அத்தியாயம் 39
எத்தனை நாட்களாகக் காத்துக் கொண்டிருந்தது… இதற்காகத்தான் அல்லவா… சீதாராமன் அமிர்தாவின் உடல்நிலையால் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டவில்லை என்றாலும் சத்யனுடைய மனதின் ஓரத்தில் இதற்க்கான தவிப்பு இருந்து கொண்டே இருந்தது… அதுவும் முதன்முதலில் தான் எடுத்த அரசாங்க டெண்டர் கட்டிடத்தை வெற்றிகரமாக முதல் ப்ளாட்டை அரசாங்கத்திடம் காட்டி முழு ஒப்புதலும் வாங்கிவிட்ட இந்த நேரத்தில் இதைச் செய்து முடித்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்,
பேங்க் லோன் வீட்டின் பெயரில் சாங்க்ஷனாகி இருக்க… அதை அப்படியே கடன்தாரர்களுக்கு மாற்றி விட்டதில் பெருமளவு பாரம் குறைந்து நிம்மதியானான்… பி ஆர் பைனான்சில் மற்றவர்களுக்குகொடுத்த லோன்களையெல்லாம் வசூலிக்க ஆரம்பித்து இருந்தான்,
ரெடிமேட் கான்க்ரீட் யூனிட்டையும் குவாரியையும் சரியாக உபயோகபடுத்தியத்தியதோடு அவனது கண்மண் தெரியாத உழைப்பும் சேர்த்து அவனுக்கு நல்ல வெற்றியைக் கொடுக்க… குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே முதல் பிளாட்டை ஒப்படைத்துவிட்டான்… கடைசியாக மிச்சமிருப்பது சீதாராமனின் டிபெஞ்சர் ஷேர் அமௌன்ட்டை கொடுப்பதுதான்,
அன்று தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருந்தாள் சுபர்ணா… மூன்று மாத மருத்துவமனை வாசம் அவளை முற்றிலுமாக மாற்றி இருந்தது… தீவிர சிகிச்சை முடிந்தும் அவளே நன்கு நடமாட முடிந்த பிறகு என்ன செய்தும் நேரத்தைக் கடத்த முடியாமல் அந்த மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் நோயாளிகளை ஒவ்வொருவராகக் கவனிக்க ஆரம்பித்தாள்,
பின்னர்த் தானாகப் போய்ப் பேச ஆரம்பிக்க… ஒவ்வொருவர் கூறும் கதைகளும் அவர்களது வாழ்கையும் அவளுக்குப் பெரும் வியப்பை முதலில் தந்தன… இவ்வளவு கஷ்டம் கூட இருக்கா? சாப்பாட்டுக்குக் கூடவா பணம் இல்ல… அவள் அவளுக்கே எழுப்பிக் கொண்ட கேள்வி அவளது முகத்தில் அறைந்தது… மருத்துவமனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படிப்பைத் தந்தது… அமிர்தாவின் அருகாமை வாழ்கையின் புதிய பரிமாணத்தைக் காட்டியது,
அவ்வப்போது அனுமதி வாங்கி அமிர்தாவோடு அவளது ஆசிரமத்திற்குச் சென்று வந்தாள்… எதை நோக்கி ஓடுவது என்று தெரியாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவள் ஓடிய ஓட்டம் இன்று நிதானத்திற்கு வந்திருந்தது… ஒய்வு நேரங்களில் எல்லாம் புத்தகங்கள் அமிர்தா வரும்போது அறிவார்த்தமான அரட்டை… மற்றநேரங்களில் நோயாளிகளைப் பார்த்து ஆறுதல் சொல்வது எனச் சுபர்ணா தலைகீழாக மாறிப் போனாள்… மறந்தும் சத்யனை பற்றிய பேச்சை இருவரும் பேசவில்லை,
சிகிச்சை தந்த கௌதமனே அவளது வேகமான முன்னேற்றத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்… பொதுவாக நோயாளிகளை இருபது நாட்களில் விடுவிடுத்து விடுபவர் சீதாராமனின் வேண்டுகோளினால் மூன்று மாதங்கள் நிதானமாக வைத்திருந்து அவளை முழுவதுமாக மீட்டெடுத்தார்… இன்னும் சொல்லுவது என்றால் சுபர்ணா தன்னைத் தானே மீட்டுகொண்டாள்… செதுக்கி கொண்டாள்… வாழ்கையைப் புரிந்துகொண்டாள்,
சத்யன் வந்திருப்பதாக உதவியாளர் கூறியபோது சீதாராமனையும் அறியாமல் அவர் பதட்டமடைந்தார்… வீட்டிற்கு வந்திருக்கிறான் என்றால் முக்கியமான விஷயமாக இல்லாமல் போகாது… இப்போதெல்லாம் அவனை நினைக்கும் போதே மரியாதையும் சேர்ந்து கொண்டது… அவசரமாக ஹாலிற்கு விரைய அவர் பின்னால் சுபர்ணாவும் விரைந்தாள்,
“வாங்க வாங்க சத்யன்…” சிரித்த முகத்தோடு அவர் வரவேற்க… மெல்லிய புன்னகையொன்றே போதும் என்றுகீற்றான புன்னகையை மட்டும் வழிய விட்டான்,
“அப்புறம்… என்ன சாப்பிடறீங்க? அமிர்தா கூட இன்னும் கொஞ்ச நேரத்துல வர்றதா சொன்னாங்க… சுபி அவங்களுக்காகத்தான் வெயிட் செய்துட்டு இருக்கா சத்யா…” சந்தோஷமாக அந்த மனிதர் கூற,
“அப்படியா…” உணர்வே இல்லாத குரலில்… ஆனால் சீதாராமனின் மகிழ்ச்சிக்கு முன்னர் அவையெல்லாம் கண்களுக்குத் தென்படவில்லை… அவரைப் பொறுத்தவரை அவளுடைய மகள் அவளுக்குத் திரும்பக் கிடைத்துவிட்டாள்… அவளோடு செலவிடாத நேரத்தையெல்லாம் இனி சேர்த்து வைத்துச் செலவிட வேண்டும் என்று பேராவலில் இருந்தார் சீதாராமன்… சுபர்ணா சென்னையை விட்டு வரப் பிரியப்படாததால் அவர் மும்பையிலுருந்து சென்னைக்கு ஜாகையை மாற்றியிருந்தார்,
“ஆமா சத்யா… டேய் சுபி… சாருக்கு குடிக்க எதாச்சும் எடுத்துட்டு வாடா…” என்று அவளை விரட்டினார்!
“சார்… நான் வந்த விஷயத்தை முதல்ல சொல்லிடறேன்…” குரலைக் கனைத்துக் கொண்டு நேரடியாக அவன் விஷயத்திற்கு வர,
“சொல்லுங்க சத்யா…” அவரது முகத்திலும் தீவிரம் வந்தது,
“உங்க ஷேர் அமௌன்ட் இப்போதைய மார்கெட் வால்யு பதினெட்டு கோடி சீதாராம் சார்… அதை உங்களுக்குத் திருப்பிட்டு லீகல் ப்ரோசீஜர்ஸ முடிச்சுக்கலாம்…” இதை அவன் கூறியபோது அவரது முகத்தில் கலவையான உணர்வுகள் வந்துபோனது… அப்போதிருந்த கோபமோ பழிவாங்கும் உணர்வோ கிஞ்சிற்றும் அவரிடம் இல்லை… அமிர்தா அவரை மாற்றுவதே தெரியாமல் உருமாற்றியிருந்தாள் அவளது செய்கைகளால்,
“நான் அவசரப்படுத்தலை சத்யா…”
“நீங்க அவசரப்படலை… ஆனா எனக்கு இதை முடிச்சு கம்ப்ளீட்டா உங்க கிட்ட இருந்து விடுதலை வாங்கணும் சீதாராமன்…”
“சத்யா… நீங்க இப்படிப் பேசுறது கஷ்டமா இருக்கு… என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு கோபப்பட்டேன்… ஆனா இப்போ எனக்கு என் பொண்ணு திரும்பக் கிடைச்சுட்டா… அமிர்தாவுக்கு நிறையக் கடன் பட்டுட்டேன்… அன்னைக்கு அவங்க கேஸ் வித்ட்ரா பண்ணலைன்னா அப்போ இருந்த நிலைமைக்கு நான் என்னவா ஆகியிருப்பேன்னு தெரியல சத்யா…”
“உங்களுக்கு உங்க பொண்ணு மட்டும் தான் கண்ணுக்குத் தெரிவாங்க சீதாராமன் சார்… எங்க அம்மா அப்பா எனக்கு இல்லாம போனாங்களே… அதுக்காக நான் உங்களை ஏதாவது செய்துட்டேனா?” மனதில் வைத்துக் குமுறிக் கொண்டிருந்தது வெளிவந்து கொண்டிருந்தது,
“என்ன சொல்றீங்க சத்யா… அவங்க இறந்தது ஆக்சிடென்ட்… அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?”
“அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்ல… ஆனா உங்க பொண்ணுக்கு இருக்கே…” என்று ஆவேசமாகக் கூறியவன் ஒரு நிமிடம் நிறுத்தினான்,
“அந்தப் பொண்ணோட வீடியோவ செல்போன்ல பார்த்த அதிர்ச்சிலதான் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துது… அவங்க இறந்ததுக்குக் காரணம்ஹார்ட் அட்டாக்… அது தெரியுமா உங்களுக்கு…” அதிர்ச்சியில் பேச்சு வராமல் அமர்ந்திருந்தார் சீதாராமன்… முந்தைய ஆளாக இருந்தால் நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று அலட்சியமாக இருந்து விடுவார்… ஆனால் அந்தச் சீதாராமன் தான் காணாமல் போய் விட்டாரே… அவருடைய மனது குற்ற உணர்ச்சியால் நிரம்பி வழிந்தது,
“சத்யா…” குரல் நடுங்கியது,
“அம்மா இறந்த துக்கம் தாங்க முடியாமத்தான் அப்பாவும்…” அவனால் முடிக்க முடியவில்லை… குரல் தடுக்கி கமறியது… அவன் முன் தண்ணீர் நீட்டப்பட நிமிர்ந்து பார்த்தான்,
சுபர்ணா… எந்தவித உணர்வும் இல்லாமல்,
சத்யன் எழுந்து கொண்டான்,
“இதை இப்போ கூட யார்கிட்டவும் சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சேன் சீதாராமன் சார்… ஆனா எனக்கு என்னோட அமிர்தா வேணும்… உங்க பொண்ணுக்கு நல்லது செய்றதா நினைச்சுட்டுத் தன்னைத் தானே அடக்கித் தண்டிச்சுட்டு… என்னையும் ஒதுக்கி வெச்சுருக்க என்னோட அமிர்தா வேணும்… எனக்கு இருக்கறது அவ மட்டும் தான் சீதாராமன்… அவளை விட்டுட்டு என்னால இருக்க முடியாது…”
சுபர்ணாவின் முகம் பார்க்காமல் கூறிவிட்டு விடுவிடுவென்று கிளம்பினான்,
மெளனமாக அவன் போகும் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தாள் சுபர்ணா… கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது!





