அத்தியாயம் 19
தென்றல் இதமாகத் தீண்டிச் செல்ல அருவி சலசலவென ஓசையுடன் தவழ்ந்தது. சுற்றிலும் மனித நடமாட்டம் கண்ணில் படாத இளம் மாலை பொழுது. வண்டுகள் ரீங்காரமிட காட்டுபூக்களின் வாசனை மனதை மயக்கியது,
மாலை சூரியன் இன்னும் சில நிமிடங்களில் என் வீடு சென்று விடுவேன் என்று கூறாமல் கூறிக் கொண்டிருக்க அருவியின் இதமான சாரல் முகத்தைத் தீண்டியது. கண்களை மூடி அனுபவித்துப் புன்னகை செய்தாள் அமிர்தா.
“என்னடி சிரிக்கற? ம்ம்ம்…” காதருகில் அந்தக் குரல்! கிசுகிசுப்பான அந்தக் குரலில் மயங்கியவளை அவனது மீசை காது மடல்களை உராய்ந்து உடலைச் சிலிர்க்க வைக்க, அமிர்தா நாணம் கலந்த மயக்கத்தில் கண்களைத் திறக்க மறந்தாள்.
“கேள்வி கேட்டா பதில் சொல்லணும்…” காது மடல்களிலிருந்து கீழிறங்கி கழுத்தை உராய்ந்தது அவனது இதழ்கள்.
“ம்ம்ம்ம்… எ… ன்… ன சொ… ல்… ற… து…???” அவன் ஏற்படுத்திய குறுகுறுப்பு தாங்கவியலாத அமிர்தாவிற்கு வார்த்தைகள் வெளியே வர மறுத்தன.
கைகள் வலுவிழந்து தொய்ய உடல் நடுங்கியது.
“என்ன சொல்றதா? அதையும் நான் தான் சொல்லித் தரணுமா?” என்றவன், அவளது காதில் ரகசியம் பேசச் செக்க சிவந்த அவளது முகம் வெட்கத்தில் இன்னும் சிவந்தது.
“ச்சீ…” அவனது ரகசிய வேண்டுகோளில் உடல் சிவக்க முகத்தை மறைத்தாள்.
அவளது வெட்கம் அவனை ஏதேதோ செய்ய, அவளது முகத்தைத் திருப்பி. அவளது இதழ்களை,
அமிர்தா திடுக்கிட்டு எழுந்தாள்!
சமீப காலமாக அடிக்கடி வரும் அதே கனவு!
அந்த வெட்கம் மீதமிருக்க அவளது இதழ்களைத் தடவி பார்த்தாள்!
மீசையின் குறுகுறுப்பு மீதமிருந்தது!
உடல் வியர்வையில் குளித்திருந்தது ஏசியையும் மீறி!
நடுக்கம் இன்னமும் தீரவில்லை!
அவளுக்கு இந்தக் கனவின் அர்த்தமோ ஏன் வருகிறது என்று ஆராயவோ தோன்றவில்லை. வெறும் கனவு தன்னை இப்படியும் பாதிக்க முடியுமா என்று எண்ணவே தோன்றியது,
கனவின் நாயகன் யாராக இருக்கக்கூடும் என்று முதன்முறையாகக் கேட்டது ஒரு மனது. இன்னொரு மனதோ அர்த்தமற்ற கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதே என்று வாதிட்டது. இரண்டும் மாறி மாறி வாதிடக் கடைசியில் இரண்டாவது மனமே ஜெயக்க… வலுக்கட்டாயமாகக் கனவின் நிழல் பிம்பத்தை உதறிவிட்டு எழுந்தாள்.
சத்யன் வெளி கடன்களை முடித்து இருந்தாலும் மெச்சூர் ஆன டெபாசிட்களைக் கொடுக்க வேண்டிய தினம் நாளை. இவற்றையும் முடித்து விட்டால் சீதாராமனின் டிபெஞ்சர் சூட் விஷயத்தை ஆற அமரப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கக் காலையில் பணம் வந்து சேர வேண்டுமே என்று மனம் நடுங்கியது.
சொத்துக்களை எழுதி வாங்கியவர்களிடமே சத்யன் கேட்டு இருந்தாலும் இன்றைக்குள் அவர்கள் பணத்தைப் பட்டுவாடா செய்தால் மட்டுமே நாளை இந்த விஷயத்திலிருந்து தப்ப முடியும் என்ற சூழ்நிலையில் அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பது புரியவில்லை அமிர்தாவிற்கு.
மெளனமாகக் கிளம்பியவளை பார்த்துக் கொண்டிருந்த சாவித்ரி…
“என்னடா அம்மு… ஒரு மாதிரியா இருக்க?” காலை உணவைப் பரிமாறியவாறே கேட்கக் குழப்பத்தைச் சுமந்த அமிர்தாவின் சிந்தனைக்கு அவளது தாயின் கேள்வி எட்டுமோ? பதில் சொல்லாமல் உணவை உண்டு கொண்டிருந்தவளை உலுக்கினார் சாவித்ரி.
“அம்மு…” திடுக்கிட்ட அமிர்தா, “என்னம்மா?” கனவிலிருந்து விழித்தவள் போலக் கேட்க,
“ஏன் ஒரு மாதிரி இருக்க அம்மு?” கொஞ்சம் சீரியசாக அவர் கேட்டார்.
“ஒண்ணுமில்லம்மா. நாளைக்கு டெபாசிட்ஸ் திருப்பனும். ஒரு சிலர் கிட்ட சத்யா பணம் கேட்டு இருக்கான். அது வந்து சேரணுமே. அதான்…” சொல்லிவிட்டு அவள் கிளம்ப எழுந்து கொண்டே,
“அம்மா… சத்தி சாப்பிட இன்னும் வரக் காணோம்? எதாச்சும் சொன்னானா?”
“ஆமாம் அம்மு. யாரையோ பார்க்கப் போகணும். காலைல டிபன் வேணாம்னு காலைலயே போன் பண்ணிடுச்சு. வேணும்னா நீ கொண்டு போறியா? குழந்தை பசி தாங்காது…” பாசத்தோடு அவர் கூற,
“ஹஹா அம்மா அவன் குழந்தையா உனக்கு?” அவரது கன்னத்தைப் பிடித்து அவள் கிள்ள,
“ஹேய் வாலு… நீங்க ரெண்டு பேருமே எனக்குக் குழந்தை தான். அதுவும் இப்போ சத்தி தான் எனக்கு முக்கியம். நீ எப்படி நினைச்சாலும் சரிடா…” அவர் கூறி முடிக்கும் போதே கண்கள் கலங்கின,
அவரை அணைத்து முத்தமிட்ட அமிர்தா, “நீ சொல்லாமையே எனக்குத் தெரியும்மா. சரி அவனுக்கும் பேக் பண்ணு. எடுத்துட்டு போய்டறேன். வயித்தை காயபோட்டுட்டு அப்படி என்ன வேலைய பார்த்துக் கிழிக்கப் போறான்னு நானும் தான் பார்த்துடறேன். பத்து நாளா ஆள் கைல சிக்க மாட்டேங்கறான். இன்னைக்கு எப்படியும் பிடிக்கணும்மா. கொஞ்சம் கூட ரெஸ்ட்டே இல்லாம. பாவமா இருக்கும்மா.”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே செல்பேசி அழைக்க.
எடுத்துப் பேசினாள்.
“ஹாய் ஏவி…”
“ஹாய் ராகவ்… என்ன காலைலயே?”
“தேவதையோட குரலைக் கேக்கணும்ன்னு தோனுச்சு. போன் பண்ணிட்டேன். தப்பா ஏவி?”
ஆஹா காலங்கார்த்தாலையே ஆரம்பிச்சுட்டான்ய்யா ஆரம்பிச்சுட்டான் என்று எண்ணி கொண்டாள் அமிர்தா.
“ப்ளீஸ் அந்த ஏவிய முதல்ல விடுங்க. சத்தி சொல்றா மாதிரி எனக்குக் காதுல ஆவி ஆவின்னு விழுது…” பரிதாபமாக அமிர்தா கூறவும் மனம் விட்டுச் சிரித்தான் ராகவன்,
“அப்படீன்னா உங்களை எப்படிக் கூப்பிடறது?” பந்தை அவள் புறமாகத் தள்ளி விட்டான்.
“எல்லார் மாதிரியும் அமிர்தான்னோ வர்ஷினின்னோ இல்ல அமிர்தவர்ஷினின்னு கூப்பிட்டா கூடத் தப்பில்ல. இந்த ஏவி மட்டும் வேணாம். சத்தி கிண்டல் பண்றாங்க ப்ளீஸ்…”
“ஓகே… வர்ஷினின்னே கூப்பிடறேன். இதுக்காகவெல்லாம் என்கிட்டே கோவிச்சுக்காதீங்க. ப்ளீஸ்…” அவன் கெஞ்ச,
“ச்சே ச்சே… அப்படி எல்லாம் இல்ல ராகவ். சரி அதை விடுங்க. காலைலயே அட்டெண்டன்ஸ் போட்டு இருக்கீங்களே. என்ன மேட்டர்?”
“இன்னைக்கு ஒரு குட்டி பையனுக்குப் பர்த்டே. அதான் மேட்டர்.” சிரிக்காமல் அவன் கூற,
“ஹஹா யாருக்கு ராகவ்?”
“வேற யாருக்கு? ராகவன் என்னும் பேர் நாமம் கொண்ட ஒரு குட்டியூண்டு பையனுக்குத் தான். அதான் அந்தக் குட்டி பையனுக்கு ரொம்பப் பிடிச்ச குட்டி தேவதைக்கிட்ட விஷ் வாங்கலாம்ன்னு அந்தக் குட்யூண்டு பையன் போன் செய்தானாம்.” ஏற்றி இறக்கி விதவிதமாகச் சேஷ்டைகளோடு அவன் கூற, அவள் சிரித்தாள்.
“இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல? நீங்கக் குட்டி பையனா?”
“இல்லையா பின்ன? இன்னைக்குத் தான் பிறந்தேனாம். அம்மா சொன்னாங்க.”
“ஓகே… ஹேப்பிப் பர்த்டே குட்டிபாப்பா.”
“தேங்க்ஸ் தேங்க்ஸ். ஓகே… ஈவினிங் வந்துடுங்க. ஐடிசி கிராண்ட்ல… பார்ட்டி!”
“ஈவினிங்கா? சத்தி எதாச்சும் வேலை வெச்சிருப்பாங்களே. என்னன்னு கேட்டுட்டுக் கன்பர்ம் பண்றேன் ராகவ்…”
“ஓகே… நான் சத்யாவுக்கும் சொல்லிடறேன் வர்ஷ். நீங்க வந்துடுங்க…”
“வாட் வர்ஷா?” அவள் சிறிது அதிர்ந்தாள்!
“ஓகே அப்படீன்னா ஏவி ஓகே வா?” விடமாட்டேன் என்று வம்பு செய்த ராகவனை என்ன சொல்லிச் சமாளிப்பது என்று புரியாமல் விழித்து,
“ஐயோ வேணாம்…” என்ன இவன் அளவுக்கு மீறி உரிமை எடுக்கிறானே என்று சங்கடமாக உணர்ந்தாள். ரசிகதன்மைக்கும் அதைத் தாண்டிய ரசனைக்குமான வேறுபாடு அறிந்தவளால் உணர முடிந்தது, ராகவனின் எண்ணத்தை. ஆனால் அவளுக்கு அது ரசிக்கவில்லை!
“ஓகே ஏஞ்சல்… சத்யாவோட பார்ட்டிக்கு கண்டிப்பா வந்துடுங்க. சீ யூ தேர்…” என்று கூறிவிட்டு செல்பேசியை அவன் வைக்க, அவளுக்கு நிம்மதி பெருமூச்சு!
சோபாவில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்து இதைப் பற்றி யோசித்தவளை சாவித்ரியின் குரல் தட்டி எழுப்பியது.
“அம்மு… என்ன பண்ணிட்டு இருக்க? மணியாகுது பாரு… சத்தி எங்கயாச்சும் போய்ட போகுது. சீக்கிரம் கிளம்பு…”






அய்யோ இந்த ராகவு தொல்ல தாங்க முடியலையே