அத்தியாயம் 31
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே,
உன் ஆனந்த மோகன வேனுகானமதில்,
தனது குருவான மைதிலி ராமநாதனிடம் பயிற்சிக்கு வந்திருந்தாள் அமிர்தா… முக்கியமான நிகழ்சிகளுக்கு முன் இது போன்ற புத்தாக்க பயிற்சிகளை அவள் எடுத்துக் கொள்வது வழக்கம்,
மைதிலியின் ஒன்று விட்ட அண்ணன் மகன் ராகவன்… வீடு இருப்பதும் எதிரெதிரேதான் என்பதால் அவள் வருவது ராகவனுக்குத் தெரியாமல் இருக்காது… சிறு வயது முதலே மைதிலிடம் பரதம் கற்றுக் கொள்ள அமிர்தா வந்து கொண்டிருந்தாலும் ராகவனின் குடும்பம் அங்கு இடம் பெயர்ந்தது நான்கு வருடங்கள் முன்பு தான்!
நான்கு வருடங்களாக அமிர்தாவை பார்த்திருந்தான்… ரசித்திருக்கிறான்… தொடர்ந்தும் இருக்கிறான்… அதிகமாக அங்குப் பேசியதில்லை… ஏனெனில் கூட்டுக் குடும்பமாக இருக்கும் தனது குடும்பத்தாரிடம் மனதளவில் சிறிது பயம் தயக்கம் எல்லாம் இருந்தது… ஆனால் அவளது நிகழ்சிகளைத் தவற விடவே மாட்டான்… எங்கேயாவது வெளியே பார்க்க முடியுமென்றாலும் அதையும் விட்டதில்லை,
அன்று அலுவலகத்தில் சத்யன் மற்றும் அமிர்தாவின் அன்னியோன்யத்தைக் கண்டவனுக்கு மனதில் வலி! இது பாசம் தான் என்று மனம் ஒரு பக்கம் அடித்துக் கூறினாலும் சத்யனின் கண்களில் அவன் கண்டது பாசத்தையும் மீறிய ஒரு உணர்வு! தனக்கே தனக்கான உரிமையான பொருளைக் கையாளும் பெருமிதம்… சொந்தத்தை மீறிய ஒரு பந்தம் நூலிழையாக இருப்பதை… நேசத்தை எதிர்பார்த்த அவனது மனதுக்குத் தெரிந்தது,
ஆர்வத்தோடு போனவன் ஆற்றாமையோடு வந்தான்… அதற்குப் பின் அவனால் எதிலுமே ஆர்வம் காட்ட இயலவில்லை… அமிர்தா மாலையே அவனைச் செல்பேசியில் அழைக்கும் வரை!
“சொல்லுங்க அமிர்தா…” பொதுப்படையாக ஆரம்பிக்க,
“ராகவ்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணுமே…”
“பேசுங்க அமிர்தா… இதுக்காகத் தனியா நீங்கப் பர்மிஷன் எல்லாம் வாங்க தேவையில்லையே!”
“ராகவ்… அதாவது… அது… வந்து…” அவள் தயங்குவது அவனுக்கு மிகவும் புதியதாக இருந்தது,
“அமிர்தா… நீங்க… இவ்வளவு ஹெசிடேட் பண்ணி இப்போ தான் பார்க்குறேன்… எதுவா இருந்தாலும் சொல்லுங்க… ஸ்பீக் அவுட்…”
“நீங்க ஆபீஸ்க்கு வந்தப்போ சத்யாவையும் என்னையும் நல்ல பேர்ன்னு சொன்னீங்களே… அது என்ன மீனிங்ல ராகவ்?” நேரடியாகக் கேட்டாள்!
“ஜஸ்ட் உங்க கெமிஸ்ட்ரி பார்த்துத் தான் அமிர்தா… யூ போத் ஹேவ் எக்ஸலன்ட் கம்பெட்டப்லிட்டி… உங்க அன்னியோன்யம்… அன்பு பாசம் எக்ஸட்ரா… எல்லாத்தையும் பார்த்தா யாரா இருந்தாலும் இதைத் தானே சொல்வாங்க!” ஒட்டாத குரலில் வலியோடு அவன் கூற,
“நோ ராகவ்… ப்ளீஸ் அந்த மாதிரி அவங்க முன்னாடியே என்னோட பேர் பண்ணி சொல்லிடாதீங்க ப்ளீஸ்… இன்னைக்கே ரொம்பச் சங்கடமா பீல் பண்ணிட்டு இருந்தேன்… அவங்களும் தான்… ப்ளீஸ் ராகவ்… ஐ திங்க் யூ கேன் அன்டர்ஸ்டேன்ட்…” அவள் அந்த நேரத்தை மிகவும் சங்கடமாக நினைத்துக் கூற ராகவனுக்கு மனதில் தூறல் பெய்தது,
“ஹஹா ஏன் அமிர்தா… நீங்க ரெண்டு பேரும் கசின்ஸ் தானே… எத்தனையோ பேர் இப்படி உங்களை ஓட்டியிருக்கலாமே… இப்போ ஏன் கவலைப்பட்டுக்கறீங்க?” அவளது கவலை அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது… சிரித்துக் கொண்டே அவன் கேட்க,
“இல்ல ராகவ்… என்னன்னு தெரியல… சின்ன வயசுல இருந்தே அப்படி யாருமே வீட்லயும் சரி வெளியவும் யாரும் பேசிகிட்டது கிடையாது… அதைவிட இப்போ சத்யா எனக்குக் குழந்தை மாதிரி… அவங்களோட மனசு கஷ்டத்தை என்னாலத்தான் உணர முடியும்… ப்ளீஸ் அந்த மாதிரி கமென்ட் பண்ணி அவங்களுக்கும் சங்கடத்தைக் குடுத்துடாதீங்கன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன்…”
அவளது நீண்ட விளக்கம் அவனுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அவள் இன்னமும் உணரவில்லையோ என்று ஒரு மூலையில் அலாரம் அடித்தது அவனுக்கு… சட்டென்று மலரும் காதலை விடத் தாய்மையோடு பாசத்தோடு உனக்காக நான் இருக்கிறேன் என்கிற அன்போடு இருப்பவர்களிடையே தோன்றும் காதலானது எவ்வளவு உன்னதமானது என்பதை அமிர்தா உணர மறந்து விட்டாள்,
ஆனால் ராகவன் உணர்ந்தான்… சத்யனின் கண்களில் கண்டது காதல் தான் என்பதை ஐயமற உணர்ந்தான்,
அவளும் நோக்கினாள் அவனும் நோக்கினாள்… காதல் மலர்ந்தது… என்பதைப் போன்ற காதல்கள் தோன்றிய வேகத்திலேயே மறைந்து விடக்கூடிய சாத்திய கூறுகள் மிக அதிகம்,
ஆனால் வருடக்கணக்காகப் பார்த்து… பாசம் வைத்து… துன்பத்தில் கை கொடுத்து… துயரத்தில் தோள் கொடுத்து… அன்னையாகத் தந்தையாகத் தோழியாக ஆசானாக யாதுமாகி தனக்கே தனக்காக உருகும் இதயம் கிடைக்கச் சத்யன் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே,
சத்யனின் மேல் கொஞ்சம் பொறாமையாகக்கூட இருந்தது… இதே அளவு பாசத்தைக் காட்ட நமக்கு ஒரு இதயம் கிடைக்குமா என்று ஏங்க ஆரம்பித்தான்,
இருவரிடையே நூலிழையாக ஒட்டிக்கொண்டிருக்கும் காதலை வலிமையான கயிறாகத் திரிப்பது சத்யனின் கைகளில் தான் இருக்கிறது என்று உணர்ந்தான்,
அன்று இரவே பார்ட்டியின்போது சத்யனிடம் பேசவும் செய்தான்… அமிர்தாவுக்குத் தெரியாமல்,
“சத்யா… வாழ்த்துக்கள்…” என்று அவனிடம் ராகவன் கையைக் கொடுத்தபோது எதற்க்காக வாழ்த்துச் சொல்கிறான் என்பது புரியாமல் அவனைப் பார்த்தான் சத்யன்,
“எதுக்கு ராகவ்…” புன்னகையோடும் குழப்பத்தோடும் சத்யன் கேட்க,
“ஹஹா ஒரு ஏஞ்சல லவட்டிட்டு ஒன்னும் தெரியாத மாதிரிக் கேள்வி கேக்கறீங்க பாத்தீங்களா? நீங்க செம கேடி பாஸ்…” ராகவன் சிரிக்கச் சத்யனும் வெட்கத்தோடு சிரித்தான்!
“ஆஹா நீங்க அம்முவ சொல்றீங்களா?” சிரிப்பு இன்னும் பெரிதானது!
“அதே அதே… என்ன இன்னும் அவங்க கிட்ட சொல்லலை போல இருக்கே…” என்று அவன் வார… அதற்கும் வெட்கத்தோடு சிரித்தான்,
“கொஞ்ச நாள் போகட்டும் ராகவ்… எவ்வளவு பிரச்சனை இருக்கு… அதைப் பார்க்காம அவளைப் பார்க்கச் சொல்றீங்களா? அதுசரி எப்படி உங்களுக்கு இந்த விஷயம் தெரியும்? காலைல கூட அப்படித்தான் ஏதோ சொன்னீங்க…” சத்யன் வியந்து கேட்க,
“சத்யா… அதான் உங்க முகத்துல ஓட்டி வெச்சுட்டு இருந்ததைப் பார்த்தேனே…” கூறிவிட்டு ராகவன் சிரிக்க,
“ஹஹஹா அவ்வளவு வெளிப்படையாவா தெரியுது… ஊர்ல எல்லாருக்குமே தெரிஞ்சாலும் தெரிய வேண்டியவங்களுக்குத் தெரியவே தெரிய போறதில்ல பாஸ்… என்னை என்னமோ சின்னக் குழந்தையாட்டம் ட்ரீட் பண்றதையும் அவ விட்டுட போறதில்லை…” சிரித்துக் கொண்டே அவன் கூற ராகவன் வியப்பாகப் பார்த்தான்!
“எப்படி அதைக் கூட ஒரே மாதிரி திங்க் பண்றீங்க… அமிர்தாவும் இதையே தான் சொன்னாங்க… நீங்க அவங்களுக்குக் குழந்தை மாதிரின்னு…” புன்னகையோடு அவன் கூற அதை வெட்க புன்னகையோடு அங்கீகரித்தான்!
“ஆமா அவ அப்படித்தான் நினைப்பா… ஆனா நீங்க என்ன பண்ணனும்? அப்போ அப்போ அம்மிணி கிட்ட பிட்டுப் பிட்டா போட்டு விடனும்…” என்று சிரிக்க,
“எப்படிச் சத்யா? வடிவேலு பத்தி விஜய் பிட்டு போட்டு விடுவாரே அது மாதிரியேவா?”
சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் நினைவுக்கு வந்து ஒரு ஓரத்தில் வலித்தது ராகவனுக்கு! அவன் நான்கு வருடங்களாக விரும்பிய பெண்ணை ஒரே நாளில் கண்ணியமாகப் பார்க்க வேண்டிய நிலை… அவன் விரும்பினான் என்றாலும் அவனால் இன்னொருவனின் காதலியை… அதாவது அந்தக் காதல் சுலபமாக வெற்றியைத் தரக்கூடிய நிலையில் அந்த இன்னொருவனின்வருங்கால மனைவியை… தன் காதலியாக நோக்க முடியவில்லை!
வலித்தாலும் ஜீரணித்தான்!
காதலியாகத்தானே பார்ப்பது குற்றம்! எப்போதும் போலத் தோழியாக இருக்கலாமே!
ராகவன் அவனது நினைவுகளிலிருந்து மீண்டு வந்தான்! அமிர்தா பயிற்சி முடித்து வரக் காத்திருந்தான்! அவனது மனம் தெளிவான பின்னர் அவனது குடும்பத்தார் முன்னிலையிலேயே அவளிடம் பேசுவதற்குத் தயக்கம் இருக்கவில்லை,
“என்ன ராகவ்… ரொம்ப நேரமா வெய்ட் பண்றீங்களா?” ஆடி முடித்து வேர்வையைத் துடைத்துக் கொண்டே வந்தாள் அமிர்தா! பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறந்து ராகவ் கொடுக்க வாங்கியவள் மடமடவென்று ஒரு பாட்டிலையும் காலி செய்தாள்… அவள் எப்போதும் ஆடி முடித்தவுடன் உடனே தண்ணீர் அருந்துவதில்லை… சிறிது நேரம் கழித்து வியர்வை வடிந்தவுடன் தான் குடிப்பது!
“கொஞ்ச நேரமாத்தான்… நம்ம தேவதையோட ப்ராக்டிஸ் செஷன் பார்க்கக் கொடுத்து வெச்ச ஒரே ஜீவன் நான் தான்னு வெளிய பீத்திக்கனும்ல…” அவன் சிரிக்க… அவனைப் புன்னகையோடு பார்த்தாள்,
“ஆஹா போதுமே…” அமிர்தா சிரிக்க,
“சரி… வாங்க… ஒரு கப் காபி சாப்பிட்டுட்டு பேசிட்டு இருக்கலாம்… உங்களுக்கு ஒன்னும் வேலை இல்லையே அமிர்தா?”
“எனக்கு ஒரு வேலையும் இல்ல ராகவ்… மணி ஆறாகப் போகுது… போட் கிளப் வீட்டைத் திறந்து விளக்கேத்தி வெச்சுட்டு வீட்டுக்குப் போகணும்… அவ்வளவுதான்”
அவள் குறிப்பிடுவது சத்யாவின் வீடு என்று அவனுக்கும் தெரியுமாதலால்,
“ஓகே ஜஸ்ட் டென் மினிட்ஸ்… ஆக்சுவலா…” என்று நிறுத்த அவள் என்னவென்று பார்க்க,
“கல்யாணத்துக்கு அம்மா பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க… பத்துப் போட்டோஸ் குடுத்து இருக்காங்க அமிர்தா… எனக்கு ரொம்பக் குழப்பமா இருக்கு… அதான் உங்க கிட்ட ஒபினியன் கேக்கலாம்ன்னு கூப்பிட்டேன்…” தடுமாறிக்கொண்டே அவன் கூற அவளது முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக ஒளிர்ந்தது!
“வாவ்! கங்க்ராட்ஸ் ராகவ்… அப்போ இப்போவே எனக்கு ட்ரீட் வேணும்…” சிரித்துக் கொண்டே அவள் கைகொடுக்க அந்தக் கைகளை ஒரு நிமிடம் எந்த உணர்வுமற்றுப் பார்த்தான்… கடைசி வரை இந்தக் கைகளைப் பிடிக்க ஆசைப்பட்டேனே… மனம் இன்னும் அதிகமாக வலித்தது!
“தேங்க்ஸ் அமிர்தா… வாங்க இப்போவே…” சிரித்தான் தன் உள்ளே நிமிண்டிய வலியை மறைத்துக் கொண்டு!
“ஆஹா ஒரு காபில முடிச்சுக்கலாம்ன்னு பார்க்கறீங்களா? நோ வே… இருங்க சத்தி கிட்ட சொல்றேன்… நீங்க மாட்டுனீங்க…” என்று அவளது செல்பேசியை எடுத்தாள்! அவனை அழைத்தாள்,
“சத்தி… எங்க இருக்க?”
“கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல இருக்கேன் அம்மு! என்ன விஷயம்…”
“ரொம்பப் பிஸியா?” ஏக்கமாக ஒலித்தது அவளது குரல்… வேலை வேலையென்று சத்யன் அலைய அவனைப் பார்த்தே நாட்களாகிறதே… அன்று வீட்டில் பார்த்ததோடு சரி… அதன் பின் எப்போது கேட்டாலும் பிஸி பிஸி… இதுதான் பதிலாக இருந்தது!
“கொஞ்சம் பிஸி அம்மு… ஏன்டா?” அவளது உணர்வை உள்வாங்கியாவனால் உணர முடிந்தது ஆனாலும் அவனை நெட்டி தள்ளிய வேலைகள் அவனை மேற்கொண்டு போக விடவில்லை… சைட் பக்கமும் வர விடமாட்டான்!
“இல்லம்மா… நம்ம ராகவ்க்குக் கல்யாணம் பேசி இருக்காங்களாம்… அதான் ட்ரீட் கேட்டேன்… அதுக்கு நீ ப்ரீயா இருந்தா உன்னையும் கூப்பிடலாம்ன்னு…” என்று அவள் கூறும் போதுதான் மதியம் உணவு உண்ணாததே அவனுக்கு நினைவுக்கு வந்தது… பசி வயிற்றைக் கிள்ளியது… இவ்வளவு நேரத்திற்கு மேல் அத்தை வீட்டிற்கு அடையாறு வரை போக முடியாது என்று எண்ணிக்கொண்டு,
“அவர் கிட்ட விஷ் பண்ணிரு அம்முக்குட்டி… என்னால இங்க இருந்து அசைய முடியாது… சரி எங்க போறீங்க?”
“கேஎப்சி தான்… மைதிலி மேம் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கே அது…” சுரத்தின்றிப் பதில் கூறியவளுக்கு ஏனோ தொண்டையை அடைத்தது… அவனைப் பார்க்காத நாட்களில் பேசாமல் இருந்த நாட்களில் அவனை மிகவும் தேடியது மனது! இப்பொழுதும் அவன் வேலையைக் காரணம் காட்டி மறுக்க… அவளுள் ஏதோ ஒன்று உடைந்தது!
“ஓகேடா எஞ்சாய்… அப்புறமா பேசறேன் அம்மு…” என்று செல்பேசியை வைத்துவிட மெளனமாகக் காதிலிருந்து செல்பேசியை எடுத்தவள் ஒரு நிமிடம் அதில் ஒளிர்ந்த அவனது காண்டாக்ட் இமேஜை வெறித்துப் பார்த்தாள்! இவனெல்லாம் லவ் பண்ணவே லாயக்கில்ல எருமை எருமை என்று மனதுக்குள் அவள் திட்ட அவளது மன தடுமாற்றத்தை கவனித்து மனமே கேள்வி கேட்டது!
“அவன் லவ் பண்றான்னு சொன்னான் சரி… ஆனா நீ?”
அவளை நோக்கி வந்த கேள்வியை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை… வேறு வழி இல்லாமல் அந்த மனக்குரங்கை அடக்கியதொடு அவனது காண்டாக்ட் இமேஜையும் குரங்கு படத்திற்கு மாற்றினாள்… அப்போதுதான் மனம் நிம்மதியடைந்தது… நேரில் அவனைத் திட்ட முடியாததிற்கு இவனுக்கு இதுதான் சரி என்று சந்தோஷித்துக் கொண்டாள்!
அமிர்தா அவளது ஆக்டிவாவில் கேஎப்சியை அடைய ராகவ் அவனுடைய யமஹாவில் வந்தான்… இருவருமாகக் கேஎப்சி உள்ளே நுழைந்தனர்! அமிர்தாவுக்கு அவனிடம் வம்பு வளர்க்க நிறைய இருந்தது… அந்தப் பெண்களுடைய புகைப்படங்கள் ஒவ்வொன்றாகக் காட்டி அவனைக் கிண்டலடித்து அவனை ஒரு வழியாக்கினாள்! அனைத்துக்கும் புன்னகைத்தே சமாளித்தான் ராகவ்… அந்தப் புன்னகையின் வலியை அவன் மட்டுமே உணர்ந்தான்!
“சரி… சத்யாட்ட பேசின உடனே உங்க முகமே டல்லாகிடுச்சே என்ன விஷயம் அமிர்தா…” பொதுவாக ராகவன் கேட்க,
“ம்ம்ம்… அந்த மங்கிக்கு…” என்று ஆரம்பித்து விட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்… அவனை எவ்வளவு தான் வாடா போடா என்றாலும் எருமை பேய் பிசாசு என்று பெயரிட்டு திட்டினாலும் மற்றவர்களிடம் போது மரியாதை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்! இன்று அவன்மேல் இருந்த எரிச்சலில் வாய் தவறி கூறிவிட்டு நாக்கை கடித்துக் கொள்ள… அந்தச் செய்கையை மிகவும் ரசித்தான் ராகவன்! உடனே அவன் மனம் அடங்கு அடங்கு என்று அடக்க… வலிந்து தன் மனதை அடக்கிக் கொண்டு சிரித்தான்!
“அவங்களால வர முடியலையாம்… சைட்ல ரொம்ப வேலை இருக்காம் ராகவ்… உங்க கிட்ட விஷ் பண்ண சொன்னாங்க… சரி கேஎப்சி கூட்டிட்டு வந்திருக்கீங்களே நீங்களும் நான் வெஜ்க்கு மாறப் போறீங்களா?”
“ஆஹா நீங்கச் சொன்னா மாறிட வேண்டியதுதான்…” சிரித்து விட்டு”இல்லப்பா… எனக்கு வெஜ்ல எதாச்சும் சொல்லிக்கறேன்…”
தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வந்து உண்ண ஆரம்பிக்கும்போது பக்கத்தில் யாரோ வந்து அமர்வதை உணர்ந்தாள்… நிமிர்ந்து பார்க்க… சத்யன்! ராகவனுக்கு ஹாய் சொல்லி விட்டு இவளிடம் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க… புன்னகை பெரிதாக மலர்ந்தது அமிர்தாவுக்கு!
“என்னமோ அவ்ளோ வேலை இருக்கு… இவளோ வேலை இருக்குன்னு சீன் போட்ட… இப்போ எதுக்கு இங்க வந்த?” அவனிடம் குனிந்து கிசுகிசுப்பாகக் கேட்க,
“என்னை விட்டுட்டு நீ மட்டும் கேஎப்சில முழுங்கலாம்ன்னு பாக்குறியா? நோ சான்ஸ்…” அவன் சிரித்து விட்டு அவள் சாப்பிட்ட சிக்கனை பிடுங்கி அவன் சாப்பிட துவங்க,
“பிசாசு… என்னோடதை குடு…”
“முடியாது… நீ வேண்ணா இன்னொன்ன ஆர்டர்பண்ணு… அவளுடைய காம்போ முழுவதையும் கபளீகரம் செய்துகொண்டிருந்தான்… ராகவனைப் பார்த்துச் சிரித்தவாறே! இருவரின் சண்டையைப் பார்த்து சிரித்த ராகவன் அவளுக்கு இன்னொன்று ஆர்டர் செய்யப் போக அவனைக் கையமர்த்தி விட்டு அமிர்தாவே சென்று வாங்கி வந்தாள்!
“இதை முடிச்சுட்டு அதுக்கு வரேன் அம்முகுட்டி… கொஞ்சம் ஸ்லோவா சாப்பிடு… ஓகே வா…” அவளை வம்பிழுக்க அவளுக்குப் புரிந்து போனது… மதியம் அய்யா உணவு உண்ணவில்லை என்று!
“ம்ம்ம் மத்தியானம் சாப்பிடலதானே நீ?” அவள் கேட்க… அவளிடம் கண்ணைச் சிமிட்டிவிட்டு,
“ஒரு நேரம் சாப்பிடலைன்னா ஒன்னும் ஆகிடாது அம்முகுட்டி…” சிரித்துக் கொண்டே கூற… அவளுக்கு வலித்தது! ராகவனைப் பார்த்துக் கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டே,
“பாருங்க ராகவ்… எப்போ பார்த்தாலும் இப்படியேத்தான் பண்றாங்க… ஒழுங்கா சாப்பிடாம தூங்காம எப்போ பார்த்தாலும் வேலை வேலை… இப்போ வேற வழி இல்லைதான்… ஆனா சாப்பாடாச்சும் ஒழுங்கா சாப்பிடலாம் இல்லையா…” ஆதங்கமாகக் கூறிவிட்டு அவன் புறம் திரும்பி,
“இரு உன் அத்தைகிட்ட சொல்றேன்… பாதி நாள் நீ சாப்பிடறதே இல்லைன்னு… அம்மா எதாச்சும் சொன்னாத்தான் நீ வழிக்கு வருவ… ஒவ்வொரு நேரமும் பார்த்துப் பார்த்துச் செய்ய முடியுமா? சின்னக் குழந்தையா நீ?”
அவளது அர்ச்சனையைக் காதில் வாங்காமல் ராகவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே,
“ஷப்பா… ஆரம்பிச்சுடுச்சு… எப்எம் ரேடியோ… இனிமே நான்ஸ்டாப் புலம்பல் தாங்க முடியாது ராகவ்…”
“நான் சொல்றது உனக்கு எப்எம் மாதிரி தெரியுதா?” அவனை அடித்தவள் வேறு புறமாகத் திரும்பி உட்கார்ந்தாள்!
“அந்தப் பக்கம் பார்த்து உட்காராதடி… அங்க மூனு பேர் உன்னையே சைட் அடிச்சுகிட்டு இருக்கானுங்க…” இயல்பாகக் கூறிக்கொண்டே தன்னுடைய தலையாய வேலையான சிக்கனை முழுங்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருக்க… அவனைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டாள்,
“ச்சே… நீயெல்லாம் என்ன டிசைன்னே தெரியலடா… சைட் அடிச்சா போய் என்னன்னு கேக்க மாட்ட?”
“எதுக்குடி கேக்கணும்? கண்ணுன்னு இருந்தா சைட் அடிக்கத்தான் செய்வாங்க… இதுக்குப் போய் இவ்வளவு அலட்டனுமா?” அலட்டாமல் சிரித்து விட்டு ராகவனுக்கு ஹை பை கொடுத்தான்! இருவரும் பெரிதாகச் சிரிக்க… இருவரையும் முறைத்த அமிர்தா,
“ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டீங்க இல்லையா… சரி நான் போறேன்…” கோபித்துக் கொண்டு அவள் தனியாகப் புறப்பட… ராகவன் தடுத்தான்… அவனிடம் மறுத்துவிட்டுச் சத்யனை திரும்பிப் பார்த்தாள்… ஏதாவது கூறி தன்னைத் தடுப்பான் என்று… அவன் கடமையே கண்ணாக அவளுடைய இன்னொரு சிக்கனையும் சேர்த்து வெட்டிக்கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்துக் கண்ணடித்துவிட்டு டாடா காட்ட… வெறுத்து போனாள் அமிர்தா!
“ச்சே… உன்னையெல்லாம்…” அவனைப் பெரிதாக ஒரு அடி அடித்துவிட்டு ராகவனிடம் கூறிக் கொண்டு புறப்பட்டாள்!
சப்தம் இல்லாமல் அந்த மூவரும் அமிர்தாவை தொடர்ந்தனர்!






Sorry Ragav
I’m extremely sorry..
Unna poi thappa nenachuttane Ragavu..
Oru vela namma author tha intha Ragavo 🤔