அத்தியாயம் 37
மெளனமாகக் காரைச் செலுத்தி கொண்டிருந்தாள் அமிர்தா… இருவருமே பேச முனையவில்லை… இளையராஜா சோகமாக வழிந்து கொண்டிருக்க இருவரின் கவனமும் அந்தப் பாடலில் லயித்து இருந்தது… அமிர்தாவின் மனம் தவித்துக் கொண்டிருந்தது,
சுபர்ணாவை பார்த்துவிட்டு அவள் செய்த முதல் காரியம் காவல் நிலையத்திற்குச் சென்று கேஸை வாபஸ் வாங்கியதுதான்… சத்யனின் குற்றம் சாட்டும் பார்வையை நேராக எதிர்கொண்டவளிடம் நேரடியாக அவனால் பதிலைப் பெற இயலவில்லை,
“லூசாடி நீ… என்னை என்னன்னவோ சொல்லிட்டு நீ எதுக்காக இந்த வேலைய பண்ற?” கோபத்தில் வார்த்தைகளைக் கடித்து மென்று துப்பினான் சத்யன்!
அவனைத் தீர்க்கமாகப் பார்த்தவள் ஒன்றும் பேசாமல் கையெழுத்திட சென்றாள்… அவளைத் தொடர்ந்து சென்ற சத்யனுக்கோ எரிச்சல் மிகுந்திருந்தது… சுபர்ணாவின் நிலையைப் பார்த்தால் யாராக இருந்தாலும் பரிதாபம் தோன்றும் தான் அதற்காக அந்தப் பரிதாபத்தை ஆயுதமாக்கி சீதாராம் தப்பிப்பதையோ சுபர்ணாவின் பால் இரக்கம் பிறப்பதையோ அவன் விரும்பவில்லை,
ஏனெனில் அவளைப் பற்றி முழுதும் அறிந்தவன் அவன்… அவளுடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகாவிட்டால் என்ன முறையில் நடந்து கொள்வாள் என்பதை நெருக்கமாக உணர்ந்தவன்… எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ஆபத்தான ஜந்து என்ற அளவில் தான் அவனது கணக்கீடு… மீண்டும் ஒரு முறை ஏமாற அவனென்ன அறிவிலியா?
“இப்போ என்ன காரியம் பண்ணிட்டு இருக்க அமிர்தா?” கேஸை வாபஸ் வாங்குவதற்கான பார்மில் கையெழுத்திட முயன்றவளிடமிருந்து அந்தப் பேப்பரை பிடுங்கி கொண்டு அவன் கேட்க… கண்களை இறுக மூடி தன் உணர்வுகளைக் கட்டுபடுத்திய அமிர்தா அமைதியாகக் கேட்டாள்,
“பேப்பர கொடு சத்யா…”
“முடியாது… இந்தக் கேஸ வாபஸ் வாங்க நான் விடமாட்டேன்…” கோபத்தோடு மறுத்தவனை உணர்வே இல்லாத முகத்தோடு,
“கேஸ் பைல் பண்ணினது நான்… வித்டிரா பண்ண போவதும் நான்… இதில நீ எங்க வந்த சத்யா?” சிறிது கூட ஒட்டாத குரலில் அணுகுண்டு வீசியவளை அதிர்ந்த மனதோடு பார்த்தான்… பேசுவது அமிர்தாவா? தன்னிடம் மயங்கி நின்ற அவனது அம்முவா? வெட்கத்தில் முகம் சிவந்து தன் கைகளில் நெகிழ்ந்த அம்முவா? அதிர்ச்சியில் காகிதம் நழுவ… அதை எடுத்த அமிர்தா அதே உணர்ச்சியைத் துடைத்த பார்வையோடு கையெழுத்திட்டாள்,
“அமிர்தாம்மா… சத்யா சொல்ற மாதிரி நீங்க இந்த விஷயத்துல அவசரப்பட்டு முடிவெடுக்கறிங்களோன்னு தோணுதும்மா… ரெண்டு தடவை யோசிச்சிட்டு வாபஸ் வாங்குங்க… ஏன்னா சாட்சி நம்ம பக்கம் ஸ்ட்ராங்… நியாயமும் நம்ம பக்கம் தானே…” இவ்வளவு வலுவான கேஸை வாபஸ் வாங்கிக் குற்றவாளியைத் தப்புவிக்க முயல்கிறாள் என்ற மன சுணக்கத்தில் பன்னீர் புலம்ப… அமிர்தாவோ அதே பார்வையோடு,
“நியாயம் எல்லா இடத்திலும் ஒரே அளவீட்டுல இருக்காதுண்ணா… நியாயத்தைப் பார்க்க வேண்டிய இடத்துல தர்மத்தை பார்க்க முடியாது… அதே சமயத்துல தர்மத்தை பார்க்க வேண்டிய இடத்துல நியாயத்தைப் பார்க்க முடியாது… நான் செய்றது தர்மம்…” ஒரே வார்த்தையில் முடித்து விட்டு அவள் வெளியேற முயல… சத்யனுக்குக் கோபம் எல்லையைக் கடந்தது,
“என்ன… நியாயம் தர்மம்ன்னு என்னன்னவோ பேசிட்டு இருக்க… அந்த ஆள் ஒரு குற்றவாளி… அவரைத் தப்பிக்க விடறதுதான் தர்மமா… உன்னோட பாஷைல…” வெளியே நிறுத்தி அவளைக் கிடுக்கி பிடி போட்டான் சத்யன்,
“அவர் குற்றவாளின்னா நீ யார் சத்யா?” அதே ஒட்டாத குரலில் அவனைக் கேட்க சத்யன் அதிர்ந்தான்… இவள் மனதில் என்னதான் இருக்கிறது? ஒன்றும் பதில் கூறாமல் அவளையே கூர்மையாகப் பார்க்க… அவளும் சலிக்காமல் அவனைப் பார்த்தாள்,
“என்னைக் கொல்ல வந்தது அவரோட ஆளுங்கன்னா… அவரோட மகளோட மனசை நீ கொலை செய்து இருக்க… அதுக்கு என்ன தண்டனை தர்றது?” அவள் கேட்டது பாதி… கேட்க்காமல் விழிகளால் குற்றம் சாட்டியது மீதி… ஆனால் அந்தக் குற்றசாட்டை ஏற்க சத்யனால் முடியவில்லை… அதற்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் என்று கொதித்தான்,
“அமிர்தா… அந்தப் பொண்ணைப் பார்த்ததுல இப்படி எல்லாம் பேசுற… ஆனா அந்தப் பொண்ணைப் பத்தி உனக்குச் சரியா தெரியாது… அவ எந்த எல்லைக்கும் போகக்கூடியவ…” எப்படியாவது அவளுக்குப் புரிய வைத்து விட முயன்றான்,
“எனக்கு எதுவுமே புரிய வேண்டாம் சத்யா… அவளோட இப்போதைய தேவை கவனிப்பு… சீதாராம் கூட இல்லாம போறதுல எனக்கு ஒப்புதல் இல்ல…”
“அந்த ஆள் உன்னை இமோஷனல் ப்ளாக்மெயில் பண்ணி இருக்கார்டி… உனக்குப் புரியலையா… அவரோட பொண்ணைப் பத்தி அவர் நினைச்சு இருக்கணும்… உன்னைத் தூக்க ஆள் அனுப்பறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்… அதை விட்டுட்டு இப்போ பொண்ணைக் காட்டி அழுகறார்ன்னா அதை எப்படி ஏத்துக்க முடியும்?” கோபாவேசமாக அவன் கூற அமைதியாக அவனைப் பார்த்தவள்,
“அதெல்லாம் எனக்கும் தெரியாம இல்ல… ஆனா அவகிட்ட இப்போ நான் பொய்யப் பார்க்கலை… அந்தக் கண்ல வலிய தான் பார்த்தேன்… அதுக்குக் காரணம் நீ…”
“இல்ல… அதுக்குக் காரணம் அவளோட போதை பழக்கம்… நான் செண்டிமெண்டல் இடியட் கிடையாது அமிர்தா… உன்னை மாதிரி… அவ இப்படி இருக்கா அப்படி இருக்கான்னு சொல்லி எதையும் என் மேல திணிக்கப் பார்க்காதே… என்னைக் குற்றம் சொல்லாதே… அவளோட இந்த நிலைமைக்குக் காரணம் அவ மட்டும் தான்…” உறுதியாகக் கூறிவிட்டுதிரும்பி பார்க்காமல் காரில் சென்று அமர்ந்தான்,
அதன் பின் எதைப் பற்றியும் பேசாமல் வீட்டிற்க்கு வந்தாலும் அவளது மனம் நிலைகொள்ளாமல் தவித்தது… சுபர்ணாவிற்கு உரிய நியாயத்தைச் சத்யன் அளிக்கத் தவறி விட்டானா என்று யோசித்து யோசித்து மனம் வெதும்பிப் போனாள்… மனம் ஒருபுறம் சுபர்ணாவிற்காகப் பரிந்து பேச… இன்னொரு புறம் வலியில் துடித்தது… வேடன் எய்த அம்பு மானை வீழ்த்தியதில் துடித்த அந்தப் பெண் மான் வலியையும் வெளியே கூறாமல் அதைத் தாங்கவும் முடியாமல் தவித்தது… தன்னால் சத்யனை அவளுக்கு விட்டுத் தந்துவிட முடியுமா? அவன் இல்லாமல் இருந்துவிட முடியுமா?
“நோ…” அறையில் மடிந்து அமர்ந்து அழத் துவங்கினாள்,
சத்யனுக்குச் சுபர்ணாவை மணம் பேசியபோதெல்லாம் தோன்றாத உணர்வு… மருத்துவ மனையில் அவனால் காயப்பட்டு அவனால் புறக்கணிக்கப் பட்டுச் சத்யனால் மனம் பாதிக்கப்பட்டுக் கிடந்த சுபர்ணாவை பார்த்தபோது தோன்றியது… ஆசையாக வைத்திருக்கும் பொம்மையைத் திருடு கொடுக்கும் உணர்வை அனுபவித்தாள்,
அவளைப் பொறுத்தவரை சுபர்ணா பாதிக்கப் பட்டு இருப்பது சத்யனால்… அவளுக்கு நியாயம் செய்ய வேண்டியது அமிர்தாவின் கடமை… ஆனால் அமிர்தா அறியாதபல உண்மைகள் அவளுக்குத் தெரிய வரும்போது?





