arrow_back
பரமபதம் அத்தியாயம் 3
பரமபதம் chevron_right பகுதி 3 / 54

அத்தியாயம் 3

visibility 343
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (12 மதிப்பீடுகள்)
பகிர்

சுபர்ணாவை சத்யப்ரகாஷ் அங்கு எதிர்பார்கவே இல்லை!

“ஹாய் நீ எங்க இங்க?” என்றான் இனிமையான அதிர்வோடு! அவளை இங்குப் பார்ப்போம் என்பதை அவன் நினைக்கவே இல்லை. ஆனால் இதை அவள் முன்னமே எதிர்பார்த்தது போல… மெலிதாகச் சிரித்து,

“எல்லாம் ஒரு இன்டியுஷன் தான் சத்யா. நம்ம ஆள் இங்க இருக்கார்ன்னு பட்சி சொல்லுச்சு…” என்று சுபர்ணா அமைதியாகக் கூற, அங்கே இருந்தவர்கள்,

“ஓஓஓஓஓ…” என்று கூறி சிரித்தனர்! சத்யனுக்கு அந்தச் சூழ்நிலை ஏனோ சங்கடமாக இருந்தது!

“சத்யமா எக்ஸ்பெக்ட் பண்ணலை சுபி… இன்பாக்ட் நான் உன்னைப் பாக்க வர்றது ரகசியமா இருக்கணும்னு நினைச்சேன்… யு பரோக் இட்…” சிறிய சிரிப்புடன் உண்மையை வெட்கப்படாமல் கூறினான்!

“நீங்க எக்ஸ்பெக்ட் பண்ண முடியாததைச் செய்தாதானே அது சுபர்ணா! சோ ஆல்வேஸ் எக்ஸ்பெக்ட் த அன்எக்ஸ்பெக்டட்!” அவள் மிகவும் இயல்பாகக் கூறினாலும் அவனது மனதில் சட்டென்று ஏதோ ஒரு உணர்வு தாக்கி விட்டுச் சென்றது!

அவளது அப்ரோச் அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது! அனாவசிய அலட்டல், வெட்கம் என்று நடிக்காமல் அவள் பேசிய ப்ளைன் டாக் அவனைக் கவர, அவனுடைய பேச்சு சிறைபிடிக்கப்பட்டு மௌனத்தில் தள்ளப்பட, அந்தச் சைக்கிள் கேப்பில் நண்பர்கள் அனைவரும் அவளைக் கிண்டலடிப்பதிலேயே குறியாக இருந்தனர்!

நிஷாவின் தோழின் மேல் கையை வைத்து ஊன்றி இருந்த அக்ஷிதா, சத்யனை பார்த்துக் கொண்டிருந்த சுபர்ணாவை நோக்கி,

“ஹலோ… என்ன அங்கேயே லுக்கு? இங்க நம்ம கேள்விக்குப் பதில சொல்லுங்க. அப்போதான் சத்யாவ கல்யாணம் பண்ணிக்கப் பர்மிஷன் தருவோம்…” மிரட்டுவது போல ரேகிங் செய்ய, அதற்கும் உற்சாகமாக,

“கேளுங்க அக்ஷிதா…” புன்னகைத்துவாறே கூறினாள் சுபர்ணா!

அங்கே ஒரு கேள்வி பதில் செஷன் அரங்கேற அவளை ஆச்சரியமாகப் பார்த்தான் சத்யன்.

அட பெயரைக் கூடத் தெரிந்து வைத்திருக்கிறாளே! அவனது நண்பர்களோடு வெகுசுலபமாக உரையாடுபவளை பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது!

அவனிடம் இதுவரை செல்பேசியில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த அவளது அடக்கம் அவனை மிகவும் ஈர்த்து இருக்க, இப்போது அவன் பார்த்துக் கொண்டிருக்கிற அவளது அழகு, அமைதி, பொறுமை, நிதானம் எல்லாம் அவனைப் புரட்டிப் போட்டு இருந்தது.

பெண் பார்த்ததும் சென்னையில் இருந்த அவளது வீட்டில் தான். அதன் பின் இருவரும் சந்திக்கவில்லை. மும்பை ட்ரி ப்ளான் செய்யும் போதே கண்டிப்பாகச் சுபியை பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் எதேச்சையாக அவளை ஃபன் வேர்ல்ட்டில் பார்த்தது இன்ப அதிர்ச்சி!

நண்பர்கள் எல்லோரும் சுபர்ணாவிடம் பேசிகொண்டிருக்க அய்யா மட்டும், ‘பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…’ என்று கனவுலகத்தில் டூயட் பாடி கொண்டிருந்தார்!

“சத்யா… சத்யா…” நிஷா அவனை உலுக்க, சத்யன் மிரண்டு விழித்தான்!

“டேய் என்னடா, அதுக்குள்ளே ட்ரீம் சாங்கா?” என்று அவள் நக்கலடிக்கும் போதுதான் அவன் உணர்ந்தான், தன் முகத்தில் இப்படியா வெளிப்படையாகத் தெரிகிறது? ஆனாலும் தன் முகம் இப்படித் தன்னைக் காட்டிகொடுக்கக் கூடாது. தனக்குத் தானே எதிரி ஆகிப்போன சத்யன் நொந்து கொண்டிருந்தான்!

பாப்கார்ன் வாங்க போயிருந்த நிகிலும் விஸ்வாவும் கையில் தியேட்டர்பேக் பாப்கார்னுடன் வர, அக்ஷிதாவும் நிஷாவுமாகச் சுபர்ணாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்!

“ஹாய் சுபர்ணா…” இயல்பாக அவர்கள் கை கொடுக்க, சுபர்ணாவும் இயல்பாக அந்த நண்பர் குழுவுடன் ஒன்றி போனாள்! மாற்றி மாற்றிக் கிண்டலடித்தும் சிரித்தும்பொழுது போனது!

“சுபி, நீங்க டெல்லி டிஏவியா?” விஸ்வா யோசனையாகக் கேட்டான்.

சுபர்ணாவின் முகம் ஒரு கணம் இருள் படிந்து மீண்டது.

“இல்லையே விஸ்வா. நான் மும்பைல தான் படிச்சது…” புன்னகை முகம் மாறாமல் இருக்க அரும்பாடு பட்டாள். ஆனால் அவள் அதைச் சிறிதும் வெளிகாட்டவில்லை!

“ஏன் கேக்கறீங்க?” சிறிது எச்சரிக்கையுடன் சுபர்ணா கேட்க,

“இல்ல… நான் டெல்லி டிஏவி. என்னோட செட்ல ஒரு பெண்உங்க ஜாடை… அதான் கேட்டேன்…” விஸ்வா எந்தத் தயக்கமும் இல்லாமல் கூற… சுபர்ணா நிம்மதி பெருமூச்சு விட்டாள். இதை நிகிலும் யோசனையாகக் கவனித்துக் கொண்டிருந்ததைச் சுபர்ணா கவனிக்கத் தவறிவிட்டாள்! அப்போது அவளது செல்பேசி அழைக்க,

“ஹாய்ப்பா… சொல்லுங்க…” அவளது தந்தை தான் அழைத்து இருந்தார்!

அந்தப் பக்கம் என்ன கூறினாரோ,

“ஓகேப்பா… பக்கத்துல தான் பிரகாஷ் இருக்கார். நான் அழைச்சுட்டு வந்துடறேன்…” மென்மையாகப் பேசி அலைபேசியைத் துண்டித்தவளை பார்க்கும்போது சத்யன் மனதில் மழை பெய்தது!

“அப்பா… என்ன பண்றாங்க சுபர்ணா?” நிகில் யோசனையாகவே கேட்டான்!

“இங்க பிசினஸ் கன்சல்டல்ன்சி மாதிரி ரன் பண்றாங்க நிகில்…” அவளது குரலில் விலாங்கு மீனின் தன்மை வந்தடைந்து இருந்ததை நிகில் கண்டுகொண்டான். விஸ்வாவை அர்த்தமாகப் பார்த்து விட்டுச் சத்யனை பார்க்க, அவனோ தன்னிலை மறந்து இந்த ஊர் உலகம் மறந்து… வாயில் வாட்டர் பால்ஸ் பொழிவதை கூடக் கவனிக்காமல் சுபர்ணாவை மட்டுமே சைட் அடித்துக்கொண்டிருந்தான்!

“பட் எங்கயோ உங்களைப் பார்த்த மாதிரி இருக்கு சுபர்ணா. எங்கன்னு தெரியல…” விஸ்வாவின் முகம் இன்னமும் தெளியவில்லை!

“சரிடா… நீ யோசிச்சுகிட்டே இரு. டின்னர்ல பார்க்கலாம்…” ஆள் மாற்றி ஆள் ஸ்னோ பவுலிங் விளையாடிக் கொண்டிருக்க, சத்யன் மட்டும் சுபர்ணாவை கடத்தும் வேலையில் ஈடுபடுவதைப் பார்த்த குழு எதிர்ப்புத் தெரிவித்தது!

“டேய் துரோகி…”

“பக்கி… ஒழுங்கா சுபிய கொஞ்சம் நேரம் இங்க இருக்க விடு…”

“நாங்க பேசிட்டு தானே இருக்கோம்…”

“நீயெல்லாம் ஒரு நண்பனாடா?”

“பிகரப் பாத்த உடனே ப்ரென்ட்ஸ கட் பண்றியே ராசா, நீயெல்லாம் நல்லா வருவ…”

நண்பர்கள் அனைவரும் நொந்து போய்ச் சாபம் கொடுக்க அவர்களைக் குறும்பாகப் பார்த்துக் கண்ணடித்து,

“ஹே மச்சிஸ்… டின்னர்ல பார்க்கலாமே ப்ளீஸ்…” கள்ள சிரிப்போடு சுபர்ணாவை அழைத்துக் கொண்டு காருக்கு விரைந்தான்.

காரை மிக லாவகமாகச் செலுத்திய சுபர்ணாவை பார்த்து வியந்து,

“நல்லா டிரைவ் பண்ற சுபி…” புன்னகையோடு அவன் கூற, அதை அமைதியான புன்னகையோடு அங்கீகரித்தாள்!

கார் நெருக்கடியான சாலைகளைக் கடந்து மரைன் டிரைவ்வில் அமைந்திருக்கும் சுபர்ணாவின் கடற்கரை பங்களாவை நோக்கி விரைந்தது. அவளது தந்தை சத்யனை அழைத்துக் கொண்டு அங்குத் தான் வரக் கூறியிருந்தார். வருங்கால மாப்பிள்ளையை அசத்துவதற்காகவே!

சத்யனுக்கு மரைன் டிரைவில் பயணிப்பது மிகவும் பிடித்தமான விஷயம். அதுவும் வெய்யில் அதிகமில்லாத காலங்களில் சிலுசிலுவென்ற கடற்கரை காற்று முகத்தில் அறைய கார் சன்ரூஃபை திறந்து வைத்துக் கொண்டு அசுர வேகத்தில் பறக்க அவனுக்கு மிகவும் பிடிக்கும். கூட நண்பர்கள் இருந்தால் அதுவும் அவர்கள் பயந்தவர்களாக இருந்தால் சத்யனை கையில் பிடிக்க முடியாது.

அசுர வேகத்தில் சென்று சட்டென்று ஹேன்ட் பிரேக்கை இழுத்து காரைத் திருப்பி விளையாடுவதைப் பார்த்து அவர்களுக்கு இதயத் துடிப்பே நின்று விடும். பாதுகாப்பாகத்தான் ஒட்டுவான் என்பது அடுத்த விஷயமாக இருந்தாலும் அந்த நேரத்தில் காரில் அமர்ந்து உடன் வருபவர்களை அலற வைத்து விடுவான். மரைன் டிரைவை போக்குவரத்து அதிகமில்லாத நிலையில் பார்த்தவுடன் சுபர்ணாவை அழ வைத்துப் பார்க்கும் ஆசை வந்தது!

“சுபி… கம் திஸ் சைட்… ஐ ல் டிரைவ்…” சத்யன் கூறியவுடன், காரின் வேகத்தை மட்டுபடுத்தி அவன் புறம் வர, ஸ்டியரிங் அவன் கைக்குப் போனது. அவளைப் பார்த்துக் கள்ளகுறும்போடு சிரித்துக் கொண்டே,

“சன்ரூஃபை திறந்து விடு சுபி…” என்றவுடன் அவள் திறந்தது தான் தாமதம்… கார் படுவேகத்தில் பறக்க ஆரம்பித்தது!

“ஹே… இதென்ன? இவ்வளவு ஸ்பீட்…” அவளும் புன்னகையைக் கைவிட்ட பாடில்லை.

“பின்ன உன்னை மாதிரி மாட்டு வண்டி மாதிரி ஓட்றதா? ஆடிய ஆடியா ட்ரீட் பண்ணனும் சுபி… இக்கட ச்சூடு…” ரஜினி ஸ்டைலில் சொல்லி விட்டு ஆக்ஸிலேட்டரை இன்னும் அழுத்த, கார் அசுர வேகமெடுக்க, கடற்கரை காற்று அறைய, மேகமூட்டத்தோடு இருந்த அந்த மாலை வேளை அவனது மனதை மயக்கியது!

“ஹேய்ய்ய்… வாவ்… செமயா இருக்குப் பிரகாஷ். ப்ளீஸ்… இன்னும் வேகமா…” என்ற சுபர்ணாவை ஆச்சரியமாகப் பார்த்தான்!

“அடப்பாவி… அசர மாட்டேன் என்கிறாளே…” என்று நினைத்தாலும் அவனுள்ளும் உற்சாகம் பீறிட்டது! முன்னே சென்ற வாகனங்களை லாவகமாக ஒதுக்கி அவன் இன்னும் வேகத்தில் பறக்க,

“வாவ்வ்வ்வவ்வ்வ்… ஐ லைக் இட்…” எழுந்து மேலே நின்று கொண்டாள்.

“ரேசிங் பண்ணி இருக்கீங்களா பிரகாஷ்…” உற்சாகத்தோடு அவள் கேட்க, அவன் தலையசைத்து,

“ம்ம்ம் யாஹ் சுபி… ராலி டிரைவர்…” சிரிக்க,

“ஹே வாவ்… இன்ட்ரஸ்டிங்…”

“ஆனா அம்மா தடா போட்டுட்டாங்க… ராலி போறதுக்கு…” கவலையாக அவன் சொல்ல,

“அம்மா இல்லையா… அதான் பயந்து இருப்பாங்க…” ஆறுதலாகக் கூறினாள்!

“ஏன்… நீ பயப்பட மாட்டியா சுபி?” என்றவுடன்,

“ஏன்… நான் ஏன் பயப்படனும்? ஐ அம் என்ஜாயிங்…” என்று அவள் கூறவும் மெலிதான ஏமாற்றம் பரவியதென்றாலும் அவளது தைரியம் சத்யனை ஆச்சரியபடுத்தியது!

“நீ ரொம்பத் தைர்யமான பொண்ணு சுபி… பட் உன்னை நான் சாப்ட் நேச்சர்ட்ன்னு நினைச்சேன்…” மனதை திறந்து அவன் கூறவும்,

“ஹஹா… அப்படியா?” இயல்பாகவே சொல்லிக் கொண்டிருக்க வீடு வந்தது!

இருவரும் காரை விட்டு இறங்கி உள்ளே சென்றனர்… வாசலில் வரவேற்க கூர்க்கா மட்டுமே இருக்க,

“கிரண்… அப்பா எங்க…” ஹிந்தியில் அவனிடம் கேட்டாள் சுபி!

“வெயிட் பண்ண சொன்னாங்க ஜி… இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துடுவாங்களாம்…” பணிவாகக் கூறினான்!

அந்தக் கடற்கரை பங்களா அமைதியாக வீற்று இருந்தது! தன் முன்னே இருந்த அரபி கடலின் சீற்றம் அதைப் பாதிக்கவில்லை. உடன் யாரும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து இருக்கும் குழந்தையைப் போல… பார்க்கும் போதே மனதில் அமைதி தவழ்ந்தது!

“வெரி நைஸ் பிளேஸ் சுபி… சோ ரொமாண்டிக்…” கீழ்குரலில் சத்யன் கூற,

“ம்ம்ம்ஹூம்… உள்ளே ஒரு லான் இருக்குப் பிரகாஷ். பார்பிக்கியு பிளேஸ். அங்க போலாமா ப்ளீஸ்” புன்னகையோடு சுபி கேட்கத் தலையசைத்தான்!

வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் பணத்தின் செழுமை தெரிந்தது. கட்டிட வடிவமைப்பாளனாக ஒவ்வொன்றையும் அவனது மூளை குறிப்பெடுத்துக் கொண்டு வந்தது. எளிமையாக இருப்பது போன்றே தோற்றமளிக்கும் வசீகரமான பிரெஞ்ச் முறையில் அமைந்த அந்த வீடு அவனது ஆர்வத்தைக் கிளறி விடுவதில் ஆச்சரியமில்லை. ஹாலில் அமைந்து இருந்த பிரெஞ்ச் விண்டோவை தாண்டி இறங்கியபோது… மலர்களின் சுகமான வாசனை தீண்டிச் செல்ல… அந்த அழகான தோட்டம், சிறு பார்ட்டிகள் நடக்கும் பார்பிக்கியு பிளேஸ், அவனது கண்ணில் பட்டது.

“வாவ்… செம செம சுபி. இவ்வளவு அழகா தோட்டத்தை மெயின்டைன் பண்ற… சோ ஸ்வீட்…” வியந்து பாராட்டினான்! அதை அடக்கமான அளவான புன்னகையுடன் சுபர்ணா ஏற்றுகொண்டாள்! அந்த அழகான புன்னகையைப் பார்க்கும் போதே சத்யனுக்குள் என்னன்னவோ மாற்றங்கள்.

யாருமற்ற தனிமை, அழகான ரசனைக்குரிய தோட்டம், ரவிவர்மனின் ஓவியம் போன்ற அவனுக்கு நிச்சயம் செய்யப்படப் போகும் சுபர்ணா! மயங்கினான்!

எதிரில் வீட்டைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்த சுபர்ணாவை ஒரு மார்கமாகப் பார்த்தவன் அவளது இடக்கையைப் பற்றி இழுத்தான்! சட்டென அதிர்ந்தது போல இருந்த சுபி,

“ஹே… இதென்ன? யாருமில்லைன்னு ரொமான்ஸா?”

“ம்ஹூம்… உன்கிட்ட ஒரு கவிதை சொல்லணும். ம்ம்… தபு ஷங்கரோடது” அவளது விரல்பற்றிச் சொடுக்கெடுத்துக் கொண்டே அவன் கூற,

“கவிதையா… அதுக்கும் நமக்கும் ரொம்பத் தூரம் பிரகாஷ்…” கிசுகிசுப்பாகவே அவள் கூறினாள்,

“ம்ம்ம்… பரவால்ல கேளு…” என்று கூறிவிட்டு,

வட்டிக்கு வைத்த நகையைக் கூட

திருப்பி விடலாம் போல,

ஆனால் உன்மீது வைத்த கண்ணை மட்டும்

ஒரு போதும் திருப்ப முடிவதில்லை!

“ம்ம்ம்… வெரி ரொமாண்டிக்…” அவன் காதில் கிசுகிசுத்தாள் சுபி!

“யார் தபு ஷங்கரா?” கண்ணடித்துச் சிறு சிரிப்போடு சத்யன் கேட்க,

“ம்ம்ம்… சத்யப்ரகாஷ் தான்…” என்று கூறிவிட்டு அவனிடமிருந்து கைகளைப் பிரித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர நினைத்தவளை தூணில் சாய்ந்து கொண்டு மறைத்தான்!

“ஹே என்ன பிரகாஷ்…” சிரிப்போடு அவள் கேட்க,

“நத்திங்…” ஒன்றுமே இல்லாதது போலச் சொல்லிவிட்டு வழியை முழுவதுமாக மறைத்து நின்றான்.

“அப்பா வரப் போறாங்க பிரகாஷ்…” அவளது குரலில் எச்சரிக்கை மணி அடித்தது!

“ம்ம்ம் வரட்டும் சுபி…”

“வழிய விடுங்க…” அவளைக் கெஞ்ச விடுவதுதானே அவனது குறிக்கோள். காரை வேகமாகச் செலுத்திய போதே அழுது இருப்பாள் என்று தான் நினைத்தது இப்போது நிறைவேறி வருகிறது என்று பெருமையாக நினைத்தான்! இது கூட இல்லையென்றால் திருமணம் செய்யபோகும் பெண்ணிடம் எப்படிக் காதல் புரிவது?

“ம்ம்ம் முடியாது…” அவள் எந்தபுறமாகப் போக நினைக்கிறாளோ அந்தப் புறத்தை மறைத்தான். குறும்பு சிரிப்போடு!

“சரி… என்னதான் பண்ணனும் இப்போ… சொல்லுங்க…” ஆஹா சரண்டர் ஆகி விட்டாளே என்ற சிரிப்பு இருந்தாலும்… ச்சே இன்னும் அழ வைக்க வேண்டும் என்ற ஆசையில்,

“ஒண்ணுமே இல்லையே…” என்று அவளை மிகவும் பக்கத்தில் நெருங்க, சட்டென்று அவனது கையைப் பற்றி இழுத்தவள், சத்யனை இறுக்கமாக அணைத்தாள்!

“ஹே… சுபி…” அதிர்ச்சி அடைந்தது அவனது முறையாயிற்று! அவன் பேச ஆரம்பிக்கும் போதே அவனது இதழ்களைச் சிறை பிடித்தாள்! பின்னர் அவனை விடுவித்துவிட்டு,

“இதுக்குத் தான் இவ்வளவு பில்ட் அப்பா பிரகாஷ்…” நக்கலாகச் சிரித்து விட்டு சுபர்ணா நகர, அவளது முத்தத்தின் வீரியம் இன்னமும் குறையாத நிலையில் முகம் சிவக்க நின்றுகொண்டிருந்தான் சத்யப்ரகாஷ்!

அதன்பிறகு சுபர்ணாவின் தந்தை வந்ததோ அவர் ஆர்பாட்டமாக வரவேற்றதோ அவனது கருத்தில் எதுவுமே படவில்லை! அவரிடம் பேசுவதற்குக் கூடத் தோன்றாமல் வலுகட்டாயமாகப் பேசிகொண்டிருக்க, அவனது செல்பேசி சிணுங்கியது!

நிகில் அழைக்கிறான் என்று செல்பேசி கூற,

“சொல்லு நிகில்…” ஹிந்தியில் வினவினான்,

“பக்கத்தில் சுபர்ணா இருக்கிறாளா சத்யா? இருந்தால் தனியே வா…” எச்சரிக்கையாகக் கேட்டான் நிகில். சத்யன் சுபர்ணாவின் தந்தை சீதாராமனிடம்,

“ஒன் மினிட் அங்கிள்…” என்று சொல்லிவிட்டு தனியே வந்து,

“சொல்லு நிகில்…”

“சுபர்ணாவை உனக்குத் தெரியுமா அல்லது இப்போதைய பழக்கமா சத்யா?” நிகில் நேராக விஷயத்திற்கு வந்தான்!

“இல்லையே நிகில்… எனது பெற்றோரால் நிச்சயிக்கப் பட்டவள் சுபி. இப்போதைய பழக்கம் தான்…” அவனது குரலில் குழப்பம் தேங்கி இருந்தது!

“சரி… உனக்குச் சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் சத்யா. உனது நண்பனாகச் சொல்ல விழைகிறேன். இன்று இரவு நாம் பார்ட்டிக்கு போகிறோம்…”

“நாம் என்றால்?”

“நீ நான் அன்ட் விஸ்வா…”

“நிகில்… நீ சொல்ல வருவதற்கும்… பார்ட்டிக்குப் போவதற்கும் என்ன சம்பந்தம்?”

“நீ வந்து பார் சத்யா. பிறகு பேசலாம். எனக்கும் உனக்கும் பேர் அரேஞ் செய்ய வேண்டும். ஏழு மணிக்கு லோனாவாலா சென்றால் சரியாக இருக்கும்…”

“பேர் எதுக்காக நிகில்? லோனாவாலா எதற்குப் போக வேண்டும்?”

“லோனாவாலாவில் தான் பார்ட்டி சத்யா. pair எதற்காக என்றால்… அது ஒரு ரேவ் பார்ட்டி…” என்று அவன் முடித்தபோது… சத்யன் முகத்தில் அறைந்தது போன்ற அதிர்ச்சி!

“வாட்?”

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 4

நிகில் விஸ்வாவோடு சத்யனையும் சுமந்து கொண்டு கார் லோனாவாலாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. மும்பையின் இருள் வாழ்க்கை வித்தியாசமானது. மும்பையைப் பொறுத்தவரை இரண்டே இரண்டு வர்க்கங்கள் தான். உழைக்கும் வர்க்கம் இன்னொன்று அதை அனுபவிக்கும் வர்க்கம்! ஒருவன் ஏடிஎம்க்கு உள்ளே இருப்பவன்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்