அத்தியாயம் 34
அறை கதவைச் சத்யன் தட்ட உள்ளிருந்தே குரல் கொடுத்தாள் அமிர்தா… சாவித்ரி இரவு படுக்கப் போகும் முன் பாலை குடி என்று அவளை ஒரு வழியாக்கி விட்டுத்தானே செல்வார்… அவளுக்குப் பாலை கண்டாலே அலர்ஜி ஆனால் சாவித்ரிவிற்கு அவள் தினசரி ஒரு டம்ளராவது அவசியம் எடுத்தேயாக வேண்டும் என்ற தீவிர பிடிவாதத்தில் இருப்பார்… எவ்வளவு சுவையாக அந்தப் பாலை தந்தாலும் அமிர்தாவிற்குத் தொண்டைக்குழிக்குள் இறங்காது,
“மா… முடியாது முடியாது முடியாது… நீங்க பால் தான் கொண்டு வந்துருப்பீங்க… எனக்கு வேணாம் வேணாம் வேணாம்…” அவளது பிடிவாதத்தைக் குரலில் காட்டினாள்… சிரித்துக் கொண்ட சத்யன்… பாலை பின்பக்கமாக மறைத்து வைத்துக் கொண்டு,
“ஏய் லூசுகதவை திற… நான் தான்… அத்தை இல்ல…” என்றவுடன் மெதுவாகக் கதவைத் திறந்தவள் சத்யன் இருப்பதைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்,
“ஷப்பா… அம்மா தான் பாலை கொண்டு வந்துட்டாங்களோன்னு நினைச்சுட்டேன்…” என்று கதவைத் திறந்துவிட உள்ளே வந்தவன் அவள் கைகளில் பாலை திணிக்க முகம் அஷ்டகோனலானது!
“உவ்வே… பாலா… அய்யோ…” பாலை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டு கூற,
“ம்ம்ம்… மரியாதையா குடி லூசு…” என்றவன் அவளது புத்தகங்கள் லேப்டாப் என்று ஆராயத் துவங்க,
“ஹலோ… இங்க என்ன ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க? நீ மொதல்ல கிளம்பு…” முறைத்துக் கொண்டு கூறியவளை பார்த்து ஒரு மார்கமாகப் புன்னகைத்த சத்யன்,
“நான் என்ன ஆராய்ச்சி பண்ண வந்திருக்கேன்னு சொன்னா நீ ஒத்துக்கவா போற அம்முகுட்டி…” காதல் ரசம் வழிந்தோட அவளைக் கிண்டலடிக்கத் துவங்கியவனைப் பார்த்துத் திக்கென்றானது!
அவனது பார்வையும் சரி இல்லையே… கீழே அம்மா அறையில் இருக்க… இவன் மேலே இப்படி… அவளை அளவெடுத்துக் கொண்டிருந்த சத்யனின் பார்வையில் இதயம் லப்டப் என்று அடித்துக் கொள்ளும் சப்தம் அவளுக்கே கேட்டது!
சிறு வயது முதலே பெரும்பாலும் இருவருக்கும் உறக்கமும் கூட ஒன்றாகத்தான் இருக்கும்… வயது வந்தவுடன் அது சற்று குறைந்ததேயன்றி அவன் தோளில் இவள் சாய்ந்து உறங்குவதையோ இவள் தோளில் அவன் சாய்ந்து உறங்குவதையோ சற்றும் பொருட்படுத்தியதில்லை… ஆனால் இப்போதோ அவளது மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது,
“சத்யா… அம்மா உன்னை நம்பி மேலே அனுப்பியிருக்காங்க…” ஒரு மாதிரியான பரிதாப குரலில் கூற
“சோ வாட்…” கிஞ்சிற்றும் கவலைப்படாத குரலில்,
“என்ன வாட்டா? பிச்சுபுடுவேன் பிச்சு… நீ ஒழுங்கா வெளிய போறியா இல்லையா…” கதவைக் காட்டி கடுப்பாக அவள் கூற,
“ஹஹா முடியாது…” பார்வை மாறிக் கொண்டே வர… மெதுவாக அருகில் வர ஆரம்பித்தான்!
“வேணாம் சத்யா…”
“எனக்கு வேணுமே…” அவன் இன்னமும் அருகில் வர அவள் பின்னுக்கு நகர்ந்தாள்!
“நான் அம்மாவ கூப்பிட்டுடுவேன்… வேணாம் பக்கத்துல வராத…” அவளுக்கே கேட்காத குரலில் அவனை மிரட்ட,
“சரி கூப்பிடு…” இதற்கெல்லாம் அசைவேனா என்று முன்னேறிக்கொண்டிருந்தான்!
“வேணாம் சத்யா… இ… இது… தப்பு…” சுவரோடு முட்டி நின்றவள் கிசுகிசுப்பாகக் கூற… அதைக் கேட்கும் போதே அவனுக்கு ஜிவ்வென்ற உணர்வு தாக்கியது!
“நீ இப்படி மப்பா சொன்னா எனக்குக் கிக்கு ஏறுதுடி…” அவளுடைய இரு புறமும் கைகளை ஊன்றியவன் அவளைப் போலவே கிசுகிசுப்பான குரலில் பேசிக் காட்ட… அமிர்தா நடுங்க ஆரம்பித்தாள்!
அந்த ஈரமான இரவு வேளை… கண்களில் தாபத்தோடு சத்யன்… தடதடத்த இதயம்… அவனைக் கொஞ்சமும் மறுக்காத அவளது மனம்… வேர்க்க துவங்கியது… அவளது கண்களில் பயத்தைப் பார்த்த சத்யனுக்கு இன்னும் கொஞ்சம் அவளைச் சீண்டி பார்த்தால் என்ன என்று தோன்ற,
“ஓகே… உண்மைய சொல்லிடு… உன்னை விட்டுடறேன்… ஓகே வா…” இந்த டீல் எப்படி என்று குறும்பு புன்னகையோடு சத்தி பார்க்க… அவனை முறைத்தாள் அமிர்தா… அவனைப் பார்க்காமல் வேறு புறம் திரும்பியவாறே,
“ம்ம்ம்… என்ன சொல்லிட்டு சீக்கிரமா இடத்தைக் காலி செய்…” கறாரான குரலில் கூற… அந்த உதட்டை வசப்படுத்தினால் தான் என்ன என்று தோன்றியது அவனுக்கு… நைட் பேன்ட் அணிந்து கேசத்தை விரித்து விட்டு இடையைத் தாண்டி வழிய விட்டிருந்தாள்… அப்பொழுதுதான் குளித்திருப்பாள் போல… மகிழம்பூவின் மனமும் செண்பகப்பூவின் மனமும் கலந்து கட்டி அடிக்க அவளது புறம் குனிந்து வாசனை பிடித்தான்,
“ஹேய்… என்னடி ப்ராக்ரன்ஸ் இது? செமையா இருக்கு… ம்ம்ம்ம்…”
அவனது மூச்சு காற்றுக் கழுத்துவளைவில் படிந்ததில் ஏற்பட்ட கிளுகிளுப்பு அடங்குவேனா என்று அழுச்சாட்டியம் செய்ய… நெகிழ துவங்கிய மனதை வலுக்கட்டாயமாகக் கடிவாளமிட்டு அடக்கினாள்! இவ்வளவு நேரம் தன் தாயின் முன் தன் காலை வாரியதனைத்தும் அவளது நினைவில் வந்து போகக் கொஞ்ச நாள் இவனைச் சுற்றலில் விட்டுப் பார்ப்போமா என்று தோன்ற,
“மகனே… நீ எத்தனை நாள் என்னை ஓட்டு ஓட்டுன்னு ஓட்டியிருக்க… நீ சொன்னவுடனே நானும் ஒத்துக்கனுமா? நோ நெவர்… கொஞ்ச நாள் இப்படியே பின்னால சுத்து… இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்ன தானே… இருடி மாமா… உன்னை அதுக்காகவே சுத்தல்ல விடறேன்…” மனதுக்குள் சிரித்துக் கொண்டு தீர்மானித்துக் கொண்ட அமிர்தா,
“என்னவோ வாசனை… உனக்கென்ன… வந்ததைச் சொல்லிட்டு கிளம்பு…” அவனைத் தள்ளிவிட முயற்சிக்க அது முடியாத காரியமாயிற்று! இருவருக்கும் இடையில் ஒரு சில சென்டிமீட்டர்களே இடைவெளி இருக்க… அந்த நெருக்கம் இருவருக்குமே அவஸ்த்தையைத் தந்தது!
“ஓகே… என் மேல பீலிங்க்ஸ் வந்துடுச்சுன்னு ஒத்துக்கோ… நான் விட்டுடறேன்…” பக்கவாட்டில் திருப்பிக் கொண்ட அவளது முகத்தைத் தன் புறம் திருப்பி அவன் கேட்க அவனது கைகளைத் தட்டிவிட்டவள்,
“பீலிங்க்ஸா… ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல… இப்போ அந்தப் பக்கம் நகரப் போறியா இல்லையா…”
“அப்போ என்னை லவ்வே பண்ணலை… இல்லையா பப்ளிமாஸ்…”
சிறிய வயதில் சற்று பூசினார் போல இருப்பவளை பப்ளிமாஸ் என்று கிண்டலடிப்பது அவனது வழக்கம்… அதே போல அழைத்து வைக்க… அமிர்தாவின் கோபம் கரைபுரண்டது,
“யூ ஸ்டுபிட்… இப்படிப் பப்ளிமாஸ்ன்னு சொல்லாதேன்னு எத்தனை முறை சொல்றேன்… நீ எத்தனை தடவை சொன்னாலும் என்கிட்டே இருந்து ஒரே பதில் தான்… நோ நோ நோ… தான்…” கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு ஒரேடியாகச் சாதிக்க… சட்டென்று அவளது இடையைப் பிடித்து இழுத்து தன்னோடு கோர்த்தான்… கழுத்தை பற்றித் தன் முகத்துக்கு மிக அருகில் கொண்டு வந்து,
“உனக்கு எப்படி என்னோட ஒவ்வொரு அசைவும் அத்துப்படியோ அதே மாதிரி உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படிடி… உன்னோட கண் எனக்கு விஷயத்தை எப்போவோ எனக்குச் சொல்லிடுச்சு… இல்லைன்னா இந்த அளவு உன்கிட்ட க்ளோசா பிகேவ் பண்ணுவேனா பப்ளிமாஸ்…” கிசுகிசுத்த அவனது குரலால் அவளுள் ஏதேதோ ரசாயன மாற்றங்கள்!
இடையில் படிந்த கை அவளது வெற்றிடையைத் தடவ… பின்னங்கழுத்தை கோர்த்துப் பிடித்த கை அவ்விடத்தை வருட… இந்தப் பலமுனை தாக்குதலில் மெதுவாக வசமிழக்க துவங்கினாள் அமிர்தா… அவனைத் தள்ளி விடு என்று மூளை கூறினாலும் அவளுடைய மனமோ சிறிது கூட அசைய விடாமல் செய்தது!
சற்றுமுன் அவள் எடுத்த தீர்மானத்தைக் காற்றில் பறக்க விட்டு அவளே கிறக்கமான மயக்கத்தில் ஆழ துவங்கினாள்… வார்த்தைகள் எதுவும் பேசாத மௌனத்தில் சத்யனின் மனமும் கிளர்ச்சியுற மெதுவாக அவளது இதழை நோக்கி முன்னேறினான்!
மென்மையான மௌனத்தைக் கலைத்தது செல்பேசியின் ஓசை!
கிளர்ச்சி அத்தனையும் வடியத்துவங்க செல்பேசியை வெறுப்பாகப் பார்த்தான் சத்யன்,
“ச்சே வில்லன்…”
கிறக்கம் தானாகக் குறையக் கண்களைத் திறந்து பார்த்தாள் அமிர்தா… இருவரும் இருந்த நிலை… அந்த நெருக்கம் அவளுக்கு வெட்கத்தைத் தர… சிவந்த முகத்தோடு அவளால் அவனை நேராகப் பார்க்க முடியாமல்… முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு செல்பேசியை நோக்கிப் போனாள்,
காவல் நிலையத்திலிருந்து இன்ஸ்பெக்டர் அழைத்திருந்தார்… இந்த நேரத்தில் எதற்காக அழைக்கிறார்… ஏதோ முக்கியமான விஷயம் என்று அவளுக்குத் தெரிந்தாலும் ஏதோ நடக்கப் போவதாக அவளது மனம் பயமுறுத்தியது!
“சொல்லுங்க பன்னீர் அண்ணா…”
“அமிர்தாம்மா… டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”
“இல்லண்ணா சொல்லுங்க…”
“கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் நீங்களும் சத்யாவும் வரீங்களா… கொஞ்சம் அவசரம்… அதான் மணி ஒன்பதரையாச்சுன்னு கூடப் பார்க்காம கூப்பிட்டுட்டேன்…”
“அண்ணா… இதுல என்ன இருக்கு… அவசியம்ன்னு தானே கூப்பிடறீங்க… இதெல்லாம் நம்ம ப்ரோபஷன்ல சகஜம் தானே… என்னண்ணா அந்த அளவு முக்கியமான விஷயம்?”
“அந்த மூணு பேரும் அப்ரூவர் ஆகியாச்சு அமிர்தாம்மா… அக்யுஸ்ட் யாருன்னா…” என்று அவர் நிறுத்த,
“யாருன்னா?” பரபரத்தாள்!
“சீதாராமன் சாரத்தான் சொல்றாங்கம்மா…” அவர் கூறும்போதே உணர்வுகளைத் தொலைத்த பார்வையைச் சத்யன் மேல் வீசினாள் அமிர்தா… தொழிற்போட்டி அவரை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது என்று கசப்பாக நினைத்து… அதற்காக அவரை எப்படி விட்டுவிட முடியும் என்று எண்ணிக்கொண்டு,
“அண்ணா நீங்க ப்ரோசீஜர்படி செய்ங்க… நாங்க வந்துடறோம்…”
முகத்தில் யோசனையோடு செல்பேசியை வைத்தவளை பார்த்த சத்யனுக்கு ஏதோ முக்கியமான விஷயம் என்பது மட்டும் விளங்க,
“என்னாச்சுடா?” விளையாட்டுத்தனங்களைக் கைவிட்டுத் தீவிரமான குரலில் அவன் கேட்க… இந்நேரம் வரை தன்னை வம்பிழுத்தவன் இவன்தானா என்று சந்தேகமே வந்தது! ஆனால் அவளுக்குச் சீதாராமனை பற்றிக் கூற தயக்கமாக இருந்தது… ஏனெனில் முந்தைய அனுபவம் அப்படியாக இருந்ததே,
குடோன் எரிந்த வழக்கில் அவரைச் சேர்க்கலாம் என்று அவள் யோசனை கூறியபோது தீவிரமாக அவன் மறுத்தமுறை அவளுக்கு உறுத்தியது… இப்போதும் தொழில் போட்டியால் தான் சீதாராமன் இப்படிச் செய்தார் என்று கூறி வழக்கைத் திரும்பப் பெற்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை!
“அந்த மூன்று பேரும் அப்ரூவர் ஆகிட்டாங்க சத்தி… பன்னீர் அண்ணா நம்மளை வரச் சொல்றாங்க…” வெளிகாட்டி கொள்ளாத குரலில் அவள் கூற முற்பட அவன் நெற்றியை சுருக்கி அவளைக் கூர்மையாகப் பார்த்தான்,
“அக்யுஸ்ட்யாராம் அம்மு?”
“நீ கொஞ்சம் சீக்கிரம் கிளம்பு சத்தி…” அவனைத் தவிர்ப்பதில் அவள் தீவிரம் காட்ட,
“ஏய் சொல்லுடி… யாரு? சீதாராமா?” அவனது சந்தேகத்தை உறுதி செய்து கொள்ள அவன் கேட்க அவளோ மெளனமாகத் தலையாட்டினாள்,
“அதுக்கு எதுக்கு என்னை அப்படி லுக் விட்டுட்டு இருக்க? வாட் ஈஸ் ஈட்டிங் யூ? அதை முதல்ல தெளிவு பண்ணிட்டு போலாம்…” அவளது எண்ண ஓட்டத்தைப் படித்தவன் பிடிவாதமாகக் கூற… ஒரு முடிவாகப் பேச ஆரம்பித்தாள் அமிர்தா!
“எந்தக் காரணத்தைக் கொண்டும் கேசை வாபஸ் வாங்க மாட்டேன் சத்தி…” தீர்மானமான குரலில் அவள் கூற,
“நான் அப்படியெதுவும் செய்யச் சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லையே…”
அவளையே கூர்மையாகப் பார்த்தான்… இவள் எதற்காக இப்படி உளருகிறாள் என்பது புரியவில்லை அவனுக்கு… அவளுக்கு ஒன்றென்றால் அது அவனையும் பாதிக்காதா? அப்படிச் செய்யத் துணிபவர்களை அப்படியே தான் விட்டுவிடுவானா?
அவளுக்குத் தெரிந்தது சட்டபூர்வமான நடவடிக்கை தான் ஆனால் இத்தனை நாளில் அவன் தெரிந்து கொண்டது சட்டபூர்வமில்லாத நடவடிக்கைகள்தான்… அவனைப் பற்றி இந்த விஷயத்தில் அறிந்து கொள்ளாமல் தன்னையே சாட துவங்கியிருந்த அமிர்தாவின் செய்கை அவனுக்கு விநோதமாக இருந்தது,
“நீ சொல்லிட்டா என்ன செய்றது? தொழில்ல இது சகஜம்… விட்டுடலாம்ன்னு நீ சொல்லிட்டா?”
“லூசாடி நீ… என்ன உளறிகிட்டே இருக்க?”
“யார் மேல இருக்கச் சாப்ட் கார்னரோ உன்னை அப்படிச் சொல்ல வைக்கலாமே…” சுபர்ணாவை பெயர் குறிப்பிடாமல் அவள் இடித்துரைக்க அவள் கூற வருவது புரிந்தது… அவளது அந்தச் செய்கை அவனுக்குச் சிரிப்பையே வரவழைத்தது,
“ஏய் பக்கி… என்னைத் திட்ட வச்சுடாத… கிளம்பு…” அவளது தலையில் தட்டியவன் அவனது அறை நோக்கிப் போக… அவன் போவதையே கண்ணிமைக்காமல் பார்த்தாள்!





