அத்தியாயம் 41
உணவு செல்லவில்லை சகியே,
உறக்கங் கொள்ளவில்லை!
மனம் விரும்பவில்லை சகியே,
மலர் பிடிக்கவில்லை!
குணம் உறுதியில்லை எதிலும்,
குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்தில் சுகமே,
காண கிடைத்ததில்லை!
பாலுங் கசந்ததடீ சகியே,
படுக்கை நொந்ததடீ!
அமிர்தா தன் மனவுணர்வுகளை எவ்வளவு கட்டுபடுத்தியபடி இருந்தாலும் மேடையிலும் அவளது நடனத்தில் பிரதிபலித்தது அவ்வுணர்வுகள்… பிரிவாற்றாமையில் துடிக்கும் கண்ணனின் காதலி படும் பாட்டை அவளது ஒவ்வொரு அங்கமும் வெளிபடுத்த… அந்தக் கண்ணனின் காதலியே இவள் தானோ என்ற ஆனந்தம் பெருக அதில் மயங்கிக் கண்ணிமைக்க மறந்திருந்தனர் மக்கள்,
முன் வரிசையில் எப்போதும் போல ராகவன் தன்னை மறந்து அமர்ந்திருக்க அவனது கண்கள் ஏக்கமாக அமிர்தாவை வட்டமிட்டுக் கொண்டிருந்தது… அவனது ரசிப்புத் தன்மை அவள்மேல் காதலாக மாறியதன் வலியைச் சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்தான்… எப்படி இருந்தாலும் முதல் காதலும் முதல் முத்தமும் மறக்காதே… ஆயுளுக்கும்! அது கைக்கிளை காதலாக இருந்தாலும் அவனைப் பொறுத்தவரை அந்தக் காதலும் சுகமானதே,
கண்ணனின் மேல் காதல் கொண்ட ராதைக்கு அவனது காதலி என்ற உரிமை கிடைத்தது ஆனால் மன்னனின் மனைவியாகிவிட்ட மீரா? அவளது கிருஷ்ண பக்தி? அதுவும் காதல் தானே! நிறைவேறாது என்று தெரிந்தே… அவனை அனுதினமும் மனதில் வரித்தாளே அந்த மங்கை! அது எங்கனம் தவறாகிவிட முடியும்?
ராகவனின் காதலும் காதல் என்ற உணர்வைத் தாண்டிப் பக்தி என்ற உணர்வை அடைந்து விட்டதோ என்றும் தோன்றியது அவனுக்கு… திருமணமாகி மனைவி வந்தாலும் அவனைப் பொறுத்தவரை அமிர்தா அவனுடைய மனதின் ஒரு ரகசிய மூலையில் கொலுவிருக்கத்தான் போகிறாள்… இது தவறு, இன்னொருவனுடைய உடைமையை மனதால் தீண்டுவதும் பாவம் என்றும், பேராண்மை கிடையாது என்றும் விமர்சித்தாலும் ஒவ்வொருவருக்குமான ரகசிய அறையில் இது போன்ற நிறைவேறாக் காதல்கள் இருப்பது நிதர்சனமே! நிறைவேறாக் காதல் ஒருவரை பொறுத்தவரை அது காவியமாகி விடுகிறது… நிறைவேறிய பலருக்கு காதல் கல்லறைக்குச் சென்று விடுகிறது!
மேடையில் அவளின் இந்தத் தவிப்பை ஓரமாக நின்று கண்களில் வலியோடு ரசித்துக் கொண்டிருந்தது இரு விழிகள்,
அது சத்யன்!
அபிநயம் பிடித்தபடி மேடையை வலம் வந்தவளின் பார்வை வட்டத்தில் சிக்கினான் அவன்,
எங்கிருந்தாலும் உனை நானறிவேன் உன்னை,
என்னையல்லால் வேறு யாரறிவார்?
எப்போதுமே வராதவன்… எத்தனையோ முறை வருந்தி அழைத்தாலும் அவளது நடனத்தை ஒரு முறை கூடப் பார்த்திராதவன்… இன்று வரிசையில் கூட அமராமல் ஓரமாக நின்று கொண்டு தன்னவளை கண்களால் நிரப்பிக்கொண்டிருந்தான்… வாழ்க்கை பல நேரங்களில் முரண்களை முடிந்துவைத்து வேடிக்கை பார்க்கிறதோ? பிரிவுத்துயரம் அவனது கண்களிலும்! அமிர்தா அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை… அதை உணர்ந்த சத்யனும் அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தவில்லை… ஆனால் மனமும் உடலும் ஒய்வை தேடும்போது அவள் மடிதேடும் மனதை அவனால் கட்டுபடுத்தவியலவில்லை… அந்தக் கோபத்தை எல்லாம் சேர்த்து வைத்து சுபர்ணாவின் வீட்டில் கொட்டி விட்டு வந்தவனின் மனது ஏதோ ஒருவித அமைதியில் இருந்தது… அத்தனை நாட்களாக மனதில் அடக்கி வைத்திருந்தவற்றை வெளியில் தூக்கி எறிந்த விடுதலை உணர்வு! வைத்த கண்ணை எடுக்காமல் அவனது அமிர்தாவை கண்களால் விழுங்கிக்கொண்டிருந்தான்,
தன்னுடைய உணர்வுகளை என்றைக்கும் மேடையில் வெளிப்பட அனுமதித்தில்லை அமிர்தா… அந்தக் கொள்கை இன்றைக்கு ஆட்டம் காண துவங்கியது ஆனால் அவளது நாட்பட்ட பயிற்சி அந்த மிகப்பெரிய தவறிலிருந்து காத்தது… ஒரு நிமிடம் அவனைக் கண்டு ஆட்டம் கண்ட மனதை அடுத்த நிமிடமே கட்டி இழுத்து வந்து தன்னுடன் நிறுத்தினாள்,
உச்சி குளிர்ந்ததடீ சகியே,
உடம்பு நேராச்சு!
மச்சிலும் வீடுமெல்லாம் முன்னை போல,
மனத்து கொத்ததடீ!
இச்சை பிறந்தடீ எதிலும்,
இன்பம் விளைந்ததடீ!
அச்சமொழிந்ததடீ சகியே,
அழகு வந்ததடீ!
என்னும் பொழிதி லேல்லா அவன் கை,
இட்ட விடத்தினிலே,
தண்ணெண்றிருந்ததடீ புதியதோர்,
சாந்தி பிறந்ததடீ!
எண்ணியெண்ணி பார்த்தேன் அவன் தான்,
யாரெனச் சிந்தை செய்தேன்,
கண்ணன் திருவுருவம் அங்கனே,
கண்ணின் முன் நின்றதடீ!
சுழன்று ஆடியவளால்முடிவில் சத்யனிடமிருந்து கண்களைப் பிரித்தாள முடியவில்லை… உணர்வுபூர்வமான அவளது அந்தப் படைப்பு ஒரு முடிவுக்கு வந்தது… அவளிடம் பேச விரும்பிய ரசிகர்களை இதமாகப் பேசி அனுப்பி விட்டு கிரீன் ரூமுக்கு விரைந்தாள்… சத்யனை திரும்பியும் பார்க்காமல்,
அப்போதுதான் ராகவன் சத்யனை கவனித்தான்… அங்கே அவன் நின்று கொண்டிருப்பதை! முகத்தில் இருந்த சோர்வும் அதைத் தாண்டிய ஒளியும் ராகவனுக்குத் தேவையான செய்திகளைக் கூற… சத்யனை நோக்கி ஆர்வமாகச் சென்றான்,
“ஹாய் சத்யா… என்ன இது? உங்காளோட கச்சேரியை நீங்க உட்கார்ந்து பார்க்க மாட்டீங்களா? ஏன் நின்னுட்டே இருக்கீங்க? அவ்வளவு பயமா அமிர்தா மேல… அதுவும் கல்யாணத்துக்கு முன்னமே!” கிண்டலாக அவன் கூற மனதுக்குள் கசப்பாக நினைத்தசத்யன்… வெளியில் காட்டி கொள்ளாமல் புன்னகைத்து,
“ச்சே ச்சே… உங்க அளவுக்கு எல்லாம் என்னால மெய்ண்டைன் பண்ண முடியாது ராகவ்… பொண்ணு பார்க்கப் போன இடத்துல கூடப் பொண்ணு முன்னாடி உக்கார முடியாதுன்னு சொல்றீங்களாமே… சில பல தகவல்கள் வந்துது…” என்று அவன் சிரிக்க ராகவன் திகைத்துப் பின் சிரித்தான்,
“ஹஹா சத்தி… அந்த உளவுப்படை யாரு? எனக்கே தெரியாம எனக்குப் பொண்ணு பார்த்து உங்களுக்குத் தகவல் சொன்னது?”
“சும்மா விட்டுப் பார்க்கறதுதான் ராகவ்… ஜஸ்ட் கிட்டிங்…” என்று சிரிக்க,
“ஓகே ஓகே… உங்க ஆள் உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க கிரீன் ரூம்ல… நீங்கப் போங்க… நான் இங்க என் பிரெண்ட்ஸ் கிட்ட பேசிட்டு அப்புறம் வரேன்…” சிரித்துக் கொண்டே அவனுக்கு வழி விட அவனது தோளைத் தட்டி கொடுத்து விட்டு கிரீன் ரூமை நோக்கிச் சென்றான்.





