அத்தியாயம் 33
அந்த மூவரையும் அடித்தபோது சத்யனை லேசாகக் கிழித்த காயத்திற்கு ட்ரசிங் செய்து விட்டு ராமவிலாசத்திற்கு வந்து சேர்ந்தபோது மணி எட்டாகியிருந்தது… சாவித்ரிவிடம் இருவருமே சேர்ந்து மறைக்க முடிவு செய்திருக்க அன்று அவனுக்கு ஏனோ அவளை இங்கு விட்டு விட்டுத் தனியாகப் பத்மவிலாசம் போக மனம் வரவில்லை… மனம் ஏதோ சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தது… ஏதோ விபரீதம் என்று அறிவுறுத்த… அவன் அங்கேயே தங்க முடிவு செய்தான்!
“அத்தை… இன்னைக்கு நான் இங்கேயே இருந்துக்கறேன்…”
“நான் என்னைக்குச் சத்தி உன்னைத் தனியா பத்மவிலாசத்துல இருக்கச் சொன்னேன்… இதுக்கு வேற நீ தனியா சொல்லனுமா?” அவரது முகத்திலும் ஏதோ குழப்பம்… அதைக் கவனித்த சத்யன்… தனியாக அமிர்தாவின் காதைக் கடித்தான்!
“ஏய் பிசாசு… அத்தைய எதாச்சும் சொன்னியா? அவங்க முகம் ஏன் இவ்வளவு டல்லா இருக்கு?” பக்கத்தில் வந்து கடிந்தவனை ஒரு மார்கமாகப் பார்த்து வைத்தாள் அமிர்தா!
“எருமை… உன் அத்தைய நான் ஒன்னும் சொல்லலை… வேணும்னா கூடவே இருந்து பார்த்துக்கோ… உன் அத்தைக்காக என்னை இப்படி மிரட்டிட்டு இருந்த உன்னை நிஜமாவே கடிச்சு வெச்சுடுவேன்… ஓடிரு சொல்லிட்டேன்…” கடுப்பாக அவனிடம் கொந்தளித்தாள்,
“எப்பவாவது வர வேண்டியது… அத்தைய ஒழுங்கா பார்த்துக்கல சொத்தைய ஒழுங்கா பார்த்துக்கலைன்னு என்னையவே குறை சொல்ல வேண்டியது… இவன் தொல்லை தாங்கலடா எப்பா…” சற்று சத்தமாகவே அவள் குறைபட்டுக் கொள்ள அதைப் பார்த்து சாவித்ரி சிரித்தார்,
“ஹேய் கள்ளி… நிஜமாவேவா?” மிக அருகில் வந்து காதில் அவன் கிசுகிசுக்க… சற்று தள்ளி அமர்ந்த அமிர்தா அவன் கேட்டது புரியாமல் அவனைப் பார்க்க,
“என்ன சொல்ற?” எச்சரிக்கையான குரலில் அவள் கேட்க அவளது தொனியை கண்டவனுக்குச் சிரிப்பு வந்தது!
“இல்ல கடிப்பேன்னு சொன்னியே… எங்க… எப்போ… எப்படின்னு கேட்டேன்…”
அவன் புன்னகையோடு இயல்பாக அதே சமயம் அவளது காதில் கிசுகிசுப்பாகக் கேட்டுவிட்டு எனக்கொன்றும் தெரியாது என்பது போல அப்பாவியாக அவனது அத்தை முன்னர் அமர்ந்திருக்க… அமிர்தா அவளது உணர்வை வெளிக்காட்ட முடியாமல் திணறினாள்,
தங்களின் முன்னால் இதை எதையும் அறியாமல் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தன் தாயை பார்த்தவள்… சத்யனை கொலைவெறியோடு நோக்கினாள்,
“டேய்… வேணாம்டா…”
“அதான்டி நானும் சொல்றேன்… இங்க வேணாம்… அத்தை இருக்காங்க…” கண்ணைச் சிமிட்டியவன் விடாமல் அவளைக் கலாய்த்துக் கொண்டிருக்க என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்,
“ச்சீ போ எருமை…” அவனைத் திட்டிவிட்டுச் சோபா குஷனால் அவனை மாங்கு மாங்கென்று அடிக்க… அவள் அடிப்பதையும் அவன் சிரித்துக் கொண்டே இருப்பதையும் கண்ட சாவித்ரி,
“ஏய் அம்மு… எதுக்குடி இப்போ சத்திக்குட்டிய அடிக்கற… பாவம் வளர்ற பிள்ளைய அடிச்சே ஒரு வளர்த்திய கம்மி பண்ணிடுவ போல இருக்கே…” அவளிடமிருந்து குஷனை பிடுங்கி விட்டு அமிர்தாவை திட்ட ஆரம்பித்தார் சாவித்ரி… அப்போதும் அப்பாவி லுக்கோடு பரிதாபமாக அத்தையைப் பார்த்தான்!
“ஆமா… இந்தப் பக்கி தான் சத்திக்குட்டியா… எருமை பேயி பிசாசு… இதுல இவன் வளர்த்திய வேற கம்மி பண்ணினேனா? இவன் இருக்க ஹைட்டுக்கு…” சரமாரியாக அவனைத் திட்ட சாவித்ரி,
“ஏய் அம்மு… எதுக்குச் சத்திக்குட்டிய இப்படித் திட்டற? பாவம் தங்கம் ஒழுங்கா சாப்பிடாம தூங்காம வேலை பார்த்துட்டு இருக்கு… உனக்கென்ன? நீ நல்லா மூணு வேளையும் கொட்டிக்கறல்ல… அந்தக் கொழுப்புல பையனைத் திட்டறியா…” சரமாரியாக அவளைத் திட்டினாலும் அவருக்கும் தெரியும் சத்யா எதுவும் வம்பிழுக்காமல் அவள் இப்படிப் பொறிய மாட்டாள் என்பது… சிறு வயது முதலே எப்போதும் நடக்கும் சண்டை என்பதால் இப்போது இருந்த வேறுபாடு அவரது கண்களுக்குத் தெரியவில்லை,
“ம்ம்ம்ம்… ஆமா… இந்தக் காட்டேரிய இன்னும் இடுப்புல தூக்கி வெச்சுட்டு கொஞ்சுங்க… யார் வேணாம்னா ஆனா என்னை வம்பிழுத்தான் நான் பொல்லாதவளா ஆகிடுவேன்… அதை உங்க செல்ல மருமகன் கிட்ட சொல்லி வைச்சுடுங்க தாயாரே!” அவள் கடுப்பில் கூறியது அவனைச் சிரிப்பில் வெடிக்க வைத்தது,
“நான் என்னதான் வம்பிழுத்தேன்னு கேளுங்க அத்தை…” அவன் எடுத்துக் கொடுக்க,
“ம்ம்ம் ஆமா… என் தங்கம் என்ன வம்பிழுத்தது? அதை முதல்ல சொல்லு… நீ தான் முனுக்குன்னா அவன் கிட்ட சண்டை போடுவ… எனக்குத் தெரியாதா?” அவர் அவனை விட்டுகொடுப்பேனா என்று அவளிடம் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குப் போக அவளிடம் நக்கலாகச் சிரித்து விட்டு,
“ஏய் சொல்லு அம்முக்குட்டி சொல்லு… அத்தை கேக்கறாங்கல்ல…” குறும்பாகக் கூறி சிரிக்க அவளுக்குத் தான் வெறுத்துப் போனது… என்னவென்று சாவித்ரிவிடம் கூறுவாள்!
“டேய்… என்னைக் கொலைகாரியாக்காதே…” கடுப்பாகக் கைகளை உதறி விட்டுக் கால்களைத் தரையில் உதைத்து விட்டு மாடியில் இருந்த அவளது அறைக்கு விரைந்தாள்… இங்கு இருந்தால் இப்படியேதான் காலை வாரிவிடுவான் என்றெண்ணி!
அவள் சென்ற திசையைப் பார்த்துப் பெரிதாக அவன் சிரிக்க அவனது சிரிப்பை பார்த்து சாவித்ரி மனம் குளிர்ந்தார்! அவரது அண்ணியும் அண்ணனும் இறந்தபோது இந்தப் பிள்ளையை எப்படித் தேற்ற போகிறோம் என்பது அவரது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது… ஆனால் இப்போதைய அவனது மாற்றம் அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுத்தது! கண்கள் நிறைய அவனை நிரப்பிக் கொண்டார்,
“சரி சொல்லுங்கத்தை… ஏன்… என்னாச்சு? என்னமோ போட்டுக் குழப்பிட்டு இருக்க மாதிரி இருக்கு…” சிரித்து முடித்தவன் அவரை விடுவேனா என்று கேட்டான்,
“ஒண்ணுமில்ல கண்ணா… எப்போவும் போலத்தான் இருக்கேன்…”
“அத்தை… எனக்கு என் அத்தைய தெரியும்… எதுவோ உங்க மனசை உறுத்துது… என்னன்னு சொல்லுங்க… ஒரு வேளை அம்முக்குட்டிய நினைச்சா கவலைப்படுறீங்க?”
“அவ கவலை எப்போவும் இருக்கறது தான சத்தி… நேத்து கனவுல அப்பா வந்தாங்க… அதான்…” கவலையாக அவர் கூற,
“அதுக்கு எதுக்கு இவ்வளவு கவலைப்படுறீங்க? தாத்தாவ பத்தியே நினைச்சுட்டு இருந்திருப்பீங்க… அதான் கனவுலையும் அவரையே பார்த்து இருப்பீங்க அத்தை…” அவரைச் சமாதானப்படுத்த முயன்றான்,
“இல்ல கண்ணா… உனக்குப் புரியல… கனவுல அப்பா வந்தப்போ எல்லாம் எதாச்சும் துர்சம்பவங்கள் நடந்துடுது… இல்லைன்னா அவர் எதாச்சும் சொல்ல வர மாதிரி இருக்கும்… ஊரே அவரை மகான்னு கொண்டாடும்போது நாம எதுவும் செய்றது இல்லை… மனசு கொஞ்சம் கஷ்டபடுது சத்யா… அம்மா கஷ்டப்பட்டதைக் கூட இருந்து பார்த்ததால அப்பாவையும் வெறுத்துட்டேனோன்னு… ஆனா அவர் மகான்… அதையெல்லாம் பெருசா எடுத்துக்கலை…” கண்கள் கலங்கினார்,
அவர் அனுபவித்த வலிகள் வேதனைகள் வார்த்தைகளாகக் கொட்டின… இது நாள்வரையில் இந்த அளவு வெளிப்படையாகத் தனது உணர்ச்சியைக் காட்டி கொள்ளாதவர் சாவித்ரி… அடுத்தடுத்து வாங்கிய அடிகள் அவரைச் சாய்த்திருந்தது,
“ஏன்… பாட்டி போய்ப் பார்த்தது இல்லையா?” சத்யன் கேட்டபோது அவருக்குக் கசப்பான முறுவலொன்று மலர்ந்தது,
“அம்மாவும் போய் எத்தனையோ தடவை கூப்பிட்டு இருக்காங்க… ஆனா அவர் வந்தது இல்லை… எங்களையும் கூட்டி போய்க் கூடக் கெஞ்சியிருக்காங்க… ஆனா அவரை அசைக்க முடியல… எல்லாரும் ஒன்னும் இல்லைன்னு சன்யாசம் வாங்கிட்டு போவாங்க… ஆனா அப்பா கடல் மாதிரி சொத்துக்களை விட்டுட்டுப் பிள்ளைங்களை விட்டுட்டு மனைவியை விட்டுட்டு ஜமீனையும் விட்டுட்டு போனாங்க… ப்ச்… நீங்க ரெண்டு பேரும் பிறக்கறதுக்கு முன்னையே அவர் சமாதியாகிட்டாங்க…” ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும் அவரைப் பேசவிட்டான்… மனச்சுமைகள் வெளியே வரட்டும்!
“அத்தை… போனதை மாற்ற முடியாது… அதை எல்லாம் மறந்துடுங்க… அதான் உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க சரணாலயத்துல இருக்காங்க… அவங்களை எல்லாம் பார்த்து மனசை மாற்றுங்க…”
“எதைச் சத்தி நினைக்கறது? இந்த வம்சம் தழைச்சா தானே எனக்குச் சந்தோஷம்… அம்மு ஒரு மாதிரி கல்யாணம் வேண்டாம்ன்னு இருக்கான்னா நீ சம்பந்தம் பேசின பொண்ணையே வேணாம்ன்னு சுத்திட்டு இருக்க… எனக்கு எங்க இருந்து நிம்மதி வரும்? கனவுல கூட அந்தப் பொண்ணு தான் வருது… நானும் என்ன பண்ணட்டும் சத்தி?”
சாவித்ரிவிற்கு அவளைப் பற்றி ஒன்றும் தெரியாததால் தான் இப்படிக் கூறுகிறார் என்பதை நினைவில் கொண்டான்… அவர்மேல் எந்தத் தவறும் இல்லையே… என்ன இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுவது தவறு என்பதால் தானே யாரிடமும் கூறாமல் அவளைத் தவிர்த்து இருக்கிறேன்… தனக்குத் தானே எண்ணிக்கொண்டான் சத்யன்!
“அத்தை அந்தப் பொண்ணைப் பத்தி பேச வேணாம்… உங்களுக்கு அம்மு கல்யாணம் தானே கவலை… அந்தக் கவலைய விடுங்க… அந்தப் பிசாசை அரட்டி உருட்டி வழிக்குக் கொண்டு வர வேண்டியது என்னோட வேலை… சரியா?” தன் அத்தையின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்ச அவர் சிரித்தார்!
“போக்கிரி…” என்று சிரித்துக் கொண்டு அவனுக்குக் காய்ச்சிய பாலை தந்து விட்டு அமிர்தாவிற்காக இன்னொன்றை எடுத்துக் கொண்டு மாடி படியேற… அவசரமாக அந்தப் பாலையும் வாங்கினான் சத்யன்,
“அத்தை நீங்க ஏன் வீணா இன்னொரு தடவை ஏறனும்? நான் தான் போறேன்ல… அதுக்குக் கொடுத்துட்டு நான் போறேன்… குடுங்க…”
பொறுப்பாக வாங்கிக் கொண்டு சென்ற சத்யனை கண்களால் நிரப்பிக் கொண்டு தானும் அறைக்குச் சென்றார்… ஆனால் நினைவோ அந்தக் கனவையே நினைத்துக் கொண்டிருந்தது… சுபர்ணா ஏதோ படுக்கையில் உடல்நிலை சரி இல்லாமல் படுத்திருப்பதும் அவள் முன் தனது தந்தை நின்று ஆதூரமாகப் பார்ப்பதுமே கண் முன் வந்து சென்றது… இதன் அர்த்தம் என்ன? அவர் சுபர்ணாவை சத்யன் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரா? ஆனால் சத்யன் அவளைப் பற்றிப் பேசக் கூடத் தடா போட்டிருக்கிறானே,
குழப்பத்தோடு படுக்கச் சென்றார் சாவித்ரி!






No please don’t do this.. it’s not fair