அத்தியாயம் 27
அதிகபட்ச பதட்டம் சூழ்ந்திருந்தது அந்தக் குடோனை சுற்றி. அந்த இடம் சற்று தனிமையான இடம் என்பதால் தீப்பிடித்தது யாருக்கும் எந்தப் பாதிப்பையும் கொடுக்கவில்லை. ஆனால் யாராவது இருந்திருந்தால்? அமிர்தாவால் அந்த நினைவை ஜீரணிக்க முடியவில்லை. குடோன் முழுமையும் நாசமாகி இருந்தது,
தீயணைப்பு வண்டிகளும் போலீஸ் வாகனங்களும் இடைவிடாமல் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்ததால் பரபரப்பாக இருக்க, சத்யன் முகத்திலிருந்து எதையும் கிரகிக்க இயலவில்லை அமிர்தாவினால்! ஆனால் அவனை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதில் மிகுந்த வருத்ததோடு இருந்தாள். மாற்றி மாற்றிச் செல்பேசியில் உரையாடிக்கொண்டும் தீயணைக்க வந்தவர்களுக்கு உதவிக்கொண்டும் இருந்தான் சத்யன்.
“இது ரொம்பப் பெரிய இஸ்யு அமிர்தா மேம். இப்போதைக்கு முதல் கட்ட விசாரணைல ஷார்ட் சர்கியூட்ன்னு தெரிய வந்திருக்கு. ஆனா சப்போஸ்…” என்று கமிஷனர் இழுக்க
“சொல்லுங்க சார்…” ஊக்கபடுத்தினாள் அமிர்தா!
“இதுல யாராச்சும் சம்பந்தபட்டிருக்காங்கன்னு தெரிஞ்சா கண்டிப்பா ஆக்ஷன் எடுத்துடுவோம்…”
“சார்… ஒவ்வொரு வண்டியும் மாமாவோட உழைப்பு சார். கொஞ்சம் நெருக்கடி இப்போ அதிகமா இருக்கு. இந்தச் சூழ்நிலைல இப்படி ஆனது எங்களுக்கு மிகப் பெரிய லாஸ் சார்.” குரலில் வருத்தம் மிகுதியாக இருக்க,
“எனக்கும் புரியுது. ஆனா இன்ஷியுரன்ஸ் இருக்கு இல்லையா.” கமிஷ்னர் மகேந்திரன் அக்கறையாகக் கேட்க அப்போதுதான் இன்ஷியுரன்சே நினைவிற்கு வந்தது. ஓரளவு முகம் தெளிவடைந்தது.
“இருக்கு சார். பட் க்ளைம் ஆகறதுக்குள்ள எங்க நிலைமைய எப்படிச் சமாளிக்கறதுன்னு தெரியல? எவ்ளோ க்ளைம் ஆகும்ன்னு புரியல?” அவள் வருத்தமாகக் கூறிக்கொண்டிருக்க அருகில் வந்தான் சத்யன்.
“உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கா சத்யப்ரகாஷ்?” அவனது பதிலுக்காகக் கூர்மையாகப் பார்த்தபடி காத்திருந்தார்.
“சந்தேகம்ன்னா… ம்ம்ம்ம்… அப்படி யாரும் இல்லையே மகேந்திரன் சார்… சப்போஸ் உங்களுக்குச் சந்தேகம் இருந்தா விசாரிங்க ப்ளீஸ்…” அவனது உணர்வுகளைத் துடைத்த முகத்தில் ஏதேனும் கிடைக்குமா என்று தேடி பார்த்தார்!
“எத்தனை பேரல் டீசல் இருந்தது குடோன்ல?”
“பத்து பேரல் இருந்துது…”
“எதுக்கு அவ்வளவு வெச்சிருந்தீங்க?”
“ஒரு வண்டிக்கு ஒரு பேரல் டீசல் ரெண்டு நாளைக்குத் தான் வரும். பொக்லைன் யூஸ் பண்ணிட்டு இருந்தப்ப வாங்கி வைச்சது. அப்புறமா அதை யாரும் பெரிய அளவுல நினைக்கில. பொக்லைன் ஓட்டற எல்லாருமே இப்படி ஸ்டாக் வெச்சுக்கறது சகஜம் மகேந்திரன் சார்.”
“ஆனா டீசல் பேரல் கிட்ட எலெக்ட்ரிக் ஷார்ட் சர்கியுட் ஆனதுனால தான் இவ்வளவு பெரிய லாஸ் சத்யா.”
அவருக்கும் தெரியும் அவனைப் பற்றி. அதனால் வருத்தமாக இருந்தது. ராஜசேகரின் இறப்பிற்குப் பின்னால் எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கிறான் என்று. பைனான்ஸ் பண்ட்ஸ் பிரச்சனையிலேயே யாராவது கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டால் சத்யனால் சமாளிக்க முடியுமா என்று வருத்தமாக நினைத்திருக்கிறார். ஆனால் அந்தப் பிரச்னையை அவன் சமாளித்த விதம் அவரையே சபாஷ் போட வைத்தது. ஆனால் இப்போது எப்படி இந்த விஷயத்திலிருந்து வெளிவருவான்?
ஆற்றாமையோடுஅவனைபார்த்து, “ம்ம்ம் ஓகே சத்யா… உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைச்சா சொல்லுங்க…” அவர் விடைபெற்றுப் போக, ஒரு வழியாகத் தீயை அணைத்து முடித்து அனைவரும் கிளம்பிவிட, யாருமற்ற புகை கக்கி கொண்டிருந்த இடத்தை வெறித்துப் பார்த்தாள் அமிர்தா!
கண்களில் நீர் தழும்பியது!
எரிந்து முடிந்த அந்த மெஷின்களை வெறுத்த வெறுமையான பார்வையோடு பார்த்தனர் சத்யனும் அமிர்தாவும். ஒவ்வொன்றிலும் ராஜசேகரின் தடயங்களைத் தேடினர். பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியபடி கலங்கிய கண்களோடு சத்யனை பார்க்க, அவளைப் பார்த்த சத்யன் ஒன்றும் கூறாமல் அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.
விலகாமல் அவனைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டவள் சத்யனை பார்த்து, “சத்தி…” என்றழைக்க, அவளை அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.
என்ன சொல்லி அவனை வெளியே கொண்டு வருவது என்று புரியாமல் குழம்பினாள். இதுவரை ஏற்பட்ட நஷ்டங்களை எல்லாம் சரியாக்க வழி இருந்தது ஆனால் கடைசி நம்பிக்கையாக இருந்தவைகளுக்கு நேர்ந்த முடிவு அடுத்து என்ன என்பதை யோசிக்க விடாமல் செய்தது. தனக்கே இப்படிக் குழப்பம் என்றால் சத்திக்கு?
“ம்ம்ம்…” அவளது நடுக்கத்தையும் குழப்பத்தையும் உணர்ந்தவன் அவளது நிலையைப் புரிந்து கொண்டான். பக்குவபட்ட அமிர்தாவையும் சுழற்றியடித்துக் கொண்டிருக்கிறது சமீப காலப் பிரச்சனைகள் என்பதை அறியாதவன் அல்ல. இத்தனை நாட்கள் தன்னையும் தாங்கிப் பிரச்சனைகளையும் தாங்கியவளால் இதற்கும் மேல் சிரமப்படுத்துவது சரியல்ல. பதில் பேசாமல் அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
திரௌபதி பாண்டவர் சபையில் அவமானபட்டபோது தனது கணவர்களை உதவிக்கு அழைத்தாள் யாரும் வரவில்லை. அங்கிருந்த பெரியவர்களை உதவிக்கு அழைத்தாள். யாரும் வரவில்லை. தன் சுற்றம் நட்பு என அனைவரும் கைவிட்ட பின்னர் ஒரு ஓரத்தில் தன் மேல் நம்பிக்கை கொண்டு தன் சேலையைப் பற்றியபடி அந்தக் கிருஷ்ணனை அழைத்தாள். அப்போது அந்தக் கண்ணனும் வரவில்லை. கடைசியில் அனைத்து நம்பிக்கைகளையும் கைவிட்டு கண்ணா உனையன்றி எனை காக்க யாருமில்லை என்று கைகளை மேலே தொழுதாள்.
அப்போது வந்தான் கண்ணன். அவளது மானத்தைக் காத்தான். வாழ்கையின் ஓரத்தில் சென்று மீண்டு வருவதென்பது இதுவன்றோ? இழந்து விட்ட நம்பிக்கைகளும், வற்றி போன எதிர்காலத்திற்கான தேடலும் அமிர்தாவை விரக்தியான மனநிலைக்கு இட்டுச் சென்றது என்றால், சத்யனின் பொறுப்பு அவளைச் சேர்ந்தது என்ற அவளுள் ஊறி போன எண்ணம் அவளை மீட்டுக் கொண்டு வந்தது. அந்த எண்ணம் அவளை நிமிர்த்தவும் செய்தது!
“சத்தி… டோன்ட் ஒர்ரி… இதுவும் கடந்து போகும். சமாளிச்சுக்கலாம். என்ன சரியா?” தேற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கும்போதெல்லாம் அவள் தன்னை நினையாமல் அவனைத் தேற்றுவததை எப்போதும் அவன் கவனித்து வந்திருக்கிறான். குழந்தையைக் கண் துஞ்சாமல் காக்கும் தாயின் இயல்பு அது. தன் சுகத்தையோ தனக்கான தனிப்பட்ட முகத்தைப் பற்றியோ கவலைப்படாமல் தாய் தன் குழந்தைகளை எப்படிக் காப்பாளோ அந்த உணர்வை அமிர்தாவிடம் கண்டான்!
“ம்ம்ம்…”
“சரி… மகேந்திரன் சார் யார் மேலயாசும் சந்தேகம் இருக்கான்னு கேட்டப்போ சொல்லியிருக்கலாம்ல…” அவன் ஏன் கூறவில்லை என்ற குழப்பம்!
“என்னன்னு அம்மு? யாரை சொல்லச் சொல்ற?”
“எனக்குச் சீதாராம் சார் மேலதான் சந்தேகம் வருது சத்தி. ஆரம்பத்துல இருந்து நிறையப் பிரச்சனைகளுக்கு அவரும் ஒரு காரணம்.”
“ம்ம்ம் தெரியும் அம்மு…”
“பைனான்ஸ் பண்ட்ஸ் மெச்சூர் ஆறதுக்கு முன்னாடியே டெப்பாசிட் செய்தவங்களைத் தூண்டி விட்டது அவங்க தான். பணம் நமக்கு ஈசியா கிடைக்கக் கூடாதுன்னு நிறைய முயற்சி எடுத்தாப்ல. அப்படி இருக்கும்போது இந்த வேலையையும் அவர் ஏன் செய்திருக்கக் கூடாது?” மூச்சு விடாமல் தன்னிடம் வாதாடிய அமிர்தாவை வெறுமையாகப் பார்த்த சத்யன். மறுதலித்தான்!
“இல்லடா… அவங்க பண்ணியிருக்கச் சான்ஸ் இல்ல. அவங்களை உள்ள இழுக்க வேணாம்…” அவனது மறுப்பு அவளுக்கு வியப்பை அளித்தது. ஒரு வேளை சுபர்ணாவிற்க்காக பா… பா… பார்க்கிறானோ? அவளது மனதில் ஏனோ சூடு பரவியது.
“எப்படிச் சத்தி சொல்ற? அவங்களை ஏன் இந்த விஷயத்துல கொண்டு வரக் கூடாதுன்னு நினைக்கிற? தப்பு செய்தா யாரா இருந்தாலும் தண்டனைல இருந்து தப்பிக்க முடியாது. கூடாது.” அவனது மறுப்பு அவளுக்குக் கோபத்தை எழுப்பியது,
“வேணாம்ன்னா விடேன்…” அவளை இன்னமும் கடுப்பேற்றியது அவனது மொழி!
“ஏன் எதுனால? எனக்கு ரீசன் தெரிஞ்சாகனும் சத்தி.”
“ஏன்னா… நாம கிரிமினல் ப்ரோசீஜர்ஸ் போனா நமக்குத் தான் நஷ்டம் அம்மு…” தெளிவாகக் கூறமாட்டேன் என்று கங்கணம் கட்டி கொண்டு அவன் கூறுவது போலத் தோன்ற, நிமிர்ந்தாள்.
“தெளிவா சொல்லு…”
“கேஸ்ன்னு ஆனா அவ்வளவு சீக்கிரம் இன்ஷியுரன்ஸ் அம்மௌன்ட்ட ரிலீஸ் பண்ணிடுவாங்களா? நீயே சொல்லு?”
“சோ… அதுக்காக?” அவளது பார்வை கூர்மையாகியது!
“சரி… பொக்லைன் இருந்திருந்தா எவ்வளவுக்குப் போயிருக்கும்?”
“எப்படியும் ஒரு பொக்லைன் பத்துல இருந்து பனிரெண்டு லட்சம்வரைக்கும் எடுத்துக்கறதா அந்தப் புரோக்கர் சொல்லி இருந்தாப்ல மாமா கிட்ட…” அப்போது நடந்ததைச் சத்யாவிடம் கூறினாள் அமிர்தா!
“சரி… ஆக்சுவலா அதோட வால்யு என்ன?” அவளைத் துளைத்து பார்த்தபடி அவன் கேட்க
“ஆக்சுவலா ஒரு பொக்லைன் ஐம்பதை தொடுது…” புரியாமல் அவன் கேட்டும் புள்ளி விவரங்களைக் கூறினாள்!
“அப்படீன்னா மொத்த வால்யு இருபது கோடி. ஆனா நாலு கோடிக்கு விற்க நினைக்கறதுதான் நல்லது இல்லையா அம்மு?” அவன் என்ன கூற வருகிறான் என்பது புரியாமல் அவனைப் பார்த்தாள்,
“தெளிவா சொல்லு சத்தி. குழப்பாதே…”
“சரி… இதுக்கு எவ்வளவுக்கு இன்ஷியுரன்ஸ் பண்ணி இருந்தது?”
“ஒரு பொக்லைன் நாற்பத்தியைந்து லட்சத்துக்குப் பண்ணியிருந்தோம்…” அவளுக்கு அவன் கூற வருவதன் முனை சிறிது சிறிதாகப் பிடிபட்டது. அதிர்ந்த முகத்துடன் பதில் கூறியவளை பார்த்த சத்யன் அவளைப் புரிந்து கொண்டான். அவள் புரிந்து கொண்டாள் என்பதை!
“புரோசீஜர்ஸ் முடிஞ்சா நமக்குப் பதினெட்டு கோடி கைக்கு வந்துடும்.” தெளிவாக நிதானமாகக் கூறிக்கொண்டிருந்தான்.
“அப்படீன்னா இது ஆக்சிடென்ட் இல்லை இன்சிடென்ட் இல்லையா?” அதிர்ச்சி மாறாமல் அவள் கேட்க,
“வேற வழி இல்ல அம்மு. பெட்டர் நீ கொஞ்சம் வாயை மூடிட்டு இருந்தாலே போதும்.”
“என் வாயை மூடலாம் சத்யா. ஆனா உன்னோட மனசாட்சியோட வாயை மூட முடியுமா? நியாயத்தோட வாயை மூட முடியுமா? இந்த மாதிரி குறுக்கு வழி எதையுமே மாமா நினைச்சு கூடப் பார்த்ததில்லை. ஆனா எப்படிச் சத்யா நீ இப்படி ஆன?”
“அவங்க அப்படி இருந்ததால தான் நான் இப்படியாக வேண்டி இருக்குடி! ஐ ஆம் ஹெல்ப்லெஸ். என்னால இப்போ எந்தவொரு வழிமுறையுமே நியாயமா? அநியாயமான்னு பார்த்துட்டு இருக்க முடியாது. ஜெய்க்கனும். இப்போதைய ஒரே குறிக்கோள் அது மட்டும் தான். என்னைத் தயவு செஞ்சு மாத்திடலாம்ன்னு நினைக்காத. மாறமாட்டேன். விட்டதைப் பிடிக்கற வரைக்கும் மாறவே மாட்டேன்.” வெகு அழுத்தமாக வெகுநிதானமாக வெளிவந்தன அவனுடைய வார்த்தைகள்,
மனசாட்சி என்கிற ஒன்றை கட்டிக்கொண்டு அழுதால் யார் வந்து உதவிவிடப் போகிறார்கள்? இந்த உலகில் நிலைத்து இருப்பது தகுதியான ஒன்று மட்டுமே!
survival of the fittest!
அந்தத் தகுதி என்பது வெற்றியால் மட்டுமே அளக்கபடுகிறது என்பதை வெகுதெளிவாகப் புரிந்து வைத்து இருந்தான். இல்லை புரிய வைக்கப்பட்டு இருந்தான். சமீபகால அனுபவங்கள் அவனைப் படிப்பித்த பாடம் அது. அந்த வெற்றியைப் பறிக்க, தக்க வைக்க எந்த நிலைக்கும் செல்வேன் என்ற அவனது வாதம் அமிர்தாவை உலுக்கியது!
“ஐ நெவர் எக்ஸ்பெக்ட்டட் சத்யா… ஐநெவர்…” அமிர்தாவினால் அவனது இந்தச் செயலைத் தாங்கவியலவில்லை. அவளைப் பொறுத்தவரை நியாயத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். அதுவும் இல்லாமல் தனது தாய் மாமனின் நினைவின் கடைசி எச்சங்களைச் சத்தியனே முன்னின்று அழித்திருப்பது அவளை வெகுவாக உடைத்தது! அதைக் கேட்கவும் செய்தாள். ஏனெனில் அவள் வளர்ந்த முறையும் எடுத்துக் கொண்ட பாதையும் நேர்மையைத் தவிர வேறு ஒன்றை அவளுக்குச் சொல்லித் தரவில்லை. நேர்மையாக இருப்பது அவ்வளவு கடினமான ஒன்றல்ல என்பது அவளது வாதம்!
“அம்மு… நீ உயிர் இல்லாத விஷயம் போச்சேன்னு அழற. ஆனா நான் என்னை மட்டுமில்ல… உன்னை வெச்சும், நம்ம எதிர்காலத்தை வெச்சும் ரிஸ்க் எடுத்துட்டு இருக்கேன். கரணம் தப்பினா மரணம். இந்த நேரத்துல கண்டதையும் உளறிட்டு இருக்காத.” பேசிவிட்டு இதற்க்கு மேல் பேச்சை வளர்த்தாதே என்று கூறாமல் கூறி அவன் சென்றுவிட, ஆபீஸ் அறையில் அமர்ந்து இருந்தவளுக்கு அவன் போகும் பாதையை எண்ணி மனதை பிசைந்தது!
நேர் வழியில் எப்போதும் செல்வதென்பது சிறிது கடினம் தான். பாதை பூக்களால் ஆனதல்ல. முட்களும் கற்களும் காலைப் பதம் பார்க்கும் தான் ஆனால் போய்ச் சேருமிடம் கனிகளும் பூக்களும் நிரைந்த சோலை. வற்றாத ஜீவ ஊற்றாக மனநிம்மதி என்னும் நதி பாயும் அந்தச் சோலையை விடுத்து குறுக்கு வழியில் செல்வது எப்போதும் நமக்கு நிம்மதியை தராதே. என்னதான் தேவை என்றாலும் நேர்மையைக் கைவிடுவது எப்படி ஏற்றுகொள்ளதக்கதாகும்?
அவளது மனம் புலம்பித் தள்ளினாலும் வாதம் புரிந்தாலும் சத்யனை இனி மாற்றுவது என்பது முடியாத காரியம் என்றாகி விட்டது. அதை நினைத்து வெறுத்து போனாள் அமிர்தா!
சத்யன் எப்படிப் பிரச்சனைகளை முடித்தானோ யாருக்கு எவ்வளவு கொடுத்தானோ எப்படியெல்லாம் மனிதர்களை விலைக்கு வாங்கினானோ… அடுத்தப் பதினைந்தாவது நாள் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் விசாரணைகளும் முடிந்தது. தடையில்லா சான்றிதல் அனைத்துத் தரப்பில் இருந்தும் பெறப்பட்டது! ஆனால் அந்தப் பதினைந்து நாட்களும் அவனை ஒரு நிமிடம் கூடபார்ப்பது அரிதானது. வேளைக்கு உணவும் உறக்கமுமின்றி… பணத்தை வாரியிறைத்து அவன் நினைத்ததைச் சாதித்துக் கொண்டான்!
சத்யன் தனது அடித்து ஆடும் விளையாட்டை ஆரம்பித்து விட்டான்!





