அத்தியாயம் 32
அமிர்தாவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது… ச்சே ஒரு வார்த்தை கூடவா சொல்ல முடியாது அவனால்… மனதில் கொஞ்சமும் ஆசை இல்லாமல்… இவனைப் பத்து நாட்களாகப் பார்க்காமல் இருந்து இப்போது பார்த்தபோது எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ அதே அளவு அழ வைப்பதே இவனது வேலையாகி விட்டது… மனதில் மானாவாரியாகத் திட்டிக் கொண்டிருந்தவள் ஒரு நிமிடம் நிறுத்தி யோசித்தாள்,
ஆசையாயாகவா? நீதானே வெறும் பாசமென்று அவனிடம் சத்தியமே செய்திருக்கிறாய்? இப்போது திடீரென்று எங்கு வந்துவிட்டது இந்த ஆசையும்… கூடவே உனக்கு ஒத்தே வராத காதலும்?
மனம் அவளைத் திருப்பிக் கேள்வி கேட்க… தன்னுடைய ஆக்டிவாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தவளின் நடை நின்றது… தயங்கினாள்… திரும்பி சத்யனை பார்த்தாள்… அவனும் அவளையே புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்க… அந்தப் புன்னகை அவளது உயிர்வரை ஊடுருவியது… இவன் என்ன மாயக் கண்ணனா?
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
உன் திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
அவள் ஆடிப் பழகிய நடனங்களுக்குப் புது அர்த்தம் கற்பிக்கத் துவங்கியது மனது… சமைந்து வைத்த சிற்பமாக அவனையே ஒரு கணம் பார்த்தபடி கால்கள் வேறோடி நிற்க… என்னவென்று புருவத்தை உயர்த்திக் கேட்டான்!
உடலில் அத்தனை ரத்தமும் முகம் நோக்கிப் பாய்ந்ததோ எனத் தோன்றியது அமிர்தாவிற்கு… தான் ஏதோ ஒரு மயக்கநிலைக்கு ஆட்பட்டதைப் போல எண்ணினாள்! இதுதான் காதலா? இதைதான் சத்யன் உணர்ந்தானா? நீயும் ஒருநாள் உணர்வாய் என்றானா?
தினமும் பார்த்துக் கொண்டே இருக்கும் போதெல்லாம் தோன்றாத காதல்… இத்தனை நாட்கள் பார்க்காமல் இருந்தபோது தவித்த தவிப்பில் தோன்றியதா? இல்லையென்றால் அது என்னிடமே இருந்ததுதானா?
மனம் ஆயிரம் எண்ணங்களில் குழம்பி கொண்டிருக்க அந்தக் குழப்பங்களின் நாயகனோ சிக்கனை புன்னகையோடு வெட்டிக் கொண்டு தனது காதலியை முடிந்தவரை வெறுப்பேற்றி க்கொண்டிருந்தான்! அவனுடைய தேவை அதுதானே… அவள் தானாகக் காதலை உணர வேண்டும்… தன் மீது அவள் கொண்டுள்ளது பாசத்தைத் தாண்டி உயிரைத் தீண்டும் நேசம் என்பதை அவள் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை அவன் உருவாக்கினான்!
“என்ன அமிர்தா இன்னும் போகலை போல இருக்கே…” அவளைத் திரும்பிப் பார்த்தபடி ராகவன் சத்யனிடம் கேட்க… அதற்கும் புன்னகைத்தான்!
“எப்படி ராகவ் முடியும்? சான்சே இல்ல… அவ போக மாட்டா!” உறுதியாக அவனிடம் சொல்லிக் கொண்டிருப்பதைப் போலவே அவளும் வாசலில் தனது வண்டி முன் நின்றபடி தயங்கி கொண்டிருக்க… சத்யனுடைய நம்பிக்கையை எண்ணி… புரிதலை எண்ணி சிறிது பொறாமை தோன்றியது மனதில்… ஆனால் அடுத்த நிமிடமே தனது எண்ணத்தை அழித்து விட்டான்… ச்சே பொறாமைப்படுவது நம்முடைய குணமில்லையே… தனது தலையில் கற்பனையாகக் குட்டி கொண்டான்,
சத்யன் அமிர்தாவை நோக்கி என்னவென்பதை போலக் கைகளைக் காட்டி விட்டுப் பின் அடாவடியாக டாடா கூற கொஞ்சம் நஞ்சம் அவன் புறம் சாய்ந்த மனதையும் முட்டு கொடுத்து நேராக நிறுத்தி வைத்தாள் அமிர்தா… கடுகடுத்த முகத்தோடு!
உதட்டைச் சுளித்தவள் திரும்பியும் பாராமல் அவளுடைய வண்டியை நோக்கிப் போக இங்கே சத்யன் ராகவனிடம் சிரித்துக் கொண்டான்… அவளுடைய சிறுபிள்ளைத்தனத்தை எண்ணி!
ஆக்டிவாவில் தனது கைப்பையை வைத்தவள் கிளம்பப் போகச் சட்டென்று அவளது முகத்தை மூடப் பார்த்தது ஒரு கை… அது சத்யனுடையது அல்ல,
பக்கத்தில் வந்து நின்றது ஆம்னி வேன்… உரசிக்கொண்டு,
ஒரே நொடியில் சுதாரித்தவள் நின்று கொண்டிருந்த நிலையிலேயே குனிந்து அந்தக் கையைத் தவிர்த்துக் கைப்பையோடு மறுபுறம் வந்து நின்று யாரென்று பார்த்தாள்… கற்று கொண்டகராத்தே கை கொடுத்தது… அவளையே சைட் அடித்துக் கொண்டிருப்பதாகச் சத்யன் கூறிய அதே மூவர்,
கைப்பையைத் தொட்டு பார்த்துக் கொண்டாள்… எப்போதும் தனது பாதுகாப்புக்காக வைத்திருக்கும் பெப்பர் ஸ்ப்ரே பத்திரமாக இருந்தது… தேவையென்றால் உபயோகப்படுத்திக் கொள்ளச் சிறிய கத்தி கூட எப்போதும் வைத்திருப்பாள்,
அவளது வக்கீல் தொழிலில் எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்னையை எதிர்பார்த்தேயாக வேண்டியது கட்டாயம் என்பதுதானே முதல் பாடமே! அதுவும் இல்லாமல் நடன நிகழ்ச்சிகளின்போது எத்தனையோ விதமானவர்களைச் சந்திக்க நேரிடும்போது எடுத்துக்கொள்ளா ஆரம்பித்த தற்காப்பு முறைகள் இவை!
இவ்வளவு பொதுவான இடத்தில்… இத்தனை கூட்டத்திற்கு மத்தியில்… தன்னுடன் வந்தவர்களையும்… பார்த்த பின்னரும் தன்னிடம் இப்படி நடந்து கொள்பவர்கள் நிச்சயம் காரணத்தோடுதான் செயல்பட்டிருக்க வேண்டும்,
ஒரே நொடி மட்டுமே இவற்றைச் சிந்தித்தவள் தன் மேல் அடுத்த முறை கை வைக்கும் முன்னரே கைப்பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேயை எடுத்து அவர்கள்மேல் பிரயோகித்து இருந்தாள்! இவை அனைத்தும் ஒரு நிமிடத்திற்கு உள்ளாக நடந்து முடிந்து விட,
மூவரும் எரிச்சல் தாங்காமல் அலறும் போதே தன் மேல் கை வைக்க வந்தவனின் கையை இறுக்கி பிடித்து முறுக்கினாள்! இன்னொருவன் அவளைத் தாக்க வர லாவகமாகக் குனிந்து கொள்ள அவன் பக்கத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தின் மேல் மோதிக் கீழே விழ… அந்த இன்னொருவன் சூழ்ந்து கொண்டடிருந்த மக்களைச் சற்று பயத்தோடு பார்த்தான்,
உள்ளே அமர்ந்து அமிர்தாவையே பார்த்துக் கொண்டிருந்த சத்யனுக்கு மனம் பதைத்தது… சத்யனும் ராகவும் பார்த்து விட்டு ஓடி வருவதற்கு முன்னே இவை அத்தனையும் நடந்து முடிந்திருக்க… சத்யனின் கோபம் எல்லைகளைக் கடந்தது… கேஎப்சி செக்கியுரிட்டியோடு இன்னும் சிலர் சேர்ந்து கொள்ளஅவளை நெருங்கியபோது அவனது கையைப் பிடித்து முறுக்கி அவனிடமிருந்து எதையோ பிடுங்க,
பளாரென அவனை அறைந்த சத்யன்… சரமாரியாகக் குத்துக்கள் விட அந்தக் கடத்தல்காரனின்உதடு கிழிந்தது! அவனது கையிலிருந்து பிடுங்கி அதை என்னவெனப் பார்க்க,
கர்சீப்,
மயக்கமருந்து கலக்கப்பட்டது என்று முகர்ந்தபோது தெரிந்தது,
“ஏய்… யார் நீ? எதுக்காக இவங்களைக் கடத்த பார்க்கற?” கோபமாக அவனைச் சத்யன் அறைய… அந்த மூவரும் தடுக்கப் பார்க்க… அவர்கள் எல்லோருக்கும் மேலும் அடிகள் சரமாரியாக விழுந்தது… சத்யனை தடுத்து நிறுத்த முயன்றாள்… முடியவில்லை,
ராகவனும் உடன் சேர்த்துக் கொண்டு மூவரையும் விளாசித் தள்ளினர்… அங்கிருந்த பொதுமக்களும் தன் தர்மத்திற்கு ஒன்று வீட்டில் உள்ளவர்கள் தர்மத்திருக்கு ஒன்று எனக் கிடைத்த சந்தில் புகுந்து விளையாடினர்,
பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த அமிர்தா உடனே அந்தச் சரக இன்ஸ்பெக்டரை அழைத்தாள் செல்பேசியில்… பன்னீர் அவளுக்கு மிகவும் தெரிந்தவர்,
“அண்ணா கொஞ்சம் இங்க வரீங்களா?” என்று பதட்டமாக இடத்தைக் குறிப்பிட்டு அவள் அழைப்பதை கண்டவரும் பதட்டத்தை எடுத்துக் கொண்டார்!
“என்னமா பிரச்சனை… ஏன் இவ்வளவு டென்ஷனா பேசறீங்க?”
“இல்லண்ணா… இங்க கொஞ்சம் பிரச்சனை… கொஞ்சம் நீங்க வந்தா நல்லா இருக்கும்…”
“இதோ பத்து நிமிஷத்துல வந்துடறேன் அமிர்தாம்மா…” என்று வைத்தவர் அதே போலப் பத்து நிமிடங்களில் அந்த இடத்தில் இருந்தார்… என்ன பிரச்சனை என்பதைக் கேட்டுக் கொண்டவர் அந்த மூவரையும் கைது செய்து ஸ்டேஷனுக்கு அனுப்பி விட்டு அவளிடம் திரும்பினார்!
“அமிர்தாம்மா… இவனுங்களை ஸ்டேஷன் கூட்டிட்டு போய் நான் விசாரிக்கற விதத்துல விசாரிக்கறேன்… ஆன நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருந்துகோங்க…” சத்யன் அமிர்தா இருவருக்கும் பொதுவாகக் கூறிவிட்டு அவர் போக… அவர் சென்ற பின்னரே நிம்மதியாகப் பெருமூச்சு விட முடிந்தது அமிர்தாவால்… சத்யனை பார்க்க… அவனோ தீவிரமான யோசனையில் இருந்தான்,
“என்ன சத்யா யோசிக்கற?”
“யாரா இருக்கும்ன்னு யோசிக்கறேன்…” யோசனையாகவே அவன் கூற மூவரும் அங்கிருந்த மர நிழலில் ஒதுங்கினர்… கோபத்தில் அவனது குரல் கொந்தளித்தது,
“வக்கீல் தொழில்ல இதெல்லாம் சகஜம் சத்தி… இதுக்கு இவ்வளவு நீ இம்பார்ட்டன்ஸ் கொடுக்கத் தேவையில்லை… அதான் போலீஸ் அரெஸ்ட் பண்ணியாச்சே…” இயல்பாக அவள் கூற வெறுமையான பார்வை பார்த்தான்… ராகவனும் அவள் கூறுவதை ஒப்புக்கொண்டான்,
“ஆமா சத்யா… அமிர்தா சொல்றதும் ரைட்தான்…”
“அப்படி இருந்துட்டா பரவால்ல… ஆனா எனக்கு வேற ஒரு யோசனையும் இருக்கு…” குழப்பமாகக் கூற அதைக் கண்ட அமிர்தா நெற்றியை சுருக்கி பார்த்தாள்,
“உன் யோசனைய அப்புறம் பண்ணு… முதல்ல கைய்யக் கழுவு…” வண்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத்தர… கையைக் கழுவி விட்டு இயல்பாக அவளது ஷாலில் கையைத் துடைத்தவன்,
“கண்டிப்பா இது உன் சம்பந்தப்பட்டதா இருக்காது… என் சம்பந்தப்பட்டதாத்தான் இருக்கும்…” என்றான் அவன் தீர்க்கமாக! பின் அவனே தனது முகபாவத்தை மாற்றி அவளைக் கிண்டலாக ஒரு பார்வை பார்த்து,
“பட்… ஒன்னை கவனிச்சீங்களா ராகவ்…” புன்னகை தொனிக்கு மாறினான்… அவளைப் பெருமித பார்வை பார்த்தபடி… அவளால் தனியாக எதையும் சமாளிக்க முடியும் என்பதில் அளவு கடந்த பெருமை அவனுக்கு!
“என்ன சத்யா?”
“கஷ்டம் தான்… பின்னாடி எதாச்சும் நாம கருத்துன்னு எதாச்சும் சொல்லப் போக… இவங்க கிட்ட கராத்தே அடிய வாங்கியாகனுமேன்னு நினைச்சாலே பயமா இருக்கு ராகவ்…” அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான் சத்யன்!
“அதுவும் பெப்பர் ஸ்ப்ரே வேற வெச்சுருக்காங்க சத்தி… எதுக்கும் பத்தடி தள்ளி நின்னே ரொமான்ஸ் பண்ணுங்க…”
ராகவன் சிரித்துக் கொண்டே எடுத்துக் கொடுக்க அதைக் கேட்ட சத்யனுக்குச் சிரிப்பு பீறிட்டது… ராகவின் தோளைத் தட்டியபடி அடக்கமாட்டாமல் சிரிக்க அதைப் பார்த்த அமிர்தாவுக்குக் கடுப்பாக இருந்தாலும் அந்த வார்த்தைகள் அவளுக்கு வெட்கத்தை வரவழைத்தன… ஆனால் காட்டிகொள்ளாமல்,
“அட ச்சீ… போடா… பிசாசு…” சத்யனை முறைத்துக் கொண்டே திட்டி விட்டு,
“நீங்களும் இந்தப் பிசாசு கூடச் சேர்ந்துட்டு என்னைக் கிண்டல் பண்றீங்களா ராகவ்?” என்று அவனிடம் முறையிட அதற்கும் ராகவன் சிரித்து வைக்க,
சத்யனின் சுவாரசியமாகக் கவனித்தது அவளது வெட்க புன்னகையும் அதை ஒரே நொடியில் மறைத்த அவளது திறமையையும் தான்… பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா!





