arrow_back
பரமபதம் அத்தியாயம் 18
பரமபதம் chevron_right பகுதி 18 / 54

அத்தியாயம் 18

visibility 255
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (9 மதிப்பீடுகள்)
பகிர்

“கடைசி நாள் இல்லையா…”

அந்தக் கட்டிடத்தைச் சுற்றி பார்த்தபடி உணர்ச்சிகளைத் துடைத்த முகத்தோடு கேட்டான் சத்யன். அதன் காரணத்தை அறிந்த அமிர்தாவின் முகமும் வெளுத்திருந்தது. ஒன்றும் பேசாமல் வேறுபுறமாகத் திரும்பினாள். கண்கள் கலங்கி இருந்தது.

“நோ செண்டிமெண்ட்ஸ் அம்மு.”

அவனுக்கும் சோகம் இருந்தாலும் தன் முன்னே நிற்கும் பிரச்சனைகளைச் சமாளித்தாக வேண்டிய கட்டாயம் அவனுக்குப் புரிந்தது. ஆனால் எப்போதும் தெளிவாகத் தனக்குப் புத்தி சொல்பவள் இன்று இந்த அளவு உணர்ச்சிமயமாக இருப்பது அவனுக்குச் சங்கடத்தைத் தர,

பதில் ஏதும் சொல்லாமல் அவனை வெறுமையான பார்வை பார்த்துவிட்டுப் பக்கத்தில் இருந்த தூணைத் தடவினாள்.

“செல்லகுட்டி… ஜம்முன்னு இருக்கடா குட்டிம்மா…” முதன் முதலாகத் தனது சீனியரிடம் வேலைக்குச் செல்லும் முன் வக்கீல் உடையுடன் இந்த அலுவலகத்திற்கு வந்தபோது ராஜசேகர் கூறியது இப்போது காதில் அறைந்தது. அதன் பின் எத்தனையோ முறை அலுவல் நிமித்தமாகவும் அவருக்கு உதவும் பொருட்டும் இந்த அலுவலகமே கதி என்று இருந்த நாட்கள் எல்லாம் தன் கண் முன்னர் வந்து போன நினைவில் கண்ணீர் குளம் கட்ட ஆரம்பித்து இருந்தது,

“நீ இவ்வளவு சென்டிமென்ட்டா பீல் பண்ணுவன்னு தெரிஞ்சு இருந்தா நான் இங்க கூட்டிகிட்டே வந்திருக்க மாட்டேன் அம்மு.” அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு அவன் கூற அதுவரையில் அழுகையை அடக்கி வைத்திருந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய துவங்கியது,

“முடியல சத்தி. எவ்வளவு நேரம் தான் கல்லு மாதிரியே நடிக்கறது?” கேவிக்கொண்டே பேசியவளை தோளோடு சேர்த்துக் கொண்டான்,

“இனிமே யார்கிட்ட போய் நான் செல்லம் கொண்டாட முடியும் சத்தி? இந்த ஆபீஸ் கட்டடத்தைப் பார்க்கும்போது மாமாவோட வார்த்தைகள்லாம் தான் என் காதுல ஒலிச்சுட்டே இருக்கு. இனிமே எங்க போய் அதையெல்லாம் கேக்க? முடியலடா…”

மெளனமாக அவன் கேட்டுக் கொண்டிருக்க அவள் அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் சுதாரித்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து,

“சாரி சத்தி… நீயே இப்போ தான் அதுல இருந்து வெளிய வந்துட்டு இருக்க நான் பாட்டுக்கு… ச்சே… சாரிடா…” கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டு விலகினாலும் அவளது மனம் புரிந்தது சத்யனுக்கு.

பெண் குழந்தை இல்லாததால் தன்னை விட அமிர்தாவிடம் தந்தைக்கு ஒட்டுதல் அதிகம். அந்த இழப்பை அவளால் ஏற்க முடியாமல் தவிக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான். அவளது தந்தை இறந்தபோது மிகவும் சிறிய குழந்தை அதனால் அந்தப் பாதிப்பு அவளிடம் அவ்வளவாக இல்லை ஆனால் தந்தையும் ஆசானுமாக இருந்த தன் தாய்மாமனோடு அத்தையின் இழப்பும் அவளைப் பெருமளவில் பாதித்திருந்தது!

அன்று தான் தி நகர் தலைமை அலுவலகக் கட்டிடத்தையும் வடபழனி இடத்தையும் மற்ற கடன்தாரர்களுக்கு எழுதிப் பத்திரம் பதிவு செய்து ஒப்படைக்க வேண்டிய நாள்.

கடன்தாரர்கள் அனைவரையும் அந்த அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்தபடியால் முன்னரே இருவரும் வந்து விட்டிருந்தனர். பின் ஒவ்வொருவராக வந்து சேர மனம் கனத்தது. இருவருக்குமே அந்த அலுவலகத்தைப் பிரிவது பல்வேறு துன்பத்தைத் தர வேறு வழியெதுவும் இல்லாததால் மனதை கல்லாக்கி கொண்டு பத்திரங்களில் கையெழுத்து இட்டான்.

“இதோடு எங்க சம்பந்தமா இனி எந்தப் பிரச்னையும் வராது தம்பி. பிடிங்க உங்க அப்பா எழுதிக் கொடுத்த பத்திரம் எல்லாம்.” அந்தக் குழுவில் கொஞ்சம் வயதாகிய சாம்பசிவம் கத்தை பத்திரங்களை அவனது கையில் திணித்தார். அவரது கண்களில் கொடுத்த பணத்திற்கு மேலேயே வசூலாகப் போகிற தொகையின் கனவு! ஆளுக்கொரு ஆசை!

அவற்றை வாங்கி அப்படியே அமிர்தாவிடம் கொடுத்தவன்,

“இதையெல்லாம் சரி பார்த்துக்கோ அம்மு…” என்று கூறிவிட்டு அவரைப் பார்த்தான்.

“உங்களுக்கு வேற எதுவும் உதவி வேணும்னா சொல்லுங்க தம்பி. இந்த நேரத்துல உங்க கழுத்தை இருக்கிடோம்னு நினைச்சுக்காதீங்க. எங்க நிலைமை அப்படி.” மெய்யாகவே அவரது குரல் வருத்தம் தெரிவித்தது. இழவு வீட்டில் பிடுங்கின வரையில் லாபம் என்று செயல்பட்டார்கள் என்று நினைத்து விடுவானோ என்ற கவலை அவருக்கு.

“அதெல்லாம் இல்லங்க. என்னைக்கிருந்தாலும் இந்தப் பிரச்சனை வரத்தான் போகுது. முன்னாடி வந்தேன்ன பின்னாடி வந்தேன்ன? எனக்கு வருத்தம் இல்லைங்க.”

“சத்யா தம்பி… நம்ம வியாபார உறவு எல்லாம் இனிமேலும் இருக்கணும். என்ன வேணும்னாலும் சொல்லுங்க… செய்து தரேன்…” விடுவேனா என்று வசமாகப் பிடித்துக் கொண்டார்.

“சரிங்க… போட் கிளப் வீட்டு பேர்ல தான் கடன் கொஞ்சம் தேவைப்படுது. அதுக்குத் தான் பார்த்துட்டு இருக்கேன்…” அவனது அந்த வார்த்தைக்காகக் காத்து கொண்டிருந்தனர் போலும்,

“ஏன் தம்பி… இவ்வளவு நேர்மையா கொடுக்க வேண்டிய பணத்துக்குச் சொத்தைக் கொடுத்து இருக்கீங்க. நீங்கக் கேட்டா நாங்க கொடுக்க மாட்டோமா? எவ்வளவு வேணும்னு சொல்லுங்க தம்பி…”

அமிர்தாவும் சத்யனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அன்று பேசிய அதே வாயா இது என்ற ஆச்சரியம். மண்ணும் பொன்னும் எப்படி எல்லாம் மனிதனை மாற்றி விடுகின்றன என்பதைக் கண்கூடாகக் கண்டு அயர்ந்தனர்.

“டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன் சார். ரொம்ப நன்றிங்க என் மேல நம்பிக்கை வந்ததுக்கு…” அவர்கள் அறியாமல் ஒரு குட்டு வைத்து அனுப்பவும் மறக்கவில்லை. அவர்களை ஒரேடியாகக் கை கழுவி விடவும் அவன் தயாராக இல்லை. அனைவரிடமும் பொறுமையாகவே பேசிவிட்டுக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்தான்.

இனி இது தனதில்லை!

நீ கொண்டு வந்ததென்ன?

நீ கொண்டு போவதென்ன?

உண்மையென்ன உனக்குப் புரியுமா?

வாழ்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே!

வந்தவனும் வருபவனும்… நிலைப்பதிலையே!

நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்ல பாரு…

மிக அழுக்காகப் பைத்தியகாரனை போல இருந்த அவன் அசரீரி போலப் பாட, திடுக்கிட்ட இருவரும் திரும்பி அந்த மனிதனை பார்த்தனர். பார்க்கப் பைத்தியம் போலத் தென்பட்டாலும் கண்களில் ஏதோ ஒரு ஒளி. இருவரையும் பார்த்தே பாடி கொண்டிருந்தது.

கருவறைக்குள் தானாகக் கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்,

தொட்டிலுக்குள் சுகமாகத் தொடரும் ஆட்டமே.

பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்யப் போராட்டம்.

காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே.

ஊருக்காக ஒரு ஆட்டம், காசுக்காகப் பல ஆட்டம்.

எட்டுக் காலில் போகும்போது ஊரு போடும் ஆட்டமே!

இருவரை பற்றியும் கவலைப்படாமல் அந்த மனிதன் பாடி கொண்டே போக இருவரது முகத்திலும் கசப்பான புன்னகை.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 19

தென்றல் இதமாகத் தீண்டிச் செல்ல அருவி சலசலவென ஓசையுடன் தவழ்ந்தது. சுற்றிலும் மனித நடமாட்டம் கண்ணில் படாத இளம் மாலை பொழுது. வண்டுகள் ரீங்காரமிட காட்டுபூக்களின் வாசனை மனதை மயக்கியது, மாலை சூரியன் இன்னும் சில நிமிடங்களில் என் வீடு சென்று…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்