arrow_back
பரமபதம் அத்தியாயம் 24
பரமபதம் chevron_right பகுதி 24 / 54

அத்தியாயம் 24

visibility 263
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.1/5 (8 மதிப்பீடுகள்)
பகிர்

மெளனமாக அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்ப்பதாகப் பேர் செய்தாலும் அமிர்தாவின் மனம் உலைகளனாகக் கொதித்தது. அவளைப் பொறுத்தவரை,

காதல் ஒரு பாவச்செயல்!

திருமணம் ஒரு பெருங்குற்றம்!

திருமணத்தை நினைத்துக் கூடப் பார்க்க விரும்பாமல் அவர்களுடைய ஆதரவற்றோர்களுக்கான இல்லமான சரணாலயத்தைச் சுணங்காமல் கொண்டு செல்வது எப்படி என்று தான் யோசித்திருக்கிறாள். இப்போதைய பிரச்சனைகளை விடுத்து பார்த்தால் அவளுடைய மொத்த உழைப்பும் அந்த இல்லத்திற்காகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை முழுவதுமாக அறியாமல் அவனிடம் கோபிக்கவும் முடியவில்லை.

காரை விட்டு இறங்கியவள் அவனைத் திரும்பியும் பார்க்காமல் உள்ளே செல்ல எத்தனிக்க,

“அம்மு…”

திரும்பிப் பார்த்து முறைத்தாள்!

“என்ன இப்படி முறைக்கற?” ஒன்றும் அறியாதவன் போலக் கேள்வி கேட்க,

“ஒன்னும் இல்ல… நீ சொல்ல வந்ததைச் சொல்லு…”

“ஒண்ணுமில்ல… நாளைக்குக் கொஞ்சம் காலைல நேரமே ஆபீஸ் வந்துடு. நான் இல்லைன்னா கூட டெப்பாசிட்ஸ் ஒர்க் நீயே பார்த்துடு…”

“அய்யா… அப்படி என்ன வெட்டி முறிக்கப் போறீங்க? இந்த வேலைய விட உங்களுக்கு முக்கியமான வேலை எதுனாச்சும் இருக்கா?” கடுப்பில் அவள் வார்த்தைகளைத் துப்பினாள்.

“இன் கேஸ்… நான் இல்லைன்னா தான் சொல்றேன். அதுக்கு எதுக்கு இப்படிப் பொரியர அம்மு?” இப்போது சரணடைவதை தவிர வேறு வழியில்லை என்று தோன்ற, அத்தை மகள் ரத்தினமோ எகிறி கொண்டிருந்தாள்!

“உன் ஆபீஸ் வேலையவே பார்த்துட்டு இருந்தா, எனக்கு வேலை இல்லையா? என்னோட கேஸ்லாம் யார் பார்க்கறது? இவ்வளவு நாளா புக் பண்ண வந்த ப்ரோக்ராமை கூட அக்செப்ட் பண்ணலை. நீ உன்னோட வேலைய நீயா பார்த்துக்கோ சத்தி.” யாதுமாகி தன்னைத் தாங்கிய அமிர்தா கூறிய வார்த்தைகளைக் கூர்மையாகப் பார்த்தபடி கேட்டவன்.

“உன் இஷ்டம் அம்மு. நீ வர்றதும் வராததும்… வேலை பார்க்கறதும் பார்க்காததும். ஆனா அது என் ஆபீஸ் இல்லை. நம்ம ஆபீஸ். சரி நான் கிளம்பறேன். அத்தைகிட்ட சொல்லிடு…”

சொல்வதைச் சொல்லிவிட்டு அவன் கிளம்ப அவளது மனம் தவித்தது. கோபத்தில் வார்த்தைகளைச் சிதற விட்டாலும், நிதானத்தில் அதைக் கோர்த்து விடுவாள். சட்டென்று கோபத்தை அவன்மேல் காட்டிவிட்டவளுக்கு அந்தக் கோபத்தை இழுத்து வைக்கத் தெரியவில்லை!

“உள்ள வந்து பால் சாப்ட்டுட்டு போ…”

“இல்ல… நான் கிளம்பறேன்…” இப்போது முறுக்கிக் கொள்வது அவனது முறையாயிற்று!

அவனது கார் மறையும் வரை அங்கேயே நின்று இருந்தவள், கால்கள் தொய்ய உள்ளே சென்று படுக்கையில் விழுந்தாள்! என்னவென்று சொல்ல முடியாத எரிச்சல் அவளைப் படுத்தி வைத்தது!

மனசாட்சி அவளைச் சாடியது. அவன் உன்னை விரும்புகிறேன் என்று கூறினானா? அதற்குள்ளாக ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? அதுவும் இல்லாமல் ஆதரவுக்காகத் தானே அவன் உன்னைத் தேடுவது? அவனிடம் போய் அதும் இந்தச் சமயத்தில் இப்படி நடந்து கொண்டாயே. சாட்டையைச் சுழற்றியது மனசாட்சி.

“ச்சே… நான் நடந்து கொண்ட முறை மிகவும் தவறு. அவனுக்கும் தான் இப்போது யார் இருக்கிறார்கள்? நானே இப்படிச் செய்தால் அவன் எங்குப் போவான்?” தனக்குத் தானே புலம்பியவள், உறங்கவும் முடியாமல் விழித்திருக்கவும் முடியாமல் தவித்தாள்!

“பேசாம கூப்பிட்டு சாரி சொல்லிடலாமா?” அவள் இப்படி யோசிப்பதே புதியதாக இருந்தது. என்றுமே அவள் தயங்கியதில்லை. ஒருவாறாக யோசித்து முடித்துச் செல்பேசியை எடுத்தவள், அவனது எண்ணிற்குஅழைத்தாள்!

“சொல்லு…” ஒட்டாத தொனியில் அவன் பேச, முதலில் ஒரு நொடி தயங்கியவள்,

“ச… சத்தி…” எச்சிலை விழுங்கினாள்!

“என்ன சொல்ல வந்தியோ அதைச் சொல்லு. எனக்குக் காலைல நிறைய வேலை இருக்கு. உனக்கு உன்னோட வேலையும் கெட்டுடும். சீக்கிரம் சொல்லு.” கோபத்தை உள்ளடக்கி அவன் வார்த்தைகளை மென்று துப்ப,

“கோபப்படாதடா. ப்ளீஸ்…” அமிர்தா கெஞ்ச ஆரம்பிக்க அவனோ மிஞ்ச ஆரம்பித்தான்.

“ஏன்? உனக்கு மட்டும் தான் பேசத் தெரியுமா? ஒரு நிமிஷத்துல கொட்டிட்ட இல்ல…”

“சரி… அதுக்குத் தான் சாரி… சாரி… சாரி… ஏதோ டென்ஷன்ல சொல்லிட்டேன்னு விடேன். ப்ளீஸ்…”

“அப்படி என்ன டென்ஷன்? நான் தான் படிச்சு படிச்சு சொன்னேன்ல? அவ செய்ததுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைன்னு. அப்புறமும் ஏன் அதையே பிடிச்சுட்டு தொங்கற?”

“அதெல்லாம் நான் அதைப் பிடிச்சுட்டு தொங்கலை. என்னோட கோபமே வேற.” அவனை வெளிப்படையாகக் குறிப்பிடாமல் அவள் கூற,

“வேறென்ன? நான் லவ் பண்றேன்னு சொன்னதா?” நேரடியாகவே அவன் கேட்க அவள் மௌனமானாள்! அவள் பதில் பேசாதது அவனது கோபத்தைத் தூண்டி விட்டது.

“ஏன் பண்ணினா என்ன தப்பு?” ஒரு நொடி இடைவெளி விட்டவன்,

“அம்மு… மறுபடி மறுபடியும் எல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. கெஞ்சிகிட்டும் இருக்க முடியாது. உனக்குப் பிடிக்கலைன்னா இப்போதைக்கு விட்டுடு. அவ்வளவு தான் சொல்ல முடியும்.”

“நீ என்ன சொல்ல வர்ற? தெளிவா சொல்லு சத்தி. மொட்டதாத்தன் குட்டைல விழுந்த கணக்கா இருக்கு நீ சொல்றது.” கறாராக அவள் பேசவும்,

“நான் அத்தை கிட்ட பேசிக்கறேன்…” நழுவினான் அவன்.

“எந்தச் சொத்தைகிட்டவும் பேச வேணாம். என்கிட்டே சொல்லு.” அவள் கிடுக்கி பிடி போட மௌனமாவது அவனது முறையானது! அவளுக்குத் தெரியாதா? அவனது அத்தையிடம் ஆசை மருமகன் இந்த விஷயத்தைக் கொண்டு சென்றால் என்னவாகும் என்று!

“என்ன பேச்சைக் காணோம்?” அவனை வறுத்தாள். சிறிது நேரம் யோசித்த சத்யன் ஒரு முடிவிற்கு வந்தவனாக,

“நான் இப்போதைக்கு இந்த விஷயத்தை உன்ட்ட சொல்லவே நினைக்கல அம்முக்குட்டி. பிரச்சனை எல்லாம் லைன் கட்டி நிற்குது. தப்பிச்சு வெளிய வர்றதே பெரிய சவாலா இருக்கும்போது உன்னையும் உள்ள இழுத்து விட முடியுமா?”

“இப்போ மட்டும் நான் எங்க இருக்கறேன்? உனக்கு ஒரு கஷ்டம்ன்னா அது எங்களையும் சேர்ந்ததுதான். நானோ உன் அத்தையோ எதையுமே தனியா யோசிக்கலை சத்தி. ஆனா நீ சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்ல.”

“முழுசா என்னைப் பேச விடறியா நீ? சொல்லு சொல்லுன்னு சொல்ற? சொல்ல வந்தா இப்படிப் பேசற?”

“சரி சொல்லு…” இறங்கினாள்!

“ம்ம்ம்… அதனால தான் பிரச்சனைய கொஞ்சம் முடிச்சுட்டு சொல்லிக்கலாம்ன்னு இருந்தேன். ஆனா என்னையும் அறியாம உளறிட்டேன்.” என்று சொல்லி மெலிதாகச் சிரித்தான்! அவளோ மெளனமாக இருந்தாள்!

“எனக்கு நீ கூடவே இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுது. உன் கூட இருக்கும்போது என்ன வேணும்னாலும் சாதிக்க முடியும்ங்கற தைரியம் வருது அம்மு.”

“இது பாசம் சத்தி. சின்ன வயசுல இருந்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்து வளர்ந்த பாசம். இதை நீ இப்படி எடுத்துகிறது நல்லா இல்லடா.” அவள் கூறியதை எதிர்பார்த்தே இருந்தான் சத்யன்.

“நீ இப்படித்தான் சொல்வன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணினேன். நோ சர்ப்ரைஸ் அம்மு. இப்போதைக்கு இந்த டாபிக் வேணாம். மறந்துடு. நாளைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. மேடம் வேற வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க. அதையும் சேர்த்து நான் பார்க்கணும்.” சிரித்தான்!

ஆக மொத்தத்தில் காதலிக்கிறேன் என்று காதலியிடம் கூறாமல் சுற்றி வளைத்து நெளித்துப் பிழிந்து என்னவெல்லாம் கூற முடியுமோ அத்தனையும் கூறி முடித்தான் அந்தக் காதலன்!

“எப்படித்தான் இப்படி இருக்கியோ தெரியல?” கடுப்பாகக் கூறியவள் சிறிது இடைவெளி விட்டு,

“நீ எப்போ சொன்னாலும் இதுதான் என்னோட பதில் சத்தி. என்னோட லைப் சரணாலயம் தான். அதோட கோபத்துல தான் வர மாட்டேன்னு சொன்னேன். ஆனா அப்படி எல்லாம் செய்யமாட்டேன். எனக்கு நீ ரொம்ப முக்கியம்டா. ஆனா நீ சொல்ற சென்ஸ்ல இல்ல. புரிஞ்சுக்கோ!” இதுதான் அமிர்தா!

அவளால் கோபத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கவும் தெரியாது ஆனால் மனதில் இருப்பதைச் சொல்லாமல் இருக்கவும் முடியாது!

சிறிது நேர மௌனத்திற்குப் பின் ஒரு நீண்ட மூச்சை எடுத்துக் கொண்ட சத்யன், தெளிவாகப் பேச ஆரம்பித்தான். ஒரு முடிவிற்கு வந்தவனாக,

“உன்கிட்ட சொல்லக் கஷ்டமா இருந்துச்சு அம்மு. எல்லாமே இருந்தப்போ எனக்கு அப்படி எதுவுமே தோணலை. ஆனா இப்போ நான் வெறும் சீரோ. சீரோல இருந்து தான் இனிமே ஸ்டார்ட் பண்ண போறேன். இப்படி இருக்கும்போது, நீ வேணும்ன்னு நினைக்கறது எவ்வளவு சுயநலம்ன்னு எனக்கும் புரியுது.” பேசிகொண்டிருக்கும் போதே இடையிட்டாள்!

“ஸ்டுப்பிட் மாதிரி பேசாதடா. நீ கண்டிப்பா சாதிப்ப. எனக்கு அந்த நம்பிக்கை ரொம்ப இருக்கு.” மெலிதாகச் சிரித்தவன்,

“இதுதான் அம்முகுட்டி எனக்கு இப்போ தேவையா இருக்கு. உன்னோட சப்போர்ட். வேற யாரையுமே நினைக்கல. நீ மட்டும் இருந்தா போதும். என்னோட பீலிங்க்ஸ ஷேர் பண்ணிக்க நீ வேணும். கஷ்டபட்டா தாங்கிக்க உன்னோட தோள் வேணும். அதே மாதிரி உன்னையும் நான் தாங்கிக்கனும். எனக்கு நீயா உனக்கு நானா இருக்கணும். இதை வெறும் பாசம்ன்னு பிரான்ட் பண்ணாத. அந்த ஸ்டேஜ்ல கண்டிப்பா நான் இல்ல.”

அமிர்தாவின் கண்களில் கண்ணீர் வெள்ளம் உடைப்பெடுத்தது,

அவனது உணர்வுகளை உள்வாங்கியவளால் அதை ஏற்க முடியாமல் தவித்தாள். அவளது மனம் திருமணம் என்னும் தளையிலோ காதல் என்னும் விலங்கு பூட்டி கொள்ளவோ விருப்பப்படவில்லை.

அவள் எதிர்பார்த்த சுதந்திரம் தன்னை நம்பி இருக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்காக… அவளை அக்கா என்றும் அழைக்கும் அந்தக் குழந்தைகளுக்காக… தன்னை நம்பி பொறுப்பைக் கொடுத்துவிட்டு போன தனது பாட்டிக்காக… கடமைகளைச் சுமந்து கொண்டு தனக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் தன் தாய்க்காக…

அவள் மௌனத்தை உடைக்க விரும்பாமல் இருக்க… அவன் தொடர்ந்து பேசினான்.

“இனிமே சரணாலயம் என்னோட பொறுப்பு. இத்தனை நாள்வரைக்கும் பாட்டி வகைல உரிமையும் வேணாம் சொத்தும் வேணாம்ன்னு தான் நினைச்சேன். அப்பா வேண்டாம்ன்னு சொன்னதை எப்போ நான் யூஸ் பண்ண ஆரம்பிச்சுடேனோ… அப்போ என்னோட கடமையையும் நான் செய்யணும். அதனால மறுபடியும் தியாகி மாதிரி பேசாத.”

ஆயிரம் பூக்கள் ஒரு சேர மலர்ந்தது. சந்தோஷத்தில் திக்குமுக்காடினாள் அமிர்தா. அவன் கூறிய மற்ற விஷயங்களை எல்லாம் மறந்தாள். பொறுப்பெடுத்துக் கொள்கிறேன் அவனது ஒற்றை வார்த்தை அவளை மகிழ்ச்சியின் எல்லைக்குக் கொண்டு சென்றது. எத்தனை நாள் வேண்டுதல் இது?!

“சத்திம்மா…” சந்தோஷத்தில் கண்ணீர் வழிய அழைத்தாள்.

“நிஜமாவே தான் சொல்றியா? நிஜமா சரணாலயத்துல பொறுப்பெடுத்துக்கப் போறியா? நம்பவே முடியல! தேங்க்ஸ்… தேங்க்ஸ்டா… ஒரு பெரிய ரிலீப் எனக்குக் கொடுத்து இருக்க…”

“இது மட்டும் காதுல விழுது… நான் சொன்ன மத்தது எல்லாம் விழவே இல்லையா?” என்று அவன் கேட்டதிற்கு அவள் பதில் கூறாமல் சங்கடமான மௌனத்தில் இருந்தாள்!

“புரியுது அம்மு. நான் உன்னைப் போர்ஸ் பண்ணமாட்டேன். கார்னர் பண்ண மாட்டேன். அத்தைகிட்ட கூடச் சொல்லி ஷார்ட் கட்ல உன்னைக் கல்யாணம் கட்டிக்க மாட்டேன். ஆனா கண்டிப்பா உனக்கா காதல் வரும். எதோ ஒரு கட்டத்துல நான் காதலை பீல் பண்ண மாதிரி நீயும் கண்டிப்பா பீல் பண்ணுவ. அதுவரைக்கும் உன் மாமன் உனக்காக வெய்ட் பண்ண மாட்டேனா?” மென்மையாகக் கூறியவன் குரலைச் சற்று உயர்த்தி,

“எப்படியிருந்தாலும் இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. டார்கெட் பிக்ஸ் பண்ணிட்டேன். விட்டதைப் பிடிக்க… விட்ட அத்தனையும் பிடிச்சே தீருவேன். உன்னையும் யாருக்கும் விட்டுகொடுக்கவும் மாட்டேன். இதை முடிச்சதுக்கு அப்புறம் தான் எதுவுமே என்னால நினைச்சு பார்க்க முடியும் அம்மு. சோ இப்போ ஒர்ரி பண்ணிக்காத”

மிகத் தீவிரமாக அவன் கூறியது அவளது மனதில் ஒரு புறம் கவலையை அளித்தாலும் இன்னொரு புறம் சந்தோஷமாக இருந்தது. இந்த வெறி இவனை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் என்று நினைத்துக் கொண்டாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 25

மறுநாள் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. ஒருவருக்கும் நிற்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர். காலை முதலே பணப் பட்டுவாடா நேரடியாக நடந்து கொண்டிருக்க, தஸ்தாவேஜுகளைச் சரிபார்த்து அனுப்புவது அமிர்தாவின் வேலையானது. டெப்பாசிட் செய்திருந்த அனைவருக்கும் அன்று வரும்படி அறிவுரை வழங்கியிருந்தபடியால் காலை…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. I thought the love confession was the highlight of the last episode, but this is a big twist for me! 😄 Though Amirthamayi’s resolution about her life feels like a twist too, somehow I feel it’s just a little bit of “kolandha pulla thanam.” 😄 And I’m damn sure her early-morning dream is going to come true.. and the guy in her dream is none other than our Sathya! 😉
    Now I’m eagerly waiting to see what other hurdles, twists, and emotions are going to unfold as the story moves forward!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்