arrow_back
பரமபதம் அத்தியாயம் 30
பரமபதம் chevron_right பகுதி 30 / 54

அத்தியாயம் 30

visibility 230
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

உறங்கிக் கொண்டிருந்த மகளைக் கலங்கிய கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தார் சீதாராமன்… சிறு துரும்பும் தீண்டக் கூடாதெனச் செல்லமாக வளர்க்கப்பட்டவள்… தன்னால் அவளுடன் நேரம் செலவழிக்க இயலவில்லை என்றாலும் பணத்தைக் கொட்டி கொடுத்தார்… தாயில்லாத ஏக்கம் வரக் கூடாதென வேலையாட்களை உடன் இருக்க வைத்தார்,

அவள் ஆசைப்படுவது அனைத்தும் எதுவாக இருந்தாலும் அவளது காலடியில் கிடக்கும்படி பார்த்துக்கொண்டார்… அவருக்குப் பெண்ணைக் கண்டிக்கத் தெரியவில்லை… அவள் போன பாதை அவளைப் படுகுழியில் தள்ளி விடும் என்று நினைத்துப் பார்க்கவில்லை… அத்தகைய மகளின் இன்றைய நிலை அவரைக் கலங்கடித்து இருந்தது,

போதை பழக்கத்தைச் சட்டென்று நிறுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்று மருத்துவர் கூறினாலும் அவளைச் சிறிதும் அசைக்க முடியவில்லை,

அவற்றை எடுத்துக் கொள்வதில் எவ்வளவு பிடிவாதமாக இருந்தாளோ அதைவிடப் பிடிவாதமாக இப்போது அவற்றை எடுக்க முடியாது என்பதில் நின்றாள்… ஆனால் ஏன் என்று வாயைத் திறந்தாளில்லை… அவளது பிடிவாதமும் மூர்க்கத்தனமும் யாரையும் பக்கத்தில் அண்டவிடவில்லை,

மருத்துவமனைக்கு வரமாட்டேன் எனப் பிடிவாதமாக மறுத்தவளை மருத்துவரை வைத்து மயக்க மருந்து அளித்து மருத்துவமனையில் சேர்ப்பதற்க்குள் சீதாராமனுக்கு உயிர் போய் உயிர் வந்துவிட்டது! இவள் இப்படி இருந்தால் எங்கனம் சிகிச்சை செய்வது என்று மனம் கலங்கினார்!

பணத்தைத் துரத்திக் கொண்டு ஓடியதில் காட்டிய அக்கறையைச் சுபர்ணாவின் மீது சிறிதேனும் காட்டியிருந்தால் அவள் இந்த நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டாளோ? கண் கெட்ட பிறகு செய்யும் சூரிய நமஸ்க்காரம் என்ன பலனைக் கொண்டு வந்துவிடப் போகிறது?

“இப்போதைக்கு அவங்க போதை பழக்கத்தினால கெட்டு போன உடம்பை மீட்டெடுக்கணும் சீதாராமன்… அப்புறமாத்தான் அவங்க மனசுல என்ன இருக்குன்னு வெளிய கொண்டு வர முடியும்… அதுவரைக்கும் அவங்களைப் பேச வைக்க முடியாது…”

மிகச்சிறந்த மனோதத்துவ நிபுணரான கௌதம் கூறிய வார்த்தைகள் அவருடைய கோபத்தைக் கிளறி விட்டது… அவளது இந்த நிலைக்குக் காரணம் சத்யன் தான் என்பதில் அவருக்கு எள்ளளவும் ஐயமில்லை… ஆனால் என்ன நடந்தது என்பதுதான் விளங்கவில்லை! கோபத்தோடு கை முஷ்ட்டியை உயர்த்திப் பக்கத்தில் இருந்த டேபிளை குத்தினார்… வலித்தாலும் அவருக்கு வலிக்கவில்லை… சுபர்ணாவை பார்த்தபோது!

எப்போதும் உறங்கிக்கொண்டிருந்தாள் இல்லையென்றால் உறங்கவைக்கப்பட்டாள்… விழித்திருந்த நேரம் உணர்வுகளற்ற பார்வையோடு வெறுத்து வெறித்திருந்தாள்… சீதாராமனின் நெஞ்சில் ரத்தம் கசிந்தது,

“சுபிக்கு என்ன ஆச்சுக் கெளதம்? எனக்கு உண்மைய சொல்லு… என் மகளை இந்த நிலைமைல பார்க்க என்னால முடியல… மும்பைல இருந்து அத்தை பாட்டி கேக்கறா… உன் பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சுருச்சாமேன்னு… என்னால முடியல கௌதம்…” முகத்தை மூடிக்கொண்டு அவர் அழ,

“இல்ல சீதாராமன்… பைத்தியம்ன்னு சொல்றதெல்லாம் மிகப்பெரிய வார்த்தை… சைக்கியாரிஸ்ட் கிட்ட போனாலே பைத்தியம்ன்னு சொல்ற பழக்கத்தை இன்னும் மக்கள் விடலை… இது ஒரு மாதிரியான டிப்ரஷன்… மன அழுத்த நோய்… போதை பழக்கம் இருக்கவங்க ஏதாவது ஒரு ஸ்டேஜ்ல இந்த டிப்ரஷனை எதிர்கொண்டு தான் ஆகணும்… ஏதோ திடீர் அதிர்ச்சி… இல்லைன்னா தாங்கவே முடியாத சிச்சுவேஷன்… இதுல எதையாவது சுபி எதிர்கொண்டு இருக்கணும் சீதா… கண்டிப்பா வெளிய கொண்டுவந்துடலாம்…”

மருத்துவர் அளித்த நம்பிக்கையில் ஒருவாறாகத் தேர்ந்தார் சீதாராமன்… சிறிது தயங்கியபடியே வந்தார் மாதவகிருஷ்ணன்,

“என்ன மாதவன்?”

“சார்… மறைமலை நகர் ப்ரோஜக்ட் நம்ம கையை விட்டுப் போய்டுச்சு…” தயங்கியபடியே அவர் கூறிமுடிக்க… இனியும் பணத்தைத் துரத்தி யாருக்குச் சேர்ப்பது என்று வெறுத்து இருந்தார்சீதாராமன்,

“ம்ம்ம்… அப்படியா? யார் எடுத்தது மாதவன்?” சுரத்தே இல்லாமல் அவர் கேட்க அதை மாதவன் ஒரு மாதிரியாகப் பார்த்தார்… அவர் அறிந்த சீதாராமன் இப்படிக் கிடையாது… தன்னை மீறி எதுவுமே போய் விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர்… அவருக்கு ஏதாவது காரியமாக வேண்டும் என்றால் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருப்பவர்… அதனால் டெண்டரில் சீதாராமன் கலந்து கொள்கிறார் என்றாலே அந்த ப்ராஜக்ட் அவருக்குத் தான் என்பது வியாபாரவட்டாரத்தின் பேச்சாக இருந்தது,

“அது வந்து… பிஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சார்…”

“பி ஆரா? வாட்ட்டட்ட்ட்ட்…” அதிர்ந்தார் சீதாராமன்!

“ஆமா சார்… சத்யப்ரகாஷ் தான் எடுத்திருக்கார்…” என்று அவர் கூறியபோது அவரது அதிர்ச்சி எல்லைகளைத் தொட்டது!

“எப்படி மாதவன்? எப்படி இது நடந்தது?”

“ராஜசேகர் மாதிரி கிடையாது சார் சத்யப்ரகாஷ்… நாம நோட்டிஸ் இஸ்யு பண்ணதுல இருந்து அவங்க ஆக்டிவிட்ஸ் அத்தனையும் பார்த்துட்டு இருக்கேன்… நிஜமா என்னால நம்ப முடியல…” நடந்தவற்றைச் சுருக்கமாக விவரித்தார்,

“பட் ஏன் என்கிட்டே முன்னமே சொல்லலை?”

“சார்… நீங்க மேடம் பத்தின கவலைல இருக்கீங்க… உங்க கிட்ட எப்பிடி சொல்றதுன்னு சொல்லலை சார்…” தலை குனிந்தார்,

“அந்த மேடம் இப்படிப் படுத்திருக்கறதுக்குக் காரணமே அவன் தானே மாதவன்… அவனை வளர விடணுமா? ஜெயிக்க விடணுமா? முடியாது… இவ்வளவு நாள் கொஞ்சம் சுளுவா விட்டிருந்தேன்… சின்னப் பையன்னு கொஞ்சம் வெச்சுப் பார்த்தேன்… எப்படி இருந்தாலும் சுபிக்கு அவன் தான்னு எவ்வளவோ தகைஞ்சு போனேன் மாதவன்… ஆனா பாப்பாவ இப்படிப் பார்க்கும்போது… எனக்கு அவனைக் கொல்லனும் போல இருக்கு… இந்தப் பொண்ணு மட்டும் அவன் மேல ஆசை வைக்காம இருந்திருந்தா எப்போவோ முடிச்சிருப்பேன்…” அவரைப் பொறுத்தவரை இதுதான் நியாயம்… இதுதான் தர்மம்,

“சார்… அவங்க சொந்த ரெடி மேட் கான்க்ரீட் யூனிட் இருக்கு… அதையும் இப்போ யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டார்… சோ ரெட்டை லாபம் பார்த்துட்டு இருக்கார்…”

“ம்ம்… எப்படி இருந்தாலும் அவனுக்குன்னு ஒரு வீக்னெஸ் இருக்குமே மாதவன்?” இதுதான் அவரது முறை… எதிராளியின் பலத்தைக் கணக்கிடுவதை விடப் பலவீனங்களை முதலில் தெரிந்து கொள்வது அவரது வாடிக்கை… அந்த இடமாகப் பார்த்துக் குறிவைத்து அடிப்பதில் பெரும்பாலும் பழம் என்ன… கிளை என்ன… சில நேரங்களில் மரமே விழுந்து விடுவதும் உண்டு!

“அவரோட வீக்னெஸ்னா… ஒரு பொண்ணு கூடவே இருக்கும்… அவரோட அத்தை பொண்ணாம்… நம்ம கிட்ட லீகல் ஆபீசரா இருந்துச்சு… அதைத் தவிர வேற எதுவுமே இல்லை சார்…” அவர் கூற சீதாராமனின் முகம் கோபத்தில் சிவந்தது!

“அப்போ நம்மாளுங்களை விட்டு அந்தப் பொண்ணுக்கு ஸ்கெட்ச் போடச் சொல்லுங்க மாதவன்… நான் இப்போ அழறதுக்கும்… என் பொண்ணு தவிக்கிற தவிப்புக்கும் அவன் பதில் சொல்லணும்… அவனும் இதே தவிப்பை தவிக்கணும்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 31

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே, உன் ஆனந்த மோகன வேனுகானமதில், தனது குருவான மைதிலி ராமநாதனிடம் பயிற்சிக்கு வந்திருந்தாள் அமிர்தா... முக்கியமான நிகழ்சிகளுக்கு முன் இது போன்ற புத்தாக்க பயிற்சிகளை அவள் எடுத்துக் கொள்வது வழக்கம், மைதிலியின் ஒன்று விட்ட…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்