arrow_back
பரமபதம் அத்தியாயம் 42
பரமபதம் chevron_right பகுதி 42 / 54

அத்தியாயம் 42

visibility 208
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

அந்த ஆளுயர கண்ணாடி முன் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்… சத்யனை பார்த்தும் பாராமல் வந்துவிட்ட வெறுப்பு! பார்த்துக் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகி இருந்தது… அதற்கு முன்னும் சரியான பேச்சுவார்த்தை கூட இல்லைதான் ஆனால் பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது பார்ப்பது வழக்கமாக இருந்தது ஆனாலும் மௌனத்தைத் தவிர இருவரிடமும் வேறு பரிபாஷை இருந்ததில்லை,

சுபர்ணாவை மருத்துவமனையில் பார்த்த நாள் முதல் அவளை உணர்வு குவியல் அலைகழிக்கத் துவங்கியது… சுபர்ணாவிற்குப் போதை பழக்கம் இருந்தது அவளுக்கும் ஒரு மாதிரியாக முன்னமே தெரியும் என்றாலும் அவள் சத்யன் மேல் வைத்திருந்த காதல் அனைத்தையும் மீறி அமிர்தாவை அசைத்துப் பார்த்தது… அந்தக் காதல் அமிர்தாவுக்கு வலியை ஏற்படுத்தியது… தனக்கு மட்டும் தான் என்று சத்யனை இறுக்கி பிடித்துக் கொள்ள மனம் கூறினாலும் அவளது புத்தி விலகி நிற்கச் சொன்னது… விலகி நின்றாள் ஆனால் விலக்க முடியாமல் தவித்தாள்,

கண்களைத் துடைத்துக் கொண்டு ஒப்பனைகளைக் கலைக்கத் துவங்கியவளின் பார்வை வட்டத்தில் விழுந்தது சத்யன்… மெளனமாகச் சுவற்றில் சாய்ந்து அவளையே பார்த்தபடி… கண்ணாடி வழியாகத் தெரிந்த அவனது உருவத்தைக் கண்களால் நிரப்பியவள்… திரும்பாமல்,

“வா சத்தி… என்ன அதிசயம்… ப்ரோக்ராமுக்கு வந்திருக்க?” எதையும் காட்டி கொள்ளாத குரலில் அவள் கேட்க அவளது பக்கமாக வந்தவன் ஒன்றும் பேசாமல் அவளது தலையலங்காரத்தைக் கலைக்க உதவ ஆரம்பித்தான்… அவனது அந்தச் செய்கை ராஜசேகரை நினைவுப்படுத்த அவளது கண்கள் கலங்கியது… அவளது கலங்கிய கண்களைப் பார்த்தவன்,

“ஏன் கண்ணு வேர்க்குது அம்மு?” எப்போதும் போல விளையாட்டுத்தனமாகப் பேச நினைத்துக் கேட்க… அவனை முறைத்தாலும்,

“அத்தை மாமா ஞாபகம் வந்துடுச்சு சத்தி… மாமாவும் இப்படித்தான்… எனக்கு ஹெல் பண்ணுவார்… அந்த ஆக்சிடென்ட்டான அன்னைக்குக் கூட ப்ரோக்ராமுக்கு வந்துட்டு எனக்கு ஹெல் பண்ணிட்டு என் கூடத்தான் வந்தார்… அந்த ஞாபகம்…” இயல்பாக ஆரம்பித்து அவளால் இயல்பாக முடிக்க முடியவில்லை… குரல் கனத்தது! தன்னை விடத் தனது தந்தைக்கு அமிர்தா தான் செல்லப்பெண் என்பது அவன் அறிந்ததுதானே,

“ம்ம்ம் மறக்க ட்ரை பண்ணுடா… மறதி நமக்குப் பெரிய வரம்… மறக்க வேண்டியதை மறந்து தான் ஆகணும்… ஆனா மறக்கக் கூடாததுன்னு சிலது இருக்கு… சிலர் மாதிரி அதை ரொம்ப ஈசியா மறந்துட கூடாது…” ஆறுதலாகக் கூறினாலும் வார்த்தைகளில் குத்தல் இருந்ததை வெளிப்படையாக உணர முடிந்தது… முகத்திற்கு க்ளென்சிங் மில்க் போட்டு ஒப்பனையைக் கலைத்து கொண்டிருந்தவள் புருவத்தை உயர்த்தி அவனை உறுத்து பார்த்தாள்,

“நீ என்ன மீன் பண்றன்னு தெளிவா சொல்லு சத்தி…”

“நான் தெளிவாத்தான் இருக்கேன் அம்மு… நீ தான் புதுசு புதுசா குழம்பிட்டு இருக்க…” ஜடையைப் பிரித்தபடி அவன் கூற… அவனது கைகளை விலக்கி விட்டபடி திரும்பி அமர்ந்தாள்,

“அப்படீன்னா தப்பெல்லாம் என் மேல தான் இல்லையா…” அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி கேட்க,

அவள் முன்பு இருந்த சிறிய ஸ்டூலில் அமர்ந்தான்… அவளது கைகளைப் பற்றித் தன் கன்னத்தோடு வைத்துக் கொண்டு… அவளை நேராகப் பார்த்தவன்,

“நமக்குள்ள என்னடா தப்பு ரைட்டுன்னு… இந்த ஈகோ தான் தப்பு… நீ என்ன சொன்னாலும் கேட்க நான் தயாரா இருக்கேன்… ஒரு விஷயத்தைத் தவிர…” உணர்வுபூர்வமாக உணர்ந்து கூறி அவளது கைகளைக் கன்னத்தில் வைத்துக் கொண்டு மீசை முடியால் உராய… அமிர்தாவின் தேகம் சிலிர்த்தது… மயக்கநிலைக்குச் சென்ற அவளது உணர்வுகளைக் கடிவாளமிட்டு அடக்கினாள்… அது ஒன்றுதானே பிரச்சனையே என்று எண்ணி கொண்டு அவன் கைகளிலிருந்து அவளது கைகளை உருவி கொண்டவள்… திரும்பி அமர்ந்து அவளது வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்… முடியை முன்னே விட்டுச் சிக்கெடுக்க ஆரம்பிக்க,

“பேசுடி…” புடவை மறைக்காத அவளது வெற்று முதுகில் கை வைக்க… அவளது தேகத்தில் நடுக்கம் பரவ… அவனது கைகளை அவசரமாக விலக்கினாள்!

“நீ என் உணர்வுகளோட விளையாடுற சத்யா…” குரலில் நடுக்கத்தோடு அவனைப் பார்க்காமல் அவள் கூற,

“நீ என்னோட விளையான்டதை விடவா?” அதே குத்தல்தொனியில் பதிலிருத்தவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் கண்ணீர்… கலக்கம்!

“சத்யா… ப்ளீஸ்… இது கிரீன் ரூம்…” கெஞ்சலாக அவள் கூற அவளது வார்த்தைகளில் இருந்த உண்மையும் அது பொதுவான இடம் என்ற விஷயமும் அவனைத் தள்ளி நிறுத்தியது,

“ஓகே டா… வெயிட் பண்றேன்… மழை வேற வரும் போல இருக்கு… சீக்கிரம் கிளம்பி வா… உன்னோட காரை சந்திரன் கிட்ட கொடுத்து அனுப்பிட்டேன்…” முன்ஜாக்கிரதையாகச் சொல்லி வைத்தான்… அவளது முறைப்புக்களைப் புறக்கணித்து!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 43

“இப்போ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த? நான் வீட்டுக்குப் போகணும்... என்னைக் கொண்டு போய் விடு...” காரிலிருந்து கீழிறங்காமல் அடம் பிடித்தாள் அமிர்தா! “ஏன் நீ உங்க அத்தை வீட்டுக்கு வந்ததே இல்லையா? இல்லைன்னா தனியா என் கூட இருந்ததே இல்லையா?”…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்