arrow_back
பரமபதம் அத்தியாயம் 44
பரமபதம் chevron_right பகுதி 44 / 54

அத்தியாயம் 44

visibility 202
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

“ஏம்மா எங்க போகணும்?” டிக்கட் கிழிப்பவர் பொறுமை சற்று குறைந்து கேட்க சுபர்ணா பதில் கூற தெரியாதவளாக விழித்தாள்,

எங்கே செல்வது? என்ன செய்வது?

அந்த மிகப் பெரிய கேள்வி அவளை அரட்டியது… சற்றும் பழக்கமில்லாத பேருந்து… பிறந்தது முதல் தங்க தொட்டிலிலேயே வளர்ந்த செல்வ சீமாட்டி… இன்று எதைப் பற்றியும் நினைக்காமல் பேருந்திலா? ஏதோ ஒரு தைர்யத்தில் ஏறி விட்டாலும் அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலை,

மலங்க மலங்க விழித்தவளை பார்க்கும் போதே அந்த நடத்துனருக்கு புரிந்து விட்டது… அவர் புரிந்து கொண்ட விஷயம் அந்த மனிதருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது… எப்படித்தான் இப்படி வீட்டை விட்டு வருகிறார்களோ என்று மனதுக்குள் நொந்து கொண்டார்… யாரை நம்பி வருகிறார்கள்… அந்த நபர்கள் நல்லவர்கள் தானா என்று உறுதி படுத்திக் கொண்டா வருகிறார்கள்… காதோலாம் காதல்! என்ற கடுப்பு அவருக்கு… இருக்காதா? திருமண வயதில் இரு பெண்களுக்குத் தந்தையாயிற்றே!

“ஏம்மா பொண்ணு… எங்க போகணும்… சீக்கிரம் சொல்லு… இல்லைன்னா கீழ இறங்கு”கறாராக அதட்டினார்… அப்போதாவது இந்தப் பெண் பயந்து வீட்டிற்குப் போய் விடாதா என்ற நப்பாசையில்… ஆனால் சுபர்ணாவிற்குத் திரும்ப அங்குச் செல்வதற்குச் சிறிதும் ஆசையில்லை என்பது அவருக்குத் தெரியுமா? முழுமையாக மனம் வெதும்பியிருந்தாள்… வாழ்கையின் மீதான பிடிப்பு அற்று விட்டிருந்தது… சத்யனை விரும்பத் தகுதியில்லை என்று எப்போதோ கூறி விட்டான்… ஆனால் கடைசியாக அவன் வந்து கொட்டி சென்ற விஷயம்? அவளால் சிறிதும் ஜீரணம் செய்யமுடியவில்லை,

நானா? நான் தான் காரணமா? இல்லையே… விதி அப்படியாக இருக்கும்போது நான் என்ன செய்ய முடியும்? ஆனாலும் தன்னைப் பார்த்த அதிர்ச்சியில் தான் அந்த ஆத்மா தன் இயக்கத்தை நிறுத்தியிருக்கிறது… நடந்தவைகளுக்குக் காரணமே இல்லாமல் நான் காரணமாகி விட்டேனா? மனம் முழுக்கக் குழப்பங்களால் சூழ பதில் கூற முடியாமல் நடத்துனரை பார்த்துக் கொண்டிருக்க… இரண்டாவது முறையாக அவர் சற்றுச் சப்தமாக அழைக்கவும் ஸ்மரணை வந்து அவரைக் கேள்வியாக நோக்கினாள்,

“இந்த வண்டி எங்க போகுதுங்க?”

அவளை ஒரு விதமாகப் பார்த்தவருக்கு உறுதியானது… இது ஓடி வந்த கேஸ் தானென்று!

“திருச்சி போகுதும்மா… உனக்கு எங்க போகணும்?”

தனக்கும் திருச்சிக்கே டிக்கெட் கொடுக்கச் சொல்லி அவளிடமிருந்த பணத்தைக் கொடுத்தாள்… அவசரத்திற்காகச் சில நூறுகள் மட்டுமே அவளிடம்… அவளது கிரெடிட் கார்டை கூட எடுத்துகொள்ளவில்லை… ஏன் என்று அவளால் உணர முடியவில்லை… அவளிருந்த மனநிலையில் எதுவுமே வேண்டாம் என்று தோன்றியது… இந்த மனநிலை மாறுமா என்று கூடத் தெரியவில்லை,

பசித்தது… காலையில் எடுத்துக்கொண்ட உணவு… அதற்குப் பின் இல்லை… இரவாகி விட்டது ஆனாலும் உண்ண பிடிக்கவில்லை… இந்தப் பசியுணர்வு அவளுக்குப் புதியது! பசி வயிற்றைக் கிள்ளினாலும் உணவைப் பற்றிய எண்ணம் இல்லாமல்… அவளுக்கே புரியவில்லை… தான் ஏன் இப்படி இருக்கிறோம் என்று!

பசி என்ற ஒன்று மட்டும் தானே உலகை இயக்கும் வெப்பசக்தியாக இருக்கிறது… வயிற்று பசி, உடல் பசி, அறிவு பசி என்று இந்தப் பசிகள் இருப்பதால்தான் இந்த உலகமும் ஜீவித்து இருக்கிறது… இந்தப் பசிகளை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது… பசி என்ற ஒன்றில்லாவிட்டால் மனிதன் எதையும் தேட மாட்டான்… தேடல் இல்லாத இடத்தில் வளர்ச்சி இருக்காது… வளர்ச்சி இல்லாத இடத்தில் வாழ்க்கை ருசிக்காது… ஆக அனைத்திற்கும் ஆணி வேர் பசி!

“உளுந்தூர்பேட்டைல பஸ் நிற்கும்… சாப்பிடறவங்க சாப்பிட்டுக்கலாம்…” நடத்துனர் அறிவிக்க… சிறிது நேரத்தில் ஒரு மோட்டலில் பஸ் நின்றது… இரவு உணவுக்காகப் பஸ்ஸில் இருந்தவர்கள் இறங்கினர்… நாற்றம் குடலை பிரட்டியது… மழை பெய்து இருந்தது வேறு சேரும் சகதியுமாக இருக்க… அதன் கூடவே இயற்கை உபாதைகளை வெளியிலேயே கழிப்பதால் அதுவும் உடன் சேர்ந்துகொள்ள… வெறும் வயிற்றோடு இருந்தவளுக்கு வாந்தி வரும் போல இருந்தது… இது போன்ற இடத்தில் இந்த மக்கள் எப்படி உணவை உண்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றியது… ஆனாலும் வயிற்றின் தேவை இருக்கிறதே!

பேருந்து கிளம்பியது… பசி மயக்கமா இல்லை தூக்க கலக்கமா என்று உணர முடியாத நிலை… இமைகள் சோர்வாகச் சேர்ந்தது… எப்படி வந்து சேர்ந்தோம் என்பதே அறியாத உறக்கம்… சொல்லபோனால் வெகுநாட்கள் கழித்துத் தன்னிலை மறந்த உறக்கம்! தாயின் கைகளில் குழந்தையின் உறக்கம் போல… கண்விழித்தபோது இளம் காலை வெயில் முகத்தில் அறைந்தது… கண்களைச் சிரமப்பட்டுத் திறக்க… பேருந்திலிருந்து ஒவ்வொருவருவராக இறங்கினர்… பேருந்து நிலையத்தை அடைந்திருந்தது!

அவசரமே இல்லாமல் நிதானமாக இறங்கினாள்… பக்கத்தில் இருந்த பெண்ணிடம்,

“இது என்ன ஊருங்க?” உறுதிபடுத்திக் கொள்ளக் கேட்க,

“திருச்சிம்மா… நீங்க திருச்சி தானே…” சந்தேகமாகக் கேட்டாள் அந்தப் பெண்… எங்கே இந்தப் பெண் உறங்கிவிட்டு ஊரை விட்டுவிட்டதோ என்ற பரிதாபத்தில்!

“இல்லைங்க… திருச்சிதான்…” என்று கூறிவிட்டு இறங்கினாள்! மீண்டும் கண்மண் தெரியாத நடை… எதையோ நோக்கி ஓடுவதைப் போல… எதை நோக்கி ஓடுகிறோம் என்பதே அறியாத நடை… பசியை அறியாமல்… தாகம் தணிக்காமல்… ஏதோ ஒன்று துரத்துவது போல,

நகர்ந்து கொண்டிருந்த பேருந்தில் சட்டென ஏறினாள்… அது எங்குச் செல்கிறது என்பதை அறியாமலேயே… தன்னைத் துரத்திக் கொண்டிருந்த நினைவுகளிலிருந்து தப்ப முடியுமா என்கிற அவளது ஏக்கம்… தவறுவது மனித இயல்பு என்றாலும் அதுவே தனது இயல்பாகி போனதன் தவறு… இரண்டு உயிர்கள்!

நோக்கமும் இல்லாமல் முடிவும் தெரியாமல் நீண்ட பயணம்… பேருந்து மாறி மாறி… எதற்காக ஏறுகிறோம்… எங்கு இறங்க போகிறோம் என்பதைப் பற்றியே கவலைப்படாமல்… அவள் பயணித்த பேருந்தின் சூழ்நிலையை ஒட்டாமல் இருந்த அவளது தோற்றம் வேறு ஆரம்பம் முதலே ஒவ்வொருவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது… ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலை அவளுக்கு இருந்தால் தானே!

பேருந்திலிருந்து இறங்கினாள்… ஊர் பெயர் பலகை வல்லம் எனக் காட்டியது… இது என்ன இடம் என்று அப்போதுதான் யோசித்தாள்… ஏனெனில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அவள் சென்னையைத் தாண்டியதில்லை… வேகமாக நடக்க ஆரம்பித்தவளுக்குத் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது… எப்போது கடைசியாக உண்டோம் என்பதும் அவளது நினைவில் இல்லை… உணவையோ நீரையோ வயிற்றுக்குக் கொடுக்க வேண்டும் என்பதைக் கூட உணராதவளாக மனம் போன போக்கில் நடந்து சென்றுகொண்டிருந்தாள்,

தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தாள்… இரவாகி விட்டதால் அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் நடமாட்டம்… அதிகமாக இல்லை ஆனாலும் ஓரிருவர் இருந்தனர்… நாய் ஒன்று அவளைப் பார்த்துக் குரைத்தது… நிமிர்ந்து பார்த்தாள்… மெதுவாக அடங்கி அவள் பின்னே வந்தது, வாலை ஆட்டிக்கொண்டு! கசப்பான முறுவல் அவளைது இதழ் கடையில்,

நடந்து கொண்டிருக்கும் போதே நடையில் தடுமாற்றம்… தலை சுற்றியது! பற்றிக் கொள்ள ஏதாவது கிடைக்காதா என்று மயக்க நிலையில் யோசிக்கும் போதே கண்கள் சொருக… மயங்கிக் கீழே விழுந்தாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 45

சுபர்ணாவை தேடி தேடி சோர்ந்து போய் அமர்ந்திருந்தனர் சத்யனும் அமிர்தாவும்... உடன் இன்னும் சிலரும் சேர்ந்து சென்னையை அலசி எடுத்துக் கொண்டிருந்தனர்... இரண்டு நாட்களாக! ஆனாலும் அவள்கிடைத்தபாடில்லை... அவளுக்கு இங்கு நண்பர்கள் குறைவு... இங்குத் தேடியதோடு மும்பைக்குத் தகவல் கொடுத்து அங்கும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்