அத்தியாயம் 26
தென்றல் இதமாகத் தீண்டிச் செல்ல, அருவி சலசலவென ஓசையுடன் தவழ்ந்தது. சுற்றிலும் மனித நடமாட்டம் கண்ணில் படாத இளம் மாலை பொழுது. வண்டுகள் ரீங்காரமிட காட்டுபூக்களின் வாசனை மனதை மயக்கியது.
மாலை சூரியன் இன்னும் சில நிமிடங்களில் என் வீடு சென்று விடுவேன் என்று கூறாமல் கூறிக் கொண்டிருக்க அருவியின் இதமான சாரல் முகத்தைத் தீண்டியது. கண்களை மூடி அனுபவித்துப் புன்னகை செய்தாள் அமிர்தா.
“என்னடி சிரிக்கற? ம்ம்ம்…” காதருகில் அந்தக் குரல்! கிசுகிசுப்பான அந்தக் குரலில் மயங்கியவளை அவனது மீசை காது மடல்களை உராய்ந்து உடலைச் சிலிர்க்க வைக்க, அமிர்தா நாணம் கலந்த மயக்கத்தில் கண்களைத் திறக்க மறந்தாள்.
“கேள்வி கேட்டா பதில் சொல்லணும்.” காது மடல்களிலிருந்து கீழிறங்கி கழுத்தை உராய்ந்தது அவனது இதழ்கள்,
“ம்ம்ம்ம்… எ… ன்… ன சொ… ல்… ற… து…” அவன் ஏற்படுத்திய குறுகுறுப்பு தாங்கவியலாத அமிர்தாவிற்கு வார்த்தைகள் வெளியே வர மறுத்தன. கைகள் வலுவிழந்து தொய்ய உடல் நடுங்கியது.
“என்ன சொல்றதா? அதையும் நான் தான் சொல்லித் தரணுமா?” என்றவன் அவளது காதில் ரகசியம் பேசச் செக்க சிவந்த அவளது முகம் வெட்கத்தில் இன்னும் சிவந்தது.
“ச்சீ…” அவனது ரகசிய வேண்டுகோளில் உடல் சிவக்க முகத்தை மறைத்தாள்.
அவளது வெட்கம் அவனை ஏதேதோ செய்ய, அவளது முகத்தைத் திருப்பி, அவளது இதழ்களை…
சிற்சில நிமிடங்களோ மணிகளோ யாமறியேன் பராபரமே!
மயங்கிய அந்த மாலைபொழுதில் மயக்கம் தீராத கண்களோடு அவனை நிமிர்ந்து பார்க்க, கண்களில் காதல் வழிய சத்யன் அமிர்தாவை பார்த்துப் புன்னகைத்தான்!
திடுக்கிட்டு விழித்த அமிர்தாவுக்கு எப்போதும் போலத் தெப்பமாக வியர்த்திருந்தது.
கனவின் மயக்கத்தின் மிச்சம் மீதமிருக்க… அந்த நாயகனாகச் சத்யனை கண்ட அதிர்ச்சியில் திடுக்கிட்டாள்!
உடல் நடுங்கியது. மனம் அவனை நோக்கிப் போய்விட்டதா? உள்மனதின் ஆசைகள் தான் கனவுகள் என்று கூறுவார்களே?! என்னுடைய உள்மனதில் இருப்பவன் சத்யன் தானா? இல்லையென்றால் விட்ட குறை தொட்ட குறையாகப் பந்தம் தொடர்கிறதா? அவன்மேல் பாசம் மட்டும் தான் என்று கூறுவதெல்லாம் வெளிவேஷமா?
“நோஓஓஓ…” அவளையும் அறியாமல் கத்தினாள்!
செல்பேசி அழைத்தது!
கடிகாரத்தைப் பார்த்தாள். இரண்டாகி பத்து நிமிடம் ஆகியிருந்தது!
ஜிஎம் புருஷோத்தம் அழைத்திருந்தார்! நடுக்கம் குறையவில்லை. சமன்படுத்திக் கொண்டு எடுத்துப் பேசினாள்!
“மேடம்… நம்ம ஆவடி குடோன் பயர் ஆகிடுச்சு…” பதட்டமான குரலில்!
“வாட்? அங்க தானே பொக்லைன் எல்லாம் நிறுத்தி வெச்சுருந்தோம்?” நடுக்கத்தோடு பதட்டமும் சேர அவளால் பேசுவதே சிரமமான ஒன்றானது!
“எஸ் மேடம்…”
“எப்படி ஆச்சுப் புருஷோத்தம் சார்?”
“ஷார்ட் சர்க்கியுட் மேம். இப்போ தான் பயர் சர்விஸ் வந்துட்டு இருக்கு. நல்ல வேளையா யாரும் இல்ல மேம். எம்டி க்கு இன்பார்ம் பண்ணியாச்சு. வந்துட்டு இருக்கார்.”
“சார் ஜோக் பண்றீங்களா? நாற்பது பொக்லைன் நிறுத்தி வெச்சுருக்கற இடம். சேப்டி எப்படின்னு பார்க்காம தான் இருப்பீங்களா? இதோட இன்சார்ஜ் யாரு சார்?”
“சந்திரன் தான் பார்த்துட்டு இருந்தார் மேம். பட் பதினைந்து நாளா எம்டி கண்ட்ரோல்ல இருந்துது மேம்.”
“சார்… எம்டி பேர சொல்லித் தப்பிச்சுக்காதீங்க. ஒரு ஜி எம் சொல்லக்கூடிய பதில் இல்ல இது.”
அவரைக் கூடுமானவரை கடித்து விட்டுச் செல்பேசியைத் துண்டித்தவளால் உணர்ச்சிகளைக் கட்டுபடுத்த இயலவில்லை. அழுகை வரும் போல இருந்தது. பொக்லைன்களை விற்று விட்டால் கொஞ்சம் சமாளித்து விடலாம் என்று ஒரு ஓரத்தில் அமிர்தா நினைத்துக்கொண்டிருந்தாள் அப்படிப்பட்ட நேரத்தில் இந்த நஷ்டத்தை எப்படி ஈடுசெய்வது என்று புரியவில்லை. சத்யன் எப்படிச் சமாளிப்பான் என்றும் தெரியவில்லை! எப்படி நடந்திருக்கும் என்று ஆராய்ந்தாள். ஒரு வழியும் தென்படவில்லை!





