் புரியாம அவங்க தான் பேசுறாங்கன்னா நீயும் அவங்க கூடச் சேர்ந்துட்டு ஏன் இப்படிப் படுத்தற?” கடுப்பாகக் கேட்டாள் அமிர்தா!
“நீ என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன். என்னால பணத்தைச் சுதாரிக்க முடியும்! அதுக்காகப் பரம்பரை கௌரவத்தை அடகு வைக்கற அளவு நான் கோழை இல்ல…” உறுதியாகக் கூறிவிட்டுப் பத்மவிலாசத்திற்குக் கிளம்பினான். உண்பது எல்லாம் அத்தையின் ராமவிலாசமாக இருந்தாலும் இரவு உறக்கம் மட்டும் அவனது வீட்டிற்குச் சென்று விடுவது சத்யனின் தற்போதைய வழக்கமாக இருந்தது. காலையில் சாவித்ரியோ அமிர்தாவோ வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வைத்து வருவதும் அன்றாட நிகழ்வாகியிருந்தது!
“சத்தி…” அவனிடம் பதில் இல்லை!
“சத்திம்மா…” அவளது குரல் குழைந்தது!
“ம்ம்ம்… சொல்லித்தொலை… நான் கிளம்பனும்…” பிடிவாதமாக நின்றான்.
“கௌரவம் கௌரவம்ன்னு சொல்றியே… நாம ஜெய்ச்சு வாழ்ந்து காட்டினா தானே கௌரவம்…”
“ம்ம்ம்… அதனால…”
“இந்த நகை… உனக்கும் எனக்கும் சேர்த்து பாட்டி கொடுத்தது. நம்ம கஷ்டத்துக்கு உதவத்தான் கொடுப்பாங்க சத்தி. இதுல எல்லாம் நம்ம கௌரவம் குறைஞ்சுடாது. புரிஞ்சுக்கோ… அத்தை நகையை வித்தா கூட ஒரு கோடி தேர்த்த முடியுமா? ஆனா இதை ப்ளஜ் பண்ணவே பத்து கோடி கொடுக்கத் தயாரா இருக்காங்க…”
ஒரு நொடி கூட அவனைத் தனியனாக்கி பார்க்க அவளால் முடியவில்லை. இது அவனுக்கு மட்டுமேயான பிரச்சனை என்று அவளால் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை!
“ஆக எல்லாத்தையும் பேசிவெச்சுட்டுதான் என்கிட்டே சொல்ற?” அவனது கோபம் திசைமாறியது!
“இல்லப்பா… விசாரிச்சேன்… உன்னைக் கேட்காம எதுவும் சொல்லிருவேனா? கண்டிப்பா மாட்டேன்…” இதற்கு மேலும் தலைவர் உருகாமல் போய்விடுவாரா? அமிர்தா தான் விட்டுவிடுவாளா?
இரவோடு இரவாகப் பணத்தைப் புரட்டிய விதத்தை நினைக்கையில் இப்போது அவனுக்கு மலைப்பாக இருந்தது. ஒரு வழியாக ஒரு பிரச்சனை முடிந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்டவனைத் திரும்பிப் பார்த்தாள் அமிர்தா!
“அம்முக்குட்டி…” மெலிதாக அழைத்தான் சத்யன்!
“ம்ம்ம்… என்ன சத்தி?” கையில் மொபைலை நோண்டியவாறே கேட்டாள்!
“தேங்க்ஸ் டா…” என்றவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“ம்ம்ம் எதுக்கு? உன்னோடதை உன்கிட்ட கொடுத்ததுக்கா?” நக்கலாக அவள் கேட்க,
“அதுல உன்னோடதும் இருக்கே அம்மு. அதையும் தானே சேர்த்து கொடுத்து இருக்க. அதுக்குத் தான் இந்தத் தேங்க்ஸ்!” சொன்னவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள் அமிர்தா!
“நான் எதையுமே பிரிச்சு பார்க்கலை சத்தி. நீ பார்த்தா இனிமே என்கிட்டே பேசாத…” மிகவும் கடினகுரலில் சொல்லிவிட்டு அவள் மீண்டும் மொபைலில் புதைந்து கொண்டாள்! சத்யனின் முகத்தில் பெருமிதம்! இவள் என்னவள். எனக்காகவே பிறந்தவள் என்கிற பெருமிதம் ஒளிர்ந்தது!
சாவித்ரி சிறுவாச்சூர் சென்றிருந்ததால் கார் போட் கிளப்பில் நுழைந்து பத்மவிலாசத்தின் முன் நின்றது. இறங்கி வீட்டை நோக்கி நடந்தனர். இதமான தோட்டத்து காற்று மேனியை தழுவிக் கொண்டு செல்லக் கதவைத் திறந்து முற்றத்தில் அமர்ந்தவர்களை நனைத்தது பௌர்ணமி நிலவு!
“அம்முக்குட்டி… நான் ஒன்னு கேட்கட்டா?”
“கேளு…” இன்னமும் அவளது கவனம் மொபைலிலேயே இருந்தது!
“ஏன் டா இவ்வளவு பாசத்தை வெச்சிருக்க நீ? ஏன் இப்படி? எல்லாருமே கப்பல்ல ஓட்டை விழுதுன்னா முதல்ல தப்பிக்கத்தான் பார்ப்பாங்க. ஆனா நீ… என்னால ஒண்ணுமே சொல்ல முடியலடா. யூ ஆர் கிரேட்…” அவன் குரல் கமறியது!
“ஏன்னா உன்னை என்னோட குட்டி குழந்தையாத்தான் பார்க்க முடியுது சத்தி. உன்னை வளர்ந்த பையனா நினைக்க முடியல. அதுவும் இல்லாம…” அவள் தயங்க அவளை ஆர்வமாகப் பார்த்தார் நம் தல… இவளுக்கும் எதாச்சும் பல்பு எரிஞ்சுருக்குமோ? அவளோ வேறு மாதிரி தொடர்ந்தாள்!
“மாமா கடைசி நிமிஷத்துல கூட என்னை ரொம்ப நம்பினாங்க சத்தி. நீ இருக்க… சத்திய பார்த்துக்குவன்னு சொல்லிட்டு தான் போனாங்க…” அவளது கண்கள் கண்ணீரால் சூழப்பட்டு இருக்க அவனோ வாய் பேசவே முடியாமல் சமைந்தான். இந்தச் செய்தி அவனுக்குப் புதிது!
“அப்பா… அப்பா அப்படியா சொன்னாங்க?” இயல்பாக இருந்தவன் அதிர்ந்து கேட்டான்!
“ம்ம்ம் ஆமா சத்தி… அது என் காதுல இன்னும் ஒலிச்சுட்டே இருக்குடா. அந்தக் குரல் என்னைத் துரத்திகிட்டே இருக்கு. அப்படி இருக்கும்போது…” என்று கூறி நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.
நீ தொடர்ந்து கூறு என்பதைப் போல மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது கண்களில் நீர் வரவா வேண்டாமா என்று அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது!
“மாமாவுக்காக எதையும் செய்வேன். என் உயிர் போகபோகுதுன்னா கூட அந்த நம்பிக்கைய என்னால காப்பாத்தாம இருக்க முடியாது சத்தி…” அழுகையில் உடைந்தாள் அமிர்தா. அவனது தந்தை மேல் அவளுக்கிருந்த பாசம் அவனை நெகிழ்த்தியது.





