அத்தியாயம் 43
“இப்போ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த? நான் வீட்டுக்குப் போகணும்… என்னைக் கொண்டு போய் விடு…” காரிலிருந்து கீழிறங்காமல் அடம் பிடித்தாள் அமிர்தா!
“ஏன் நீ உங்க அத்தை வீட்டுக்கு வந்ததே இல்லையா? இல்லைன்னா தனியா என் கூட இருந்ததே இல்லையா?” இயல்பாக அவன் கேட்க,
“ஸ்டுபிட் மாதிரி பேசாத சத்தி… இப்போ என்னை வீட்ல கொண்டு போய் விடப் போறியா இல்லையா?” கறாராக அவள் கேட்க,
“இப்போ நீ மரியாதையா வர்றியா இல்ல நான் தூக்கிட்டு போகட்டா? எப்படி வசதி…” குறும்பாக அவன் கேட்க… இவன் செய்தாலும் செய்துவிடுவான் என்று எண்ணிக்கொண்டு பேசாமல் இறங்கி உள்ளே போனாள்,
“எனக்கொரு காபி அம்மு…” என்று கூறிவிட்டு மாடிக்கு விரைய… அமிர்தாவோ முள்மேல் நிற்பதை போல உணர்ந்தாள்… அவனுடன் தனித்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தான் கரைந்து காணாமல் போய் விடுவதை அவள் உணர்ந்தே இருந்தாள்… சத்யனுடைய ஒவ்வொரு தொடுகையும் அவளைச் சித்ரவதை செய்தது,
வேறு வழி தெரியாமல் காபி கலந்து கொண்டு மேலே செல்ல எத்தனிக்க… கால்கள் வலுவிழந்தது… கைகள் நடுங்க கதவைத் தட்டி விட்டு உள்ளே செல்ல… குறுஞ்சிரிப்போடு அவளிடமிருந்து காபியை வாங்கினான் சத்யன்… குளித்திருப்பான் போல… சோப்பின் மணம் அறையை நிறைத்தது… ஜன்னலைத் திறந்து விட்டிருந்ததால் மழை வருவதற்கான ஊதற்காற்று உடலைத் தழுவிச் சென்று குளிர வைத்தது,
நின்று கொண்டு காபியை சொட்டு சொட்டாக ரசித்து அருந்தியவனின் பார்வை சோபாவில் அமர்ந்திருந்த அவளிடமே மையம் கொண்டிருக்க… நிமிர்ந்து அவனைப் பார்க்காத அமிர்தாவின் நகங்கள் காணாமல் போய்க் கொண்டிருந்தது… ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாய்க் கழிய… அருகில் வந்தமர்ந்தான் சத்யன்… சற்று நெருக்கமாய்! திடுக்கிட்ட அமிர்தா தள்ளி அமர முனைய… அவளது தோளை இறுக்கமாகப் பற்றி நகர விடாமல் செய்தான்,
“சத்தி… என்ன பண்ற நீ?” நடுக்கமாக அவள் கேட்க,
“நான் என்ன பண்றேன்னு உனக்குத் தெரியலையா அம்மு? மயிலே மயிலேன்னா இறகு போடாது…” காதில் அவன் கிசுகிசுக்க… அவளது நடுக்கம் அதிகமானது,
“விடு சத்தி… நான் போகணும்…” அவனிடமிருந்து விடுவிக்க முயன்றவளை,
“ஹேய் இப்போ உன்னை என்ன பண்ணிட்டேன்னு இப்படிச் சீன் போடற? ரொம்பச் சீன் போட்டீன்னாத்தான் எதையாவது பண்ணனும்ன்னு எனக்குத் தோணும்… உனக்கு ஓகே வா?” கண்ணைச் சிமிட்டி அவன் கேட்க… அவனைப் பார்த்து முறைத்தாள்,
“நீ இப்போ சரியில்ல… நான் கிளம்புறேன்… நீ கொண்டு வந்து விட்டா விடு… இல்லைன்னா ஆட்டோ பிடிச்சு போறேன்…” அவள் கிளம்புவதற்கு எழ… அவளது கையைப் பிடித்து அவன் இழுக்க… அவன்மேல் சரிந்து விழுந்தாள்! குறுஞ்சிரிப்போடு அவளைப் பார்த்த சத்யன் கண் சிமிட்டி,
“இந்த இரண்டாண்டு திட்டம் எல்லாம் வேணாம்… நாம உடனே கல்யாணம் பண்ணிக்கலாமா?” காதில் கிசுகிசுப்பாகக் கேட்க… அமிர்தாவின் உடல் விறைத்தது,
“அப்போ சுபர்ணா?” உணர்வே இல்லாமல் அவள் கேட்ட கேள்வியில் கடுப்பானான் சத்யன்,
“அவளை எதுக்குடி இப்போ இழுக்குற?” கோபத்தில் வார்த்தைகளை மென்று துப்பினான்,
“சம்பந்தம் இல்லாம இழுக்க நான் என்ன முட்டாளா சத்தி?”
“ஆமா கண்டிப்பா முட்டாள் தான்… இல்லைன்னா அவளுக்காக என்னை நீ ஒதுக்கி வைப்பியா? இல்ல விட்டுத்தான் கொடுப்பியா?” என்று கூறி விட்டு அவளை உற்று நோக்கியவன்… அவளது முகத்தைத் தன் பக்கம் திருப்பி,
“விட்டுக் கொடுத்துட்ட இல்ல…” வலியோடு அவன் கூற… அவனது தவிப்பை பார்த்து அவள் தவித்துப் போனதென்னவோ உண்மை!
“அவ உன்னை ரொம்பக் காதலிக்கறா சத்தி…” அழுவதற்குத் தயாரான குரலில் அவள் கூற,
“அப்போ நீ? உனக்கு நான் ஒண்ணுமே இல்லையா?” அவள் சுற்றி சுற்றி சுபர்ணாவை இழுக்க… அவனோ அமிர்தாவை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தான்,
“சுபர்ணா உன் மேல பைத்தியமா இருக்காடா…” அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள் அமிர்தா…” உனக்காக அவளை முழுசா மாத்திகிட்டா…”
“நீ தான் இப்போ பைத்தியம் மாதிரி இருக்க…” தன் மேல் சாய்த்திருந்த அவளைத் தள்ளி விட்டவன்… எழுந்து கொண்டான்,
“உனக்கு எல்லாமே ஈசியா போச்சு சத்தி… பொண்ணுன்னா உனக்கு அவ்வளவு இளப்பமா?” சிலிர்த்துக் கொண்டு கேட்டவளை உறுத்து நோக்கிய சத்யன்,
“வேணாம்… இந்தப் பேச்சை விட்டுடு… தேவை இல்லாம நமக்குள்ள பிரச்சனை தான் வரும் அம்மு…” கை நீட்டி எச்சரித்தவனை அலட்சியபடுத்திவள்,
“ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறதா நம்ப வச்சு… அவளைக் கை விடறது எந்த வகைல சேர்த்திச் சத்தி? அதை முதல்ல சொல்லு…”
“நீ அடங்க மாட்ட… இவ்வளவு நாள் இதை உன் கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு நினைச்சேன்… ஆனா வேற வழி இல்ல…” கூறிவிட்டு குழம்பிய அவளது முகத்தைப் பார்த்து மூச்சை உள்ளிழுத்து கொண்டவன்,
“உன் அத்தை இறந்தது எதனால?” அவளிடம் கேள்வியை வீசிவிட்டு முகத்தையே பார்த்திருந்தான்… இன்னும் குழம்பியவள் தயங்கியவாறே பதிலளித்தாள்,
“ஆக்ஸிடென்ட்… அதுக்கு முன்ன ஹார்ட் அட்டாக்…”
“அந்த ஹார்ட் அட்டாக் எதனால?” நிதானமாகக் கேட்க அவன் நினைத்தாலும் அந்த நினைவுகள் அவனது உள்ளக்குமுறல்களைத் தூண்டி விட்டன!
“… தெரியல சத்தி…” பதில் கூற தெரியாமல் விழித்தாள்! அவனது இன்னொரு செல்பேசியை எடுத்துக் கோபமாக அவள்முன் தூக்கி போட்டவன்,
“இதைப் பாரு… அதைப் பார்த்துட்டும் அவளுக்கு நீ ரெக்கமன்ட் பண்ணுவன்னு சொன்னா நீ என்ன சொன்னாலும் கேக்கறேன் அமிர்தா…” ஒட்டாத குரலில் கூறி விட்டு… கால்மேல் காலிட்டு கைகளைக் கட்டியவாறு முகம் சுருங்க அவளைப் பார்த்தபடி சோபாவில் அமர்ந்து கொண்டான்… கைகள் நடுங்க அந்தச் செல்பேசியை எடுத்தவள் அவன் போட்டுத் தந்திருந்த வீடியோவை ப்ளே செய்யத் துவங்கினாள்… பார்த்த சில நொடிகளில் அவளது முகம் அருவருப்பைச் சுமக்க… அந்தச் செல்பேசியை உடனே அவனிடம் கிட்டத்தட்ட தூக்கி எறிந்தாள்,
“ஏன் மா பார்க்க மாட்டேங்கற… பாரு… முழுசா பாரு…” பக்கத்தில் அமர்ந்து இருந்தவன் இன்னும் நெருக்கமாக அமர்ந்து அவளைக் கட்டாயபடுத்திப் பார்க்க வைக்க,
“கர்மம்… இதையெல்லாம் ஏன்டா என் கிட்ட காட்ற? வாமிட் வருது…”
“வருதில்ல… அப்போ எனக்கு எப்படி இருக்கும்? இதைப் பார்த்ததுல தான் உன் அத்தைக்கு ஹர்ட் அட்டாக் வந்துது அமிர்தா… அப்புறம்…” என்று கூற ஆரம்பித்தவன்… குரல் துக்கத்தில் கலங்கி துவள… அமிர்தாவின் கண்களில் கண்ணீர் வெள்ளம்… இயலாமையோடு அவனைப் பார்க்க… அவளைப் பாராமல் எழுந்து நின்றவன்… கண்களை இறுக மூடித் திறந்து தன்னைக் கட்டுபடுத்த முயன்றுகொண்டிருந்தான்,
“அந்தச் சம்பவத்துக்கு முன்னாடி தான் நிகில் என்னை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டி போனான்… உன் வருங்காலப் பொண்டாட்டியோட லட்சணத்தைப் பார்த்துக்கோன்னு… செத்துட்டேன்டா… அந்த ரேவ் பார்ட்டில… எல்லாரோடவும் பப்ளிக்கா…” கூற ஆரம்பித்தவன் அதை முடிக்க முடியாமல் சங்கடப்பட்டுத் தவிக்க,
. அவளோ வாயில் வைத்த கையை எடுக்காமல் கண்ணீரும் நின்று அதிர்ந்து அவனைப் பார்த்தாள்… சுபர்ணாவா? சுபர்ணாவா இப்படி? அதற்காகத்தான் அப்படி அருவருப்புக் காட்டினாயா சத்யா? என்னதான் இப்போது மனம் திருந்தியிருந்தாலும் பால் கெட்டது கெட்டதுதானே… இதற்காகத்தான் என்னைப் பற்றி இன்னும் நீ அறியவில்லை என்று சுபர்ணாவே கூறினாளா?
அவளது இப்போதைய நிலை அனைத்தையும் கடந்ததாயிற்றே… உணர்ந்து மறந்து இருப்பவளை எப்படித் தண்டிப்பது? அதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? மனம் சுபர்ணாவை விட்டுத் தரவில்லை என்றாலும் சத்யனோடு அவளைச் சேர்த்து நினைக்கக் கூசியது… ஒன்றும் அறியாதபோது மனம் வலிக்க அவளுக்காக வாதாடிய மனம்… இப்போது அமைதியின் பால் வசப்பட்டது!
“அவளைத் தான் நான் கல்யாணம் பண்ணனுமா அமிர்தா?” அவளைக் காண விரும்பாமல் வேறு புறம் திரும்பிக் கொண்டு அவன் கேள்வி கேட்க,
“சத்திம்மா…” கதறலோடு அவனது நெஞ்சத்தில் தஞ்சமடைந்தவளை… ஒரு கணம் தயங்கியவன் பின் இறுக அணைத்துக் கொண்டான்… அவனுக்குமே அந்த அணைப்புத் தேவையாக இருந்தது… சிறிது சிறிதாக அனைத்து நினைவுகளைம் மறந்தனர்!
“சாரி சத்தி… சாரி… சாரி…” விட்டால் அவனுள் புதைந்து விடுபவளை போலப் புதைந்து கொண்டிருந்தாள்,
“என்னை நீ எவ்வளவு கேவலமா நினைச்சுட்ட…” சற்று முன் அவள் பேசியதை சுட்டி காட்டி அவன் முறுக்கிக் கொள்ள… அவனை விட்டுச் சற்று விலகி நின்று வேறு புறம் பார்த்து,
“இல்ல… உன்னை இன்னொரு பொண்ணு லவ் பண்றான்ற… விஷயத்தையே… என்னால… டைஜஸ்ட் பண்ண முடியல சத்யா…” ஒவ்வொரு வார்த்தையாகத் திக்கி திணறிக் கண்ணீரோடு கூற அவள் முன் கைகளைக் கட்டி கொண்டு நின்றவன் குறும்புபுன்னகையோடு,
“சோ…”
“ஏன்னா நான்… அவ்வளவு… பொசெசிவ்…” முகம் சிவக்க அவனைப் பாராமல் கூற,
“சோ…”
“உன்னை… யாருக்கும்… விட்டு… கொடுக்க… முடியலை… வலிக்குதுடா…”
“சோ…”
“என்ன சோ சோன்னுட்டு… இங்க என்ன நான் கதையா சொல்றேன்…” கண்ணீர் போய் வெட்கமும் போய்க் கோபமும் வந்தது… சின்னச் சிரிப்போடு அவள் திணறியதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை இப்போது வேறு அர்த்தத்தைக் கற்பிக்க… உடல் முழுக்க ஜிவ்வென்ற உணர்வு தாக்கியது!
“சோ…” அவன் இன்னமும் நெருங்கி வர… அமிர்தா பின்னடைந்தாள்! அவனது ஒவ்வொரு அடிக்கும் மனம் தத்தி தாவ… அந்தக் குளிர்ச்சியான காற்றிலும் அவளுக்கு வியர்த்தது!
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தம்நிரை தாழ்ந்த பந்தற்கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்,
கைத்தலம் பற்றக் கணக் கண்டேன் தோழிநான்!
“சத்யா… ப்ளீஸ்…” அவள் கெஞ்சியது அவள் காதிலேயே விழுந்ததோ? யாமறியேன் பராபரமே!
“சோ…” போதையோடு அவனது குரல் அவளைத் தீண்டித் தழுவிச் செல்ல… அந்த இரவு வேளையில் இது மிகத் தவறு என்று புத்தி உணர்ந்தாலும் மனம் இருவருக்குமே இருவரின் அருகாமையைத் தேடியது,
“சத்யா…” சிணுங்கினாள்… அவளது இடையைப் பற்றியவன் தன்னோடு சேர்த்து அணைத்து… முகத்தில் கோலமிட்டவாறே,
“இன்னமும் நீ சொல்லலை பப்ளிமாஸ்…”
“என்ன?” அவனது செயலை அனுமத்தித்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டு அவள் கேட்க,
“எனக்கு வந்த பீலிங் ஒரு நாள் உனக்கும் வரும்ன்னு சொன்னேன்டி… அது வந்துச்சா இல்லையான்னு இன்னமும் நீ சொல்லவே இல்ல…” கிசுகிசுப்பாக அவளது காதில் கேட்க… சிவந்திருந்த அவளது முகம் இன்னமும் சிவந்தது,
“ச்சீ… போடா…” அவனைத் தள்ளி விட்டவளை குறுஞ்சிரிப்போடு பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான்,
“அதை மட்டும் சொல்லவே மாட்ட…” அவளது கையைப் பற்றித் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கேட்க,
“நீயென்ன லூசா? இல்லாமத்தான் இப்படி உன் கிட்ட இழைவேனா?”
“ம்ஹூம்… ஐ நீட் தி வோர்ட்ஸ்…” அவன் பிடிவாதமாகக் கேட்டு அவளது இடையில் கோலம் வரைய,
“ஸ்ஸ்ஸ்ஸ்… ச்சீ… மாமா?” வேண்டுமென்றே அவனை மாமாவென அழைக்க… அவனுக்கோ அந்த அழைப்பு எதைஎதையோ உணர்த்த… அவனது அணைப்பு இறுகியது!
“சொல்லுடி… ப்ளீஸ்…”
“ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ… போதுமா?” அந்த அணைப்பில் கரைந்தபடி அவள் கேட்க,
“ம்ஹூம் போதாது… இன்னும் வேணும்…” அவளைத் தன் புறம் திருப்பி இடையைப் பற்றித் தன்னோடு சேர்த்து… துடிக்கும் அந்த அதரத்தை தன் உதடோடு சேர்க்க விழைய,
அமிர்தாவின் செல்பேசி அழைத்தது,
“ச்சை…” வெளிப்படையாகக் கடுப்பை காட்டினான்… நெருங்கும் போதெல்லாம் நந்தியாக இந்தச் செல்பேசி… அதை எங்காவது தொலைத்து விட மாட்டோமா என்று ஏக்கப்பட்டது மனம்! பெரும் ஊற்றெனக் கிளம்பிய உணர்வுகள் தானாக அடங்கின!
அமிர்தாவின் முகமும் ஏமாற்றத்தைச் சுமக்க… வேறு வழி இல்லாமல் செல்பேசியைக் காதிற்குக் கொடுத்தாள்,
“ஹலோ… சொல்லுங்க அங்கிள்…” சுபர்ணாவின் தந்தை தான் அழைத்திருந்தார்,
“அமிர்தா… சுபி வந்தாளா?” பதட்டமாக அவர் கேட்க… அந்தப் பதட்டம் அவளுக்குத் தொற்றிக் கொண்டது… எதுவாக இருந்தாலும் அவளது தோழியாகி விட்டவள்… தவறை உணர்ந்தவள்,
“இல்லையே அங்கிள்… என்னோட ப்ரோக்ராம் மியுசிக் அகடமில இருந்துச்சு… அதை முடிச்சுட்டு இப்போதான் வீட்டுக்கு வந்தேன்…”
“உனக்குப் போன் செய்தாளாம்மா?”
“இதுவரைக்கும் செய்யலையே… ஏன்… என்னாச்சு?”
“அவளைக் காணோம் அமிர்தா… போனையும் வீட்ல வெச்சுட்டு எங்க போனான்னு எனக்குத் தெரியல… ஈவினிங் தான் வீட்டுக்கு வந்தேன்… காலைலயே வெளிய கிளம்பிட்டதா செர்வன்ட்ஸ் சொல்றாங்க… ஆனா கிரெடிட் கார்ட் போன் எதையுமே எடுத்துட்டு போகலைம்மா… அமிர்தா எனக்குப் பயமா இருக்கு…” புலம்ப ஆரம்பித்து அழத் துவங்கியவரை தேற்றுவதே முதல் வேலையாக இருந்தது,
“எங்கயாவது பிரெண்ட்ஸ் வீட்ல இருப்பா அங்கிள்… நீ கவலைப்படாதீங்க… நாங்க வந்துடறோம்…” கூறிவிட்டு செல்பேசியை அவள் வைக்க… சத்யன் முறைத்தான்!
“இத்தனை சொல்லியும் நீயெல்லாம் திருந்தலை இல்ல… உன்னை அவ நல்லா ஏமாத்துறா… நீயும் லூஸ் மாதிரி நம்பிட்டு இருக்க… ச்சே…” பக்கத்தில் இருந்த டேபிளில் குத்த… அதில் இருந்த பொருட்கள் சரிந்து விழுந்தது… அவனது செயல்களைப் பொறுமையாகப் பார்த்தவள்,
“சத்யா… எப்படி வேணும்னாலும் இருக்கட்டுமே… அவர் அழுகறார்… இந்த நேரத்துல மனிதத்தன்மை தான் முக்கியம்… ப்ளீஸ்… எனக்காக வாயேன்… கொஞ்சம் அவளைத் தேடுவோம்… சீதாராம் சார் ரொம்ப உடைஞ்சு போய்ப் பேசறார் சத்தி… ப்ளீஸ்…” அவள் கெஞ்ச… அவனது அதிருப்தியை அவன் வெளிப்படையாகவே கூறினான்,
“இது சரியே கிடையாது… அவ என்ன ப்ளான்ல இருக்காளோ… உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா?”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது வா…”
அவளுக்காகச் சுபர்ணாவை தேடி கிளம்பினான் சத்யன்!





