அத்தியாயம் 28
எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள் சுபர்ணா. அவள் என்ன நினைக்கிறாள்… எதைச் செய்கிறாள் என்பதைப் புரியாமல் வீட்டில் வேலைக்கு இருந்த ஊழியர்கள் நொந்து போயிருக்க அவளது தந்தையோ மகளை எங்கனம் சமாதானப்படுத்துவது எனப் புரியாமல் திகைத்திருந்தார்! பதினைந்து நாட்களாக நடப்பது இது,
உணவு உண்ண, குளிக்கத் தனது அன்றாடச் செயல்களைச் செய்ய என அனைத்திற்கும் அடம் பிடித்தாள் சுபர்ணா. உணவை எடுத்துப் போகும் சமையல்காரரின் மேலேயே உணவை அபிஷேகம் செய்வது… குளிக்காமல் அடம் பிடித்துக் கொண்டு இருப்பது என அவளது பழக்க வழக்கமே மாறிக் கிட்டத்தட்ட மூளை கலங்கிய நிலையில் இருந்தாள்,
தனது நண்பரான மனவியளாலரை அழைத்து வந்தும் காட்டியாயிற்று. எதற்கும் அவள் வாய் திறந்து பேசுவதில்லை. வந்தவரும்,
“இவங்க பார்க்கக் கூடாத ஒன்னை பார்த்து இப்படிப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கணும் அப்படி இல்லைன்னா அளவுக்கு மீறி மனசு பாதிக்கப்பட்டிருக்கனும். அதனாலத்தான் இப்படிப் பிரம்மை பிடிச்ச மாதிரி இருக்காங்க. ட்ரக்ஸ் எடுக்கறவங்களுக்கு இது மாதிரி ஆகறதுதான். சட்டுன்னு ட்ரக்ஸ் நிறுத்த வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமா நிறுத்திட்டு ட்ரீட்மென்ட் கொடுக்கத் தேவையிருக்கலாம் சீதாராம்” என்று கூறி சென்றபோது அந்தச் சத்யனை நினைத்து அளவற்ற கோபம் வந்தது. ஆனால் இப்போது அவன்மேல் கோபப்பட்டு என்னவாகிவிடப் போகிறது?
அளவுக்கு மீறிச் செல்லம் கொடுத்துப் பெண்ணை ஆனமட்டும் கெடுத்தாயிற்று. இனியும் என்ன? பதினைந்து நாட்களுக்கு முன்னர் அவளுடைய ருத்ர தாண்டவத்தைக் கண்ட ஊழியர்கள் அவருக்குத் தகவல் கொடுக்க மும்பையிலிருந்து அடுத்த ப்ளைட்டில் பறந்து வந்து விட்டார்,
அவர் கண்டது…
அறையில் இருந்த கண்ணாடி அனைத்தும் உடைந்திருக்கச் சுபர்ணா அறை மூலையில் கால்களைக் கட்டியபடி அமர்ந்திருந்தாள்! அவளது அறையெங்கும் பொருட்கள் சிதறிக் கிடந்தது. அனைத்தையும் எடுத்து வீசியதற்க்கான அடையாளங்கள்! படுக்கை வன்மமாய்க் கிழிக்கபட்டிருக்க அறையெங்கும் சுபர்ணாவின் தாண்டவம்!
“சுபி…”
மெதுவாக அழைக்க நிமிர்ந்து பார்த்தவளின் சிவந்த கண்களில் இருந்த கோரத்தையும் வஞ்சத்தையும் பார்த்து ஒரு நிமிடம் சீதாராமன் நடுங்கினார்! அப்படியொரு பார்வையை அவர் வாழ்நாளில் கண்டிருக்க மாட்டார்.
பக்கத்தில் கிடந்த கண்ணாடியால் ஆன சிறிய சிற்பத்தின் மேல் அவளது பார்வை பட்டது. அது அவள் விரும்பி வாங்கியது அது. வெளிநாடு ஒன்றிற்குச் செல்லும்போது ஒரு இடத்தில் இது போன்ற சிற்பங்களைச் செய்து தருகிறார்கள் என்று கேள்விப்பட்டு ஒரு நாள் முழுக்க அந்தத் தணலில் காத்திருந்து வாங்கி வந்தாள். மிகவும் விலை உயர்ந்த அந்தச் சிற்பத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவளுடைய பிடிவாதமும் சாதித்தே ஆக வேண்ட்டும் என்ற அவளது வெறியும் தான் அவரது நினைவிற்கு வரும்,
சிலீர்!
சட்டென நகர்ந்து கொண்டார் சீதாராமன்.
கண்ணாடி சிற்பம் சுக்குநூறாகச் சிதறியது! முகம் அதிர்ச்சியைத் தாங்க, அவளா? உடைத்தாளா? அவளது பெஸ்ட் கலக்சன் என்று பெருமைப்பட்டுக் கொண்ட அந்தச் சிற்பத்தையா என்மேல் வீசி எறிந்தாள்?
“சுபிம்மா என்னடா?” வாஞ்சையாக அவளை அழைத்தபடி முன்னே நகர்ந்தவரை உறுத்து விழித்தாள். உள்ளே நடுநடுங்கியது அவருக்கு!
“வராதே…”
“சுபி…”
“வராதே… பக்கத்துல வராதே…” வீடே அதிருமாறு கத்தியவளை கண்களில் நீர் சூழ பார்த்தார் சீதாராமன்!
“சுபிம்மா… ஏன் மா? என்னாச்சு?” அவர் முன்னே போக முயல, அவளது கத்தல் இன்னும் அதிகமானது.
“வந்தன்னா இந்தக் கண்ணாடியால கிழிச்சுக்குவேன்…” பக்கத்தில் உடைந்து கிடந்த கண்ணாடியை எடுத்துக் கொண்டு அவள் மிரட்ட,
“வேணாம் சுபி… வேணாம்…” பதறினார்!
“நான் தோத்துட்டேன். நான் தோத்துட்டேன்.” தலையைப் பிடித்துக் கொண்டு அவள் உச்சபட்ச டெசிபலில் கத்த கீழே இருந்த ஊழியர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் பதறியது!
“என்னம்மா? என்னாச்சு? ஏன்? சொல்லு சுபி…” என்ன ஆயிற்று என்பதே தெரியாமல் அவளிடம் வார்த்தைகளை வெளிவர வைக்கப் போராடினார்.
என்னவாயிற்று என்று எதைக் கூறுவாள்? அவன் அவளை மறுத்த விதத்தையா? அவன் கூறிய வார்த்தைகளையா?
“உன்னையெல்லாம் ஒண்ணுமே இல்லாமையே பார்த்துட்டேன். நான் மட்டுமில்ல அங்க இருந்த எல்லோரும் பார்த்து இருக்காங்க. என்னென்னமோ பண்ணியும் இருக்காங்க. இப்படி எல்லாம் பிகேவ் பண்ணி என்னை மடக்கிடலாம்ன்னு நினைக்காத. என் மனசுல என் அம்முவ தவிர வேற யாரும் இல்ல. உன்னைத் தொட்டு கழுத்தை பிடிச்சு வெளிய தள்றதுக்குக் கூட எனக்கு அருவருப்பா இருக்கு. ஜஸ்ட் கெட் அவுட்…” அவனது வார்த்தைகள் அவளது காதில் வந்து அறைந்து கொண்டே இருந்தது. அவளால் ஜீரணிக்க முடியாத வார்த்தைகள்!
வில்லாக அவனிடமிருந்து புறப்பட்ட வார்த்தைகள் அவளைக் குத்தி கிழித்தது! நானா? நான் அப்படித்தானா? அதிகபட்ச அதிர்வில் ஒன்றுமே பேசாமல் வந்தவளை வீட்டின் யாருமற்ற தனிமை வரவேற்றது! உள்ளே அடைந்து கிடந்த கோபம் அனைத்தும் வெடிக்க, பொருட்களைக் கண்மண் தெரியாமல் உடைக்க ஆரம்பித்தாள்.
இவையெல்லாம் எதற்கு? இந்த அழகான வீடு எதற்கு?
கண்ணாடியில் தன் முகம் தெரிய, அந்த உருவத்தைப் பார்த்தபோது அவளது கோபம் அதிகபட்சத்தில் வெடித்தது.
“உன்னை எப்பிடி பொம்பளைன்னு சொல்றது? எல்லார் முன்னாடியும் அப்படி அவுத்து போட்டுப் போதைல ஆடிட்டு இப்போ என்கிட்டே வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல? ச்சீ உன்னைப் பார்க்கும் போதே எனக்குக் குமட்டிகிட்டு வருது. உனக்குத் தேவை என்னோட காதலோ கல்யாணமோ இல்லை. வேற வழில என்னோட ஷேர் பண்ணிக்க முடியாத ஒன்னை கல்யாணம் பண்ணி செய்துக்கலாம்ங்கறதுதான் உன்னோட எண்ணம். உனக்கு ஒருத்தன் போதாது சுபர்ணா. கண்டிப்பா போதாது… இதுக்கப்புறமும் என் முன்னாடி வந்துறாத…”
என்னைப் பார்க்கும்போது அருவருப்பாக இருக்கிறது என்று அவன் கூறிய உருவத்தைத் தானும் வெறுத்தாள். அந்தப் பிம்பத்தை உடைத்தாள். ஆனாலும் அவளது கோபம் தணிந்தபாடில்லை!
“உனக்குத் தேவை யாராவது ஒருத்தனோ இல்லை ரெண்டு பேரோ தானே? சரி ரெண்டு பேராவது போதுமா? இல்ல அதுவும் பத்தாதா?” குத்தி கிழித்த வார்த்தைகள் மறுபடியும் அவளைக் கீற, கோபத்திலும் ஆற்றாமையிலும் தலையைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்!
தவறுகளால் தவறும்போது தவறாகத் தெரியாத அவளது தவறுகள் தவறிப்போய் இவனிடம் மனது தவறியதால் தவறாகத் தெரிய தன்னையே வெறுத்தாள்! தான் அப்படித்தானே! அதை அவன் கூறியபோது அவளால் அந்த நிஜங்களை ஏற்க முடியவில்லை. தாள முடியவில்லை!
கைகளால் தன் உடலைக் கீறி கொண்டாள். அப்பொழுதாவது அவன் கூறிய அழுக்கெல்லாம் மறைகிறதா? மறையவில்லையே! யாரும் எனக்குக் கூறவில்லையே? இது சரி இது தவறு என்று கண்டிக்க யாருமில்லையே? தாய் இருந்திருந்தால் கண்டித்திருப்பாளோ? பதினோராம் வகுப்பிலேயே தன் நண்பர்களுடன் சேர்ந்து இதில் என்னதான் இருக்கிறது பார்த்விடலாம் என்று பரிட்சித்திருக்க மாட்டேனோ? தந்தையும் அருகில் இல்லாமல் வளர்ந்த என்னைக் கேட்க யாருமில்லை என்ற சுதந்திரம் தவறா? அது எப்படித் தவறாகும்? என்னுடைய நண்பர்கள் தோழிகள் எல்லோரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?
அவர்களுக்கு உனக்கு ஒரு வித்தியாசம் இருக்கிறது சுபர்ணா என்று அவளது மனசாட்சி பேசியது.
அவர்கள் அவர்களுக்குத் தகுந்த துணையைத் தேர்ந்தெடுத்து விட்டனர். அவர்களது வாழ்க்கை முறை மாறாமல் கொண்டு செல்லக்கூடிய துணைகள். ஆனால் உனக்குப் பிடித்தவன்… கலாச்சாரம் பண்பாடில் ஊறிய சத்யப்ரகாஷ்! அவனது வாழ்க்கை முறை வேறு! உனது வாழ்க்கை முறை வேறு!
ஆனால் அவனைத்தானே எனக்குப் பிடித்திருக்கிறது!
மனசாட்சி அதற்கும் பதில் கூறியது. அப்படியென்றால் நீ மாறியிருக்க வேண்டும். அவனுக்காக நீ மாறியிருக்க வேண்டும்,
மடங்கி அமர்ந்து அழுகையில் வெடிக்க ஆரம்பித்தாள்! அவமானம் அவளைக் கொன்று தின்றது! கடவுளே! வாழ்க்கையை இன்னொரு முறை திருத்தி எழுதச் சந்தர்ப்பம் கொடுக்கமாட்டாயா? அப்பொழுதாவது சத்யனின் மனைவியாக அவனுக்கு மட்டுமே மனைவியாக வாழும் சந்தர்ப்பத்தைத் தரமாட்டாயா? தெரிந்தே செய்த பொழுதுபோக்கு விளையாட்டுகள் எல்லாம் எவ்வளவு கேவலமானவை என்று உணர ஆரம்பித்தாள் சுபர்ணா!
இது அத்தனைக்கும் காரணம் தன்னைச் சரியாக வழிநடத்தாத தந்தைதானே! கோபம் அவர்மேல் திரும்பியது. தன் முன்னே அவர் வந்தபோது கோபத்தில் கொதிக்க வைத்தது. அவர் என்னவானது என்று கேட்டபோது என்னவென்று கூறுவது என்று தெரியவில்லை!
“எல்லாம் உன்னாலதான்… உன்னால தான்…” வெறிப்பிடித்தது போலக் கத்த கண்களில் நீரோடு அவர் வெளியேறினார். வீட்டிலேயே வைத்திருந்த மதுபானங்களையும் போதை வஸ்துக்களையும் உடைத்தாள். எரித்தாள்… ஆனாலும் அவளுள் எரிந்து கொண்டு இருந்த பெருநெருப்பு அணைந்தபாடில்லை!
வெட்கம் அவமானம் போன்ற உணர்வுகள் அவளைப் புதிதாய் ஆக்கரமித்து இருக்கக் கதறி அழத் துவங்கினாள்! நேராமாக ஆக உணர்வுகள் மழுங்கியது. மரத்துப் போகத் துவங்கியது. அழுகை நின்றது. சூனியத்தை வெறிக்கத் துவங்கினாள்.






I really love this.. Thank you for bringing her side out ❤️
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே..
பின் நல்லவராவதும் தீயவராவதும்….