arrow_back
பரமபதம் அத்தியாயம் 36
பரமபதம் chevron_right பகுதி 36 / 54

அத்தியாயம் 36

visibility 210
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

“ஏன்டா என் பொண்ணு உன்னைப் பார்த்துத் தொலைச்சா? எதுக்காகப் பார்க்கணும்?”

அதுவரை வாய்த் திறவாமல் இருந்த சீதாராமன் சத்யனை கண்டவுடன் கோபத்தோடு அவனது சட்டையைப் பிடிக்க அவர் பேசட்டும் என்று அவன் மெளனமாக நின்றான்! அவரது ஒய்ந்த தோற்றமும் கண்களில் கலக்கமும் அவனுக்கு ஏதோ விபரீதத்தை உணர்த்தியது… சீதாராமன் இது போன்ற வழக்குகளுக்காகவெல்லாம் சோர்ந்து போய் விடுபவர் அல்ல என்பது அவனது கணிப்பு ப்ளஸ் அனுபவம்… எதுவாக இருந்தாலும் கடைசி வரை மோதிப் பார்ப்பவர்… அவர் செய்வது மட்டுமே அவருக்குச் சரி… இந்தத் தோற்றமும் கலக்கமும்அவரது இயல்பில்லையே!

“எல்லாம் விதி… உன்னைப் பார்த்துத் தொலையனும்ன்னு விதி… ஆசைப்பட்டுத் தொலையனும்ன்னு விதி… இப்போ இப்படி ஆகனும்ன்னு விதி…” அவர் தலையில் கைவைத்துக் கொண்டு உலகையே வெறுத்த பார்வையோடு கூற இருவருக்குமே புரியவில்லை… என்னவானது சுபர்ணாவுக்கு? இருவரும் கேள்வியாக நோக்கிக் கொள்ள அவரே தொடர்ந்தார்,

“பிரகாஷ்… என் மேல எத்தனை கேஸ் வேணும்னாலும் போட்டுக்க… என்னோட மொத்த சொத்தையும் கூடக் கேளு… நான் தந்துடறேன்… ஆனா ஒரு தடவை என் கூட வந்துடு பிரகாஷ்… ஒரே ஒரு தடவை… ப்ளீஸ் கெஞ்சி கேக்கறேன்…” அதுவரையில் யாருக்கும் அடிபணியாமல் சிங்கமாக வளைய வந்த சீதாராமன் சத்யனின் முன் கைஏந்தி நின்றார்… அவரது வார்த்தைகளில் கொஞ்சமும் பொய்யைப் பார்க்கவில்லை அமிர்தா!

கல்லாக நின்ற சத்யனை விநோதமாகப் பார்த்தாள்… என்னதான் தொழில் முறை எதிரியாக இருந்தாலும் அவனது இந்த நடத்தை அவளுக்குப் பிடிக்கவில்லை… அவளும் தான் வருவதற்கு முன்னர்க் கறாராகப் பேசினாள்… அதில் எந்தவித மாற்றமும் இல்லையே… ஆனால் ஒரு முறை தானே வரச் சொல்கிறார்… இதில் என்ன தவறு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அவனது முகத்தைப் பார்க்க… சத்யன் இளகமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றான்!

“சார்… என்னாச்சு சுபர்ணாவுக்கு?” சத்யன் கேட்காவிட்டால் என்ன… நாம் கேட்டால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை என்றெண்ணி அவனை முறைத்துக் கொண்டே கேட்டாள்… அமிர்தாவை உணர்வற்ற பார்வை பார்த்தவர்,

“பாதிச் செத்துட்டாம்மா சுபா…” கம்மிய குரலில் கூற… அவரை நேராகப் பார்த்த சத்யன்,

“இது அவளோட இன்னொரு டிராமாவா சீதாராம் சார்?”

சத்யனை திகைத்த பார்வை பார்த்த சீதாராமன் எதுவும் கூற பிடிக்காமல் தலையைப் பிடித்துக் கொண்டார்… அவனே தொடர்ந்தான்,

“என்னன்னவோ பண்ணி பார்த்தா… எதுவுமே ஆகலைன்னு உங்களைத் தூது விட்டுட்டாளா? அவங்களுக்கு நீங்க அப்பாவா? இல்ல…” என்று அவன் ஆரம்பிக்க… கோபத்திலும் அவமானத்திலும் அவர் அவனது சட்டையைப் பிடிக்க வர,

“சத்யா…” அமிர்தாவின் கோபமான குரல் அவனைத் திரும்பிப்பார்க்க வைத்தது… சீதாராமனையும் நிறுத்தியது… ரௌத்திரமாக நின்றுகொண்டிருந்தாள் அமிர்தா!

“ஒரு அளவு இருக்கு சத்யா… ஒரு பொண்ணைப் பத்தி பேச… இந்த வார்த்தை ரொம்ப அதிகம்… அவர் கிட்ட சாரி கேளு…” மிகத் தீவிரமான குரலில் அவள் கூற… அவனுக்கு அவளது உணர்வு புரிந்தாலும் சுபர்ணாவை பற்றித் தெரியாமல் பேசுகிறாளே என்று நொந்து போனான்… ஆனால் அவனுக்குமே தெரியாத விஷயங்கள் பலவுண்டு என்பதை அவன் அப்போது அறியவில்லை,

“அமிர்தா உனக்குத் தெரியாது… நடந்த விஷயம் எல்லாம்…” அவன் கூற வருவதையும் ஏற்கவில்லை,

“எதுவேணாலும் நடந்து இருக்கலாம்… ஆனா அவர் அந்த அளவு கெஞ்சும்போது நீ இப்படிப் பிஹேவ் பண்றது ரொம்பக் கேவலமா இருக்கு சத்யா…” கோபத்தில் வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தாள்… இனி இவளை நிறுத்துவது கடினம் என்று புரிந்து போனது சத்யனுக்கு… மென்மையாக இருக்கும் வரை பூவாக இருப்பவள் கோபம் என்று வந்துவிட்டால் புயலாகி விடுவாள் என்பது அறியாதவனா சத்யன்?

“என்ன கேவலமா இருக்கு? நான் நடந்துக்கறதா?” கூர்மையாகக் கேட்டவனைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல்

“அண்ணா… இவர் பொண்ணைப் போய்ப் பார்த்துட்டு வர்றதுக்குப் பர்மிஷன் வேணும்… என்னோட ரிஸ்க்ல கூட்டிட்டு போறேன்…” பன்னீரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அழைத்துப் போக… என்ன செய்வது என்று புரியாமல் அவர்களோடு உடன் சென்றான் சத்யன்!

***

சீதாராம் மருத்துவமனைக்கு நேராக அவர்கள் இருவரையும் அழைத்துச் செல்ல… என்னவாயிற்று என்று குழப்பமாகப் பார்த்தான் சத்யன்! அவனுக்குத் தலையும் சொல்லப்படவில்லை வாலும் தெரியவில்லை… மருத்துவமனையின் நெடி அவனைத் தாக்கியது… என்ன செய்திருப்பாள்? கையைக் கிழித்துக் கொண்டு மிரட்டுகிறாளா அல்லது தூக்க மாத்திரை? இல்லையென்றால் இவர்இந்த அளவு சோர்ந்து போகக் காரணம் என்ன?

போகும் வழியிலேயே கௌதமிடம் சத்யன் வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து விட… அவரும் தயாராக இருந்தார்… தான் எவ்வளவு மோசமாகப் பேசியும் அதை அவர் சிறிது கூட நினைக்காமல் தான் வருவதற்கு எப்படிச் சந்தோஷப்படுகிறார்? ஆச்சரியமாக இருந்தது சத்யனுக்கு!

இதுதான் சுபர்ணாவின் மேல் இவர் கொண்ட பாசமா? ஒரு தந்தையாகக் கண்மூடித்தனமாகப் பாசம் வைத்த சீதாராமன் அவனுக்கு ஆச்சரியக்குறியாகத் தெரிந்தார்… இந்தக் குருட்டுத்தனமான பாசம் என்பதுதான் அவள் கெட்டு போக மிக முக்கியக் காரணியாக அமைந்தது என்பதை இந்த மனிதனுக்கு எப்படிச் சொல்வது? சத்யன் யோசித்தான்,

அந்த அறைக்குள் நுழைந்தபோது நேராகக் கண்ணில் பட்டது சுபர்ணா தான்… அடையாளம் தெரியாமல்… இளைத்து… உருக்குலைந்து… கிழிந்த நாராகக் கட்டிலில் கிடக்க அமிர்தா அதிர்ந்தாள்… இன்னமும் சுபர்ணா விழிக்கவில்லை,

சத்யன் பேச்சிழந்தான்!

“என்னாச்சு?” அதிர்ச்சி கொஞ்சமும் குறையாமல் அமிர்தா கேட்க ஒரு நீண்ட பெருமூச்சை வெளிவிட்டார் சீதாராமன்! கௌதம் கூற ஆரம்பித்தார்,

“டி அடிக்ஷன் அன்ட் அன்டி டிப்ரெஷன் ட்ரீட்மென்ட்ல இருக்காங்க… ரொம்ப மோசமான ஸ்டேஜ்ல தான் கொண்டு வர முடிஞ்சது… ஹெவி ஷாக் ப்ளஸ் ட்ரக்ஸ் ரொம்ப அதிகமா எடுத்த ஸ்டேஜ்ல தான் நான் இவங்களைப் பார்த்தேன்… அளவே இல்லாம ட்ரக்ஸ் எடுத்துகிட்டு திடீர்ன்னு சுத்தமா ஸ்டாப் பண்றது ரொம்ப மோசமான விளைவை ஏற்படுத்திடும்… இவங்க கேஸ்ல எல்லாமே சேர்ந்துடுச்சு…”

போதை மருந்துகளை மொத்தமாக நிறுத்தினாளா? எதற்காக? சத்யனை கேள்வியாகப் பார்த்தாள் அமிர்தா… அவனுடைய மனதிலும் அதே கேள்வி தான் ஓடிக்கொண்டிருந்தது,

“ஏன் திடீர்ன்னு அப்படிப் பண்ணாங்க?”

“தெரியலைம்மா… அன்னைக்கு வந்து பார்த்தபோது…” என்று ஆரம்பித்த சீதாராமன் சுருக்கமாகச் சொல்லி முடித்தார்… அதாவது அன்று வீட்டில் அவளைக் கண்ட அந்த நாளில் தான் ஏதோ ஆகியிருக்கிறது… என்ன நடந்தது என்று ஓரளவு அமிர்தாவுக்குத் தெரியும்… அவளும் பார்த்தது தான் என்றாலும் அதற்கு மேலும் அவள் அதிர்ச்சியடையும் அளவு என்ன நடந்தது?

“இப்போ எப்படி இருக்கு?” சத்யன் முதன் முதலாக வாய் திறந்து கௌதமிடம் கேட்க,

“அதை நீங்கத் தான் சொல்லணும் சத்யா… ஏன்னா அவங்க சொல்ற ஒரே வார்த்தை உங்க பேர் மட்டும்தான்…” என்று கௌதமன் கூற கூற உள்ளுக்குள் மடிந்து கொண்டிருந்தாள் அமிர்தா,

குழந்தை ஆசையாக வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மையை இன்னொரு குழந்தை வலுக்கட்டாயமாகப் பிடுங்கினால் எங்கனம் வலிக்குமோ அப்படி வலித்தது அவளுக்கு… அவனிடம் இன்னமும் சொல்லாத காதல் தான்… பகிர்ந்து கொள்ளாத நேசம் தான்… ஆனாலும் அவளால் அதை விட்டுத்தர முடியும் என்று தோன்றவில்லை… இன்னொரு பெண் அவனை நினைப்பதுவும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… ஆனால் கிழிந்த நாராகப் படுத்திருக்கும் சுபர்ணா அவளை அசைத்துப் பார்த்தாள்,

மெதுவாகக் கண்களைத் திறந்த சுபர்ணாவின் பார்வை வட்டத்தில் முதலில் விழுந்தது,

சத்யன்,

சிரமப்பட்டுக் கண்களை அகல திறந்தாள்… அவளையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது… அவனுடைய வெறுப்பான பார்வையையும் கோபமான பார்வைகளையும் எதிர்கொண்டவளால் அந்தப் பரிதாபமான பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை… அங்கே மௌனமான பார்வையாளராக இருப்பதைத் தவிர வேறுதுவும் செய்ய இருப்பதாகத் தோன்றவில்லை அமிர்தாவுக்கு! சத்யனின் பால் முழுமையாகச் சாய்ந்திருந்த மனதை சிரமப்பட்டு இழுத்து கொண்டிருந்தாள் தனக்காக,

“நான் அவ்வளவு மோசமான பொண்ணா சத்யா?” சிரமப்பட்டு ஒவ்வொரு வார்த்தையாக அவள் பேச… அவளது பிரத்யோகமான பிரகாஷ் என்ற அழைப்புக் காணாமல் போயிருந்தது! சத்யன் என்ன பேசுவது என்று புரியாமல் தடுமாறினான்… அவள் கோபமாகப் பேசியிருந்தால் தூக்கி எறிந்துவிட முடியும்… ஆனால் தவறு செய்த குழந்தையாகத் தன் முன் பரிதாபமாக இருப்பவளை மேலும் கடிந்து கொள்ள முடியவில்லை,

“இல்ல சுபி… அப்படி எல்லாம் மனசை போட்டுக் குழப்பிக்காதீங்க… ப்ளீஸ்…”

“அன்னைக்கு அவ்வளவு மோசமா சொன்னீங்களே…” கண்களில் வலியோடு அவள் கேட்க,

அவள் அங்ஙனம் கூறும்போது செத்து பிழைத்தார் சீதாராமன்… பெற்றோர் அடித்து வளர்த்த பிள்ளை மற்றவரிடம் அடி வாங்குவதில்லை… இப்போது சுபர்ணா வாங்கிக் கொண்டு வந்த அடியில் அவளைவிட அவருக்கு வலித்தது,

“சுபி… ப்ளீஸ் காம் டவுன்… ட்ரீட்மென்ட் எடுத்துகோங்க… யூ வில் பி ஆல்ரைட்…”

தான் யோசியாமல் பேசிய வார்த்தைகளின் மொத்த பிம்பமாகப் பரிதாப பிறவியாகத் தோன்ற… அவனால் ஜீரணிக்க முடியவில்லை… அவனே இப்படியென்றால்… அமிர்தா? அப்போதுதான் அமிர்தா அங்கிருக்கும் நினைவே வரச் சுற்றி அவளைத் தேடினான்!

அவள் எப்போதோ வெளியே சென்றிருந்தாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 37

மெளனமாகக் காரைச் செலுத்தி கொண்டிருந்தாள் அமிர்தா... இருவருமே பேச முனையவில்லை... இளையராஜா சோகமாக வழிந்து கொண்டிருக்க இருவரின் கவனமும் அந்தப் பாடலில் லயித்து இருந்தது... அமிர்தாவின் மனம் தவித்துக் கொண்டிருந்தது, சுபர்ணாவை பார்த்துவிட்டு அவள் செய்த முதல் காரியம் காவல் நிலையத்திற்குச்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்