arrow_back
பரமபதம் அத்தியாயம் 20
பரமபதம் chevron_right பகுதி 20 / 54

அத்தியாயம் 20

visibility 253
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (8 மதிப்பீடுகள்)
பகிர்

அலுவலகம் தற்காலிகமாக இன்னொரு கட்டிடத்தில் இயங்கி கொண்டிருந்தது. வெகுபரபரப்பாக… பத்து நாட்களாக அலுவலகத்திற்கு வராமல் வெளியில் அலைந்து கொண்டே இருந்ததில் அலுவலகம் முழுமையும் அமிர்தாவின் கீழ் தான் இயங்கி கொண்டிருந்தது. சத்யனோ எப்போது வருகிறான் எப்போது போகிறான் என்பதே அவளுக்குமே புரியாத புதிராக இருந்தது,

விட்டதைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு உறுதி ஆனால் கண்மண் தெரியாமல் வீட்டிற்கும் சரியாகப் போகாமல் சரியாக உணவும் உண்ணாமல் இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று கோபம் பற்றிக் கொண்டு வந்தது. இன்று மட்டும் கையில் கிடைக்கட்டும் என்று கறுவி கொண்டிருந்தாள்!

“மேடம்… கூப்பிட்டீங்களா?” சத்யனின் பிஏ சந்திரன் வந்து நின்றான்,

“ஹா… வாங்க சந்திரன். சத்யா எங்க?”

“சார் இன்னும் ஆபீஸ் வரலை மேம். இன்னும் இன்பார்ம் பண்ணலை.”

“நேத்து?”

“ஈவினிங் சிக்ஸ் தர்ட்டிக்கு வந்துட்டு கொஞ்ச நேரத்துல எல்லாம் போய்ட்டாங்க மேம்.”

அந்தச் சந்திரன் கூறும் போதே இவளுக்கு ரத்த அழுத்தம் எகிறியது. எதையும் சொல்லாமல் இந்த அளவு அவன் அலைவதை நினைக்கும்போது மனம் கனத்தது,

“சத்யா வந்தா உடனே எனக்கு இன்பார்ம் பண்ணுங்க சந்திரன்.”

“கண்டிப்பா மேம்…”

சந்திரனிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே அறைக்குள் நுழைந்தான் சத்யன். மிகவும் நலுங்கிய தோற்றம். உறக்கம் காணாத விழிகள். சோர்வான முகம். மனதை பிசைந்தது அமிர்தாவிற்கு! அவனுடைய நாற்காலியில் அமர்ந்து தலையைப் பின்னால் சாய்த்தபடி கண்களை மூடினான்.

“நீங்கப் போய் வேலைய பாருங்க சந்திரன்…” அவன் வெளியேறியதும் சத்யனின் அருகில் சென்றவள்.

“சத்தி…” மெதுவாக அழைக்க,

“ம்ம்ம்…” சோர்வை தாங்கி வெளிவந்தன வார்த்தைகள்!

“என்னப்பா ஒரு மாதிரியா இருக்க? எங்க போன?”

“ஒண்ணுமில்ல… தலை வலிக்குது அம்மு…” கண்களை மூடிச் சாய்ந்தபடியே அவன் கூற அவனது பின்புறம் வந்து தலையை இதமாகப் பிடித்து விட ஆரம்பித்தாள்.

“வேணாம் அம்மு… விடு…” இதமாக இருந்தாலும் ஏனோ மனம் வேண்டாம் என்று மறுக்க,

“அடச்சை… சும்மா இரு…” விடாமல் தலையைப் பிடித்து விட்டுக்கொண்டிருந்தாள். அது அவனுக்குப் பத்மினியை ஞாபகப்படுத்த ஏதேதோ நினைவுகள் மனதில்!

“ஏன் சத்தி ஒரு மாதிரியா இருக்க? சாப்பிட்டியா?” அவள் இப்படிக் கேட்ட போதுதான் தன் பசியை உணர்ந்தான். முதல் நாள் மதியம் பேருக்குக் கொரித்தது. பதில் ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடியவாறே சாய்ந்திருக்க,

“சத்தி… போ போய்க் கைய்யக் கழுவிட்டு வா…” எதுவுமே சொல்லாமல் அவனை விரட்டினாள்.

“போடா எனக்குத் தூக்கம் வருது.” கண்களைத் திறக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான். அவனுக்கு அவள் தலையைப் பிடித்து விடுவதே போதுமானதாக இருந்தது.

“சரி… வெறுமனே வாயை மட்டும் திற. பொங்கலை வாங்கிக்க…” அவனுக்காகச் சாவித்ரி கொடுத்து அனுப்பியதை அவனுக்கு ஊட்ட ஆரம்பிக்கச் சங்கடமாக மறுத்தான்.

“வேணாம் அம்மு. கொடு நானே சாப்ட்டுக்கறேன்.”

“மூச்… உன்னைப் பத்தி தெரியாதா? ஒழுங்கா வாயை மட்டும் திற…” மிரட்டலாகச் சொன்னவளை புன்னகையோடு பார்த்தான்.

“அம்மா இருக்கற வரைக்கும் என் கூட அத்தனை சண்டை போடுவ. இப்ப அப்படியே ஆப்போசிட்டா ஊட்டியெல்லாம் விடற. என்னடி மேட்டர்?” பொங்கலை வாங்கிக்கொண்டே அவளை வம்பிழுக்க,

“போடா… பாவம் பையன் பசியோட இருக்கான்னு பார்த்தா. லொள்ளா பேசுற?” சிரித்துக் கொண்டே சொல்ல,

“ஏய்… போதும் அம்மு. இன்னமும் சாப்பிட்டா தூக்கம் தான் வரும்.”

“பரவால்ல… ஒரு மணி நேரம் தூங்கி எந்திரி. நேத்து தூங்குனியா இல்லையா?”

“கொஞ்சம் வேலை இருந்துச்சு. குடோன்ல… அதைப் பார்த்துட்டு தூங்கவே இல்ல…”

“ஏன் சத்தி? உன்னை ஒருத்தர் கூடவே இருந்து தூங்க கூட வைக்கணுமா? என்னதான் வேலையா இருந்தாலும் நைட் தூங்காம கூடவா வேலை பார்ப்பாங்க?” அவளது அர்ச்சனையை ஆரம்பிக்க இன்டர்காம் அழைத்தது!

“சார்… உங்களைப் பார்க்க ராகவன் சார் வந்திருக்காங்க…”

“வரச் சொல்லுங்க…”

வைத்து விட்டு அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான்.

“உன்னோட அர்ச்சனைய ஸ்டாப் பண்ணு. இப்போ உனக்குப் பூ போட்டு அர்ச்சனை செய்ய ஒருத்தன் வர்றான்.” யார் அது என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க உள்ளே வந்த ராகவனைப் பார்த்தவுடன் மனம் அய்யோவென்றது! இங்கேயும் வந்துவிட்டானா?

“ஹாய் சத்யா…” உள்ளே வந்தவன் அப்போதுதான் அமிர்தாவை பார்த்தவன் அவள் பொங்கலை சத்யனுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்ததையும் பார்த்து ஒரு கணம் திகைத்து, பின்னர்ச் சிரிக்க,

“ஏன் ராகவ் சிரிக்கறீங்க?” அமிர்தா கேட்க,

“இல்ல குழந்தைக்கு ஊட்டிவிடற மாதிரி உங்க கசின்க்கு ஊட்டி விட்டுட்டு இருக்கீங்களே… அதான்…” சொல்லி விட்டு மீண்டும் சிரிக்க,

“குழந்தை கூட ஒழுங்கா சாப்பிட்டுக்கும் ராகவ். ஆனா எங்க சத்தி படு மோசம். கவனிக்கலைன்னா சாப்பிட மாட்டாங்க. தூங்க மாட்டாங்க. வேலை வேலைன்னு உடம்பை மட்டும் கெடுத்துக்குவாங்க. அதான் அம்மா நான் கிளம்பும் போதே டிபனை பாக்ஸ்ல போட்டுக் கொடுத்துட்டாங்க.” அவள் சத்யனை தாங்கிக் கூற ராகவனுக்கு மனதின் ஓரத்தில் ஏமாற்றம் சூழ்ந்தது.

“லக்கி தான் சத்யா நீங்க. இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்யத் தேவதை மாதிரி ஒரு பொண்ணு கூடவே இருந்தா என்னையெல்லாம் கைல பிடிக்க முடியாது.”

“எங்க எங்க?” சத்யன் தேடுபவனைப் போலப் பாசாங்கு செய்ய,

“என்ன தேடுறீங்க சத்யா?” புரியாமல் ராகவ் கேட்க அவனது நக்கல் புரிந்த அமிர்தா   கொண்டாள்.

“இல்ல… யாரோ தேவதைன்னு சொன்னீங்களே ராகவ். அதான்… தேடி பார்க்குறேன்.” என்று குறும்புத்தனம் மாறாமல் அவன் கூற அவனது முதுகில் அடி வைத்து,

“பக்கி… ரொம்ப வாராத சொல்லிட்டேன்…” என்று அவனைக் கடித்து விட்டு ராகவனின் புறம் திரும்பி,

“ஏன் ராகவ் இந்த லூசு முன்னாடி இப்படியெல்லாம் சொல்றீங்க. இதை வெச்சு ஒரு மாசம் கலாய்ப்பாங்க.” சோகமாகக் கூறினாள். இருவரும் மனம் விட்டுச் சிரிக்க, சத்யன் சிரிப்பதை ஆதூரமாகப் பார்த்தாள்.

“இப்போ எப்படிம்மா இருக்கு தலைவலி?” அவனது நெற்றியை தடவி கொடுத்தவாறே கேட்க,

“இப்போ பரவால்லடா… கொஞ்சம் தூங்கி எழுந்தா சரியா போய்டும்.”

“சரி அப்படீன்னா நீ கிளம்பு. இங்க நான் பார்த்துக்கறேன்.”

“இல்ல நீ வேலைய பாரு. ராகவ் கிட்ட பேசிட்டு நான் இங்கயே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன். சொல்லுங்க ராகவ்…” இருவரையும் இமைக்காமல் ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த ராகவனைச் சத்யனின் குரல் நடப்பிற்குக் கொண்டு வந்தது. சத்யனை பார்த்து வெறுமையாகப் புன்னகைத்தான்.

“ஏதேதோ சொல்லனும்ன்னு தான் நினைச்சேன் சத்யா… ஆனா…” தயங்கியபடி நிறுத்தினான் ராகவன்…”

“ஆனா…” சத்யன் எடுத்துக் கொடுக்க,

“ரெண்டு பேரும் பெர்பெக்ட் பேர் சத்யா. மேட் பார் ஈச் அதர்.” குரலில் இருந்த ஏக்கத்தை உணர்ந்தாலும் சத்யன் இனிமையாக அதிர்ந்தான். அமிர்தாவோ சங்கடமாக அவனைப் பார்த்தாள்.

“ஹும்ம்ம் ஓகே… ஈவினிங் என்னோட பர்த்டேபார்ட்டி இருக்கு. ஐடிசி கிரான்ட்ல. ரெண்டு பேரும் கண்டிப்பா வந்துடனும். அமிர்தாகிட்ட காலைலேயே பேசிட்டேன் சத்யா. உங்களை இன்வைட் பண்ணத்தான் இப்போ வந்தேன்”என்று கூறவும் சத்யனும் புன்னகைத்து,

“கண்டிப்பா வந்துடறோம் ராகவ்…”

“அப்புறம்… பணம் எல்லாம் ரெடி ஆகிடுச்சா?”

“ம்ம்ம்… பதினஞ்சுக்கு முடிஞ்சுது… இன்னும் அஞ்சு தேவைப்படுது. அதுக்குத் தான் என்ன பண்ணன்னு தெரியல ராகவ்! பார்த்துட்டே இருக்கேன்.”

“ஓ ஓகே அஞ்சு தானே… நானே தர்றேன். எப்போ வேணுமோ வாங்கிக்கங்க.” சுலபமாகச் சொன்னவனைப் பார்த்து வியந்தனர் இருவரும்,

“நிஜமாவா ராகவ்?” வியப்பு மாறாமல் அமிர்தா கேட்க,

“ஏங்க அமிர்தா? உங்களுக்காக இதைக் கூடப் பண்ண மாட்டேனா? ஆனா கண்டிப்பா வட்டி வாங்கிருவேங்க…” விளையாட்டாகச் சொன்னவனைப் பார்த்துச் சிரித்தனர் இருவரும். எப்படியோ இந்தப் பிரச்சனைகள் முடிந்தது என்று எண்ணி கொண்டனர்! இப்போது வெளியில் வாங்கும் கடனைப் பேங்கிலிருந்து பணம் வந்தவுடன் திருப்பி விட்டு வட்டியை குறைத்துக் கொள்ள முடிவு செய்து இருக்கவே, நிம்மதி பெருமூச்சு விட்டனர் இருவரும்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 21

பார்ட்டியை முடித்து விட்டு நேரத்திலேயே கிளம்பி விட்டனர் இருவரும். அமிர்தாவுக்குப் பத்மவிலாசத்தில் வேலை இருந்தது. சமையலறையில் பொருட்களை ஒதுக்கி, சுத்தபடுத்தி விட்டால் வேலை செய்பவர்களுக்குச் சுளுவாக இருக்குமென்பதனால் அவனையும் மிரட்டி இருத்தி கொண்டாள். அதை முடித்து விட்டு வேலை முடிந்தபின் தன்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்