arrow_back
பரமபதம் அத்தியாயம் 29
பரமபதம் chevron_right பகுதி 29 / 54

அத்தியாயம் 29

visibility 230
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (6 மதிப்பீடுகள்)
பகிர்

பத்மவிலாசத்திற்கு வந்திருந்தாள் அமிர்தா… வேலை மிகுதியில் உணவைத் தவிர்த்து வந்தவனைச் சாவித்ரி கடிந்து… அமிர்தாவிடம் இரவு உணவைக் கொடுத்து விட்டிருந்தார்… அதோடு வீட்டைச் சுத்தபடுத்திப் பத்து நாட்களுக்கு மேலாகி விட்டபடியால் சுத்தபடுத்தி விட்டு வரச் சொல்லி உடன் அங்கு வேலை செய்யும் லதாவையும் அனுப்பி வைத்தார்… மாலை ஐந்து மணிக்கே இருவரும் வந்துவிடச் சத்யன் இன்னும் வீடு வந்திருக்கவில்லை,

சுறுசுறுப்பாக லதாவையும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாகச் சுத்தப்படுத்தினாள்… அவன் வருவதற்குள் சுத்தபடுத்திவிட்டால் உணவை வைத்து விட்டு விரைவாகச் சென்றுவிடலாம் என்று   அவன் இல்லாதபோது வந்தது,

அவனது தற்போதைய செயல்பாட்டில் அவளுக்கு ஒப்புதலில்லாததால் வந்த கோபம் என்று வெளிகாட்டி கொண்டாலும் உண்மையில் அவனைத் தனிமையில் சந்திக்க அவளுக்குச் சங்கடமாக இருந்தது… ஒன்று அவளிடம் அவன் வெளிபடுத்திய காதல்… இன்னொன்று… அவள்… ஆம் அவளேதான்,

அடிக்கடி வரும் அந்தக் கனவில் அவனைக் கண்டபோதிலிருந்து வேறுவிதமான சஞ்சலத்திற்கு ஆட்பட்டிருந்தாள்… அவனைப் பெரும்பாலும் கண்களைப் பார்த்துப் பேசுவதையும் தவிர்த்தாள்… வெற்றி என்ற ஒரே குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்று வெறியோடு சுற்றிக் கொண்டிருந்த சத்யனின் கருத்தில் அவளது சஞ்சலம் படாதது ஒன்றும் வியப்பில்லையே! ஆனாலும் அவள் முழுமையாக அவனை ஏற்க முயலவில்லை,

அவன் தொழிலில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருக்க அவள் தனது நிகழ்ச்சிகளிலும் இல்ல வேலைகளிலும் தனது கவனத்தைக் கொண்டு வந்தாள்… ஆனால் இல்ல வேலைகளில் அவளை முந்திக் கொண்டு அவன் செய்து முடித்திருப்பான்… அடிக்கடி வருவதில்லையே தவிர அன்று அவன் கூறிய வார்த்தைகளை அடிபிறழாமல் கடைபிடித்தான்,

வேலைகளை முடித்து விட்டு லதாவை அனுப்பியவள் அவனது அறையை ஒழுங்குபடுத்த மேலே சென்று படுக்கை விரிப்பை மாற்றி விட்டுப் புதியதை விரித்துச் சரி செய்து விட்டு நிமிர… எதிரில் சத்யன்… அவளை ரசித்துக் கொண்டு!

அவன் பார்வை போன இடத்தைப் பார்த்தவள் அதிர்ந்தாள்… லோ கட் சுடிதாரின் ஷாலை வேலை செய்யத் தொந்தரவாக இருக்கும் என எண்ணி கீழே விட்டு வந்திருக்கக் குனிந்து படுக்கை விரிப்பை சரி செய்து கொண்டிருந்தவளை அவன் எந்தக் கோணத்தில் பார்த்திருக்க முடியும்? அவசரமாகத் தன்னைச் சரி செய்ய எண்ணி ஷாலை தேட… காலை வாரி விட்டது அது! அவளது பதட்டத்தைப் பார்த்தவன் சிரித்தான்… கண்களைச் சிமிட்டி!

“இங்க என்னடி பண்ணிட்டு இருக்க?” இதழோர புன்னகையோடு!

“ம்ம்ம்… பார்த்தா தெரியல… கிளீன் பண்ணிட்டு இருக்கேன்…” முகத்தைத் திருப்பிக்கொண்டு தலையணைக்கு உறை போட்டுக்கொண்டே அவள் கூற,

“பார்த்தேன் தான்… ஆனா ரொம்பத் தெரியல…” குறும்பாக அவன் கூற திரும்பிப் பார்த்து முறைத்தாள்!

ஒன்றும் பேசாமல் அழுக்குத் துணிகளை எடுத்துக் கொண்டு எடுத்துக் கொண்டு கீழே போனவளின் கையைப் பிடித்தவன்,

“கொஞ்ச நேரம் இரேன்…” குரலிலிருந்த உற்சாகம் அவனது முகத்தில் இல்லாமல் போக,

“ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“ரொம்பத் தலைவலியா இருக்கு அம்மு…” அவன் முகத்திலேயே அளவுக்கு மீறிய சோர்வு தெரிய… அவள் மனது எப்போதும் போலத் தவித்தது! இவனுக்கு இந்த அளவு வெறித்தனமான உழைப்பு தேவையா என்று தோன்றினாலும் வேறு வழி இல்லையே என்று சமாதானப்படுத்திகொண்டவள்… கீழே போக எத்தனித்தாள்!

“எங்க போற?”

“கீழ தான்… உனக்குக் காபி கொண்டு வர்றதுக்கு… ஒரு மாத்திரை போட்டுக்கச் சத்தி… சரியா போய்டும்…”

எனக்கு டேப்லட் எல்லாம் நீ தான் என்று நினைத்துக் கொண்டு,

“ஏன் மேடம்… நீங்கத் தலைய பிடிச்சு விட மாட்டீங்களோ?” அவனது குறும்பு புன்னகையைக் கண்டபோதுதான் அவனது தலைவலி எதற்காக என்று புரிந்தது!

“ம்ம்ம் முடியாது…” முகத்தை வேறு புறம் திருப்ப,

“ஏன் முன்ன எல்லாம் வேணாம் வேணாம்ன்னு சொன்னாலும் பிடிச்சு விடுவ… இப்போ என்னாச்சு?” வேண்டுமென்றே வம்பிழுத்தான்!

“அப்போல்லாம் உன் மனசுல ஒரு கல்மிஷமும் இல்ல… அதனால பிடிச்சு விட்டேன்… இப்போதான் கண்டபடி பேச ஆ… ஆரம்பிச்சுட்ட… க… கண்டபடி பார்க்க ஆரம்பிச்சுருக்க…” சொல்ல வந்ததை நேராகக் கூற ஆரம்பித்தவளுக்கு அவனது பார்வை அவளைத் தடுமாறச் செய்தது,

“ம்ம்ம் ஆமாம் என் மனசுல என்ன இருக்குன்னு நான் சொல்லிட்டேன்… சொல்லாம இல்லையே… ஐ ஆம் க்ளீன் ஸ்லேட்… உன் மனசுல ஒண்ணுமே இல்லைன்னா எப்போவும் போல இருக்க வேண்டியதுதானே… எதுக்கு இத்தனை தடுமாற்றம்?” புருவத்தை உயர்த்திக் கேட்க அவனது அந்தச் செய்கையில் மனம் அதிர்ந்தது,

“இப்போ என்னதான் சொல்ல வர்ற சத்தி?” பொறுமை இழந்து கேட்டாள்,

“ஒன்னும் சொல்லல… தலைய பிடிச்சு விடுன்னு தான் சொன்னேன்… உன் மாமனுக்கு இந்த ஹெல்ப் கூடவா பண்ண மாட்ட?” சிரித்துக் கொண்டே குறும்பு கண்ணனாக அவன் கூற… அழுக்கு துணிகளைக் கீழே போட்டுவிட்டு அவன் அருகில் வந்தவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்த அவனது தலையைப் பிடித்து விட ஆரம்பித்தாள்!

கண்களை மூடிக்கொண்டு அந்த மென்மையான மசாஜை ரசிக்க ஆரம்பித்தவனுக்குக் கண்கள் சொருகியது… சரியாகத் தூங்கி எத்தனை நாட்கள் ஆனது என்று அவனுக்கே கணக்கு தெரியவில்லை… பசித்தால் இருக்கும் இடத்தில் கிடைத்ததை உண்டு விட்டு… கிடைத்த நேரத்தில் உறங்கிக் கொண்டு… ஆனால் இவை எதைப் பற்றியும் இரண்டாம் முறை சிந்திக்க அவனுக்குத் தோன்றவில்லை! அவன் உறக்கத்தைத் தழுவுவதைப் பார்த்து,

“சத்தி சாப்பிட்டுட்டு தூங்கு…” அவனை மென்மையாக அழைக்க… உறக்கத்திலிருந்து விடுபடாமல்,

“இங்க கொண்டு வந்துடேன் ப்ளீஸ்…” அதற்கு மேலும் காத்திருப்பாளா என்ன? நான்கு இட்லியோடு அவனுக்குப் பிடித்த கறிகோலா உருண்டை குழம்பை சுடசுட ஹாட் பேக்கிலிருந்து அவசரமாகப் போட்டுக் கொண்டு மேலே ஓடினாள்! அவள் ஊட்டி விடுவதற்காகவே கண்களை மூடியபடியே படுத்திருக்க… மேலும் அவனிடம் வார்த்தைகளை வளர்த்தாமல் ஊட்டி விட்டாள்!

“அம்மு…”

“சொல்லு சத்தி…”

“இன்னும் ரெண்டு நாள்ல இன்ஷியுரன்ஸ் அமௌன்ட் கைக்கு வந்துடும்…” மூடிய கண்களைத் திறக்காமலே அவன் கூற எந்தவித உணர்வும் இல்லாமல் கேட்டுகொண்டாள்!

“ம்ம்ம்ம்…”

“அதோட குடிசை மாற்று வாரியத்தோட மறைமலை நகர் ப்ராஜக்ட் நமக்குச் சாங்க்ஷன் ஆகிடுச்சு…”

“வாட்… நிஜமாவா?” அந்த அதிர்ச்சி அவளால் தாங்கவியலவில்லை… பணமோ சொத்துக்களோ கையில் இருந்திருந்தால் அவளது சந்தோஷம் எல்லைகளைத் தாண்டி இருக்கும்… ஏனெனில் இந்த வாயிப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை!

“நிஜமாவான்னா? நான் எதுக்கு உன்ட்ட பொய் சொல்லப் போறேன்? இன்னைக்குத் தான் ஓபன் பண்ணாங்க…”

அந்தத் திட்டத்தைப் பற்றி அவளும் கேள்வியுற்று இருந்தாள்… மொத்தமாக ஐநூறு அப்பார்ட்மென்ட் வீடுகள் அரசால் கட்டப்பட வேண்டி டெண்டர் கோரியிருந்தனர்… அகில இந்திய அளவில் பில்டர்கள் போட்டியிட்டாலும் சீதாராமனின் லக்ஷ்மி பில்டர்ஸ் தான் அந்த டெண்டரை எடுக்கும் என்றுபரமேஸ்வரன் பேசிகொண்டிருந்ததைப் பார்த்து இருந்தாள்,

இன்னுமொரு விஷயம் என்னவென்றால் அதற்கான காப்பு தொகையான EMD தொகையே மூன்று கோடி என்பதால் சிறிய பில்டர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ப்ராஜக்ட் அது… ராஜசேகர் இருந்தபோது இந்த மாதிரி ப்ராஜக்ட்கள் இல்லையென்றாலும் கொஞ்சம் சிறிய அளவில் செய்திருக்கிறார்… மொத்த மதிப்பு நூற்றியம்பது கோடி என்றும் சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்துவிட்டால் லாபமாக எப்படியும் இருபது கோடி கிடைக்கும் என்று பரமேஸ்வரன் கூறியிருக்க இந்த ப்ராஜக்ட்டை எப்படிச் சத்யன் எடுத்தான் என்று குழப்பமாகப் பார்த்தாள்!

“அதுக்குப் பணம்?” குழப்பமாக அவள் கேட்க,

“டெண்டர் ஒர்க் ஆர்டர குடுத்தா எந்தப் பேங்க் வேணும்னாலும் லோன் அரேஞ்ச் பண்ணிருமே… இது உனக்கே தெரியாதா அம்மு?”

“இல்ல… இந்த டெண்டருக்கே EMD மூணு கோடின்னு ஆடிட்டர் சொன்னாரே சத்தி…” தடுமாறிக் கொண்டு அவள் கேட்க,

“ம்ம்ம் கட்டி தான் எடுத்துருக்கு…” இயல்பாக அவன் கூற,

“அவ்வளவு பணம் நம்ம கைவசம் இல்லையே…” கண்களைத் திறந்து அவளைப் பார்த்தவன் கைகளைப் பிடித்து அழைத்துத் தன் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டான்!

“சும்மா அத்தனை பொக்லைனையும் போட்டுத் தள்ளிடுவேனா அம்மு?” இவன் என்ன கூற வருகிறான் என்று குழம்பினாள்!

“புரியல சத்தி…”

“அதுல இருந்த முக்கியமான ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாமே மாத்தியாச்சு… அதுல நமக்குக் கிட்டத்தட்ட நாலு கோடி கிடைச்சது… எரிஞ்சது பழைய ஸ்பேர் பார்ட்ஸ் போட்ட skeleton தான்…” அவன் வெகு இயல்பான குரலில் அவளைப் பார்த்தபடி கூற… அமிர்தா வாயடைத்து போனாள்! கைகள் தாமாக வாயை மூடிக்கொண்டன!

“சத்தி…”

“கூல்டா கூல்… எதுக்கு இப்படி ரியாக்ஷன் காட்டற? வக்கீல் கிட்ட தான் கேக்கணும்… எப்படி எல்லாம் ஷார்ட் கட்ல போலாம்ன்னு… ஆனா என்னோட வக்கீலம்மா அநியாயத்துக்கு இப்படி நியாயவாதியா இருக்காங்களே…”

அவன் சிரிக்க… அவளால் முறைக்கக் கூட முடியவில்லை… இது எவ்வளவு பெரிய குற்றம் என்று தெரியாமல் செய்கிறானா? அல்லது தெரிந்தே தான் செய்கிறானா? அதையே அவள் கேட்க அவன் மிகப் பெரிய நகைச்சுவையைக் கேட்டது போலச் சிரித்தான்!

“அம்மு… நம்ம இந்திய தேசத்துல தண்ணி பாயாத இடம் வேண்ணா இருக்கும்… ஆனா பணம் பாயாத இடம் கிடையவே கிடையாது… பணம் பத்து மட்டுமில்ல பத்தாயிரமும் செய்யும்…”

சத்யனின் இந்த அவதாரத்தைப் பார்த்து அமிர்தா மூச்சடைத்துத் தான் போனாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 30

உறங்கிக் கொண்டிருந்த மகளைக் கலங்கிய கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தார் சீதாராமன்... சிறு துரும்பும் தீண்டக் கூடாதெனச் செல்லமாக வளர்க்கப்பட்டவள்... தன்னால் அவளுடன் நேரம் செலவழிக்க இயலவில்லை என்றாலும் பணத்தைக் கொட்டி கொடுத்தார்... தாயில்லாத ஏக்கம் வரக் கூடாதென வேலையாட்களை உடன் இருக்க வைத்தார்,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்